காலையில் கண் விழித்த திவ்யனுக்கோ, தேர்விற்குத் தயாராக ஏழு நாட்கள் விடுமுறை கொடுத்து இருப்பதால் அதுவரையில் ஆரவி கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை என்ற விஷயம் அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.
அப்படியென்றால், பிரஹாசினி ஊருக்குக் கிளம்பும் போது ஒரு தடவையாவது அவளைப் பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற ஏமாற்றத்துடன் படுக்கையை விட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்தான் திவ்யன்.
அந்தச் சமயத்தில், வெளியே பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.
“உங்க அண்ணன் எழுந்துட்டா அவன் கிட்டயே கேளு டி. சும்மா என்னைப் போட்டு அனத்திட்டு இருக்கிறா!” என்று தாய் கூறியதைக் கேட்டதும், உடனே அறையை விட்டு வெளியே வந்தான் திவ்யன்.
அங்கே ஆரவி சுருங்கிய முகத்துடன் பாவமாக நின்றிருந்தாள் ஆரவி.
அவளிடம் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார் சோமசுந்தரி.
“என்னாச்சு ம்மா? எதுக்குக் காலங்கார்த்தாலேயே இவளைத் திட்டிட்டு இருக்கீங்க?” என்று அவரிடம் வினவினான் மகன்.
அவன் தனக்கு ஏற்றுப் பேசியதைக் கண்டுப் புன்னகையுடன்,”அது ஒன்னும் இல்லண்ணா, எனக்கு எக்ஸாம்க்குப் படிக்கிறதுக்குப் புக் தேவைப்படுது. அது எங்க காலேஜ் லைப்ரரியில் தான் இருக்கும். அதுதான் உங்க கூடப் போய் அதை எடுத்துட்டு வந்துடலாம்ன்னு நினைச்சேன். அதை உங்க கிட்ட நைட்டே சொல்லலைன்னு தான் அம்மா என்னைத் திட்டுனாங்க”என்றுரைத்தாள் ஆரவி.
அதைக் கேட்டதும் அவனது மனநிலை முற்றிலும் மாறிப் புத்துணர்ச்சி வந்ததைப் போன்று உணர்ந்தான் திவ்யன்.
அவன் எதுவும் சொல்லாமல் இருப்பதைக் கண்டு,”டேய் என்னடா ஒன்னும் சொல்ல மாட்ற?” என்று கேட்டார் அவனது அன்னை.
“ஆங்! இவளைக் காலேஜூக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதில் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லம்மா. ஆரு
போய் ரெடி ஆகிட்டு வா” என்று கூறித் தங்கையை அனுப்பி வைத்து விட்டுத் தாயிடம்,
“அம்மா, எனக்குக் காஃபி போட்டுத் தர்றீங்களா?” என்றான் திவ்யன்.
“சரிடா” என்றவரோ சமையலறைக்குப் போய் அவனுக்காக காஃபி போட்டுக் கொண்டு வந்தார் சோமசுந்தரி.
அதைக் குடித்து முடித்தவனோ,”நானும் போய்த் தயார் ஆகுறேன்ம்மா” எனத் தன் அறைக்குச் சென்று விட, மகன் மற்றும் மகளுக்கான காலை உணவைத் தயார் செய்யச் சென்றார் அவர்களது அன்னை.
“என்னம்மா ரெண்டு பேரும் எங்கே கிளம்பிட்டாங்க?” என்று அவரிடம் வினவினார் மகுடபதி.
“ஆரவியோட காலேஜூக்குத் தான்ங்க” எனப் பதிலளித்தார் சோமசுந்தரி.
“எதுக்கு?” என்றவரிடம் விவரத்தைக் கூறவும்,
“ஓஹ் சரிம்மா. அப்போ நாமளும் அவங்க கூடவே உட்கார்ந்து காலைச் சாப்பாட்டைச் சாப்பிடுவோம்” என்ற கணவரிடம்,
“சரிங்க” என்றவரோ, திவ்யனும், ஆரவியும் தயாராகி வந்ததும்,
அவர்களுடன் சேர்ந்து உணவுண்டு முடித்தார்கள் மகுடபதி மற்றும் சோமசுந்தரி.
இதே சமயம், தங்களுடைய விடுதி அறையிலிருந்து உடைமைகள் அடங்கிய டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர் பிரஹாசினி, அனிகா மற்றும் சௌமியா.
“என்னக் கிளம்பியாச்சா?” என்று அவர்களுடைய பக்கத்து அறைப் பெண் கேட்கவும்,”ஆமாம்ப்பா”எனப் பதில் கூறினர்.
“நாங்க ஈவ்னிங் தான் கிளம்புறோம்” என்றவளிடம்,
“ஓகே. இருட்டுறதுக்குள்ளே ஊருக்குப் போயிடுங்க. பை” என்று கூறி விட்டு, விடுதி பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று அவரது அறைக்குள் நுழைந்தார்கள்.
“அட்டென்டன்ஸில் சைன் போட வந்தோம் மேம்” என்றவுடன்,
“இந்தாங்க” என்று அந்தக் பதிவேட்டை அவர்களிடம் கொடுக்க,
அதில் மூவரும் கையெழுத்து இட்டுத் திருப்பித் தந்தனர்.
“மூனு பேரும் பார்த்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்க. நான் சொன்ன ரூல்ஸ் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல?” என்றவரிடம்,
“ஞாபகம் இருக்கு மேம்” என்றதும், அவர்களை அனுப்பி வைத்தார் விடுதி பொறுப்பாளர்.
இங்கே தங்களது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பிக் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள் திவ்யன் மற்றும் ஆரவி.
“அண்ணா ஒரு நிமிஷம். பைக்கை ஸ்டாப் பண்ணு” என்ற தங்கையிடம்,
“எதுக்கும்மா?” என்று வினவினான் அவளது தமையன்.
“ஒரு கால் பேசிக்கிறேன் அண்ணா” என்று கூறி விட்டுத் தன் செல்பேசியில் அனிகாவின் எண்ணிற்கு அழைத்தாள் ஆரவி.
“இங்கே பாருங்க. நம்ம ஜூனியர் பொண்ணு தான் கால் பண்றா” என்றவள், அழைப்பை ஏற்று,”ஹலோ” என்றாள் அனிகா.
“ஹாய் அக்கா. நீங்க காலேஜில் இருந்து கிளம்பிட்டீங்களா?”
“இல்லை ஆரு. இப்போ தான், ஹாஸ்டலில் சைன் போட்டுட்டு வர்றோம். இனிமேல் தான் பஸ் ஸ்டாப்புக்குப் போகனும்” என்றவளிடம்,
“அப்போ ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றீங்களா? நான் வந்து உங்களை மீட் பண்ணனும்” எனக் கேட்டாள் ஆரவி.
“சரிம்மா” என்று கூறி அழைப்பை வைத்து விட்டு அந்த விஷயத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள, அவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
சில நிமிடங்களிலேயே தன்னுடைய தமையனுடன் அங்கே வந்து சேர்ந்த ஆரவியோ,”ஹாய் சீனியர்ஸ்!” என்று கூறிக் குறுநகை புரிந்த ஆரவியிடம்,
“வாங்க ஜூனியர்! உனக்கு எங்க மேல் இவ்வளவு பாசமா? எங்களைப் பார்க்கிறதுக்காகவே வீட்டிலிருந்து கிளம்பி வந்திருக்கிற?” எனக் கேட்டாள் சௌமியா.
அதைக் கேட்டவுடனே தங்கையைக் குறும்புடன் நோக்கிய திவ்யனோ,”ஓஹோ அப்படியா விஷயம்?” என்கவும்,
அதில் அசடு வழிந்து போய் நின்றாள் ஆரவி.
அனிகா,“என்னாச்சு அண்ணா?”
“அது ஒன்னுமில்லைம்மா. என்னை விட இவளுக்கு உங்க மேல் பாசம் அதிகமாக இருக்கேன்னு தான் அப்படி சொன்னேன்” என்று அவர்களிடம் இருந்து தங்கையைக் காப்பாற்றினான் திவ்யன்.
அதில் பெருமூச்சு விட்டுக் கொண்டு,”வீட்டுக்குப் போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று அவர்களிடம் கூறினாள் ஆரவி.
“கண்டிப்பாக ம்மா” என்றாள் அனிகா.
அவர்களது சம்பாஷணையை வழக்கம் போல மௌனப் புன்னகையுடன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள் பிரஹாசினி.
அதுவும் அந்த அண்ணன், தங்கையின் குறும்புகளைப் பார்க்கும் போது அவ்வளவு ரசனையாக இருந்தது அவளுக்கு.
சௌமியா மற்றும் அனிகாவிடம் மட்டுமே ஆரவிமின் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் தைரியமாகத் தன்னவளின் புறம் கண்களை அலைபாய விட்டான் திவ்யன்.
என்ன தான், தங்கைக்கும், பிரஹாசினியின் தோழிகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாமல் இருந்தாலும் ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது என்பதால் அவர்களைப் பார்த்ததுமே தன்னுடைய பார்வையைப் பிரஹாசினியிடம் கொண்டு செல்லாமல் மற்ற இருவரிடம் பேசினான்.
இது கள்ளத்தனம் என்று தெரிந்தும், தான் ஒன்றும் பிரஹாசினியிடம் பொழுதுபோக்குக்காகப் பழகப் போவதில்லை. அவளைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறோம் என்பதாலேயே குற்ற உணர்வின்றி அவளைப் பார்த்தான் திவ்யன்.
அதைப் பிரஹாசினியும் உணர்ந்து விட்டாள் போலும், தன்னுடைய விழிகளை அவன் பக்கம் சுழல விட்டாள்.
அன்றைய கல் தடுக்கிக் கீழே விழும் நாளில் அவனது கண்களில் வெளிப்பட்ட அதே கனிவு மற்றும் தவிப்பு இப்பொழுதும் தனது விழிகளில் தேக்கி வைத்துத் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யனைக் கண்டுத் திகைத்துப் போனாள் பெண்ணவள்.
தான் அவனைப் பார்த்ததும் தன்னுடைய கண்கள் வேறு திசைக்கு மாற்றிக் கொள்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவனது விலோசனங்கள் தன்னுடைய கருவிழிகளையே சுற்றி வந்ததைக் கவனித்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
தனது தோழிகள் மற்றும் ஆரவியைப் பார்த்தாள் பிரஹாசினி.
அவர்களோ எதையோ மும்முரமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.
தங்களைத் தவிர்த்து அங்கேயிருந்த மற்ற இருவரையும் கவனிக்கவே இல்லை அம்மூவரும்.
தன்னைப் பார்த்து அவன் பெருமூச்செறிந்ததையும் கூடப் பிரஹாசினியால் உணர முடிந்தது.
அது எதற்காக என்று கூட அவளுக்குப் புரியவில்லை.
அதே நேரத்தில்,”ஓகே ஆரு. எங்களுக்கு நேரமாச்சு. நாங்க போயிட்டு வர்றோம்” என்றாள் அனிகா.
ஆரவி,“சரிங்க அக்கா”
“நாங்க கிளம்புறோம் அண்ணா” என்ற சௌமியாவிடம்,
“சரிம்மா” என்றவனோ,
“பார்த்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்க. நல்லா படிங்க” என்று அழுத்திக் கூறியவனது அந்த வார்த்தைகள் யாவும் தனக்கானது தான் எனபதை அந்த அழுத்தத்திலேயே புரிந்து கொண்டாள் பிரஹாசினி.
அதைப் போலவே, அவனும் அவளைத் தான் பார்த்தான்.
“சரி. வாங்க போகலாம்” என்று தோழிகளுடன் அங்கேயிருந்து அகன்று விட்டாள் பிரஹாசினி.
“அவங்களை எப்படி இழுத்துட்டுப் போறாங்கன்னுப் பாருங்க அண்ணா” என்று தமையனிடம் முறையிட்டாள் ஆரவி.
“அதெல்லாம் இருக்கட்டும். அந்த சௌமியா, அனிகா கூட அந்தப் பொண்ணும் தானே இருந்தாங்க? அப்போ நீ அவங்க கூடவும் பேசுறது தானே நியாயம்? அப்படி ஒரு ஆளே அங்கே இல்லாத மாதிரில்ல நடந்துக்கிட்ட! இது நல்லாவா இருக்கு ஆரு?” என்று அவளிடம் வினவினான் திவ்யன்.
“அண்ணா…” எனத் தினறியவளிடம்,
“அந்தப் பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்? உன்கிட்ட இப்படி யாராவது நடந்துக்கிட்டா உனக்கு எப்படி இருக்கும்?” என்றான்.
“நான் அப்படி நடந்துக்க விட மாட்டேன் அண்ணா” என்று தன்னுடைய முகம் சிறுத்துப் போய்க் கூறினாள் ஆரவி.
“எல்லாரும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியமில்லை தான்ம்மா. ஆனால் அடிப்படை மனிதாபிமானம் இருக்கிறது நல்லது தானே? அது கூட உனக்கு இல்லைன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு” என்றதும்,
“சாரிண்ணா” என்றாள் தங்கை.
“பரவாயில்லை விடு. நீ லைப்ரரிக்குப் போய்ப் புக் எடுத்ததும் எனக்குக் கால் பண்ணு. நான் உன்னை வந்து கூப்பிட்டுக்கிறேன்” என்று அவன் சொல்லி விட்டுச் சென்றவுடன் நூலகத்திற்குப் போனாள் ஆரவி.
அப்படி தன்னுடைய வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த திவ்யனுக்கோ, அடுத்த நிமிடமே மறுபடியும் பிரஹாசினியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
தனது இரண்டு தோழிகளிடம் உரையாடிய படி பேருந்து நிலையத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தாள் பிரஹாசினி.
அவளது மலர்ந்த முகம் கொடுத்த தித்திப்பில் அம்மூவரையும் கடந்து போய் விட்டான் திவ்யன்.
அவனது வாகனத்தை அடையாளம் கண்டு கொண்ட சௌமியா,”திவ்யன் அண்ணா போறாங்க பாருங்க” என்றாள்.
அதைக் கேட்டதும் அவனது பெயர்,’திவ்யன்’ என்பதையே அப்போது தான் தெரிந்து கொண்டாள் பிரஹாசினி.
அதுவரையிலும், அவனது பெயரை மற்றவர்கள் சொல்லி இருந்தாலும் கூட அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டதில்லை அவள்.
ஆனால் இப்போது ஏனோ அவனது பெயரைக் கேட்டதும் அதை இனிமேல் மறப்பது கடினம் என்று மட்டும் ஆணித்தரமாகப் புரிந்து கொண்டாள் பெண்ணவள்.
பேருந்து நிலையத்தை அடைந்ததும்,“நாம பஸ் ஏறியதும் மெசேஜ் அனுப்ப சொல்லி இருந்தாள் வினோ. அதனால் அவளுக்கு மறக்காமல் தகவல் அனுப்பிடுங்க” என்று கூறிக் கொண்டே இருக்கும் சமயத்தில் சௌமியா மற்றும் அனிகாவின் ஊருக்கான பேருந்து வந்து நின்றது.
“சரிடி. உனக்கும் பஸ் வந்துடும்ல?” என்றார்கள்.
“அதெல்லாம் வந்துரும். நீங்க போய்ப் பஸ்ஸில் ஏறுங்க” என அவர்களை அனுப்பி வைத்து விட்டாள் பிரஹாசினி.
சிறிது நேரத்திலேயே தனக்கான பேருந்தும் வந்து விட அதில் ஏறி அமர்ந்து, தனது தோழிகள் மூவருக்கும் அதைக் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவித்து விட்டுத் தன்னுடைய பெரியம்மாவிற்கும் அழைத்து விவரம் சொல்லி விட்டுத் தன் பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் பிரஹாசினி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக