முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவியம் 17

 


அதற்குப் பிறகுத் தனது விடுதி வாசத்திற்குத் தயாராகி கொண்டிருந்தவளோ, தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டாள் பிரஹாசினி. 


அதை நன்றாகப் புரிந்து கொண்ட அவளது குடும்பத்தாரும், அவள் விடுதிக்குச் செல்லும் வரை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர். 


அப்போதும் கூட, அவளது கல்லூரிப் படிப்பைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள என்னென்ன முயற்சிகளை எல்லாம் எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும் செய்து பார்த்த உறவினர்கள் யாவரும் தோல்வியையே தழுவினார்கள். 


“அவளுக்கு அட்மிஷன் போட்டதுக்கு அப்பறமாக கண்டிப்பாக சொல்றோம்” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டார் உமாராணி. 


அதன் பின்னர், பிரஹாசினிக்குத் தேவையான உடைகளைத் தங்கள்  கடையிலேயே எடுத்துக் கொடுத்து விட்டு, அவளது உபயோகத்திற்கான பொருட்கள் சிலவற்றையும் வாங்கித் தந்தார்கள். 


தன் வீட்டாரை விட்டு மூன்று வருடங்கள் பிரிந்து இருக்கப் போகிறோம் என்பதை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தவளது,


மனநிலையைப் புரிந்து கொண்டுத் தங்கையை மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொண்டான் நீரஜ். 


இப்படியாக, ஒருநாள் மாலை,”நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயிட்டு வருவோமா பிரஹா?” என்றார் உமாராணி.


பிரஹாசினி,“போயிட்டு வரலாம் பெரியம்மா” என்று பதிலளிக்கவும், 


இருவரும் தயாராகி விட்டுத் தங்கள் இல்லத்திற்கு அருகிலிருந்த  கோயிலுக்குச் சென்றனர். 


உள்ளே நுழைந்ததுமே, தங்களுடைய அகமும், முகமும் அமைதி அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டுப், 


பிரகாரத்தைச் சுற்றி விட்டு, ஆங்காங்கே இருந்த தெய்வங்களை எல்லாம் வணங்கியவர்கள், அங்கே பிரசித்தி பெற்ற கடவுளாக இருந்த சிவனுக்குத் தீபாராதனை காட்ட ஆரம்பித்தவுடன், தங்களது இரு கரங்களைக் கூப்பிப் பக்தியுடன் வணங்கத் தொடங்கினார்கள் உமாராணி மற்றும் பிரஹாசினி. 


தங்களது மனதில் இருக்கும் வேண்டுதலைக் கண் மூடி கடவுளின் காலடியில் இறக்கி வைத்து விட்டு விழிகளைத் திறந்தவுடன், அவர்களிடம் அர்ச்சகர் தீபாராதனையை நீட்டினார். 


அதில் காணிக்கையைச் செலுத்தி விட்டு, கரத்தால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு, அவர் கொடுத்த திருநீறு மற்றும் குங்குமத்தைப் பெற்றுக் கொண்டனர். 


அதன் பின்னர், மீண்டுமொரு முறை கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தவர்கள், ஒரு இடத்தைப் பார்த்து அமர்ந்து விட்டனர். 


பிரஹாசினியின் நெற்றியைப் பார்த்து விட்டு,”என்னக் குங்குமம் வைக்காமல் வச்சிருக்கிற?” என்று அவளிடம் கேட்க, 


“வச்சிட்டேன்னு நினைச்சேன் பெரியம்மா” என்றவுடன், 


“சரி.இரு” என்றவர், 


தன்னிடமிருந்த குங்குமத்தை விரலில் தொட்டு அவளது நெற்றியில் வைத்து ஊதி விட்டு, 


“மனசுல எதையும் வச்சுக்கிட்டு மருகாதே பிரஹா! ஒரு மூனு வருஷம் பல்லைக் கடிச்சிட்டு ஹாஸ்டலில் படிச்சிட்டு வந்துரு. அதுக்கப்புறம் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்” என்று நம்பிக்கை அளித்தார் உமாராணி. 


அவரை மெல்லிய புன்னகையுடன் ஏறிட்டு,”சரிங்க பெரியம்மா” என்றவளது கையை அழுத்திக் கொடுத்து விட்டு,


“ம்ம். கிளம்பலாம்” என்று அவர்கள் இருவரும் வீட்டிற்குத் திரும்பினர். 


அது நடந்த சில நாட்களிலேயே, பிரஹாசினி கல்லூரி விடுதிக்குச் செல்லப் போகும் நாளும் வந்து விட, 


அதற்கு முந்தைய தின இரவு, அவளைத் தங்களுடன் அமர வைத்து, அவளை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்தனர் மூவரும். 


”உன் மொபைலை எப்பவும் சார்ஜ் போட்டு வச்சுக்கோ! நாங்க அடிக்கடி உனக்குக் கால் செஞ்சு விசாரிப்போம். அதே மாதிரி, உன்னை வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டுப் போவோம். என்னைக்குமே நாங்க உன் கூட இல்லைன்னு ஃபீல் பண்ணவே கூடாது” என்று அவளுக்கு உறுதி அளித்தார் விருச்சிகன். 


அதேபோல்,”அங்கே சாப்பாடு எப்படி இருந்தாலும் முடிஞ்ச அளவு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இல்லைன்னா எங்க கிட்ட சொல்லிரு. வேற ஹாஸ்டலில் இடம் பார்த்துக்கலாம். எவ்வளவு தான், படிக்கிறதுக்கு இருந்தாலும், ரொம்ப நேரம் கண் விழிச்சுப் படிக்காதே. நேரத்துக்குத் தூங்கு” என்று தன் பங்கிற்கு அவளுக்கு அறிவுரைகளை வழங்கினார் உமாராணி. 


நீரஜ்,“எங்கிட்ட பேசினால் நல்லா இருக்கும்னு உனக்கு எண்ணம் வந்தால் உடனே எனக்குக் கால் பண்ணிரு. நான் உனக்காக எப்பவும் அவைலபிள் ஆக இருப்பேன்டா” என்று தங்கையிடம் கூறி விட்டுத், 


தன்னுடைய அறையிலிருந்து ஒரு பெட்டகத்தை எடுத்து வந்தவன் அதிலிருந்த பொருளை வெளியில் எடுத்தான். 


“என்னடா நீ மட்டும் விவரமாகத் தங்கச்சிக்குச் சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கப் போலவே?” என்று அவனிடம் கேட்டுப் புன்னகைத்தார் விருச்சிகன். 


“ஆமாம் ப்பா” என்றவன், 


“உன் இடது கையை நீட்டுப் பிரஹா” எனப் பிரஹாசினியிடம் கூற,


அவனது பரிசுப் பொருளைக் கண்டு வியந்தவளோ,”இதெல்லாம் எதுக்குண்ணா?” என்று அவனிடம் வினவினாள். 


“மூச்! நீ எதுவும் பேசாமல் நான் சொன்னதை செய்” என்று அவளுக்கு உத்தரவிட்டான் நீரஜ். 


உடனே அவன் சொன்னதைச் செய்யவும், தங்கையின் கரத்தில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த கைக் கடிகாரத்தைக் கட்டி விட்டதும், 


உமாராணி,“அவ கைக்குப் பொருத்தமாக இருக்குடா. சூப்பர் செலக்ஷன்” என்று மகனைப் பாராட்டினார். 


தன் கையை அலங்கரித்துக் கொண்டிருந்த அந்தக் கடிகாரத்தைப் பார்த்துப் பூரித்து விட்டு,”ரொம்ப அழகாக இருக்குண்ணா. ஆனால் ரொம்ப விலை அதிகம் போலவேண்ணா?” என்று தமையனிடம் தயக்கத்துடன் கேட்டாள் பிரஹாசினி. 


“அதனால் என்னடா? உனக்கு இப்படி எப்போதாவது தான் என்னால் கிஃப்ட் வாங்கிக் கொடுக்க முடியுது. அதான்” எனக் கூறி அவளைச் சமாதானம் செய்தான் நீரஜ். 


“இதை ஹாஸ்டலில் பத்திரமாக வச்சுக்கோ பிரஹா” என்று அவளுக்கு வலியுறுத்தினார் விருச்சிகன். 


“சரிங்க பெரியப்பா” என்கவும், மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்டு முடித்தனர். 


அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து தயாராகத் தொடங்கி விட்டாள் பிரஹாசினி. 


அவள் குளித்து விட்டு வந்ததும், அவளுக்குப் பிடித்த உணவைப் பரிமாறினார். 


அதை ஆசையாகச் சாப்பிட்டு விட்டுத் தன் குடும்பத்துடன் செல்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் பிரஹாசினி. 


அதற்குப் பிறகு, அவர்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டதும், பிரஹாசினியின் பைகளை எடுத்துக் கொண்டு, அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். 


பேருந்து நிலையத்திற்கு வந்து தங்கள் பயணத்திற்குத் தகுந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். 


தனது கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட பிரஹாசினியைக் கண்டுக் கலக்கம் அடைந்தார் உமாராணி. 


அவளை விடுதியில் சேர்க்கும் முடிவை எடுத்ததில் இருந்து ஒரு மாதிரி இறுக்கமாக காணப்படுகிறாள் என்பதை அவர் அறிந்து கொண்டதில் இருந்தே அவரையும் கூட, வருத்தம் வாட்டி எடுக்கத் தொடங்கி விட்டது. 


“பிரஹா” என்று அவளை மெல்ல அழைத்தார் உமாராணி.


“சொல்லுங்க பெரியம்மா” என்றவளது குரலில் சுரத்தே இல்லை.


“நீ நல்லா தானே இருக்க?” என்று அவளிடம் அக்கறையுடன் கேட்டார். 


“ஏன்? என்னாச்சு பெரியம்மா?” என்று கேட்டவளோ, தன் துக்கத்தைக் குரலில் வெளிப்படுத்தாமல் மறைக்க மிகவும் சிரமப்படுவதைப் புரிந்து கொண்டு, 


“நீ ரொம்ப இறுக்கமாக இருக்கிற மாதிரி தெரியுது. அதான்” என்றார் உமாராணி. 


“முதல் முதல்ல காலேஜ், அப்பறம் ஹாஸ்டலுக்குப் போகப் போறேன்ல பெரியம்மா? அது தான், ஒரு மாதிரி பதட்டமாக இருக்கு. வேற ஒன்னுமில்லை” என்று அவரிடம் சமாளிப்பாக உரைத்தாள் பிரஹாசினி. 


“ஓஹ். நீ எதுக்கும் பதட்டப்படாதே! அங்கே போய் கொஞ்ச நாளிலேயே  எல்லாம் பழகிடும்” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்தார். 


அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவளோ, அதற்குப் பிறகுத் தன்னுடைய முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ளத் தொடங்கினாள் பிரஹாசினி. 


இவர்களது உரையாடலைப் பின் இருக்கையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த இருவரும் கூடத் தாங்கள் ஒருவரையொருவர்  பார்த்து விட்டு,”என்னப்பா இவ இப்படி இருக்கிறா? நாம அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டோமோ?” என்று தன் மகனிடம் கவலையுடன் வினவினார் விருச்சிகன். 


“நான் இதைத் தான் உங்க கிட்டேயும், அம்மா கிட்டேயும் அத்தனை தடவை சொல்லிட்டு இருந்தேன்ப்பா. அதை நீங்க ரெண்டு பேருமே காதிலேயே வாங்கலை. அவ ஹாஸ்டலுக்குப் போகப் போறதை நினைச்சு மனசுக்குள்ளேயே ஃபீல் பண்ணிட்டு வெளியே சாதாரணமாக இருக்கிறது மாதிரி நடிச்சிட்டு இருக்கிறா! அது கூடவா உங்களுக்கும், அம்மாவுக்கும் புரிய மாட்டேங்குது?” என்றான் நீரஜ். 


“எங்களை வேற என்னடா பண்ண சொல்ற? அவ வேற எங்கேயாவது இருந்திருந்தால் கூட நிம்மதியாக இருந்து இருப்பாள் போல! நம்ம வீட்டில் வளர்றப் பாவத்துக்கு இன்னும் என்னென்ன கஷ்டம் எல்லாம் அனுபவிக்கப் போறாளோ? ஆனால், இதைத் தவிர எங்களுக்கு வேற எந்த வழியும் தெரியலைடா! அவ எங்களோட சொந்தப் பொண்ணா இருந்திருந்தால் நல்லா இருப்பாளேன்றதை நினைச்சுத் தினமும் கவலைப்பட்டுட்டு இருக்கேன்! இந்த மூனு வருஷமாவது அவ நிம்மதியாக இருக்கட்டும்!” என்று அவனிடம் தன்னிலை விளக்கம் அளிக்கவும், 


“ம்ஹ்ம். அவளோட கல்யாணத்தையாவது அவளுக்குப் பிடிச்சா மாதிரி நடத்தி வைக்கனும்ப்பா. அப்பவும் நம்ம சொந்தக்காரங்களை நினைச்சுப் பயந்து உடனே மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வச்சிடக் கூடாது!” என்று அழுத்திக் கூறினான் நீரஜ். 


“ஆமாம்டா. அவளோட விருப்பம் தான் பிரதானமாக இருக்கனும்” என்று உறுதியாக கூறினார் விருச்சிகன். 


இதுவரை நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டே இருந்தால் இனி நடக்கப் போவதைப் பற்றி யோசிக்கவே முடியாது என்றுணர்ந்து விட்டு அமைதியாகப் பயணித்தனர் தந்தையும், மகனும்.


அந்தப் பேருந்து ஊரை அடைந்ததும் அதிலிருந்து நால்வரும் இறங்கி விட்டு, 


ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் ஏறிக் கல்லூரிக்குச் சென்றார்கள். 


அங்கே மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் இருந்தாலும் கூட விடுதியில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் வந்து கொண்டு இருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. 


முதலில் அலுவலகத்திற்குச் சென்று விவரத்தைச் சொல்ல வேண்டும் என்பதால், அங்கே பிரஹாசினியைக் கூட்டிச் சென்றார்கள். 


“ஸ்டூடண்ட்டோட கார்டியன் மட்டும் உள்ளே வாங்க” என்றதும், நீரஜ்ஜை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு, மற்ற மூவரும் உள்ளே நுழைந்தனர். 


பிரஹாசினிக்குக் கல்லூரியில் இருக்கும் விதிமுறைகளை விவரித்து விட்டு, விடுதிக்கான முன்பணத்தையும் கட்டிய பிறகு, விடுதிப் பொறுப்பாளரிடம் அனுப்பி வைத்தார்கள் அலுவலக ஊழியர்கள். 


அதன் பிறகு, விடுதி உரிமையாளரோ,”ஒரு ரூமில் மூனு பேர் தங்கப் போறீங்க. என்ன தான், இங்கே அவ்வளவாகத் திருட்டு நடக்கிறது இல்லைன்னாலும் உங்களோட சொந்தப் பொருளை எல்லாம் நீங்க தான் பத்திரமாகப் பாத்துக்கனும். அதே மாதிரி, தேவையில்லாமல் அடிக்கடி வெளியே போயிட்டு வர்றது எல்லாம் வச்சுக்கக் கூடாது. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணவே கூடாது. எந்தெந்த நேரத்துக்கு என்னென்ன செய்யனுமோ, அதையெல்லாம் கண்டிப்பாகப் பண்ணிடனும்! இந்த ரூல்ஸை எல்லாம் மீறாமல் உங்களோட தனிப்பட்ட விஷயத்தைப் பார்த்துக்கோங்க! இங்கே இருக்கிற வரைக்கும் நல்லா என்ஜாய் பண்ணிப் படிங்க. ஆல் தி பெஸ்ட்!” என்று அவளுக்கு அறிவுரைகள் வழங்கி விட்டு, உதவியாளரை அழைத்து, அவளது அறையைக் காண்பிக்கச் சொல்லி அனுப்பினார். 


அது மாணவிகளுக்கான விடுதி என்பதால், தன் மனைவியை மட்டும் அவளுடன் அனுப்பி வைத்தார் விருச்சிகன். அந்த விடுதியின் காட்சியமைப்பை பார்வையிட்டுக் கொண்டவாறே அறைக்குப் போனார்கள் உமாராணி மற்றும் பிரஹாசினி. 


“இந்த ரூம் தான்ங்க” என்றதும், 


அந்த அறையினுள் நுழைந்து தன் உடைமைகளை வைத்து விட்டுத் தனக்கான கட்டிலையும் தேர்ந்து எடுத்தவளிடம், 


“நல்ல விசாலமான ரூம் ஆகத் தான் இருக்குல்ல? உன் கூடத் தங்கப் போற மத்த இரண்டு பேரும் இனிமேல் தான் வருவாங்க போல” என்றார் உமாராணி. 


“ஆமாம் பெரியம்மா” என்றவளின் குரல் உடைந்து இருப்பதை அறிந்து, 


“உன் லக்கேஜ்ஜை வச்சிட்டியா?” என்கவும்,


“வச்சிட்டேன் பெரியம்மா” என்று அவருக்குப் பதிலளித்தாள் பிரஹாசினி. 


“சரி. வா போகலாம்” என்றவர் அவளை அழைத்துக் கொண்டுத் தன் கணவர் மற்றும் மகனிடம் சென்றார்.


விருச்சிகன்,“உனக்குக் கொடுத்து இருக்கிற ரூம் பிடிச்சி இருக்கா பிரஹா?” 


“பிடிச்சிருக்குப் பெரியப்பா” என்றவுடன், 


“அதான் எல்லா ஃபார்மாலிட்டீஸூம் முடிஞ்சுதே? கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம், வாங்க” என்று அவர்களைக் கூட்டிக் கொண்டுப் போனான் நீரஜ். 


உமாராணி,“இங்கே எல்லா ஸ்நாக்ஸூம் இருக்கும் போலவே?” என்று அவ்விடத்தை மெச்சிக் கொண்டார்.


சிலப் பலகாரங்களை வாங்கி உண்டு விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துப் பிரஹாசினிக்குக் கொடுத்து, 


“உன் பேங்க் அக்கவுண்ட்டில் மாசா மாசம் பணம் அனுப்பி விட்றேன்டா. அதுக்கும் மேலே ஏதாவது பணத் தேவை இருந்தால் எங்கிட்ட கண்டிப்பாக கேட்கனும். சரியா?” என்று அறிவுறுத்தினார் விருச்சிகன். 


“ம்ம். சரி பெரியப்பா” எனத் தலை அசைத்தவளது கண்கள் சற்றே கலங்கி விடவும், 


“நீ எதுக்கும் கலங்க கூடாது” என்று நெகிழ்ந்து போய்க் கூறி விட்டு, 


“நாங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு பிரஹா” என்று தங்கையிடம் உரைத்து அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னான் நீரஜ்.


அதன் பிறகு, அவளை அங்கே விட்டு, விட்டுக் கனத்த மனதுடன் அந்தக் கல்லூரியிலிருந்து வெளியேறினார்கள் அவளது குடும்பத்தார். 


நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவளோ, தனக்கு ஒதுக்கிக் கொடுத்த அறையில் சென்று முடங்கிக் கொண்டாள் பிரஹாசினி.


                       - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...