ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.
ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.
அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.
இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எங்கேயாவது போயிட்டு, வந்துட்டு இருக்கிறாளா? அவளுக்குச் சின்னவ நீ? அவளைப் பார்த்துப் படிச்சிக்க வேண்டாமா நீ? உனக்கு மட்டும் ஏன் அந்தக் கூறு இல்லை? நீ இப்படியே இருந்தீன்னா நான் உன்னை வெளியே எங்கேயும் அனுப்ப மாட்டேன்!”என்று தன் சின்ன மகளைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் முத்துமணி.
அதைக் கேட்டுக் கொண்டே அமைதியாகச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மூத்த மகள் பூவிழி.
ஆனால் தாயின் அத்தனைத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டுத் திண்ணக்கமாக அமர்ந்து இருந்தாள் செந்தாழை.
அப்போது அவர்களது வீட்டின் வாயிலில் கருப்பு நிற ஜீப் ஒன்று வந்து நின்றது.
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் உடனே வெளியே சென்று பார்த்தார் முத்துமணி.
அங்கே வெள்ளை வேட்டிச் சட்டை அணிந்து தனது ஆஜானுபாகுவானத் தோற்றத்தைக் கண்டு மிரண்டு போய் விட்டிருக்க,
“யாரும்மா வந்திருக்கா?”என அன்னையிடம் கேட்டுக் கொண்டே வெளியே வந்த செந்தாழையோ, அங்கே திருவாதிரனைக் கண்டதுமே பேயறைந்ததைப் போலாகி விட்டாள்.
‘இவர் எதற்காக இங்கே வந்திருக்கிறார்? ஒருவேளை அறிவொளி இவரிடம் விஷயத்தை உரைத்து விட்டாரோ?'என்ற எண்ண ஓட்டங்களுடன் அவனையே பயத்துடன் பார்க்கவும்,
அவளைக் கண்டதும் அதீதமான கோபத்தில் தனது கை முஷ்டியை இறுக மூடிக் கொண்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தான் திருவாதிரன்.
அதே சமயத்தில் தங்களது வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக வெளியே சென்றிருந்த தனது அன்னையும், தங்கையும் இன்னும் காணோமே என்றக் கலக்கத்தில் வீட்டிலிருந்து வெளியேறி வாசலிற்கு வந்து சேர்ந்தாள் பூவிழி.
அவளது நிழலைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்த திருவாதிரனிற்கோ அவனது கோபம் சட்டென்றுக் கட்டுக்குள் அடங்கி விட்டிருந்தது!
அதேபோல் தனது கை முஷ்டியின் இறுக்கமும் அனிச்சையாகத் தளர்வு அடைவதை உணர்ந்தவனோ, பெண்ணவளைக் கூரிய விழிகளால் ஏறிட்டுப் பார்த்தான்.
அவனது கம்பீரமான மற்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கண்ணுற்று ஏற்கனவே நடுக்கம் கொண்டிருந்தவளோ, அவனது உயிர் உருக்கும் பார்வையில் மேலும் பயத்துடன் தனது அன்னையின் பின்னால் சென்று பதுங்கிக் கொண்டாள் பூவிழி.
உடனே அவளை மேலிருந்து, கீழாக ஆராய்ச்சியாகப் பார்த்தான் திருவாதிரன்.
அதில் தனது முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியதைப் போன்று உணர்ந்தவளோ,”ம்மோவ்! என்னண்டுக் கேட்டு அனுப்பும்மா”என்று தாயின் காதில் மெல்ல முணுமுணுத்தாள்.
“ம்ஹ்ம்”என்றவரோ,
“ஐயா! உங்கக் காட்டுலதேன் நாங்க மூனு பேரும் வேலைப் பார்த்துட்டு இருக்கோம்! எங்க வேலையில் ஏதாவது குத்தம், குறை இருக்கா? நீங்களே எங்க வீடு தேடி வந்ததால் ஒரு மாதிரி நடுக்கமாக இருக்கு! என்னண்டுச் சொல்லுங்கய்யா! சுத்தி இருக்கிறவங்க இங்கனயே வெறிச்சு, வெறிச்சுப் பார்த்துட்டு இருக்காங்க!”என்று சுற்றும், முற்றும் பார்வையைச் சுழற்றிக் காட்டிப் பம்மிய குரலில் அவனிடம் மொழிந்தார் முத்துமணி.
உடனே அதை தானும் புரிந்து கொண்டு,”உள்ளே போய்ப் பேசலாமா?”என்றிருந்தான் திருவாதிரன்.
அதில் அதிர்ந்து போய்,”ரொம்ப பெரிய விஷயங்களா ஐயா?”என்க,
“ஆமாம்”என்று அழுத்தமாக கூறவும்,
“சரிங்க ஐயா. உள்ளே வாங்க”என்று தயக்கத்துடன் தான் அவனை வீட்டினுள்ளே அனுமதித்தார் முத்துமணி.
ஏனென்றால் அந்த வீட்டில் ஆண் துணை இல்லை. அவரது கணவர் செம்பன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதோ காலனிடம் சென்று விட்டிருந்தார்.
அதில் நிலைகுலைந்து போய்த், தங்களது இரண்டு மகள்களைக் கரையேற்றும் பொறுப்புத் தன்னுடைய தலையில் விழுந்து விட்டதை அறிந்து தளர்ந்து, இடிந்து போய் விட்டார் முத்துமணி.
அதனாலேயே செம்பன் வேலை பார்த்து வந்த திருவாதிரனுக்குச் சொந்தமான காட்டில் மரம் வெட்டுவது, சுள்ளிப் பொறுக்குவது, கூட்டிப் பெருக்குவது போன்ற வேலைகளைப் பார்த்தார்கள் அவரும், அவரது மகள்கள் இருவரும்.
தங்களால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தாங்கள் உண்டுத், தங்களது வேலை உண்டு என்று இருக்கும் சமயத்தில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருக்கும் போது இப்போது திடீரென்று முதலாளியின் விஜயத்தால் அலமலந்து போய் விட்டனர் முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழி.
அவர்கள் தன்னை இன்னும் உள்ளே அனுமதிக்காததால் எழுந்த சினத்தில்,”அப்போ விஷயத்தை தெருவுலேயே வச்சுப் பேசலாம்ங்குறீய! அப்படித் தானே? அதுல எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை! என்ன ஒன்னு உங்கக் குடும்ப மானம் இங்கேயே சந்திச் சிரிக்கும்! அம்புட்டுத் தான்”என்று நக்கலாக உரைத்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும் விஷயம் மிகவும் பெரியது போலும் என்றெண்ணிக் கொண்டு,”உள்ளே வாங்கய்யா”என்று அவனை வீட்டிற்குள் அழைத்து விட்டு அங்கே நாற்காலி இல்லாததால் பக்கத்து வீட்டிற்குச் சென்று அதை வாங்கி வந்து அவனை உட்கார வைத்தார் முத்துமணி.
அங்கே சுவற்றில் பல்லியைப் போல் ஒட்டிக் கொண்டுப் பயத்துடன் நின்று விட்டிருந்தாள் செந்தாழை.
ஆனால் துரிதமாகச் செயல்பட்டுச் சமையலறைக்குச் சென்றுச் செம்பை நன்றாக கழுவி அதில் தண்ணீரை முகர்ந்து கொண்டு வந்து திருவாதிரனிடம் தயக்கத்துடன் நீட்டினாள் பூவிழி.
அவனும் அவளை மெச்சும் பார்வைப் பார்த்து விட்டு எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் அதை வாங்கிப் பருகினான்.
அதற்குப் பிறகு, அவர்கள் மூவரையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டுச் செந்தாழையிடம்,”வயித்துல இருக்கிறதை என்னச் செய்றதாக இருக்கே?”என நேரடியாகப் பொட்டில் அடித்ததைப் போல் கேட்டு விட்டிருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்ட நொடியில் அவள் மட்டுமின்றி மற்ற இரு பெண்களும் கூட அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தார்கள்!
“ஐயா…”என்று திக்கித் திணறிய செந்தாழையைக் கடுமையாக முறைத்துப் பார்த்து,”சொல்லு! என்னச் செய்யப் போற? கலைக்கப் போறதாக கேள்விப்பட்டேன்!”என்று அவளிடம் கர்ஜிக்கும் குரலில் வினவினான் திருவாதிரன்.
அதில் மற்ற இருவரும் பதறிப் போய்த் தங்கள் நெஞ்சில் கையை வைத்து வெகுவாக அதிர்ந்தனர்.
“நீங்க என்னய்யா சொல்றீங்க? எங்களுக்கும் ஒன்னும் புரியலையே! தெளிவாகச் சொல்லுங்க”எனக் கலக்கத்துடன் அவனிடம் கேட்டார் முத்துமணி.
“நான் சொன்னது உங்க ரெண்டு பேருக்கும் புரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கச் சின்னப் பொண்ணுக்கு எல்லாம் புரியும்! அவ முன்னாடி தானே நான் பேசிட்டு இருக்கேன்!”என்று அழுத்தமாக கூறினான் திருவாதிரன்.
உடனே மற்ற இருவரின் பார்வைகளும் செந்தாழையின் மீது பதிந்தது.
அவளோ தன்னுடைய தலையைக் குனிந்து கொள்ள அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அந்த வீட்டின் கீழ்த் தரையை நனைக்க ஆரம்பித்து விட்டிருந்தது.
திருவாதிரனின் பேச்சும், மகளின் அழுகையும் ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டிருப்பதை உணர்ந்து, அவளிடம் சென்று,”நீ என்னடி பண்ணி வச்சிருக்கிற? ஒழுங்காக சொல்லு!”என்று அவளைப் போட்டுக் கோபமாக உலுக்கி எடுத்தார் முத்துமணி.
தனக்கு தாய்க்கு முன்பாகவே திருவாதிரனின் வார்த்தைகளில் இருந்த உண்மையை வெகு சீக்கிரமாகவே கிரகித்துக் கொண்ட பூவிழிக்கோ தனது தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்திப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
அதே சமயம் இந்தச் செய்தி இவருக்கு எப்படி தெரிந்தது? அப்படியே தெரிந்து இருந்தாலும் தங்களது வீட்டிற்கு உரிமையாக வந்து அந்த விஷயத்தைச் சொல்லித் தங்கையின் விருப்பத்தைக் கேட்டுக் கொண்டு இருக்கிறானே!
இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? என்று குழம்பிப் போய்த் திருவாதிரனைப் பார்க்கவும்,
தன்னைப் போலவே அவனும் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டுத் தன் பார்வையைத் தாய் மற்றும் தங்கையின் புறமாகத் திருப்பிக் கொண்டாள் பூவிழி.
அங்கே தனது தங்கையின் தோளைப் பற்றி அவளிடம் பதிலை வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்த அன்னையிடம் பதில் கூற முடியாமல் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டு அழுகத் தொடங்கி விட்டாள் செந்தாழை.
அவர்களது போராட்டத்தைக் காண முடியாமல்,”ம்மா! அவ மாசமாக இருக்கிறா”என்ற உண்மையை அவரிடம் இறுக்கத்துடன் உரைத்திருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டதும் தனது சின்ன மகளை உலுக்குவதை நிறுத்தி விட்டுப் பெரிய மகள் கூறிய வார்த்தைகள் கொடுத்த அழுத்தத்தில் திக்பிரம்மைப் பிடித்தவரைப் போல் தரையில் மண்டியிட்டு அமர்ந்து விட்டார் முத்துமணி.
இவ்வளவு நாளாக யாருக்கும் தெரியாமல், தான் கட்டிக் காத்த விஷயம் இப்போது தன்னுடைய குடும்பத்திற்கும், தனது கர்ப்பத்திற்குச் சம்பந்தப்பட்டவனின் வீட்டிற்கும் தெரிந்து விட்டதை தாங்க இயலாமல் அழுகையில் வெடித்தாள் செந்தாழை.
தங்களது வீட்டில் நடக்கும் இந்தக் களேபரத்தையும், தன்னுடைய தங்கையிடம் விசாரிக்க இன்னும் விஷயம் இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டுத் திருவாதிரனின் முன்னால் வந்து தனது கையைக் கூப்பி வணங்கி,”ஐயா! தப்பாக எடுத்துக்காதீய! நாங்களே இந்தப் பிரச்சினையைப் பார்த்துக்கிறோம்! நீங்க இதில் தலையிட வேண்டாம்! எங்களுக்குள்ளேயே எல்லாத்தையும் பேசி முடிச்சிக்கிடுதோம்! உங்களால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வேணாம்! இதனால் நம்ம ஊருக்கும், உங்களுக்கும் எந்த இழுக்கும் வராமல் நாங்க இதுக்கு ஒரு முடிவு எடுக்கிறோம்! அதுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது! அதனால் பெரிய மனசுப் பண்ணி நீங்க இங்கேயிருந்து கிளம்புங்கய்யா!”என்று அவனிடம் மிகவும் பணிவுடனும், கண்ணீருடனும் கேட்டுக் கொண்டாள் பூவிழி.
அதில் தனது குரலில் நக்கல் தொனிக்க,”எனக்கும், இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லைன்னா நான் ஏன் உங்க வீட்டு வாசப்படியை மிதிச்சு இருக்கப் போறேன் சொல்லு?”என்றவனைக் குழப்பப் பார்வையுடன் நோக்க,
“எனக்கும், உன் தங்கச்சியோட வயித்துல வளர்றக் குழந்தைக்கும் சம்பந்தம் இருக்கு!”என்று அவளிடம் தீர்க்கமாக மொழிந்தான் திருவாதிரன்.
- தொடரும்
அடுத்தப் பதிவு கொஞ்சம் லேட் ஆக வரும் ஃப்ரண்ட்ஸ்!

கருத்துகள்
கருத்துரையிடுக