இரவு நேரத்தில் தங்களது கடை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினர் விருச்சிகன் மற்றும் உமாராணி.
அங்கே ஹால் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான் நீரஜ்.
“என்னடா வேலை முடிஞ்சு சீக்கிரம் வந்துட்ட போலயே?” என்ற தந்தையிடம்,
“ஆமாம்ப்பா” என்றவன்,
“சாயந்தரம் வந்ததும் காஃபி போட்டுக் குடிச்சிட்டேன்ம்மா. நைட் சாப்பாட்டை நானே செய்யவா?” எனத் தாயிடம் வினவினான் நீரஜ்.
உமாராணி,“வேண்டாம்டா”
“இருக்கட்டும்மா. நீங்களும், அப்பாவும் காலையில் கடைக்குப் போய் வேலை பார்த்துட்டு இப்போ தான் வர்றீங்க. ரொம்ப சோர்வாக இருப்பீங்க. அதான், நானே செய்றேன்” என்று கூறியவனைப் பார்த்துப் புன்னகைத்த விருச்சிகனோ,
“அவன் தான் அவ்ளோ சொல்றானேம்மா. அவனே சமைக்கட்டும்” என மனைவியிடம் சொல்ல,
“ம்ம். சரி” எனச் சம்மதம் தெரிவித்தவர்,
“மதியத்துக்குச் செஞ்ச குழம்பு இருக்கு. நீ சாதம் மட்டும் வச்சா போதும்” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் உமாராணி.
“ஓகேம்மா” என்று கூறி விட்டுச் சமையலறைக்குப் போனான் நீரஜ்.
அதே சமயம்,”பெரியம்மா கிட்டே கால் பேசிட்டு வரேன்டி” என்று தோழியிடம் கூறி விட்டு அறைக்குள் வந்து தன் செல்பேசியில் உமாராணிக்கு அழைப்பு விடுக்கவும்,
“பிரஹா தான் கால் பண்றா” என்று மகன் மற்றும் மகனிடம் உரைத்து விட்டு, பச்சைப் பொத்தானை அழுத்திக் காதில் வைத்தார்.
“ஹலோ பெரியம்மா” என்றவுடன்,
“ஹலோ பிரஹா. என்னம்மா சாப்பிட்டியா?” என அவளிடம் விசாரித்தார் உமாராணி.
“இல்லை பெரியம்மா. இனிமேல் தான். நீங்க மூனு பேரும் சாப்பிட்டாச்சா?” என்றாள் பிரஹாசினி.
“நாங்களும் இனிமேல் தான் சாப்பிடனும்மா. நீரஜ் தான் சாதம் வைக்கிறான்”
“அப்படியா பெரியம்மா? நான் அங்கே வந்ததும் நீங்க எனக்கும் அண்ணாவைச் சமைச்சுக் கொடுக்கச் சொல்லனும். சரியா?” என்று அவரிடம் கேட்டுக் கொள்ள,
“கண்டிப்பாகச் சொல்றேன்ம்மா” என்க,
“அப்பறம் பெரியப்பா வந்துட்டாரா?” என்று அவரிடம் வினவினாள் பிரஹாசினி.
“நானும், அவரும் ஒன்னாகத் தான் வீட்டுக்கு வந்தோம்மா” என்றார் உமாராணி.
“ஓஹ், சரி பெரியம்மா. ரமணி அத்தை வந்தாங்களா?” எனத் தயங்கிய பாவனையில் கேட்க,
“அவ வரலையே. ஏன் கேட்கிற?”
“நான் அங்கே இருந்து கிளம்பும் போது அவங்க வந்து பேசுவாங்கன்னு சொன்னீங்களே? அதான் கேட்டேன் பெரியம்மா” என்று அவரிடம் தன்னுடைய ஐயத்தை வெளிப்படுத்தவும்,
”அங்கே போயும் இதே நினைப்போட தான் இருக்கியா?” என்று அவளைக் கடிந்தார் உமாராணி.
பிரஹாசினி,“இல்லை பெரியம்மா… அது…!” எனத் தயங்கினாள்.
“உனக்கு என் மேல் நம்பிக்கையே இல்லைலடி!” என்று அவளிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
“ஐயோ! நான் உங்களை நம்பாமல் வேற யாரை நம்பப் போறேன் பெரியம்மா?”என்று அவரிடம் தவிப்புடன் வினவவும்,
“அப்பறம் எதுக்கு ரமணியை நினைச்சு இப்படி பயந்துட்டு இருக்கிற? நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! அவ நீ இருக்கிறப்போ வந்தாலும், இல்லாதப்போ வந்து கேட்டாலும், அவளோட மகனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்கிறோம்ன்னு நானும், உன் பெரியப்பாவும் வார்த்தையை விட்ற மாட்டோம்! எங்க மேல் நம்பிக்கை வச்சு இப்போதைக்கு உன்னோட வேலையில் மட்டும் கவனமாக இரு” என்று அவளுக்கு வலியுறுத்தினார் உமாராணி.
அவ்வளவு அறிவுரைகள் வழங்கியும், இப்போதும் இப்படியே கலக்கத்துடன் பேசுபவளை எண்ணி ஆத்திரம் வந்ததால் தான், இப்படி அழுத்திக் கூறி விட்டார் உமாராணி.
“சாரி பெரியம்மா. நான் இந்த வேலையை முடிச்சிட்டு ஊருக்கு வர்றேன்” என்றவுடன், சமாதானம் அடைந்தவர்,
“ம்ம். எனக்குப் பசிக்குது. நான் போய்ச் சாப்பிட்றேன். நீ பத்திரிமாக இரு” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்தார்.
“ம்மா! நான் சாதம் வச்சுக், குழம்பையும் சுட வச்சுட்டேன். நீங்களும் வந்துட்டா நாம மூனு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவரை அழைத்தான் நீரஜ்.
“இதோ வர்றேன்டா. உன் தங்கச்சி கிட்டே தான் பேசிட்டு இருந்தேன்” என அவனிடம் கூற,
“தெரியும்மா. நீங்கப் பேசினது கேட்டுச்சு” என்றவனோ, இரண்டு தட்டுக்களில், சாதம் போட்டுக், குழம்பை ஊற்றிக் கொண்டு வந்து தாய் மற்றும் தந்தையிடம் கொடுத்தான் மகன்.
அதைச் சாப்பிட்டவாறே,”பிரஹா என்ன சொன்னா உமா?” என மனைவியிடம் விசாரித்தார் விருச்சிகன்.
“அவ உங்க தங்கச்சியை நினைச்சுப் பயப்பட்றாள்ங்க” என்று உண்மையைப் போட்டுடைத்து விட்டார் உமாராணி.
“அவ ஏன் ரமணியை நினைச்சுப் பயப்படனும்?” எனக் குழப்பத்துடன் கேட்டார் அவரது கணவர்.
“அதான், நம்மப் பிரஹாசினியை சபரீஷூக்குக் கட்டிக் கொடுக்கிறதைப் பத்திப் பேச அம்மா வருவாங்கன்னு அவன் நீரஜ் கிட்ட சொன்னானே? ஞாபகம் இருக்கா?”
“ஆமாம். நேத்து தான் அதைப் பத்திப் பேசினோம். நான் கூட ரமணி வந்தால் பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டேனே? அப்பறம் என்னப் பயம்?” என்றார் விருச்சிகன்.
உமாராணி,“அது அவளுக்குப் போதாது போலங்க. வேலைக்குப் போன இடத்திலேயும் அதையே யோசிச்சிட்டு இருக்கா! என்கிட்டேயும் ரொம்ப பதட்டமாக கேட்டா”
அவர்களது உரையாடலில் கலந்து கொள்ளும் விதமாகத் தன்னுடைய உணவுத் தட்டுடன் அங்கே வந்து அமர்ந்தான் நீரஜ்.
விருச்சிகன்,“இதில் அவ பதட்டப்பட்றதுக்கு என்ன இருக்கு?”
“ரமணி வந்து பேசினால் நாம மனசு மாறி அவளோட பையனுக்கு இவளைக் கல்யாணம் செஞ்சி வைக்க ஒத்துக்குவோம்ன்னு தான்!” என்றவரைப் புரியாமல் பார்த்தார் அவரது கணவர்.
ஆனால், தாயின் வார்த்தைகளைத் தனயன் அவன் புரிந்து கொண்டான் போலும்.
அதனால்,”நான் உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்றேன்ப்பா” என்றவனைக் கூர்மையாக நோக்கினார் விருச்சிகன்.
நீரஜ்,”பிரஹாவைப் பொறுத்தவரை அவளோட அப்பாவும், அம்மாவும் இறந்ததுக்கு அப்பறம் நாம தான் அவளுக்கு எல்லாமே செய்றோம். அவ நம்மளைச் சார்ந்து தான் இருக்கா. அப்படி இருக்கிறப்போ, அவளுக்குக் கல்யாணமும் நாம தானே செஞ்சு வைக்கனும்?” என்றவனை இடைமறித்து,
“ஆமாம். அதை நாம தான் பார்க்கனும்” என்றார் அவனது தந்தை.
“கரெக்ட்! அப்படி நாம யாரைக் கைக் காட்டினாலும் அவங்களைத் தான் அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாக இருக்கும். நான் சொல்றது சரி தானேம்மா?” எனத் தாயிடம் வினவினான் நீரஜ்.
“சரியாகத் தான்டா சொல்ற” என்று அவனுக்குப் பதிலளித்தார் உமாராணி.
“ம்ஹ்ம், அப்படி இருக்கும் போது சபரீஷை மேரேஜ் பண்றதுக்கு உனக்குச் சம்மதமான்னு நீங்க கேட்டப்போ அவ என்னப் பதில் சொன்னா?” என்க,
“அதில் விருப்பம் இல்லைன்னு சொன்னா. நாம அதுக்கும் எதுவும் மறுத்துச் சொல்லலையே?” என்று கூறினார் விருச்சிகன்.
“நாம சொல்லலைப்பா. ஆனால், ரமணி அத்தைக்கு நீங்களும், சித்தப்பாவும் அண்ணன் முறை தானே? அப்படி இருக்கிறப்போ பிரஹாவைத் தன்னோட பையனுக்குப் பொண்ணுக் கேட்கிறதுல உரிமை இருக்குன்னு அவங்களுக்குத் தோனுச்சுப் போல. அதான், நான் மறுத்துப் பேசினாலும், வீட்டுக்கு வர்றேன்னு உறுதியாகச் சொல்லி இருக்காங்க. அப்படி அவங்க அந்த உரிமையோட உங்க கிட்ட வந்து வாதாடினால் நீங்க அவளை அவங்க வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வச்சிருவீங்களோன்னுப் பயப்பட்றா!” என்று சொல்லி முடித்து மூச்சு வாங்கியவனுக்கு அருந்த நீர் கொடுத்தார் உமாராணி.
அதை வாங்கிப் பருகிய மகனிடம்,”நீ முதல்ல சாப்பிட்டு முடி. இதை அப்பறம் பேசிக்கலாம்” என அவனிடமும்,
“நீங்களும் தான்! தட்டைக் காய விடாதீங்க!” என்று கணவனிடமும் வலியுறுத்தி விட்டுத் தன் உணவை உண்டு முடித்தார் அவனது அன்னை.
அதே நேரத்தில், இரவு உணவு முடிந்து வெகு நேரத்திற்குப் பிறகுச் சற்று முன்னர் தன் பெரியம்மாவிடம் பேசியதை நினைவிற்குக் கொண்டு வந்து அசை போட்டவளுக்குத் தனக்குப் பெரியம்மா கொடுத்த நம்பிக்கை வீண் போகாது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டவள்,
தன்னுடைய பெரியம்மாவும், பெரியப்பாவும் நிச்சயமாக ரமணி அத்தையையும், அவரது நோக்கத்தையும் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்பியவள் நிம்மதியான உறக்கத்தைத் தழுவினாள் பிரஹாசினி.
ஆனால், தன்னுடைய அறையில் உறங்காமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் அவளது வருங்கால நாயகன்.
ஏனென்றால், தன்னவள் தனக்கு அருகிலேயே இருப்பது போன்ற ஒரு மாயையில் உழன்று கொண்டு இருக்கிறான் திவ்யன்.
அவனது உள்ளுணர்வு அடங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே!
அதன் வெளிப்பாடாக அவளை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் அவனது உள்ளத்தில் நிரம்பி வழிந்தது.
அவளது புகைப்படம் கூட அவனிடம் இன்று வரையில் இருந்ததில்லை எனும் நிலையில் எவ்வாறு அவளைக் காண்பது? என்ற துக்கம் அவனுடைய தூக்கத்தைத் தூக்கிச் சென்று விட்டது.
தன்னுடைய செல்பேசியில் இருந்த அனைத்துக் கோப்புறைகளையும் தேடிப் பார்த்து விட்டான் திவ்யன்.
பிரஹாசினியின் பிரகாசமானப் புன்னகை கொண்ட எந்தப் புகைப்படமும் தன்னிடம் இல்லை என்ற உண்மை அவனுக்குக் கசந்தது.
“ப்ச்!” என்று தனது தலையில் தட்டிக் கொண்டவன், உறக்கம் வர வேண்டி நித்திராதேவியைப் பிரார்த்தித்து ஒருவாறு உறங்கி விட்டான் திவ்யன்.
அடுத்த நாள் காலையில், தன்னுடைய அலங்காரம் செய்யும் வேலைக்குச் செல்வதற்குத் தயாராகி கொண்டிருந்தவளோ,”நீங்க ஏன்ம்மா எழுந்தீங்க? நான் ரெடி ஆகிப் போக மாட்டேனா?” என்று குறிஞ்சியிடம் குறைபட,
“உன்னைக் காபியாவது குடிக்க வச்சு அனுப்பனும்ல? அதான்” என்றார்.
அதேபோல், தோழியும் எழுந்து வருவதைக் கண்டு,“நீயும் ஏன் எழுந்து வந்த?” என அவளிடம் கோபத்தைக் காட்டினாள் பிரஹாசினி.
“அப்பறம் உன்னை யார் அங்கே கூட்டிட்டுப் போய் விடுவா? நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று கூறி விட்டுச் சென்றாள் வினோதா.
அதற்குப் பிறகு, அவ்விருவரும் தயாராகி விட அவர்களைக் காபியைக் குடிக்க வைத்து அனுப்பினார் குறிஞ்சி.
திருமண மண்டபத்தின் வாயிலில், பிரஹாசினியை இறக்கி விட்டவள்,”வேலையை முடிச்சிட்டுக் கால் பண்ணுடி” என்று அறிவுறுத்தி விட்டுப் போனாள் வினோதா.
மண்டபத்தின் உள்ளே நுழைந்தவள், ஒரு நடுத்தர வயது பெண்மணியை அழைத்து, மணப்பெண்ணின் அறைக்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுச் சென்றாள் பிரஹாசினி.
“வாம்மா” என்ற மணமகளிடம்,
“இப்போ ஸ்டார்ட் பண்ணா தான் கரெக்ட் டைமுக்கு முடிக்க முடியும் மேம்” என்று தன் வேலையைத் தொடங்கியவள்,
“உங்களுக்கு நலங்கு ஃபங்ஷன் நடக்கலையா மேம்? கல்யாணத்துக்கு மட்டும் மேக்கப் புக் பண்ணீங்களே? அதான் கேட்கிறேன்” என்றாள் பிரஹாசினி.
“அந்த ஃபங்ஷன் நடந்துச்சு மேம். ஆனால், வீட்டிலேயே நலங்கு வைக்கச் சொல்லிட்டாங்க. அதனால், மேக்கப் போட வேண்டாம்ன்னு சாதாரணமாக முடிச்சிட்டோம்” என்று கூறினார் அந்த மணப்பெண்.
அதே சமயம், அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றவன், அதற்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் திருமண வைபவம் நிகழ்கிறது என்பதைக் காதைக் கிழிக்கும் பாட்டுச் சத்தத்தின் மூலமாக அறிந்து கொண்டவன்,
“இது என்னமோ நமக்கு ஒரு நல்ல மனநிலையைத் தர்ற மாதிரி இருக்குதே!” என்று எண்ணியவன், அந்தப் பாடல்களை மெல்ல முணுமுணுக்கத் தொடங்கி விட்டான் திவ்யன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக