“ஏன் டி அங்கேயிருந்து உடனே வந்துட்ட? அவங்க கூடப் பேசிட்டு எல்லாரும் சேர்ந்து வந்திருக்கலாம்ல? நீ திரும்பிப் போனதும் அந்தப் பொண்ணோட முகமும், அவ அண்ணாவோட முகமும் சுருங்கிப் போச்சு” என்று பிரஹாசினியிடம் வினவினாள் சௌமியா.
அதைக் கேட்டதும்,”ஏன்? என்னாச்சு?” என்ற வினோதாவிடம்,
சற்று முன்னர் நிகழ்ந்த விஷயத்தை அவளிடம் பகிர்ந்தாள் அனிகா.
“அப்படியா?” என்றவள்,
“ஆமாம். நீ ஏன் அப்படி நடந்துக்கிட்ட பிரஹா?” எனத் தோழியிடம் விசாரித்தாள் வினோதா.
“அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலை டி. அதனால் தான், அங்கே நிற்காமல் ஒதுங்கி வந்துட்டேன்” என்றாள் பிரஹாசினி.
“அது எப்படி உனக்குத் தெரிஞ்சது? அந்தப் பொண்ணு சொன்னாளா?” எனக் கேட்டாள் அனிகா.
“அந்தப் பொண்ணு சொல்லனும்னு இல்லை. எனக்கு அவளோட நடவடிக்கையிலேயே தெரிஞ்சது. அதான்”
சௌமியா,“அதைத் தான் எப்படி தெரிஞ்சிக்கிட்டன்னுக் கேட்கிறோம்? அவ உங்கிட்ட எப்படி நடந்துக்கிட்டா”என்றதும்,
“அந்தப் பொண்ணு இங்கே படிக்க வந்த அந்த டைமிலேயே என் கூடப் பேச டிரை பண்ணினாள். ஆனால், நான் தான் யார் கூடவும் அவ்வளவு சீக்கிரம் பேசிட மாட்டேனே! அதனால், அந்தப் பொண்ணைப் பார்க்கும் போது எல்லாம் ஒரு ஸ்மைலோட கடந்து போயிடுவேன். அது அவளை இரிட்டேட் ஆக்கி இருக்கும் போல. அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போயிடுச்சு. அது தான் எங்கிட்ட இப்படி நடந்துக்கிறா! அது எனக்குத் தெரிஞ்சதுக்கு அப்பறமும் நான் அங்கே இருந்து அவளைச் சங்கடப்படுத்த விரும்பலை. அதனால் தான், உங்க கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்” என்று பதிலளித்தாள் பிரஹாசினி.
“அப்போ நீ நடந்துக்கிட்டதோட விளைவு தானா இது? அந்தப் பொண்ணும் பாவம் தான? ஏன் இப்படி பண்ற டி?” என்று அவளிடம் வினவினாள் வினோதா.
“என்னை என்னப் பண்ணச் சொல்ற? என்னால் என்னை உடனே எல்லாம் மாத்திக்க முடியாது! நானும் அதை முயற்சி செய்துட்டு முடியாமல் போகவும் அப்படியே விட்டுட்டேன்” என்றாள் வருத்தத்துடன்.
“அது ஏன் அப்படி? நீ மட்டும் என்ன அதிசயப் பிறவியா?” எனக் கடுப்புடன் கேட்டாள் அனிகா.
அதைக் கேட்டு முகம் கசங்கிப் போயிற்று பிரஹாசினிக்கு.
“ஹேய் அனி! என்னடி இப்படியெல்லாம் பேசுற?” என்று தோழியை அதட்டினாள் வினோதா.
“ஆமாம். வேற எப்படிப் பேச சொல்ற? இவ இப்படி நடந்துக்கிட்டா இவ கூட யாருமே ஃப்ரண்டா இருக்க மாட்டாங்க. ஏதேனும் நாமளா இருக்கப் போய் இவளை அட்ஜஸ்ட் செய்துட்டு இருக்கோம்” என்றவுடன்,
“ஓஹ்” எனக் கூறியவளோ, அடுத்து எதுவுமே பேசவில்லை.
ஆனால்,”ப்ளீஸ் டி. வார்த்தையை விடாதே! நீ அமைதியாக இரு. அவளைப் பேச விடு” என்ற வினோதாவோ,
“நீ ஏன் இப்படி இருக்கிறன்னுச் சொல்லு டி” என்று பிரஹாசினியிடம் கேட்டுக் கொண்டாள்.
“ம்ஹ்ம்” என்றவள், தன்னுடைய சொந்தக் கதையை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டு,
“என்னால் உங்களைப் போல இருக்க முடியலை டி” என்று தழுதழுத்தாள்.
அதற்கு,”ஏன்? உங்க அம்மா, அப்பா இறந்துட்டாங்க. அதனால், உன் பெரியம்மா, பெரியப்பா வீட்டில் வளர்ற. அவ்வளவு தானே? இதில் ஏன் உன்னால் எங்களை மாதிரி இருக்க முடியாது? நீ என்ன லூசா டி?” என்றாள் சௌமியா.
வினோதா,“நீயுமா? கொஞ்சம் சைலண்ட் ஆகத் தான் இருங்களேன்டி!” என்று அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு,
“நீங்க கேட்கிறதும் நியாயம் தான். ஆனால், என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சுப் பாருங்க. என்னோட பெரியம்மா, பெரியப்பா மட்டும் தான் என்னை நல்லா பாத்துக்கிறாங்க. ஆனால் மத்த சொந்தக்காரங்க எல்லாரும் என்கிட்ட நடந்துக்கிற முறையே வேறயா இருக்கும். என்னை வேணும்னே குத்திப் பேசுவாங்க. சின்னப் பிள்ளையாக இருக்கிற வரைக்கும் எல்லாம் சரியாகத் தான் இருந்துச்சு. ஆனால் போகப் போக எல்லாம் மாறிடுச்சு. அதனால் நானும் என் சுபாவத்தை மாத்திக்கிட்டேன்” என்றவளைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள் மற்ற மூவரும்.
“நீங்க இப்படி என்னைப் பார்க்கிறப் பார்வையைத் தவிர்க்கனும்னு தான் நான் என் விஷயம் எதையும் உங்ககிட்ட சொல்லலை. இப்போ சொல்லனும்ன்ற கட்டாயத்தினால் சொல்லிட்டேன்” என்று நீர் கசிந்த தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள் பிரஹாசினி.
அவளது முழுக் கதையையும் கேட்ட பின்னர் மூவரின் கண்களும் கூட லேசாக கலங்கியது.
“சாரி பிரஹா” என்று அவளிடம் சௌமியாவும், அனிகாவும் மன்னிப்புக் கோரினர்.
“பரவாயில்லை. என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுல்ல? அதனால் தான் என்னோட சுபாவமும், நடவடிக்கையும் உங்களுக்குப் பிடிக்காமல் போயிடுச்சு. இந்த விஷயத்தை உங்ககிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன். இதை வேற யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க! என்னை யாரும் பாவமாகப் பார்க்கிறது எனக்குச் சங்கடத்தைக் கொடுக்கும். அதான் சொல்றேன். இதை உங்களுக்குள்ளே மட்டும் வச்சுக்கோங்க” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டாள் பிரஹாசினி.
அனிகா, “சரிடி. ஆனால் ரொம்ப சாரி. உன்னோட குடும்பத்தைப் பத்தி நீ எங்ககிட்ட ஷேர் செய்ததே இல்லைல? அதான் இப்படி யோசிக்காமல் பேசிட்டோம்” என்று வருந்திக் கூறினாள்.
“இருக்கட்டும் விடு. இப்போ எல்லாம் கிளியர் தானே?” என்கவும்,
“எஸ்! எல்லாமே கிளியர் ஆகிடுச்சு” எனப் பதில் வரவும் தான், நிம்மதியாகவே உணர்ந்தாள் பிரஹாசினி.
அதற்குப் பிறகு, அவளை எதற்காகவும் சங்கடப்படுத்தி விடவில்லை அவர்கள் மூவரும்.
மற்றவர்கள் பிரஹாசினியை ஏதாவது சொன்னாலும் கூட அவளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் அவளது தோழிகள்.
அதேபோல், அவளது சுபாவத்தை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ள வற்புறுத்தவில்லை அவர்கள்.
ஆனால், பிரஹாசினியின் மீது ஆரவி வைத்திருக்கும் வெறுப்பு மட்டும் குறைவதாக இல்லை. அதை அவள் குறைத்துக் கொள்ளவும் நினைக்கவில்லை போலும்.
அதனால், அவளைப் பார்க்கும் போது எல்லாம் கண்களில் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு தான் இருந்தாள் ஆரவி.
இதற்கு முன்னர் தான், இதைப் பிரஹாசினி மட்டும் தெரிந்து கொண்டு, அவளிடமிருந்து ஒதுங்கி இருக்க, இப்பொழுதெல்லாம் ஆரவியைச் சந்திக்கும் நேரங்களில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுத் தோழியைத் தங்களுடன் அழைத்துச் சென்று விடுவார்கள் சௌமியா, அனிகா மற்றும் வினோதா.
அந்த வித்தியாசத்தையும் அறிந்து கொண்ட ஆரவிக்கு, அதன் காரணம் மட்டும் புலப்படவில்லை. அதில் மேலும் எரிச்சல் அடைந்தாள்.
ஆனாலும் தன்னுடைய படிப்பில் இருந்து வேறெங்கும் தனது கவனத்தைச் சிதற விடவில்லை.
ஆரவியைக் கல்லூரிக்கு அழைத்து வந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்த திவ்யனோ, அவன் மட்டுமே பிரஹாசினியைத் தினமும் தரிசித்துக் கொண்டிருந்ததால் அவன் மீது காலம் கொஞ்சம் பரிதாபப்பட்டது போலும்!
அதனால், பிரஹாசினியும் அவனைக் கடைக்கண் பார்வையைத் தவிர்த்து நேர் பார்வையைக் கொண்டுத் தீண்டும் நேரமும் வந்து விட்டிருந்தது.
விடியற்காலை வேளையில், தன்னுடைய செல்பேசியில் இருந்து வந்த ஒலியை அவதானித்தவுடன், அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் அதை உற்சாகமாக கைப்பற்றினாள் பிரஹாசினி.
அதைக் கண்ணுற்ற சௌமியாவோ,”யாரு கால் செஞ்சி இருக்கிறா?” என அவளிடம் விசாரித்தாள்.
“எங்க அண்ணா தான் டி” என்றாள் மகிழ்வுடன்.
“அதானே பார்த்தேன். நீ இவ்வளவு ஹேப்பி ஆகும் போதே நினைச்சேன். உங்க வீட்டில் இருந்து தான் கால் பண்ணி இருப்பாங்கன்னுத் தோணுச்சு. சரி அட்டெண்ட் பண்ணிப் பேசு. நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று கூறி விட்டுச் சென்றாள் சௌமியா.
உடனே செல்பேசியில் பச்சைப் பட்டனை அழுத்திக் காதில் வைத்தவள்,”ஹலோ அண்ணா!”என்று குதூகலத்துடன் பேசவும்,
“ஹாய் பிரஹா. எப்படி இருக்கே?” என்று கேட்டான் நீரஜ்.
“நான் நல்லா இருக்கேன் ண்ணா. நீங்க, பெரியம்மா, பெரியப்பாவும் நல்லா இருக்கீங்களா? அவங்க யார் கூடவும் பேசவே முடியலை. ரெண்டு பேரும் அவ்வளவு பிசியாகவா இருக்காங்க?” என்று சோகத்துடன் வினவினாள் பிரஹாசினி.
“அவங்களும் சூப்பராக இருக்காங்கடா. அம்மாவும், அப்பாவும் காலையில் கடைக்குப் போயிட்டு நைட் லேட் ஆகத் தான் வர்றாங்க. அதே மாதிரி, உனக்கு லீவாக இருந்தால் கூட, நேரமாகவே கால் செஞ்சிப் பொறுமையாகப் பேசலாம், உனக்குத் தான் சனிக்கிழமையும் காலேஜ் வைக்கிறாங்களே? அதனால், ஞாயிற்றுக்கிழமை பேசிக்கலாம்ன்னு நினைச்சாங்க. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலை. அதான், இயர்லி மார்னிங் உனக்குக் கூப்பிட்டேன். இதனால் உனக்கு எதுவும் தொந்தரவா?”என்று அவளிடம் அனுசரணையுடன் கேட்க,
“அதெல்லாம் இல்லை அண்ணா. நான் காலேஜூக்குக் கிளம்ப இன்னும் டைம் இருக்கு” என்றவளிடம்,
“சரிம்மா. நீ நல்லா தான் படிப்ப. ஆனால் எதுக்கும் உன்னோட படிப்பு எப்படிப் போகுதுன்னு எனக்குக் கொஞ்சம் அப்டேட் பண்ணுடா. அங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறது உனக்கு ஒத்து வரலைன்னா உடனே திரும்பி வந்துருடா” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் நீரஜ்.
எப்போது தன்னுடன் செல்பேசியில் உரையாடினாலும் இந்த அறிவுரையைச் சொல்ல மறவாத தமையனை எண்ணி நெகிழ்ந்து போனவளோ,”கண்டிப்பாக அண்ணா. ஆனால் எனக்கு இங்கே நல்லாவே செட் ஆகிடுச்சு. அதனால் படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் தான் ஹாஸ்டல் ரூமைக் காலி பண்ணிட்டு அங்கே வருவேன்” என அவனிடம் உறுதியாக தெரிவிக்கவும்,
“ஓகே டா” என்றவுடன், அவனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுக் கிளம்பச் சென்றாள் பிரஹாசினி.
“நீ இப்போ தான் குளிச்சிட்டே வர்றியா? நாங்க ரெண்டு பேரும் ரெடி ஆகியாச்சு” என்றாள் அனிகா.
“சரி. அப்போ நீங்க காலேஜூக்குப் போங்க. நான் கிளம்பிட்டு வர்றேன்” என்றவளிடம்,
சௌமியா,“ஏன் டி? நாங்க வெயிட் பண்றோம். நீ பொறுமையாகவே வா”
“பரவாயில்லை டி. நீங்க லைப்ரரிக்குப் போகனும்னு சொன்னீங்கள்ல? அங்கே போய் இருங்க. நான் வந்துட்றேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்து விட்டுத் துரிதமாகத் தயாராகத் தொடங்கினாள் பிரஹாசினி.
இங்கே சௌமியாவும், அனிகாவும் கல்லூரியின் நுழைவு வாயிலை அடைந்த தருவாயில், தன்னுடைய தமையனுடன் வண்டியில் வந்து சேர்ந்து இருந்தாள் ஆரவி.
அவளைப் பார்த்ததும், தோழிகள் இருவரும் புன்னகைத்து,”ஹாய் ஆரு, ஹாய் அண்ணா” என்றனர்.
“ஹாய் சௌமி க்கா, அனி அக்கா!” எனக் கூறினாள் ஆரவி.
“ஹலோ ம்மா” என்றவனோ, தன்னுடைய மனம் கவர்ந்த மங்கையைக் கண்களால் துழாவினான் திவ்யன்.
அதை,“ஆமாம், உங்களோட இன்னொரு ஃப்ரண்ட் எங்கே?”என்று வாய்மொழியாகவே கேட்டு விட்டாள் அவனது தங்கை.
“ஓஹ் பிரஹாவா? இன்னைக்கு அவ கிளம்புறதுக்கு லேட் ஆகிடுச்சு. அதான். நாங்க லைப்ரரிக்குப் போகனும்னு சொன்னதால் எங்களை முன்னாடியே அனுப்பி வச்சிட்டா” என்று அவளுக்குப் பதிலளித்தாள் சௌமியா.
அதைக் கேட்டதும், அவள் வருவதற்குத் தாமதமகி விட்டால் தன்னால் அவளைக் காண முடியாதே? என்ற ஏக்கத்தில் முகம் சுருங்கிப் போய் விட்டான் திவ்யன்.
“நானும் லைப்ரரிக்குப் போகனும்னு தான் சீக்கிரமே வந்தேன். வாங்கப் போகலாம் க்கா” என்றவளோ,
”நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க அண்ணா. நான் இவங்க கூட சேர்ந்து லைப்ரரிக்குப் போயிட்டு அப்படியே கிளாஸூக்குப் போய்க்கிறேன்” என்று தன்னுடைய தமையனிடம் தெரிவித்து விட,
“சரிம்மா” என்றதும், அவனிடம் சொல்லி விட்டு சௌமியா மற்றும் அனிகாவுடன் சென்றாள் ஆரவி.
ஆனால் அவனுக்கு அங்கேயிருந்து நகர மனமே வரவில்லை. சில நிமிடங்களுக்கு அப்படியே நின்று விட்டான் திவ்யன்.
இப்படியாகப் பத்து நிமிடங்கள் கழிந்ததும், கிளம்புவதற்கு மனமே வராமல் தன்னுடைய வாகனத்தை இயக்கி வாயிலை நோக்கித் திருப்ப, அப்போது சரியாக அவனது விழிகளில் பிரஹாசினியின் பிம்பம் காணக் கிடைத்தது.
ஒருவேளை இது தன்னுடைய மனபிரம்மையோ என்றெல்லாம் யோசித்துக் கண்களைத் தேய்த்து விட்டுப் பார்த்தாலும், அவளது தோற்றம் மங்கலாக இல்லாமல் தெளிந்து காணப்படவும், இவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஆனால், ஏற்கனவே கல்லூரிக்குள் நுழையும் நேரம் தாமதம் ஆகி விட்டதால் கண்மண் தெரியாமல் வேக நடையிட்டு வந்து கொண்டிருந்ததால் அவளது கால் ஒரு கல்லில் தடுக்கிக் கீழே விழப் பார்த்தாள் பிரஹாசினி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக