அதைப் பார்த்து விட்டு,“என்ன இங்கே கூட்டிட்டு வந்திருக்கான்” என்று தாங்கள் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர் திருவாதிரன் மற்றும் நஞ்சுண்டன்.
“உள்ளே வாங்க”என்று அவர்களை அந்தக் கிடங்கிற்குள் அழைத்துச் சென்றான் திருவாதிரன்.
அங்கே தங்களது மூவரின் முகங்களும், உடல்களும் அடித்து நொறுக்கப்பட்டுப் பரிதாபமான நிலையில் இருப்பதைக் கண்டு அவனின் தந்தையும், தமையனும் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.
அது மட்டுமில்லாமல் முருகையனின் கைகள் உடைக்கப்பட்டு அதற்குக் கட்டு வேறு போடப்பட்டு இருந்தது.
அவரோ நஞ்சுண்டனைப் பார்த்ததுமே தனது வாயில் இருந்த துணியை விலக்க முடியாமல் சைகையாலேயே அவரிடம் கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார்.
அவரைப் போலவே, சடையனும், விருமனும் கூட அறிவொளி மற்றும் நஞ்சுண்டனிடம் இறைஞ்சும் பார்வையை வீசினர்.
அவர்களைச் சுற்றி நான்குத் தூண்கள் மாதிரியான ஆட்கள் நின்றிருந்தார்கள்.
அவர்கள் தங்களது காட்டில் தான் வேலை செய்கின்றனர் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டனர் அறிவொளியும், நஞ்சுண்டனும்.
“என்ன மூனு பேரும் ரொம்ப சௌகரியமாக இருக்கீங்க போலவே?”என்று முருகையன், சடையன் மற்றும் விருமனிடம் ஏளனமாகவும், குரூரமாகவும் வினவினான் திருவாதிரன்.
அதில் அவனைக் கிலியுடன் பார்த்தார்கள் அந்த மூவரும்.
உடனே தங்களது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு விட்டார்கள் திருவாதிரனின் தந்தையும், தமையனும்.
“டேய்! என்னடா பண்ணி வச்சிருக்கிற? இவங்க மூனு பேரையும் நீ தான் இவ்வளவு நாட்களாக கடத்தி வச்சிருக்கியா?”என அவனிடம் அதட்டலாக கேட்டிருந்தான் அறிவொளி.
அதில் அலட்டிக் கொள்ளாமல்,”ஆமாம். நான் தான் கடத்தி வச்சிருக்கேன் அண்ணா”என்று தமையனுக்குப் பதிலளித்தான் திருவாதிரன்.
“ஏன்டா இப்படி பண்ணி இருக்கிற? இவங்களைக் காணோம்னு தானே இவங்களோட குடும்பம் எல்லாம் நம்மகிட்டே காலில் விழாத குறையாக வந்து அழுது, அரற்றிட்டுக், கெஞ்சிக் கேட்டுட்டுப் போனாங்க? அப்படி இருக்கும் நீ ஒரு தடவைக் கூட இதைப் பத்தி யார்கிட்டேயும் வாயைத் திறக்காமல் இருந்து இருக்கிற! அப்படித் தானே?”என்று கோபமாக வினவ,
“ஆமாம்ண்ணா!”என அவனிடம் தீர்க்கமாக உரைத்து இருந்தான் தம்பி.
ஆனால் அவர்களது சம்பாஷணைகள் எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லாமல் அந்த மூவரையே திடுக்கிடலுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார் நஞ்சுண்டன்.
அவருக்குத் தனது இளைய மகன் தான் முருகையன், சடையன் மற்றும் விருமனை என்னவோ செய்து இருக்கிறான் என்பதைப் பற்றிய சந்தேகம் ஏற்கனவே தோன்றி இருந்தது தான்!
ஒருவேளை இவர்கள் மூவரையும் அடித்து, ஊரை விட்டுத் துரத்தி இருந்து இருப்பானோ என்று தான் எண்ணிக் கொண்டு இருந்தார் நஞ்சுண்டன்.
ஆனால் அதற்கு மாறாக இவர்கள் மூவரையும் இப்படி அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததுமே பேச்சிழந்து போய் நின்று விட்டார்!
ஆனால் தம்பியை விடாமல்,”ஏன் இப்படியெல்லாம் செஞ்ச திரு? நீ என்னப் பண்ணாலும் அதில் ஒரு நியாயமும், காரணமும் இருக்கும்ன்னு உன் மேல் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருக்கும்! அது இப்பவும் எனக்கு இருக்கு! உன் வாயாலேயே இதுக்கான காரணத்தைச் சொல்லு”என்று கிடுக்கிப்பிடியாக கேள்வியைக் கேட்டிருந்தான் அறிவொளி.
உடனே தனது தமையன் மற்றும் தந்தையிடம் இந்த மூவரும் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் நிதானமாக விவரித்துக் கூறி முடித்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டு மேலும் அதிர்ந்து போய் வியர்வையில் நனைந்து போய்த் தன் கால்கள் தடுமாறிப் போய்த் தள்ளாடினார் நஞ்சுண்டன்.
அதை அவதானித்து விட்டு,”ப்பா! நீங்க முதல்ல உட்காருங்க”என்று அவரை நாற்காலியில் அமர வைத்துக் காற்றாடியைச் சுழலச் செய்து விட்டுக் குடிக்கத் தண்ணீரும் கொண்டு வரச் சொல்லித் தன் ஆட்களிடம் அறிவுறுத்தினான் இளையவன்.
உடனே அதைச் செயல்படுத்தி இருந்தனர் அவனது ஆட்கள் நால்வரும்.
தன்னிடம் கொடுத்த தண்ணீர்ச் செம்பை வாங்கிப் பருகித் தனது தாகத்தையும், பதட்டத்தையும் தணித்துக் கொண்டுத் திருவாதிரனைப் பயத்துடன் ஏறிட்டுப் பார்த்து,
“இவனுங்க நம்மக் காட்டில் வேலை செய்றப் பொண்ணுங்க கிட்டே இவ்வளவு மோசமாகவா நடந்து இருக்கானுக?”என்று ஆதங்கத்துடன் வினவினார் நஞ்சுண்டன்.
“ஆமாம்ப்பா. இந்த அக்கிரமம் நம்மக் காட்டில் ரொம்ப வருஷமாகவே நடந்துட்டு இருந்து இருக்குது! ஆனால் நமக்குத் தான் இதைப் பத்தி எதுவுமே தெரியலை! இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி பூவிழிக்கு நடக்க இருந்தப்போ தான் நான் இதைப் பத்தி அவ மூலமாகத் தெரிஞ்சிக்கிட்டு இவனுங்களைக் கடத்தி வச்சுக்கிட்டுப் பொண்ணுங்க எல்லார் கிட்டேயும் விசாரணை நடத்தி அவங்க சொன்ன விஷயங்களைக் கேட்டதுமே இவனுங்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சேன்!”என்றத் தம்பியை இடைமறித்து,
“என்னது நம்மப் பூவிழிக்கு இவனுங்களால் தொல்லை ஏற்பட்டுச்சா?”என்று திடுக்கிட்டுப் போய் வினவினான் அறிவொளி.
உடனே அவனை அழுத்தமாகப் பார்த்து விட்டு,“ம்ஹ்ம். ஆமாம்ண்ணா. அதனால் தான் இவனுங்களைக் கடத்த வேண்டியதாகப் போச்சு!”என்றவனோ,
தனது மனைவியிடம் சடையன் மற்றும் விருமனும் அத்து மீற எத்தனித்த சமயத்தில் தனது ஆட்கள் ஐவரும் அங்கே பிரசன்னம் ஆகி அவளைக் காப்பாற்றிய விஷயத்தை அவனிடமும், தந்தையிடமும் பகிர்ந்து விட்டிருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதுமே என்ன மாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்கள் அவர்கள் இருவரும்.
ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு,”ஏன் முருகையா உன்னை நான் எவ்வளவு நம்புனேன்? பூவிழியை ஊரை விட்டுப் போற மாதிரி ஏதாவது பேசிப் பயமுறுத்துன்ற மாதிரித் தான் உங்கிட்ட சொன்னேன்! ஆனால் நீ என்னடான்னா இப்படி ஒரு சதி திட்டத்தை தீட்டி அதுக்கு இந்த ரெண்டு கேடு கெட்டவனுகளையும் கூட்டுச் சேர்த்து வச்சிருக்கிற! அதுவும் இல்லாமல் பொம்பளைப் புள்ளைங்களும் நம்மளை மாதிரி சக மனுஷங்க தானே? அவங்ககிட்டே உன்னால் எப்படி இப்படியெல்லாம் நடந்துக்க முடிஞ்சது?”என்று முருகையனிடம் காறித் துப்பாத குறையாக கேட்டு விட்டு,
“நீங்க என்னடான்னா பெரிய இவனுக மாதிரி இந்தாளு கொடுத்த தைரியத்தாலே எங்களோட காட்டில் வேலை செய்றப் பொண்ணுங்க மேலேயே கையை வச்சு இருக்கீய! நீங்க அந்தளவுக்குத் தெனவெடுத்துப் போயிருந்து இருக்கீங்களா என்ன? உங்க வீட்டிலேயும் பொம்பளைங்க இருக்காங்க தானே? அவங்களைப் பத்தி யோசிச்சு இருந்து இருந்தால் நீங்க எதுக்கு இப்படியான கேவலமான செயல்களைச் செய்து இருக்கப் போறீங்க? உங்க மூனு பேரையும் என் கையாலேயே கண்டந் துண்டமாக வெட்டிப் போடனும் போல இருக்கு! அந்தளவுக்கு உங்க மேலே எனக்குக் கொலைவெறி வருது!”என அவர்கள் மூவரையும் வஞ்சகமின்றித் தனது கோபம் தீரும் வரையில் அடித்து விட்டு இதற்கெல்லாம் தைரியம் கொடுத்தது தான் தானே என்றக் குற்ற உணர்வின் தாக்கத்தால் முகம் கசங்கிப் போய்த் தொப்பென்று நாற்காலியில் அமர்ந்து விட்டார் நஞ்சுண்டன்.
அதேபோல் தனது குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் போலவே மற்றப் பெண்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்த அறிவொளியோ,
தனது தம்பி மற்றும் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு விட்டு வெகுண்டு எழுந்து போய்,”உங்களுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் இப்படியெல்லாம் பண்ணி இருப்பீங்க! ஏன்டா உங்களைக் கேட்க ஆளில்லாத தைரியமா?”என்று அவர்களை அடித்து துவைத்து விட்டிருந்தான்.
தந்தை மற்றும் மகன் என்று அவர்கள் இருவரிடமும் அடிகள் மற்றும் உதைகளை வாங்கிய முருகையன், சடையன் மற்றும் விருமனால் வலியால் வாயைத் திறந்து கூட அழுது, கதற முடியவில்லை!
ஏனெனில் அவர்கள் மூவரின் வாய்களும் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்தது.
“இப்போ இவனுங்க மூனுப் பேரையும் என்னச் செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க?”எனத் தன்னுடைய தமையன் மற்றும் தந்தையிடம் தீர்க்கமாக வினவி இருந்தான் திருவாதிரன்.
“அது தான் இவங்க மூனு பேரும் அப்போவே காணாமல் போயிட்டாங்கன்னுச் சொல்லி எல்லாரும் வலை வீசித் தேடிட்டு இருந்தோமே? அதை அப்படியே உண்மையாக்கி விட்ரலாம்! இவங்களைக் காணாப் பொணமாக்கிடலாம்! அதே மாதிரி இவனுங்களோட குடும்பத்துக்கும், மத்த யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இதையெல்லாம் செஞ்சி முடிச்சிட்டு இவனுங்களுக்குக் கெட்டச் சகவாசம் இருந்துச்சுன்ற மாதிரி ஊர் முழுக்கப் பரப்பி விட்டுட்டு அதனால் தான் ஊரை விட்டு ஒடிட்டானுங்கப் போலன்னு எல்லாரையும் நம்ப வச்சிடலாம்! பொம்பளைங்க கிட்டே தப்பாக நடந்து, அவங்களோட பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்ட இவனுங்க எல்லாம் பூமித் தாய்க்குப் பாரமாக இருந்து என்னப் பண்ணப் போறானுவ? காணாமலேயே போய்த் தொலையட்டும்! அதுக்கான வேலையைச் செய்யச் சொல்லு!”என்று தம்பியிடம் அழுத்தமாகத் தனது முடிவைச் சொல்லி இருந்தான் அறிவொளி.
“நம்மக் காட்டில் வேலை செய்றப் பொண்ணுங்க மூலமாக உங்களுக்கும், இந்த ஈனச் செயல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னுத் தெரிஞ்சிக்கிட்டேன்ப்பா! அதனால் நீங்க இவனுங்க முன்னாடி இப்படி இருக்கனும்னு அவசியமில்லை! நான் கேட்டதுக்கு உங்கப் பதில் என்ன?”எனத் தந்தையிடம் கேட்டிருந்தான் இளையவன்.
“அறிவு சொன்னதை தான் நானும் சொல்லலாம்ன்னு இருந்தேன் திரு! அப்படியே செஞ்சிரு! அப்படியாவது நான் செஞ்சப் பாவமும் தீர்ந்து போகட்டும்”என்று அவனிடம் தீர்க்கமாக மொழிந்தார் நஞ்சுண்டன்.
இவர்கள் மூவரின் இந்த உரையாடலைக் கேட்டு விட்டுத் தங்களது கண்களில் உச்சபட்சப் பயத்துடன் அவர்களைப் பார்த்து இறைஞ்சிக் கொண்டே அவர்கள் மூவருடைய கால்களையும் அவதானித்து அதைப் பிடித்துச் சைகையாலேயே கெஞ்சத் தொடங்கி விட்டார்கள் முருகையன், சடையன் மற்றும் விருமன்.
அதில் கொஞ்சம் கூட இளக்கம் கொள்ளாமல் இறுகிய முகத்துடன் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தனர் திருவாதிரன், நஞ்சுண்டன் மற்றும் அறிவொளி.
அப்போது,”சின்னய்யா! இவங்க மூனு பேரையும் என்னப் பண்ணனும்னுச் சொன்னீங்கன்னா அதை நாங்கத் தடையமே இல்லாமல் செஞ்சி முடிச்சிடுவோம்!”எனத் திருவாதிரனிடம் பவ்யமாக வினவினான் அவனது விசுவாசிகளில் ஒருவனான சீலன்.
உடனே,”அதை இங்க வச்சு, இவனுங்க முன்னாடியே பேச வேண்டாம்! வெளியே போய்ப் பேசலாம்”என்று அவனையும், தனது தமையன் மற்றும் தந்தையையும் வெளியே அழைத்துச் சென்று விட்டு,
“இவனுங்களை உருத்தெரியாமல் அழிச்சிருங்க. இவனுங்களோட ஒரு சின்ன முடி கூடத் தடயமாக யாருக்கும் கிடைச்சுடக் கூடாது! அதே மாதிரி இதை நாம தான் செஞ்சோம்ன்னு யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாது! இதையெல்லாம் மனசில் வச்சுக்கிட்டு இவனுங்களைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சித்தரவதை செஞ்சிக் கொல்லுங்க! அப்போ தான் இந்த மூனு பேரும் நம்மக் காட்டில் வேலை செய்றப் பொண்ணுங்களைத் தவிர்த்து வேற எந்தப் பொண்ணுங்க கிட்டேயும் தப்பாக நடந்துக்கிட்டு இருந்தாலும் கூட அதுக்கான தண்டனையாக இது அவனுங்களுக்கு அமையட்டும்!”என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டு,
“இப்போ நாம மூனு பேரும் நம்மக் காட்டுக்குப் போகலாம். வாங்க”என்றிருந்தான் இளையவன்.
உடனே ஜீப்பில் ஏறிப் பயணித்து தங்களது காட்டிற்குப் போய்ச் சேர்ந்து இருந்தனர் திருவாதிரன், அறிவொளி மற்றும் நஞ்சுண்டன்.
காட்டை அடைந்ததுமே அங்கிருந்த பூதபதியை அழைத்து தனது மற்ற விசுவாசிகளிடம் கூறியதை அவரிடமும் மொழிந்து விட்டிருந்தான் திருவாதிரன்.
உடனே அவரும் கூடச்,”சரிங்க சின்னய்யா. நீங்க சொன்ன மாதிரியே வேலையைக் கச்சிதமாகச் செஞ்சி முடிச்சிட்றோம்!”என்று அவனுக்கு வாக்களித்தார்.
அதற்குப் பிறகுத் தங்களது அலுவலக அறைக்குள் வந்து விட்டிருந்தார்கள் மூவரும்.
அப்போது தனது இளைய மகனிடம் வந்து,”என்னை மன்னிச்சிரு திரு! அந்த முருகையனும், அவனுங்க ரெண்டு பேரும் இந்தளவுக்கு மோசமானவங்கன்னு எனக்குத் தெரியாது! அவனுங்களுக்கு இப்படி பொண்ணுங்க கிட்டே தப்பாக நடந்துக்கிற கேடு கெட்டப் பழக்கம் இருந்தது முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் நானே அவனுங்களைக் கொன்னுப் போட்டிருப்பேன்! அதுவும் இல்லாமல் நம்ம வீட்டு மருமகப் பொண்ணு மேலேயே கையை வைக்கத் துணிஞ்சு இருக்கானுங்கப் பாரேன்? அதுக்காகவே நான் அவனுங்களை நீ சொன்ன மாதிரியே உருத் தெரியாமல் அழிச்சு இருந்து இருப்பேன்!”என அவனது கரங்களைக் குவித்துக் குறுகிப் போய் மன்னிப்புக் கேட்டார் நஞ்சுண்டன்.
உடனே அவரது கரங்களை இறக்கி விட்டு,”எனக்கு இந்த விஷயத்தில் உங்க மேலே ரொம்பவே கோபம் இருந்துச்சுப்பா! ஏன்னா, எம்பொண்டாட்டின்னுத் தெரிஞ்சுமே பூவிழிகிட்டே நீங்க அவனுங்களை அப்படி நடந்துக்கச் சொன்னீங்களோன்னு எனக்கு உங்க மேலே சந்தேகம் வந்துச்சு! ஆனால் அந்தப் பொண்ணுங்களும், முருகையனும் உங்களுக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னுத் தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் எனக்கு மனசில் இருந்தப் பாரமே இறங்கிப் போச்சு! தெரியுமா? ஆனாலும் எனக்கு இப்பவும் உங்க மேலே கோபமும், வருத்தமும் இருக்குத் தான்ப்பா”என்று அவரிடம் விரக்தியாக கூறியிருந்தான் திருவாதிரன்.
“என்னை மன்னிச்சிருப்பா. நான் மருமக கிட்டேயும் மன்னிப்புக் கேட்கிறேன்”என அவனிடம் குற்ற உணர்வுடன் கூறவும்,
“அவளுக்கு இப்போ வரைக்கும் இது எதுவுமே தெரியாதுப்பா!”என்று அவரிடம் தானும் விரக்தி நிறைந்தக் குரலில் மொழிய,
அதில் இன்னும் கூனிக் குறுகிப் போய் விட்டார் நஞ்சுண்டன்.
“ஏன்ப்பா இப்படி பண்ணீங்க? இதுவே அந்த இடத்தில் அம்மாவோ, இல்லைன்னா எங்களுக்கு ஒரு தங்கச்சியோ இருந்து அவ அந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு இதைச் செய்ய மனசு வந்திருக்குமா? சொல்லுங்க”என்று தானும் தனது தம்பி மற்றும் அவனது மனைவிக்காகத் தங்களது தந்தையிடம் பரிந்து பேசினான் அறிவொளி.
அதைக் கேட்டு மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய் விடவும்,
“இந்த விஷயத்தில் அம்மாவுக்கும் பங்கு இருக்குதா அப்பா?”என அவரிடம் கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் தனது தலையை அனிச்சையாகத் தொங்கப் போட்டுக் கொண்டார் நஞ்சுண்டன்.
அதிலேயே இதில் ராஜகுமாரிக்கும் பங்கு இருந்து இருக்கிறது என்பது அவரது இரண்டு மகன்களுக்கும் புரிந்து விட்டிருந்தது!
அதேபோல் தனது வாயிலாகவே தானும், தனது மனைவியும் இதுவரைக்கும் தங்களது இரண்டு மருமகள்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்காகப் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் அவர்கள் இருவரிடமும் ஒப்புவித்து முடித்திருந்தார் நஞ்சுண்டன்.
அதைக் கேட்டதும் அந்த அண்ணனுக்கும், தம்பிக்கும் மனம் வெறுத்துப் போய் விட்டது எனலாம்!
“ப்ச்! போங்க ப்பா! நாங்க ரெண்டு பேரும் அப்படி என்னப் பெரியத் தப்பைப் பண்ணிட்டோம்னு நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு திட்டத்தைப் போட்டுச் செயவ்படுத்துனீய?”என்று பொருமலுடன் வினவினான் திருவாதிரன்.
அவனைப் போலவே,”இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழியைப் போட்டதே நான் தானே? நீங்க ரெண்டு பேரும் பழி வாங்கனும், இதுக்குத் தண்டனைக் கொடுக்கனும்னு நினைச்சா அதை எனக்குக் கொடுத்து இருந்து இருக்கலாமே? அதை விட்டுட்டு அந்த ரெண்டுப் பொண்ணுங்க என்னப் பண்ணாங்கன்னு இப்படியொரு திட்டம் போட்டீங்க? அவங்க ரெண்டு பேரும் அவங்களோட அம்மாவை வேற இழந்து தவிச்சப்போ கூட உங்க ரெண்டு பேருக்கும் மனசு இறங்கலை தானே? அவ்வளவு கல்நெஞ்சக்காரங்களாக மாறிட்டீய தானே?”எனத் தானும் தனது இதயம் வலிக்க அவரிடம் கேட்டான் அறிவொளி.
ஆனால் அவர்களிடம் எந்தவிதச் சமாதான வார்த்தைகளையும் கூறித் தங்களது செயல்களை நியாயப்படுத்த முனையாமல் மகன்களின் வாயிலிருந்து கொட்டிய ஆதங்க வார்த்தைகளை அமைதியாக கேட்டுக் கொண்டார் நஞ்சுண்டன்.
அவரது நிலையைக் கண்டு அவரிடம் சென்று,”நீங்களும், அம்மாவும் இனிமேல் இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டீய தானே?”என்று அழுத்தமாக வினவினார்கள் அவரது மகன்கள் இருவரும்.
அதில் அடுத்த நிமிடமே தனது தலையை உயர்த்தி,”நானும், உன் அம்மாவும் கண்டிப்பாக இதுக்கப்புறம் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டோம்!”என்று அவர்களுக்கு வாக்களித்து விட்டதும் தான் அவர் மீதிருந்த தங்களது மனக்குறைச் சற்று மட்டுப்பட்டதைப் போல் உணர்ந்தனர் திருவாதிரன் மற்றும் அறிவொளி.
அன்றைய தினம் தங்களது குடும்பத்தை ஆட்டி வைத்திருந்த அனைத்து எதிர்மறையான அதிர்வுகளும் தங்களது வீட்டை விட்டு மறைந்து சென்றதைப் போன்று உணர்ந்தார்கள் அந்த தந்தையும், அவரது இரண்டு மகன்களும்.
தங்களது கணவன்மார்களின் உறவுக்காரப் பெண்களின் மூலமாகப் புதியதாக மாற்றப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றில் தாலியுடன் சேர்த்து, லட்சுமி காசு, பவளம், மற்றும் குண்டு மணிகள் கோர்க்கப்பட்டு அதை தங்கள் கழுத்துகளில் அணிந்து கொண்டு, இதழ்கள் நான்கும் புன்னகையில் மிளிர மனையில் அமர்ந்திருக்கும் தனது இரு மருமகள்களைக் கண்டு அவர்களிடம் சென்று,
“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு!”என்று அவர்களைத் தன் கைகளால் திருஷ்டிக் கழித்து நெட்டி முறித்தார் ராஜகுமாரி.
அவரைப் போலவே தானும் தங்களது மருமகள்களைப் புன்சிரிப்புடன் பார்த்தார் நஞ்சுண்டன்.
ஆனால் தங்களது மனைவிமார்களின் அழகில் மயங்கிப் போய் அவர்களை எப்போது தனியாகச் சந்திப்போம் என்று ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டு இருந்தார்கள் திருவாதிரன் மற்றும் அறிவொளி.
அப்போது,”என்னக் குமாரிக்கா, உங்க மூத்த மருமவளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்துல இப்போ தான் இவுகளுக்குத் தாலிப் பிரிச்சுக் கோர்க்கிற சடங்கையே நடத்துறீயளே! உங்க குடும்பத்தில் மட்டும் தான் இப்படியெல்லாம் வித்தியாசமாக நடக்குது!”என்று குத்தலாகப் பேசினார் அங்கேயிருந்த வம்புப் பேசும் பெண்மணி ஒருவர்.
அதைக் கேட்டு அவரைக் கடுமையாக முறைத்து,”பரவாயில்லைடிம்மா! நாங்க இப்படியே வித்தியாசமாகவே இருந்துக்கிறோம்! நீங்க எல்லாரும் ஒரே மாதிரியே இருந்துக்கோங்க! அதே மாதிரி எங்க வீட்டுப் பொண்ணுக்கு எப்போ, என்னப் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு நீ ஒன்னும் படியளந்து உதவப் போவதில்லை! பந்தி தயாராகிடுச்சாம்! நீ போய் வயிறாரச் சாப்பிடு போ!”என்று அவருக்குத் தக்கப் பதிலடி வழங்கினார் ராஜகுமாரி.
அதில் அனைவரும் உள்ளம் குளிர்ந்து போயினர் அவரது மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
இந்த தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கைப் பற்றிய பேச்சு வார்த்தையின் போதே தாங்கள் அனைவரும் தங்களுக்காகச் செந்தாழை தேர்ந்தெடுத்து வாங்கி வந்திருந்த ஆடைகளைத் தான் அணிய வேண்டும் என்று உறுதி பூண்டதைப் போலவே,
இன்று நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் அறிவொளியும் ஒரே மாதிரியான வேலைப்பாடுகள் மற்றும் வெவ்வேறு நிறங்களில் இருக்கும் உடைகளை அணிந்து இருந்தார்கள் என்றால்,
அவர்களைப் போலவே ராஜகுமாரி, பூவிழி மற்றும் செந்தாழையும் சேலைகளை அணிந்து இருந்தனர்.
அதைக் கண்டுப் பொறாமை ஏற்பட்டதாலேயே சடங்கிற்கு வந்திருந்த பெண்கள் அவர்களைக் கிண்டல் செய்து வம்புப் பேசினர்.
அதற்குத் தன்னால் முடிந்த வரைக்கும் சரியானப் பதில் அளித்து அவர்களை ஆடிப் போகச் செய்து விட்டு அவர்களுக்கு வயிறாரச் சாப்பாட்டையும் போட்டுச் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரியும், அவர்களது மகன்கள் மற்றும் மருமகள்களும்.
அன்றிரவு நேரத்தில் தத்தமது அறைகளில் தங்களது இணைகளின் கழுத்துக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அந்தத் தங்கத் தாலிகளைக் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர் திருவாதிரன் மற்றும் அறிவொளி.
ஆனால் அன்றைய நாள் முழுவதும் ஓய்வெடுக்காமல் இருந்ததால் செந்தாழைக்கு உறக்கம் கண்ணைச் சுழற்றியது.
அதைப் புரிந்து கொண்டு,”நீ தூங்கும்மா!”என மனைவியைத் தனது மார்பில் மெல்லச் சாய்த்துக் கொண்டு அவளை உறங்க வைத்து விட்டுத் தானும் உறக்கத்தில் ஆழந்தான் அவளது கணவன்.
அவர்களுக்கு நேர்மாறாகத் தனது மனைவியின் மார்பில் தலை வைத்துப் படுத்து இருந்தது மட்டுமின்றி, அவ்வப்போது அந்த இடத்தில் முத்தங்களை வாரி வழங்கிக் கொண்டும் இருந்தான் திருவாதிரன்.
அதில் பித்தம் தலைக்கேறிக் கணவனின் தலையை உயர்த்தி அவனது இதழ்களைச் சிறை செய்து கொண்டாள் பூவிழி.
உடனே எந்தவித இடையூறுகளும் இன்றித் தங்களது நேசத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள் அந்தக் கணவனும், மனைவியும்.
இதற்குப் பிறகு இவர்களது குடும்பத்தில் எவ்விதமான எதிர்மறை அதிர்வுகளுக்கு வேலையே இருக்காது என்ற நம்பிக்கையில் நாமும் இவர்களை வாழ்த்தி விடைபெறுவோமாக!
முற்றும்

கருத்துகள்
கருத்துரையிடுக