எவ்வளவு நாட்களுக்குத் தான், பிரஹாசினி கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கும் விஷயத்தை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைத்திருக்க முடியும்? எனவே, அவள் ஊருக்குச் சென்ற அடுத்த வாரத்திலேயே அந்த தகவலைத் தங்களது உறவினர்களிடம் தெரிவித்து விட்டார்கள் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ்.
அதற்குப் பிறகு அனைத்து உறவினர்களும் இவர்களது வீட்டிற்கே வந்து,”என்ன இப்படி பண்ணிட்டீங்க? எங்க கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லத் தோனலையா? நாங்க தான், அவ மார்க்குக்கு ஏத்த மாதிரி காலேஜ் தேடித் தர்றோம்ன்னு சொன்னோமே? அதுக்குள்ள உங்களுக்கு அப்படி என்ன அவசரம்? அவ விஷயத்தில் முடிவு எடுக்கிறதுக்கு எங்களுக்கும் உரிமை இருக்கு! அதை நீங்க எப்படி எங்க கிட்ட இருந்து பறிக்கலாம்? அதே மாதிரி, உள்ளூரிலேயே நிறைய காலேஜ் இருக்கும் போது யாருக்கும் சொல்லாமல் பக்கத்து ஊருக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டியதில் என்ன அவசியம் வந்தது?” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
உமாராணி,“பிரஹா தான் அந்தக் காலேஜில் படிக்கனும்னு ஆசைப்பட்டு எங்க கிட்ட கேட்டாள். நாங்க அதை நிறைவேத்தி வச்சு இருக்கோம்!” என்றவுடன்,
“ஓஹோ! இதை எங்களை நம்பச் சொல்றீங்களா?” என்றனர்.
விருச்சிகன்,“நம்பினால் நம்புங்க. இல்லைன்னா உங்க இஷ்டம்!” என்று அவர்களது பேச்சில் எரிச்சல் அடைந்து விட்டேற்றியாக உரைத்தார்.
“இதெல்லாம் நல்லா இல்லை ப்பா. பிரஹாசினியோட வாழ்க்கையைப் பத்தின எல்லா முடிவுகளையும் எங்களையும் கூப்பிட்டு வச்சுக் கலந்து பேசிட்டுத் தான் எதுவாக இருந்தாலும் செய்யனும்னு முன்னாடியே சொல்லி இருக்கோம்ல? அதுக்கப்புறமும் இப்படிப் பண்ணா எங்களுக்கு என்ன மரியாதை?” என்று கூறிய தங்கள் அங்காளி, பங்காளிகளிடம்,
“நாங்க ஒன்னும் உங்களை மதிக்காமல் இல்லை. பிரஹாசினியோட படிப்புக்காக நீங்க சொன்ன எல்லா ஆலோசனைகளையும் அவளும், நாங்களும் கேட்கத் தானே செஞ்சோம்? ஆனால் கடைசியில் அவளுக்கு எங்கப் படிக்கனும்னு தோனுச்சோ அதை எங்க கிட்ட சொன்னா, உங்களோட கலந்து பேசிப் பொறுமையாக முடிவு எடுக்கிற வரைக்கும் அந்தக் காலேஜில் ஃப்ரீ சீட்டை வச்சிட்டு எங்களுக்காக காத்திருப்பாங்களா என்ன? உடனே அட்மிஷன் போடலைன்னா அந்த சீட்டை வேற யாருக்காவது கொடுத்துடுவாங்க தானே? அப்பறம் பிரஹாவோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அதனால் தான் நாங்க தாமதிக்காமல் அவளை அந்தக் காலேஜில் சேர்த்து விட்டோம்!” என்று விளக்கம் அளித்தார் உமாராணி.
“ம்ம்! புருஷனும், பொண்டாட்டியும் நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க! காலேஜில் சேர்த்து விட்டீங்க, சரி! எதுக்கு ஹாஸ்டலில் சேர்க்கனும்? பக்கத்து ஊர் தானே? இங்கே இருந்தே பஸ்ஸில் போயிட்டு வரலாமே?” எனக் கேட்டு வைத்தார்கள்.
“தினமும் அப்படி போயிட்டு வந்திட்டு இருந்தால் அவ எப்போ ரெஸ்ட் எடுக்கிறது, காலேஜில் கொடுக்கிற வேலையெல்லாம் பார்க்கிறது? அதனால் தான் ஹாஸ்டலில் சேர்த்தாச்சு” என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு கூறினான் நீரஜ்.
“நீங்க என்ன சொன்னாலும் எங்களுக்கு மனசு சமாதானம் ஆக மாட்டேங்குது. பிரஹாசினியோட கல்யாணத்தையாவது எங்க கிட்ட கலந்து பேசிப் பண்ணினா சந்தோஷம்!” என்று கடைசி வரை புலம்பிக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் தான் அவர்களது வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பிப் போயினர்.
“நாம இதையெல்லாம் பிரஹாசினி கிட்டே சொல்ல வேண்டாம்” என்று மூவரும் ஒரு மனதாக முடிவெடுத்துக் விட்டார்கள்.
இதே சமயம், தன்னுடைய கல்லூரிப் படிப்பில் எந்தவித குளறுபடிகளும் நடந்து விடாமல் சாமர்த்தியமாக கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினாள் பிரஹாசினி.
அவள் விடுதியில் சேர்ந்ததற்குப் பிறகு, வந்த முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமையில் தன்னைப் பார்க்க வந்திருந்த பெரியம்மாவைக் கண்டதும் அவரிடம் துள்ளிக் குதித்து ஓடினாள்.
அவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டு,”எப்படிடா இருக்க?” என்று கனிவுடன் வினவினார் உமாராணி.
“நல்லா இருக்கேன் பெரியம்மா. நீங்க, பெரியப்பா, அண்ணா எப்படி இருக்கீங்க? அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல?” என்றாள் சோகத்துடன்.
“அவங்களும் சௌக்கியமாக இருக்காங்க. உங்கப் பெரியப்பாவுக்குக் கடையில் ரொம்ப வேலை, நீரஜ்ஜூக்குக் காலேஜில் லீவ் கிடைக்கலைடா. அடுத்த வாரம் அவங்களை அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறி அவளைச் சமாதானம் செய்யவும்,
“சரிங்க பெரியம்மா” என்றவளிடம்,
அங்கே அவளுக்கு அனைத்தும் சௌகரியமாக இருக்கிறதா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டார் உமாராணி.
“நான் இங்கே சூப்பராக இருக்கேன் பெரியம்மா. ஹாஸ்டலும் சரி, காலேஜூம் சரி. இரண்டுமே எனக்கு வசதியாகத் தான் இருக்கு” என்று கூறியவள், தனது அறைத் தோழிகள் அனிகா மற்றும் சௌமியாவை அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் பிரஹாசினி.
அவர்களிடம் பேசிய கொஞ்ச நேரத்திலேயே அவ்விருவருடைய குணங்களும் அவருக்குத் திருப்தியை அளித்தது.
அதன் பிறகு, தான் சமைத்துக் கொண்டு வந்திருந்த அசைவ உணவுகளைப் பிரஹாசினிக்கு மட்டுமில்லாமல் அனிகா மற்றும் சௌமியாவிற்கும் உண்ணக் கொடுத்து விட்டுப் பிரஹாசினியுடன் தனியாக அமர்ந்து மனம் விட்டுப் பேசி விட்டு அவளிடம் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றார் உமாராணி.
அதற்கடுத்து வந்த தினங்களில், பிரஹாசினிக்கு அவளது அறைத் தோழிகளுடன் நல்ல புரிந்துணர்வு இருந்ததால் மூவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள, விடுதி வாழ்க்கையையும் கூட அவளால் எளிதாகவே சமாளிக்க முடிந்தது.
அதேபோல், அவளுக்கு வகுப்பிலும் ஒரு தோழி கிடைத்து விட்டிருந்தாள். அவளது பெயர் வினோதா.
அவள் தனது தந்தை இறந்து போய் விட்டதாகவும், தாயுடன் வசித்து வருவதாகவும் மட்டுமே கூறியிருக்க, அதற்கு மேல் அவளது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தோண்டித் துருவவில்லை.
அவளாக வந்து பேசியதால் மெல்ல மெல்ல தனது தயக்கத்தை உடைத்து வினோதாவுடன் பேசத் தொடங்கினாள் பிரஹாசினி.
இவளின் குடும்பத்தைப் பற்றிய பொதுவான விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு தோழியின் பெற்றோர் இருவரும் இறந்து விட்டதை எண்ணி அவளுக்காக வருத்தப்பட்டு, பிரஹாசினியுடன் மிகவும் நெருங்கிய தோழியாக மாறி விட்டாள் வினோதா.
அதற்குப் பிறகு, அனிகா, சௌமியா மற்றும் வினோதாவுடன் மட்டும் தான் தனது கல்லூரி நாட்களைச் செலவழிக்க, அவளிடம் பேச வந்த மற்ற மாணவிகளிடம் அளவாகப் பேச்சு வைத்துக் கொண்டவள்,
அதேபோல், அவளுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுடன் ஒரேயடியாகப் பேசாமல் ஒதுங்கி இருந்து கொண்டாள் பிரஹாசினி.
ஏனென்றால், தான் தன்னுடைய தாய், தந்தையுடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அனைவரிடமும் இயல்பாகப் பழகலாம், ஆனால், பெரியப்பா மற்றும் பெரியம்மாவின் வீட்டில் வளர்வதாலும், தன்னுடைய பள்ளிக் காலங்களில் உறவினர்களின் கண்காணிப்பில் அதிகமாக இருந்ததாலும் அவளுக்கு ஆண் நண்பர்களை அமைத்துக் கொள்ளப் பயமாக இருந்தது.
அதனால் தான், தனக்குப் பாதுகாப்பாக இருக்கக் கூடிய நண்பர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் மட்டும் பழகினாள் பிரஹாசினி.
அதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் பாரபட்சம் காட்டுவதைப் போலவும், தனது தரத்திற்கு ஏற்ற நட்புக்களுடன் மட்டுமே அவள் சுற்றுவதாகவும் தெரிந்ததால் அவர்கள் மத்தியில் தலைக்கனம் பிடித்தவளாகவே பிரபலமாகி விட்டிருந்தாள் பிரஹாசினி.
அதனால், அதற்குப் பின்னர், அதை மாற்ற முயற்சிக்கவும் இல்லை அவள். தன் போக்கில், தன்னுடைய இஷ்டப்படியே இருந்து கொண்டாள்.
வாரக் கடைசியில் அவளது வீட்டில் இருந்து யாராவது ஒருவர் கண்டிப்பாக வந்து அவளைப் பார்த்து விட்டுப் போவார்கள் அல்லது இவள் தன்னுடைய வீட்டிற்குப் போய் அங்கே தங்கி விட்டு வருவாள் பிரஹாசினி.
அவள் ஊருக்குச் செல்கிற நேரங்களில் எல்லாம் உறவினப் பெண்கள் வந்து அவளிடம் நலம் விசாரித்து விட்டுப் போவார்கள்.
அதையெல்லாம் தவிர்ப்பதற்காகவே அவள் தங்கள் வீட்டிற்கு வரும் தினங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ்.
ஆனாலும் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வருபவர்கள் அவளது அகம், புறம் இரண்டையும் ஆராய்ச்சி செய்து விட்டுத் தான் செல்வார்கள்.
அதையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் படிப்பில் கவனத்தைச் செலுத்துமாறு பிரஹாசினியிடம் கேட்டுக் கொண்டனர் அவளது வீட்டார்.
அவள் தன்னுடைய முதல் வருட பருவத் தேர்வை எழுதி முடித்து விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் கூட அவளை அழைத்துக் கொண்டுச் சுற்றுலா சென்று வந்தனர்.
அதன் பிறகு, இரண்டாவது வருடத்தில் இருந்து அவளது சிறு சிறு தயக்கங்களும் வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களின் உதவியுடன் உடைத்து எறியப்பட்டது.
மெஹந்தி மற்றும் அழகு சாதனப் பொருட்களை மையமாக வைத்து அங்கே நடத்தப்பட்ட போட்டிகள் அனைத்திலும் பங்கேற்றுப் பரிசுகள் பெறுழதை வழக்கமாக வைத்துக் கொண்டாள் பிரஹாசினி.
தனது இளங்கலை இயற்பியல் படிப்பின் இரண்டாவது வருடத்தில் இருந்தாள்.
அந்த விடுதி மற்றும் கல்லூரி வாசம் கற்றுக் கொடுத்தப் படிப்பினைகளும் அவளை நன்றாகவே மாற்றி விட்டிருந்தது.
ஆனாலும் மற்றவர்களுடன் பழகுவதில், தான் வகுத்துக் கொண்ட எல்லையில் இருந்து கடுகளவும் மாறவில்லை பிரஹாசினி.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில், தன்னிடம் இருந்த விண்ணப்பப் படிவத்தைத் தனது தமையனின் உதவியுடன் நிரப்பிக் கொண்டிருந்த மகளிடம்,
“கவனமாகப் படிச்சுப் பார்த்துட்டு எல்லா விவரங்களையும் நிரப்பும்மா” என்று அறிவுறுத்தினார் மகுடபதி.
“சரிங்க அப்பா” எனக் கூறி விட்டுத் தன்னுடைய வேலையில் மீண்டும் கவனம் பதித்தாள் ஆரவி.
உள்ளூரிலேயே இருக்கும் பிரபலமான கல்லூரியில் தான் அவளைச் சேர்த்து விடுவதற்கு விண்ணப்பப் படிவம் வாங்கி வந்திருந்தான் அவளது உடன்பிறந்த தமையன் திவ்யன்.
தனது தோழிகளும் கூட அங்கே சேர்வதாகத் தான் கூறியிருந்தார்கள் என்று ஆரவி வாக்குமூலம் அளிக்கவும், அவளையும் அங்கேயே படிக்க வைக்க முடிவு செய்தனர்.
அதற்கான விண்ணப்பப் படிவத்தை தான் தற்போது நிரப்பி முடித்து விட்டு இருந்த தங்கையிடம்,
“மார்க் லிஸ்ட் ஜெராக்ஸ்ஸை எடுத்துட்டு வா” என்றான் திவ்யன்.
உடனே தனது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் நகல்களை எடுத்து வந்து கொடுத்தாள் ஆரவி.
“மத்த எல்லா பாடத்துக்கும் கூட அப்ளிகேஷன் போட்டு வைடா. ஃபிஸிக்ஸ் கிடைக்கலன்னாலும் அதில் ஏதாவது இடம் கிடைக்க வாய்ப்பு இருக்குல்ல?” என்று மகனிடம் வலியுறுத்தினார் சோமசுந்தரி.
“ம்மா! என்னோட மார்க்குக்கு அந்த சப்ஜெக்ட்டுக்கே சீட் கிடைச்சிடும்!” என்று சினுங்கினாள்.
“அப்படி அகஸ்மாத்தாக நினைச்சு விட்றாத டி! அப்பறம் அது கிடைக்கலன்னா நீ தான் வருத்தப்படுவ. அதான் சொல்றேன்” என்று அவளிடம் வலியுறுத்தவும்,
“அதெல்லாம் கண்டிப்பாக எனக்கு ஃபிஸிக்ஸ்ஸே கிடைக்கும்ன்ற நம்பிக்கை இருக்கு! அதனால் வேற எந்தப் பாடத்துக்கும் அப்ளிகேஷன் போடத் தேவையில்லை” என்று உறுதியாக கூறியவளைப் பார்த்துப் புன்னகைத்தனர் மற்ற மூவரும்.
ஆனால், சோமசுந்தரி சொன்னபடியே, மற்றப் பாடங்களுக்கும் சேர்த்தே விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விட்டு அதைக் கல்லூரியில் சேர்ப்பித்து விட்டு வந்தான் திவ்யன்.
ஆரவியின் தன்னம்பிக்கை வார்த்தைகள் வீண் போகவில்லை. அவள் ஆசைப்பட்ட பாடமான இயற்பியலைப் படிக்க அவளுக்கு இடம் கிடைத்து விட்டது.
அதன் பிறகு, ஒரு நல்ல நாளில் அவளை அழைத்துப் போய் அங்கே கல்லூரியில் சேர்த்து விட்டு வந்தார்கள் மகுடபதி, சோமசுந்தரி மற்றும் திவ்யன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக