ஆரவியின் வீட்டிற்குச் சென்ற மகுடபதி, சோமசுந்தரி மற்றும் திவ்யனை வரவேற்று, உபசரித்தவர்களை நலம் விசாரித்து முடித்த பின்னர்,
ஒரு தாம்பூலத் தட்டில் சுகந்த மணம் பரப்பும் மஞ்சள், மல்லிகைப் பூவுடன், வெற்றிலை, பாக்கு, பல வகைப் பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் தம்பதிகளுக்காக எடுத்த உடைகளையும் வைத்து,
அதை ரஞ்சித்தின் பெற்றோரிடம் நீட்டி,”இந்த மரியாதையை ஏத்துக்கிட்டு ரஞ்சித்தையும், ஆரவியையும் தலை தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க சம்பந்தி” என்று புன்னகையுடன் கூறினர் ஆரவியின் பெற்றோரும், தமையனும்.
அதைப் பெற்றுக் கொண்ட, முல்லையரசு மற்றும் அறக்கொடியும்,”கண்டிப்பாக அனுப்பி வைக்கிறோம் சம்பந்தி” என்று அவர்களுக்கு ஒப்புதல் அளித்தார்கள்.
அந்தத் தாம்பூலத்தை உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு வந்தாள் ஆரவி.
“ஊருக்குப் போகும் போது உங்க ரெண்டு பேரோட டிரஸ்ஸையும் மறக்காமல் எடுத்துட்டுப் போங்க” என்று அவளுக்கும், அவளது கணவனுக்கும் அறிவுறுத்தினார் முல்லையரசு.
“சரிப்பா” என்றான் ரஞ்சித்.
“நான் போய்ச் சாப்பாடு ரெடி பண்றேன்” என்று மகனுடைய புகுந்த வீட்டாரிடம் கறாராக உரைத்து விட்டுச் சமையலில் இறங்கினார் அறக்கொடி.
அவருக்கு உதவி செய்யச் சென்ற ஆரவியிடம்,”நீ அவங்க கூடப் போய்ப் பேசிட்டு இரும்மா” என்றவுடன்,
“பரவாயில்லை இருக்கட்டும் அத்தை. நீங்க மட்டும் தனியாக எப்படி சமைப்பீங்க? நானும் உதவுறேன்” என்று அவருடன் சேர்ந்து உதவி புரியத் தொடங்கினாள் மருமகள்.
“நாங்க பாட்டுக்கு உங்களை இவ்வளவு நாள் லீவ் போடுங்கன்னு சொல்லிக் கேட்டுட்டோம். உங்களுக்கு எதுவும் சங்கடம் இல்லையே மாப்பிள்ளை?” என்ற திவ்யனிடம்,
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” எனப் பதிலளித்தான் ரஞ்சித்.
அதன் பிறகு, உணவும் தயாராகி விட அனைவரும் உண்டு முடித்ததும், தன் தாய் சோமசுந்தரியிடம் சென்று அமர்ந்தாள் ஆரவி.
அவளிடம் இப்போது எந்தவொரு ரகசியமும் பேச முடியாது என்பதால் பொதுவான பேச்சில் ஆழ்ந்து விட்டனர் இருவரும்.
மாலையில் தயாராகி வந்தவர்கள், முல்லையரசு மற்றும் அறக்கொடியின் பாதங்களில் விழுந்து வணங்கியவர்களை,”தீர்க்காயுசோட வாழுங்க” என்று அவர்களை ஆசீர்வதித்ததும்,
தங்களுடைய உடமைகள் அடைக்கப்பட்ட பைகளை எடுத்துக் கொண்டு மகுடபதி, சோமசுந்தரி மற்றும் திவ்யனுடன் ஊருக்குக் கிளம்பினர் ரஞ்சித் மற்றும் ஆரவி.
இல்லத்தை அடைந்ததும்,”மாப்பிள்ளையை உன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போம்மா. நீயும் ரெஸ்ட் எடு” என்றார் மகுடபதி.
“சரிங்கப்பா” என்றவள், தன் கணவனுடன் அறைக்குள் போய் விட்டாள் அவரது மகள்.
“ம்மா, அவங்களுக்கு நைட்டுக்கு என்ன சமைக்கனும்னுக் கேட்டுச் செய்ங்க. நான் ரூமில் இருக்கேன். கடைக்குப் போகனும்னா என்னைக் கூப்பிடுங்க” என்று தாயிடம் அறிவுறுத்தி விட்டுச் சென்றான் திவ்யன்.
அங்கே அறைக் கட்டிலில் அமர்ந்திருந்த ஆரவி,”உங்களுக்குத் தூக்கம் வரலையா?” என்று கணவனிடம் கேட்க,
அவனோ,”இல்லை ஆரு. நான் கொஞ்ச நேரம் ஃபோனில் கேம் விளையாட்றேன்” என்றதும்,
“ஆரம்பிச்சுட்டீங்களா? என் அண்ணனை அனுப்பி வைக்கிறேன். அவர் கூடப் பேசிட்டாவது இருங்க. கேம் விளையாடதீங்க ப்ளீஸ்” என்றவுடன்,
“அப்போ சரி” என்றான் ரஞ்சித்.
அவனுக்குத் திவ்யனுடன் பேசுவது பிடிக்கும். ஏனெனில், ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுபவன், அதுவும் அவனிடமிருந்து நறுக்குத் தெறித்தாற் போலத் தான் இருக்கும். ஆனால், அவன் கூறும் அறிவுரைகள் மற்றும் தகவல்கள் அத்தனை பயனுள்ளதாக இருக்கும்.
எனவே தான், அவனுடன் எப்போதும் அளவளாவ ஆசைப்படுவான் ரஞ்சித்.
“அண்ணா, அவர் கூடக் கொஞ்ச நேரம் போய்ப் பேசிட்டு இருங்களேன். எனக்கு அம்மா கூடப் பேசனும்னு ஆசையாக இருக்கு” என்றவளிடம்,
திவ்யன்,“ஓகே ஆரு” என்க,
“நானும் வர்றேன்டா” என்ற மகுடபதியும், தன் மகன் மற்றும் மருமகனுடன் பேசச் சென்று விட்டார்.
உடனே, தன் தாயுடன் அறைக்கு வந்த ஆரவியிடம்,
“நல்லா இருக்க தானே ம்மா?” என்று அவளிடம் ஆதூரமாக விசாரித்தார் சோமசுந்தரி.
“ரொம்பவே நல்லா இருக்கேன்ம்மா”
“நீ உன்னை வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லவும், நான் ஏதோ உன் மாமனார், மாமியார் உன்னை நல்லா பார்த்துக்கலையோன்னு பதறிட்டேன்ம்மா. இங்கே வந்து பார்த்ததும் தான் மனசுக்கு நிம்மதியாக இருந்துச்சு” என்றவரிடம்,
“அச்சோ! அப்படியெல்லாம் அவங்க என்னை நல்லா பார்த்துக்கிறாங்கம்மா. நான் நம்ம வீட்டை மிஸ் பண்ணியதால் தான் அப்படி சொன்னேன்” எனக் கூறினாள் மகள்.
“அது எனக்குப் புரியுது ஆரும்மா” என்றவர்,
“உங்க அண்ணன் கிட்ட மாப்பிள்ளை இல்லாதப்போ பேசலாம். அப்போ தான், அவன் கிட்டே எல்லாத்தையும் வெளிப்படையாக கேட்க முடியும்” என அவளிடம் கூறினார் சோமசுந்தரி.
“சரிம்மா”
“அவர்கிட்ட நீ எதுவும் சொல்லிடலையே?”
“நமக்கே அந்த விஷயம் முழுசாகத் தெரியாத போது நான் அவர்கிட்ட எப்படிம்மா சொல்வேன்? எதுவும் சொல்லலை” என்று பதில் அளித்தாள் ஆரவி.
“அது போதும். நீ வந்ததுக்கு அப்பறம் தான் எனக்குத் தெம்பாக இருக்கு” என்றார் சோமசுந்தரி.
அதன் பின்னர், இரவுச் சாப்பாட்டிற்கு அதிகம் செய்ய வேண்டாம் என்று ரஞ்சித் கூறி விட, இட்லி, தோசை மற்றும் சட்னியுடன் உணவை முடித்துக் கொண்டனர்.
மறுநாள் காலை எழுந்து தாயாராகியதும்,”கடைக்குப் போய்ப் பட்டாசு வாங்கிட்டு வரலாமா மாப்பிள்ளை?” என்றான் திவ்யன்.
ரஞ்சித்,“ம்ம். போகலாம்ங்க”
உடனே அனைவரிடமும் தகவல் சொல்லி விட்டு அவ்விருவரும் கடைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.
“ஏங்க! ஆரவி வந்ததும் சொல்றேன்னு திவு சொன்னான்ல? இப்போ என்னடான்னா அவ வந்ததில் இருந்து அதைப் பத்தின பேச்சை எடுக்கவே மாட்டேங்கிறான் பாருங்க!” என்று மகனைப் பற்றிக் கணவனிடம் குறை கூறினார் சோமசுந்தரி.
“ஆமாம். நானும் அண்ணனைக் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். அவரோட நடவடிக்கை எதுவும் சரியில்லை” என்றுரைத்தாள் மகள்.
“அது தான் எல்லாரையும் வச்சிட்டுப் பேசுறேன்னு அவனே சொல்லி இருக்கானே? அப்பறமும் என்ன? அதுவரை பொறுமையாக இருக்க மாட்டீங்களா?” என அவர்களைக் கடிந்து கொண்டார் மகுடபதி.
“எங்களோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குங்க! அவன் வேணும்னே விஷயத்தைச் சொல்லாமல் தள்ளிப் போடுறா மாதிரி தெரியுது”என்றார் மனைவி.
“சரி. அவன் வீட்டுக்கு வந்ததும் கேட்போம்” எனக் கூற,
சோமசுந்தரி,“மாப்பிள்ளையை வச்சுக்கிட்டு எப்படி அதைப் பேச முடியும்ங்க?”
“வேறென்ன பண்ணனும்னு நீயே சொல்லும்மா” எனக் கூறினார் அவரது கணவர்.
“நான் வேணும்னா அவரை வெளியே எங்கேயும் போயிட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்ப்பா. அப்பறம் அண்ணன் கிட்ட பேசுவோம்” என்ற ஆரவியிடம்,
“ம்ம். அதை அவன்கிட்ட முதலில் கேட்டுக்கோங்க” என்றுரைத்து விட்டார் மகுடபதி.
“கண்டிப்பாக கேட்போம். வீட்டுக்கு வரட்டும்” என்றனர் தாயும், மகளும்.
இதே சமயம், கடைக்குப் போய் விட்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும் போது,”உங்க தங்கச்சிக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. இதுக்கப்புறம் உங்களோட கல்யாணம் தானே திவ்யன்? மாமாவும், அத்தையும் அந்தப் பேச்சை எடுக்கிறா மாதிரியே தெரியலையே? நீங்க இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்னு எதுவும் சொல்லி இருக்கீங்களா?” என்று வினவினான் ரஞ்சித்.
“நான் அப்படி எதுவும் சொல்லி வைக்கலை மாப்பிள்ளை. அதைப் பத்திப் பேசவும் தான் நான் உங்க ரெண்டு பேரையும் முன்னாடியே அழைச்சிட்டு வந்தேன்” என்றான் திவ்யன்.
“ஓஹ், அப்போ உடனே விஷயத்தைச் சொல்லுங்க. உங்க தங்கச்சியும் இதை நினைச்சுப் புலம்பிட்டே இருக்காள்!”
“சரி மாப்பிள்ளை. இப்போ வீட்டுக்குப் போனதும் பேசிடறேன்” என்று கூறி விட்டு அவனுடன் வீட்டிற்குப் போனான் திவ்யன்.
ஆரவி,“அம்மா! அவங்க வந்தாச்சு” என்றவள், இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவுடன்,
அதை வாங்கி குடித்த ரஞ்சித்,”உங்க அண்ணன் ஒரு முக்கியமான விஷயம் பேசனுமாம்” என்றவுடன்,
‘இவர் என்னப் புதுசாக ஒன்னை ஆரம்பிக்கிறார்?’ என்ற திடுக்கிடலுடன் கணவனைப் பார்த்தாள் ஆரவி.
“ம்ம். ஆமாம். நானே ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள மாப்பிள்ளையே தொடங்கிட்டார்” என்றான் திவ்யன்.
‘அதே விஷயம் தான் போலிருக்கு! ஆனால் இவர் முன்னாடி எல்லாத்தையும் பேச வேண்டாம்னு திவுகிட்டே சொல்லி இருக்கனுமோ!’ என்று மற்றவர்கள் நொந்து போயினர்.
அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்டவனோ,“இப்போ வீட்டுக்கு வர்ற வழியில் என் கல்யாணத்தைப் பத்தி மாப்பிள்ளைக் கேட்டார். அதனால் தான், அவரையும் வச்சிட்டே பேசிடலாம்னு முடிவு பண்ணேன்” என்று விளக்கினான் திவ்யன்.
“சரி. உன் மனசில் இருக்கிறதை இப்போதாவது சொல்லு” என அவனை ஊக்கினார் சோமசுந்தரி.
தன் பச்சைக் குத்தியிருந்த கரத்தைக் காட்டி, “நீங்க இது என்னப் பேர்ன்னுக் கேட்டுட்டே இருந்தீங்களே? ஞாபகம் இருக்கா?” என்றவனிடம்,
“ஆமாம்” என்றாள் ஆரவி.
“ம்ஹ்ம். அதை இப்போ சொல்றேன். ‘பிரஹா’அப்படின்றதை தான், ஈஸியா கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு இங்கிலீஷில் பச்சைக் குத்தி இருக்கேன். அவளோட முழுப் பேர் பிரஹாசினி” என்று போட்டுடைத்து விட்டு அனைவரையும் பார்த்தான் திவ்யன்.
அதைக் கேட்டவுடன்,”நான் இந்தப் பேரை எங்கேயோ கேட்டு இருக்கேனே!” என்று புருவத்தைச் சுருக்கிச் சிந்திக்கத் தொடங்கி விட்டாள்.
அவளது மூளைக்கு வேலையே வைக்காமல்,”உன்னோட காலேஜில் படிச்சப் பொண்ணு தான். உனக்கு சீனியர்” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான் அவளது தமையன்.
அதைக் கேட்டதால் ஏற்பட்ட அதிகபட்ச அதிர்ச்சியைத் தாங்காமல் தடுமாறி நின்றாள் ஆரவி.
உடனே அவளைத் தாங்கிக் கொண்டு,”நீ முதல்ல உட்கார்” என்று அவளை அமர வைத்த அவளது கணவன்,
தன் அத்தை, மாமாவைப் பார்க்க, அவர்களோ, மகனின் பேச்சுக் கொடுத்த விளைவினால் ஏற்பட்ட உணர்வுகளை அடக்க முடியாமல் அதிர்ச்சி அடைந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“திவ்யன், நீங்க சொன்னதைக் கேட்டு உங்க அப்பா, அம்மாவும் அதிர்ச்சியில் இருக்காங்க. இந்த விஷயத்தை, அவங்க கிட்ட பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க” என்று அவனிடம் வலியுறுத்தினான் ரஞ்சித்.
“அந்தப் பொண்ணு நம்ம ஆருவோட காலேஜில் தான் படிச்சஇட்டு இருந்தாள். அப்போ இருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்போ என் காதலுக்கு வயசு மூனு வருஷம்” என்றவனை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
சோமசுந்தரி,“என்னடா இப்படி சொல்ற?” என்று கேட்டவரிடம்,
திவ்யன்,“நிஜமாகத் தான் சொல்றேன்ம்மா” என்று கூறவும்,
“அதனால் தான் ஆருவுக்குக் கல்யாணம் முடியிற வரைக்கும் காத்திருந்தியா?” என்று வினவினார் மகுடபதி.
“ஆமாம்ப்பா. அதுக்கப்புறம் இதைப் பத்திப் பேசினால் தானே கரெக்டா இருக்கும்? அதான்” என்ற தமையனிடம்,
“அவங்க படிக்கிற அப்போவே குனிஞ்ச தலை நிமிராமல் நடந்து போவாங்க. யார்கிட்டேயும் பேசவே மாட்டாங்க. அவங்க படிப்பில் மட்டும் தான் கவனமாக இருப்பாங்க. அவங்களை எப்படி லவ் பண்ண? அதே மாதிரி, அவங்களும் உன்னை லவ் பண்றாங்களா?” எனக் குறுக்கு விசாரணை நடத்தினாள் ஆரவி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக