சில நிமிடங்களிலேயே கங்காதரனும் வந்து விடத் தாங்கள் இருவரும் காரில் பயணித்து வீட்டிற்குச் சென்று சேர்ந்து விட்டார்கள்.
தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து மாலைத் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை உண்டு முடித்தனர் அவ்விருவரும்.
அப்போது ஆரண்யேஸ்வரனைத் தான் தனது விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தாள் பரிபூரணி.
அடுத்து வரப் போகும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரைத், தான் இங்கு இருக்கப் போவதில்லை என்றச் செய்தியைக் கேட்டிருந்தாலும் கூட அவன் எப்பொழுதும் போல் இயல்பாக வலம் வருவதைக் கண்டு உள்ளுக்குள் பொருமியவளோ,
இதற்குப் பிறகும் இவனது எதிர்வினைகளை ஆராய்வது வீண் வேலை என்பதை உணர்ந்து கொண்டு அவனது அந்த இயல்பான நடவடிக்கைக் கொடுத்த வலியை விழுங்கிக் கொண்டுத் தானும் சாதாரணமாக நடந்து கொள்ளத் தொடங்கி விட்டாள் பரிபூரணி.
அதை தானும் அவதானித்துக் கொண்டாலும் கூடத் தனக்கு இது தானே வேண்டும் என்று எண்ணிய ஆரண்யேஸ்வரனோ,
“இன்னைக்கு என்னவெல்லாம் செஞ்சீங்க சக்திம்மா?”என்று தனது தங்கை மகளிடம் விசாரிக்க,
அதற்கு அவளோ,”நானும், என் ஃப்ரண்ட்டும் சேர்ந்து நிறையக் கலர் பண்ணோம் மாமா!”என்று அவனுக்குக் குதூகலமாகப் பதிலளித்தாள் சிவசக்தி.
அப்பொழுதும் கூடப் பரிபூரணியின் புறமாகத் தனது பார்வையைத் திருப்பாமல்,”அப்படியா? வேற என்னென்ன எல்லாம் பண்ணீங்க?”என்று சிறியவளிடம் அடுத்தக் கேள்வியைக் கேட்டிருந்தான் ஆரண்யேஸ்வரன்.
உடனே,”இன்னைக்குக் கலரிங் மட்டும் போதும்ன்னுச் சொல்லிட்டாங்க ஆன்ட்டி. அதனால் நாளைக்கு வேற ஏதாவது பண்ணலாம்னுச் சொல்லி இருக்காங்க”என்றவளிடம்,
“ஓஹ்! சரிடா”என்றுரைத்து அவளது தலையைக் கோதிக் கொடுத்து விடவும்,
“நாம அம்மாவோட ரூமுக்குப் போகலாமா சக்திம்மா?”எனத் தன் மகளிடம் வினவினான் கங்காதரன்.
“ம்ஹ்ம். போகலாம்ப்பா”என்றாள் சிவசக்தி.
உடனே அவளை அழைத்துக் கொண்டு ஆருத்ராவின் அறைக்குச் சென்று விட்டான் கங்காதரன்.
அங்கேயிருந்த செவிலிப் பெண்ணான சரளாவிற்கு ஓய்வுக் கொடுத்து விட்டுச் சிறிது நேரத்திற்குத் தன் மனைவியைத், தானே பார்த்துக் கொள்ளத் தொடங்கினான் கங்காதரன்.
அவனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தாள் அவனது மகள் சிவசக்தி.
அதே நேரத்தில்,“நானும் போய் என்னைச் சுத்தப்படுத்திட்டு வர்றேன்” என்றுரைத்து விட்டுத் தன்னுடைய அறைக்குக் கிளம்பி விட்டான் ஆரண்யேஸ்வரன்.
“ஏன்ம்மா நீ உன்னோட பொழுதைப் போக்குறதுக்காக வேற ஏதாவது தெரிஞ்சு வச்சிருக்கியா?”எனப் பரிபூரணியிடம் கேட்டிருந்தார் சைலபுத்திரி.
“ஹாங்! எனக்கு டெர்ரக்கோட்டா நகைகள் செய்றது ரொம்பப் பிடிக்கும்! நான் அதுக்காகவே தனியாக கிளாஸூக்குப் போய்ப் படிச்சேன்”என்று அவரிடம் பகிரவும்,
அதைக் கேட்டு விட்டு,”அப்படியாம்மா? இந்தச் சைனா க்ளேயை வச்சு செய்ற ஜூவல்ஸைப் பத்தி தானே நீ சொல்ற?”என்று அவளிடம் வினவினார் சொக்கநாதன்.
“ஆமாம் சார்”எனக் கூறிப் புன்னகைத்தாள் பரிபூரணி.
“எங்க ஆருவுக்கும் அதில் ஆர்வம் இருந்துச்சு. அவளும் அந்தக் களிமண்ணை வச்சு நிறைய ஜூவல்ஸைச் செஞ்சி வச்சிருக்கிறாள்!”என்று நெகிழ்வாக மொழிந்து இருந்தார் சொக்கநாதன்.
“ஓஹோ! இதையெல்லாம் உங்கப் பொண்ணு எப்போ செய்ய ஆரம்பிச்சாங்க சார்? கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தேயா? இல்லை, கல்யாணத்துக்கு அப்பறமாகவா?”என்று அவரிடம் வினவினாள் பரிபூரணி.
“கல்யாணத்துக்கு முன்னாடி தான்ம்மா அவளும் கிளாஸூக்குப் போய்த் தான் இதைப் பத்திக் கத்துக்கிட்டாள்! அப்போதிருந்தே அந்தச் சைனா க்ளேயை வச்சு விதவிதமாக நிறைய நகைங்களைச் செஞ்சாள்! ஆனால் கல்யாணம் முடிஞ்சுக், குழந்தைப் பிறக்கிற வரைக்கும் இதையெல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைக் கட்டி வச்சு இருந்தாள்!”என அவளுக்கு விளக்கம் அளித்தார் சைலபுத்திரி.
“கவலையை விடுங்க மேம். அவங்க உடம்புச் சரியாகி வந்ததுக்கு அப்பறம் அதை மறுபடியும் அவங்களைச் செய்ய வச்சிடுவோம்”என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்.
“அப்போ அதை எனக்கும் சொல்லிக் கொடுப்பீங்களா ஆன்ட்டி?”என்று அவளிடம் வினவினாள் சிவசக்தி.
அதில் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டுக்,”கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்கிறேன்ம்மா”என அவளுக்கு உறுதி அளித்தாள் பரிபூரணி.
அப்போது அங்கே வந்து சேர்ந்திருந்தான் ஆரண்யேஸ்வரன்.
ஆருத்ராவைப் போலவே பரிபூரணிக்கும் சீன மண்ணை வைத்து நகைகளைச் செய்யும் பொழுதுபோக்கு இருக்கிறது என்பதை அவனிடமும் தெரிவித்தார்கள் சைலபுத்திரி மற்றும் சொக்கநாதன்.
அதைக் கேட்டதும்,”ஓஹ் அப்படியா?”என அவர்களைப் பார்த்துக் கூறியவனோ,
“சூப்பர் மேம்”என்று பரிபூரணியை நோக்கிச் சம்பிரதாயமானப் புன்னகையை வீசி வாழ்த்துக்களைத் தெரிவித்தான் ஆரண்யேஸ்வரன்.
அதில் அவளோ, அவனைச் சூடாகப் பார்த்து விட்டுத்,”தாங்க்ஸ் சார்”என்றிருந்தாள்.
அவனைப் பார்க்கப், பார்க்கப் பெண்ணவளுக்கு மிகவும் கோபமாக வந்தது எனலாம்!
ஏனெனில், பரிபூரணிக்குச் சீனக் களிமண்ணை வைத்து நகைகளைச் செய்யத் தெரியும் என்ற விஷயம் இதற்கு முன்னரே அதாவது இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஆரண்யேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும்!
அப்படி இருக்கும் போது இப்போது என்றால் தன்னைப் பற்றி எதுவுமே தெரியாததைப் போல் அவன் நடந்து கொள்வதைக் கண்டு ஆத்திரம் அடைந்தாள் பரிபூரணி.
ஆனால் இந்த விஷயத்தில் இவளுமே அவனைப் போலத் தானே நடந்து கொண்டிருக்கிறாள்?
இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்த போதே இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே? அப்போது இவளுமே அவனைப் பார்த்தப் பின்னர் இயல்பாகப் பேசி இருக்கலாமே?
ஆனால் அப்படி செய்யாமல் அவனை அப்போது தான் புதிதாகப் பார்ப்பதைப் போல் தானே நடந்து கொண்டாள்?
அப்படியிருக்க, ஒட்டுமொத்த தப்பையும் ஆரண்யேஸ்வரனின் மீது தூக்கிப் போட்டால் என்ன நியாயம்?
இதெல்லாம் தான், இப்போது ஆரண்யேஸ்வரனின் மனதில் தோன்றிக் கொண்டு இருந்தது எனலாம்!
அவனுக்குமே பரிபூரணியின் மீது மிகவும் கோபமும், ஏமாற்றமும், வருத்தமும் அதிகமாகத் தான் இருந்தது.
இப்படியாக ஆரண்யேஸ்வரனும், பரிபூரணியும் தங்கள் ஒருவர் மீது மற்றொருவர் கோபம் மற்றும் வருத்தத்துடன் இருக்கவும்,
சிறிது நேரம் கழித்து ஆருத்ராவின் அறையிலிருந்து வந்து சேர்ந்தார்கள் கங்காதரன் மற்றும் சிவசக்தி.
அதேபோல், அன்றைக்கான இரவுச் சாப்பாடும் தயாராகி விட்டிருக்க அனைவரும் அதை உண்டு முடித்து விட்டுத் தத்தமது அறைக்குச் செல்ல ஆயத்தம் ஆகும் சமயத்தில்,
“குட்நைட் ஆன்ட்டி!”என்று தன்னிடம் புன்னகையுடன் கூறியச் சிவசக்தியின் பூ முகத்தைப் பார்த்து,
“குட் நைட்ம்மா”என்று தானும் மென்னகை புரிந்து அவளை உறங்க அனுப்பி வைத்தாள் பரிபூரணி.
என்ன தான் காலையிலிருந்து இரவு வரைக்கும் இவளிடம் தனது நேரத்தைச் செலவழித்தாலும் தூங்கும் நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் சென்று விடுவாள் சிவசக்தி.
ஏனெனில் அவள் தனது அன்னையிடம் இருந்து தற்போதைக்குக் கிடைக்காத பாசத்தை தந்தையிடம் தேடிக் கொண்டு இருக்கிறாள் எனலாம்.
தனது மகளின் அந்த மனநிலையைப் புரிந்து கொண்டுச் சிவசக்தியைத் தாயாகவும், தந்தையாகவும் தன் கண்ணின் மணியைப் போல் பார்த்துக் கொண்டான் கங்காதரன்.
இங்கே இந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அறைக்குள் சென்று உறக்கத்தை மேற்கொண்ட இதே வேளையில்,
தங்கள் வீட்டு நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து,
“அந்தப் பொண்ணுப் பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தாள்டி. நல்ல மரியாதை தெரிஞ்சப் பெண்ணாகவும் இருந்தாள். அதே மாதிரி அவங்கப்பா எந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்கிறார் தெரியுமா?”என்ற ருக்மணியிடம்,
“எங்கே வேலைப் பார்க்கிறாராம்மா?”என்று கேட்டிருந்தாள் அவரது மகளான துர்கா.
உடனே பரிபூரணியின் தந்தை வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்தின் பெயரையும், அவரது பணியின் பெயரையும் அவளிடம் தெரிவித்தார் அவளது தந்தை சீராளன்.
ஆம்!
அவரும், அவரது கணவரும் சேர்ந்து பரிபூரணியைப் பற்றிய தகவல்களைத் தான் தங்களது மகளிடம் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அதைக் கேட்டதும் அவளுமே ஆச்சரிய முக பாவனையைத் தான் வெளிப்படுத்தினாள்!
“பார்றா! அவரோட பொண்ணு எதுக்கு வேலை மெனக்கெட்டுக் கேர்டேக்கர் வேலைக்குச் சேர்ந்தாளாம்? அவளுக்கு வேலைப் பார்த்துச் சம்பளம் வாங்கனும்னு என்னத் தலையெழுத்தா என்ன?”என்று தன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டுத் தனது பெற்றோரிடம் வினவினாள் துர்கா.
“நாங்களும் அதை தான் கேட்டோம். அதுக்கு அவ இது ஒரு சேவையாகத், தனக்குப் பிடிச்ச வேலையாக நினைச்சு செய்ய வந்தாளாம்”என அவளுக்குப் பதிலளித்தார் ருக்மணி.
“ஓஹோ! அப்படின்னா சரிம்மா”என்று அங்கேயிருந்து எழுந்து கொள்ளப் பார்த்தவளிடம்,
“இருடி! இன்னும் நான் விஷயத்தை முழுசாகச் சொல்லி முடிக்கலை! இப்போ தான் முக்கியமான விஷயம் ஒன்னைச் சொல்லப் போறேன்! அதை தான் நீ கண்டிப்பாக கேட்டாகனும்”என்று கூறி மகளை மீண்டும் அந்த நீள்சாய்விருக்கையிலேயே அமருமாறு அறிவுறுத்த,
அதில் சலித்துக் கொண்டு,”ப்ச்! ம்மா! நான் இப்போ தானே வேலை முடிஞ்சு வந்திருக்கேன்? இன்னும் சாப்பிடக் கூட இல்லை! எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு! நீங்க என்னடான்னா இப்படி உட்கார வச்சு அந்தப் பொண்ணைப் பத்தின கதையைச் சொல்லி என்னை இன்னும் சோர்வாக ஆக்குறீங்களே!”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டாள் துர்கா.
“உங்கம்மா சொல்றதை முதல்ல கேளும்மா. அப்பறம் அதோட முக்கியத்துவம் என்னன்னு உனக்கே புரியும்”என்று தன்னிடம் வலியுறுத்திய தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து தாயை நோக்கவும்,
“அந்தப் பொண்ணு இந்தக் கேர்டேக்கர் வேலைக்குச் சேர்ந்ததுக்கான காரணம் சமூக சேவை நோக்கத்துலன்னு அவ சொன்னதும் நாங்களும் அவகிட்ட அதைப் பத்தி இன்னும் தெளிவாக கேட்க முயற்சி செஞ்சப்போ நம்ம ஈஸ்வரன் தான் அந்தப் பொண்ணுக்குப் பதிலாக அவளுக்குச் சப்போர்ட் பண்ணிப் பேசினான்!”என்றுரைத்து,
பரிபூரணிக்காக உதவ முன் வந்து தங்களுக்கு ஆரண்யேஸ்வரன் கொடுத்த விளக்கத்தை மகளிடம் விவரித்து முடித்திருந்தார் ருக்மணி.
அதைக் கேட்டவுடனேயே துர்காவின் புருவங்கள் இன்னும் அதிகச் சுருக்கங்களைத் தத்தெடுத்துக் கொண்டு விட்டிருந்தது!
அதை அவதானித்து விட்டு,“இப்போ என்னம்மா யோசிக்கிற?”என்றிருந்தார் சீராளன்.
“நீங்க ரெண்டு பேரும் சொன்ன விஷயங்களைப் பத்தி தான்ப்பா யோசிச்சிட்டு இருக்கேன்! இது கொஞ்சம் சீரியஸாக கையாளப்பட வேண்டிய விஷயம் தான்! நான் கண்டிப்பாக நாட்களைத் தள்ளிப் போடாமல் சீக்கிரம் அந்தப் பரிபூரணியை மீட் பண்ணியே ஆகனும்னுத் தோணுது!”என்று தன் பெற்றோரிடம் தீர்க்கமாக மொழிந்தாள் துர்கா.
“ம்ஹ்ம். இதை தான் நாங்களும் சொல்றோம். நீ அந்தப் பொண்ணை நேரில் சந்திச்சுப் பேசிப் பாரு. அதே மாதிரி உண்மையிலேயே அந்தப் பொண்ணும், நம்ம ஈஸ்வரனும் இப்போ தான் முதல் முறையாக மீட் பண்ணி இருக்கிறாங்களா? இல்லைன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏற்கனவே சந்திப்பு நடந்து இருக்கான்றதை தெரிஞ்சிக்கனும்”என்று மகளுக்கு அறிவுறுத்தினார் ருக்மணி.
“ஆமாம்மா”என்றவளது குரலில் அத்துணை உறுதி வெளிப்பட்டிருந்தது எனலாம்!
“சரி. ப்போ வந்து சாப்பிடு. மூனு பேரும் சீக்கிரம் தூங்குவோம்!”என்ற அன்னை மற்றும் தந்தையைப் பின்தொடர்ந்து தானும் சாப்பாட்டு மேசைக்குச் சென்றமர்ந்தாள் துர்கா.
சில நிமிடங்களில் உணவை உண்டு முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டார்கள் மூவரும்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக