தன்னுடைய பெரியம்மா உமாராணிக்கு அழைத்து,”ஹலோ பெரியம்மா” என்றவுடன்,
“ஹலோ பிரஹா!” என்று பேசியவரிடம்,
“நீங்க நம்மக் கடைக்குப் போகலையா பெரியம்மா?” என்று விசாரித்தாள் பிரஹாசினி.
“இனிமேல் தான் கிளம்பனும். இப்போ தான், உன் பெரியப்பாவையும், அண்ணனையும் வேலைக்கு அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழிச்சிக் கிளம்பிப் போகனும்டி” என்று அவளுக்குப் பதிலளித்தார் உமாராணி.
“ஓஹ், சரி பெரியம்மா” என்றவளிடம்,
“உன்னோட பியூட்டீஷியன் வேலை முடிஞ்சிதா?” என்று கேட்கவும்,
“முடிஞ்சிது பெரியம்மா. காலையில் சீக்கிரமே எழுந்து போய் மேக்கப் போட்டு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் முன்னாடி தான் வீட்டுக்கு வந்தேன்” என்றாள் பிரஹாசினி.
உமாராணி,“சரி. மீதிப் பணம் கொடுத்துட்டாங்களா?”
பிரஹாசினி,“இன்னும் இல்லை பெரியம்மா. நைட்டுக்குள்ளே அனுப்பி விடச் சொல்லி இருக்கேன். அதே மாதிரி, நான் அவங்களுக்கு மெஹந்தி போட்டு விடலை. அதனால், அதுக்கான பணத்தைக் குறைச்சிட்டுத் தான் மீதியை அனுப்புவாங்க” என்றதும்,
“ஏன் மெஹந்தி போட்டு விடலை?” என்றதற்கு,
“அவங்களோட நலங்கு ஃபங்க்ஷன் சிம்பிளாக முடிச்சிட்டாங்களாம். அன்னைக்கு மெஹந்தி போடனும்னு தான் நினைச்சாங்களாம். ஆனால் அது முடியாமல் போயிடுச்சாம். அதனால் தான் என்னையும் கல்யாணம் நடக்கிற அன்னைக்குக் காலையில் வரச் சொல்லி இருக்காங்க பெரியம்மா” என அவருக்கு விளக்கம் அளித்தாள்.
“சரி. நீ உன்னோட உழைப்புக்கானப் பணத்தைக் கரெக்டா வாங்கிக்கிட்டா சரி தான்” என்றவர்,
“சாப்பிட்டியா?” என்று அவளிடம் வினவினார் உமாராணி.
“அங்கேயே சாப்பிட்டு வந்துட்டேன் பெரியம்மா. நீங்க சாப்பிட்டீங்களா?” என்றாள் பிரஹாசினி.
“நான் அவங்க கூட சேர்ந்து சாப்பிட்டுட்டேன். நீ சாயந்தரம் எத்தனை மணிக்குக் கிளம்புற?”
“நாலு மணிக்குக் கிளம்பினா சரியாக இருக்குமா பெரியம்மா?” என்று கேட்டாள்.
“ம்ம். சரியாக இருக்கும். அப்போ நீரஜ்ஜை எத்தனை மணிக்கு அனுப்பி வைக்கனும்?”
“அண்ணாவுக்கு வேலை முடியவே லேட் ஆகிடுமே பெரியம்மா. நானே பஸ் ஏறி வந்துடவா?” என்று அவரிடம் வினவினாள் பிரஹாசினி.
“அவன் மதியமே பர்மிஷன் போட்டுட்டு வருவான்டி. நீ அதைப் பத்தி யோசிக்காதே!” என்க,
“ஓகே பெரியம்மா. அப்போ அண்ணாவை அங்கேயிருந்து ரெண்டு மணிக்குப் பஸ் ஏறச் சொல்லுங்க” என்றவுடன்,
“ம்ம்… சரி. நான் நீரஜ்ஜூக்குக் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுக் கடைக்குக் கிளம்புறேன்” என்று அவளிடம் கூறி விட்டு அழைப்பை வைத்தவர்,
தனது மகனுக்கு அழைத்துப் பிரஹாசினியை ஊருக்கு அழைத்து வருவதற்குப் பேருந்து ஏற வேண்டிய நேரத்தை அவனிடம் கூறி அதை மறக்கக் கூடாதென்ற அறிவுரையையும் வழங்கி விட்டுக் கடைக்குச் சென்றார் உமாராணி.
இங்கே, தன் பெரியம்மாவிடம் செல்லில் உரையாடி விட்டு வந்தவளோ, தன்னுடைய தோழி இன்னும் தன்னை கவனித்துக் கொண்டு இருக்கிறாளா? என்று மெல்லத் தன்னுடைய கருவிழிகளைச் சுழற்றி ஆராய்ந்தாள் பிரஹாசினி.
ஆனால் வினோதாவோ, அவளது தாயுடன் சேர்ந்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருக்கவே பெருமூச்சு விட்டுக் கொண்டவளோ, தான் ஊருக்குச் செல்லப் போகும் நேரத்தையும், தன்னை அழைத்துப் போக தன் அண்ணன் பேருந்து நிலையத்தை அடையும் நேரத்தை அவர்கள் இருவரிடமும் அறிவித்தாள் பிரஹாசினி.
“அதுக்குள்ளே ஊருக்குப் போகிறதைப் பத்திப் பேசியாச்சா? நாங்க உன்னை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போகலாம்ன்னுத் திட்டம் போட்டு வச்சிருந்தோம். ஏன்ம்மா வந்தவுடனேயே கிளம்புற?” என அவளிடம் தன் மனத்தாங்கலைக் கூறினார் குறிஞ்சி.
“ஆமா பிரஹா. அதுவும் சாயந்தரமே பஸ் ஏறப் போறேன்னு சொல்ற!” என்று தானும் அவளிடம் வீஞ்சிக் கொண்டாள் வினோதா.
“சாரிடி” என்று தோழியிடம் கூறியவள்,
குறிஞ்சியிடம்,“எனக்கும் இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போகலாம்ன்னு தான் ஆசைம்மா. ஆனால், நாங்க யாரும் இன்னும் தீபாவளிக்குத் துணி எடுக்கலை. அதான், என்னைப் பெரியம்மா உடனே வரச் சொல்லிட்டாங்க” என்று சொல்லி அவருக்குப் புரிய வைத்தாள் பிரஹாசினி.
“அப்படியா சரிம்மா? ஆனால் இன்னொரு தடவை வரும் போது கண்டிப்பாக ரெண்டு, மூனு நாள் தங்கிட்டுத் தான் போகனும்” என்றதும்,
“கண்டிப்பாகத் தங்குவேன்ம்மா” என அவருக்கு உறுதி அளித்தவுடன்,
குறிஞ்சி,“உனக்குப் பிடிச்ச சாப்பாட்டைச் சமைக்கிறேன். நல்லா சாப்பிடனும்” என்று கூறிச் செல்ல,
“சாப்பிட்டு முடிச்சதும், உனக்கு மெஹந்திப் போட்டு விடவா?” எனத் தோழியிடம் வினவினாள் பிரஹாசினி.
“அப்பறம், நான் எப்படி ஈவினிங் வண்டி ஓட்டிட்டு வருவேன்? உன்னைப் பஸ் ஸ்டாண்ட்டில் கூட்டிட்டுப் போய் விடனும்ல?” என்றாள் வினோதா.
“அதுக்குள்ளே காய்ஞ்சிடும்டி” என்கவும்,
“சரி, போட்டு விடு” என்று ஒப்புதல் அளித்தாள் வினோதா.
அதன் பின்னர், சிறிது நேரத்திலேயே மதிய உணவு முடிந்ததால், மூவரும் உணவைப் புசித்து விட்டுத் தோழிக்கு மெஹந்திப் போட்டு விட்டாள் பிரஹாசினி.
அதே சமயம், தன்னுடைய அலுவலகத்தில், தனது மதியச் சாப்பாட்டை உண்டு முடித்த திவ்யனுக்கு இப்போது வரை அவளது நினைவுகள் அளித்த அதிர்வலைகள் அடங்காமல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
ஒருவேளை, தன்னுடைய வீட்டின் மாடியில் ஒரு அறை எடுத்துக் கட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பிரஹாசினியைச் சந்தித்தது நல்ல சகுனமாக அவனுக்குத் தோன்றியது.
ஏனெனில், அவளுக்காகத் தானே அந்த முடிவை எடுத்து இருந்தான். எனவே, இதன் மூலம், தங்களது திருமணம் ஏற்கனவே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு விட்டதைப் போன்ற மனநிறைவு தந்தது திவ்யனுக்கு.
ஆனால், அவனால் இப்போதும் பிரஹாசினியின் வீட்டிற்கு உடனே சென்று பெண் கேட்க முடியாது! அதற்குக் காரணம், இன்னும் அவளது தற்போதைய சூழ்நிலை அவனுக்கு என்னவென்று தெரியாததே ஆகும்.
அதை நினைத்து மட்டும் தான், அவளைப் பெண் கேட்கச் செல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறான் திவ்யன்.
பிரஹாசினி இந்த ஊரில் இருக்கும் நாட்கள் அதிகரிக்கப்பட்டால் அடுத்த முறை சந்திக்கும் போது அதைக் கேட்டு விடலாமா? என்று எண்ணியவனுக்கு, அவள் திருமண மண்டபத்தின் வாயிலில் அமர்ந்திருந்தாள் எனும் போது,
அங்கே காலையில் நிகழ்ந்த திருமணத்திற்காகத் தான் வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவும், அது எப்போதோ முடிந்து விட்டதால் அதன் பிறகு இவ்வூரில் அவளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது?
அதனால், அவள் விரைவிலேயே ஊருக்குச் சென்று விடுவாள் என்பதும் இப்போது தான் திவ்யனுக்கு ஞாபகமே வந்தது.
எனவே,'ச்சே! இது முன்னாடியே ஞாபகம் வந்திருந்தால் அப்போவே அவ எப்போ ஊருக்குப் போவாள்ன்னுக் கேட்டு இருப்பேனே!!’ என மனதில் புழுங்கிக் கொண்டான் திவ்யன்.
ஆனால் அப்போதைய சூழலில் தன்னால் தான் அவளிடம் பேசவே முடியவில்லை என்பதை எண்ணி வருத்தப்பட்டவனுக்கோ, அடுத்த சந்திப்பு நிகழும் வரைக்கும் தன்னால் காத்திருக்க முடியுமா? அதுவும் பெண்ணவளின் பொன் முகத்தைக் கண்ட பிறகும் பொறுமையாக இருக்கத் தான் முடியுமா? என்ற அவதி எழுந்து திவ்யனை வாட்டியது.
அதே நேரத்தில், தன் தோழியின் உபயத்தில் இரண்டு கைகளிலும் மெஹந்தியைப் போட்டுக் காய வைத்தவளுக்கு அதைக் கழுவும் நேரம் வந்ததால் தன் கரங்களைக் கழுவிக் கொண்டு வந்த வினோதாவோ,
“எவ்வளவு நுணுக்கமாகப் போட்டு விட்ருக்க!” என்று தோழியைப் பாராட்டினாள்.
மகளின் கரத்தைப் பார்த்தவரோ, அவளைப் போலவே,”ஆமாம்மா. ரொம்ப நல்லா இருக்கு” என்று மனதாரக் கூறினார் குறிஞ்சி.
“உங்க ரெண்டு பேருக்கும் தாங்க்ஸ்!” என்று கூறிப் புன்னகைத்தாள் பிரஹாசினி.
அப்போது, அவளது கைப்பேசியில் நீரஜ்ஜிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதை ஏற்று,”ஹலோ அண்ணா” என்க,
“பிரஹா, நான் பஸ் ஏறிட்டேன்ம்மா” என்று தங்கைக்கு அறிவித்தான்.
“ஓகே அண்ணா. நானும் தயாராகுறேன். நீங்க பஸ் ஸ்டாண்ட் வந்துட்டுக் கால் பண்ணுங்க” என அவனிடம் உரைத்து விட்டு அழைப்பை வைத்து விட்டு வினேதாவிடமும், குறிஞ்சியிடமும் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டாள் பிரஹாசினி.
“சரி. டீ போட்றேன். அதையாவது குடிச்சிட்டுக் கிளம்பும்மா” என்றவர், தேநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தார் குறிஞ்சி.
தன் பொருட்களை எடுத்து வைத்து விட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டுத் தயாராகி விட்டிருந்தாள் பிரஹாசினி.
இன்னும் சில மணி நேரங்கள் இருக்க, அவளுக்குத் தன்னவனின் ஞாபகங்கள் வரிசைக் கட்டி வந்து நின்றது.
அதற்கு முன்பு, அவளுக்குத் திவ்யனைப் பார்த்த மாத்திரத்தில் இருந்து எதுவுமே தோன்றவில்லையா? என்றால், நிச்சயமாகத் தோன்றி இம்சை செய்தது தான்!
ஆனால், அவளுக்குத் தான், தன் மனதிலிருப்பதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது கை வந்த கலை ஆயிற்றே?
ஆகவே, திவ்யனின் விழியின் வீச்சுக், கொடுத்த சிலிர்ப்பை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தான், தன் கவனத்தை வேறு சிலவற்றில் மாற்றிக் கொண்டாள் பிரஹாசினி.
ஆனால், வினோதாவிற்கு மெஹந்தி போட்டு விட்டது அதில் சேர்த்தி இல்லை. அவளாக மனதாரத் தான், அந்த வேலையைச் செய்தாள்.
அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில், அவளுக்குக் கால் செய்து, தான் இன்னும் சற்று நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வரப் போவதைப் பிரஹாசினியிடம் தெரிவித்தான் நீரஜ்.
அதைத் தோழியிடமும், அவளது தாயிடமும் உரைத்தவள்,”நான் கிளம்புறேன்ம்மா, பை வினோ” என்றவளிடம்,
“போயிட்டு வா பிரஹா” என்றார் குறிஞ்சி.
அவரிடம் விடைபெற்றவள், தன் பையை எடுத்துக் கொண்டு, வினோதாவுடன் சேர்ந்து, அவளுடன் இருசக்கர வாகனத்தின் ஏறிப் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினாள் பிரஹாசினி.
“இன்னும் பஸ் வரலை போல” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே, அங்கே ஒரு பேருந்து வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கி பிரஹாசினி மற்றும் வினேதாவிடம் வந்தவன்,
அம்மூவரின் சிறு நல விசாரிப்புக்குப் பின்,”இதே பஸ்ஸில் ஏறி ஊருக்குத் திரும்பிடலாம் பிரஹா. போகலாமா?” என்று தங்கையிடம் வினவினான் நீரஜ்.
“போகலாம் அண்ணா. பை வினோ. நீயும், அம்மாவும் உடம்பைப் பார்த்துக்கோங்க. டேக் கேர்” என்க,
“ஓகேடி. பை அண்ணா” என்று அவளிடம் கூறியவளுக்குக் கையசைத்து விட்டுத் தமையன் வந்த பேருந்திலேயே அவனுடன் இணைந்து ஏறிக் கொண்டாள் பிரஹாசினி.
அந்தப் பயணமும் அவளது மனதிற்கு இதத்தை அளித்தது தான். ஆனால், அவள் தன் இல்லத்திற்குச் சென்று இறங்கிய அடுத்த நாளே அவள் நினைத்துக் கலங்கி, மருகிக் கொண்டு இருந்த அந்த நபரின் வரவு தனது மன இதத்தில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடுங்கிப் போய் விட்டாள் பிரஹாசினி.
அந்த நபரும், அவளது பயத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாகத் தான் தன் பேச்சைத் தொடங்கினார் என்பது மிகையாகாது!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக