அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.
அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.
அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.
ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.
“ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ,
அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.
அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரைத்து விட்டிருந்தான்.
அதில் உச்சபட்ச அதிர்ச்சி அடைந்தவளோ, தனது தங்கையிடம் போய்,”என்னடி பண்ணி வச்சிருக்கிற? இதுக்கெல்லாம் உனக்கு எப்புடி தகிரியம் வந்துச்சு? அதுவும் வீட்டுக்குத் தெரியாமல் காதலிச்சுக், கல்யாணம் செஞ்சி, இப்போ வயித்துல வாங்கிட்டு வந்திருக்கிறியே! இந்தப் பாவத்தை எங்கே போய்க் கழுவப் போறோம்? ஏன்டி இப்படி பண்ணுன? நீ செஞ்சி வச்சதைக் கேட்டு நம்ம அம்மா எப்படிக் கூனிக் குறுகிப் போயிருக்காங்கன்னுப் பாரு டி!”என்று அவளது தோளில் மொத்தத் தொடங்கி விட்டாள் பூவிழி.
அவளுக்குத் தங்கையின் செயலால் அவ்வளவு ஆதங்கம், அதிர்வு, வலி அனைத்தும் ஒரே சமயத்தில் உருவாகி அவளது மனதை வாட்டி வதைத்தது!
அதுவும் தங்களது அன்னையின் நிலையைக் கண்டுத் துக்கம் தொண்டையை அடைத்தது!
அவளது ஒவ்வொரு அடிக்கும் எதுவுமே பேசாமல் மௌனமாய் இருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்டிருந்த செந்தாழையை வெறுப்புடன் பார்த்து விட்டு,
“இப்போ என்னச் செய்றதாக முடிவு எடுத்து இருக்கீய?”என்று அடிக்குரலில் வினவி அவர்களது கவனத்தைத் தன் மீது பதித்திருந்தான் திருவாதிரன்.
“அவுக கலைக்கச் சொல்லி இருக்காக!”என்றவளைக் கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்து விட்டு,
“இதெல்லாம் உங்களுக்கு எவ்வளவு சுளுவாகப் போச்சுல்ல? கலைக்கிறாகளாம்ல?”என்றவனோ,
“கேட்டுக்கிட்டீயளா?”என்று முத்துமணி மற்றும் பூவிழியிடம் கூறினான் திருவாதிரன்.
“அவ சொல்வதும் சரி தானுங்களே ஐயா? நீங்க எவ்வளவு பெரிய இடம்? உங்க அளவுக்கு நாங்க இல்லையே? அப்போ அவுக சொன்னதை தானே செஞ்சி ஆகனும்?”எனத் திக்கித் திணறிச் சொல்லி முடித்தார் அந்தப் பெண்களைப் பெற்றப் பாவப்பட்டத் தாய்.
அவரது கூற்றைக் கேட்டதும் சுர்ரென்றுக் கோபம் தலைக்கேற,”என்னப் பேச்சுப் பேசுறீய? உங்களை எல்லாம் அந்த ஒரு பாவமும் அறியாத கரு என்னப் பண்ணுச்சு? அது எங்க வீட்டு வாரிசு! அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?”என்று அவர்கள் மூவரையும் வார்த்தையால் சாடவும்,
“எங்களை வேற என்னய்யா பண்ணச் சொல்றீய? இந்தப் பாவி மக இப்படி பண்ணுவான்னு நாங்க கனவுல கூடக் கண்டது இல்லையே? உங்கக் குடும்ப மானத்தையும் சேர்த்தில்லே வாங்கிப் போட்டுட்டா! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிப் போட்டாளே!”என்று தனது இளைய மகளைக் கரித்துக் கொட்டினார் முத்துமணி.
உடனே,”போதும்! உங்கப் புலம்பலை நிப்பாட்டுங்க! நீங்க மூனு பேரும் உங்களுக்குத் தேவையானதை எல்லாம் ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக்கிட்டு வந்து என் ஜீப்பில் ஏறுங்க!”என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான் திருவாதிரன்.
அதில் தாங்கள் மூவரும் பயந்து நடுங்கித் தங்களை ஒருவருக்கு ஒருவர் பார்த்துப் பயந்து போயினர்.
“அதெல்லாம் வேணாமுங்கய்யா! நாங்க இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய்ப் பொழைச்சுக்கிறோம். உங்கக் குடும்பத்துப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டோம்! எங்களை விட்ருங்கய்யா”என்று அவனிடம் கண்ணீர் மல்க வேண்டிக் கேட்டுக் கொண்டார் முத்துமணி.
அவருடன் சேர்ந்து தாங்களும் தங்களது கரங்களைக் குவித்து அவனிடம் மன்றாடினார்கள் செந்தாழை மற்றும் பூவிழி.
“உஷ்!”என்றவனின் கர்ஜனையில் மூவரும் பெட்டிப் பாம்பாக வாயடைத்துப் போய் விட்டார்கள்.
“என்ன விட்டால் பேசிட்டே போறீய? உங்க வீட்டுப் பொண்ணு வயித்துல வளர்றது எங்க வீட்டு வாரிசு! அதைப் புரியாமல் என்ன, என்னத்தையோ உளறிட்டு இருக்கீங்களே! நான் சொல்றதைக் கேட்டு அதுபடி நடக்கிறது தான் உங்களுக்கு நல்லது! இல்லைன்னா விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்!”என்றவனின் சிவந்த கண்களில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டு மிரண்டு போய் அவனது கட்டளைக்கு இணங்கி அவன் கூறியதைச் சிறிது நேரத்திலேயே செய்து முடித்து இருந்தனர் முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழி.
அவர்களைத் திருவாதிரன் தன்னுடைய ஜீப்பில் ஏற்றிக் கொண்டுச் செல்வதைக் கண்டு அந்தத் தெருவில் இருந்த அனைவரும் தங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்களுக்குள் அதைப் பற்றிய பேச்சு வார்த்தையில் இறங்கி விட்டார்கள்.
அந்தப் பயணத்தின் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முத்துமணி, பூவிழி மற்றும் செந்தாழைக்குக் கண்களில் இருந்து அழுகை நிற்காமல் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
“பாவி மக! குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டாளே! அதுவும் எப்பேர்ப்பட்ட குடும்பத்துப் புள்ளையோட வாரிசை வயித்துல சுமந்துட்டு இருக்கிறாள்! பாரு டி! இவளுக்கு முன்னாடி உனக்கு என்னடி அவசரம்?”என்று சின்ன மகளிடம் தன்னுடைய பெரிய மகளைக் காட்டி ஆதங்கத்துடனும், அழுகையுடனும் வினவினார் முத்துமணி.
உடனே தான் வண்டி ஓட்டுவதை நிறுத்தி விட்டுப் பின்னால் திரும்பி,”வீடு போய்ச் சேர்ற வரைக்கும் நீங்க யாரும் ஒரு வார்த்தைப் பேசக் கூடாது!”என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு மீண்டும் திரும்பி வண்டியை இயக்கினான் திருவாதிரன்.
அதற்குப் பிறகுத் தாங்கள் மூவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் பயணிக்கத் தொடங்கினர்.
இங்கே திருவாதிரனின் வீட்டிலோ, தன்னுடைய கணவனை வீட்டிற்கு வரவழைத்துச் சற்று நேரத்திற்கு முன்பு இளைய மகன் தன்னிடம் சொல்லி விட்டுப் போனதை எல்லாம் அவரிடம் ஒப்புவித்து விட்டிருந்தார் ராஜகுமாரி.
அதைக் கேட்டு வெகுண்டெழுந்து,”என்னக் காரியத்தைப் பண்ணி வச்சிருக்கிறடா நீ? உன்னை விட வயசில் சின்னவன் நம்மக் குடும்பத்தை எப்படியெல்லாம் எடுத்து நடத்திட்டு இருக்கான்னுத் தெனைக்கும் உன் காண்ணாலே பார்க்கிற தானே? நம்மக் குடும்ப கௌரவத்தையே குழி தோண்டிப் பொதைச்சு வச்சு இருக்கியே! அந்தப் பொண்ணு யாருடா? எந்தச் சாதிக்காரப்புள்ள?”என்று மூத்த மகனிடம் பாய்ந்தார் நஞ்சுண்டன்.
அப்போது தங்களது வீட்டின் முன்னால் தனது ஜீப்பை நிறுத்தி விட்டு அதிலிருந்த மூவரையும் பார்த்து,”ம்ஹ்ம். கீழே இறங்கி என் பின்னாடி வாங்க”என்று முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழிக்குக் கட்டளையிட்டான் திருவாதிரன்.
அதற்குக் கட்டுப்பட்டு ஜீப்பிலிருந்து இறங்கி அவனைப் பின் தொடர்ந்தார்கள் மூவரும்.
“சின்னய்யா வந்துட்டாருங்கம்மா, ஐயா”என்றதுமே, ராஜகுமாரியும், நஞ்சுண்டனும் வாயிலைப் பார்க்க,
அங்குத் தங்களது மகனுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்த முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழியைக் கண்டுத் திகைத்துத், திடுக்கிட்டுப் போய் விட்டனர் இருவரும்.
“இவுக எதுக்கு இங்கே வந்துருக்காக?”என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர் ராஜகுமாரியும், நஞ்சுண்டனும்.
பிறகுத் தங்களது மூத்த மகனான அறிவொளியைச் சந்தேகத்துடன் பார்த்து,“என்னடா சங்கதி?”என அவனிடம் ஏக கடுப்பில் வினவினார் அவனது தந்தை.
ஆனால் செந்தாழையும், அவளது குடும்பத்தாரும் தன்னுடைய தம்பியுடன் வருவதைக் கண்டுச் சுற்றம் மறந்து போய்த் தலையில் கையை வைத்துக் கொண்டுச் செய்வதறியாது திகைத்துப் போனான் அறிவொளி.
அந்தப் பெரிய அரண்மனையைப் போன்ற வீட்டினுள் அங்கேயிருந்த வேலையாட்களின் குறுகுறுப் பார்வைகளை எல்லாம் சங்கடத்துடனும், பயத்துடனும் எதிர்கொண்டுக் கூனிக் குறுகிப் போய்த் தளர்ந்த நடையுடன் வந்து திருவாதிரனின் நிழலில் ஒளிந்து கொண்டே அவனது பெற்றோரைப் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டார்கள் முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழி.
“இவுகளை எதுக்குப்பா இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறீய?”என்று திருவாதிரனிடம் பவ்யமாக கேட்டார் நஞ்சுண்டன்.
உடனே,”அதேன், நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ளே அம்மா மூலமாக உங்களுக்குச் சேதி தெரிஞ்சு இருக்குமே ஐயா! அப்பறம் எங்கிட்ட எதுக்குக் கேட்கிறீய?”என்றான் கணீர்க் குரலில்.
அதில் நெஞ்சு வலியே வந்து விட்டது அவனது பெற்றோருக்கு!
முத்துமணியையும், அவரது மகள்களையும் அருவருப்பாகப் பார்த்து விட்டுத் தங்களது பெரிய மகனைக் கொன்றுப் போடும் ஆத்திரத்துடன் உறுத்து விழித்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
“இந்தப் பொண்ணைக் காதலிச்சுக், கல்யாணம் செஞ்சி, வயித்துலப் பிள்ளையையும் கொடுத்துட்டுச் சத்தங் காட்டாமல் வந்து சாப்பாட்டை முழுங்கிட்டு இருந்து இருக்காரு துரை!”என்று செந்தாழையைக் காட்டிக் கூறி விட்டுத் தன்னுடைய தமையனை ஏளனத்துடன் பார்த்தான் திருவாதிரன்.
அதில் தங்களது நிலையை மறந்து அறிவாளியிடம் சென்று அவனை அடி வெளுத்து விட்டார்கள் அவனது பெற்றோர்.
“என்னடா ஈன வேலையைப் பார்த்து வச்சிருக்கிற? வீட்டுக்கு மூத்தப் புள்ளைப் பண்ற வேலையையாட பார்த்திருக்கிற? உன்னால் எங்க மானம், மரியாதை எல்லாம் போச்சே!”என்றார் நஞ்சுண்டன்.
அவருக்கு ஒரு படி மேலே போய்,”இந்தா இவ எல்லாம் எனக்கு மூத்த மருமகளாக வர்ற அளவுக்கு எனக்குச் சமதையானவளாடா? இந்தப் பீடையை எல்லாம் நம்ம மாட்டுக் கொட்டகைக்குள்ளே கூடச் சேர்க்க முடியாது! இதை நான் என் மருமகளாக ஏத்துக்கிட்டு, வீட்டுக் கொத்துச் சாவியைக் கொடுக்கனுமா நானு?”என்று செந்தாழையின் சிகையைப் பிடித்து வலிக்க இழுத்து ஆங்காரமாகப் பேசினார் ராஜகுமாரி.
அதில் அவளோ,”ஆஹ்! வலிக்குது!!”என்று அலறத் தொடங்கி விட,
தங்கையின் நிலையைக் கண்டுப் பதறிப் போய்“அவளை விட்ருங்கம்மா! அவளுக்குப் பதிலாக என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க”என்று அவரிடம் மன்றாடியப் பூவிழியை அழுத்தமாக நோக்கினான் திருவாதிரன்.
”ஐயோ அம்மா! என் பொண்ணை விட்ருங்க! நாங்க விஷயம் கேள்விப்பட்டதுமே இந்த ஊரை விட்டுப் போயிட்றோம்ன்னுச் சின்ன ஐயா கிட்டே கெஞ்சிக் கேட்டுக்கிட்டோம்மா! ஆனால் அவர் தான் எங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டாரு! நீங்களாவது எங்களைப் போக விடுங்கம்மா!”என்று அவரது காலில் விழப் போனார் முத்துமணி.
உடனே அவரை,“நில்லுங்க!”என்ற இறும்புக் குரல் ஒன்று தடுத்து நிறுத்தியது.
அது வேறு யாருடையதும் அல்ல திருவாதிரனின் குரலே தான்!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக