ஆனாலும்,”அதான் எல்லாமே சொல்லிட்டாங்களே? அப்பறம் எதுக்கு எனக்குக் கால் பண்ணி டைம் வேஸ்ட் செஞ்சிட்டு இருக்கிற?” என்று நக்கலாக வினவினான்.
சபரீஷ்,“ஹான்! அவங்களை நீங்க அவமானப்படுத்தி அனுப்பி வச்சதுக்கு நியாயம் கேட்க கால் பண்ணேன்!” என்றதும்,
“அவங்களை நாங்க அவமானப்படுத்தி அனுப்பினோம்னு கூசாமல் சொல்றியே? அன்னைக்கு எங்கப் பிரஹாசினியை அவங்க பேசின பேச்சுக்கு எல்லாம் நாங்களும் நியாயம் கேட்கலாம் தானே? உங்கம்மா என்ன எங்க அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் கூடப் பிறந்த தங்கச்சியா? இல்லையே, தூரத்து சொந்தம் தானே? அப்படியிருக்கும் போது எந்த உரிமையில் அவளைப் பொண்ணுக் கேட்டு வந்தாங்க? அதே மாதிரி அவங்களை நாங்க ஒன்னும் வரச் சொல்லையே? நீ விஷயத்தைச் சொல்லிக் கேட்கும் போதே நான் மறுத்துப் பேசிட்டேன் தான? அப்பறமும் அவங்களை அனுப்பி வச்சிருக்கிற? பண்றதை எல்லாம் நீயும், உன் அம்மாவும் பண்ணிட்டு எங்களைப் பேசுவீங்களா? இதுக்கு என்னப் பதில் சொல்லப் போற?” என்று தன் மனதில் தோன்றிய அனைத்து ஆதங்கத்தையும் கேள்விக் கணைகளாகத் தொடுக்க,
அதையெல்லாம் கேட்டவனோ, மறுமொழி கூறாமல் அமைதியாக இருக்கவும்,”இப்போ பேசுடா! என்ன சைலண்ட் ஆகிட்ட?” என்றான் நீரஜ்.
அதில் கோபம் பொங்க,”நான் ஒன்னும் சைலண்ட் ஆகலை. என்ன தான் தூரத்து சொந்தம்னாலும் பிரஹாசினியைப் பொண்ணுக் கேட்க எங்க அம்மாவுக்கும், அவளைக் கட்டிக்க எனக்கும் உரிமை இருக்கு தானே? அதை மாத்த முடியாதே! யார் கிட்டே வேணும்னாலும் போய்க் கேட்டுப் பாரு” என்று எகத்தாளமாகப் பதிலளித்தான் சபரீஷ்.
“என்ன ரெண்டு பேரும் சும்மா, சும்மா உரிமைப் பாட்டைப் பாடிட்டு இருக்கீங்க! அவளோட அப்பா, அம்மா இறந்தப்போ எங்கே போச்சு இந்த உரிமைப் பேச்சு? அப்போ வந்து அவளைக் கூட்டிட்டுப் போய் வளர்த்து இருக்க வேண்டியது தானே? இல்லைன்னா, எங்க மருமகளுக்கு நாங்களும் செலவு செய்வோம்னு உரிமையாக பிரஹாசினிக்கு ஆகிற செலவை எல்லாம் பார்த்திருக்கனும்! இப்படி எதுவுமே செய்யாமல் அவளை வளர்த்து ஆளாக்கினதுக்கு அப்பறம் வந்துட்டு அம்மாவும், பையனும் ரொம்ப அலப்பறை பண்றது சரியில்லை!” என்று மூச்சு வாங்கப் பேசி விட்டு ஓய்ந்து போக,
“வேற என்னப் பண்ணனும்? ஆமா நான் தெரியாமல் தான் கேட்கிறேன், எனக்கு என்னக் குறைச்சல்ன்னு பிரஹாசினியைக் கட்டிக் கொடுக்க மாட்டேங்குறீங்க? அதுக்கான காரணம் எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்?” என்று கடுப்புடன் கேட்கவும்,
“உனக்குன்னு இல்லடா, சொந்தத்திலேயே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சி இருக்கோம். அதனால் தான், உங்கம்மா கிட்டே முடியாதுன்னு சொன்னோம். இப்போதாவது நான் சொல்றது உனக்குப் புரியுதா, இல்லையாடா?” என்றான் நீரஜ்.
சபரீஷ்,“புரியுதுடா. அதைத் தான் ஏன்னுக் கேட்கிறேன்? அப்படி நாங்க உங்களை என்னப் பண்ணிட்டோம்? எங்க சகவாசமே வேண்டாம்னு இருக்கீங்க?”
“அது அப்படித் தான்! அவளைக் கண்டுக்காத யாரும் அவளுக்குத் தேவையில்லை. பிரஹாசினிக்கு என்ன நல்லது செய்யனும்னு எங்களுக்குத் தெரியும். இனிமேல் நீயோ, உன் அம்மாவோ இதைப் பத்திப் பேசுறேன்னு எங்க வீட்டுக்கு வந்துடாதீங்க! அவ்வளவு தான் சொல்லுவேன்” என அவனுக்கு வலியுறுத்த,
“ஓஹ்! சொந்தக்காரங்களை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அப்படி அவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையைத் தேடிப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்கன்னு நாங்களும் பார்க்கிறோம்!” என்று அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தான் சபரீஷ்.
அதை அறிந்து கொண்டவனோ, தன் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்ததைப் போன்ற பாவனையுடன் தந்தையிடம் செல்ல,
அதைக் கண்டு கொண்டு,“என்னடா அவன் ரொம்ப பேசிட்டானா?” என்று மகனிடம் ஆதூரமாக வினவினார் விருச்சிகன்.
“ஆமாம்ப்பா” என்றவன், சபரீஷ் கூறியவற்றை எல்லாம் அவரிடம் தெரிவித்தான் நீரஜ்.
“அவங்க எல்லாம் நம்ம கிட்டே இருக்கிற பணத்தோட மதிப்பை வச்சு தான் சொந்தம் கொண்டாட வருவாங்கடா. மத்தபடி, நாம கஷ்டப்படும் போது கண்ணை இறுக்கமாக மூடிட்டு இருப்பாங்க” என்றதும்,
“ம்ம். நாம என்னமோ அவனோட அம்மாவை வரவழைச்சு வேணும்னே அசிங்கப்படுத்தி அனுப்பினா மாதிரியே பேசினான்ப்பா”என்று கூறிச் சலித்துக் கொண்டான்.
“அவங்க நினைச்சது நடக்கலைன்னா அப்படித் தான் பேசுவாங்க. அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாளில் நம்ம சொந்தக்காரங்க எல்லார் கிட்டேயும் இதைச் சொல்லி அவங்களையும் நமக்கு எதிராக திருப்பி விட்ருவாங்க. இதெல்லாம் காலம் காலமாக நடக்கிறது தானே? பிரஹாசினியோட அண்ணனாக அவளுக்கு ஏத்துக்கிட்டுப் பேசின பாரு அது போதும். இதைப் பிரஹாசினிக்குத் தெரியாத நேரம் உங்கம்மா கிட்டே சொல்லிரு”என்றவர்,
அங்கே கடையில் எடுபிடி வேலை செய்யும் பையனை அழைத்து மகனுக்குக் குடிக்கப் பழச்சாறு வாங்கி வரச் சொல்லி அனுப்பி விட்டு,
“இப்போ ஜூஸ் வாங்கிட்டு வருவாங்க. அதைக் குடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வா” என அவனுக்கு அறிவுறுத்தி விட்டுக் கல்லாவைக் கவனிக்கப் போய் விட்டார் விருச்சிகன்.
அதேபோல், மதிய உணவை உண்ண வீட்டிற்குச் சென்ற நீரஜ்,”பிரஹா எங்கேம்மா?”எனத் தாயிடம் கேட்டான்.
உமாராணி,“அவ ஃப்ரண்ட் கூட போன் பேசிட்டு இருக்கிறாடா”என்று கூறி விட்டு அவனுக்கு உணவைப் பரிமாறவும்,
“சபரீஷ் மறுபடியும் எனக்குக் கால் செஞ்சு பேசினான்ம்மா” என்றவுடன்,
“அவனுக்கும், அவங்க அம்மாவுக்கும் வேற வேலையே இல்லையா? என்னடா சொன்னான்?” என்று கேட்டார் அவனது அன்னை.
“வழக்கம் போலத் தான்! அம்மாவுக்கு நியாயம் கேட்டான்” என்று முழு உரையாடலையும் அவரிடம் விவரித்தான் நீரஜ்.
“க்கும்! இவளை அவங்க வீட்டுக்கு மருமகளாக அனுப்பிட்டுத் தான் மறு வேலை பார்ப்போம். பாரு! இதுக்கப்புறமும் நாம அமைதியாக இருந்தோம்ன்னு வச்சுக்கோயேன், அவளுக்கு முறை இருக்கிற எல்லாரும் வந்து பொண்ணுக் கேட்க ஆரம்பிச்சுருவாங்க. அதனால், உங்க அப்பா கிட்ட பேசிட்டுப் பிரஹாவோட ஜாதகத்தைப் புரோக்கர் கிட்டே கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லிட வேண்டியது தான்” என்று ஒரு முடிவுடன் கூறினார் உமாராணி.
இந்த இறுதி வாக்கியத்தைத் தன் தோழியிடம் செல்பேசியில் உரையாடி விட்டு வந்த பிரஹாசினியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
அதைக் கேட்டவுடன், சத்தமில்லாமல் தன் அறைக்குள் போய் முடங்கி விட்டாள்.
இதை எண்ணித் தான், இவ்வளவு வருடங்களாக மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் பிரஹாசினி.
இப்போது தன்னவனைப் பற்றித் தன் வீட்டினரிடம் தெரிவிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தவள், அதை வெளிப்படுத்தினால் அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நினைத்தாலே அவளது மனம் கனத்துப் போய் விட்டது.
ஆனாலும், அவனைப் பற்றிச் சொல்லித் தானே ஆக வேண்டும்? இல்லையென்றால், தனது இத்தனை வருடத் தவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி என்றெண்ணியவள், கூடிய விரைவில் அனைவரிடமும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவள், அதற்கான சந்தர்ப்பத்திற்காகத் காத்திருக்கலானாள் பிரஹாசினி.
அதே சமயம், அன்று மாலையில், தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்தனர் ரஞ்சித் மற்றும் ஆரவி.
“சம்பந்திங்களுக்குக் கொடுத்து விட்றதுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வச்சோமே. அதை எடுத்துக்கிட்டீங்களா?” என்று அவர்களிடம் வினவினார் சோமசுந்தரி.
“எடுத்தாச்சும்மா” என்றவளிடம் கண்ணைக் காட்டினான் ரஞ்சித்.
அதைப் புரிந்து கொண்டவள், சற்று தள்ளி நின்றிருந்த திவ்யனை,”அண்ணா”என்றழைத்தாள் ஆரவி.
அதில் திகைத்துப் போனவனோ, அவளிடம் சென்று,”என்னடா ஆரு?” எனக் கனிவுடன் கேட்டான்.
“அந்தப் பிரஹாசினியைப் பத்தி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், அவங்க நமக்குப் பக்கத்து ஊர்ன்னு மட்டும் தான் எனக்குத் தெரியும்” என்றவள்,
அதன் பெயரைச் சொல்லி விட்டு,”அவங்க எங்க காலேஜ் ஹாஸ்டலில் தான் தங்கிப் படிச்சாங்க. ஆனாலும், நான் அவங்க கூடப் பேச டிரை பண்ணியது இல்லைன்னு உங்ககிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். அதனால், மத்த விவரங்களை எல்லாம் நான் ஊருக்குப் போன உடனே என்னோட ஃப்ரண்ட்ஸ்கிட்டயோ, என் கூட கான்டாக்ட்ல இருக்கிற சீனியர்ஸ் யார் கிட்டேயாவது கேட்டுச் சொல்றேன்” என்று அவனிடம் கூறியவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டவன்,
“அவளைப் பத்தி உங்கிட்ட கேட்டா நீ திட்டுவன்னு தான் அமைதியாக இருந்தேன். ஆனால் நீயே இப்போ என்கிட்ட இதையெல்லாம் சொல்லும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு! தேங்க்ஸ் டா” என்று தங்கைக்கு நன்றி கூறினான் திவ்யன்.
“அதை உங்க மாப்பிள்ளைக்குச் சொல்லுங்க” என்று கூறி நொடித்துக் கொண்டாள் ஆரவி.
“அப்படியா மாப்பிள்ளை?” என்றவனிடம்,
“ஆமாம் திவ்யன்” எனப் பதிலளித்தான் ரஞ்சித்.
“தாங்க்யூ சோ மச்!” என்று அவனைக் கட்டிக் கொண்டான் ஆரவியின் தமையன்.
“பரவாயில்லைங்க. நீங்க எங்க வீட்டுக்கு வரும் போது அவங்களையும் கூட்டிட்டு வரனும். சரியா?”என்றவனை முறைத்துப் பார்த்தாள் அவனது மனைவி.
“ஹா ஹா, சரி மாப்பிள்ளை. உங்க பொண்டாட்டி நம்மளை முறைச்சுப் பார்க்கிறா!”என்று கூறி அவனுக்குப் பீதியைக் கிளப்பி விட,
அதைக் கேட்டதும் உஷாராகி,”ஹி ஹி, எல்லாரோட சம்மதத்தோட அழைச்சிட்டு வாங்க” என்று மொழிந்து விட்டு ஆரவியைப் பார்த்து அசடு வழிந்தான் ரஞ்சித்.
“உங்க நடிப்பைப் பார்க்க சகிக்கலைங்க”என அவனிடம் கோபத்துடன் உரைத்தாள் மனைவி.
“சரிம்மா, நீ டென்ஷன் ஆகாதே!” என்றான்.
சற்று முன் வரை இறுக்கமாக இருந்த தங்கள் மகனும், மகளும் இப்போது இயல்பாகப் பேசிச் சிரிப்பதைக் கண்டவுடன் தான் மகுடபதி மற்றும் சோமசுந்தரிக்கும் மனதில் பாரம் குறைந்தது.
அதற்குப் பிறகு தங்கள் கால்களில் விழுந்து எழுந்த ரஞ்சித் மற்றும் ஆரவியை ஆசீர்வதித்து,நெற்றியில் திருநீறு பூசி விட்டார்கள்.
“நான் போய் ஆட்டோவைக் கூட்டிட்டு வர்றேன். அதில் ஏறிப் பஸ் ஸ்டாண்ட்டுக்குப் போயிடுங்க”என்று கூறித் தன் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான் திவ்யன்.
“என்னடி நேத்து வரைக்கும் ‘லபோ, திபோன்னு’ கத்திட்டு இப்போ என்னடான்னா அவளைப் பத்தி நீயே விவரம் கேட்டுச் சொல்றேன்ற? உனக்கு என்னாச்சு?” என்று மகளிடம் கேட்டார் சோமசுந்தரி.
அதற்கு,”இப்போ என்னால் எதுவும் சொல்ல முடியாதும்மா. எல்லாத்துக்கும் காரணம் உங்க மாப்பிள்ளை தான். மிச்சத்தை ஊருக்குப் போய் ஃபோன் பண்ணி சொல்றேன்” என்றுரைத்தாள் ஆரவி.
“சரிடி” என்றார் அவளது அன்னை.
சில நிமிடங்களில் தங்கையையும், வீட்டிற்கு வந்த திவ்யன்,”ஆட்டோ வந்தாச்சு ஆரு” என்றவுடன்,
“நாங்க போயிட்டு வர்றோம்” என்று விடைபெற்றுக் கொண்டு ஆட்டோவில் ஏறிப் பேருந்து நிலையத்திற்குப் பயணம் செய்தனர் ஆரவி மற்றும் ரஞ்சித்.
அவர்கள் சென்றதும்,“திவு! உன் தங்கச்சி சொன்னதைக் கேட்ட தான? அந்தப் பொண்ணைச் சீக்கிரம் தேடிக் கண்டுபிடி” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் மகுடபதி.
“சரிங்க அப்பா” என்றவனோ, தன்னறைக்குப் போய்க் கட்டிலில் குப்புற விழுந்து,
தன்னவளைத் தேடும் பணியை மும்முரமாகச் செய்வதற்குத் தயாராகி விட்டுப், பிரஹாசினியைத் தன் மனம் கவர்ந்தவளாகத் தேர்ந்தெடுக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான் திவ்யன்.
ஆனால், மனதளவில் அவனவளாக எப்போதோ வாழ ஆரம்பித்து இருந்த பிரஹாசினியோ, தன் பெரியப்பா மற்றும் பெரியம்மாவும் தனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதை எண்ணி வலியைச் சுமந்தவளுக்குத் தற்போது அவர்களது காதல் கதை தான் மருந்திடப் போகிறது!
அடுத்த அத்தியாயத்தில் இருந்து, திவ்யன் மற்றும் பிரஹாசினியும் ஆத்மார்த்தமான காதலில் விழுந்த தருணங்களைப் படிக்கத் தயாராகுங்கள்!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக