தேர்விற்குத் தயாராகும் மும்முரத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கண்டு கொள்ளவில்லை பிரஹாசினி.
அதேபோல், மாணவ, மாணவியருக்கு படிப்பதற்கான விடுப்பு நாட்கள் ஐந்திலிருந்து ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டது.
எனவே, அதைத் தன் குடும்பத்திடம் தெரிவித்தாள்.
“அப்படியா? அதான் ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களே! நீ இங்கே வந்து படி ம்மா” என்றார் உமாராணி.
“சரிங்க பெரியம்மா. ஹாஸ்டல் வார்டன் கிட்டே கேட்டுட்டுச் சொல்றேன்” என்று கூறியவள்,
தனது மற்ற இரண்டு தோழிகளிடம் இதைப் பற்றிப் பேசினாள பிரஹாசினி.
அவர்களும் கூட,”எங்களுக்கும் வீட்டுக்குப் போகனும்னு ஆசையாகத் தான் இருக்கு டி. வார்டன் என்ன சொல்லுவாங்கன்னு தான் தெரியலை” என்றார்கள்.
“இப்போ தானே காலேஜில் அன்வுன்ஸ் செய்து இருக்காங்க. சாயந்தரம் ஹாஸ்டலுக்குப் போனால் தெரிஞ்சிடும்” என்று கூறி விட்டாள் பிரஹாசினி.
அதைப் போலவே, கல்லூரி முடிந்ததும் மாலையில் தங்களது விடுதிக்குச் சென்ற மூவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், அனைத்து மாணவிகளையும் அரங்கிற்கு (Auditorium) வருமாறு அழைத்தவுடன்,
சௌமியா,“லீவ் பத்தி தான் சொல்லப் போறாங்க. சீக்கிரம் வாங்க” என்றதும் தாங்கள் மூவரும் கிளம்பி அங்கே சென்றனர்.
அனைத்து மாணவிகளும் கூடியதும், விடுதியின் பொறுப்பாளர்,”எல்லாரும் வந்தாச்சாம்மா?” என்று அவர்களிடம் வினவினார்.
“வந்தாச்சு மேம்” என்ற கோரஸான பதிலில் அடுத்துப் பேச ஆரம்பித்தார்.
“உங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் ஒரு வாரம்ன்னுக் காலேஜில் சொல்லிட்டாங்க தானே?” எனவும்,
“ஆமாம் மேம்” என்றனர் மாணவிகள்.
“ஓகே. உங்களுக்கும் அந்த லீவில் ஊருக்குப் போகனும்னு ஆசை இருக்குமே?” என்றவரிடம்,
“எஸ் மேம்” என உற்சாகமாகப் பதிலளித்தார்கள்.
“சரி. அப்போ அந்த ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் வீட்டுக்குப் போக உங்களுக்கு அனுமதி தர்றோம். ஏழாவது நாள் எல்லாரும் கிளம்பி ஹாஸ்டலுக்கு வந்திருக்கனும். யாராவது வராமல் இருந்தால் அவங்க ஃபைன் கட்டணும். அதே மாதிரி பேரன்ட்ஸைக் கூட்டிட்டும் வரனும். புரிஞ்சிதா?” என்றார் கராறாக.
“புரிஞ்சுது மேம். நாங்க யாரும் லீவ் போட மாட்டோம்” என்று அவருக்கு உறுதி அளித்தனர்.
உடனே,”ஓகே. இப்போ போய் உங்க வீட்டுக்குப் பேசிட்டு யார், யார், எந்த தேதியில் ஊருக்குக் கிளம்புறீங்கன்னு நாளைக்குக் காலையில் எங்கிட்ட வந்து சொல்லிட்டுக் கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு அனைவரையும் அங்கேயிருந்து அனுப்பி வைத்தார் விடுதியின் பொறுப்பாளர்.
உடனே தத்தமது அறைக்கு வந்த மாணவிகள் அனைவரும் தங்களது பெற்றோர்களுக்கு அழைத்துப் பேசத் தொடங்கி விட்டனர்.
உமாராணிக்குச் செல்பேசியில் கூப்பிட்டு,”லீவுக்கு வீட்டுக்குப் போக ஹாஸ்டலில் பர்மிஷன் கொடுத்துட்டாங்க பெரியம்மா” என்று அவரிடம் அந்த விவரத்தைக் குதூகலமாக உரைத்தாள் பிரஹாசினி.
“சூப்பர். நீ எப்போ கிளம்பி வர்ற?”
“நான் நாளைக்குக் காலையிலேயே கிளம்பி வந்துட்றேன் பெரியம்மா”என்றவளிடம்,
“அப்போ நீருவைக் கூட அனுப்பி உன்னை அழைச்சிட்டு வரச் சொல்றேன்” என்றார் உமாராணி.
“சரிங்க பெரியம்மா. அண்ணாவை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி வைங்க” என்று கூறி விட்டாள் பிரஹாசினி.
“சரி. நாளைக்குக் கிளம்புறப்போ சொல்லு” என அவளிடம் உரைத்து விட்டு அழைப்பை வைத்து விடவும்,
தன்னுடைய தோழிகளிடம் வந்தவளோ,”நான் என் பெரியம்மா கிட்டே பேசிட்டேன். நாளைக்குக் காலையிலேயே ஊருக்குப் போகப் போறேன். உங்க ரெண்டு பேரோட வீட்டிலேயும் என்ன சொன்னாங்க?” என அவர்களிடம் வினவினாள்.
“எங்க வீட்டிலேயும் வரச் சொல்லிட்டாங்க பிரஹா. நாங்க சாயந்தரம் தான் கிளம்பலாம்னு இருக்கோம். இன்னைக்கு நைட் போய் வார்டன் கிட்டே சொல்லி சைன் போட்டுட்டு வந்துடுவோமா?” என்றாள் அனிகா.
“ஓகே டி” எனக் கூறி விட்டாள் பிரஹாசினி.
இதே சமயம் தனது இல்லத்தில் தாய் கொடுத்த தேநீரைச் சுவைத்துக் கொண்டே,”எனக்கு ஸ்டடி ஹாலிடேஸ் ஒரு வாரம் லீவ் விட்டு இருக்காங்களே!” என்று உற்சாகத் தொனியில் உரைத்தாள் ஆரவி.
அப்போது தான், வெளியிலிருந்து வீட்டினுள் வந்த திவ்யனுக்கும் அவள் சொன்னது காதில் விழுந்தது.
அதைக் கேட்டும், கேட்காத பாவனையுடன் அவர்களது அருகில் வந்து உட்கார்ந்தான்.
“ஹாய் அண்ணா!” என்றவள் அவனிடமும் விஷயத்தைக் கூற,
“அப்படியா? செம்ம. வீட்டிலிருந்து நல்லா படி” என்றவனுக்குப் பிரஹாசினிக்கும் விடுமுறை அளித்து இருப்பார்கள் தானே?
அவள் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருப்பதால் இந்த நாட்களைத் தன்னுடைய வீட்டிற்குச் சென்று கழிக்க விரும்புவாள் என்பதை எண்ணியவனோ, அதை எப்படித் தங்கையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது எனப் புரியாமல் முழித்தான் திவ்யன்.
அதற்குள்ளாக,”நாங்களாவது பரவாயில்லை. ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரோட ஊரும் ரொம்ப தொலைவில் இருக்கு. அவங்க போகவே ஒரு நாள் ஆகிடும். அப்போ லீவ் நாள் எல்லாம் கம்மி ஆகிடும்”என்று தன் பாட்டிற்குச் சொன்னவளின் வாயிலிருந்து அடுத்து வரும் வார்த்தைகளுக்காக காத்திருந்தான்.
“அச்சோ ஆமால்ல ஆரு. அந்தப் பிள்ளைங்க பாவம்! அவங்க பஸ்ஸில் போயே சோர்ந்து போயிருவாங்க” என்று வருத்தப்பட்டார் சோமசுந்தரி.
“ம்ஹ்ம். நிறைய பேர் நாளைக்குக் காலையிலேயே கிளம்புவாங்கன்னு நினைக்கிறேன் ம்மா” எனத் தெரிவித்தாள் ஆரவி.
“ஆமாம். அப்போ தான், அவங்க வீட்டுக்குச் சீக்கிரம் போயிட்டு வர முடியும்” என்றுரைக்க,
“என்னோட சீனியர்ஸ் கிட்டே நைட் தான் மெசேஜ் செஞ்சிக் கேட்கனும்மா” என்ற தங்கையின் கூற்றைக் கேட்ட பின்னர், பிரஹாசினியும் காலையிலேயே தன்னுடைய வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்து இருப்பாள் என்பதைச் சரியாக கணித்து விட்டிருந்தான் திவ்யன்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவளை ஒரு வாரம் கழித்து தான் பார்க்க முடியும் என்ற நிதர்சனம் சுட்டதால் தவித்துப் போனான்.
அவள் ஊருக்குச் செல்வதற்கு முன்னர் எப்படியாவது பிரஹாசினியைப் பார்த்து விட வேண்டும் என்று ஆவல் கொண்டான் திவ்யன்.
அடுத்த நாள் காலையில் தங்கையைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று விடும் போது அவளைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்து விட வேண்டும் என்று தன் மனதில் வேண்டிக் கொண்டான்.
அன்றைய இரவு நேரத்தில்,”அனி, சௌமி! சாப்பிட்டுட்டு வந்து வார்டனைப் போய்ப் பார்த்துட்டு வருவோமா?” என்றாள் பிரஹாசினி.
“ஓகே டி” என்றவர்கள், அவளுடன் இணைந்து இரவு உணவை உண்ணச் சென்றனர்.
“இன்னைக்கு நான்வெஜ் போல! அது என்னக் காலையிலும், மதியமும் வெஜ் தான் போட்டாங்க. இப்போ என்னடான்னா சிக்கன் குழம்போட வாசனை ஹெவியாக வருதே! இதைச் சாப்பிட்டுட்டுக் காலையில் நேரமே எழுந்து கிளம்பி எப்படி பஸ்ஸில் டிராவல் செய்றது?” எனச் சலித்துக் கொண்டாள் அனிகா.
“நாம இங்கே திரும்பி வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்ல? அதான் அசைவம் போட்டு நம்மளைச் சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறாங்க போல”என்றாள் சௌமியா.
பிரஹாசினி,“அப்படித் தான் இருக்கும்”
தங்களுக்கான தட்டை எடுத்துக் கொண்டு உணவிடும் இடத்திற்குப் போனார்கள் மூவரும்.
“சிக்கன் இன்னும் கொஞ்சம் வைங்க அக்கா” என்று பரிமாறிய பெண்ணிடம் கெஞ்சிக் கேட்டாள் அனிகா.
“எல்லாருக்கும் ஒரே அளவு தான் ம்மா. அதுக்கு அதிகமாக வைக்கக் கூடாதுன்னு ரூல் இருக்கு” என்றவுடன்,
முகத்தைச் சுருக்கிக் கொண்டுத் தட்டுடன் மேஜையில் அமர்ந்தாள்.
“ஹேய் விடு. அது தான் நாம வீட்டுக்குப் போகப் போறோமே! அங்கே நமக்குப் பிடிச்சதைச் சாப்பிடலாம். ஃபீல் பண்ணாதே” என அவளைச் சமாதானம் செய்தாள் சௌமியா.
தன்னுடைய தட்டிலிருந்த இறைச்சித் துண்டுகளைத் தோழியின் தட்டில் இடம் மாற்றிய பிரஹாசினியோ,”நீ இதைச் சாப்பிடு அனி” எனக் கூறிப் புன்னகைத்தாள்.
“ வேண்டாம் பிரஹா. நீயே சாப்பிடு” என அதைத் தன் தட்டிலிருந்து எடுக்கப் போக,
அவளைத் தடுத்து,”நான் இவ்வளவு சிக்கன் சாப்பிட மாட்டேன் அனி. வேஸ்ட் தான் ஆகும். நீயாவது சாப்பிடுவ தானே?” என்று அவளிடம் கேட்டுக் கொள்ள,
“தாங்க்ஸ் பிரஹா” என்று கூறி விட்டு உணவில் கவனம் செலுத்தினாள் அனிகா.
மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு விடுதியின் பொறுப்பாளரிடம் சென்று,
“மேம், நாங்க காலையிலேயே ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம். எங்க வீட்டிலும் பேசிட்டோம்” என்றார்கள்.
“ஓகே. இதில் அந்த விவரத்தை எழுதிக் கையெழுத்துப் போடுங்க” எனவும், உடனே அவர் கூறியதைச் செய்து முடித்தனர் மூவரும்.
“உங்களோட பேரண்ட் அல்லது கார்டியனோட காண்டாக்ட் நம்பரைக் கரெக்டா எழுதுங்க. அப்போ தான், ஏதாவதுன்னா உங்களைக் காண்டாக்ட் பண்ண முடியும்” என்று அறிவுறுத்த,
“கரெக்டா எழுதி இருக்கோம் மேம்” என்றவுடன்,
“சரி. காலையில் வந்து அட்டென்டன்ஸில் சைன் போட்டுட்டு ஊருக்கு வாங்க” என்று வலியுறுத்தி விட்டு அவர்களை அனுப்பி வைத்தார் விடுதி பொறுப்பாளர்.
“உங்களுக்கு எத்தனை மணிக்குப் பஸ்?” என்று மற்ற இருவரிடம் கேட்டாள் பிரஹாசினி.
சௌமியா,“பத்து மணிக்குத் தான் டி. எங்க ஊருக்கு எல்லாம் எப்போதாவது தான் பஸ் இருக்கும். உனக்கு?”
“எனக்கு எல்லா நேரமும் பஸ் கிடைச்சிடும்” என்றவளிடம்,
“அப்போ நாங்க கிளம்புற வரைக்கும் எங்க கூட இருக்கியா?” எனக் கேட்டாள் அனிகா.
“இருக்கிறேனே” என்றுரைத்து விட்டாள் பிரஹாசினி.
அப்போது,’அக்கா, நீங்க எல்லாரும் எத்தனை மணிக்கு ஊருக்குப் போறீங்க?’என்ற குறுந்தகவலைச் சௌமியாவின் செல்லுக்கு அனுப்பி இருந்தாள் ஆரவி.
அதற்குப் பதில் அனுப்பி விட்டு, விரைவாகவே உறங்கி விட்டனர் மூவரும்.
இங்கே அப்போது தான் தங்களது இரவு உணவை உண்டு முடித்து அளவளாவிக் கொண்டிருந்ததால், ஆரவியின் கைபேசி எழுப்பிய ஒலியில்,”இந்த நேரத்தில் யார்கிட்டே பேசிட்டு இருக்கிற?” என அவளிடம் வினவினார் சோமசுந்தரி.
“நான் சொல்லி இருக்கேன்ல ம்மா, என்னோட சீனியர்ஸ்? அவங்க கிட்ட தான் மெசேஜில் பேசுறேன்” என்றவளோ, அவர்கள் மூவரும் காலைப் பேருந்து பயணத்தைப் பற்றி அவரிடம் உரைத்தாள் ஆரவி.
அதைக் கேட்டதும் தான், இங்கே அவளது தமையனுக்கு உறக்கம் வந்தது எனலாம்.
அதுவரையில் நித்திரையைச் சுகிக்கும் மனநிலை இல்லாமல் அமர்ந்திருந்தான் திவ்யன்.
இப்போது ஒரு கொட்டாவியை வெளியேற்றி,”எனக்குத் தூக்கம் வருது. குட் நைட்” என்று கூறி விட்டு உறங்கப் போய் விட்டான்.
“நானும் போய்த் தூங்குறேன்” என்று ஆரவியும் அவளைப் பின்பற்றி பெற்றோரும் எழுந்து போய் நித்திரை கொண்டனர்.
மறுநாள் விடிந்ததும் சில நாழிகைகளில் உற்சாகமாகப் படுக்கையில் எழுந்து கொண்ட மூவரும்,“இராத்திரியே எல்லாத்தையும் எடுத்து வச்சது நல்லதாகப் போச்சு. இல்லைன்னா, இப்போ அவசர அவசரமாகத் துணிகளைப் பைக்குள்ளே திணிச்சிட்டு இருக்கனும். பெரிய தலைவலியில் இருந்து தப்பிச்சோம்” என்றபடியே தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினர் பிரஹாசினி, அனிகா மற்றும் சௌமியா.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக