முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவியம் 7

 


பேருந்திலிருந்து இறங்கித் தன் அண்ணன் நீரஜ்ஜூடன் வீடு போய்ச் சேர்ந்தாள் பிரஹாசினி. 


அவர்களின் வருகையை அறிந்ததுமே வீட்டிற்கு வந்து விட்டிருந்த உமாராணியோ, தன் கைப்பேசியை எடுத்துக் கணவனுக்கு அழைத்து இருவரும் வீடு திரும்பியதை அவருக்குத் தெரிவித்து விட்டு வந்தவர், 


“டீ குடிக்கிறீங்களா? இல்லை, சாப்பாடே சமைச்சிடவா?” என்று அவர்கள் பசியோடு இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் கேட்டார். 


“நான் அங்கேயே குடிச்சிட்டேன் பெரியம்மா. அண்ணாவுக்கு மட்டும் கொடுங்க” என்றவுடன்,


“ஆமாம்மா கொண்டு வாங்க. எனக்குத் தலை ரொம்ப வலிக்குது” என்றான் நீரஜ். 


“சரி” என்றவர், அடுக்களைக்குப் போய் விட, 


“நான் ரூமில் இருக்கேன் பிரஹா. அம்மா டீ கொண்டு வந்ததும், அங்கே எடுத்துட்டு வர்றியா?” என்று அவளிடம் வினவினான் தமையன். 


“ஓகேண்ணா” என்கவும்,


அங்கேயிருந்து எழுந்து தன்னறைக்குப் போய் விட்டான் நீரஜ். 


சிறிது நேரம் கழித்து, சமையலறையில் இருந்து தேநீருடன் வெளிப்பட்டு,”அவன் எங்கே?” என்று மகனைத் தேடினார் உமாராணி. 


பிரஹாசினி,“அண்ணா ரூமில் இருக்கார் பெரியம்மா. என்னை டீயைக் கொண்டு வர சொன்னாங்க” 


“கொண்டு போ” என்றதும்,


அந்த தேநீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு தமையனின் அறைக்கு வெளியே நின்று,”அண்ணா! டீ கொண்டு வந்திருக்கேன்” என்று அவனுக்கு அறிவித்தாள். 


“உள்ளே வாம்மா” என்று தனக்கு அனுமதி கிடைத்தவுடன்


கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், அங்கே கட்டிலில் அமர்ந்திருந்தவனிடம்,”இந்தாங்க அண்ணா” என்று தம்ளரை நீட்ட அதைப் பெற்றுக் கொண்டான் நீரஜ். 


“நீங்க டீ குடிச்சிட்டுத் தூங்குங்க. நைட் சாப்பாடு ரெடி ஆனதும் வந்து எழுப்புறேன்” என்றாள் பிரஹாசினி. 


“சரிடா” எனக் கூறி அவளை அனுப்பி வைத்தான் தமையன். 


உமாராணி,“நாளைக்கு மதியம் நாம ரெண்டு பேரும் நம்மக் கடைக்குப் போய்த் துணி எடுத்துட்டு வருவோமா பிரஹா? அப்படியே உன் பெரியப்பாவுக்கும், அண்ணாவுக்கும் டிரெஸ் எடுத்துடுவோம்” 


“சரிங்க பெரியம்மா” என்றாள். 


தன் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான சமிக்ஞை ஒலி கேட்டதும் அதை எடுத்தப் பார்த்தவள், அதில் அன்று காலை தான் மணப்பெண் அலங்காரம் செய்து விட்ட பெண்ணிடம் இருந்து அதற்கான பணம் வந்திருந்ததை அறிந்ததும், 


உடனே,’பணம் வந்துடுச்சு மேம்’ என்று அந்தப் பெண் யாழினிக்குத் தகவல் தெரிவித்தாள் பிரஹாசினி. 


“காலையில் மேக்கப் போட்டு விட்டேன்ல பெரியம்மா? அவங்க பாக்கிப் பணத்தையும் அனுப்பிட்டாங்க. இதோ!” என அவரிடம் செல்பேசியைக் காட்டினாள். 


உமாராணி,“ஓஹோ! சூப்பர். இதைச் செலவு பண்ணாதே! எதுவாக இருந்தாலும் எங்ககிட்டே கேளு” என்று அவளுக்கு அறிவுறுத்தினார். 


அதற்குச் சம்மதித்தவள், தன் பையை எடுத்துக் கொண்டு தனது அறைக்குப் போனாள் பிரஹாசினி. 


பையிலிருந்த பொருட்களை எடுத்து அலமாரியில் அடுக்க ஆரம்பித்தவள், அலங்காரப் பொருட்களை மட்டும் அதற்குரிய தனி இடத்தில் வைத்தாள். 


இரவு உணவைத் தயாரிக்கும் நேரத்தில் மட்டும் போய்ப் பெரியம்மாவிற்கு உதவி செய்தால் போதும் என்று நினைத்தவள், அங்கேயே இருந்து ஓய்வெடுக்கத் தொடங்கினாள் பிரஹாசினி. 


அந்த வருடம் பிறந்த போது வாங்கிய நாட்குறிப்பைத் தூசி தட்டி எடுத்தவளோ, அதில் அன்றைய தினத் தாளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டுப் பேனாவையும் கைப்பற்றினாள்.


இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நாட்குறிப்பை எழுதப் போகிறாள், அதுவும் என்ன எழுதப் போகிறாள்? என்று அந்த முழு வெள்ளைத்தாளும் அவளை ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் பிரஹாசினிக்குத் தோன்றியது. 


அதில் தன்னுடைய கையிலிருந்த பேனாவைக் கொண்டு, 


‘இன்றைய நாளின் தொடக்கத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் ஒன்று நிகழ்ந்துள்ளது! அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை! ஆனாலும், அதன் அதிர்வு எனக்குள் ஒரு இன்ப அலையைத் தோற்றுவித்துள்ளது. அந்த அலையின் தாக்கம் எனக்குள் எப்போதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்! இந்த நாட்குறிப்பில் நான் எழுதிய ஒரே குறிப்பு இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்! இந்த நாளின் இனிமை எப்போதும் மனதில் நீங்காமல் தித்திக்கட்டும்!’ என்று நிறுத்தி நிதானமாக எழுதி முடித்தாள் பிரஹாசினி. 


ஒவ்வொரு வருடமும் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நாட்குறிப்பு ஒன்றை வாங்கித் தருவார் விருச்சிகன். 


தனக்குக் கிடைக்கும் நாட்குறிப்பை எப்போதும் உபயோகிக்கவே மாட்டாள் பிரஹாசினி. 


திவ்யனைச் சந்தித்து வந்த பின்னர் தான், அந்த இனிமையான தருணத்தை அடைகாத்து வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணி தான் நாட்குறிப்பில் எழுதி வைத்தாள். 


அதைப் பத்திரமாக ஒளித்தும் வைத்துக் கொண்டவள், 


அதன் பின், இரவு உணவைத் தயாரிக்க உமாராணிக்கு உதவி செய்தவள்,  அன்றிரவு வீட்டிற்கு வந்த தன் பெரியப்பாவிடம், அனைத்தையும் விவரித்து முடித்தாள் பிரஹாசினி. 


“நீ போன காரியம் நல்லபடியாக முடிஞ்சுப் பத்திரமாக வந்ததே போதும்மா” என்றவரிடம், 


தாங்கள் இருவரும் மறுநாள் மதியம் கடைக்கு வருவதாக அவரிடம் தெரிவிக்கவும்,”ஆமாம். கடையில் கூட்டம் தள்ளிச் சாயுது! நீங்க சீக்கிரம் வந்து துணி எடுத்துட்டுப் போங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் விருச்சிகன். 


இங்கோ, அவளைப் போலவே, குதூகலத்துடன் சுற்றிக் கொண்டு இருந்த மற்றுமொரு ஜீவன் திவ்யன் தான்! 


என்ன தான், சில நிமிடங்கள் மட்டுமே இருவரும் பார்த்துக் கொண்டாலும், அது தனக்கு மறு ஜென்மம் வரைத் தாங்கும் என்ற மகிழ்வுடன் வளைய வந்தான். 


மாலை வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மகனைக் கூரிய பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தார் சோமசுந்தரி.


ஏற்கனவே அவன் போட்ட வெடியைப் பற்றிய முழுத் தகவலே இன்னும் தங்களுக்குத் தெரியவில்லை எனும் போது இப்போது அவனுடைய குதூகலத்திற்கான காரணத்தைக் கேட்டால் இன்னும் வார்த்தைகளால் சுற்றி விட்டுச் சென்று விடுவான் என்பதை அறிந்து தான் அமைதியாக அவனைக் கவனித்துக் கொண்டு இருந்தார் அவனது அன்னை.


“என்னடா உன் காலு தரையிலேயே பட மாட்டேங்குது? என்ன விஷயம்?” என்று மகனிடம் கேட்ட தன் கணவரை நன்றியுடன் பார்த்தார் சோமசுந்தரி.


தந்தையின் வினாவைக் கேட்டதும்,”இன்னைக்கு ஒரு சூப்பரான விஷயம் நடந்துச்சு அப்பா!” என்று அவரிடம் புன்னகை முகமாகப் பதிலளித்தான் திவ்யன். 


அந்தப் பதிலைக் கேட்ட மகுடபதி,”அப்படி என்னடா நடந்துச்சு? ஆஃபீஸிலா? இல்லை, வெளியிலேயா?” என்று அவனிடம் வினவ,


எதையோ ஆர்வமாகச் சொல்ல வந்தவனோ, சட்டென்று சுதாரித்துக் கொண்டு,”ஆஃபீஸில் தான்ப்பா” என்றவுடன், 


“என்னாச்சு?” என்று கேட்டார் அவனது தந்தை. 


“இன்னைக்கு புரொடெக்ஷன்ஸ் செக் பண்ண வந்தாங்கப்பா. எப்பவும் கொஞ்ச பேர் தான் வருவாங்க. இப்போ நிறைய பேர் வரவும், அவங்க கிட்ட நான் தான் எல்லாத்தையும் விரிவாகச் சொன்னேன். எல்லாம் முடிஞ்சு போகும் போது என்னைத் தனியாக கூப்பிட்டுப் பாராட்டிட்டுப் போனாங்க!” என்று அவரிடம் விவரித்தான் திவ்யன். 


“அப்படியா? இது உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம் தான்! என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள்டா!” என்று மகனுக்கு வாழ்த்து தெரிவிக்க,


அவருடன் சேர்ந்து கொண்டு,”வாழ்த்துகள்டா திவு!” என்று கூறினார் சோமசுந்தரி.


அவர்களுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்து விட்டு,”ஆரவியோட வீட்டுக்குத் தீபாவளிக்கு முந்தைய நாள் தான் போகனுமா? அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போய் அவங்களைக் கூட்டிட்டு வரக் கூடாதா?” என்று தாயிடம் வினவினான் திவ்யன். 


“போகலாம்டா. ஆனால் மாப்பிள்ளைக்கு லீவ் கிடைக்கனுமே? உன் தங்கச்சி எப்போடா இங்கே வருவோம்ன்னு ஆசையாகத் தான் இருக்காள். ஆனால், மாப்பிள்ளைக்கு என்னச் சூழ்நிலைன்னுத் தெரியாமல் போக முடியாது இல்லையா?” என்றார்.


“நீங்க ஆரவிகிட்டே கேட்டுப் பாருங்கம்மா. ரஞ்சித்துக்கு லீவ் இருந்தால் நாளைக்குக் கூடப் போயிட்டு வரலாம்” என்று அவரிடம் சொன்னான் மகன்.


“சரிடா. அவகிட்டே கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டார் சோமசுந்தரி. 


அதிகாலையில் தன் பெரியம்மாவிற்கு முன்னதாகவே புத்துணர்வுடன் எழுந்து குளித்து உடை மாற்றி விட்டு வந்தாள் பிரஹாசினி. 


அதன் பின்னர் தான், தானும் எழுந்து தன்னைச் சுத்தம் செய்து கொண்டு அறையிலிருந்து வந்த உமாராணியோ, 


அவளைப் பார்த்ததும்,”என்னடி இவ்வளவு சீக்கிரமாக எழுந்து குளிச்சிட்ட?” என்று ஆச்சரியமாக கேட்கவும், 


“என்னன்னு தெரியலை பெரியம்மா. எனக்கு முழிப்பு வந்துடுச்சு. அப்பறம் எதுக்குச் சும்மா படுத்து இருக்கனும்னு குளிச்சிட்டே வந்துட்டேன்!”என்றாள் பிரஹாசினி. 


“சரி. நீ எனக்கும், உனக்கும் போட்டு வை. நான் போய்க் குளிச்சிட்டு வந்துட்றேன்” என்று அவளிடம் சொல்லி விட்டுப் போனார் உமாராணி. 


பாலைக் காய்ச்சி அதில் தேநீரைத் தயாரித்துப் பெரியம்மாவின் வரவிற்காக காத்திருக்கலானாள்.


பதினைந்து நிமிடங்கள் கழித்து, அவர் வந்ததும்,”இந்தாங்க பெரியம்மா” என்று அவரிடம் கோப்பையை நீட்டினாள் பிரஹாசினி. 


அதை அவர் வாங்கப் போகும் நேரத்தில்,”உமா! உன் பையனை உடனே எழுப்பு” என்று அவரிடம் வந்தார் விருச்சிகன். 


உறங்கி எழுந்து அப்படியே வந்த கணவரின் கூற்றைக் கேட்டுத் திடுக்கிட்ட அவரது மனைவியோ,”ஏங்க? அவனை எதுக்கு இப்போ எழுப்பச் சொல்றீங்க?” என்க,


“நீ அவனை எழுப்பிக் கூட்டிட்டு வா. நான் என்னன்னு சொல்றேன்” என்று கூறி மனைவியை அனுப்பி வைத்தார் விருச்சிகன். 


அவர்களது சம்பாஷணைகளைக் கேட்டுத் தன் கையிலிருந்த கோப்பைகளை அடுக்களையில் வைத்து விட்டு வந்தாள் பிரஹாசினி. 


மகனின் அறைக்குச் சென்று,”டேய் நீரஜ்! எழுந்திருடா” என்று அவனை உசுப்பினார் உமாராணி. 


“ம்மா! தூக்கம் வருது!” என்றவனைப் பலமாகத் தட்டி எழுப்பவும், 


“உங்க அப்பா உன்னைக் கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு. வாடா” என அவனைக் கட்டிலில் இருந்து இறங்க வைத்துக் கணவனிடம் அழைத்துப் போனார். 


“உங்க ரமணி அத்தை இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம ஊர் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்துருவாங்களாம். நீ வண்டியை எடுத்துட்டுப் போய் அவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று நீரஜ்ஜிடம் கட்டளையிட்டார் விருச்சிகன். 


அதைக் கேட்ட மற்ற மூவரும் வாயடைத்துப் போய் விட்டனர். 


“அத்தை உண்மையிலேயே வீட்டுக்கு வரப் போறாங்களாப்பா?” என்று வினவ, 


“ஆமாம்டா. நீ போய்த் தயாராகிட்டு வா” என்று அவனை அனுப்பினார் விருச்சிகன். 


அந்தச் செய்தியைக் கேட்டுப் பிரஹாசினியின் முகத்தைப் பார்த்த உமாராணியோ, அவளது இருண்ட வதனத்தைக் காண சகியாமல், 


“அவ இங்கே வர்றதாக உங்க கிட்ட எப்போ சொன்னா?” என்று கணவனிடம் விசாரித்தார். 


“இப்போ தான் எனக்கு ஃபோன் பண்ணி சொன்னா. நேத்தே சொல்லி இருந்தால் கூடப் பரவாயில்லை” என்றார் விருச்சிகன். 


“என்ன விஷயமாக வர்றாளாம்?” 


“தெரியலை உமா. அவ வந்தால் தான் தெரியும்” என்று கூறி விட்டுத் தானும் தயாராகிச் சென்று விட, 


பிரஹாசினி,“என்னப் பெரியம்மா இவங்க இப்படி பண்றாங்க? இவங்களை யார் வரச் சொன்னா? நாம மதியம் கடைக்குப் போய்த் துணி எடுக்கனும்னு பேசிக்கிட்டோம்ல? அவங்க வந்ததுக்கு அப்பறம் எப்படி போக முடியும்?” என்று அவரிடம் படபடத்தாள். 


“நீ துணி எடுக்கிறதைப் பத்தி நினைச்சு எல்லாம் கவலைப்பட்டு இப்படி பேசலைன்னு எனக்குத் தெரியும்டி! நீ பயந்து சாகுற விஷயத்துக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டிடுவோம்! என்னை மேல் நம்பிக்கையை வச்சிட்டு நீ ஓரமாக நின்னு வேடிக்கைப் பாரு!” என்று அவளுக்குத் தைரியம் சொன்னார் உமாராணி. 


“சரிங்க பெரியம்மா” என்றாள் பிரஹாசினி. 


“அம்மா! நான் போய் அத்தையை அழைச்சிட்டு வர்றேன்” என்று தாயிடம் அறிவித்து விட்டுத் தன் இரு சக்கர வாகனத்தில் ஏறிக் கிளம்பி பேருந்து நிலையத்திற்குப் போய் விட்டான் நீரஜ். 


அப்போது, விருச்சிகனும் குளித்து விட்டு வர,”பிரஹா! நீ அப்போவே டீ போட்டுக் கொண்டு வந்தியே? போய்க் குடிச்சிட்டு இரும்மா. ரமணி வந்ததும் உன்னைக் கூப்பிட்றோம்” என்று அவளைச் சமையலறைக்கு அனுப்பி வைத்தார் விருச்சிகன். 


சில மணித்துளிகள் கடந்த பின்பு, நீரஜ்ஜின் வண்டி அவர்களது வீட்டு வாயிலில் வந்து நின்றது.


                         - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...