அவள் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்கு முன்பாகவே,”பார்த்து ம்மா!” என்ற பரிதவிப்பான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்ணவள்.
அங்கே தன்னுடைய குரலில் இருந்த பரிதவிப்பை முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டுப் பதறிப் போய் நின்று இருந்தவனைப் பார்த்தவளோ, அவன் ஆரவியின் தமையன் என்பதை அறிந்து கொண்டவள், அவன் ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான், தன் கால் இடறியதைக் கண்டுக் குரல் கொடுத்து விட்டான் என்று எண்ணினாள் பிரஹாசினி.
ஆனால், அவளுக்குச் சட்டென்று என்னத் தோன்றியதோ தெரியவில்லை, அவனது வதனத்தைக் கூர்ந்து கவனித்தவளோ, அவனது குரலிலும், பாவனையிலும் மனிதாபிமானம் மட்டும் இல்லாமல் அதில் வேறொரு உணர்வும் இருப்பதை அவதானித்துத் துணுக்குற்றுப் போனாள்.
அவன் தன்னை ஏன் இப்படிப் பார்க்கிறான்? அவனுடைய தன் மீதான அந்தக் கனிவானப் பார்வையின் அர்த்தம் தான் என்ன? அவன் ஆரவியின் அண்ணன் எனும் போது அவள் நிச்சயமாகத் தன்னைப் பற்றிய எந்த நல்ல விஷயத்தையும் அவனிடம் சொல்லி இருக்கப் போவதில்லை.
அப்படியிருக்கத், தன்னிடம் கனிவு காட்டுவதற்கு அந்த ஆடவனை எது உந்தியது? என்றெல்லாம் யோசித்துக் குழம்பியவளோ, தன்னுடைய செல்பேசி ஒலியின் கவனம் கலைந்து அதில் தன்னுடைய தோழியின் எண்ணைக் கண்டதும் அவளது கவனம் முற்றிலுமாக அதில் பதிந்து விட்டது.
“ஹலோ சௌமி” என்றவளிடம்,
“ஹேய் பிரஹா! உன்னை இன்னும் காணோமேன்னு தான் கால் செஞ்சேன். நீ காலேஜூக்குள்ளே வந்துட்டியா, இல்லையா?” எனக் கேட்டாள் அவளது தோழி.
“உள்ளே வந்துட்டேன் டி. லைப்ரரிக்கு வந்துடுவேன்” என்றதும்,
“அப்போ சரி. சீக்கிரம் வா. நாம பிரேயர் அட்டெண்ட் பண்ணிட்டுக் கிளாஸூக்குப் போகனும்” என்று அறிவுறுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் சௌமியா.
அதற்குப் பிறகு, தனக்கு எதிரில் இருந்தவனைக் கண்டு கொள்ளாமல் கல்லூரியின் நூலகத்தை நோக்கி வேகவேகமாக நடந்து போய் விட்டாள் பிரஹாசினி.
ஆனால் அவள் தன்னுடைய பார்வை வட்டத்தை விட்டு மறையும் வரை அவளைப் பார்த்து விட்ட பிறகு தான் தனது வண்டியை இயக்கிக் கொண்டு அங்கேயிருந்து அகன்றான் திவ்யன்.
பிரஹாசினிக்காக காத்திருப்பது ஆரவிக்குத் தான், வேப்பங்காயை விழுங்குவது போலானதே?
எனவே,”எனக்குக் கிளாஸூக்கு லேட் ஆகுதுக்கா. நான் போயிட்டு வர்றேன். பை” என்று சௌமியா மற்றும் அனிகாவிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பி விட்டாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திலேயே அங்கே வந்து சேர்ந்த பிரஹாசினியிடம்,”ஏன் டி இவ்வளவு லேட்?” என்றனர் அவளது தோழிகள் இருவரும்.
“அண்ணா கூட ரொம்ப நேரம் பேசிட்டேன். அதான்” எனக் கூறிச் சமாளித்தவளை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றார்கள்.
அன்றைய நிகழ்வை மீண்டும் அசை போட்டுக் கொள்வதற்கு எந்தவித வலுவான காரணமும் இல்லாததாலும், அதுவும் அவன் ஆரவியின் தமையன் என்பதாலும் அவனது நினைவைத் தன்னுடைய மனதிலிருந்து அகற்றி விட்டாள் பிரஹாசினி.
ஆனால், அவனது ஞாபகங்கள் அனைத்தும் இன்னும் இன்னும் அழியாமல் அப்படியே தனது மனதில் அழியாமல் நிரந்தரமாகத் தங்கி விடப் போவதை அறியவில்லை அவள்.
தனது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அதற்குத் தகுந்த வேலையைத் தேடிக் கொண்டிருந்தான் திவ்யன்.
அந்த நாட்களில் தான், தன்னுடைய தங்கையைக் கல்லூரிக்குக் கூட்டிச் சென்று விடும் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
“ஏதாவது கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?” என்ற தந்தையிடம்,
“ஆமாம் ப்பா” என்றவன், அந்த அலுவலகத்தின் பெயரைக் கூறினான் திவ்யன்.
“அப்படியா? அது நல்ல கம்பெனி ஆச்சே! நல்லா பிரிபேர் பண்ணுப்பா. உனக்குக் கண்டிப்பாக அந்த வேலைக் கிடைக்கும்” என்று மகனை ஊக்குவித்தார் மகுடபதி.
இங்கே தங்களது இல்லத்தில் தங்கைக்குச் செல்பேசி அழைப்பு விடுத்துப் பேசியதைப் பற்றித் தாயிடம் கூறினான் நீரஜ்.
“என்ன தான் நாங்க மறந்தாலும் நீ இதே மாதிரி ஞாபகம் வச்சு அவளுக்குக் கால் பண்ணிப் பேசிரு” என்றவர், அவளது நலனைப் பற்றி மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் உமாராணி.
பிரஹாசினி தடுக்கிக் கீழே விழப் போகும் சமயத்தில் தன்னுடைய குரல் அவளது கவனத்தைக் கலைத்ததை அவள் தன் தங்கையிடம் கூறினாளா, இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்காக மாலையில் வீட்டிற்கு வந்த ஆரவியின் முகத்தை ஆராய்ந்தான் திவ்யன்.
ஆனால் அவனது தங்கையோ எப்போதும் போலவே நடந்து கொண்டதால் அவளிடம் பிரஹாசினி எதுவும் சொல்லவில்லை என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு இப்போது தான் நன்றாக மூச்சு விட முடிந்தது.
இப்படியே நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, தனது இரண்டாவது வருடத்தின் செமஸ்டர் தேர்வு நெருங்கி விட்டதால் அதற்குத் தயாராகத் தொடங்கி விட்டாள் பிரஹாசினி.
அதைத் தனது குடும்பத்திடமும் அறிவிக்க உடனே அவளுக்கு அழைத்த உமாராணியோ,
“எக்ஸாமுக்குப் படிக்கிறதுக்கு லீவ் எல்லாம் விட மாட்டாங்களா பிரஹா? அப்படி எதுவும் இருந்தால் நீ நம்ம வீட்டுக்குக் கிளம்பி வந்து இங்கே படியேன்” என்று அவளுக்கு வலியுறுத்தினார்.
“அஞ்சு நாள் தான் லீவ் கொடுப்போம்ன்ற மாதிரி சொன்னாங்க பெரியம்மா. அங்கே கிளம்பி வந்து மறுபடியும் ஹாஸ்டலுக்குத் திரும்பி வர்றதுக்கே இரண்டு நாள் போயிடும். மீதி மூனு நாளில் என்னால் எப்படி படிக்க முடியும்? அதனால் தான், ஊருக்கு வர்றதைப் பத்தி யோசிக்கிறேன் பெரியம்மா” என்று அவருக்குப் புரிய வைத்தாள் பிரஹாசினி.
“ஓஹ் அப்படியா? அப்போ நீ இங்கே வர்றது சிரமம் தான்” என்று கூறியவரின் குரல் மிகவும் இறங்கிப் போயிருந்தது.
“ஆமாம் பெரியம்மா. ஆனால் நான் எதுக்கும் எத்தனை லீவ் தர்றாங்கன்னுக் கேட்டுச் சொல்றேன்” என அவரிடம் ஆறுதலாகப் பேசினாள்.
“சரிடா. உங்க பெரியப்பா கிட்ட ஃபோனைக் கொடுக்கிறேன்” என்றதும்,
வெகு நாட்களுக்குப் பிறகு அவரிடம் பேசப் போகிறோம் என்று மகிழ்வுடன் காத்திருந்தாள்.
“ஹலோ பிரஹாம்மா” என்றவரின் கனிவில் பாகாய் உருகிப் போனவளோ,
“ஹலோ பெரியப்பா. எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் பிரஹாசினி.
“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்கே?” என்றார் விருச்சிகன்.
“நானும் நல்லா இருக்கேன் பெரியப்பா. நீங்க வீட்டுக்கே அதிகமாக வர்றது இல்லையாம். கடையிலேயே இருக்கீங்களாம். வேளா வேளைக்குச் சாப்பிட்றதே இல்லைன்னு நீரு அண்ணா சொன்னார். ஏன் இப்படி பண்றீங்க?” என்று அவரிடம் சலுகையாக கோபித்துக் கொள்ளவும்,
“அவன் அதையெல்லாம் உன் கிட்ட ஏன் சொன்னான்! நீயே பாவம் அங்கே எப்படி இருக்கேன்னுத் தெரியலை!” என்றவரை இடைமறித்து,
“எனக்கு இங்கே ஒரு குறையும் இல்லை பெரியப்பா. நான் என்னை நல்லா பாத்துக்கிறேன். அதே மாதிரி நீங்களும் உங்க உடம்பைப் பார்த்துக்கனும்” என அவருக்கு உத்தரவிட்டாள் பிரஹாசினி.
விருச்சிகன்,“சரிம்மா” என்றவுடன்,
“ஓகே பெரியப்பா. லீவ் விஷயத்தைப் பத்தி விசாரிச்சிட்டுக் கால் பண்றேன்” எனக் கூறி அழைப்பை வைத்தாள் பிரஹாசினி.
தங்கைக்குத் செமஸ்டர் தேர்வு நடக்கவிருப்பதைத் தன் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு அவளுக்கு அழைத்து, அதற்கான புத்தகங்கள் மற்றும் இதர குறிப்புகள் அவளிடம் இருக்கிறதா? அல்லது அதையெல்லாம் கடையில் வாங்கிக் கொடுக்கவா? என்று அவளிடம் விசாரித்தான் அவளது தமையன்.
அதற்கு,”மெட்டீரியல்ஸ் எல்லாமே எங்கிட்ட இருக்குண்ணா. அப்படி வேறெதுவும் தேவைப்பட்டால் நானே உங்ககிட்ட கேட்கிறேன்” என்றவுடன்,
“ஓகேடா” என்று கூறி விட்டு வைத்தான் நீரஜ்.
அதேபோல், தன்னுடைய முதலாமாண்டு செமஸ்டர் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்தாள் ஆரவி.
பள்ளியிலும், கல்லூரியிலும் வெவ்வேறு மாதிரியான முறையில் தேர்வுகள் நடைபெறும் என்பதால், எப்படி தேர்வு எழுத வேண்டும் என்பதையெல்லாம் தனது சீனியர்ஸ்களிடம் கேட்க முடிவெடுத்தவளோ, தன்னுடைய தோழிகளையும் அழைத்துக் கொண்டுக் கேன்டீனில் அமர்ந்து சிற்றுண்டிகளை ருசி பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்தாள்.
அங்கே பிரஹாசினியும் இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தாலும் தனக்கு வேறு வழியில்லை என்பதால், அவளைத் தவிர்த்து விட்டு மற்ற மூவருக்கும் வணக்கம் வைத்தாள் ஆரவி.
“ஹாய் ஆரு” என்றனர் அவளது சீனியர்கள்.
“ஹாய் பிரஹா அக்கா” என்று ஆரவியைத் தவிர அவளது மற்ற தோழிகள் தன்னிடம் பேசியதற்காக,
“ஹாய்!” என்று புன்னகையுடன் உரைத்தாள் பிரஹாசினி.
அதை அலட்சியம் செய்து விட்டு நின்றிருந்த ஆரவியிடம்,
“எல்லாரும் ஒன்னா சேர்ந்து வந்து இருக்கிற மாதிரி தெரியுதே? என்ன விஷயம்?” என விசாரணை நடத்தினாள் வினோதா.
“அதுவா அக்கா…” எனத் தொடங்கியவளோ, தங்களது வருகைக்கான காரணத்தைக் கூறி முடித்தாள்.
அதைக் கேட்டதும், அவர்கள் அனைவரும் புன்னகைத்து விட்டு,”சரி. உட்காருங்க. நாங்க எல்லாத்தையும் விவரமாகச் சொல்றோம். ஏதாவது சாப்பிட்றீங்களா?” என்று அவர்களிடம் வினவினாள் அனிகா.
“இல்லக்கா. எங்களுக்கு எதுவும் வேண்டாம்” என்றவர்கள், அங்கே இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டதும்,
அவர்களுக்குச் செமஸ்டர் தேர்வுகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லி முடித்தனர் மூவரும்.
அந்த ஜூனியர் மாணவிகள் எப்படியும் தன்னிடம் எதுவும் கேட்கப் போவதில்லை என்பதால் வாயைத் திறக்காமல் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் பிரஹாசினி.
அவளைக் கருத்தில் கொள்ளாமல் வினோதா, சௌமியா மற்றும் அனிகாவிடம் மட்டும் தங்களுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு,”தாங்க்ஸ் க்கா” என்று அவர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு ஆரவியும், அவளது தோழிகளும் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.
“அந்த ஆரவி நடந்துக்கிட்டதைப் பார்த்தீங்களா? அவ நம்மப் பிரஹா கிட்டே மட்டும் பேசவே இல்லை. ஃபர்ஸ்ட் இயர் முடிச்சு செகண்ட் இயருக்கு வரப் போகிறாள். இன்னமும் அவளுக்குப் பிரஹா மேல் இருக்கிற வெறுப்பு மறையலை! இவ கிட்ட பேசாமல் ரொம்பவே அலட்சியமாக இருந்தாள்!” என்று சக தோழிகளிடம் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டாள் சௌமியா.
“ஆமாம் டி. இன்னும் அப்படியே இருக்கிறா!” என்ற வினோதா மற்றும் மற்ற தோழிகளைப் பார்த்து,
“விடுங்க டி. எனக்கு அவளோட முகத் திருப்பல் பழகிப் போச்சு! நீங்களும் அதைப் பெருசா எடுத்துக்காதீங்க!” என்று அவர்களுக்கு அறிவுறுத்தினாள் பிரஹாசினி.
“என்னமோ போ!” என்று அவர்களும் அந்தப் பேச்சை விடுத்து வேறு பேசத் தொடங்கி விட்டார்கள்.
அதன் பின்னர், தங்களது பேராசிரியர்களிடமும் செமஸ்டர் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக் கொண்டுப் படிப்பில் கவனம் செலுத்தினர் ஆரவியும், அவளது தோழிகளும்.
அதே சமயம், தன்னுடைய தங்கைக்கு மட்டுமின்றி பிரஹாசினிக்கும் தான் தேர்வு நடைபெறப் போகிறது, அதற்காக அவளும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பாள் என்பதை எண்ணியவனோ, அந்த தேர்வு முடியும் வரை அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று முடிவு செய்தான் திவ்யன்.
அதே மாதிரி, அவளது கவனம் தன் பக்கம் சிதறாத வகையில் பார்த்துக் கொண்டான்.
தங்கையைக் கல்லூரியில் இறக்கி விட்ட அடுத்த நிமிடம் அங்கேயிருந்து தன் வண்டியில் ஏறிச் சென்று விடுவான் திவ்யன்.
எந்தச் சூழ்நிலையிலும் அவள் தன்னைப் பார்த்து விடக் கூடாது, தானும் அவளது வதனத்தைக் கண்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக