“நீ எங்ககிட்ட ஏதாவது உண்மையை மறைக்கிறியா ஈஸ்வரா?”என அவனிடம் தீர்க்கமாக வினவினான் கங்காதரன்.
உடனே தனது முகத்தில் படர்ந்த பதட்டத்துடன்,” இல்லையே மாமா. ஏன் இப்படி கேட்கிறீங்க?”என்றவனைக் கூர்மையானப் பார்வையால் துளைத்தவாறே,
“அப்பறம் எதுக்கு இப்படி பதட்டப்பட்ற? எனக்கு என்னமோ நீ எங்ககிட்ட இருந்து எதையோ ரொம்ப வருஷமாக மறைச்சு வச்சிருக்கிறா மாதிரித் தோணுது! அதை நீயே உன் வாயாலேயே சொல்லிடு”என்று அவனுக்கு அறிவுறுத்த,
“ப்ச்! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மாமா!”என்று தனது கண்களைத் தவிர்த்துக் கூறியவனை அழுத்தமாகப் பார்த்து,
“நீ பொய் சொல்றேன்னு என் கண்ணைப் பார்க்காமல் பதில் சொல்லும் போதே எனக்கு நல்லா புரியது ஈஸ்வரா! நீ என்கிட்டேயாவது உன் மனசில் இருக்கிற உண்மையைச் சொல்லலாமே?”என்று அவனுக்கு அறிவுரை வழங்கினான் கங்காதரன்.
அதில்,“மாமா”என அவனைச் சங்கடமாகப் பார்த்தான் ஆரண்யேஸ்வரன்.
“நாம ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு உனக்கும், எனக்கும் நல்லாவே தெரியும் தானே? ஃப்ரண்ட்ஸ் மாதிரித் தானே பழகிட்டு இருக்கோம்? அப்படி இருக்கும் போது எங்கிட்ட ஏன் விஷயத்தை மறைக்கிற? அப்போ நீ என் மேலே வச்சிருக்கிற நம்பிக்கை இவ்வளவு தானா? உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம். நானும் இனிமேல் இதைப் பத்தி உங்கிட்ட கேட்க மாட்டேன்”என்று தன்னிடம் உறுதியாக உரைத்த தன் தங்கையின் கணவனை வெறுமையாக நோக்கி விட்டு,
“நான் உங்களை நம்புறேன் மாமா. நீங்க சொன்னது கரெக்ட் தான். நான் என் மனசில் ஒரு விஷயத்தை ரொம்ப வருஷமாக மறைச்சு வச்சிருக்கேன் தான்! அதை இப்போ உங்ககிட்ட சொல்றேன்”என்றதுமே,
“ஹேய்! உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்டா! நான் அதைக் கேட்டு உன்னைச் சங்கடப்படுத்த மாட்டேன்! ஃப்ரீயா இரு”என்று கூறி அவனை அமைதிப்படுத்தினான் கங்காதரன்.
“ம்ஹூம். என் மனசில் இவ்வளவு வருஷமாகப் பூட்டி வச்சிருந்த விஷயத்தை இப்போ உங்ககிட்ட சொல்லனும்னு ஆசைப்பட்றேன் மாமா. அப்படியாவது என் மனப் பாரம் குறையுதான்னுப் பார்ப்போம்”என்று அவனிடம் தீர்க்கமாக உரைக்கவும்,
“உனக்கு ஓகேன்னா சொல்லு”என்று அவனிடம் கூறப் போவதைக் கேட்கத் தயாராகி விடவும்,
உடனே தனது கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் அவனிடம் கொட்டித் தீர்க்க ஆயத்தம் ஆகி விட்டிருந்தான் ஆரண்யேஸ்வரன்.
அதே சமயத்தில், இங்கே அவனது வீட்டில் ஒரு அறையில் சிவசக்திக்குத், தான் சொல்லிக் கொடுத்த ஆங்கில வார்த்தைகளை ஒரு நோட்டில் எழுதி,
“இதுக்குக் கீழே அப்படியே வரிசையாக எழுதும்மா”என அவளிடம் தெரிவிக்கவும்,
உடனே தானும்,“சரிங்க ஆன்ட்டி!”என்று அவள் கூறியதைச் செயல்படுத்த தொடங்கி விட்டாள் இளையவள்.
அப்போது தனக்கும், ஆரண்யேஸ்வரனுக்கும் தங்களது கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைத் தானும் தன் ஞாபகத்தில் கொண்டு வந்து அதைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து போய் விட்டாள் பரிபூரணி.
சில வருடங்களுக்கு முன்பு,
ஆரண்யேஸ்வரனும், பரிபூரணியும் தங்களது முதுகலைக் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தச் சமயம் அது!
அவர்கள் இருவருமே எம். பி. ஏ (Master of business management) படிப்பில் தான் சேர்ந்து இருந்தார்கள்!
அவர்கள் தங்களது இளங்கலைப் படிப்பைப் படிப்பதற்காகச் சேர்ந்து இருப்பது அந்த மாநிலத்திலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்காரப் பிள்ளைகள் மட்டும் படிக்கும் கல்லூரி ஆகும்!
அதனால் தான், அங்கே ஆரண்யேஸ்வரன் மற்றும் பரிபூரணியின் பெற்றோர்களும் அந்தக் கல்லூரியில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்து இருந்தனர் எனலாம்!
அதேபோல் ஆரண்யேஸ்வரன் மற்றும் பரிபூரணியும் தங்களது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றதும் ஒரு புகழ் பெற்றப் பிரபலமான கல்லூரி தான்!
தனது மேற்படிப்பிற்காக விடுதியில் சேர்த்துப் படிக்க ஆசைப்பட்ட மகனின் விருப்பத்தை தட்டிக் கழிக்காமல் அவனை முதுகலைப் படிப்பிற்காக வேறொரு கல்லூரியில் சேர்த்து அங்கேயிருந்த விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்து விட்டனர் சொக்கநாதன் மற்றும் சைலபுத்திரி.
உடனே தானும் தனது விடுதி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே தனது முதுகலைக் கல்லூரிப் படிப்பையும் படிக்கத் தயாராகி விட்டான் ஆரண்யேஸ்வரன்.
ஆனால் சொந்த ஊரில் தான், அந்தக் கல்லூரி அமைந்து உள்ளதால் தனது இரு சக்கர வாகனத்திலேயே தினமும் கல்லூரிக்குச் சென்று வர முடிவெடுத்தாள் பரிபூரணி.
கல்லூரியில் சேர்ந்ததற்குப் பின் முதல் சில வாரங்களில் தாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவ, மாணவியாகத் தான் தங்களுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார்கள் ஆரண்யேஸ்வரன் மற்றும் பரிபூரணி.
ஆனால் போகப், போகப் பெண்ணவளின் செய்கைகள் யாவும் தன்னைக் கொஞ்சம், கொஞ்சமாக ஈர்ப்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டான் ஆடவன்.
ஆம்!
தான் கற்றுக் கொண்டிருந்த அந்தச் சீன மண்ணை வைத்து விதவிதமான அணிகலன்களைச் செய்து அவற்றைத் தினமும் அணிந்து கல்லூரிக்கு வரும் அவளின் தோற்றத்தை முதல் முறையாகப் ஆராய்ச்சி செய்து பார்த்தான் ஆரண்யேஸ்வரன்.
ஏனென்றால், அவனது தங்கையான ஆருத்ராவிற்கும் இந்தப் பொழுதுபோக்கு இருக்கிறது என்பதாலேயே அவள் மீது தனது கவனத்தைப் பதிக்கத் தொடங்கினான்.
ஆனால் தனது காதுகள் மற்றும் கழுத்தில் தன் கைகளாலேயே செய்த அந்த அழகான அணிகலன்களை இப்படியும், அப்படியுமாக அசைத்துக் கொண்டே அதைப் பற்றிய தகவல்களை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த தோழிகளிடம்,
“இதையெல்லாம் செய்றது ரொம்பவே ஈஸி தான்! ஆனால் இதைச் செய்யும் போது பொறுமையும், கவனமும் ரொம்ப முக்கியம்! நான் இதையெல்லாம் செய்றதுக்குன்னுத் தனியாகப் பயிற்சி வகுப்புப் போய்க் கத்துக்கிட்டேன்! அதோட அட்ரஸூமே எங்கிட்ட இருக்கு. உங்க யாருக்காவது இதைக் கத்துக்கனும்னு ஆசை இருந்தால் சொல்லுங்க. நான் அதோட அட்ரஸை உங்களுக்குத் தர்றேன்”என்று தெரிவித்தாள் பரிபூரணி.
“நானும் இதைக் கத்துக்க ஆசைப்பட்றேன் டி!”என அவளிடம் ஆர்வத்துடன் கூறினாள் அவளது சக தோழி கரீஷ்மா.
“அப்போ நான் உனக்கு அதோட அட்ரஸை அனுப்புறேன்”என்றவளைத் தடுத்து,“என் வீட்டில் அங்கே எல்லாம் போய் இதைக் கத்துக்க விட மாட்டாங்கடி! நீ வேணும்னா எனக்குச் சொல்லித் தர்றியா? நான் இதுக்கானப் பணத்தைக் கூடத் தந்துட்றேன்”என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டவளிடம் மறுத்துப் பேச முடியாமல்,
“சரிடி. ஆனால் எனக்கு இதுக்கானப் பணம் எல்லாம் வேண்டாம். நம்மக் காலேஜ் லீவ் விட்றப்போ எல்லாம் நான் உனக்கு இதைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சொல்லித் தர்றேன்”என்றிருந்தாள் பரிபூரணி.
“ம்ம். சரிடி. ஆனால் நீ இதுக்கான காசு வேண்டாம்ன்னுச் சொல்லிட்டாலும் கூட நாம வாரத்துக்கு ஒரு தடவை ஏதாவது ரெஸ்டாரெண்ட் போகலாம். அங்கே நீ சாப்பிட்றதுக்கு எல்லாம் நான் தான் பில் கொடுப்பேன். டீலா?”என்று கறாராக கேட்டிருந்தாள் அந்தக் கரீஷ்மா.
“விட மாட்டியே நீ! ஓகே டீல்”எனத் தானும் அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு விடவும்,
அதற்குப் பிறகுக் கரீஷ்மாவைத் தொடர்ந்து அவளது மற்றத் தோழிகளும் அந்தச் சீன மண்ணை வைத்து அணிகலன்கள் செய்யும் பயிற்சியைத் தங்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு அவளிடம் விண்ணப்பங்களை வைக்கவும்,
“சரி, சரி! நான் உங்க எல்லாருக்குமே இதைச் சொல்லித் தர்றேன். இப்போ கொஞ்ச நேரத்தில் நம்ம மேம் வந்துடுவாங்க. அதனால் கிளாஸைக் கவனிப்போம்”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினாள் பரிபூரணி.
அவர்கள் அனைவரும் கலைந்து சென்று தத்தமது இடங்களில் அமர்ந்து கொண்டார்கள் என்றால், இங்கே பரிபூரணி மற்றும் அவளது தோழிகளின் உரையாடல்களைக் கேட்டு முடித்து விட்டிருந்து அவளை வியப்புடன் பார்த்து,'ம்ஹ்ம். இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர்! எல்லாருக்கும் இலவசமாகப் பயிற்சித் தர்றாங்களே இந்தப் பொண்ணு!’என்று தனது மனதிற்குள் சொல்லிக் கொண்டான் ஆரண்யேஸ்வரன்.
தனது தோழிகளின் விண்ணப்பத்தை அன்று மாலையே தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டு விட்டிருந்தாள் பரிபூரணி.
அதைக் கேட்டு விட்டு,”இது நல்ல விஷயம் தான்ம்மா. நீ இதை ஒரு பயிற்சிக் கூடம் வச்சு அஃபிஷியிலாக எல்லாருக்கும் இதைச் சொல்லிக் கொடுக்கலாமே? அதுவும் உன் ஃப்ரண்ட்ஸ்ஸே இதுக்கானப் பணத்தை தர முன் வந்து இருக்காங்களே? அப்பறம் என்ன? நாம எப்பவுமே நம்ம உழைப்புக்கான நியாயமான ஊதியத்தை விட்டுடக் கூடாதும்மா! அது தான் உன்னோட திறமையை இன்னும் அதிகமானவங்களுக்குப் போய்ச் சேரும்”என அவளுக்கு அறிவுறுத்தினார்கள் அவளது பெற்றோரான புருஷோத்தமன் மற்றும் மகாதேவி.
உடனே,”ஆனால் நான் அவங்களுக்கு ஃப்ரீயாக கிளாஸ் எடுக்குறேன்னு வாக்குக் கொடுத்துட்டேனே? அதிலிருந்து என்னால் பின் வாங்க முடியாதே”என அவர்களிடம் வருத்தமாக கூறிய மகளிடம்,
“சரி. உன்னோட ஃப்ரண்ட்ஸூக்கு ஃப்ரீயாகச் சொல்லிக் கொடு. ஆனால் எதிர்காலத்தில் வெளி ஆளுங்க யாராவது உங்கிட்ட இப்படி இதைக் கத்துக்கிறதுக்குக் கேட்டால் அவங்க கிட்ட இதுக்கானப் பணத்தைக் கண்டிப்பாக வாங்கு!”என்று அவளது உழைப்பு மற்றும் அவளுக்கு அதனால் கிடைக்கும் பணத்தைப் பற்றிய முக்கியத்துவத்தைச் சொல்லிப் புரிய வைத்தார்கள் அவ்விருவரும்.
அதை,”சரிப்பா, சரிம்மா. நான் இனிமேல் இதைக் கண்டிப்பாக ஞாபகத்தில் வச்சு நடந்துக்கிறேன்”என்று அவர்களுக்கு வாக்களித்து விட்டிருந்தாள் பரிபூரணி.
அதேபோல், அதற்கடுத்த நாள் மாலையில் தங்களது கல்லூரி முடிந்ததும் கேம்பஸிற்கு உள்ளே இருக்கும் ஒரு உபயோகிக்காமல் இருக்கும் வகுப்பறையில் அமர்ந்து கொண்டுச்,
சீன மண்ணை வைத்து உருவாக்கும் அணிகலன்களைப் பற்றிய குறிப்புகளையும், அதற்குத் தேவையான பொருட்களையும் தனது தோழிகளிடம் விளக்கம் அளித்து விட்டு,
“இந்த டெரக்கோட்டா செட்களை எல்லாம் செய்யத் தேவையானப் பொருட்கள் என்ன, என்னன்னு லிஸ்ட் எடுத்துட்டீங்க தானே?”என அவர்களிடம் கேட்டிருந்தாள் பரிபூரணி.
“ம்ஹ்ம். எடுத்தாச்சுடி”என முந்திக் கொண்டுப் பதிலளித்தாள் அவர்களில் ஒருவளான நயனி.
உடனே,”அப்போ இதையெல்லாம் நான் சொல்றக் கடையில் வாங்கிட்டு நாளைக்கு வாங்க. நாம சாயந்தரம் காலேஜ் முடிஞ்சதும் இங்கேயே மீட் பண்ணிக்கலாம். ஆனால் உடனே கிளாஸை ஆரம்பிச்சிட மாட்டேன்! அந்தப் பொருட்களைப் பத்தின தகவல்களை எல்லாம் சொன்னதுக்கு அப்பறமாகத் தான் கிளாஸை ஸ்டார்ட் பண்ணுவேன். சரியா?”என்றதுமே,
“சரி பரி!”என்று அவர்கள் அனைவரும் கூறி விடவும்,
“ஓகே. இப்போ நாம வீட்டுக்குக் கிளம்பலாமா?”என்றபடியே நாற்காலியில் இருந்து எழுந்து தனது கல்லூரிப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் பரிபூரணி.
அதைக் கேட்டதுமே அவளைப் பின்பற்றித் தாங்களும் தங்களது கல்லூரிப் பைகளைப் போட்டுக் கொண்டு,”கிளம்பலாமே!”என்றுரைத்துப் புன்னகைத்தனர் அவளது தோழிகள்.
உடனே அந்த வகுப்பறையை விட்டு வெளியேறினார்கள் அனைவரும்.
அப்போது அங்கே வியர்க்க, விறுவிறுக்கத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூடைப் பந்து விளையாட்டில் மூழ்கி இருந்த ஆரண்யேஸ்வரனின் விழிகளில் பட்டாள் பரிபூரணி.
அவளைப் பார்த்தவுடனேயே தன்னுடல் புத்துணர்ச்சிப் பெற்றதைப் போன்று உணர்ந்தவனோ,
அவளைப் பார்த்து முதல் முறையாகப் புன்னகையை வெளிப்படுத்தவும்,
அதே சமயத்தில் தானும் அவனைச் சந்திக்க நேர்ந்ததால் நாகரீகம் கருதி தானும் அவனைப் பார்த்துக் குறுநகை வீசி விட்டு அங்கேயிருந்து அகன்றாள் பரிபூரணி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக