சில வருடங்களுக்கு முன்னர், தனது பன்னிரண்டாம் பொதுத் தேர்வை எழுதி முடித்திருந்த சமயம், அதன் முடிவுகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் பிரஹாசினி.
அப்போது தான், தனது இளங்கலைப் படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருந்தான் நீரஜ்.
அதனால் அவனைப் படிப்பில் கவனத்தை வைக்கச் சொல்லி விட்டுத் தன் பெரியம்மா மற்றும் பெரியப்பாவிற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில், உமாராணியிடம் சமையல் கற்றுக் கொண்டும், விருச்சிகனுடன் தங்களது ஜவுளிக்கடைக்கும் சென்று வந்தாள் பிரஹாசினி.
“என்ன சப்ஜெக்ட் எடுத்துப் படிக்கலாம்னு நினைச்சு இருக்கிற?” என்று அவளிடம் வினவினார் உமாராணி.
“ஃபிஸிக்ஸ் படிக்கலாம்னு இருக்கேன் பெரியம்மா” என்றவளிடம்,
“ஓஹோ. சரி. அதையே படிக்க வச்சிடலாம். மார்க் வரட்டும். உன்னை நீரு படிக்கிற காலேஜிலேயே சேர்த்து விட்றோம். அவன் கூடவே போயிட்டு வந்துரு” என்றவுடன்,
“சரிங்க பெரியம்மா” என்றவளுக்கு தனது விருப்பப் பாடத்தையே படிக்க அவரிடமிருந்து அனுமதி கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உலா வரத் தொடங்கினாள் பிரஹாசினி.
அந்தச் சமயத்தில், அவளது தாய் மற்றும் தந்தை வழிச் சொந்தங்கள் யாராவது வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தார்கள்.
அதை ஆரம்பத்தில் விருச்சிகனும், உமாராணியும் ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டனர்.
ஆனால், நாளாக, நாளாக அவர்களது பேச்சும், செயலும் அவர்களைக் கவனிக்க வைத்தது.
ஏனென்றால், ஒவ்வொரு முறையும் தங்களது வீட்டிற்கு வரும் போதெல்லாம் பிரஹாசினியின் மீது அவர்கள் அன்பைப் பொழிந்தார்கள்.
அது இயல்பான விஷயமாகத் தோன்றவில்லை விருச்சிகன் மற்றும் உமாராணிக்கு.
அதனாலேயே உறவினர்களின் வருகையின் போது அவர்களைக் கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கினர்.
அவர்களின் நடவடிக்கைகளை நீரஜ்ஜூக்கும் கூட விசித்திரமாகத் தோன்றியது.
ஏனெனில், அவர்களில் பலரும் பேசிய விஷயங்கள் யாவும் பிரஹாசினியைப் பற்றியதாகத் தான் இருந்தது.
“பன்னிரெண்டாவது வரைக்கும் படிச்சு முடிச்சிட்ட, இதுக்கப்புறம் என்னப் பண்ணலாம்னு இருக்கிற?” என்று அவளிடம் வினவினார் ஒரு தூரத்த உறவினப் பெண்மணி.
அதற்கு,”மார்க் வந்ததும் காலேஜில் சேரனும் சித்தி” என்றதும்,
விருச்சிகன் மற்றும் உமாராணியிடம்,“ம்ஹ்ம். பன்னிரெண்டாவது வரைக்கும் படிச்சாச்சுல்ல? அதுக்கப்புறமும் பிள்ளையை எதுக்கு மேலே படிக்க வைக்கனும்? வீட்டு வேலையைச் சொல்லிக் கொடுக்கலாம்ல?” என்று கூறியதைக் கேட்ட நீரஜ்ஜும் கூட அதிர்ந்து விழித்தான்.
அதனால்,“என்ன சித்தி இப்படி சொல்றீங்க? அவளுக்கு மேலே படிக்கனும்னு ரொம்ப ஆசை! அதை ஏன் வேண்டாம்னு மறுக்கனும்?” என்று அவரிடம் கேட்க,
“அவளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும். அதுக்காக அதை எல்லாத்தையும் நிறைவேத்த முடியுமா என்ன? பொம்பளைப் பிள்ளையை இப்படி அதிகமாகப் படிக்க வச்சு என்னப் பண்ணப் போறோம்? ஒருத்தன் கையிலே பிடிச்சுக் கொடுத்துட்டு நிம்மதியாக இருக்கலாம்ல? இப்போ எல்லாம் நகை, நட்டோட விலை ஏறிட்டே போகுது! இவளைக் காலா காலத்தில் கட்டிக் கொடுத்துப் புருஷன் வீட்டுக்கு அனுப்புறது தானே வாஸ்தவமாக இருக்கும்? அதை நினைச்சுத் தான் கவலைப்பட்றேன் நீரு” என்று அவனுக்கு விளக்கம் அளித்தார்.
உடனே,“பிரஹா இப்போ தான் பன்னிரெண்டாவதே முடிச்சு இருக்கா வனஜா. உடனே எப்படி மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டிக் கொடுக்க முடியும்? அது சரியாக வராதே!” என்று அவரிடம் தன்மையாகவே விளக்கினார் உமாராணி.
“நானும் இப்போவே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலை அக்கா. ஆனால், இவ படிச்சது போதும்னு என் மருமகள் கல்யாணம் கட்டிப் போகிறதுக்குள்ளே இவளுக்குப் வீட்டு வேலைகளைப் பழக்கி விடலாம்ல?” என்றார்.
“அதுக்கு இப்போ என்ன அவசரம் வனஜா? அவ எல்லாத்தையும் பொறுமையாக கத்துக்கட்டும்” என்று திடமாக உரைத்து விட்டார்.
ஆனாலும் அடங்காமல்,”நான் சொல்ற விஷயத்தோட தீவிரம் உங்களுக்குப் புரியலைன்னு நினைக்கிறேன் அண்ணி. அண்ணன் வரட்டும். அவர்கிட்ட இதைச் சொல்லிப் பார்ப்போம். அவர் புரிஞ்சுப்பார் பாருங்க” என்று திண்ணக்கமாக மொழிந்தார்.
அவரது பேச்சின் தன்மை முதலில் இருந்தே தனக்குப் பிடிக்காமல் போனதால் அங்கே வேண்டா வெறுப்பாகத் தான் அமர்ந்திருந்தாள் பிரஹாசினி.
அவளை விடப் பன்மடங்கு கோபத்தில் இருந்தான் நீரஜ்.
இதற்கு மேலும் அவர் பேசுவதை தங்கை கேட்டுக் கொண்டிருந்தால் அவளுக்கு மனம் விட்டுப் போய் விடும் என்பதை உணர்ந்தவன்,”பிரஹா! நான் சில பொருட்கள் வாங்கனும். உனக்கும் ஏதாவது வாங்க வேண்டியது இருந்தால், நாம ரெண்டு பேரும் கடைக்குப் போயிட்டு வரலாமா?” என்று அவளிடம் கேட்டான்.
அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட உமாராணியோ,”ஆமாம்டா. அவளோட தோடு, பாசி, வளையல் எல்லாம் பழசாகிடுச்சு. புதுசு வாங்கிக் கொடுத்துக் கூட்டிட்டு வா” என்று மகனிடம் பணத்தை தந்து, அவனுடன் பிரஹாசினியைக் கடைத்தெருவிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மதிய உணவு உண்பதற்கு இல்லத்தை அடைந்த விருச்சிகனிடம் தன் வாதத்தை முன் வைத்தார் வனஜா.
”பிரஹாவுக்கு என்னப் பிடிக்குமோ அதைத் தான் செய்யனும்மா. அதை விட்டுட்டு அவளை நம்ம இஷ்டத்துக்கு வளைச்சா அப்பறம் அவளுக்கு எல்லாமே வெறுத்துப் போயிடும். சும்மாவே தன்னோட அப்பா, அம்மாவை நினைச்சு தினமும் அழுதுட்டு இருக்கிறா. அதனால் அவ இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கும்” என அவரும் உறுதியாக கூறி விட்டார்.
அந்தப் பதிலைக் கேட்டுப் பொறுக்க மாட்டாமல் அங்கேயிருந்து வெளியேறி விட்டார் அந்த வனஜா என்னும் பெண்மணி.
அப்போது, தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு பழச்சாறு கடைக்குள் நுழைந்தனர் நீரஜ் மற்றும் பிரஹாசினி.
“நீ என்ன ஜூஸ் குடிக்கிறடா?”
“அன்னாசி ஜூஸ் வேணும்ண்ணா”
அவள் கூறியதையும், தனக்கு ஆரஞ்சு ஜூஸையும் கொண்டு வரச் சொல்லி விட்டு,”அவங்க பேசினதை எல்லாம் ஞாபகத்தில் வச்சிக்கனும்னு அவசியம் இல்லைடா. ஃப்ரீயாக விடு” என்று தங்கைக்கு அறிவுரை வழங்கினான் நீரஜ்.
“சரிண்ணா. முயற்சி பண்றேன்” என்று வெறுமையுடன் கூறினாள் பிரஹாசினி.
“இனிமேல் யாரையும் நம்ம வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிடுவோமா?” என்றதும்,
“அதெல்லாம் வேண்டாம்ண்ணா. என்னால் எந்த சொந்தத்தையும் தள்ளி வைக்கிறதில் எனக்கு விருப்பமில்லை” என மறுத்தாள் இளையவள்.
நீரஜ்,“அப்போ இதுக்கு நீயே ஏதாவது தீர்வு சொல்லேன்” என்றான்.
“நான் பேசாமல் வேற எங்கேயாவது போயிடவா அண்ணா?” என்று வினவிய தங்கையை அதிர்ந்து பார்த்து,
“என்னடா பேசுற நீ?” என்று கேட்க,
அந்தச் சமயத்தில், அவர்கள் கேட்ட பழச்சாறுகள் வந்தது.
“முதல்ல ஜூஸைக் குடி” என்று அவளைப் பருக வைத்து விட்டுத் தானும் குடித்து முடித்தவன்,
“இப்போ சொல்லு. கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அப்படி உளறின?” என்றான் நீரஜ்.
“உளறல் இல்லைண்ணா. உண்மையாகத் தான் சொல்றேன்” என்றவளிடம்,
“இதை அப்பாவும், அம்மாவும் கேட்டால் எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு உனக்கே தெரியும் தான?” என்று வருத்தத்துடன் வினவினான்.
அதற்கு அவளிடம் பதிலில்லை. எனவே அவனைச் சங்கடத்துடன் ஏறிட்டாள் பிரஹாசினி.
“அவங்களுக்காக நீ இப்படி ஒரு பெரிய முடிவு எல்லாம் எடுக்கத் தேவையில்லைடா. அப்பா, அம்மா கிட்டே இதைப் பத்திப் பேசலாம். அவங்கப் பார்த்துப்பாங்க. இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதே!” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான் நீரஜ்.
அவனது முன்னேற்பாட்டால் தங்கையின் அந்தப் பயத்தை அவனால் தற்காலிகமாகத் தான் போக்க முடிந்தது.
எதிர்காலத்திலும் கூட ரமணி அத்தையின் மூலமாகவும் பிரஹாசினிக்கு இன்னல் வரக் கூடும் என்பதை முன்னரே அறிந்திருந்தால் இதற்கு நிரந்தர தீர்வை யோசித்துச் செயலாற்றி இருப்பான்.
இதே சமயம், அந்தக் கருத்தை யாராலும் விருச்சிகன் வீட்டாரின் மனதில் ஆழமாக விதைக்க முடியவில்லை.
ஏனெனில், பிரஹாசினியின் பெரியப்பா குடும்பமோ, அவளது விருப்பத்திற்குத் தடை விதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறத் தயாராகவில்லை.
அதுவே அவர்களது உறவினர்களுக்கு இரத்த அழுத்தத்தை வரவழைத்தது.
“இவங்க எல்லாரும் ஏன் இப்படி பண்றாங்கன்னு புரியவே மாட்டேங்குது உமா. தம்பியும், அவன் மனைவியும் உயிரோட இருந்த வரைக்கும் எவ்வளவு நல்லவிதமாக நடந்துக்குவாங்கள்ல? இப்போ ஏன் இந்த மாதிரி பேச்சு எல்லாம் பேசிட்டு இருக்காங்க”என்று கூறி வருத்தப்பட்டார் விருச்சிகன்.
“வனஜாவுக்கு மட்டும் இல்லைங்க. பிரஹாவோட படிப்பை நிறுத்துற விஷயத்தில் நம்ம சொந்தக்காரங்க எல்லாருமே தீவிரமாகத் தான் இருக்காங்க!” என்றார் அவரது மனைவி.
“என்னம்மா சொல்ற?” என்றவரிடம்,
“ஆமாங்க. அவங்களுக்கு நம்மப் பணத்து மேலே தான் கண்ணு. நீரு பிறந்தப்போ கூட வந்து உறவாடிட்டுப் போனாங்களே? அதுக்கப்புறம் நம்ம ஜவுளிக்கடை வியாபாரம் கொஞ்சம் டல் அடிச்சதும் இந்தப் பக்கம் வர்றதைக் குறைச்சிட்டாங்க. இப்போ நம்ம கிட்டே தாராளமாகப் பணம் புழங்க ஆரம்பிச்சதும் மறுபடியும் வந்து ஒட்டிக்கிட்டாங்க! இதையே தான், உங்க தம்பி உயிரோட இருந்த அப்பவும் செஞ்சிட்டு இருந்தாங்க!” என்று அவருக்கு விளக்கம் அளிக்க,
“இதையெல்லாம் கவனிக்காமல் இருந்துட்டேனே! அவங்களோட பாசத்தை உண்மைன்னு நம்பிட்டேனேம்மா!” என்று கூறி வருந்தினார் விருச்சிகன்.
“சரி விடுங்க. இப்போதாவது அவங்களைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டீங்களே! அது போதும். அந்த வனஜா பேசப், பேச நம்ம பிரஹா முகத்தில் எவ்வளவு பீதி இருந்துச்சு தெரியுமா? பிள்ளை ரொம்ப அரண்டு போயிட்டா! இனிமேல் அவங்க யாருமே நம்ம வீட்டுக்கு வராத மாதிரி ஏதாவது பண்ணனும்ங்க” என்று தீவிரமாக கூறினார் உமாராணி.
“அது எப்படிம்மா முடியும்?”
“நாம நினைச்சா முடியும்ங்க. அவங்களில் யாராவது வர்றப்போ எல்லாம் பிரஹா ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்றா! இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்!”
“அப்படியே சொன்னாலும் அவங்க கேட்பாங்களா? இங்கே வரத் தானே செய்வாங்க. ஏன்னா பிரஹாசினி நம்ம சொந்தப் பொண்ணு இல்லையேம்மா?”
“அந்த ஒரு விஷயத்தால் தான் நம்மால் எதுவுமே செய்ய முடியலை. அதே மாதிரி, அவளைப் பார்க்க வர்ற சாக்கில் நம்மளைப் பார்த்தும் வயிறு எரியுறாங்க வேற!” என்ற மனைவியிடம்,
“பிரஹாவோட பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வரட்டும்மா. அது மூலமாக இதுக்குக் கண்டிப்பாக ஒரு முடிவு கிடைக்கும்!” என்று உறுதியாக கூறினார் விருச்சிகன்.
தன்னிடம் பிரஹாசினி கூறி வருந்திய விஷயத்தை தன் பெற்றோரிடம் ஒப்புவித்தான் நீரஜ்.
அதைக் கேட்ட விருச்சிகனும், உமாராணியும் அதற்கு மேல் தாமதிக்காமல் பிரஹாசினியின் பன்னிரண்டாம் பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் அவளது மனதிற்கு இதமளிக்கும் விதமான தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.
அதை அவளிடமும் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். அந்த தீர்வு தான் திவ்யன் மற்றும் பிரஹாசினியின் காதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது எனலாம்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக