தன்னுடைய அறையின் வாயிலில் நிழலாடுவதை தெரிந்து கொண்டதுமே அங்கே பார்வையைப் பதித்தான் திருவாதிரன்.
அங்குத் தன் மனைவிப் பூவிழியும், அவளுடன் சேர்ந்து சாமந்தி, வாடாமல்லி மற்றும் மரிக்கொழுந்தைக் கண்டதுமே,
“உள்ளே வாங்க”என்று அவர்களை அறைக்குள் நுழைய அனுமதித்தான்.
உடனே பூவிழி அந்த அறைக்குள் புக, அவளுக்குப் பின்னாலேயே தயங்கித், தயங்கி உள்ளே சென்றனர் மற்ற மூவரும்.
“உட்காருங்க”என்றதுமே,
அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர் மரிக்கொழுந்து மற்றும் வாடாமல்லி.
ஆனால் பூவிழி மற்றும் சாமந்தி அமர்வதற்கு நாற்காலிகள் இல்லாததால்,”நீ இவங்க ரெண்டு பேருக்கும் நாற்காலி எடுத்துட்டு வா”என அங்கேயிருந்த பணியாளரிடம் உத்தரவிட்டான் திருவாதிரன்.
அவரும் அதைச் செயலாற்றி விடவும், அதில் ஒரு நாற்காலியை மட்டும் தனக்கு அருகில் போடுமாறு கட்டளையிடவும் அதைப் புரிந்து கொண்டு அதில் உட்கார்ந்து கொண்டாள் பூவிழி.
மற்ற இருவரின் அருகில் போட்ட நாற்காலியில் அமர்ந்தாள் சாமந்தி.
“இப்போ சொல்லுங்க! அந்த மூனு பேரும் உங்க கிட்ட எப்படியெல்லாம் தவறாக நடந்துக்கிட்டாங்க? அதைப் பத்தி எல்லாம் பெரிய ஐயா கிட்டே எப்போதாவது புகார் கொடுத்து இருக்கீங்களா?”என்று அந்த மூவரிடமும் வினவினான் திருவாதிரன்.
உடனே முருகையன், சடையன் மற்றும் விருமன் தங்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதைப் பற்றிய முழு விவரங்களையும் அவனிடம் ஆதங்கத்துடனும், அழுகையுடனும் கொட்டித் தீர்த்து விட்டிருந்தார்கள் சாமந்தி, வாடாமல்லி மற்றும் மரிக்கொழுந்து.
அதைக் கேட்டதும் அவர்கள் மூவரும் தங்களது காட்டில் வேலை செய்யும் பெண்களிடம் இந்தளவிற்கு வரைமுறை இன்றித் தவறாக நடந்து கொண்டிருந்து இருக்கிறார்களே! என்றெண்ணிய இந்தக் கணவனும், மனைவியும் அதிர்ச்சியின் உச்சிக்கே போயிருந்தனர்.
“அவங்க உங்க கிட்ட இப்படியெல்லாம் நடந்து இருக்காங்களே! இதை உங்களுக்கு யார் கிட்டேயுமே சொல்லனும்னுத் தோனலையா? பெரிய ஐயா கிட்டேயாவது சொல்லி இருக்கலாம்லம்மா?”என்று அவர்கள் மூவரிடமும் ஆற்றாமையுடன் வினவினான் திருவாதிரன்.
அதில் விரக்திப் புன்னகையை உதிர்த்து விட்டு,”எங்களுக்கு யார் மேலேயும் நம்பிக்கையே இல்லீங்க ஐயா! இப்போ கூட இந்த விஷயத்தைச் சொல்றதுக்கு எங்களுக்குத் தைரியம் இல்லாமல் தான் இருந்துச்சு! ஆனால் அந்த மூனு பேரும் காணாமல் போனதும், நீங்க எங்ககிட்ட இவ்வளவு நம்பிக்கையாகப் பேசவும் தான் உங்க கிட்ட உண்மையைச் சொல்லலாம்னுத் தைரியம் வந்துச்சு. ஆனால் ஒரு தயக்கம் இருந்ததால் தான் உங்கப் பொண்டாட்டி கிட்டே பேசிட்டு அதுக்கப்புறம் உங்க கிட்ட விஷயத்தைச் சொல்ல வந்திருக்கோம்”என அவனுக்கு விளக்கம் அளித்தார்கள் அம்மூன்று பெண்களும்.
“ப்ச்! இப்படியே பயந்துட்டு இருந்தால் உங்களுக்கு இங்கே நடக்கிற அக்கிரமங்களை, பாலியல் சீண்டல்களை எல்லாம் வாய் விட்டு வெளியே சொல்லி அதுக்குக் காரணமானவங்களுக்கு எப்படி தண்டனை வாங்கித் தர முடியும் சொல்லுங்க? இதுவே கடைசியாக இருக்கட்டும்! இனிமேல் இப்படி இருக்காதீங்க!”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு,
“இதில் பெரிய ஐயாவுக்கும் பங்கு இருக்கா? அவர் உங்ககிட்டே அப்படி ஏதாவது…”என்று தயங்கிய திருவாதிரனால் அடுத்த வார்த்தையை உதிர்க்க முடியவில்லை!
உடனே தன் கணவனின் நிலையைப் புரிந்து கொண்டு,”பெரிய ஐயாவுக்கும், இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”என்று அந்த மூன்று பெண்களிடமும் கேட்டிருந்தாள் பூவிழி.
“ம்ஹூம் இல்லைச் சின்னம்மா! பெரிய ஐயாவுக்கும், இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு தான் நினைக்கிறோம்! ஏன்னா, அவர் ஒருநாளும் எங்களைத் தப்பாகப் பார்த்ததோ இல்லை, நடந்துக்கிட்டதோ இல்லை! அவர் எங்கப் பக்கத்தில் வந்து கூட நின்னது கிடையாது! எங்ககிட்டன்னு இல்லை, இங்கே வேலை செய்ற வேற எந்தப் பொண்ணுங்க கிட்டேயுமே அவர் தப்பாக நடந்துக்கிட்டது கிடையாது! ஆனால், அந்த மூனு பேருக்கும் இந்தக் காட்டில் எல்லையில்லாத உரிமையைக் கொடுத்தது தான்! அவங்க சொல்றது தான் வேத வாக்கு, நாங்க அதைக் கேட்டுத் தான் நடக்கோனும்ன்னு உத்தரவு போட்டிருந்தாரு! அது மட்டும் தான் அவர் பண்ணின ஒரே தப்பு! மத்தபடி அவர் ரொம்பக் கண்ணியமானவரு தான்!”என அந்தக் கணவன், மனைவியிடம் தெரிவித்தார் மரிக்கொழுந்து.
அதைக் கேட்ட பின்னர் தான், தனது தந்தையின் மீதானக் கொஞ்ச, நஞ்ச சந்தேகமும் திருவாதிரனுக்குக் காணாமல் போயிற்று!
அதேபோல் தன்னுடைய தந்தையின் குணத்தில் எந்தக் கேடும் என்பதை எண்ணி நிம்மதியும் பிறந்தது அவனுக்குள்.
உடனே,”இதுவே கடைசித் தடவையாக இருக்கட்டும். இனிமேல் உங்களுக்கு இங்கே என்னப் பிரச்சினை நடந்தாலும் அதை தயங்காமல் எங்கிட்டயோ, இல்லை, எம்பொஞ்சாதிக் கிட்டயோ வந்து சொல்லிடுங்க! அதை நாங்கப் பார்த்துக்கிறோம்! சரியா?”என்று அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் அளித்தான் திருவாதிரன்.
“சரிங்க சின்னய்யா”என்றார்கள் அந்த மூன்று பெண்களும்.
“அதே மாதிரி அந்த மூனு பேரையும் இன்னும் தேடிக் கண்டுபிடிக்க முடியலை! அப்படியே அவங்க இங்கே திரும்பி வந்தாலும் அவங்களை இங்கே வேலை செய்ய அனுமதிக்க மாட்டோம்! அதனால் நீங்கப் பயப்படாமல் உங்க வேலையைப் பார்க்கலாம்! இப்போ போங்க”என்று அவர்களிடம் கூறி அனுப்பி வைத்து விட்டுத் தன் இருக்கையில் இருந்து எழப் போனத் தன் மனைவியிடம்,
“நீ இரு”என்று அவளை அங்கே இருக்குமாறு அறிவுறுத்தினான் திருவாதிரன்.
உடனே தானும் அவனது அறிவுறுத்தலுக்கு இணங்கி, தனது நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்து கொண்டாள் பூவிழி.
“நீ நாளையில் இருந்து உந்தங்கச்சிக் கூட இருக்கிறதுக்குச் சம்மதம் சொல்லிட்டே தானே?”என்றவனிடம்,
“ஆமாங்க. உங்க முன்னாடி வச்சுத் தானே அதைப் பேசினோம்”என்க,
“ம்ஹ்ம். அது எனக்கும் தெரியும்! ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு விழி”என்று அவளிடம் தயக்கத்துடன் கூறியிருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும்,”என்னச் சிக்கலு - ங்க?”என்று விசாரித்தாள் பூவிழி.
“நீ இங்கே இருக்கிற வேலையை விட்டுட்டு அங்கே உந்தங்கச்சிக் கூடவே எப்பவும் இருக்கிறது எனக்குச் சரியாகப் படலை விழி”என்றவனைக் குழப்பமாகப் பார்த்து விட்டு,
“நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலைங்க”என்றவளிடம்,
“நீ இனிமேல் காட்டுக்கு வரலைன்னா இங்கே வேலை பார்க்கிறப் பொண்ணுங்களுக்கு என்ன ஆபத்து நடக்குதுன்னுத் தெரியாமல் போயிடும்! அதுவும் இல்லாமல் இப்போ தான் பொண்ணுங்க எல்லாரும் அவங்களோட தயக்கத்தை உடைச்சிட்டு அவங்களுக்கு நடந்த அநியாயத்தை எல்லாம் வெளிப்படையாக நம்ம கிட்டே சொல்லி இருக்காங்க! இவங்களைப் பார்த்து இன்னும், இன்னும் தங்களுக்கு நடந்த அக்கிரமங்களை எல்லாம் நம்ம கிட்டே சொல்ல வருவாங்க தானே? அதனால் தான் சொல்றேன். நீ இங்கே இருக்கிறது தான் இப்போதைக்கு நல்லது!”என்று அவளுக்கு வலியுறுத்தினான் திருவாதிரன்.
“அப்போ செந்தாவுக்கு என்னப் பதில் சொல்வதுங்க?”எனக் கேட்டிருந்தாள் பூவிழி.
அதில் சில நிமிடங்கள் யோசித்து விட்டு,”நீ தினமும் இங்கே வர வேண்டாம்மா. திங்கள், புதன், வெள்ளி வீட்டில் உந்தங்கச்சிக் கூட இரு. செவ்வாய், வியாழன், சனி இங்கே வந்துரு. ஞாயிற்றுக்கிழமை நாம ரெண்டு பேரும் வெளியே போகலாம். சரியா?”என்று மனைவிக்கு யோசனை கூறவும்,
அது அவளுக்கும் சரியெனப்பட்டதால்,“சரிங்க. எனக்கும் இதுக்குச் சம்மதம் தான்”எனக் கணவனிடம் கூறி விட்டாள் பூவிழி.
அதே சமயம் தனது மதிய உணவை உண்டு முடித்து விட்டுத் தனது இளைய மகன் மற்றும் மருமகளுக்கான உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டுக் காட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் நஞ்சுண்டன்.
தந்தையைக் கண்டதுமே,“உள்ளே வாங்கப்பா”என்று அவரை அறைக்குள் அனுமதித்தான் திருவாதிரன்.
அங்கே பூவிழியும் இருப்பதைக் கண்டு கொண்டு,“உங்களுக்குச் சாப்பாட்டைக் கொண்டு வந்திருக்கேன். சூடு ஆறுறதுக்குள்ளே சாப்பிட்ருங்க. நான் அதுவரைக்கும் இங்கே உள்ள வேலையைப் பார்க்கிறேன்”என்று இருவரிடமும் அறிவுறுத்த,
“சரிப்பா”என்றவனிடம்,
“ம்ஹ்ம். நான் வெளியே இருக்கேன்”என்றுரைத்து விட்டு அங்கேயிருந்து அகன்று விட்டார் நஞ்சுண்டன்.
உடனே சாப்பாட்டுக் கூடையில் இருந்த பாத்திரங்களை எடுத்து அதிலிருந்த உணவுகளைத் தாங்கள் இருவருக்கும் பரிமாறிக் கொண்டு உண்ணத் தொடங்கி விட்டார்கள் திருவாதிரன் மற்றும் பூவிழி.
சிறிது நேரத்திற்குப் பின்னர் உணவை உண்டு முடித்து விட்டுப் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்து வைத்து அவற்றைக் கூடையில் வைத்து விட்டுத் தங்களது வேலைகளைத் தொடங்கினார்கள் அவ்விருவரும்.
அப்போது,”நான் என்னமோ சின்னய்யா சும்மா தான் சொல்றாருன்னு நினைச்சா உண்மையிலேயே நம்மளைக் கூப்பிட்டு, விசாரிச்சுத், தைரியம் சொல்லி வேற அனுப்பி இருக்காரே! அதுவும் இல்லாமல் அந்தப் பூவிழிப் பொண்ணுமே நமக்கு இந்த விஷயத்தில் உறுதுணையாக இருந்தாள் பாருங்களேன்”என்று மற்ற இருவரிடம் ஆச்சரியத்துடன் கூறினார் மரிக்கொழுந்து.
“ம்ஹ்ம் ஆமாக்கா. நாங்க தான் முதல்லயே சொன்னோம்ல? நீங்க தான் கேட்கலை”என அவரிடம் நொடித்துக் கொண்டாள் சாமந்தி.
“சரி. அதை விடுங்க. இப்போ அந்த மூனு பேரால் இனிமேல் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது! வேற யாரும் ஏதாவது தொல்லைக் கொடுத்தாலும் அதையும் சின்னய்யாவோட காதுக்கு அப்போவே கொண்டுப் போயிடனும்”என்று அவர்கள் இருவருக்கும் அறிவுறுத்தினாள் வாடாமல்லி.
“ஆமாம். இனிமேல் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!”என்றவர்களின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு அக்கம், பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்றப் பெண்களுக்கும் கூட திருவாதிரன் மற்றும் பூவிழியின் மீது நம்பிக்கை உருவாகத் தொடங்கி விட்டிருந்தது.
அன்று மாலையில் தங்களது வீட்டில் சிற்றுண்டி மற்றும் காப்பிக் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில்,”செந்தா! நான் உங்கிட்டேயும், அறிவொளி கிட்டேயும் கொஞ்சம் பேசனுமே”என்றிருந்தாள் அவளது தமக்கை.
அதைக் கேட்டவளும் கூட,“ம்ம். சொல்லுக்கா”என்று அவளை நோக்கவும்,
“நான் தினமும் உன் கூட இருக்க முடியாதுடி”என்றதுமே,
தனது அக்காவைச் சோகமாகப் பார்த்தாள் செந்தாழை.
உடனே,”ஏய்! அதுக்காக உன் கூட எப்பவும் இருக்கவே மாட்டேன்னு நான் சொல்ல வரலை டி! நான் என்னச் சொல்ல வர்றேன்னு முழுசாக கேளு”என்றவளோ,
தானும், தனது கணவனும் மதியம் தங்கள் காட்டின் அலுவலக அறையில் உரையாடிய விஷயத்தைப் பற்றி அவளிடம் தெரிவித்தாள் பூவிழி.
“ஓஹ்! இது தான் விஷயமா? எனக்கு இதில் சம்மதம் தான்க்கா”என்று கூறிய செந்தாழையோ,
தனது கணவனைப் பார்த்து,“உங்களுக்கு?”என்க,
“நாம இவங்களோட தனிப்பட்ட விருப்பத்தையும் மதிக்கனும் தானே? அதனால் எனக்கும் சம்மதம் தான்ம்மா”என்றுரைத்து விட்டான் அறிவொளி.
இந்த உரையாடல்களை அவதானித்து விட்டுத் தாங்கள் ஒருவரையொருவர் தங்களது புருவத்தை உயர்த்திப் பார்த்துக் கொண்டனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அதற்குப் பிறகு அன்று இரவு நேரத்தில் தங்களது அறைக் கட்டிலில் தங்கள் இதழ்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ள, ஒருவரின் உடலை மற்றொருவர் தங்களின் ஆளுமைக்குக் கொண்டு வந்திருந்தார்கள் திருவாதிரனும், பூவிழியும்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக