அதற்குப் பிறகு அன்றைய மதிய உணவு நேரத்தில் செந்தாழை மற்றும் பூவிழியும் சாப்பாட்டு மேசைக்கு வந்து விடவும், தனது கோபம், ஆதங்கம் என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்களிடமும் நல்லபடியாகப் பேசிச், சிரித்தார் ராஜகுமாரி.
அதைக் கவனித்த செந்தாழை மற்றும் பூவிழிக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் ஆனந்தமாகவும் இருந்தது எனலாம்!
“அக்கா! நம்ம அத்தைக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ரொம்ப வித்தியாசமாக நடந்துக்கிறாங்களே!”என்று தன்னுடைய தமக்கையிடம் முணுமுணுக்க,
அதில்,”எனக்கும் அது தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்குடி! ஆனால் நாம இதைப் பத்தி அவங்க கிட்ட நேரடியாக கேட்க முடியாது தானே? அதனால் அமைதியாக இரு”எனக் கூறி அவளை அடக்கி விட்டாள் பூவிழி.
அவர்களது அந்த மெல்லிய குரலில் நிகழ்ந்த உரையாடலைக் கவனித்து விட்டு,”என்ன அக்காவும், தங்கச்சியும் அப்படி என்னத்த ரகசியமாகப் பேசுறீய?”எனத் தன் மருமகள்கள் இருவரிடமும் வினவினார் ராஜகுமாரி.
உடனே,”சும்மா தான் அத்தை. முக்கியமானது எதுவுமில்லை”என்று அவருக்குப் பதிலளித்தாள் செந்தாழை.
“ம்ஹ்ம்”எனறவரோ,
“இவுக ரெண்டு பேரையும் இன்னும் காணலையே! சரியாகச் சாப்பாட்டு நேரத்துக்கு வர்றதுக்கு என்னவாம்? எப்போ பார்த்தாலும் இவுகளுக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கு!”என்று தனது கணவர் மற்றும் இளைய மகனை எண்ணிக் குறைபட்டுக் கொண்டார்.
அதைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் திருவாதிரன்.
அவர்களைக் கண்டதுமே,”ரெண்டு பேரும் வந்துட்டீயளா? உங்களுக்காக நாங்க மூனு பேரும் தெனமும் காத்துக் கெடக்க வேண்டியதாக இருக்கு!”என அவர்களிடம் நொடித்துக் கொண்டார் ராஜகுமாரி.
“மன்னிச்சிருங்கம்மா. இன்னைக்குக் காட்டில் வேலை கொஞ்சம் அதிகம். அதே மாதிரி நாங்க நம்மளோட மத்த நிலபுலனுக்கும் போய் மேற்பார்வைப் பார்த்துட வந்தோம். அதனால் தான் நாங்க வரத் தாமதம் ஆயிடுச்சு!”என்று அவரிடம் கேட்டுக் கொண்டான் திருவாதிரன்.
உடனே,”ஆமாம் குமாரி”என்று தானும் அதை ஒப்புக் கொண்டார் நஞ்சுண்டன்.
அதைக் கேட்டுத் தனது ஆற்றாமையை விடுத்து,”சரி, சரி. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் போய்க் கை, காலைக் கழுவிட்டு வாங்க. இல்லைன்னா இன்னும் தாமதம் ஆகிடும்”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் ராஜகுமாரி.
உடனே தாங்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லைப்புறத்திற்குச் சென்று தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு விட்டுச் சில நிமிடங்களிலேயே அங்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள் திருவாதிரன் மற்றும் நஞ்சுண்டன்.
அனைவரும் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து விடவும் அவர்களுக்கான உணவுகள் பரிமாறப்பட்டது.
அவற்றை உண்டு கொண்டே, தான் அவர்கறுடன சேர்ந்து காட்டிற்கு வரப் போகும் விஷயத்தைப் பற்றித் தன் தந்தை மற்றும் தம்பியிடம் அறிவித்தான் அறிவொளி.
அதைக் கேட்டதும் அவர்கள் இருவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து போயிற்று.
“நீ ரொம்ப நல்ல முடிவை எடுத்து இருக்க அண்ணா!”என்று தமையனிடம் புன்னகையுடன் கூறினான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். நீயும் அங்கே வந்துட்டால் எங்களுக்கும் பாதி வேலைக் குறைஞ்சா மாதிரி இருக்கும்!”என்று தானும் தன் மூத்த மகனின் முடிவை ஊக்குவிக்கும் வகையில் பேசினார் நஞ்சுண்டன்.
“ஆமாம். உனக்கும் குழந்தைப் பிறக்கப் போகுதுல்ல? அதனால் உனக்கு இன்னும் பொறுப்புக் கூடிடுச்சுன்னு அர்த்தம்! அதைப் புரிஞ்சு நடத்துக்கோ”என்று அறிவொளிக்கு அறிவுறுத்தி விட்டு,
“நீங்க ரெண்டு பேரும் எப்போ எங்களுக்கு நல்லச் சேதியைச் சொல்லப் போறீய?”என்று தன் இளைய மகன் மற்றும் அவனது மனைவியிடம் கேட்டிருந்தார் ராஜகுமாரி.
அதில் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்து வெட்கப் புன்னகைப் புரிந்து கொண்டனர்.
அதை அவதானித்து விட்டு,”அப்போ கூடிய சீக்கிரத்திலேயே அந்தச் சேதியை எங்களுக்குச் சொல்லப் போறீய! அப்படித் தானே?”என்று அவர்களைப் பார்த்துக் கேலியாக வினவி இருந்தார்.
“ம்மா!”எனத் தனது அன்னையைப் பொய்யாக கடிந்து கொண்டான் திருவாதிரன்.
ஆனால் பூவிழியால் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை எனலாம்!
அதனாலேயே நாணம் மேலிடத் தங்கையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“சரி. சீக்கிரம் சாப்பிடுங்க. அடுத்த வேலைகளைப் பார்ப்போம்”எனக் கூறி அந்தச் சூழ்நிலையை இலகுவாக்கினார் ராஜகுமாரி.
ஆனாலும் தனது முணுமுணுப்பு வார்த்தைகளால் தமக்கையைச் சீண்டிக் கொண்டு தான் இருந்தாள் செந்தாழை.
அதில் சிவந்த தன் முகத்தை அனைவரிடமும் இருந்து மறைத்துக் கொண்டு ஒருவாறு உணவை உண்டாள் பூவிழி.
சிறிது நேரத்திலேயே தாங்கள் அனைவரும் உணவை உண்டு முடித்து விட்டதும்,
“நாங்கப் போயிட்டு வர்றோம்”என்று மூன்று பெண்களிடமும் விடைபெற்றுக் கொண்டு திருவாதிரன் மற்றும் நஞ்சுண்டனுடன் சேர்ந்து தானும் ஜீப்பில் ஏறித் தங்களது காட்டிற்குச் சென்று விட்டிருந்தான் அறிவொளி.
உடனே தாங்கள் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் உரையாடத் தொடங்கி விட்டார்கள் ராஜகுமாரி, செந்தாழை மற்றும் பூவிழி.
அப்போது,”நீ என் கூட வா”எனத் தன் இளைய மருமகளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுத் தனது அறைக்குக் கூட்டிச் சென்று அங்கேயிருந்த அடுக்குப் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்தார் ராஜகுமாரி.
அவரது செய்கையைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழி.
அந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து அவளிடம் நீட்டினார் மாமியார்.
உடனே அதைக் கண்டுத் திடுக்கிட்டுப் போய்,”நீங்க என்னச் செய்றீயத்தை? எனக்கு எதுக்கு இதெல்லாம்?”என்று அவரிடம் வினவவும்,
“நீ ஏன் இப்படி கூறுகெட்டத்தனமாக கேட்கிற? இதையெல்லாம் உனக்குக் தராமல் வேற யாருக்குத் தருவாக? நீயும் தானே இந்த வீட்டோட மருமவ? இந்தா பிடி!”என்று அவளது கரத்தை விரித்து அதில் அந்த நகைகளை வைத்தார் ராஜகுமாரி.
அதில் திகைத்துப் போனவளோ,“அத்தை!”என்றிருந்தாள் பூவிழி.
“என்னடி இப்படி திகைச்சுப் போய் நிக்கிறவ?”என்று அவளிடம் கேட்க,
“எனக்கு இதெல்லாம் போட்டுப் பழக்கம் இல்லத்தை”என்று கம்மிய குரலில் மொழிந்த மருமகளிடம்,
“அதுக்கென்ன? இனிமேல் பழகிக்கோ. இப்போ வா போகலாம்”என்று அவளுக்கு அறிவுறுத்தி விடவும்,
அவரிடம் மறுப்பைத் தெரிவிக்கக் கூட நிதானம் இல்லாமல் அவரைப் பின் தொடர்ந்து கூடத்திற்குச் சென்றாள் பூவிழி.
“இவளோட கழுத்துக், காது, கை எல்லாம் வெறிச்சோடிப் போய் இருக்கு! அதனால் தான் உனக்குக் கொடுத்தால் மாதிரி இவளுக்கும் சில நகைகளைக் கொடுத்தேன்”எனத் தன் மூத்த மருமகளிடம் கூறியிருந்தார் ராஜகுமாரி.
அதைக் கேட்டு முன்பைப் போல் தமக்கையின் மீது பொறாமைக் கொள்ளாமல் அவளைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்து விட்டு,
“இதை எல்லாத்தையும் இப்போவே போட்டுக்கோ அக்கா! நான் வேணும்னா உதவிப் பண்ணவா?”என அவளிடம் கேட்டிருந்தாள் செந்தாழை.
“ம்ஹூம். வேணாம் டி”என்றவளோ,
“என்னால் இதை எல்லாத்தையும் போட்டுக்க முடியாது அத்தை. ஏன்னா, நான் காட்டுக்கும் போயிட்டு வந்துட்டு இருப்பேன்ல? அதனால் இதைப் போட்டுக்கிட்டால் அங்கே எனக்குப் பாதுகாப்பு இருக்குமான்னுத் தெரியலை! அதான் சொல்றேன்த்தை”என்று தன் மாமியாருக்குச் சொல்லிப் புரிய வைக்க முயன்றாள் பூவிழி.
“ம்ஹ்ம். நீ சொல்வதும் சரி தான். ஆனால் இதில் இருக்கிற சின்னச், சின்ன நகைகளையாவது போட்டுக்கோ”என்றுரைத்தார் ராஜகுமாரி.
உடனே அவரது அந்த அறிவுறுத்தலை மொத்தமாக ஒதுக்கித் தள்ள வேண்டாம் என்றெண்ணிக் கொண்டு,
“சரிங்கத்தை”எனக் கூறி அப்போதே அதிலிருந்த சிறிய தோடு, செயின் மற்றும் வளையல்களை அணிந்து கொண்டாள் பூவிழி.
அதில் திருப்தி அடைந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்கள் மற்ற இரு பெண்களும்.
அதே சமயம் தங்களது காட்டிற்கு வந்து சேர்ந்ததும் அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைத்து வேலையாட்களும் தனக்கு வணக்கம் வைப்பதைக் கவனித்து விட்டுத் தானும் அவர்களுக்குப் பதில் வணக்கம் வைத்தான் அறிவொளி.
அதற்குப் பின்னர், தங்களது அலுவலக அறைக்குள் நுழைந்து அந்தக் காட்டைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தங்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டு இருந்தனர் திருவாதிரன், நஞ்சுண்டன் மற்றும் அறிவொளி.
அந்தக் காட்டைப் பற்றித் தனக்குத் தெரியாத அனைத்தையும் அவர்களிடம் பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டு,
“நான் இப்போ போய்க் காட்டைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்”என்று மற்ற இருவரிடமும் அறிவித்து விட்டு அவ்வறையை விட்டு வெளியேறி விடவும்,
அவன் சென்றப் பிறகு,”உங்கண்ணன் இப்போ பொறுப்பானவனாக மாறிட்டான்ல?”என்று தன் இளைய மகனிடம் வினவினார் நஞ்சுண்டன்.
அதை தானும் ஒப்புக் கொண்டு,”ஆமாம்ப்பா. அவரு முன்னாடி இருந்ததுக்கு இப்போ ரொம்பவே பொறுப்பாக மாறிட்டாரு!”என்றிருந்தான் திருவாதிரன்.
“நீங்க ரெண்டு பேரும் இப்படியே கடைசி வரைக்கும் இருந்தால் நல்லது தான்”எனக் கூறி விட்டிருந்தார் அவனது தந்தை.
அப்போது,”என்ன இன்னைக்குப் பூவிழியைக் காணலை? ஒருவேளை அவளுக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லையோ? அவகிட்டே இன்னைக்குப் பேசலாம்னு இருந்தேன்”என்று தன்னுடைய சக தோழியிடம் பகிர்ந்து கொண்டாள் அந்தக் காட்டில் வேலை செய்யும் பெண்ணான ஆம்பல்.
“அப்படியும் இருக்கலாம் டி. அதுவும் இல்லாமல் இன்னைக்கு வித்தியாசமாக நம்ம மூத்தவரு வந்து இருக்காரு பாரேன்!”என்றுரைத்தாள் அவளது நண்பியான அஞ்சலை.
“ஆமாம் டி! நானும் இதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். என்னத் திடீர்னு அவரு இங்கே வந்திருக்காரு? பூவு வேற வரலையே! அப்போ இனிமேல் இந்த மூனுப் பேரும் மட்டும் தான் இங்கே வருவாகளா? அவ வர மாட்டாளா? அப்போ அன்னைக்குச் சின்னய்யா நம்மகிட்ட சொன்னது எல்லாமே சும்மா வாய் வார்த்தை தானா?”என்று அவர்களிடம் புலம்பினாள் மூன்றாமவளான நாகம்மை.
“எனக்கும் அது தான் தோணுது! எனக்கு அவ மேலே நம்பிக்கையே போயிடுச்சு!”என்றிருந்தாள் ஆம்பல்.
“இருங்கடி! உடனே நம்பிக்கையைக் கை விட்டுட வேண்டியது! நாளைக்குப் பூவு வர்றாளான்னுப் பார்ப்போம்! இல்லைன்னா சின்னய்யா கிட்டயே போய் நாமச் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுவோம்”என்று மற்ற இருவருக்கும் தைரியம் அளித்தாள் அஞ்சலை.
அதற்கு அவர்களும் சம்மதித்து விடவும் தத்தமது வேலையில் ஆழ்ந்தனர் அந்த மூன்று பெண்களும்.
அப்போது தங்களது காட்டை முழுமையாகச் சுற்றிப் பார்த்து விட்டுத் தங்களது அலுவலக அறையை அடைந்து,”ஆமாம்! அந்த முருகையன், சடையன் அப்பறம் விருமனை எங்கே காணலை? இன்னுமா அவங்க கிடைக்கலை?”என்று தனது தந்தை மற்றும் தம்பியிடம் வினவி இருந்தான் அறிவொளி.
அதில் சலிப்பான பார்வையை வெளியிட்டுக் கொண்டுத் தனது இளைய மகனைப் பார்த்தார் நஞ்சுண்டன்.
உடனே தன் தமையனுக்குப் பதில் சொல்லத் தயாராகி விட்டிருந்தான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக