முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவியம் 9

 


விருச்சிகன் கடைக்குக் கிளம்பிச் சென்றதும், 


தன் அறைக்குச் செல்ல யத்தனித்தவளிடம்,”இங்கே வந்து உட்கார்ந்து என் கூடப் பேசு மருமகளே! நான் வந்ததில் இருந்து நீ எங்கிட்ட ஒத்த வார்த்தைக் கூடப் பேசலையே?” என்று கூறித் தன்னருகில் அழைத்தார் ரமணி. 


அதற்கு மதிப்பு அளித்து, அவரிடம் சென்றவளின் கரங்களை வாஞ்சையுடன் பிடித்துக் கொண்டு,”நான் எவ்வளவு மாசம் கழிச்சு உன்னைப் பார்க்கிறேன் தெரியும் தானே? எனக்கும் உன் கூடப் பேசனும்னு ஆசை இருக்காதா? அதான், உன்னை அப்படி அதட்டிட்டேன். மனசில் எதுவும் வச்சிக்காதேடா!” எனத் தன்மையாக கூறவும், 


“நான் எதுவும் நினைக்கலை அத்தை” என்று கூறி அவரை ஆறுதல்படுத்தினாள் பிரஹாசினி. 


“சரி. நீ மேக்கப் போட்டு விட்றியே, அதில் எம்புட்டுப் பணம் வரும்?” என்று கேட்டவுடன், அவளுக்குத் ‘திக்கென்று’ ஆகி விட்டது. 


இதை இவர் எதற்காக கேட்கிறார்? என்று குழம்பினாள் பிரஹாசினி. 


ஆனால், இவர்களது சம்பாஷணைக் கேட்டுக் கொண்டே செல்பேசியில் கவனம் செலுத்தியிருந்த நீரஜ் மற்றும் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்த உமாராணிக்கு, ரமணியின்  கேள்வியில் மறைந்திருந்த நோக்கம் என்னவென்று இன்னும் விளங்காமல் இருக்குமா? 


இதற்குப் பிரஹாசினி என்னப் பதில் சொல்லப் போகிறாள் என்று தன் காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருந்தார்கள். 


“நான் ரொம்ப பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிடையாது அத்தை. அதனால், ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை தான் எனக்கு வேலை இருக்கும். அப்படி இருக்கிறப்போ அதில் எனக்கு எவ்வளவு பணம் கிடைச்சிடும் சொல்லுங்க? கம்மி தான்” என்றவளைக் கண்களில் அதிர்ச்சியைத் தேக்கிக் கொண்டு நோக்கினார் ரமணி. 


இந்தப் பதிலை அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை இவள் பொய் சொல்லுகிறாளோ என்று பிரஹாசினியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். ஆனால், அவரது பார்வையை அசராமல் எதிர் கொண்டவளைக் கண்டு அவருக்குத் தலை சுற்றியது. 


அப்படியென்றால், அவளிடம் பணம் தேறாது என்பது புரிந்து போனது அவருக்கு. 


பிரஹாசினியின் வாக்குமூலத்தைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார் எனில், உமாராணியும், நீரஜ்ஜூம் மிகவும் நிம்மதி அடைந்தனர். 


இனிமேல் அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன்,”சைவ சாப்பாட்டில் உனக்கு என்னப் பிடிக்கும் ரமணி?”என்றார் உமாராணி. 


தன் வெறுப்பை மறைத்துக் கொண்டு,”இப்போ உங்க கையால் எனக்கு அசைவம் சாப்பிட ஆசையாக இருக்கு அண்ணி? மட்டன் சமைக்கிறீங்களா?” என்க, 


காலை உணவின் போது தான், தன்னால் முன்பை போல் அசைவம் உண்ண முடியவில்லை என்று விருச்சிகனிடம் உரைத்து விட்டு இப்போது இப்படி கேட்கிறாரே! என்று வியப்புடன் பார்த்தார்கள் மற்ற மூவரும். 


“என்னண்ணி அப்படி பார்க்கிறீங்க? ஒரு நாள் நான்வெஜ் சாப்பிட்டால் ஒன்னும் ஆகிடாதே! அதான் கேட்டேன்!” என்றார் ரமணி. 


“அதுவும் சரி தான். அதையே சமைச்சுத் தர்றேன்” என்று அவரிடம் கூறி விட்டு நீரஜ்ஜிடம்,”நீ போய் மட்டன் வாங்கிட்டு வா. வந்து பணம் வாங்கிக்கோ” என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் உமாராணி. 


“என்னம்மா அத்தை தான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க. இப்போ என்னடான்னா இப்படி கேட்கிறாங்க?” 


“பிரஹாகிட்டே பணத்தைப் பத்திக் கேட்டால்ல? அதுக்கு வந்த பதிலால் ஏமாற்றம் அடைஞ்சிட்டா. அதைச் சமப்படுத்திக்கத் தான் இப்படி பண்றா” என்று தன் நாத்தனாரைப் பற்றிய நூறு சதவீத உண்மைக் கணிப்பைச் சொன்னார் அவனது தாய். 


“ஓஹோ, இதுக்கப்புறமும் அவங்க நம்மப் பிரஹாவைப் பொண்ணு கேட்பாங்களாம்மா?” 


“உன் அத்தைக் கண்டிப்பாக கேட்பாள். ஏன்னா, அந்த ஒரு விஷயம் மட்டும் தான் அவளுக்கு ஏமாற்றம். மத்த நிறைய நன்மைகள் இருக்கே! அதனால், அவ நினைச்சதை சாதிக்கனும்ற முடிவிலிருந்து மாற மாட்டா!” எனப் பதிலளித்தவர்,


“ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சிக்கன் வாங்கிக்கோ. மசாலா பாக்கெட் எல்லாம் இருக்கு. காய்கறியும் தேவைப்படாது. இந்தா பணம். போயிட்டு வாடா” என்று அவனைக் கடைக்கு அனுப்பி வைத்து விட்டு, 


“மட்டன் கிரேவி, சிக்கன் வறுவல் செய்றேன். ரசமும் வைக்கிறேன் ரமணி” என்று அறிவித்தார் உமாராணி. 


ரமணி,“சரிங்க அண்ணி. சமையலை முடிச்சிட்டுக் கூப்பிடுங்க. பஸ்ஸில் வந்தது அலுப்பாக இருக்கு. அதனால், நான் கொஞ்சம் உறங்கி எழும்புறேன்” 


“அந்த ரூமுக்குப் போய்த் தூங்கு ரமணி” என அவரைத் தன் மகனின் அறைக்கு அனுப்பி விட்டுப், 


பிரஹாசினியிடம்,”இப்படித் தான் நறுக்குனுப் பதில் பேசனும். சரியா?” என்று அவளுக்குப் புத்தி சொன்னார் உமாராணி. 


“சரிங்க பெரியம்மா”


“அசைவம் சமைக்கனும். அதுக்கு எனக்கு உதவி செய்வ தானே?” 


“அப்போ வந்து காய்கறியை வெட்டிக் கொடு” என அவளைத் தன்னுடன் கூட்டிச் சென்றார். 


கடையில் வாங்கிய பொருட்களுடன்  வீட்டிற்கு வந்த நீரஜ்ஜூம், அவர்களுடன் இணைந்து கொண்டதால், மதியச் சமையல் வேலைச் சீக்கிரமாகவே முடிந்தது. 


அதுவரையில், ரமணி கண் விழிக்கவில்லை. அதுவும் நல்லது தான் என்று தன் கணவருக்குச் செல்பேசியில் அழைத்து, தங்கையின் பேச்சைப் பற்றி அவரிடம் விவரித்தார் உமாராணி.


அதைக் கேட்ட விருச்சிகனோ,”அப்போ பிரஹாசினியைத் தன் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காமல் ஓய மாட்டா போலவே?” என்றார். 


“ஆமாம்ங்க. எனக்கும், நீரஜ்ஜுக்கும் அதான் தோனுச்சு” என்றதும், 


“சாயந்தரம் அவ பேசும் போது நம்மளோட மறுப்பைக் கறாராகச் சொல்லிட்றேன். பிரஹாவுக்கும் இஷ்டம் இல்லைன்னும் போது அவளை வற்புறுத்தி எதுவும் பண்ண முடியாது” என்று அவருக்குத் தைரியம் சொன்னார். 


உமாராணி,“மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவீங்களா?”


“இல்லைம்மா. வேலை இருக்கு. யாரையாவது பையனை அனுப்பி விட்றேன். கொடுத்து விடு” என்று கூறி விட்டு அழைப்பை வைத்தார் விருச்சிகன். 


சிறிது நேரத்திலேயே, தங்கள் கடையிலிருந்து வந்த பையனிடம்,  அவருக்கான உணவைக் கொடுத்து அனுப்பினார் உமாராணி. 


இதே சமயம், தலைதீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே வீட்டிற்கு வந்து அழைத்துப் போவதாக தன் வீட்டினர் கேட்டுக் கொண்டதை தன்னுடைய கணவன் ரஞ்சித்திடம் கைப்பேசி அழைப்பில் பகிர்ந்து கொண்டாள் ஆரவி.


“ஆஃபீஸில் கேட்டுட்டுச் சொல்றேன்ம்மா” என்றவனை அவள் ஏக்கத்துடன் பார்க்கவும், 


“கண்டிப்பாக கிடைச்சிடும்” என அவளுக்கு உறுதி அளித்தான். 


“ஓகேங்க” 


அப்போதே தன்னுடைய மேலதிகாரியிடம் மூன்று நாட்கள் விடுப்பு தருமாறு விண்ணப்பித்தான் ரஞ்சித். 


அவரும் அவனது கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டார். அதைத் தன் மனைவிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பவும், 


‘சூப்பர்ங்க. லவ் யூ!’என்று அனுப்பித் தன் மகிழ்ச்சியை அவனிடம் வெளிப்படுத்தி விட்டு அதைத் தன் மாமனார், மாமியாரிடமும் பகிர்ந்து கொள்ள, 


அவர்களும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் சம்மதித்து விட்டனர். எனவே, அவ்விடயத்தைத் தனது தாயிடம் தெரிவித்து விட்டாள் ஆரவி. 


தன் நாத்தனார் இருந்த அறைக்குப் போய்,”ரமணி! சாப்பாடு ரெடிம்மா” என அவரை எழுப்பினார் உமாராணி. 


“ஹாங்! நீங்க போங்க அண்ணி. நான் வர்றேன்” என்று தன் முகத்தைக் கழுவி விட்டுச் சாப்பிட அமர்ந்தவருடன் சேர்ந்து, மற்ற மூவரும் உணவருந்தினர். 


பிரஹாசினிக்கு அவ்வளவாக சம்பாத்தியம் இல்லை என்பதைக் கேட்ட பின் எழுந்த ஆத்திரத்தை தணிக்கத் தான், வேண்டுமென்றே, அசைவ உணவைச் செய்யச் சொல்லிக் கேட்டார். அதனால், அதை நன்றாக ருசித்து உண்டு முடித்து, 


“அண்ணனுக்கு சாப்பாடு அனுப்பியாச்சா அண்ணி?” என விசாரித்தார் ரமணி. 


“அனுப்பியாச்சும்மா” என்றார் உமாராணி. 


அதற்குப் பிறகுத் தொலைக்காட்சிப் பெட்டியில் கவனம் செலுத்தினார். 


மாலையில் வீடு திரும்பி விட்டுத், தன் மனைவி தந்த தேநீரைப் பருகிக் கொண்டே,”நீ என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னியே ரமணி? என்ன விஷயம்?” என்றார் விருச்சிகன்.


“நான் என்னப் புது விஷயத்தையாகப் பேசிடப் போறேன் அண்ணா? எல்லாம் என் பையன் சபரீஷைப் பத்தியும், பிரஹாவைப் பத்தியும் தான் பேசனும்” என்று தொடங்கவும், உமாராணி, நீரஜ் மற்றும் பிரஹாசினியும் பிரசன்னம் ஆனார்கள். 


விருச்சிகன்,“ஓஹோ, அதைத் தான் என்னன்னுக் கேட்டேன்” 


“சபரீஷ் ஏற்கனவே அதைப் பத்தி நீருகிட்டே பேசி இருந்தான் அண்ணா. உங்களுக்குத் தெரியாதா?” என்றார் ரமணி.


“தெரியும். அப்போவே அவன் கிட்டே வேண்டாம்னு நீரஜ் சொல்லிட்டானே. அது உனக்குத் தெரியாதாம்மா?” எனக் கேட்டதும், கோபத்தில் சிவந்த முகத்தை மறைக்காமல், 


“எனக்குத் தெரியும்ண்ணா. நான் உங்ககிட்ட வந்து நேராகச் சொல்லிப் புரிய வைக்கலாம்ன்னு வந்தேன்” 


“அப்படியா? என்ன சொல்லிப் புரிய வைக்கப் போற?” என்று பேசப் பேச மற்ற மூவருக்கும் ஆசுவாசமாக இருந்தது. 


“அவனுக்கு என்னக் குறைண்ணா? நம்மப் பிரஹாவுக்குப் பொறுத்தமானவன். தாய், தகப்பன் இல்லாத பொண்ணு. வெளியே எங்கேயும் கட்டிக் கொடுத்து வெசனப்பட்றதுக்கு என் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வச்சீங்கன்னா நான் என் கண்ணைப் போல கவனிச்சிக்க மாட்டேனா?” என்று விளக்கினார் ரமணி. 


“இதுக்கு உன்னோட அபிப்பிராயம் என்னம்மா?” எனத் தன் மனைவியிடம் வினவினார் விருச்சிகன். 


“எனக்கு சொந்தத்தில் அவளைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லைங்க. ஆனால், இதில் நான் என்ன சொல்ல முடியும்? பிரஹாவோட முடிவு தானே எல்லாம்? அவ கிட்டே கேளுங்க” என்ற உமாராணியை உறுத்து விழித்தார் ரமணி. 


“நீயே பேசிடு பிரஹா. அப்போ தான் இந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” எனத் தங்கைக்கு அறிவுறுத்தினான் நீரஜ். 


உடனே பிரஹாசினியிடம் போய்,”மருமகளே! சபரீஷைக் கல்யாணம் செய்துக்கோம்மா. நான் உன்னை ஒரு வேலைக் கூடப் பார்க்க விட மாட்டேன்! பொத்தி வைச்சுப் பார்த்துப்பேன்!” என்று அவர் கூறிய மாய்மால வார்த்தைகளைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தான் நீரஜ். 


அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், பிரஹாசினியை மூளைச்சலவை செய்யும் வேலையைத் தீவிரமாகச் செய்தார் ரமணி. 


ஆனால் அவளோ,”இல்லைத்தை. எனக்குச் சபரீஷைக் கட்டிக்க விருப்பம் இல்லை” என்று அவரிடம் நேரடியாகத் தன் மறுப்பைச் சொல்லி விட, 


அதில் அதிர்ந்தவரோ, உடனேயே,”அப்போ இளையவனைக் கட்டிக்கோ” என்றவரை ஆயாசமாகப் பார்த்தனர் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ். 


“எனக்கு உங்க வீட்டுக்கு மருமகளாக வரனும்ன்ற எண்ணமே கிடையாது அத்தை. எனக்கும் அந்நியத்தில் கல்யாணம் செய்துக்கனும்னு தான் விருப்பம்” என்றவளிடம், 


“இவங்க தான், உன்னைப் பார்த்துக்கறாங்கன்னு அவங்க சொல்றதுக்கு நீயும் கட்டுப்பட்டு இப்படி பேசுறியா?” என்று தன் அண்ணன் குடும்பத்தைக் காட்டிக் கேட்டார் ரமணி. 


“நான் அப்படிக் கட்டுப்படனும்னு அவங்க நினைச்சிருந்தா என்னை இப்படி பேச விட்டிருக்க மாட்டாங்க அத்தை. என்கிட்ட அபிப்பிராயமே கேட்காமல் அவங்களே உங்க கிட்ட பேசி இருப்பாங்க! அவங்க என் உணர்வுகளுக்கும், விருப்பத்துக்கும் மதிப்புக் கொடுத்ததால் தான் என்னோட முடிவை உங்க கிட்ட தயங்காமல் சொல்ல முடிஞ்சிது!” என்று புன்னகையுடன் உரைத்தாள் பிரஹாசினி. 


“மூனு பேரும் சேர்ந்து உன் மண்டையை நல்லா கழுவி இருக்காங்களே!” என்று வெளிப்படையாகவே விஷத்தைக் கக்கவும், 


“அப்படியெல்லாம் இல்லைத்தை. என்னோட குடும்பம், எனக்குச் சுயமாக சிந்திக்கிற சுதந்திரத்தைக் கொடுத்து இருக்காங்க” என்றவளை நெகிழ்வுடன் பார்த்தனர் விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ்.


ரமணி,“என் பையனோட வேலை, சம்பளத்தைப் பத்தி உனக்குத் தெரியும் தானே?” 


பிரஹாசினி,“நல்லா தெரியும் அத்தை. ஆனால், எனக்கு அவரைக் கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லை” என்று இரண்டாவது தடவையாகத் தன் மறுப்பை உறுதியாக உரைத்தவளைச் சினம் பொங்க வெறித்தவர்,


“அன்னக்காவடிக்கு எவ்வளவு திமிர்ப் பேச்சுப் பாரு? உனக்கு ஓசியில் சோத்தைப் போட்டவங்களுக்குத் தானே நீ விசுவாசமாக இருந்தாகனும்! அதை நல்லா பண்ற!” என்றவரது அமில வார்த்தைகள் அவளது இதயத்தைக் குத்திக் கிழித்தது. 


ஆனால்,”வார்த்தையை அளந்து பேசுங்க அத்தை” என்று வெகுண்டு எழுந்த தங்கையிடம் சென்று அவளுக்கு ஆதரவாக நின்று கொண்டான் நீரஜ். 


விருச்சிகன்,“அவளோட முடிவை அவளே சொல்லட்டும்ன்னு நாங்க அமைதியாக இருந்தா நீ வாய்க்கு வந்தபடி பேசுற! நீ கேட்டதுக்குப் பதில் கிடைச்சிருச்சு தானே? அதுக்கப்புறம் எங்க வீட்டுப் பொண்ணைப் பத்திப் பேச உனக்கு உரிமையில்லை” என்று கடுமையாகச் சாடவும், 


“உங்க வீட்டுப் பொண்ணா? அவ எனக்கும் அண்ணன் பொண்ணு தான்! நான் அவளுக்கு அத்தை முறை! அப்போ அவளைப் பேச எனக்கு உரிமை இருக்கு!” என்று கத்தினார் ரமணி. 


“அப்படியே பேச உரிமை இருந்தாலும் அவளை இந்த மாதிரிப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை! இவளுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நாங்க ஒரு வார்த்தைக் கூட அப்படி பேசியதில்லை! அதை முதல்ல தெரிஞ்சுக்கோ!” என்றார் உமாராணி. 


“சொந்த பிள்ளைகளையே சுமையாக நினைக்கிற இந்தக் காலத்தில் இவளை எங்கப் பொண்ணு மாதிரி வளர்க்கிறோம்ன்னு சொன்னால் நான் நம்பிடுவேனா? எல்லாம் இவ சம்பாதிக்கிறப் பணத்துக்காகத் தானே?” என்றவரிடம், 


விருச்சிகன்,“உன் புத்தி அப்படித் தான் யோசிக்கும். அதுக்கு நாங்க பொறுப்பு இல்லை” 


“என் பணத்தை அவங்க வாங்கினதே இல்லைத்தை. அதை என் செலவுக்குத் தான் நான் உபயோகிப்பேன்!” என்றவளை ஏளனமாகப் பார்த்து விட்டு, 


“அதைப் பத்தி எனக்கு என்னக் கவலை? என் மகனைக் கட்டிக்க மாட்டேன்னு சொன்னவ கிட்டே இனிமேல் எனக்கு என்னப் பேச்சு! நான் கிளம்புறேன்” எனக் கூறித் தன் பையை எடுத்துக் கொண்டு வெளியேறியவரை யாரும் கிஞ்சித்தும் மதித்து வழியனுப்பவில்லை. 


அவர் சென்றதும், பிரஹாசினிக்குத் தண்ணீர் கொணர்ந்து வந்து தந்தார் உமாராணி.


அதைக் குடித்தவள், விருச்சிகனிடம் போய் அவரின் தோள்களில் சாய்ந்து கொண்டு கதறினாள்.


“பிரஹாம்மா! நீ எப்பவுமே எங்க வீட்டுப் பொண்ணு தான்டா! அவ பேசியதை எல்லாம் புத்திக்கு ஏத்திக்காதே!” எனக் கூறி அவளைத் தேற்றினார் அவளது பெரியப்பா. 


“ஆமாம்டி! உனக்கு நாங்க இருக்கோம். கலங்காதே” என்று ஆறுதல் அளித்தார் உமாராணி.


அதேபோல்,”நான் சபரீஷூக்குக் கால் செஞ்சி அத்தையை அடக்கி வைக்கச் சொல்றேன்!” என்ற தமையனிடம், 


“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ண்ணா. அவங்க அப்படி பேசவும் தானே என் மேல் வச்சிருக்கிற பாசத்தைப் பெரியப்பா வெளிப்படையாக காமிச்சார்! எனக்கு அது போதும்” என்கவும், 


“எனக்கு மட்டுமில்லை எங்க மூனு பேருக்கும் உன் மேல் அளவு கடந்த பாசம் இருக்கும்மா” என்பதைக் கேட்டதும், ஆனந்தத்துடன் புன்னகைத்தாள் பிரஹாசினி. 


“நல்லவேளை அத்தை என்னை பஸ் ஸ்டாண்ட்டில் டிராப் பண்ணக் கூப்பிடலை. அவங்களே கோபத்தில் கிளம்பிப் போய்ட்டாங்க. நீ இப்போவே கிளம்பி வா, நம்மக் கடைக்குப் போய்த்  தீபாவளி டிரெஸ் எடுத்துட்டு வருவோம்” என்று குதூகலித்தான் நீரஜ். 


அதுவும் நல்ல ஐடியா தான் என்று மூவரும் தயாராகித் தங்களது கடைக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு உடைகளை எடுத்துக் கொண்டு வந்தார்கள். 


அதே சமயம், தன் மகனிடமும், கணவரிடமும், ஆரவியின் பேசியதைக் கூறி,”நாளைக்கே போய் அவளையும், மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைச்சிட்டு வருவோமா?”என்றார் சோமசுந்தரி. 


திவ்யன்,“சரிங்கம்மா. தட்டில் வைக்கப் பூ, பழம், வெத்தலை எல்லாம் போகிற வழியில் வாங்கிக்கலாமா?” 


“வாங்கிக்கலாம்டா” என்றவுடன், அவர்கள் மூவரும் மறுநாள் காலையில் ஆரவியின் புகுந்த வீட்டிற்குச் சென்றனர்.


                       - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...