பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும்.
அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு.
“என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள்.
அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான்.
“இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன்,
அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன்.
“அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா.
தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா வீட்டுக்கு வர சொல்றாங்க. போகலாம் மௌனா” என்று அவளுடன் வீட்டிற்குப் பயணமானான் மஹதன்.
அவர்கள் சென்ற நேரத்தில், கிஷானும், முக்தாவும் அங்கே இருப்பதைக் கண்டு, அது கௌசல்யாவின் ஏற்பாடு தான் என்பதை அறிந்து கொண்டனர்.
“வா ம்மா. வந்து உட்காரு” என மருமகளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார் மஹதனின் தாய்.
“ஹாய், கிஷான் அண்ணா, முகி” என்று இருவரையும் வரவேற்றாள் மௌனா.
மஹதனும் அவ்வாறே செய்து விட்டு, உடையை மாற்றச் செல்ல, தன் முகத்தில் கண்ணீர்க் கோடுகள் சற்று அதிகப்படியாகவே தெரியவும்,”நானும் போய் முகத்தைக் கழுவிட்டு வந்துட்றேன்” என அறைக்குப் போனாள் மௌனா.
“அவளை அழ விடாமல் பாத்துக்கோங்க” என்று கிஷான் மற்றும் முக்தாவிடம் தனது மருமகளுக்காகப் பரிந்து பேசினார் கௌசல்யா.
“கண்டிப்பாக ஆன்ட்டி” என்றனர் இருவரும்.
அறைக்குள் வந்தவுடன், மனைவியை ஆரத் தழுவிக் கொண்டான் மஹதன்.
அந்த தழுவலில் அவளுமே அடங்கி நின்றாள்.
“காம் டவுன் டா, ம்மா” என்று தன்னவளை ஒரு சீரான நிலைக்குக் கொண்டு வந்தான் கணவன்.
அவனது தோளில் முத்தம் வைத்தவள், கன்னத்தையும் கொஞ்சி விட்டு,”ஐ யம் ஓகே மஹி. நீங்க டிரெஸ்ஸை மாத்துங்க. நான் வெளியே போய் அவங்க கூடப் பேசிட்டு இருக்கேன்” என்று அவனிடம் தெரிவித்து விட்டு, வெளியேறினாள் மௌனா.
தெளிந்த முகத்துடன் வந்த மருமகளைப் பார்த்ததும், ஆசுவாசம் அடைந்து,
“வந்தவங்களுக்குக் குடிக்க எதுவுமே கொடுக்கலை” என்று அவர்கள் மூவரையும் பேச விட்டுச் சமையலறைக்குச் சென்றார் கௌசல்யா.
“அப்பறம் மௌனா, எங்களோட மேரேஜ்ஜைப் பத்திப் பேச வந்தோம். கொஞ்ச நாள் லவ் பண்ணலாம்னு நினைச்சோம். ஆனால், உங்களோட லவ்வைப் பார்த்ததும், எங்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்துருச்சு” என்று கூறிப் புன்னகைத்தாள் முக்தா.
“ஆஹான்! அவரும் வந்துரட்டும். உங்களைக் கலாய்ச்சு விட சொல்றேன்” எனக் குறும்பாக கூறினாள் மௌனா.
“ஹாஹா, அவனே வந்துட்டான் ம்மா” என்றான் கிஷான்.
“ஹேய் டா, இப்போ தான், அத்தை, மாமா, அகியை பஸ் ஏத்தி விட்டுட்டு வந்தோம்” என்றான் மஹதன்.
“ஓகோ, சரிடா” எனக் கௌசல்யா அவர்களிடம் கூறி, வீட்டிற்கு வரச் சொன்னதை, கிஷானும், முக்தாவும் மௌனாவின் முன்னால் காண்பித்துக் கொள்ளவில்லை.
மகனுக்கும் சேர்த்தே பழச்சாறு தந்து விட்டு, மௌனாவிற்கு மட்டும் சூடாக காஃபி போட்டுக் கொண்டு வந்திருந்ததால், அதை அவளிடம் கொடுத்தார் கௌசல்யா.
“இப்போ ஊருக்குப் போயிட்டு இருப்பாங்கள்ல?” என்று கணவனிடம் கேட்டாள் மௌனா.
“ஆமாம் டா. டிராவலிங்கில் இருப்பாங்க. வீட்டுக்குப் போனதும் கால் பண்ணுவாங்க” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் மஹதன்.
இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், முக்தா மற்றும் கிஷானிடம் கண்ணைக் காட்டினார் கௌசல்யா.
“ஆங், மஹத், மௌனா ம்மா, உங்களோட கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும். அதுக்குத் தான், வந்திருக்கோம். போயிட்டு வரலாமா?” என்றான் கிஷான்.
அப்போது தான், மஹதனுக்கும், மௌனாவிற்கும் அந்தச் செயல் முறை பற்றி நினைவு வந்தது.
“ஆமால்ல, நாங்களும் மறந்துட்டோம் பாரு” என்று கூறிய கௌசல்யா,”இப்போ, ரிஜிஸ்டர் ஆஃபீஸ் ஓபன் ஆகி இருக்குமா?” என்று அவர்களிடம் வினவினார்.
“யெஸ் ஆன்ட்டி. அதான் இவங்களைக் கூப்பிட்டுப் போக வந்தோம். அப்படியே எங்க கல்யாணத்துக்கு என்னென்ன சர்டிஃபிகேட்ஸ் கொடுக்கனும்னுக் கேட்கனுமே?” என்று பதிலளித்தாள் முக்தா.
“அப்போ இவங்களை அழைச்சிட்டுப் போங்க” என்று மகனையும், மருமகளையும் அவர்களுடன் அனுப்பி வைக்கச் சம்மதித்தார் கௌசல்யா.
“மௌனா, இப்போ போகலாமா? இல்லை, இந்தப் புரொசீஜரை நாளைக்குக் கூடப் பாக்கலாமா?” என்று மனைவியிடம் கனிவுடன் கேட்டான் மஹதன்.
அவளுக்கு மனமாற்றம் தேவைப்படுகிறது போலும்.
எனவே,”இப்போ கிளம்பலாம் ங்க” என்று ஒப்புக் கொண்டாள் மஹதனின் இல்லாள்.
அம்மூவரையும் அனுப்பி வைத்ததைக் கணவனிடம் தெரிவித்து விட்டார் கௌசல்யா.
ஏற்கனவே, மஹதன் மற்றும் மௌனாவின் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக ஆவணங்களைச், சமர்ப்பித்து, விண்ணப்பித்து இருந்தனர். பதிவு செய்ய வேண்டிய தேதியை, இவர்களுக்கு முன் கூட்டியே அறிவித்து இருந்தனர்.
அதற்குக் கையொப்பமிடத் தான், இப்போது சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் பயணம் செய்கின்றனர்.
கிஷான் காரை ஓட்ட, அவனுக்கு அருகே முக்தா அமர்ந்திருந்தாள்.
பின்னாலிருந்த இருக்கையில், மஹதனும், மௌனாவும் உட்கார்ந்து இருந்தனர்.
மௌனாவின் சுருங்கிய வதனம், கிஷானையும் வருத்தியதால்,“மௌனா ம்மா, உனக்கு இன்னொரு பொறந்த வீடு, சென்னையிலேயே இருக்கு. எப்போ வேணும்னாலும், எங்க கூட வந்து தங்குடா ம்மா” என்று அவளிடம் அனுசரணையுடன் உரைத்தான்.
“சரிங்க அண்ணா” என அதை மென் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் மௌனா.
“அப்போ நீங்களும் எங்க வீட்டுக்கு வந்து தங்கனும். சரியா!” என்று கிஷான் மற்றும் முக்தாவிடம் கூறினான் மஹதன்.
“ஓகே டா” என்று ஒப்புதல் அளித்தான் கிஷான்.
சார்பதிவாளர் அலுவலகத்தை அடைந்ததும், காரை நிறுத்தி விட்டு, நால்வரும் உள்ளே சென்றனர்.
அவர்களைப் பார்த்த அதிகாரி,”வாங்க சார். உங்களுக்கான எல்லா புரொசீஜரும் முடிஞ்சது. சைன் மட்டும் பண்ணுங்க” என்று மஹதன் மற்றும் மௌனாவிடம் குறிப்பேட்டில் கையொப்பம் வாங்கிக் கொண்டவர்,
“சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் கரெக்டா சப்மிட் பண்ணிட்டீங்க. மத்த வேலைகள் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
“வேற எங்கேயாவது போகனுமா?” எனத் தன் நண்பன் மற்றும் அவனுடைய மனைவியிடம் வினவினான் கிஷான்.
“இல்லை டா வீட்டுக்குப் போகலாம்” என்கவும்,
மகிழுந்தை வீட்டிற்கு விட்டான் மஹதனின் நண்பன்.
அவர்கள் நால்வரும் வீட்டை அடைந்ததும், சிறிது நேரம், கௌசல்யாவுடன் பேசி விட்டுத் தத்தமது இல்லத்திற்குச் சென்றார்கள் கிஷான் மற்றும் முக்தா.
சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து யாரிடமும் புன்னகைத்துப் பேசாமல் இறுக்கமாக இருந்த மௌனாவைக் காண்கையில் வருத்தமும், ஏமாற்றமும் உண்டானது மஹதனுக்கு.
அவளது பெற்றோரின் பிரிவு அவளுடைய மனதை வலிக்கச் செய்யும் தான்!
ஆனால், தன்னுடைய அருகாமை அவளைக் கொஞ்சமேனும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கும் என்று எண்ணி இருந்தவனுக்கு மனைவியின் இந்தச் சுபாவம் அதிருப்தியைக் கொடுத்தது.
ஆகவே,”நீ பேசாமல் உங்க வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நாள் தங்கிட்டு வா மௌனா. அதுக்கப்புறம் நாம ஹனிமூன் போய்க்கலாம்” என்று தன்னிடம் உரைத்தக் கணவனை அதிர்வுடன் ஏறிட்டாள் மனைவி.
உடனே அவளைக் கனிவுடன் பார்த்தவனோ,”நீ உன் அப்பா, அம்மாவை ரொம்ப மிஸ் பண்ற, அதுக்குத் தான் சொன்னேன்” என்கவும்,
தன்னுடைய ஏக்கமும், வருத்தமும் தன்னவனையும் பாதித்து விட்டதே! என்று நொந்து கொண்டவளோ,
“இல்லைங்க வேண்டாம். நான் இப்படி ஃபீல் பண்ணிட்டு எப்போ பார்த்தாலும் அங்கே போயிட்டு வந்துட்டு இருந்தால் அது நல்லா இருக்காது. நாம ஹனிமூன் முடிச்சிட்டு வந்ததும், ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வரலாம்” என்று அவனிடம் உறுதியாக கூறி விட்டாள் மௌனா.
மஹதன்,“ஆர் யூ ஷ்யூர்?”
“எஸ்” என்று பதில் சொன்னாள் அவனது மனைவி.
அதற்குப் பிறகுத், தாங்கள் ஊருக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக தனக்கு அழைத்துச் சொன்ன அகதாவிடம் மிகவும் திடமாகவே பதில் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் மௌனா.
அதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருந்த மஹதனும், தன் மனைவி சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவாள் என்று நம்பிக்கை அடைந்தான்.
அதன் பின்னர், சில நாட்களுக்குத் தனது அலுவலகத்திற்குச் செல்லாமல் மனைவியுடன் அதிக நேரம் செலவழித்தான் மஹதன்.
அதைப் புரிந்து கொண்ட கௌசல்யாவும், திருமூர்த்தியும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை.
தன் நண்பன் அலுவலகத்திற்கு வரும் வரைக்கும் அவனது வேலைகளையும் சேர்த்துச் செய்து கொள்வதாக முன் வந்து வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றிக் கொண்டும் இருந்தான் கிஷான்.
அதே சமயம், அனைவரின் போதனைகளையும் செவி கொடுத்துக் கேட்டதன் விளைவால் தனது அனைத்து எதிர்மறையான எண்ணங்களையும் உள்ளத்திலிருந்து அழித்து விட்டுப் புது மனுஷியாக உலகை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாள் அகதா.
அதன் முன்னேற்பாடாக, ஆன்லைனிலேயே நல்லதொரு வேலையைத் தேடிக் கொண்டவள், அதைச் செய்யும் நேரத்தைத் தவிர, மௌனாவின் பெற்றோருடன் அளவளாவிக் கொண்டிருப்பது, கோயிலுக்குச் சென்று வருவது மற்றும் மௌனாவுடனும், அவளது புகுந்த வீட்டாருடனும் வாரம் ஒரு முறையாவது செல்பேசியில் உரையாடுவது என்று தன்னுடைய பொழுதை நிம்மதியாக கழித்தாள்.
தன்னுடைய வாழ்க்கையில் இப்படியானதொரு நிலையிலேயே இறுதி வரை தொடரட்டும் என்ற முடிவில் இருப்பவளுக்குக் காலம் வேறு ஒரு எதிர்காலத்தை வைத்திருக்கிறது என்றும், அது அவளுடைய வாழ்வை இன்னும் மகிழ்வாக மாற்றும் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
தனது வாழ்வைத் தனித்து நின்று எதிர்கொள்வதும், தனக்குத் துணையாக வருபவருடன் பயணிப்பதும் அவரவர் விருப்பம் தான்!
ஆனால், தன்னைத் தனக்காகவே ஏற்றுக் கொள்ளப் போகும் ஒருவன் காத்திருக்கும் பட்சத்தில் அவனைப் பற்றிக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லையே?
இனி வரும் காலங்களில் அகதாவின் மனதிற்குள் புதைந்திருக்கும் காதலையும் மீண்டும் துளிர் விடச் செய்ய ஒருவன் வரத் தான் போகிறான்! அவளுக்குத் தன் காதலை எவ்வாறு அள்ளித் தரப் போகிறான் என்பதை மட்டுமில்லாமல் அவளுடைய நேசத்தையும் தனக்கானதாக எப்படி மாற்றிக் கொள்ளப் போகிறான் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!
முற்றும்

கருத்துகள்
கருத்துரையிடுக