“அவங்க மூனு பேரையும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே காணாமல் போயிட்டாங்க. அதாவது நம்ம மறு வீட்டு விருந்து நடக்கிறதுக்கு முன்னாடியே அவங்கத் தொலைஞ்சுப் போயிட்டாங்க. அவங்களை இப்போ வரைக்கும் தேடிக்கிட்டுத் தான் இருக்கோம்! ஆனால் அவங்களைப் பத்தின எந்த தகவலும் கிடைக்கலை! இன்னும் தேடிக்கிட்டுத் தான் இருக்கோம்! அதுவும் நம்ம அப்பா ரொம்பத் தீவிரமாக அவங்களைத் தேடிக்கிட்டு இருந்தாரு. இவராலும் அவங்களைக் கண்டுபிடிக்க முடியலை!”என்று தன் தமையனிடமும் கூட அந்த முருகையன், சடையன் மற்றும் விருமனைத், தான் தான் கடத்தினேன் என்பதைச் சொல்லவில்லை திருவாதிரன்.
அவனது அந்தப் பதிலைக் கேட்டு ஆடிப் போய் விட்டார் நஞ்சுண்டன்.
ஏனெனில் யார், எந்த விதத்தில், எப்படி கேட்டாலும் கூட அந்த மூவரைக் கடத்தியது, தாம் தான் என்பதைப் பற்றி யாரிடமும் மூச்சு விட மாட்டேன் என்கிறானே?
அதுவும் தனது குடும்ப உறுப்பினர்களை நம்பிக் கூட உண்மையைச் சொல்ல இவன் தயாராகவில்லையே! என்ன மாதிரியான மனிதன் இவன்? என்று தான் தனது இளைய மகனைப் பற்றிய சிந்தனை அவருக்குள் தோன்றியது எனலாம்!
அதே நேரத்தில் அவன் மீதான பயமும் இன்னமும் அதிகரித்தது என்றும் கூறலாம்!
இதையெல்லாம் தப்பித் தவறிக் கூடத் தனது இரண்டு மகன்களின் முன்னிலையிலும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதைப் போன்றத் தோற்றத்துடன்,”ஆமாம் அறிவு! அவனுகளைப் பத்தி விசாரிச்சுப் பார்த்த வகையில் அவ்வளவு யோக்கியமானவனுக மாதிரியும் யாரும் அவனைப் பத்திச் சொல்லலை!”எனப் பதிலளித்தார் நஞ்சுண்டன்.
“குணக்கேடு உள்ளவனுகளா? அப்போ ஏதாவது பகை இருந்து இருக்கும்! அதை தீர்த்துக்கிறதுக்காக அவங்களைக் கடத்தி இருக்கலாம்”என்றிருந்தான் அறிவொளி.
அதைக் கேட்டதும்,”ஆமாம். அப்படித் தான் இருக்கனும்”எனத் தமையனிடம் அழுத்தமாக மொழிந்தான் திருவாதிரன்.
உடனே,“அவனுகளைப் பத்தின யோசனையை விட்டுத் தள்ளுவோம். நான் உங்கத் தாலிப் பிரிச்சுக் கோர்க்கிற சடங்கிற்கான ஏற்பாடுகளைப் பார்க்கிறேன்”என்று அவர்கள் இருவரிடமும் கூறி இந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருந்தார் நஞ்சுண்டன்.
“சரிங்கப்பா. ஏதாவது ஒத்தாசை வேணும்னா எங்க கிட்ட கேளுங்க”என்று அவருக்கு அறிவுறுத்தினான் அறிவொளி.
“அதெல்லாம் வேண்டாம்டா. நீங்க ரெண்டு பேரும் நம்மளோட நிலபுலனைப் பார்க்கிறதே எனக்குப் பெரிய ஒத்தாசைத் தான்”என்று தன் முகத்தில் பெருமிதம் மிளிரக் கூறிப் புன்னகைத்து விட்டு,
அந்தத் தாலிப் பிரிச்சுக் கோர்க்கிற சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகத் தங்களது காட்டில் வேலை செய்யும் சிலரை அழைத்துக் கொண்டு அங்கேயிருந்து கிளம்பிச் சென்று விட்டார் அவர்களது தந்தை.
அதற்குப் பிறகு வெகு மாதங்களுக்குப் பின்னர் தங்களுக்கு இடையில் இருந்த அனைத்து மனக்கிலேசங்களையும் பேசித், தீர்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டிருந்தார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன்.
இனிமேல் தங்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் வர விடக் கூடாது என்பதை உறுதி செய்து கொண்டனர் அவ்விருவரும்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தக் காட்டிற்குத் திரும்பி வந்திருந்தார் நஞ்சுண்டன்.
“எவ்வளவு பவுனுக்குத் தாலிச் சங்கிலியைச் செய்யச் சொன்னாவளாம்? நாம தானே அதுக்குப் பணம் கொடுத்துச் செய்யச் சொல்லனும்? அதான் கேட்கிறேன்”என்று அவரிடம் விசாரித்தான் அறிவொளி.
“ம்ஹ்ம். அஞ்சுப் பவுனுக்குச் செய்யலாம்ன்னுச் சொன்னாவ! ஏன்னா, அதுக்கு மேலே போனால் மருமவளுகளுக்குச் சௌகரியமாக இருக்குமான்னுத் தெரியலை! அதான். உங்கம்மாகிட்டேயும், மருமவளுக கிட்டேயும் கலந்து பேசிட்டுச் சொல்றேன்னுட்டு வந்துட்டேன். ஆனால் சாப்பாட்டுக்கு எல்லாம் சொல்லியாச்சு”என்று தன்னுடைய இரண்டு மகன்களிடமும் விவரிக்கவும்,
“நாம மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவோம்லப்பா? அப்போ அவுக கிட்டே இதைப் பத்திப் பேசிக்கலாம்”என்றுரைத்து விட்டான் திருவாதிரன்.
“சரி. புது மேற்பார்வையாளர் யாரையாவது நியமிக்கனும்ல? அதுக்கான வேலையில் இறங்குறேன்”என அவர்களிடம் தெரிவித்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டார் நஞ்சுண்டன்.
அவர் சென்றதும்,“அண்ணே! எனக்கு ஒரு யோசனைத் தோணுது. அதில் உனக்கும் சம்மதமான்னுச் சொல்லனும். சரியா?”எனத் தனது தமையனிடம் அறிவுறுத்தவும்,
“ம்ஹ்ம். சரிடா. நீ அந்த யோசனை என்னன்னு முதல்ல சொல்லு”என்று அவனிடம் கூறினான் அறிவொளி.
“நம்ம அத்தை எதிர்பாராத விதமாக இறந்துட்டுப் போயிட்டாங்க தானே? அவங்களோட திதி அன்னைக்கு அவங்கப் புகைப்படத்தைச் சட்டம் போட்டு வச்சு சாமிக் கும்பிடனும்ல?”எனக் கேட்டவுடனேயே,
“ஆமாம்”எனத் தன் மாமியாரின் மறைவை நினைத்து வருத்தத்துடன் பதிலளிக்கவும்,
“அதுக்காக அவங்களோட புகைப்படம் நமக்கு வேணும்! அதனால் நம்மப் பொண்டாட்டிகளுக்குத் தெரியாமல் அவங்களோட உடைமைகள் இருக்கிறப் பெட்டிகளைச் சோதிச்சு அதில் அவங்கம்மாவோட புகைப்படம் ஏதாவது கிடைக்குதான்னுத் தேடிப் பார்ப்போமா?”என்று அவனிடம் வினவினான் திருவாதிரன்.
“ம்ம். நீ சொல்வதும் சரியான யோசனையாகத் தான் இருக்கு. ஆனால் ஏன் இதையெல்லாம் அவங்களுக்குத் தெரியாமல் செய்யனும்னுச் சொல்ற?”என்றிருந்தான் அறிவொளி.
“அப்போ தான் அவங்களுக்கு நாம ஒரு திடீர் ஆனந்தத்தைத் தர்றா மாதிரி இருக்கும்ண்ணா. நாம அவங்களைச் சந்தோஷப்படுத்துறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதை தவற விடலாமா என்ன?”என்று அவனிடம் மொழிந்தான் இளையவன்.
அதில் அவனும்,”அட ஆமாம்டா! இது எனக்குத் தோணவே இல்லைப் பாரேன்! என்ன தான் நீ என்னை விடச் சின்னவனாக இருந்தாலும் கூட நீ தான்டா இப்படி புத்திசாலித்தனமாக யோசனை சொல்ற!”எனத் தன் தம்பியை மனதாரப் பாராட்டவும்,
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லண்ணா. யாரும், யாருக்கும் சளைச்சவங்க இல்லை! அதை முதல்லப் புரிஞ்சுக்கோ”என்று அவனுக்கு அறிவுரை வழங்கினான் திருவாதிரன்.
“சரிடா. இப்போ நீ சொன்ன யோசனையைச் செயலாக்கலாமா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.
“ம்ஹ்ம். இன்னைக்கே அதைச் செயலாக்க ஆரம்பிச்சிடலாம்ண்ணா”என்று அவனிடம் அறிவுறுத்தினான் தம்பி.
அதற்குப் பிறகு மதிய உணவு நேரமும் வந்து விடத் தங்களது தந்தையை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்று சேர்ந்திருந்தார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன்.
அங்கே தங்களது மனைவிகளுடன், தங்கள் அன்னை இயல்பாக உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டு மனம் நிறைந்து போயினர் அவர்கள் இருவருக்கும்.
அதேபோல் தனது மனைவியின் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு நிதர்சனத்தைப் புரிந்து விட்டுத் தானும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டிருந்தார் நஞ்சுண்டன்.
அதே சமயத்தில் தன்னுடைய மனைவி அணிந்திருந்த நகைகளைக் கண்டுப் புருவத்தை உயர்த்தினான் திருவாதிரன்.
அதைக் கண்டு கொண்டு,”இதையெல்லாம் அத்தை தான் போடச் சொல்லிக் கொடுத்தாங்க”என அவனிடம் புன்னகையுடன் கூறினாள் பூவிழி.
உடனே,”ஆமாம்டா. இவ மட்டும் எதுக்குக் கையிலே, காதிலே எதுவும் இல்லாமல் வளைய வரனும்? அதான், இந்த நகைகளைக் கொடுத்துப் போட்டுக்கச் சொன்னேன். அதிலும் இவுகளுக்குப் பெரிய நகைகள் எல்லாம் வேண்டாமாம். கண்ணுக்குத் தெரியாதப் பொட்டுத் தங்கம் தான் போட்டுக்கிறதுக்குச் சௌகரியமாக இருக்குமாம்! அதனால் நானும் இருக்கிறதிலேயே சின்னச், சின்ன நகைகளை எல்லாம் எடுத்து தந்தேன். அதனால் தான் போட்டு இருக்கிறாள். இல்லைன்னா இதையும் போட்ருக்க மாட்டாள்!”என்று சொல்லி விட்டுத் தன் இளைய மருமகளை ஆற்றாமையுடன் நோக்கினார் ராஜகுமாரி.
அதைக் கேட்டு மற்றவர்களின் இதழ்கள் யாவும் புன்னகையில் மிளிர்ந்தது.
“ஆமாம். இந்த தாலிச் சங்கிலியைப் பத்திக் கேட்டுட்டு வந்தீயளா?”எனத் தன் கணவரிடம் விசாரிக்க,
அதற்கு,”ம்ஹ்ம். கேட்டுட்டு வந்துட்டேன்ம்மா”என்றவரோ,
அதைப் பற்றித் தனது மகன்களிடம் தெரிவித்த விஷயத்தை அவரிடமும் விவரித்தார் நஞ்சுண்டன்.
உடனே,”எதுக்கு அஞ்சுப் பவுனு எல்லாம்? மூனு பவுனுப் போதுமே?”என்று கோரஸாக மொழிந்து இருந்தார்கள் பூவிழி மற்றும் செந்தாழை.
அதில் அவர்களைக் கடுமையாக முறைத்து விட்டு,”மூச்! இந்த விஷயத்தில் நீங்க ரெண்டு பேரும் எதுவும் மறுத்துப் பேசக் கூடாது! இதையாவது எனக்குப் பிடிச்சா மாதிரி செய்ய விடுங்க மகராசிகளா!”என்று அவர்களிடம் கண்டனமாகத் தெரிவித்தார் ராஜகுமாரி.
அதில் அந்தச் சகோதரிகள் இருவரின் முகங்களும் சுருங்கிப் போயிற்று.
அதை அவதானித்து விட்டு,”நீங்க ரெண்டு பேரும் தான் அதிகமாக நகைப் போட்டுக்க மாட்டேங்குறீங்களே? அதனால் இந்த தாலிச் சங்கிலியாவது அஞ்சுப் பவுனில் இருந்தால் இதை தவிர வேறெந்த கழுத்துச் சங்கிலியையும் போட்றதுக்கான அவசியமே இருக்காது தானே? அப்படி யோசிச்சுப் பாருங்க”என்று அவர்கள் இருவருக்கும் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செய்தான் அறிவொளி.
அதைக் கேட்டதும்,” நீங்க சொல்வதும் சரி தானுங்க”என்றிருந்தாள் செந்தாழை.
அவளைப் பின்பற்றி,”இதுக்கு எனக்கும் சம்மதம்”என்று தானும் உரைத்து விட்டிருந்தாள் பூவிழி.
“அப்படின்னா சரி. நாம ரெண்டு பேரும் நாளைக்கு நாம எப்பவும் நகை எடுக்கிற காசியை தாலிச் சங்கிலிகளை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரவழைச்சுப் பேசிடுவோமா?”என்று தன் மனைவியிடம் கருத்தைக் கேட்டார் நஞ்சுண்டன்.
“பேசிடுவோமுங்க. இப்போ சாப்பிடலாமா?”என்றவரும்,
தங்கள் அனைவருக்கும் உணவைப் பரிமாறுமாறு வேலையாட்களுக்கு உத்தரவிடவும்,
அவர்களும் அதற்கு இணங்கி அனைவருக்கும் உணவைப் பரிமாறி விட்டு ஒதுங்கிக் கொள்ள,
அன்று தான் அந்த அறுவரும் தங்களுக்குள் மனதாரப் பேசிச், சிரித்தபடி உணவை உண்டனர் எனலாம்!
இந்தக் காட்சியைப் பார்த்த அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கே அத்துணை அழகாகவும், நிறைவாகவும் இருந்தது!
சில நிமிடங்களில் உணவை உண்டு முடித்து விட்டு ஆண்கள் மூவரும் கிளம்பி விட,
“எனக்கு உண்ட மயக்கத்தில் தூக்கம் வருது. நான் போய்த் தூங்குறேன்”என்று தன் மருமகள்களிடம் அறிவித்து விட்டு அறைக்குள் புகுந்து கொண்டார் ராஜகுமாரி.
அதற்குப் பிறகுத் தனது தமக்கைப் பூவிழியுடன் சேர்ந்து அந்த மதியப் பொழுதைக் கழிக்கத் தொடங்கி விட்டாள் செந்தாழை.
இங்குத் தங்களது காட்டை மேற்பார்வையிடுவதற்காகப் புதிய ஆளைத் தேர்ந்தெடுத்து விட்டதை தன்னுடைய மகன்களிடம் தெரிவித்தார் நஞ்சுண்டன்.
உடனே,”ஒருவழியாக ஆளைத் தேர்ந்தெடுத்தாச்சாப்பா? யாரது?”என அவரிடம் விசாரித்தான் திருவாதிரன்.
“எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்ச ஆளு தான்! அதுவும் இங்கே ரொம்ப வருஷமாக வேலை செஞ்சிட்டு இருக்கிறவன் தான்”என்றவரிடம்,
“அதான், யாருன்னுக் கேட்கிறோம்ப்பா”எனக் கூறினான் அறிவொளி.
உடனே,”நம்மப் பூதபதியைத் தான் நியமிச்சு இருக்கேன். வெளியே தான் நிக்கிறியான். உள்ளே வரச் சொல்லட்டா?”என்றார் நஞ்சுண்டன்.
“ஓஹ்! அவரா? அவரு ரொம்ப விசுவாசமானவராச்சே அப்பா! நல்ல உழைப்பாளியும் கூட. அவரை உள்ளே வரச் சொல்லுங்க”என்று தந்தையிடம் மொழிந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதுமே தாமதிக்காமல் அந்தப் பூதபதியை அறைக்குள் வருமாறு அழைக்கவும்,
அதற்கு இணங்கி உள்ளே வந்த பூதபதியைப் பார்த்து மர்மப் புன்னகையைப் புரிந்தான் திருவாதிரன்.
- தொடரும்
இதன் அடுத்தப் பதிவு திங்களன்று பதிவிடப்படும் நண்பர்களே 🖤

கருத்துகள்
கருத்துரையிடுக