முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சிலே காதலின் கால்தடம் - 5

 


சில நேரம் கழிந்ததும் அவர்கள் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தனக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குச் சென்று தனது இரவு உடையை மாற்றிக் கொண்டு மெத்தையில் உட்கார்ந்து,


“இவன் இன்னைக்கு எனக்காகத் தான் சாப்பிட வரலையோ?”என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டவளோ, 


உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு,”ஆனால் அவனோட மாமாவும் தானே டின்னருக்கு வீட்டுக்கு வர முடியாதுன்ற மாதிரி சொன்னாங்க? அப்படின்னா, இது எதேச்சையாகத் தான் நடந்து இருக்கும். நான் தான் அவனைப் பத்தித் தேவையில்லாத யூகங்களை வச்சிட்டு இருக்கேன்! அதனால் அவனைப் பத்தி யோசிக்கிறதை முதல்ல நிறுத்தனும்”என்று தன்னைத் தானே நொந்து கொண்டுப் படுக்கையில் வீழ்ந்து தூங்கத் தொடங்கி விட்டிருந்தாள் பரிபூரணி. 


அதே நேரத்தில் தங்களது அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்திருந்தனர் ஆரண்யேஸ்வரன் மற்றும் கங்காதரன். 


அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்புத் தங்கள் வருகையைப் பற்றியத் தகவலைச் சைலபுத்திரிக்குச் செல்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்திருந்தான் அவரது மூத்த மகன். 


அதனாலேயே அவர்களுக்காக வரவேற்பு அறையிலிருந்த நீள்சாய்வு இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். 


அதைக் கண்ணுற்றதுமே,”ம்மா! நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சு. நீங்கப் போய்த் தூங்குங்க”என்று அன்னைக்கு அறிவுறுத்தினான் ஆரண்யேஸ்வரன். 


“ம்ஹ்ம். சரிப்பா. நான் இதுக்காக மட்டும் உங்களுக்காக வெயிட் பண்ணலை!”என்றிருந்தார் சைலபுத்திரி. 


“எங்ககிட்ட ஏதாவது முக்கியமான விஷயத்தைச் சொல்லனுமாத்தை?”எனத் தன் மாமியாரிடம் கேட்டிருந்தான் கங்காதரன். 


“ஆமாம் மாப்பிள்ளை”என்றவரைத் தானும் புருவச் சுளிப்புடன் ஏறிட்டான் ஆரண்யேஸ்வரன். 


“நீங்க முதல்ல உட்காருங்க”என்றவரோ, 


அங்கேயிருந்த ஜக்கில் இருந்த நீரை இரண்டுக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி அவர்களிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தார் சைலபுத்திரி. 


அவற்றை வாங்கிப் பருகி விட்டு அவர் கூறப் போகும் செய்தியைக் கேட்பதற்குத் தயாராகி விட்டார்கள் ஆரண்யேஸ்வரன் மற்றும் கங்காதரன். 


“நாளைக்கு அந்தப் பூரணிப் பொண்ணுக்கு வீட்டைச் சுத்திக் காட்டும் போது அவளை அப்படியே நம்ம ஆருவோட ரூமுக்கும் கூட்டிட்டுப் போய் அவளைக் காட்டலாம்னு இருக்கேன்”என்று அவர்கள் இருவரிடமும் விஷயத்தை தெரிவிக்க, 


அதைக் கேட்டதும் அவரது மகனும், மருமகனும் அவரை யோசனையாகப் பார்க்கவும், 


தானே மேலும் தொடர்ந்து,”ஏன்னா, நம்மச் சிவசக்தியைப் பார்த்துக்கத் தானே அந்தப் பொண்ணு வந்திருக்கிறாள்! அதனால் அவ ஆருவையும் பார்த்துட்டால் பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது. அதான்”எனத் தனது எண்ணத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார் சைலபுத்திரி. 


உடனே,”இதை நீங்க முதல்ல அந்தப் பொண்ணுக்கிட்டே சொல்லி அவங்களோட விருப்பத்தைக் கேளுங்க”என்று அவரிடம் மொழிந்தான் ஆரண்யேஸ்வரன். 


“ஆமாம்த்தை. எனக்கும் இது தான் சரின்னுப் படுது”எனத் தன் மச்சானின் வார்த்தைகளை வழிமொழியும் விதமாக கூறியிருந்தான் கங்காதரன். 


“அச்சோ! நான் இதைப் பத்தி முன்னாடியே யோசிக்காமல் இருந்து இருப்பேன்னு நீங்க ரெண்டு பேரும் நினைக்கிறீங்களா என்ன? அதைப் பத்தி எல்லாம் நானும், அவரும் அந்தப் பொண்ணுக்கிட்டே பேசிட்டோம். அவளுக்கும் இதுக்குச் சம்மதம் தானாம்! அதனால் தான், நான் இந்த விஷயத்தை உங்க ரெண்டு பேர் கிட்டேயே கொண்டு வந்தேன்”என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தார் சைலபுத்திரி. 


அதைக் கேட்டவுடனேயே,”ஏன்ம்மா! அப்படியா சொல்லுச்சு அந்தப் பொண்ணு?”என்று அவரிடம் ஐயத்துடன் கேட்டிருந்தான் ஆரண்யேஸ்வரன். 


“ஆமாம்டா! நீ ஏன் இப்படி சந்தேகமாக கேட்கிற?”என அவனிடம் வினவ,


“சந்தேகமாக எல்லாம் கேட்கலைம்மா. சும்மா தான் விசாரிச்சேன்”என அவருக்குப் பதிலளித்து விடவும், 


“அப்படின்னா சரி”என்றுரைத்து விட்டு, 


“உங்களுக்கு இதில் எதுவும்…”என்றத் தன் மாமியாரை இடைமறித்து, 


“எனக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லத்தை. அவங்களுக்கே சம்மதம்ன்னா நான் எதுக்கு மறுத்துப் பேசப் போறேன்”என்று அவருக்கு ஒப்புதல் அளித்து விட்டிருந்தான் கங்காதரன். 


“அப்போ சரி. நீங்கப் போய்த் தூங்குங்க. நான் உங்ககிட்ட இதைச் சொல்லத் தான் இவ்வளவு நேரமும் இங்கே காத்துட்டு இருந்தேன். நானும் போய்த் தூங்குறேன்”என்று அவர்களிடம் கூறினார் சைலபுத்திரி. 


உடனே,“சரிம்மா”,  


“நீங்கப் போங்க அத்தை”என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்து விட்டிருந்தார்கள் அவரது மகனும், மருமகனும். 


முதலில் ஆருத்ராவின் அறைக்குள் நுழைந்து அங்கே படுக்கையில் மாத்திரை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் தனது மனைவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, 


“நம்மப் பொண்ணுக்கு அம்மாவா நீ இருக்கும் போதே அவளைப் பார்த்துக்கிறதுக்காக வேலைக்கு ஆள் எடுத்து இருக்கோம் ஆரும்மா. இதை நினைக்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கு! ஆனால் இதை தவிர எங்களுக்கு வேற வழித் தெரியலைம்மா! ஏன்னா, அவளை எங்களால் வெளியே அனுப்பவும் முடியாது! ஸ்கூலில் சேர்த்து விட்டாலும் அவக் கூடப் படிக்கிறவங்க எல்லாரோட அம்மாவும் அவங்களை ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வந்து கூட்டிட்டுப் போறதையோ, இல்லைன்னா அந்தக் குழந்தைங்கத் தன்னோட அம்மாவைப் பத்திப் பெருமையாகப் பேசுறதைக் கேட்டாலோ அவளுக்குக் கஷ்டமாக இருக்கும்ன்னுத் தான் இன்னும் அவளை ஸ்கூலில் கூடச் சேர்த்து விடாமல் இருக்கோம்! நீ உடம்புச் சரியாகி எழுந்து வந்து பழையபடி நம்மப் பொண்ணுக் கூடச், சிரிச்சுப் பேசனும், விளையாடனும்! சீக்கிரம் எழுந்து நடமாடும்மா”என்று அவளிடம் ஏக்கத்துடனும், கண்ணீருடனும் மொழிந்து விட்டு அவளது நெற்றியில் வலிக்காமல் முத்தமிட்டு விட்டுத் தானும், தன் மகளும் இருக்கும் அறையை வந்து அடைந்து விட்டிருந்தான் கங்காதரன். 


அங்கே தனது பட்டுப் போன்ற முடிக்கற்றைகள் முன் நெற்றியில் தவழ தனது மனைவியின் சின்ன உருவமாக உறங்கிக் கொண்டிருந்த மகளை ஆதூரத்துடன் பார்த்து விட்டு அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுத் தன் உடையை மாற்றிக் கொண்டுக் கட்டிலின் மறுமுனையில் வந்து படுத்துக் கொண்டான். 


இங்கே தன் அறையில் மாற்றுடையை உடுத்திக் கொண்டு வந்து உறங்க ஆயத்தம் ஆகிய சமயத்தில், முன்னர் ஒருமுறை, தான் விரும்பிக் காதலை வெளிப்படுத்திய பெண்ணே தன் வீட்டிலேயே வேலை செய்ய வந்திருப்பதையும், இனிமேல் தினமும் அவளது முகத்தில் விழிப்பதை தவிர்க்க முடியாது என்பதையும் எண்ணித் தவித்துப் போனான் ஆரண்யேஸ்வரன். 


ஏனெனில் இப்போது வரையிலும் பரிபூரணியை மறக்கவே முடியாமல் தனக்குள் இருந்து எழும் அவளது நினைவுகளுடன் அவ்வப்போது போராடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தங்களது இந்த எதிர்பாராத சந்திப்பு மற்றும் இனிமேலும் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளப் போவதால் எதிர்காலத்தில் ஏதாவது குழப்பத்தை உருவாக்குமோ என்ற யோசனையில் சில நிமிடங்கள் லயித்து விட்டுத் தன் உடல் ஓய்விற்குக் கெஞ்சுவதை உணர்ந்து கொண்டுத் தன்னுடைய விழிகளை மூடி உறங்கலானான். 


மறுநாள் அதிகாலையிலேயே விழித்தெழுந்து தன்னைத் தயாராக்கிக் கொண்டுத் தனக்கான அழைப்பிற்காக காத்திருந்தாள் பரிபூரணி. 


அதே சமயத்தில் தாங்கள் இருவரும் கூடத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வந்திருந்தனர் சொக்கநாதன் மற்றும் சைலபுத்திரி. 


இங்குத் தனது உறக்கம் கலைந்து அருகே படுத்திருக்கும் மகளின் முகத்தில் பார்வையைப் பதித்து,


“குட் மார்னிங் சக்திம்மா”என மெலிதாக முணுமுணுத்து விட்டு அவளது கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டு விட்டவனிடம், 


“குட் மார்னிங் ப்பா”என்று தனது விழிகள் மலரத் தானும் அவனிடம் உரைத்து விட்டிருந்தாள் சிவசக்தி. 


“ஹேய்! நீயும் எழுந்துட்டியா?” என்று மகளைத் தனது மடியில் அமர்த்திக் கொண்டு வினவினான் கங்காதரன்.


“ம்ஹ்ம். எஸ் ப்பா”என்றிருந்தாள் மகள். 


“வெரிகுட்!”என்றவனோ, 


மகளையும் கிளப்பித், தானும் தயாராகித் தனது அத்தை, மாமா இருக்கும் இடத்தை அடைந்திருந்தான் கங்காதரன். 


அன்று தானும் துரிதமாக தயாராகி வந்து சேர்ந்திருந்தான் ஆரண்யேஸ்வரன்.


“எல்லாரும் வந்தாச்சா? நான் அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வரச் சொல்லவா?”என அனைவரிடமும் பொதுவாக கேட்டிருந்தார் சைலபுத்திரி. 


“ம்ம். கூட்டிட்டு வரச் சொல்லும்மா”என்று அவருக்கு ஒப்புதலை அளித்து இருந்தார் சொக்கநாதன். 


உடனே பரிபூரணியை வரவேற்பறைக்கு அழைத்து வருமாறு வேலையாளிடம் சொல்லி அனுப்பவும், அவளும் தனது பணியைச் செவ்வனே செய்ய அவளும் சில நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்திருந்தாள். 


அங்கே கூடியிருந்த அனைவரிடமும்,”வணக்கம்ங்க”என்று புன்னகையுடன் மொழிய, 


அவர்களோ,”வணக்கம்”எனத் தாங்களும் அவளிடம் கூறி விடவும், 


“குட் மார்னிங் சக்தி!”என்று சின்னவளிடம் குறுநகையுடன் சொன்னாள் பரிபூரணி. 


அதற்குத் தானும்,”குட் மார்னிங் ஆன்ட்டி”என்றிருந்தாள் சிவசக்தி. 


அவளிடம் இருந்து தனது கண்களை வேறு புறமாகச் சுழற்றியவளுடைய பார்வையில் தன்னையே கூர்மையான விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆரண்யேஸ்வரனைக் கண்டதுமே, தனது உதடுகளைச் சுழித்துக் கொண்டாள். 


அதே வேளையில்,”முதல்ல ஆருவோட ரூமுக்குப் போகலாமா - ம்மா?”என்று அவளிடம் வினவினார் சைலபுத்திரி. 


“ஹாங்! போகலாம் மேடம்”என அவருக்குப் பதிலளித்தாள் பரிபூரணி. 


உடனே தாமதிக்காமல் அவளை அழைத்துக் கொண்டுத் தாங்களும் ஆருத்ராவின் அறையை அடைந்து இருந்தனர் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும். 


அங்கே அவளைத் தினமும் வந்து பார்த்துக் கொள்ளும் செவிலியரும் உடனிருக்கத் தனது விரல்களை அசைக்கக் கூட முடியாமல் நிர்மலமான விழிகளுடன் தன்னைப் பார்க்க வந்திருக்கும் அனைவரையும் வெறித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. 


“இவங்க தான் எங்கம்மா ஆன்ட்டி! இவங்க நேம் ஆருத்ரா”என்று தன்னிடம் தன் தாயை அறிமுகப்படுத்தி வைத்த சிவசக்தியிடம் கூறி விட்டு,”அப்படியா? நீ எப்படி இவ்வளவு அழகாக இருக்கேன்னு இப்போ தான் புரியுது! உங்கம்மா ரொம்ப அழகாக இருக்காங்க!”என்று அவளது தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள் பரிபூரணி. 


அதைக் கேட்டதும் தன்னுடைய முகம் பிரகாசிக்க,”தாங்க்ஸ் ஆன்ட்டி!”என்று தன் இதழ்களில் புன்னகையைத் தருவித்துக் கொண்டு அவளுக்கு நன்றி கூறினாள் சின்னவள். 


உடனே தனது கையை ஆருத்ராவின் நலிந்த கரத்தில் மிருதுவாக வைத்து,”இனிமேல் உங்கப் பொண்ணைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க! இதுக்கப்புறம் சக்தியோட மொத்தப் பொறுப்பும் என்னோடது! இவளை நான் நல்லா பார்த்துப்பேன்! அதே மாதிரி நீங்க சீக்கிரம் குணமாகி வரனும்னு நான் கடவுள் கிட்டே வேண்டிக்கிறேன்!”என்று அவளிடம் உறுதி அளித்து விட்டிருந்தாள் பரிபூரணி. 


அதைக் கேட்டு அவளுக்குச் சம்மதம் அளிக்கும் வகையில் தன் இமைகளை மூடித் திறந்தாள் ஆருத்ரா. 


அதைக் கண்ணுற்ற அங்கேயிருந்த அனைவரின் விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் கசியத் தொடங்கியது எனலாம்!


உடனே தங்களை நிலைப்படுத்திக் கொண்டுச் சிவசக்திப் பார்ப்பதற்குள் தங்களது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள் சொக்கநாதன், சைலபுத்திரி, கங்காதரன் மற்றும் ஆரண்யேஸ்வரன். 


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...