சிறிது நேரத்திற்குப் பின்னர், தன்னுடைய பயணப் பையின் மேலிருந்து தனது கரங்களை அகற்றிக் கொண்டவளை திவ்யனைப் பற்றிய நினைவுகள் ஆட்கொண்டது.
அவனது தங்கையான ஆரவி தன் மேல் வைத்திருக்கும் வெறுப்பிற்கு நேர்மாறாக இருந்தது திவ்யனின் செய்கை.
இதற்கு என்ன அர்த்தம் என்று பிரஹாசினிக்குப் புரியவில்லை.
ஆனால் அந்த திவ்யனின் கண்கள் பொய்க் கூறவில்லை. ஏனென்றால் அவற்றில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் யாவும் தன்னுயிரை ஊடுருவிச் செல்வதைப் போன்று உணர்ந்தாள்.
தன்னுடைய பெரியப்பா மற்றும் தமையனைத் தவிர்த்து ஒரு அந்நிய ஆடவனின் இப்படியொரு பரிவு, பாசம் மற்றும் அன்பைக் கண்டு, அதுவும் அவை எல்லாம் தன் மீதுப் பொழியப்படுவதை எண்ணி மலைத்துப் போய் விட்டாள் பிரஹாசினி.
ஆனால் அது உண்மையா? பொய்யா? என்றும் கூட யோசிக்கத் தவறவில்லை அவள்.
ஏனென்றால், அவளுடைய சூழ்நிலை தான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே! அதனால் அந்த திவ்யனிடம் இருந்து ஒதுங்கி இருக்க நினைத்தாள் பிரஹாசினி.
ஏற்கனவே அப்படித் தான் எப்போதும் இருப்பாள். இப்பொழுது இன்னும் தனக்குள் சுருண்டு கொள்ள முடிவெடுத்து விட்டாள்.
தன்னால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த சங்கடத்தையும் கொடுத்து விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தாள் பிரஹாசினி.
தனது கல்லூரி நூலகத்தில் புத்தகத்தை எடுத்துக் கொண்டதை தமையனுக்குச் செல்பேசியின் மூலம் தெரிவித்தாள் ஆரவி.
அவன் அந்த சமயத்தில் வீட்டில் தான் இருந்தான்.
“சரிம்மா. நான் அங்கே வர்றேன்” என்றவன், வாகனத்தைக் கிளப்பிக் கொண்டுத் தங்கையின் கல்லூரிக்குச் சென்றான் திவ்யன்.
அங்கே நுழைவு வாயிலில் காத்திருந்த ஆரவியோ அவனைப் பார்த்ததும் சடைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அதில் அரும்பிய புன்னகையுடன்,”ஆரும்மா. பைக்கில் ஏறு” என்று அவளிடம் கூறவும்,
“ம்ஹூம்! நான் வண்டியில் ஏறனும்னா என்னை ஏதாவது பேக்கரிக்குக் கூட்டிட்டுப் போங்க” என்றாள் அவனது தங்கை.
“அதுக்கு என்ன? கண்டிப்பாக கூட்டிட்டுப் போறேன்” என்றதும், அவள் உடனே வாகனத்தில் ஏறி அமர்ந்து விட, அவளது சிறு பிள்ளைத் தனத்தில் புன்னகைத்துக் கொண்டே வண்டியை இயக்கிப் பேக்கரிக்குப் போய் நிறுத்தினான் திவ்யன்.
அங்கே சென்று வருவதாக தங்களது அன்னைக்கு அழைத்து தெரிவித்து விட்டு இருவரும் உள்ளே நுழைந்து மேஜையில் அமர்ந்தனர்.
“என்ன சாப்பிட்ற?” என்ற தமையனிடம்,
“எக் பப்ஸ்” எனக் கூறினாள் ஆரவி.
அதையும், தனக்கு ஒரு பழச்சாறும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினான் திவ்யன்.
“என்னோட அந்தப் பிரஹாசினி சீனியர் விஷயத்தில் மட்டும் நீங்க ஏன் என்னைத் தப்பு சொல்லிட்டே இருக்கீங்க அண்ணா?”
“அவங்க கிட்ட நீ நடந்துக்கிறது தப்பு ஆரு. அதான்” என்றவனிடம்,
“அவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி தானே நடந்துக்கிறாங்க அண்ணா?” எனக் கூறினாள் ஆரவி.
“அப்படின்னு நீ நினைக்கிற! ஆனால் இந்த விஷயத்தில் அவங்க எல்லார் கிட்டேயும் ஒரே மாதிரி தான்னு எனக்குத் தோனுது” என்றான் திவ்யன்.
“ஏன் இப்படிச் சொல்றீங்க?”
“அவங்களைப் பார்த்தாலே,’தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு’ இருக்கிற பொண்ணு மாதிரி தான் தெரியுறாங்க. நீ என்னை அவங்க கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கலைன்னு அவங்களும் என் பக்கம் கூடத் திரும்புறது இல்லை. அப்போ நான் சொன்னது தானே சரி?”
அவனிடம் எதையோ சொல்ல வாயெடுத்த ஆரவியோ, எக் பப்ஸ் மற்றும் பழச்சாறு வரவும் அமைதியாகி விட அவற்றை வைத்து விட்டுப் போன பிறகு தான் பேசத் தொடங்கினாள்.
“சரிண்ணே. நீங்க சொல்றது தான் கரெக்ட்ன்னு வச்சுப்போம். நான் இனிமேல் அவங்களைப் பத்தி தப்பாகப் பேச மாட்டேன்! அவங்க கிட்டேயும் அப்படி நடந்துக்க மாட்டேன்! ஓகேவா?”
“ஓகே சூப்பர்! நான் இதைத் தான் உங்கிட்ட எதிர்பார்த்தேன்” என்றவன், பழச்சாறைப் பருகி முடிக்க, முட்டைப் பப்ஸை உண்டு முடித்தாள் ஆரவி.
அதன் பிறகு இருவரும் கிளம்பித் தங்களது வீட்டிற்குச் சென்று விட்டனர்.
இதே வேளையில், தனது பேருந்து பயணம் முடிவடைய இன்னும் பல சிறிது நேரம் இருப்பதால் தன்னுடைய செல்பேசியை எடுத்து அதில் கண்களை மேய விட்டாள் பிரஹாசினி.
தோழிகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகளுக்கு எல்லாம் பதில் அனுப்பினாள்.
அவர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த சமயத்திலேயே இன்னும் சில நிமிடங்களில் பேருந்து தனது ஊரை அடைந்து விடும் என்பதை அறிந்தவளோ, உமாராணிக்குக் கால் செய்து,”இன்னும் கொஞ்ச நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்துடுவேன் பெரியம்மா” என்று அவரிடம் சொல்ல,
“நீருவை உடனே அனுப்பி வைக்கிறேன் பிரஹா” என்றவரோ, அவளை அழைத்து வருமாறு தன்னுடைய மகனிடம் சொல்லி அனுப்பினார் அவளது பெரியம்மா.
அதேபோல் அவனும் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருக்க, அப்போது வந்து நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய பிரஹாசினியோ,”அண்ணா!” என்றாள் குதூகலமாக.
“பிரஹாம்மா” என அவளைப் பார்த்துச் சிரித்தவன், அவளது நலனைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டுத் தங்கையை வண்டியில் ஏற்றித் தன் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான் நீரஜ்.
அவள் உள்ளே நுழைந்ததும் முதலில் அவளை வரவேற்றது விருச்சிகன் தான்.
“பிரஹா” என்றவரது குரலில் உற்சாகம் பீறிட்டது.
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையின் போது வந்தவள் இப்போது தான் மறுபடியும் வீட்டினுள் காலடி எடுத்து வைத்துள்ளாள்.
எனவே, அவரும், அவரது மனைவியும் பிரஹாசினியைக் கண்டதும் பூரித்துப் போயினர்.
அவர்களுடன் சேர்ந்து நீரஜ்ஜூம் கூட அந்தக் கலகலப்பில் இணைந்து கொண்டான்.
அதன் பின்னர், வினோதா மற்றும் மற்ற இரு தோழிகளுக்கும் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்ததை தெரிவித்து விட்டாள் பிரஹாசினி.
அதேபோல், அனிகா மற்றும் சௌமியாவும் அன்றைய மதியமே தங்களது இல்லத்திற்குச் சென்று சேர்ந்து விட்டதையும் மற்ற இருவரிடமும் பகிர்ந்து கொண்டனர்.
அடுத்த நாளிலேயே, தனக்குப் பிடித்த உணவுகளை அடுக்கி வைத்த உமாராணியிடம்,”போதும் பெரியம்மா! என்னால் முடியலை. நான் இங்கே எக்ஸாம்க்குப் படிக்க வந்தால் நீங்க இப்படியெல்லாம் சாப்பிட வச்சா என்னால் படிக்க முடியாது!” என்று அவருக்குப் புரிய வைக்க முயன்றாள் பிரஹாசினி.
“நீயே எப்போதாவது தான் வர்ற! அப்போ நான் உன்னை நல்லா சாப்பிட வச்சு அனுப்பினால் தானே எனக்கு நிம்மதியாக இருக்கும். அதே மாதிரி நீ ஹாஸ்டலில் தங்கி ஒரு சுத்து ஒல்லி ஆகிட்ட! அதனால் ஒழுங்காகச் சாப்பிடு” என அவளை உண்ண வைத்து விட்டார்.
“இன்னும் அஞ்சு நாளைக்கு அவ இங்கே தான் இருக்கப் போறா உமா. இன்னைக்கே எல்லாத்தையும் சாப்பிடக் கொடுக்காதே! எக்ஸாம் எழுதனும்ல?” எனத் தன் மனைவிக்கு அறிவுறுத்தினார் விருச்சிகன்.
“சரிங்க” என்று அவரது அறிவுரையை ஏற்றுக் கொண்டார் உமாராணி.
இங்கோ, தன்னவளிடம் தனது நேசத்தை மறைமுகமாக உணர்த்தி விட்ட நிம்மதியில் உலவிக் கொண்டு இருந்தான் திவ்யன்.
அவனுக்குப் பிரஹாசினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற குறுகுறுப்பாகவும் கூட இருந்தது.
அவளிடமிருந்து நிச்சயமாகச் சம்மதம் வராது. ஆனால் அவளது ஒப்புதல் கிடைத்த பின்னர் தான், அவளுடனான தனது திருமணத்தை இரு வீட்டாருடனும் கலந்து பேச முடியும் என்று எண்ணியவன் தற்போதைக்கு அமைதியாக இருந்தான் திவ்யன்.
அதேபோல், தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து ஆரவிக்குத் திருமணம் முடித்து வைத்தப் பின்னர் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவனோ, பிரஹாசினியின் குடும்பச் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க மறந்து போனான்.
மற்ற விடுதி மாணவிகளைப் போலவே அவளும் தனது தாய், தந்தையை விட்டுப் பிரிந்து வந்து படித்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் அவளைப் பற்றிக் கணித்து வைத்திருக்கிறான் திவ்யன்.
ஆனால் அவளுடைய உண்மையான சூழ்நிலை தெரிந்தாலும் இதே முடிவில் இருப்பானா? என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
இன்னுமொரு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரஹாசினியின் மீதான தன்னுடைய தங்கையின் வெறுப்பை எப்படிக் களையப் போகிறோம் என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டான் திவ்யன்.
அவனுக்கு இப்போதைக்குப் பிரஹாசினி தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் முதன்மையானதாக இருந்தது.
தன்னுடைய புத்தகங்களை வெளியே எடுத்துச் சரிபார்த்துக் கொண்டு இருந்தாள் பிரஹாசினி.
அப்போது அவளுக்குக் கால் செய்த வினோதாவோ,”ஏதாவது படிச்சியாடி?” என்றாள்.
“இல்லைடி. இப்போ தான், பையில் இருந்து புக்ஸ்ஸையே வெளியே எடுத்து வச்சேன்”
“அப்படியா? நானும் இன்னும் படிக்க ஸ்டார்ட் பண்ணலை. சௌமி, அனிக்கும் கான்ஃப்ரன்ஸ் கால் போட்டுப் பேசுவோம். இரு” என்று மற்ற இருவருக்கும் அழைத்து,“கான்ஃப்ரன்ஸ் கால் டி. பிரஹாவும் லைனில் இருக்கிறா” என அவர்களிடம் தெரிவித்தாள் வினோதா.
“ஓஹோ. என்ன விஷயம்?” என்றார்கள் இருவரும்.
“நீங்க ரெண்டு பேரும் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?” என்க,
“இல்லை டி. ரெஸ்ட் எடுக்கவே டைம் பத்தலை. அப்பறம் எப்படி படிக்க ஆரம்பிக்கிறது? அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்னு இருக்கோம்” என்றாள் சௌமியா.
அனிகா,“ஆமாம். நான் வந்ததும் நல்லா தூங்கிட்டேன்”
ப“நாங்களும் அதைத் தான் பண்ணிட்டு இருக்கோம். நாளைக்குக் குரூப்பில் டிஸ்கஸ் செய்து படிப்போம். சரியா?” என்று வினவிய பிரஹாசினியிடம்,
“ஓகே டி”என்று பதிலளித்து விட்டு மற்றதைப் பேசத் தொடங்கி விட்டனர்.
அடுத்த நாள் தனது அறையில் படித்துக் கொண்டிருந்தவளை,”பிரஹா! இங்கே கொஞ்சம் வா” என்று தன் பெரியம்மாவின் அழைப்பைக் கேட்டு அவரிடம் சென்றவளோ,
அங்கே நின்று கொண்டுத் தன்னுடைய வீட்டாருடன் ஆரவாரமாகப் பேசிக் கொண்டு இருந்த ரமணி அத்தையைக் கண்டவுடன் திடுக்கிட்டாள்.
ஆனால் அதைக் கண்டு கொள்ளாத ரமணியோ,”ஹேய் பிரஹா! எப்படி இருக்கே? நீ இங்கே வந்து இரண்டு நாளாச்சு. அதைக் கூட இவங்க யாரும் எனக்குச் சொல்லலை! எப்படி இருக்கே?” என்று அவளிடம் கேட்டார்.
“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சம்பிரதாயமாக விசாரித்தாள் பிரஹாசினி.
“நான், உங்க மாமா, அப்பறம் என் பசங்க எல்லாரும் நல்லா இருக்கோம். என்றதும், மேலும் திடுக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தாள்.
இதைக் கவனித்த நீரஜ்ஜோ,”எவ்வளவே நேரம் தான் நின்னுட்டு இருப்பீங்க அத்தை? உட்கார்ந்து பேசுங்க” என்று அவரை அமரச் செய்தான்.
அவரது வருகை எதையோ உணர்த்துவதைப் போல இருந்தது மற்றவர்களுக்கு.
அது நிச்சயமாக நல்ல விஷயம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டு இருந்தனர் விருச்சிகன், உமாராணி, நீரஜ் மற்றும் பிரஹாசினி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக