இதேபோல், தன்னுடைய விடுமுறை தினங்களை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தாள் ஆரவி.
அந்த நாட்களிலும் கூடப் பிரஹாசினியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் கூறுவதை அவள் தவிர்க்கவோ, குறைத்துக் கொள்ளவோ இல்லை.
“நீ ஏன் டி அந்தப் பிள்ளையைப் பத்தியே பைத்தியம் பிடிச்சவ மாதிரி பேசிட்டு இருக்கிற? அவளை விடேன்! உன்னை என்ன தான் பண்ணாளோ அந்தப் பொண்ணு!” என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு இப்போது மகளின் தீராத புலம்பலில் பொங்கி எழுந்து விட்டார் அவளது அன்னை சோமசுந்தரி.
“ம்மா! அவங்களை எனக்குப் பிடிக்கலை! ஆனாலும் தினமும் அவங்க முகத்தைப் பார்த்துட்டே இருக்க வேண்டியதாக இருக்கு! அது எனக்குக் கடுப்பா இருக்கு!” என்று பிரஹாசினியின் மீதான தன் வெறுப்பை மறைக்காமல் உரைத்தாள் ஆரவி.
“ஆரும்மா! நமக்குக் க்ளோஸ் ஆக இல்லாத, அவ்வளவாகத் தெரியாதவங்க மேல் இந்தளவுக்கு வெறுப்போ, கோபமோ படக் கூடாது. அது தப்பு!” என்று மிருதுவான குரலில் தங்கைக்கு எடுத்துக் கூறினான் திவ்யன்.
“ம்ஹூம்! தினமும் அவங்களைப் பார்த்துட்டு இருக்கேனே அண்ணா? அப்போ அவங்களோட நடவடிக்கைகள் எனக்குப் புரியாமல் இருக்குமா என்ன? சரியான திமிரு புடிச்சவங்க!” எனவும்,
மகுடபதி,“ஆரவி! அந்தப் பொண்ணைப் பத்தியே புலம்பி உன் மன நிம்மதியைக் கெடுத்துக்காதே! லீவ் நாளை என்ஜாய் பண்ணு! நல்லா சாப்பிடு” என்றவர்,
“சுந்தரிம்மா, இவளுக்குப் பிடிச்சப் பலகாரத்தைக் கேட்டுச் செஞ்சி கொடு” எனத் தன்னுடைய மனைவிக்கு அறிவுறுத்தினார்.
“சரிங்க” என்று அவரிடம் கூறி விட்டு,
“நீ என் கூட வா. சமையல்கட்டில் வேலை இருக்கு” என மகளைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் சோமசுந்தரி.
“இவ என்னப்பா அந்தப் பொண்ணு மேல் இவ்வளவு வெறுப்போட இருக்கிறா! இது நல்லதுக்கு இல்லையே!” என்ற திவ்யனிடம்,
“ஆமாம் ப்பா. அவ கூடப் படிக்கிற பிள்ளையாக இருந்தால் கூடப் பரவாயில்லை. சீனியர் பொண்ணு. இவளுக்கு அவங்க மேலே என்னக் கடுப்பு இருக்கப் போகுது? நாம எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே? இந்த வயசில் இப்படி இருக்கிறது ரொம்ப தப்பாச்சே!” என அவனிடம் பகிர்ந்து கொண்டார் மகுடபதி.
“ஆமாம்ப்பா. இதை அவ மாத்திக்கிட்டா நல்லது” என்றதும்,
“பார்ப்போம்” எனப் பதிலளித்தாலும்,
அவருக்குமே ஆரவியிடத்தில் மிகுந்த அதிருப்தி உண்டானது. இத்தனை வயதிற்குப் பிறகும் ஏன் இந்த மாதிரியான ஒரு குணத்தைக் கொண்டு இருக்கிறாள் மகள் என்று யோசனையில் ஆழ்ந்தார்.
ஆனால் ஆரவியின் குடும்பத்திற்கு ஒரு விஷயம் புரியவில்லை.
ஒரு சிலருக்குத் தங்களுக்கு நேர் எதிர் குணம் உடையவர்களைக் கண்டால் பிடிக்காமல் போய் விடும். அதேபோல், தாங்கள் முயற்சி செய்து அவர்களைத் தங்களுக்கு ஏற்றாற் போல் மாற்ற நினைப்பதும் அபத்தமான விஷயம் என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், அவர்களே தங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே? அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும் அந்த ஒரு சிலரில் ஆரவியும் ஒருத்தியாக இருந்தாள்.
தன்னுடைய கலகலப்பான சுபாவம் அனைவரையும் ஈர்க்கிறது என்ற மமதையில் இருந்தவளுக்குப் பிரஹாசினி மட்டும் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனியாகத் தெரிந்தது அவளுக்கு எரிச்சலூட்டியது போலும்.
எனவே அவளையும் தங்களது ஜோதியில் கலக்க வைக்கப் படாதபாடு பட்டவள், அது முடியாமல் போகவும் தான் இப்போது தன் குடும்பத்திடம் அதைப் புலம்பிக் கொண்டிருக்கிறாள் ஆரவி.
அவற்றைத் தாங்க முடியாமல் தான் அவளது பெற்றோரும், தமையனும் அவளுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை அவள் காது கொடுத்துக் கேட்பதாகவே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.
தன்னுடைய தங்கையின் இந்த அளவிற்கு அதிகமான வெறுப்பைச் சம்பாதித்து இருக்கும் அந்த முகம் அறியாத பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது திவ்யனுக்கு.
எனவே, ஆரவி விடுமுறை முடிந்து அவளது கல்லூரிக்குச் செல்லும் போது அவளை அங்கே கொண்டு போய் விடும் சாக்கில் அந்தப் பெண்ணைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.
ஆனால், தன் பெரியம்மா, பெரியப்பா மற்றும் நீரஜ்ஜிடம் தனக்குக் கிடைத்த ஒரு சில தோழிகளைப் பற்றியப் புகழ்ச்சியைப் பாடிக் கொண்டிருந்தாள் பிரஹாசினி.
நீரஜ்,“பாருடா! உனக்கு இவ்வளவு ஃப்ரண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்களா?” என்ற தமையனை முறைத்தவள்,
“ஏன் அண்ணா எனக்கு ஃப்ரண்ட்ஸ்ஸே கிடைக்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டீங்களா?” என்று அவனிடம் வினவினாள் இளையவள்.
“டேய் நீரு! நீ ஏன்டா அவளை வம்புக்கு இழுக்குற? அவளே எப்போதாவது தான் இப்படி நல்லா சிரிச்சு, வெளிப்படையாகப் பேசுறா! அதையும் விட மாட்டே போலயே?” என்று அவனை அதட்டினார் உமாராணி.
“அதானே! பிரஹாவைப் பேச விடுடா” என்று தானும் குரலை உயர்த்திக் கூறினார் விருச்சிகன்.
“அச்சோ! நான் அவளைக் கிண்டல் செய்றதுக்காக அப்படிக் கேட்கலை. ஏன்னா, இவ ஸ்கூல் படிக்கும் போது கூட ‘எனக்கு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்கன்னு’ யாரைப் பத்தியும் பேசினதே இல்லை. அதனால் தான் அப்படிக் கேட்டேன்” என்றவனோ,
“நீ எதுவும் தப்பா எடுத்துக்காதேம்மா!” என்று தங்கையிடம் கேட்டுக் கொண்டான்.
“அதெல்லாம் தப்பா எடுத்துக்கலை அண்ணா. ஆனால், என்னோட சுபாவத்துக்கு ஏத்த மாதிரி, அதைப் புரிஞ்சிக்கிட்டு ஒரு சிலர் என் கூட ஃப்ரண்ட்ஸ் ஆகி இருக்காங்க. அவங்களைப் பத்தி எதையும் உங்ககிட்ட ஷேர் பண்ணக் கூடாதா?” என்று வாதம் செய்தாள் பிரஹாசினி.
“கண்டிப்பாக ஷேர் செய்யலாம். நீ சொல்லு” என்றவுடன், அவளது ஆனந்தம் நிறைந்த பேச்சில் லயித்தனர் மூவரும்.
“அங்கே காலேஜில் ஒரு ஜூனியர் பொண்ணு இருக்கா. அவ என்னைப் பார்க்கும் போது எல்லாம் எப்பவும் ஒரே கேள்வியைத் தான் கேட்டுட்டு இருப்பா” என்றவளிடம்,
“யாரந்தப் பொண்ணு? அவ அப்படி என்னக் கேள்வி கேட்டாள்?” என்று அவளிடம் ஆர்வத்துடன் வினவினார் உமாராணி.
“நீங்க ஏன் யார் கூடவும் சேராமல் தனியாக இருக்கீங்கன்னுக் கேட்பாள் பெரியம்மா” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டு,
“ஹா ஹா! நல்ல கேள்வி தான்! அதுக்கு நீ என்ன சொன்ன?” எனக் கேட்டார் விருச்சிகன்.
“நான் என்னோட சுபாவமே இது தான்னு சொல்லிட்டேன் பெரியப்பா” என்றவளோ அதற்கு மேல் அந்தப் பெண்ணைப் பற்றியப் பேச்சை எடுக்கவில்லை.
அதனாலேயே, அவர்களைப் பொறுத்தவரையில் அவள் பிரஹாசினியின் ஜூனியர், அவளுக்குப் பிரஹாசினியின் குணத்தில் அதிருப்தி இருக்கிறது என்ற வகையில் தான் அவளைப் பற்றிய பேச்சு இருந்தது.
அதன் பின்னர், அடுத்த நாள், சித்திரை ஒன்று, தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். அதில் ஆரவியைப் பற்றிச் சுத்தமாக மறந்தும் போயினர் பிரஹாசினியும், அவளது வீட்டாரும்.
அடுத்த நாள் காலையில் அனைவருமே விழித்துக் கொண்டதால் அப்போதே குளியலை முடித்து விட்டனர்.
உமாராணியும், பிரஹாசினியும் சேர்ந்து வாசலில் கோலம் போட, அதற்குக் கலர் கொடுக்கும் வேலையைச் செய்தான் நீரஜ்.
அதை முடித்து விட்டு, அனைவரும் புதுத்துணிகளை உடுத்தினர்.
உமாராணியும், பிரஹாசினியும் சேர்ந்து காலை உணவைத் தயாரித்தார்கள்.
“நீங்க லேட் ஆகவே எழுந்து இருக்கலாம்லங்க? நைட்டுக் கடையில் ரொம்ப கூட்டம். நிற்க நேரமில்லைன்னு சொன்னீங்களே?” என்ற மனைவியிடம்,
“அதுக்காக நல்ல நாளும் அதுவுமாக தாமதமாக எழுந்தால் நல்லாவா இருக்கும் உமா. நீயே சொல்லு” என்று சமாதான வார்த்தைகளைக் கூறி விட்டு,
“சாப்பிடலாமா?” எனப் பொதுவாக வினவினார் விருச்சிகன்.
“ம்ம். வாங்க” என நால்வரும் உணவுண்டு முடித்தார்கள்.
அதே போலவே, தங்களுடைய வீட்டின் முன்னால் கட்டியிருந்த மாவிலைத் தோரணம் நன்றாகத் தெரிகிறதா என்று சோதனை செய்து விட்டு அதனுடன் சேர்த்துத் தன்னைச் சுயமிகளை எடுத்துத் தள்ளினாள் ஆரவி.
உடனே அவளிடம் வந்த திவ்யனோ,”இன்னும் நீ செல்ஃபி எடுத்து முடிக்கலையா?” எனக் கேட்க,
“இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கேன் அண்ணா. இன்னும் நிறைய ஃபோட்டோஸ், செல்ஃபீஸ் எடுக்கனும்” என்றவளோ, அவனுடன் நின்று சுயமி ஒன்றை எடுத்துக் கொள்ளவும்,
“போதும் ஆரும்மா. வா, சாமி கும்பிடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டுக் குடும்பமாக சேர்ந்துக் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கேயும் ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்தவளை,”ஆரு! ஃபோட்டோ எடுத்தது போதும். சாமியைக் கும்பிடு” என்று அதட்டி அவளைச் சாமி கும்பிட வைத்தார் சோமசுந்தரி.
அதற்குப் பிறகு, வீட்டிற்கு வந்தவர்கள், மதிய உணவு தயாராகும் நேரத்தில்,”ஆரு! நீ லீவ் முடிஞ்சு காலேஜூக்குப் போகும் போது நான் உன்னைப் பைக்கில் கொண்டு போய் விட்றேன்” என்றான் திவ்யன்.
ஆரவி,“ஏன் இப்போ திடீர்னு இப்படி சொல்றீங்க அண்ணா? நான் எப்பவும் பஸ்ஸில் தானே காலேஜூக்குப் போவேன்?”
“ஆமாம்மா. ஆனால் இனிமேல் நானே தினமும் உன்னைக் காலேஜில் டிராப் பண்றேன்” என்றவனிடம்,
“அது தான் எதுக்குன்னு சொல்லேன்டா?” என்று மகனிடம் கேட்டார் மகுடபதி.
திவ்யன்,“நான் படிச்சு முடிச்சிட்டு வேலை தானே தேடிக்கிட்டு இருக்கேன்? அப்படியிருக்கும் போது, நானே அவளைக் கொண்டு போய் விடறதில் என்ன ஆகப் போகுதுப்பா? அதான் சொல்றேன்” எனப் பதிலளித்தான்.
“ஓஹோ. அதுவும் நல்லதுக்குத் தான். நீ திவு கூடவே காலேஜூக்குப் போயிட்டு வந்துரு” என்று மகளிடம் சொன்னார் சோமசுந்தரி.
“சரிம்மா” என ஒப்புக் கொண்டாள் ஆரவி.
“காலையிலேயே கோயிலுக்குப் போயிட்டு வந்திருக்கனும். இப்பவும் லேட் பண்ணாதீங்க. சீக்கிரம் கிளம்புங்க” என்று தன் குடும்பத்தாரைத் துரிதப்படுத்திக் கொண்டு இருந்தார் விருச்சிகன்.
“கிளம்பியாச்சுங்க. வாங்க போகலாம்” என அவருடன் இணைந்து மற்ற மூவரும் கோயிலுக்குப் போனதும்,
அங்கே எதிர்பாராத விதமாக, அவர்கள் தங்களது உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.
“எப்படி இருக்கே பிரஹாசினி?” எனத் தன்னிடம் வினவிய தனக்குச் சித்தி முறைப் பெண்மணியிடம்,
“நான் நல்லா இருக்கேன் சித்தி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவுடன்,
“நான் நல்லா இருக்கேன். நீ நல்லா வளர்ந்துட்டியே? அதுவும் இந்த டிரெஸ்ஸில் ரொம்ப அழகாக இருக்கியே!” என அவளைத் தலை முதல் கால் வரைக் கண்களால் கூர்மையாக அளந்தார் அவர்.
பிரஹாசினி,“நன்றி சித்தி”
“ஏன் உமாக்கா, உங்க நாத்தனார் வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டு இருக்காளா?” என்று உமாராணியிடம் வினவினார் குமரி.
“ஆமாம். ஏன் கேட்கிற?” என்றவரிடம்,
“இல்லை. சும்மா தான்” என்றவர், அவர்களை ஒரு வித அர்த்தப் பார்வை பார்த்து விட்டுப் போனார்.
“இவ ஏன் இப்படிப் பார்த்துட்டுப் போறா?” என்று தங்களுக்குள் பேசிக் குழம்பிக் கொண்டே வீட்டை அடைந்தார்கள்.
இரவு நேரத்தில்,“அவ ஏதோ உளறிட்டுப் போறா. விடுங்க” என்று கூறி உறங்கப் போய் விட்டார் விருச்சிகன்.
“உனக்கு அடுத்த இரண்டு நாளும் லீவ் தானே பிரஹா?” என்றார் உமாராணி.
“ஆமா பெரியம்மா”
“அப்போ லாஸ்ட் டே ஈவ்னிங் உன்னைக் கூட்டிட்டுப் போய் ஹாஸ்டலில் விட்டுட்டு வர்றோம்” என்றுரைக்கவும்,
“சரிங்க பெரியம்மா” என்றவளை உறங்க அனுப்பி விட்டு மற்றவர்களும் நித்திரையில் ஆழ்ந்தனர்.
இவ்வாறாக, அவர்கள் மூவரின் பாச மழையில் நனைந்து முடித்த திருப்தியுடன் அவர்களுடன் சேர்ந்து விடுதிக்கு வந்து சேர்ந்தாள் பிரஹாசினி.
“இதில் இருக்கிறப் பலகாரங்களை உன் ஃப்ரண்ட்ஸுக்கும் சாப்பிடக் கொடு பிரஹா” என அவளிடம் கூறி விட்டுக் கிளம்பினர் விருச்சிகன் மற்றும் உமாராணி.
அறையின் வாயிலில் தனது உடைப் பெட்டியுடன் நின்றிருந்தவளை,“ஹாய்!” என்று வரவேற்றனர் அவளது அறைத் தோழிகள் இருவரும்.
“ஹாய் ஃப்ரண்ட்ஸ். எப்போ வந்தீங்க?”என்று கேட்டாள் பிரஹாசினி.
“நீ வர்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தோம்ப்பா. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருந்தோம்” என்றாள் சௌமியா.
அனிகாவோ,”வீட்டிலிருந்து ஏதாவது ஸ்நாக்ஸ் கொண்டு வந்தியா?” என்க,
“ம்ம். நிறைய எடுத்துட்டு வந்திருக்கேன்” என்றவளிடம்,
“நாங்களும் தான்”எனக் கூறினாள் அனிகா.
பிரஹாசினி,”முதல்ல எல்லாத்தையும் ஒதுங்க வச்சுக் கிளீன் பண்ணுவோம். அப்பறமாக டின்னர் சாப்பிட்டு வந்துட்டு ஸ்நாக்ஸைப் பார்ப்போம்” என்றவள், அவர்கள் இருவருடன் சேரந்து அறையை ஒதுங்க வைத்துச், சுத்தம் செய்தாள்.
பின்னர், மூவரும் இணைந்து இரவு உணவை உட்கொள்ளச் சென்றார்கள்.
தத்தமது உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு மேஜையில் அமர்ந்து உண்ணத் தொடங்கியவர்கள், தங்களது விடுமுறை நாட்கள் எவ்வாறெல்லாம் கழிந்தது என்பதை தங்களுக்குள் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டனர்.
“நம்ம ஃபேமிலியைப் பத்திப் பேசினாலே நேரம் போறதே தெரியலை. வயித்துலேயும் இடமில்லை. நாளைக்கு லன்ச் டைமில் ஸ்நாக்ஸ்ஸை சாப்பிடுவோம். இப்போ தூங்குவோம்” என்றவர்கள் உறங்கி தாங்கள் கல்லூரிக்குக் கிளம்பும் நேரத்தில் தான் விழித்தார்கள்.
இதே சமயம், தன்னுடைய இல்லத்தில் தயாராகி கொண்டிருந்த ஆரவியோ,”ம்மா! திவு அண்ணா எழுந்தாச்சா?” என்று தாயிடம் வினவினாள்.
“எழுந்துட்டான் டி. குளிக்கப் போயிருக்கான். உன்னைச் சரியான நேரத்துக்குக் கொண்டு போய் விட்ருவான். நீ முதல்ல வந்து சாப்பிடு” என அவளுக்கு உணவுப் பரிமாறினார் சோமசுந்தரி.
குளியலறையில் இருந்து வெளியே வந்து, தான் அணிய, வேண்டிய உடையை வெகு சிரத்தையுடன் தேர்வு செய்து கொண்டிருந்தான் திவ்யன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக