சில மணித்துளிகளுக்குப் பிறகுத் தனக்கு நேர்த்தியான ஆடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டவனோ, அதை அணிந்து கொண்டுத் தயாராகி டைனிங் டேபிளிற்கு வந்தான் திவ்யன்.
அங்கே உணவருந்திக் கொண்டிருந்த ஆரவியோ,”உங்களுக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றதுண்ணா? குளிச்சி, டிரெஸ் போட்டுட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? நான் இதுக்குப் பேசாமல் பஸ்ஸிலேயே காலேஜூக்குப் போயிருப்பேன்” என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள்.
“நான் ஒன்னும் ரொம்ப எல்லாம் லேட் பண்ணிடலை ஆரு. உன்னைச் சரியான நேரத்துக்குக் கொண்டு போய் விட்றது என்னோட பொறுப்பு. நீ ரிலாக்ஸ் ஆகச் சாப்பிடு” என்று அவளைச் சமாதானம் செய்தான்.
“ம்ம்” என்றவள், துரிதமாக சாப்பிட்டு முடித்தாள்.
அதே போலவே, தானும் உணவுண்டு விட்டு எழுந்தான் திவ்யன்.
“ம்மா! நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று தாயிடம் கூறினாள் ஆரவி.
“சரி. ரெண்டு பேரும் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தார் சோமசுந்தரி.
அதன்பிறகு, அவ்விருவரும் இருசக்கர வாகனத்தில் ஆரவியின் கல்லூரிக்குப் பயணம் செய்தனர்.
இதே சமயம்,”ஸ்நாக்ஸ்ஸை எல்லாம் பேக்கில் எடுத்து வச்சிட்டியா?” என்றாள் சௌமியா.
அனிகா,“எடுத்து வச்சாச்சு” என்றவள்,
“பிரஹா, நீ ரெடி ஆகிட்டியா?” என்று வினவ,
“நான் ரெடி ஆகிட்டேன் அனி. வாங்க போகலாம்” என அவர்களுடன் சேர்ந்து விடுதியில் இருந்து வெளியேறினாள் பிரஹாசினி.
அவர்கள் மூவரும் தங்களது கல்லூரியின் நுழைவாயிலை அடைந்த தருணத்தில், அப்போது சரியாகத் திவ்யனும், ஆரவியும் அங்கே வந்து சேர்ந்தனர்.
அப்போது, வாகனத்தில் இருந்து இறங்கிய ஆரவியோ, தங்களுக்கு எதிரில் வந்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்ததும் முகம் சுழித்து விட,
தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுத் தங்கையை ஏறிட்டவனுக்கு அவளது முக பாவனையைக் கண்டு,”என்னாச்சு ஆரு? ஏன் இப்படி முகத்தைச் சுழிக்கிற?” என அவளிடம் வினவினான் திவ்யன்.
“நான் பிரஹாசினின்ற கேரக்டரைப் பத்திச் சொல்லி இருக்கேன்ல்ல அண்ணா. அவங்க தான்” என்று தன்னுடைய தோழிகள் இருவருடன் நடந்து வந்து கொண்டிருந்தவளைக் கையால் சுட்டிக் காட்டிக் கூறினாள் ஆரவி.
அந்தத் திசையில் பார்த்தவனோ, தன் இரு தோழிமார்களுக்கும் நடுவே இருந்தப் பெண்ணவளைச் சடுதியில் அடையாளம் கண்டு கொண்டு விட்டான்.
ஆனாலும், ஆர்வமற்றக் குரலில்,”அங்கே மூனு பேர் இருக்காங்க ஆரு. அதில் எந்தப் பொண்ணு?” என்றான்.
“அதோ நடுவில் இருக்காங்கள்ல அண்ணா. அவங்க தான் பிரஹாசினி” என்று அவனிடம் தெரிவித்தாள் ஆரவி.
“ஓஹ்!” என்று அந்தப் பெண்ணை மீண்டுமொரு முறை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தவுடன், பிரஹாசினியைப் பார்த்த அந்தச் சில நொடிகளிலேயே,’இவளைப் பற்றியா தங்கை அவ்வாறு எதிர்மறையாக கூறினாள்?’ என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தான் திவ்யன்.
பிரஹாசினியை முதல் முறையாகப் பார்க்கும் யாரும்,’இவள் ஒரு திமிர் பிடித்தவள்’ என்று நிச்சயமாக கூற மாட்டார்கள்.
ஏனென்றால், அவளது முகத்தில் தெரிந்த அமைதியும், அது கொடுக்கும் நேர்மறையான உணர்வுகளையும் படம் பிடித்துக் கொண்டவனிடம்,
“நான் இங்கே நின்னுட்டு இருக்கிறதைப் பார்த்தும், கண்டுக்காமல் போறாங்க பாருங்க!” எனத் தன்னை மதியாமல் தோழிகளுடன் பேசிக் கொண்டே சென்றவளைக் கண்டுத் தமையனிடம் அதைச் சொல்லிச் சிடுசிடுத்தாள் ஆரவி.
“நீ ஏன் இப்படி எல்லாத்தையும் தப்பாகவே புரிஞ்சிக்கிற? நீ அவங்களைப் பார்த்தாலே கடுப்பு ஆகுறன்னு அந்தப் பொண்ணுக்குப் புரிஞ்சு இருக்கும் போல. அது தான், உன் வழியில் வரக் கூடாதுன்னும், உன்னைத் தொல்லைப் பண்ணக் கூடாதுன்னும் நினைச்சு உன்கிட்டே இருந்து விலகி இருக்கலாம்ன்னு நினைச்சு இருப்பாங்களா இருக்கும். அதான் இப்படி நடந்துக்கிறாங்க” என்று அவளுக்குப் புரிய வைக்க முயன்றான் திவ்யன்.
“போங்கண்ணா. நீங்க அவங்களுக்கே சப்போர்ட் பண்றீங்க” எனச் சலித்துத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அதில் உடனே சுதாரித்து,”அப்படியெல்லாம் இல்லைடா. என்னோட சப்போர்ட் எப்பவும் உனக்குத் தான்” என்றதும்,
திவ்யன்,“ம்ஹ்ம். குட் பாய்!” என அவனது தலை முடியைக் கலைத்து விட்டாள் தங்கையிடம்,”ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் கிளாஸூக்குப் போற, அதனால் சிரிச்ச முகத்தோட போ ஆரும்மா” என்றான் கனிவுடன்.
“சரிங்க அண்ணா” எனப் புன்னகைத்து விட்டு அவனிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினாள் ஆரவி.
அதே சமயம், தங்களது வகுப்பிற்குச் சென்ற பிரஹாசினி, சௌமியா மற்றும் அனிகாவோ, நெடுநாட்கள் கழித்துத் தங்கள் தோழமைகளைச் சந்திப்பதால் அவர்களுக்கு வணக்கம் வைத்து, அவர்களைக் கலாய்த்துச் சிரித்தனர்.
அதன்பிறகு,”என்ன ஆளாளுக்குப் பலகாரம் சாப்பிட்டோம்ன்னு சொல்றீங்களே தவிர ஒன்னையும் கண்ணுல காட்ட மாட்டேங்குறீங்களே!” என்று குறும்புடன் கூறினாள் வினோதா.
“நீ இப்படிக் கேட்பேன்னு தான், கிளாஸூக்கு வர்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் தயாராக எடுத்துப் பேக்கில் வச்சிக் கொண்டு வந்துட்டோம்” என்றாள் பிரஹாசினி.
“சூப்பர்! டிஃபன் பாக்ஸை சீக்கிரம் எடுத்துக் கொடுங்க” என உத்தரவு போலக் கூறியவளிடம்,
“நாங்க ஹாஸ்டலில் இருந்து ஊருக்குப் போய் உங்களை ஞாபகம் வச்சு ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருக்கோம். நீ இதே ஊரில் தானே இருக்கிற? அப்போ எங்களை விட நிறையக் கொண்டு வந்து இருக்கனுமே! எங்கே எதையும் காணோம்?” என்றாள் அனிகா.
“ஹி ஹி. பாக்ஸ்ஸை எடுத்துட்டு வர மறந்துட்டேன்” என்று கேவலமாக அசடு வழிந்தவளை மற்ற இருவரும் முறைத்தார்கள் எனில், பிரஹாசினி மட்டும் அவளது குறும்புப் பேச்சில் புன்னகையை உதிர்த்தாள்.
“நல்லா விவரமாகத் தான் இருக்கிற டி!” என்றவர்கள், பேராசிரியர் உள்ளே நுழைந்ததும் தங்களது பேச்சை நிறுத்தி விட்டுப் பாடத்தைக் கவனிக்கத் தொடங்கினர்.
இங்கே, தன்னுடைய வகுப்பில் தோழிகளுடன் ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்த ஆரவியோ,”எல்லாரும் எத்தனை டிரெஸ் எடுத்தீங்க?” எனக் கேட்டாள்.
“நான் இரண்டு எடுத்தேன்”, என்றும்,
“எனக்கு ஒன்னு தான் எடுத்துக் கொடுத்தாங்க” என்ற பதில்களும் கிடைக்கவும்,
“நானுமே ஒன்னு தான் எடுத்தேன். ஃபோட்டோஸ் எல்லாம் வளைச்சு, வளைச்சு எடுத்து ரணகளம் பண்ணிட்டேன்” என்றவளோ, தன்னுடைய செல்பேசியில் இருந்த புகைப்படங்களைக் காட்டினாள் ஆரவி.
அதேபோல், அவளது தோழிகளும் தாங்கள் எடுத்தப் புகைப்படங்களைக் காண்பித்தார்கள்.
பின்பு,”இன்னைக்கு எங்க அண்ணா தான் என்னைக் காலேஜில் கொண்டு வந்து விட்டுட்டுப் போனார் தெரியுமா?” என்று பெருமையடித்தாள் ஆரவி.
“அப்படியா? நீ அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவே இல்லையே?” என்றனர்.
“அதனால் என்ன? இனிமேல் தினமும் அவங்க தான் என்னை இங்கே கொண்டு வந்து விடுவாங்க. அவரை உங்களுக்கு நாளைக்குக் கூட அறிமுகப்படுத்தி வச்சிட்டா போச்சு” என அவர்களுக்கு உறுதி அளித்தாள்.
அதேபோல், அவர்களைத் தன்னுடைய தமையனிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தும் வைத்து விட்டாள் ஆரவி.
இவ்வாறாக, அடுத்து வந்த நாட்களில் எல்லாம், ஆரவியுடன் கல்லூரியில் கொண்டு வந்து விடும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான் திவ்யன்.
அந்தச் சமயங்களில் எல்லாம், பிரஹாசினியைத் தவறாமல் பார்த்து விடுவான் அவன்.
அதுவும் தங்கை ஆரவிக்கு எந்தவித சந்தேகமும் வராமல் பார்த்துக் கொள்வான் திவ்யன்.
இப்படியாகச், சில தினங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் பிரஹாசினியின் தோழிகள்,”இப்போ எல்லாம் அந்த ஜூனியர் பொண்ணு ஆரவி அவளோட அண்ணா கூடத் தான் காலேஜூக்கு வர்றாள். அது உங்களுக்குத் தெரியுமா?” என்றவுடன்,
“ம்ம். நானும் மார்னிங் வரும் போது அவங்களைப் பார்ப்பேன்” என்றாள் ஒருத்தி.
“எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருந்தால் அவனும் இப்படியெல்லாம் என்னைக் காலேஜூக்குக் கொண்டு வந்து விட்டு இருப்பான்ல?” என்று வருத்தத்துடன் கூறினாள் வினோதா.
அதைக் கேட்டதும், பிரஹாசினிக்குத் தனது தமையன் நீரஜ்ஜின் ஞாபகம் தான் வந்தது.
அவனும் கூட இப்படித் தான், அவளை எங்கேயும், எப்போதும் தனியாக அனுப்பியது இல்லை.
மாற்றான் தாய் உறவு என்று தள்ளி நிறுத்தாமல் தன்னைச் சொந்த தங்கையாக அரவணைத்துக் கொண்டவனைப் பற்றி இப்போது நினைத்தாலும் பிரஹாசினிக்குள் தமையனின் மேல் பாசமும், நன்றி உணர்வும் ஊற்றெடுத்தது.
அதை எண்ணிப் பெருமிதம் அடைந்தவளைத் தோழிகளின் குரல் நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது.
“எங்கே போகனும்னாலும் நாம தான் போயிட்டு வரனும்னு நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும்” என்றாள் வினோதா.
“ஹேய்! ஏன் டி இப்படிப் பேசுற? சொல்லப் போனால் அது தான் நல்லது. எதையும் தனியாக இருந்து எதிர் கொள்ளனும். இப்போ உனக்கு ஏதாவது வேலைன்னா அதை யாரோட உதவியும் இல்லாமல் நீயே முடிச்சிடுவ, எங்கே போகனும்னாலும் ஸ்கூட்டியில் போயிட்டு வந்துருவ. அதை நினைச்சுப் பெருமைப்படு” என அவளுக்குச் சமாதானமாகப் பேசினாள் பிரஹாசினி.
அதில் கொஞ்சம் மனம் திருப்தி அடைந்தாள் வினோதா.
அதன் பின்னர், மறுநாள் கல்லூரிக்குள் நுழையும் தருவாயில்,
ஆரவியையும், அவளது தமையனையும் பார்த்து விட்ட சௌமியாவோ,”அங்கே பாருங்க. அவர் தான் ஆரவியோட அண்ணா போல” என்று தோழிகளிடம் உரைத்தாள்.
உடனே அவள் காட்டிய திசையில் பார்த்து விட்டு,”ஆமாம்” என்றாள் அனிகா.
அவர்களைத் தொடர்ந்து, தானும் அவ்விருவரைப் பார்த்தாள் பிரஹாசினி.
ஆரவியுடன் பேசிக் கொண்டிருந்த அந்த ஆடவன் அவளது கவனத்தைக் கலைத்தான்.
அவனது விழிகளில் தான் எத்தனை கனிவு? தன்னுடைய தங்கையிடம் சிறு இடைவெளி விட்டு நின்று கொண்டு நாகரீகமாக உரையாடியவனின் பேச்சுக்கள் அவர்களை நெருங்க, நெருங்க இவர்களுக்கும் கேட்டது.
“லன்ச்சை ஒழுங்காக ஃபுல்லா சாப்பிட்டு வா. உன் டிஃபன் பாக்ஸில் தினமும் சாப்பாடு கொஞ்சமாவது இருக்குன்னு அம்மா வருத்தப்பட்றாங்கடா ஆரு. ஏன் இப்படி பண்ற?”என்று தங்கையிடம் மென்மையாக வினவினான் திவ்யன்.
“அம்மா நிறைய வச்சிடறாங்கண்ணா. என்னால் ஒரு அளவுக்கு மேல் முழுங்கவே முடியலை ஒமட்டுது” எனச் சோகமாக கூறினாள் ஆரவி.
“சரி. அவங்க கிட்ட இனிமேல் உனக்குச் சாப்பிட ஏத்த அளவுக்கு வைக்கச் சொல்றேன் என்ன?” என்று அவளுக்கு ஆறுதல் சொன்ன தமையனிடம்,
“ஓகேண்ணா” என்றவளை,
“ஹாய் ஆரவி” எனப் பிரஹாசினியின் தோழிகள் அழைத்தனர்.
அதைக் கேட்டு அண்ணனும், தங்கையும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தார்கள்.
அவர்களைப் பார்த்ததுமே புன்னகை புரியப் போன ஆரவியின் இதழ்கள் இறுகி, முகம் சுனங்கிப் போனாலும், அதைச் சமாளித்துக் கொண்டு,”ஹாய்!” என்று கூறிக் குறுநகை செய்தவள்,
“அண்ணா! இவங்க என்னோட சீனியர்ஸ்” என்று அவர்களைத் தமையனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
உடனே திவ்யனும்,”ஹாய்ம்மா” என அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். ஆனால், அவர்களில் நடுவில் இருந்தப் பிரஹாசினியை மட்டும் தான் பரவசத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஏனென்றால், எப்போதுமே தன்னுடைய தங்கையை அழைத்து வரும் நேரத்திலேயே அவள் தன் தோழியருடன் கல்லூரிக்கு வந்து விடுவாள்.
இன்றைக்குத் தாங்கள் இருவரும் வந்து அதிக நேரம் ஆகி விட்டிருந்த போதிலும் கூட, அவளைக் காணவில்லையே! என்ற பரிதவிப்பில் இருந்தாலும் அதைத் தங்கையிடம் காட்டாமல் இவ்வளவு நேரம் அவளுடன் உரையாடிக் கொண்டிருக்க, இப்போது பிரஹாசினியின் தரிசனம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவளை ஆதூரமாக வருடியது திவ்யனின் விலோசனங்கள்.
ஒரு தடவை மட்டுமே அவனைப் பார்த்து விட்டு ஆரவியின் புறம் திரும்பிக் கொண்டாள் பிரஹாசினி.
“என்னக்கா இன்னைக்கு நீங்க லேட் ஆக வந்து இருக்கீங்க?” என்று சௌமியா மற்றும் அனிகாவைப் பார்த்து மட்டும் பேசினாள் ஆரவி.
அதைக் கண்டு எந்த ஆசூயை உணர்வையும் வெளிப்படுத்தாமல்,”நீங்கப் பேசிட்டு வாங்க. நான் கிளாஸூக்குப் போறேன்” எனத் தோழிகளிடம் கூறி விட்டுச் சென்று விட்டாள் பிரஹாசினி.
அதில், தன்னுடைய மனதின் ஓரத்தில் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டான் திவ்யன்.
ஆனால், அவள் போனதும் இவர்களிடம் இன்னும் சகஜமாகப் பேசத் தொடங்கிய ஆரவியோ, மீண்டுமொரு முறை அவர்களிடம்,“ஏன் க்கா லேட்?” என விசாரிக்க,
சௌமியா,“ஆமாம்டா. நாங்க ரெண்டு பேரும் காலையில் லேட் ஆகத் தான் கண் விழிச்சோம். அதனால் எல்லா வேலையையும் தாமதமாகத் தான் செஞ்சி முடிச்சோம். ஆனால், பிரஹா சீக்கிரம் கிளம்பிட்டா. அவளுக்குக் கிளாஸில் ஒரு வொர்க் இருக்கு. அதான் உடனே போயிட்டா” என்று கூறவும்,
“ஓஹோ சரிக்கா” என்றாள் ஆரவி.
“நல்லா இருக்கீங்களா அண்ணா?” எனத் திவ்யனிடம் நலம் விசாரித்தாள் அனிகா.
“நல்லா இருக்கேன்ம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“நாங்க சூப்பராக இருக்கோம்” என்றவனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க மனம் ஒத்துழைக்கவில்லை.
எனவே,”சரிம்மா. நான் கிளம்புறேன்” எனத் தங்கையிடமும், மற்ற இருவரிடமும் கூறி விட்டு அங்கேயிருந்து கிளம்பினான் திவ்யன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக