"ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள்.
"மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி.
"என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா.
"ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது.
"நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி,
மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார்.
தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா.
அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி.
அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா.
அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வால் எத்தனை பேர் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவள் உணரத் தவறி விட்டாள்.
"வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு, அப்பறம், அவங்களை வழியனுப்பி வைக்கனும் ங்க" எனத் தன் கணவன் மஹதனிடம் கூறினாள் மௌனா.
"போகலாம் மா" என்றதும்,
"இந்த அகதாவை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை ங்க!" என்று கவலையுடன் அவனிடம் சொன்னாள்.
"ஏன் இப்போ என்னாச்சு?" என்று மனைவியிடம் வினவினான் மஹதன்.
"இன்னும் ஒரே மைண்ட்செட்லயே இருக்கா" என அவளது எண்ணவோட்டங்களைப் பற்றி அவனிடம் கூறினாள் மௌனா.
"நீ தான் அவங்களை சரி பண்ண முடியும். அந்த தீபக்கோட இஷ்யூ நம்ம மேரேஜ் டைம்ல நடந்ததால், அவங்களும், நீயும் அதிகமாகப் பேசிக்க முடியலை. அதான், உன்னாலேயும் அவங்களுக்கு எந்த அட்வைஸூம் செய்ய முடியலை. இப்போ தான், டைம் இருக்கே? பேசிப் புரிய வை" என்றான் அவளது கணவன்.
அவன் சொன்ன யுக்தியும், தனக்குச் சரியென்று தோன்றவும், அதையே செயல்படுத்த எண்ணியவள்,"அத்தை! முதல் நாளே போய் அவங்க கூட தங்கிட்டு, வழியனுப்பி விட்டுட்டு வரவா?" என்று கணவனின் தாயிடம் கேட்டாள் மௌனா.
"சரிடா ம்மா" என்றவர்,
மகனிடம்,"மஹத்! நீயும் கூடப் போற தான்?" என்று கேட்டார் கௌசல்யா.
அதற்கு மஹதனோ,"ஆமாம் மா. நானும் தங்கிட்டுத் தான் வருவேன்" என்றான் அவரிடம்.
"சம்பந்திங்க ஊருக்குக் கிளம்புறாங்களாம் ங்க. மஹதனும், மௌனாவும் அங்கே தங்கிட்டு வர்றோம்னு சொன்னாங்க" எனத் தன் கணவரிடம் தகவல் தெரிவித்தார் கௌசல்யா.
"அப்படியா கௌசி ம்மா? நான் சிவமணி சம்பந்தி கிட்டக் கால் பண்ணிப் பேசிக்கிறேன்" என்றார் திருமூர்த்தி.
அதேபோல், அவரும், கௌசல்யாவும், மௌனாவின் பெற்றோருக்குக் கால் செய்து, அவர்களது பயணத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள், சிவமணி மற்றும் அன்னபூரணியை, மனதார வாழ்த்தி அனுப்பினார்கள் திருமூர்த்தி மற்றும் கௌசல்யா.
__________________
சிறிது நேரத்திற்கு, முன் தான், தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளையையும், மகளையும் குடிக்கப் பழரசம் கொடுத்து உபசரித்தார் அன்னபூரணி.
"நான்வெஜ் சாப்பிடுவீங்களா? சிக்கன் எடுத்துட்டு வரவா?" என்று இருவரிடமும் வினவினார் சிவமணி.
"அச்சோ! வேண்டாம் மாமா!" என்று அலறினான் மஹதன்.
அந்தளவிற்கு, அவனுடைய வயிறு நிறைய, அசைவ உணவுகளைப் பதம் பார்த்திருந்தான்.
"சரி, சரி! மாப்பிள்ளை. வேறென்ன சைவத்தில் செய்யறது?"என்று மகளிடம் கேட்டார் சிவமணி.
"அதான் விருந்து சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சிருச்சே மாமா? அப்பறம் என்ன? எப்பவும் போலவே சமைங்க. தனியாக கவனிப்பு வேண்டாம்" என்று அவர்களிடம் உறுதியாக கூறி விட்டான் மஹதன்.
"ஆமாம் ப்பா" என அதை ஆமோதித்தாள் மௌனா.
அதனால், சிவமணியும், காய்கறி வாங்கி வரக் கடைக்குச் சென்று விட்டார்.
"டிரெஸ் மாத்திட்டு வருவோம். வா" என்று மனைவியை அழைத்துப் போனவன்,"கிஷானைப் பார்த்துட்டு வந்துடறேன் மா. அதுக்குள்ளே, நீ அகதா கிட்டப் பேசு" என்றான்.
அவர்களிருவரும் வந்ததும்,"அத்தை!" என்று அன்னபூரணியை அழைத்து,
"நான் வெளியே கிளம்பறேன். மாமா வந்ததும் சொல்லுங்க. வீட்டுக்கு வர்றேன் அத்தை" என அவரிடம் கூறி விட்டுப் போய் விட்டான் மஹதன்.
"நான் சமையலுக்குத் தேவையானதை தயாராக எடுத்து வைக்கிறேன்" என்று சமையலறைக்குப் போன அன்னபூரணியைப் பின் தொடரப் பார்த்த அகதாவிடம்,"நீ என் கூட வா" என்று கூறி, அறைக்கு இழுத்துப் போனாள் மௌனா.
அவளது இழுப்பிற்கு இசைந்து கொடுத்துப் போன அகதாவோ, உள்ளே சென்றதும்,"என்னாச்சு ம்மா?" என்றாள்.
"தெரியாத மாதிரியே கேட்கிறியே?" என்று அவளைக் கூரியப் பார்வையால் துளைத்தவள்,
"எல்லாத்தையும் சொல்லு! இனிமேலும், எதையும் மிச்சம் வச்சு, ஊருக்குப் போனதுக்கு அப்பறமும் அதை நினைச்சு ஃபீல் பண்ணாத!" என்று அவளது கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டாள் மௌனா.
"சொல்றேன் மா" எனத் தயங்கிக் கூறியவள், அதற்குப் பிறகு, அனைத்தையும் ஒப்புவித்தாள் அகதா.
தோழியின் வாய்மொழியாக கேட்ட அனைத்தையும் மறுபடியும் தனக்குள் ஒரு தடவை சொல்லிக் கொண்ட மௌனாவோ,"இதுக்கு நீ இவ்ளோ ஃபீல் பண்ணி, ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொல்ற! அப்படித்தானே?" என்றவள்,
அகதாவின் சுருங்கிய முகத்தைப் தனது கைகளால் பற்றி,"ஏன்டா அகி, உனக்கு எங்க மேலே நம்பிக்கை இல்லையா? உன்னோட கடந்த காலத்தை மறக்க நாங்க ஹெல்ப் பண்ண மாட்டோம்னு நினைக்கிறியா?" என்று மென்மையாக வினவினாள் தோழியிடம்.
"ஐயோ! உங்களை எப்படி நான் அப்படியெல்லாம் நினைப்பேன் மா. என்னால் யார் கூடவும் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க முடியாது போல!" என்று அவளிடம் வேதனையுடன் கூறினாள் அகதா.
"அந்த தீபக்கோட இப்போதைய நிலைமை என்னன்னு உனக்கு லைவில் காட்டச் சொல்லவா?" என்று தோழியிடம் கேட்டாள் மௌனா.
"வேண்டாம் மௌனா! அப்பறம் எனக்கு உயிரே போகிற மாதிரி வலிக்கும்! இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்ன்னு, லைஃப் லாங் உறுத்திக்கிட்டே இருக்கும்!" என்று கண்ணீர் சிந்தினாள் அகதா.
"ஊஃப்! நான் சொல்றதைக் கேளு! உன் லைஃப்ல பாஸ்ட்ல நடந்தது எல்லாம் கிளோஸ் ஆகிடுச்சு. தீபக்குக்கான தண்டனை கிடைச்சிருச்சு. அவங்க அம்மாவும் திருந்தி, வேலைக்குப் போய் சம்பாரிச்சு அவங்களோட தேவையைப் பாத்துக்கிறாங்க! அம்மாவும், பையனும் உன்னை மறந்து போயிருப்பாங்க! நீ என்னடான்னா அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிற!" என்று தனது பொறுமையை சோதிக்கும் தோழிக்கு முயன்று அறிவுரை வழங்கினாள் மௌனா.
"அப்படியா? அவங்க ரெண்டு பேரும் என்னை மறந்துருப்பாங்களா?" என்று கண்களைத் துடைத்துக் கொண்டே, அவளிடம் வினவினாள்.
"ஆமாம் அகி. நீ தான் ஞாபகம் வச்சிட்டு இருக்கிற! அதை தான் தூக்கிப் போடுன்னு சொல்றேன்" என்றாள் மௌனா.
அவளும் தான், இந்த விஷயத்தை எத்தனை தடவைகள் பேசிப் புரிய வைக்க முடியும்? மௌனாவிற்கும் எரிச்சல் மூண்டது தான்! ஆனால், தோழியின் மனம் புரிந்ததால், அவளுக்குப் பக்கபலமாக இருந்து, அகதாவை மீட்டெடுக்க முயன்றாள்.
"ம்ஹ்ம். எப்படி? இந்தக் கம்மியான நாளில், என்னை மறந்துருப்பாங்கன்னு சொல்ற?" என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் தோழி.
"நீ இப்படி கேட்பன்னு தான், லைவ் டெலிகாஸ்ட் செய்யவான்னு கேட்டேன் அகி!" என்று கூறினாள் மௌனா.
"ஐயோ! அதெல்லாம் என்னால் பார்க்க முடியாது ம்மா! ஆளை விடு! என்னை அவங்க மறந்ததே போதும்!" என்று ஒரு முடிவுக்கு வந்தாள் அகதா.
"ம்ஹ்ம்! இனிமேல் இதைப் பேசவே கூடாது! ஊருக்குப் போகிற அப்போ, எல்லாத்தையும் மறந்துட்டுப் போகனும்!" என அவளுக்கு அறிவுறுத்தினாள் மௌனா.
அதற்குள், கறி எடுத்து வந்திருந்தார் சிவமணி. அதைக் கழுவி வைத்து விட்டு, மசாலாவைத் தயார் செய்து கொண்டிருந்தார் அன்னபூரணி.
"அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவோம். வா" என்றாள் மௌனா.
அவ்விருவரும், சமையலறைக்குப் போனார்கள்.
"இன்னும் ரெடி ஆகலை ம்மா" என்று அவர்களிடம் சொன்னார் அன்னபூரணி.
"நாங்க உங்களுக்கு உதவ வந்தோம் மா" என்று காய்கறிகளை நறுக்க உதவினார்கள்.
ஆனால், "மௌனா! நீ கத்தியைக் கையில் எடுக்காதே!" என்று மகளுக்குக் கட்டளையிட்டார் அன்னபூரணி.
"நீ இங்கே வந்து அப்பாகிட்ட உட்காரு" என்று மகளைத் தன்னுடன் இருத்திக் கொண்டார் சிவமணி.
அவளுடன் இணைந்து, பற்பல விஷயங்களைப் பேசி, நேரத்தைக் கடத்தினார் மௌனாவின் தந்தை.
அவ்விடைவெளியில், அகதாவும், அன்னபூரணியும் சமையலைப் பார்த்தார்கள்.
__________________
தங்களுடைய தங்கும் விடுதிக்குத் தான் போயிருக்கிறான் மஹதன்.
நண்பன் வந்ததும், அவனை வரவேற்று, அலுவலக அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டு இருந்தக் கிஷான்,"நீ ரவுண்ட்ஸ் போயிட்டு வாடா" என்றான்.
"ஆமாம். எப்படியும், நீ எல்லாத்தையும் பார்த்துக்குவ - ன்னுத் தெரியும். அதான், நான் இவ்ளோ நாளாகத் தலையிடலை!" என்று கூறி விட்டு, விடுதியைச் சுற்றி வந்தவன், நண்பனின் மேல் வைத்த நம்பிக்கை எப்போதும் வீண் போகாது மற்றும் தன்னை ஏமாற்றியதில்லை என்பதை இன்றும் உணர்ந்து கொண்டு, அலுவலக அறைக்குத் திரும்பியவன்,"நீ பர்ஃபெக்ட் ஆக வச்சிருக்கிற டா!" என்று கிஷானைத் தட்டிக் கொடுத்தான் மஹதன்.
"தாங்க்ஸ் நண்பா!" என்று மனமகிழ்ந்தான் கிஷான்.
அந்தச் சமயம், சிவமணியிடமிருந்து அவனுக்குச் செல்பேசி அழைப்பு வந்தது.
"ஹலோ மாப்பிள்ளை, சாப்பாடு ரெடி. நீங்க வீட்டுக்கு வரலாம்" என்று தன்மையாக அழைத்தார் தன் மருமகனை.
"சரிங்க மாமா. இதோ கிளம்புறேன்" என்று அழைப்பை வைத்தவன், கிஷானிடம்,"அங்கே எனக்காக வெயிட் பண்றாங்க டா. நான் போயிட்டு வரேன்" என நண்பனிடம் கூறினான் மஹதன்.
"ஓகேடா" என்று அவனை அனுப்பி வைத்தான் கிஷான்.
__________________________
"மாப்பிள்ளைக் கிட்டப் பேசியாச்சு ம்மா. வந்துட்டு இருப்பார்" என்றார் சிவமணி.
அவன் வருவதற்குள், டேபிளில் உணவுப் பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்தனர்.
மஹதனும் வந்து விட, இந்த முறை, எதற்கும், எங்கும் நழுவாமல், அவனையும், மௌனாவையும் நன்றாக உபசரித்தாள் அகதா.
அதிலேயே, அனைவருக்கும் அவளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொள்ள இனித் தேவையிராது என்ற எண்ணம் தோன்றி விட்டது.
மஹதனுக்கும், மௌனாவிற்கும் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டு, சிவமணி ஹாலில் படுத்துக் கொள்ள, அன்னபூரணியும், அகதாவும் ஒரு அறையில் தஞ்சம் புகுந்தனர்.
அன்னை, தந்தையுடன் தான் கழித்தப் பொழுதுகளைப் பற்றித் தன் மன்னவனிடம் விவரித்துக் கொண்டே போனாள் மௌனா.
அவள் உறங்கும் வரை, அதைப் பொறுமையாக கேட்டான் மஹதன்.
ஒரே கட்டத்தில், அவனது துணைவியும் தூங்கி விட, இவனும் நித்திரை கொண்டான்.
__________________
“பேசாமல் காரிலேயே போகலாம்ல நீங்க?” என்று தன் மாமனார், மாமியாரிடம் வினவினான் மஹதன்.
“இல்லை மாப்பிள்ளை… பஸ்ஸிலேயே போய்க்கிறோம். கார், செக்யூரிட்டிஸூன்னு அங்கே போய் நின்னா, ஊரில் இருக்கிறவங்க மிரண்டு போயிடுவாங்க” என்று விளக்கம் அளித்தார் சிவமணி.
பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் தான் இந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டுள்ளது.
“அது கூட ஓகே மாமா. ஆனால் உங்களை இப்படியே பாதுகாப்பு இல்லாம அனுப்பி வைக்க என்னால் முடியாது. உங்களை ஃபாலோவ் பண்ணி, பாடிகார்ட்ஸ் காரில் வருவாங்க. நீங்க வீட்டுக்குப் போனதும் அவங்க திரும்பிடுவாங்க” என்று உறுதியுடன் கூறினான் மஹதன்.
பேருந்தில் சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவுடன் சிறிது நேரம் தாங்களும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் மஹதன் மற்றும் மௌனா.
அந்த நேரத்தில், திருமூர்த்தியும், கௌசல்யாவும் அழைத்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, பத்திரமாகச் செல்லுமாறு, வலியுறுத்தி விட்டு வைத்தனர்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக