முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவியம் 28

 


சோபாவில் அமர்ந்த ரமணியோ யோசனை படிந்த முகத்துடன் பிரஹாசினியைப் பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டு, 


“நீ போய்ப் படி பிரஹா” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பப் பார்த்தார் உமாராணி. 


“ஏன் அவளை உடனே போகச் சொல்றீங்க அண்ணி? கொஞ்ச நேரம் இங்கே இருக்கட்டுமே?” என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டார் ரமணி. 


உடனே பிரஹாசினியோ,”அதில்லை அத்தை. எனக்கு மூனு நாள் தான் லீவ் இருக்கு. அதுக்குள்ளே நிறைய படிக்கனும். அதனால் தான், பெரியம்மா அப்படி சொல்றாங்க. நான் போய்ப் படிக்கிறேன் அத்தை” என்று சொல்லவும், 


“சரிடா போய்ப் படி” என அவரும் கூறி விட, தன்னுடைய பெரியம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டுத் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள். 


“இவளுக்குப் படிப்பு எப்போ முடியுது அண்ணா?” என்று தன் தமையனிடம் வினவினார் ரமணி. 


விருச்சிகன்,“இன்னும் ஒரு வருஷம் இருக்கும்மா” என்றார் தங்கையிடம். 


“அப்படியா? அப்போ படிச்சு முடிச்சதும் கல்யாணத்துக்குப் பார்க்க ஆரம்பிச்சுடுவீங்க தானே?” என்றவரது கேள்வியில் மற்றவர்கள் அதிர்ந்து போயினர். 


இதனால் தான் அவர் பிரஹாசினியை அப்படிப் பார்வையால் அளந்தாரா? என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும், 


“அண்ணே!” என்று விருச்சிகனை அழைத்தார் ரமணி. 


“பிரஹாவுக்கு உடனே மாப்பிள்ளைப் பார்க்கிற ஐடியா இல்லைம்மா” என்று பட்டென்று சொல்லி விட்டார் அவரது தமையன். 


“ஓஹ் அதுவும் நல்லது தான் அண்ணா” என்றவரோ, இன்னும் யோசனையில் ஆழ்ந்து விட, 


“நீ டிவி பாரு ரமணி. நான் சாப்பாடு செய்றேன்” என்று அவரிடம் சொல்லி விட்டுச் சமையலறைக்குள் போய் விட்டார் உமாராணி.


விருச்சிகனும் கடைக்குக் கிளம்புவதாகக் கூறி விட்டுப் போக, தனது கல்லூரிக்குச் செல்லத் தயாராகச் சென்றான் நீரஜ்.


ஹாலில் தனித்து விடப்பட்ட ரமணியோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்த தொடரைப் பார்க்கத் தொடங்கி விட்டார். 


அதன் பின்னர், தனது கணவர் மற்றும் மகனுக்கான மதிய உணவை முதலில் செய்து அவற்றை அதற்கேற்ற பாத்திரத்தில் அடைத்து வைத்து விட்டுப் பின்னர், அனைவருக்குமான காலை உணவைச் சமைத்து முடித்ததும், 


விருச்சிகனும், நீரஜ்ஜூம் டைனிங் டேபிளிற்கு வந்து உணவுண்ண அமர,”நீயும் இவங்க கூடவே உட்கார்ந்து சாப்பிடும்மா” என்று ரமணியை அழைத்தார் உமாராணி. 


“இல்லைண்ணி. நான் நீங்களும், பிரஹாவும் சாப்பிடும் போது சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்” எனவும், 


“சரிம்மா” என்று கூறி விட்டுத் தன் கணவருக்கும், மகனுக்கும் உணவைப் பரிமாறினார் உமாராணி. 


அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன்,”அப்பா, நான் உங்களைக் கடையில் விட்டுட்டு அப்படியே காலேஜூக்குப் போய்க்கிறேன்” என்றவன்,


தங்கையிடம் சென்றவன்,”நீ சாப்பிட்டுட்டுப் படி பிரஹா. அவங்க எது பேசினாலும் மனசில் வச்சுக்காதே! சரியா? நான் காலேஜூக்குப் போயிட்டு வர்றேன்”என்று அவளிடம் கனிவுடன் கூறினான் நீரஜ். 


“சரிங்க அண்ணா. பெரியப்பாவும் கடைக்குக் கிளம்பிட்டாங்களா?” எனக் கேட்டாள் பிரஹாசினி. 


“ஆமாம்மா. அவர் என் கூட பைக்கில் வர்றார்” என்றதும்,


“அப்போ அவரையும் வழியனுப்பனும்ல? நான் வெளியே வர்றேன் அண்ணா” என்றவளோ ஹாலிற்கு வந்து, 


“பெரியப்பா! கடைக்குக் கிளம்பியாச்சா?” என்றாள் பிரஹாசினி. 


“ஆமாம்மா. போயிட்டு வர்றேன்” என்றார் விருச்சிகன்.


“சரிங்க பெரியப்பா”,


“ பை அண்ணா” என இருவரையும் வழியனுப்பி வைத்தவளிடம்,


“நீயும் வந்து சாப்பிடு பிரஹா” என்று அவளை அமர வைத்து விட்டு, 


“ரமணி! சாப்பிட வாம்மா” என்று அவரையும் அழைத்து உட்கார வைத்துப் பரிமாறத் தொடங்கினார் உமாராணி. 


“நீங்க சாப்பிடலையா பெரியம்மா?” என்று அவரிடம் வினவினாள் பிரஹாசினி. 


“நானும் சாப்பிடுவேன். முதல்ல உங்களுக்குப் பரிமாறிட்டு அப்பறம் எனக்குப் போட்டுக்கிறேன்” என்று கூறி அதைச் செய்தும் முடித்தார். 


அப்போது,”இந்தச் சாம்பார் நல்ல மணமாக இருக்கு அண்ணி” எனத் தன்னிடம் கூறிய ரமணியைப் புன்னகையுடன் பார்த்து, 


“நன்றிம்மா” என்று அவரிடம் தெரிவித்தார் உமாராணி. 


ஆனால் அதற்குப் பிறகு, அதிசயமாகப் பிரஹாசினியையும் பேச்சில் இழுக்காமல் தனது அண்ணியிடம் மட்டும் உரையாடி விட்டு உண்டு எழுந்தார் ரமணி. 


“நான் கொஞ்ச நேரம் போய்ப் படிக்கிறேன்” என்று பொதுவாக அறிவித்து விட்டுப் போய் விட்டாள் பிரஹாசினி. 


“இவ என்ன எப்போ பார்த்தாலும் படிப்புப், படிப்புன்னே இருக்கிறா அண்ணி? இன்னைக்கு மட்டும் தான் இப்படியா? இல்லை, எப்பவுமே இப்படித் தானா?” எனச் சூசகமாக வினவிய தன் ஒன்று விட்ட நாத்தனாரிடம், 


“அவ எப்பவுமே இப்படித் தான் ரமணி. தன்னோட படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பா” என்று விளக்கம் அளித்தார் உமாராணி. 


“ஓஹ்ஹோ! அப்படின்னா சரித்தேன் அண்ணி” என்றவரது முகம் அப்போது தான் தெளிவடைந்தது எனலாம். 


தன்னிடமிருந்து தப்பிக்கத் தான் புத்தகப் புழுவாக மாறி இருக்கிறாள் என்று எண்ணிக் கடுப்பில் இருந்தார் ரமணி. 


இப்போது தான் அவள் உண்மையிலேயே படிப்பிற்கு முக்கியத்துவம் தருகிறாள் என்பதை தெரிந்து விட்டதே! இதுவும் ஒரு வகையில் நல்லது தான்! ஏனென்றால், கல்லூரிக்குப் போனதில் இருந்து பிரஹாசினியின் அழகு கூடிக் கொண்டே போவதை அவள் ஊருக்கு வரும் போதெல்லாம் வந்து பார்த்து விட்டுத் தானே போகிறார். 


அதேபோல் அவள் நன்றாகப் படித்து வேலைக்குச் சென்றால் எதிர்காலத்தில் தன்னுடைய மகன்களில் யாருக்காவது திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என்றால் இவளைக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்ற நோக்கம் இருந்தது ரமணிக்கு. 


அதனாலேயே பிரஹாசினியைத் தன்னுடைய கழுகுப் பார்வையில்  வைத்திருக்க முடிவெடுத்து இருக்கிறார். 


இங்கே தன் அறையில் படித்துக் கொண்டிருந்த பிரஹாசினியோ அவளது அத்தையின் வருகையில் அவ்வளவாகப் பிடித்தம் இல்லை. 


அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வித பயமும், பதட்டமும் தன்னை ஆட்கொள்வதை அவளாலேயே உணர முடிந்தது. 


அவளும், அவளது வீட்டாரும் நினைத்ததைப் போலவே, மறுநாள் அங்கேயிருந்து கிளம்பிச் செல்லுகையில்,”காலேஜூக்குப் போக ஆரம்பிச்சதுல இருந்து மருமகளோட முகம் நல்லா தெளிவாகிடுச்சு! இவ ஊருக்கு வரும் போதெல்லாம் திருஷ்டி சுத்திப் போடுங்க அண்ணி” என்று கூறியது மட்டுமின்றி பிரஹாசினியின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சி விட்டுப் போனார் ரமணி. 


அதில் அவர் தன்னிடம் விடைபெற்றுச் சென்றதைக் கூட உணராமல் ஆணியடித்தாற் போன்று அதே இடத்தில் நின்று விட்டாள் பிரஹாசினி. 


அவளை மாதிரியே, அவளது குடும்பத்தாரும் அதே நிலையில் தான் இருந்தனர். 


ஆனால் தங்களைச் சுதாரித்துக் கொண்டு,”ரமணி என்னவும் சொல்லிட்டுப் போறாம்மா. நீ அதையெல்லாம் மூளையில் ஏத்திக்காம நல்லா படி பிரஹா. அதில் மட்டும் கவனத்தை வை” என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டுச் சென்றார் விருச்சிகன். 


“அவங்க நம்ம வீட்டுக்கு எதுக்கு இப்படி அடிக்கடி வந்து போயிட்டு இருக்காங்கன்னு நான் அப்பவே யோசிச்சேன்! அதுக்குக் காரணம் என்னன்னு இப்போ தான் புரியுது!” என்று கருவிக் கொண்டான் நீரஜ். 


“விடுடா. அவ ஏதாவது உளறுவா. நீங்க ரெண்டு பேரும் அதைக் கண்டுக்காதீங்க” என்றார் உமாராணி. 


அவரது வார்த்தைகள் தந்த சிறிதளவு நம்பிக்கையுடன் தனது அறைக்குப் போன பெண்ணவளின் மனதில் உதித்தது என்னவோ திவ்யனின் முகம் தான்! 


ஏனோ தெரியவில்லை, அவளது ரமணி அத்தை அவ்வாறு தனது திருமணத்தைப் பற்றிப் பேசி விட்டுச் சென்றவுடன் அவனைப் பற்றிய ஞாபகம் தான் முந்திக் கொண்டு வந்தது.


அது ஏன் என்று அவளுக்கும் சத்தியமாகப் புரியவில்லை.


இரண்டொரு தடவைகள் பார்த்தவனைத் தன்னுடைய வாழ்க்கைத் துணையாக எண்ணும் அளவிற்கா தன் தற்போதைய நிலை இருக்கிறது? என்று தன்னை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டாள் பிரஹாசினி. 


ஆனால் திய்வனின் நினைவுகளும் அவளை விட்டு விலகாமல் ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது. 


உடனே அதை மாற்ற வேண்டிய கட்டாயத்தின் பேரில் தோழிகளுக்குக் கால் செய்து பேச ஆரம்பித்து விட்டாள். 


இதே சமயம், தனது தங்கைக்குப் புத்திமதி சொல்லியதற்குப் பிறகு இப்பொழுதெல்லாம் தன்னுடைய வெறுப்பிற்குக் காரணமாக இருந்த பிரஹாசினியைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் தன் வீட்டாரிடம் முன் வைக்கவில்லை ஆரவி. 


அவள் பாட்டிற்குப் படிப்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க, அதுவே போதும் என்றெண்ணிக் கொண்டு அவளைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டார்கள் அவளது வீட்டினர்.


அவளது தமையன் திவ்யனும் கூடத் தனது வேலை தேடும் பணியில் மிகவும் முனைப்பாக இருந்தான். 


“சீனியர்ஸ் எல்லாரும் ரொம்ப மும்முரமாகப் படிச்சிட்டு இருக்காங்க போல! யாருமே ஃபோன், மெசேஜ் எதுவுமே பண்ண மாட்டேங்குறாங்க” என்று அலுத்துக் கொண்டாள் ஆரவி. 


“அப்பறம் அவங்கப் படிக்காமல் உன் கூடக் கடலை போட்டுட்டா இருக்கனும்? நீயும் தானே ரொம்ப ஆர்வமாகப் படிச்சிட்டு இருக்கிற? முதல்ல உனக்கு உன் ஃப்ரண்ட்ஸ் கூடப் பேசுறதுக்கு நேரம் இருக்கா?” என்று தங்கையின் காலை வாரினான் திவ்யன்.


“நான் அப்பப்போ அவங்களுக்குக் கால் பண்ணிப் பேசிட்டுத் தான் இருக்கேன் அண்ணா” என்று முறுக்கிக் கொண்டவளிடம்,


“அதே மாதிரி நீயே உன்னோட சீனியர்ஸூக்குக் கால் செஞ்சிப் பேசு ஆரு” என்று கூறினான் அவளது தமையன். 


“ஆமாம் அண்ணா. அது தான் சரி. நான் போய்ப் பேசிட்டு வர்றேன்” என்றவளோ, தன்னுடைய செல்பேசியை எடுத்துக் கொண்டுத் தனிமையான இடத்தை நாடிச் சென்று விட்டாள் ஆரவி. 


“நல்லவேளை இவ இன்னும் தேய்ஞ்ச ரெக்கார்ட் மாதிரி அந்தப் பிரஹாசினி இருக்காங்களேன்னு ஆரம்பிக்காமல் இருக்கிறாளே! அதுவே பெருசு!” என்று தன்னுடைய மகனிடமும், கணவரிடமும் பகிர்ந்து கொண்டார் சோமசுந்தரி. 


“ஹா ஹா! உங்கம்மா சொன்னதைக் கேட்டியா டா? அந்தளவுக்கு ஆரு இவளை அப்படி புலம்பியே டார்ச்சர் செய்துட்டு இருந்து இருக்கிறா!” என்று திவ்யனிடம் சொல்லி நகைத்தார் மகுடபதி. 


“ஆமாம்ப்பா” என்றவனோ,


“ஆரு வரட்டும் இருங்க. அவகிட்ட உங்களை மாட்டி விட்றேன்” எனத் தாயிடம் கூறிச் சிரித்தான். 


“டேய்! சும்மா இரு! அவ வந்து அதைக் கேட்டு எங்கிட்ட கோவிச்சுக்கப் போறாள்!” என்று அவனை அதட்டினார் சோமசுந்தரி. 


“ஓஹோ! அவ மேலே உங்களுக்கு அவ்வளவு பயமா?” என்றவனை முறைத்துப் பார்க்கவும், 


“சரிம்மா. இனிமேல் இப்படி பேசலை! சாரி” என்று அவரிடம் சரணடைந்து விட்டான் திவ்யன். 


அதே நேரத்தில், தன்னுடைய அறையில் இருந்து கொண்டு தனது சீனியர் சௌமியாவிற்கு அழைப்பு விடுத்தாள் ஆரவி.


ஆனால் அவள் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருப்பதாக வரவும், அந்த அழைப்பைத் துண்டித்து விட்டுக் காத்திருந்தாள். 


அப்போது, அவளைச் சிறிது நேரம் காத்திருக்குமாறு சௌமியா அனுப்பியிருந்த குறுஞ்செய்தி காணக் கிடைத்ததும் செல்பேசியில் வேறு பார்க்கத் தொடங்கி விட்டாள் ஆரவி.


                        - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...