அங்கே தங்களது நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த முருகையன், சடையன் மற்றும் விருமனும் இவனைப் பார்த்ததுமே,
“சின்னய்யா! எங்களை விட்ருங்க. இதுக்கு மேலே எங்களுக்கு நடக்கிறச் சித்திரவதைகள் எல்லாம் எங்களால் தாங்கிக்கவே முடியலை! எங்க உடம்பில் இருந்த தெம்பு மொத்தமும் வடிஞ்சுப் போயிடுச்சு! நாங்க எங்கப் பொண்டாட்டி, புள்ளைகளைப் பார்க்கப் போவனும்! அவங்களை நினைச்சுப் பார்த்தாவது எங்களை இந்த முறை விட்டுடுங்களேன்!”என்று திருவாதிரனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.
அவனோ,“அப்படியா? ஆனால் நீங்க எம்பொஞ்சாதிக் கிட்ட மட்டுமில்லாமல் எங்கக் காட்டில் வேலை செய்ற மத்தப் பொண்ணுங்க கிட்டேயும் வாலாட்டி இருக்கீங்களாம்! அதைப் பத்தின சேதி என் காதுக்கு வந்துடுச்சே! அதைக் கேட்ட அப்பறமும் நான் எப்படி உங்களை இப்படியே போக விட்டுட முடியும்? நீங்களே சொல்லுங்க?”என்று அவர்களிடம் கர்ஜித்தான்.
அதைக் கேட்டதும் அவர்களது மூவரின் உடலில் இருந்த கொஞ்ச, நஞ்ச சக்தியும் வடிந்து போய் விட்டிருந்தது எனலாம்!
அதேபோல் அவனைத் திகிலுடன் நோக்கினர் முருகையன், சடையன் மற்றும் விருமன்.
“என்ன இப்போ உங்ககிட்ட இருந்து எந்தச் சத்தத்தையும் காணோம்? எனக்கு இன்னும் அந்த முழு உண்மைகள் எல்லாம் தெரியாது தான்! ஆனால் எங்கக் காட்டுக்குள்ளேயே பொம்பளைங்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் அவங்க கிட்ட வரம்பு மீறி நடந்து இருக்கீங்க! இப்போ எங்கக் காட்டுக்குள்ளே நீங்கப் பண்ண எல்லா தப்புக்களையும் ஒன்னு விடாமல் உங்க வாயாலேயே எங்கிட்ட வாக்குமூலமாகச் சொல்லப் போறீங்க!”என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான் திருவாதிரன்.
உடனே அவனது காட்டில் தாங்கள் மூவரும் செய்த அக்கிரமங்களையும், அராஜகங்களையும் ஒன்று விடாமல் அவனிடம் சொல்லத் தொடங்கினார்கள் அந்த மூவரும்.
இவர்கள் அங்கே வேலை செய்யும் இளம் பெண்கள் மட்டுமின்றி நடுத்தர வயது பெண்களிடமும் வரம்பு மீறி நடந்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
அதேபோல், தங்களிடம் அடங்காமல் முரண்டுப் பிடிக்கும் பெண்களை நஞ்சுண்டனிடம் அவர்களது வேலை சரியில்லை என்றும், கைச் சுத்தம் இல்லை என்றும் புகாரளித்து அவரை வைத்தே அந்தப் பெண்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு இருக்கின்றனர்!
அதைக் கேட்டுத் தனது கண்களில் சிவப்பேற அவர்களைக் கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்து,
‘நல்லவேளை அந்தப் பெண்களிகளிடம் இவர்கள் மூவரும் அத்துமீறி நடந்து அவர்களது மானத்திற்கும், உயிருக்கும் எந்தப் பங்கமும் வரவில்லை என்று நிம்மதியாக எண்ணிக் கொண்டான் திருவாதிரன்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அறிந்து கொள்ள விழைந்தான்.
அதனாலேயே,”இதுக்காகவே உங்களைச் சும்மா விடப் போவதில்லை நானு! நீங்கத் தப்பாக நடந்துக்கிட்ட அந்தப் பொண்ணுங்க கிட்டே எல்லாம் பேசி, விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் வந்து வச்சிக்கிறேன் கச்சேரியை!”என அந்த முருகையன், சடையன் மற்றும் விருமனுக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு, அவர்களின் கதறல்களுக்குச் செவி மடுக்காமல்,
”இவனுங்களைப் பத்தி இன்னும் முழுசாக, விவரமாகத் தெரிஞ்சதுக்கு அப்பறம் நான் மறுபடியும் இங்கே வருவேன். அதுவரைக்கும் இவனுங்களை உயிரோட விட்டு வைங்க”என்று தன்னுடைய விசுவாசிகளுக்கு உத்தரவிட்டு விட்டு அங்கேயிருந்து கிளம்பிக் காட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் திருவாதிரன்.
அப்போது, தன்னிடம் சொல்லி விட்டுச் சென்றதைப் போலவே மதியச் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்திருந்த மகனைக் கண்டதுமே,”என்னடா அங்கே எல்லாம் சரியாக இருக்கா?”என்று அவனிடம் விசாரித்தார் நஞ்சுண்டன்.
“ம்ஹூம். இல்லப்பா. ஆனால் இனிமேல் எல்லாம் சரியாக நடக்க ஆரம்பிச்சிடும்! நான் நடக்க வச்சிடுவேன்! ஆனால் இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் சரி செய்யனும்ல? அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கப் போறேன்”என்று அழுத்தமாக கூறவும்,
உடனே அவனைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தவருக்கோ, மகனின் வார்த்தைகளில் இருந்த உள்ளர்த்தம் நன்றாகப் புரிந்து விட்டிருந்தது.
அதனாலேயே,”ம்ஹ்ம். நீ சொல்வதும் சரி தான் திரு. நீயும், உங்கண்ணனும் தலையெடுத்து, இப்போ கல்யாணத்தையும் பண்ணியாச்சு! அப்பறம் என்ன? நான் எல்லா சொத்தையும் சரிசமமாக உங்க ரெண்டு பேருக்கும் சரிசமமாகப் பங்குப் போட்டுப் பிரிச்சுக் கொடுத்துட்டு அதோட பொறுப்பை எல்லாம் உங்கிட்டேயும், அறிவு கிட்டேயும் ஒப்படைக்க வேண்டியது தான் பாக்கி! அதுவும் கூடிய சீக்கிரத்திலேயே நடந்துடும்”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
“அதுக்கு இப்போவே என்ன அவசரம்ப்பா? நீங்க எங்ககிட்ட எல்லா சொத்தையும் கொடுத்து, மொத்தப் பொறுப்பையும் எங்ககிட்ட ஒப்படைச்சாலும் எங்க நிர்வாகம் எப்படி இருக்குன்னு நீங்க அதுக்கப்புறம் தான் நல்லா பார்த்து தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமானப் பொறுப்பு உங்களுக்கும் இருக்கு! அதனால் நான் உங்களை அவ்வளவு சீக்கிரத்தில் வீட்டில் ஓய்வெடுக்க விட்டுட மாட்டேன்!”என்றவனை தனது எச்சிலை விழுங்கிக் கொண்டுப் பயத்துடன் நோக்கவும்,
“நீங்க வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க. அப்படியே எங்களுக்கான சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பச் சொல்லுங்கப்பா. பசி உயிர் போகுது!”என்று தந்தைக்கு அறிவுறுத்தினான் திருவாதிரன்.
அதைக் கேட்டவுடனேயே,”சரிடா”என்று அவனிடம் மொழிந்து விட்டு ஜீப்பில் ஏறித் தங்களது வீடு நோக்கிப் பயணமானார் நஞ்சுண்டன்.
அதே நேரத்தில் தங்களது அறையில்,”ரொம்ப ரொம்ப நன்றி மாமா”எனத் தன் கணவனின் முகம் முழுவதும் முத்தங்களை அள்ளிக் கொடுத்தாள் செந்தாழை.
அந்த முத்த மழையில் நனைந்து ஒரு வழியாகிக் கொண்டிருந்த அவளது கணவன் அறிவொளியோ,”போதும்மா! எனக்கு என்னவோ போலக் குறுகுறுன்னு இருக்கு! நீ மாசமாக இருக்கேன்னுத் தான் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டுத் தள்ளி இருக்கேன்! ஆனால் நீ என்னடான்னா அந்தக் கட்டுப்பாட்டை உடைச்சு விட்ருவ போலவே!”என்று அவளிடம் ஏக்கம் மற்றும் ஆதங்கத்துடன் கூறினான்.
“அச்சோ மாமா!”என்றவளோ,
அவனது மார்பில் சாய்ந்து கொண்டு,
“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கேன்! ஏன் தெரியுமா? என் அக்கா பூவு என் பிரசவம் முடியிற வரைக்கும் என் பக்கத்திலேயே இருக்கிறதுக்கு ஒத்துக்கிட்டா! அவ மாட்டேன்னுச் சொல்லிடாவாளோன்னு ரொம்பவே கலக்கமாக இருந்துச்சு எனக்கு! ஆனால் அவ இதுக்குச் சம்மதம்ன்னுச் சொன்னதுக்கு அப்பறமாகத் தான் என் மனசே அமைதி ஆச்சு! நான் இங்கே வந்ததில் இருந்து அக்காவைக் கண்டுக்காமலேயே இருந்துட்டேன் மாமா! அவளைப் பத்திக் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காமல் என்னோட சுயநலத்தை மட்டும் பிரதானமாக நினைச்சு அவளைக் கவனிக்காமல் விட்டுட்டேன்! அதை நினைச்சா குற்ற உணர்ச்சியாக இருக்கு”என்று கழிவிரக்கத்துடன் மொழிந்த மனைவியிடம்,
“உன்னை மாதிரி தான் நானும் எந்தம்பியைக் கண்டுக்காமல், அவனைப் புரிஞ்சிக்காமல் விட்டுட்டேன்! ஆனால் அவன் எனக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து இருக்கியான்! நான் அதையெல்லாம் புரிஞ்சிக்காமல் அவன் என்னைக் கட்டுப்படுத்துறியான்னு நினைச்சிட்டு அவம் மேலே வன்மத்தைக் கக்கிட்டு இருந்து இருக்கேன்! அதே மாதிரி, நம்ம விஷயத்தில் கூடப் பாரு! நான் உன்னைப் பத்தி வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தேன்! ஆனால் அவன் தான் நம்ம விஷயத்தைக் கண்டுபிடிச்சு நமக்கு ஒரு அடையாளத்தையும், கௌரவத்தையும் கொடுத்து இருக்கான்! அதையும் நான் தப்பான கோணத்தில் தான் பார்த்தேன்! அதில் அவம் மேலே இன்னும் எனக்கு அதிகமான வெறுப்புத் தான் ஏற்பட்டுச்சு! ஆனால் இப்போ பொறுமையாக, நிதானமாக எல்லாத்தையும் யோசிச்சுப் பார்க்கும் போது தான் அவன் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு நல்லது மட்டும் தான் பண்ணி இருக்கியான்னுப் புரிஞ்சது! இனிமேல் நானும் அவனுக்கு நம்ம நிலபுலன்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் உதவி செய்யலாம்னு முடிவெடுத்து இருக்கேன்ம்மா”என்று அவளிடம் விளக்கமாகச் சொல்லி முடித்திருந்தான் அறிவொளி.
அதை தானும் பொறுமையாக கேட்டு முடித்து விட்டு,”ம்ஹ்ம். எனக்கும் இது தான் சரியான விஷயமாகத் தோணுது மாமா! நீங்க இனிமேல் உங்களோட தம்பிக்கு உறுதுணையாக இருங்க! நான் என் அக்கா கூடப் பேசிச், சிரிச்சு, அவங்க கூட என்னோட நேரத்தைச் செலவழிக்கிறேன்!”என்று அவனிடம் தெரிவித்து இருந்தாள் செந்தாழை.
“சரிம்மா. நம்மளோட இந்த முடிவை இன்னைக்கு ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் எல்லார் கிட்டேயும் நாமச் சொல்லிடலாம்”என்றுரைத்து விட்டு அவளுடன் சேர்ந்து மதியச் சாப்பாட்டை உண்ணச் சென்றார்கள் அந்தக் கணவனும், மனைவியும்.
அவர்களுக்கு முன்பாகவே சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டு,”இன்னும் என்ன தான் செஞ்சிட்டு இருக்கீயடி? வெரசா சாப்பாட்டைக் கட்டி எடுத்தாருங்க!”என்று சமையலறையைப் பார்த்துச் சத்தமிட்டுக் கொண்டு இருந்தார் ராஜகுமாரி.
அவருக்கு எதிரில் இருந்த இரண்டு நாற்காலிகளிலும் அமர்ந்து கொண்ட அறிவொளி மற்றும் செந்தாழையைக் கண்டதுமே,
“நீங்களாவது சீக்கிரம் வந்தீயளே! இந்த மனுஷனை இன்னும் காணலை! மதியச் சாப்பாட்டைச் சாப்பிட்டால் ஒரு வேலை முடியும்னுச் சொன்னால் யாருக் கேட்கிறா”என்று அவர்களிடம் புலம்பிய நேரத்தில் வீட்டினுள் நுழைந்து விட்டிருந்தார் நஞ்சுண்டன்.
அவரைப் பார்த்ததுமே,“இந்தா அவுக வந்தாச்சு!”என்றவரோ,
“உட்காருங்க”எனக் கணவனை அமரச் செய்து விட்டு,
“இன்னும் என்னத்த தான் பண்றீயளோ? பெரிய ஐயா வந்துட்டாரு. யாராவது வந்து எங்களுக்குச் சாப்பாட்டைப் பரிமாறுங்க! உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்!”என்று வேலையாட்களுக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி.
உடனே அவர்களும் அங்கே வந்து பாத்திரங்களில் ஆவி பறந்து கொண்டிருந்த உணவு வகைகளை மேசையில் அடுக்கி விட்டு அந்த நால்வருக்கும் உணவைப் பரிமாறத் தொடங்கி விட்டார்கள்.
“சாப்பாட்டுக் கூடைத் தயாரா?”என அவர்களிடம் கேட்டு விட்டு உணவை ருசிக்கவும்,
“ஆங்! எல்லாம் தயாராக இருக்குங்கம்மா”என்று பவ்யமாக உரைத்தார் அந்த வீட்டின் தலைமைச் சமையல்காரப் பெண்மணி.
“அப்போ கூடையைக் கொண்டு வந்து இங்கே வைக்கத் தானே? நீங்க எல்லாரும் இங்கே வேலைக்குப் புதுசாகச் சேர்ந்து இருக்கீங்க பாருங்க! அதனால் ஒவ்வொன்னையும் சொல்லிக் கொடுத்தால் தான் செய்வீக! அப்படித் தானே?”என்றவருக்குப் பதிலளிக்க நினைத்தாலும் கூட அவர் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டார் என்பதாலேயே அவரது வசவுகளைக் காதில் மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார் அந்தப் பெண்மணி.
“சரி. அவங்களை விடுங்கத்தை. நீங்கச் சாப்பிடுங்க”என அவரை மலையிறக்கும் விதமாகப் பேசினாள் செந்தாழை.
அதைக் கேட்டுக் கொஞ்சம் தணிந்து விட்டு உணவுண்பதில் கவனத்தைப் பதித்தார் ராஜகுமாரி.
அதே நேரத்தில், தங்களது காட்டில் வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய மனைவியைத் தேடிச் சென்று,”நேத்து உங்கிட்ட புகார் சொன்ன அந்த ரெண்டுப் பொண்ணுங்களையும் கூட்டிட்டு அலுவலக அறைக்கு வந்து சேரு விழி”என அவளிடம் தெரிவித்து விட்டுப் போனான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும் சாமந்தி மற்றும் வாடாமல்லியிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களைத் தன்னுடன் வருமாறு அழைப்பு விடுக்க,
அப்போது,”நானும் உன் கூட வர்றேன் பூவு”என்ற மரிக்கொழுந்தை வியப்பாகப் பார்த்து விட்டு அவருடன் சேர்த்து மற்ற மூவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அலுவலக அறையின் வாயிலை அடைந்து இருந்தாள் பூவிழி.
- தொடரும்
இந்தக் கதையின் அடுத்தப் பதிவு திங்களன்று வெளியிடப்படும் நண்பர்களே!

கருத்துகள்
கருத்துரையிடுக