“இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கே சாமு! நாம முதல்ல இவகிட்ட போய்ப் பேசுவோம் வாங்க”என்றிருந்தாள் வாடாமல்லி.
“அடியேய்!”என அவர்களைத் தடுத்து நிறுத்திய மரிக்கொழுந்துவிடம்,
“அக்கா! நீ இனிமேல் எங்களைக் கட்டுப்படுத்த நினைக்காதே! நாங்க இதில் உறுதியாக இருக்கோம்”என அவளிடம் உறுதியாக கூறி விட்டுத் தாங்கள் இருவரும் பூவிழியிடம் சென்றார்கள் அவ்விருவரும்.
அவர்கள் இப்படி திடுமென தன் முன்னால் வந்து நிற்பதைக் கண்டுத் திகைத்தாலும் கூட,”என்ன ஆச்சு?”என அவர்களிடம் விசாரித்தாள்.
“நாங்க உங்க கிட்ட உதவிக் கேட்டு வந்திருக்கோம்”என்று அவளிடம் தெரிவித்தாள் சாமந்தி.
அதில் குழப்பம் அடைந்து,”உதவியா? அதுவும் எங்கிட்டயா?”எனக் கேட்டிருந்தாள் பூவிழி.
“ஆமாம். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சின்னய்யா எங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி விசாரிச்சாரே?”என்று அவளிடம் வினவினாள் வாடாமல்லி.
“ஆமாம். அந்த மூனு பேரைப் பத்தின விஷயம் தானே?”என்றாள்.
“ம்ஹ்ம். அவங்களைப் பத்தின விவரங்களை நாங்க சின்னய்யா கிட்டே சொல்லனும்னு முடிவெடுத்து இருக்கோம். அதுக்கு முதல்ல அதைப் பத்தி நாங்க உங்க கிட்ட உதவிக் கேட்க வந்திருக்கோம்”என்றச் சாமந்தியிடம்,
“அப்படியா? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?”என்றிருந்தாள் பூவிழி.
உடனே,”அந்த மூனு பேரும் எங்க கிட்ட ரொம்ப நாளாகவே வரைமுறை மீறித் தான் நடந்துக்கிட்டு இருந்தாங்க. எங்க கிட்ட மட்டும் இல்லாமல் இங்கேயிருக்கிற நிறையப் பொண்ணுங்க கிட்டே அப்படித் தான் நடந்துக்கிட்டானுங்க”என்று அவளிடம் உரைத்தாள் வாடாமல்லி.
அதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டவளோ,”நீங்க உண்மையாகவா சொல்றீங்க?”என்கவும்,
“ம்ஹ்ம். நாங்க எல்லாரும் அவங்க கிட்டே இருந்து நிறைய இம்சைகளை அனுபவிச்சு இருக்கோம்!”என ஆத்திரத்துடன் மொழிந்தாள் சாமந்தி.
“ஆனால் நாங்களும் பல வருஷமாக இங்கே தானே வேலைப் பார்க்கிறோம்? எங்கிட்டேயும், எந்தங்கச்சி கிட்டேயும் அவங்க மூனு பேரும் இப்படி ஒரு நாளும் நடந்துக்கிட்டது இல்லையே!”என்று அவளிடம் வினவினாள் பூவிழி.
“அந்த முருகையன் ஒரு தடவை உங்கம்மா கிட்டே வரைமுறையை மீறி நடந்துக்கப் பார்த்தான். உடனே அவங்க யோசிக்காமல் அவங்க கழுத்தில் கத்தியை வச்சுட்டாங்க! அதுக்கப்புறம் அவங்க கிட்ட அந்த மூனு பேரும் வாலாட்டவே இல்லை! உன்னையும், உந்தங்கச்சியையும் அவங்க விட்டு வச்சதுக்கான காரணம்…”என்று மேலும் கூறத் தயங்கியவளை,
“காரணம்?”என்று இறுகிய குரலில் கேட்டு விட்டு அவளை அழுத்தமாகப் பார்க்கவும்,
இப்போது தான் பேச வாய் திறந்து,“அவங்களோட நோக்கமே கொஞ்சம் பார்க்க வெள்ளையாகவும், அழகாகவும் இருக்கிறவங்களை மட்டும் தான் தொல்லை பண்ணுவாங்க! கொஞ்சம் கருத்த நிறமாக இருந்தாலும் கூட அவங்களைக் கண்டுக்க மாட்டாங்க!”எனத் தர்ம சங்கடத்துடன் கூறி முடித்திருந்தாள் வாடாமல்லி.
அதைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமலும், அந்த வார்த்தைகள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதைப் போலவும் தனது முகத்தை வைத்துக் கொண்டு,
“இதையெல்லாம் நீங்க ஏன் இவ்வளவு நாளாகப் பெரிய ஐயாகிட்டே சொல்லலை? அவர்கிட்டே சொல்லத் தயக்கமாகவோ, பயமாகவோ இருந்திருந்தால் சின்னய்யா கிட்டே சொல்லி இருக்கலாமே?”என்று அவர்களிடம் வினா எழுப்பி இருந்தாள் பூவிழி.
“நாம எல்லாரும் கூலிக்காரங்க! அவுக எல்லாரும் முதலாளி வர்க்கம்! அப்படி இருக்கும் போது நாம அவங்க கிட்ட இதைப் பத்தி எல்லாம் பிராது கொடுத்தால் அது நமக்குத் தான் எதிராகத் திரும்பும்ன்னு நினைச்சோம்! அதே மாதிரி எங்களுக்கு இந்தப் பணக்காரங்க மேலே எல்லாம் நம்பிக்கையே இருந்ததில்லை! உனக்கு நம்மச் சின்னய்யா கூடக் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி வரைக்கும் நீயும், உன் வீட்டாளுங்களும் கூட இப்படித் தானே எதையும் கண்டுக்காமல், யார் கிட்டேயும் பேசாமல் உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தீங்க!”என்றதுமே,
அந்த வார்த்தைகள் பூவிழியின் மனதை வெகுவாகத் தாக்கி விட்டிருந்தது.
அதன் காரணமாக அவளது முகம் மிகவும் சுருங்கிப் போயிற்று!
அதைக் கண்டவுடன் பதறிப் போய்,”ஏய் பூவு! நான் எதார்த்தமாகத் தான் சொன்னேன்! நீ எதுவும் தப்பாக எடுத்துக்காதே!”என அவளுக்கு விளக்கம் அளிக்க முயன்றாள் வாடாமல்லி.
உடனே,“ப்ச்! நீ சும்மா இரு புள்ள! நாம இப்படி நின்னுட்டு வாயடிக்கவா வந்திருக்கோம்?”என அவளை அதட்டினாள் சாமந்தி.
“விடு புள்ள! நான் நடந்துக்கிட்டதை தானே இவ சொன்னா. நான் கேட்கிறதுக்கு முதல்லப் பதில் சொல்லுங்க. நம்மச் சின்னய்யா கிட்டே பேசறதுகக்கு உங்க கூடத் துணையாக நான் வர்றதுக்குச் சம்மதிக்கிறேன். ஆனால் உங்களோட முடிவில் உறுதியாகத் தானே இருக்கீங்க?”என்று கேட்டு விட்டு அவர்களஅ இருவரையும் கூர்மையாகப் பார்த்தாள் பூவிழி.
“ஆமாம். நாங்க ரெண்டு பேரும் எங்களோட முடிவில் உறுதியாக இருக்கோம் பூவு!”எனக் கோரஸாக அவளிடம் கூறினர் சாமந்தி மற்றும் வாடாமல்லி.
“அப்போ இதை நீங்க எங்க வந்து வேணும்னாலும் சொல்லுவீங்க தானே? அந்த தைரியம் உங்களுக்கு இருக்கா?”என்று மற்றொரு கேள்வியைத் தொடுக்க,
“நாங்க இதை எங்கே வேணும்னாலும் வந்து சொல்லுவோம்! அந்தத் தைரியம் எங்களுக்கு இருக்கு!”என அவளுக்கு உறுதி அளித்தவர்களைக் கூட்டிக் கொண்டுத் தன் கணவனிடம் அழைத்துச் சென்றச் சமயத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தார் நஞ்சுண்டன்.
அவரைப் பார்த்ததுமே,”இப்போ சின்னய்யா கிட்டே போய்ப் பேச வேண்டாம். நான் அவர்கிட்ட இன்னைக்கு விஷயத்தைச் சொல்லிட்றேன். நாளைக்கு அவரைத் தனியாகச் சந்திச்சுப் பேசுவோமா?”என்று அவர்களிடம் சூசகமாக கேட்டாள் பூவிழி.
அதை அவர்களும் புரிந்து கொண்டு,”சரி பூவு”எனக் கூறி விட்டு உடனே அவளிடமிருந்து விலகிச் சென்று தங்களது வேலையிடத்தை அடைந்து அங்கே இருந்த மரிக்கொழுந்துவிடம்,
“பூவுகிட்டே பேசிட்டோம்க்கா. நாளைக்குச் சின்னய்யா கிட்டே பேசலாம்னுச் சொல்லிட்டாள். அவகிட்ட பேசினதுக்கு அப்பறமாக எங்களுக்கு இன்னும் தைரியம் கூடியிருக்கு அக்கா! உனக்கும் ஏதாவது பிராது இருந்தால் நாளைக்கு நீயும் எங்க கூடச் சேர்ந்து திரு ஐயாகிட்டே பேசுறதுக்கு வரலாம்”என்றிருந்தார்கள் சாமந்தி மற்றும் வாடாமல்லி.
அதைக் கேட்டதும்,”அப்படியா சொல்றீய? அவ உண்மையிலேயே உங்களுக்குத் துணைக்கு வர்றதுக்கு ஒத்துக்கிட்டாளா? எப்பவுமே அமுக்குணி மாதிரி இருப்பாளே! இப்போ மட்டும் எப்படி அவளுக்கு இந்தளவுக்குத் தைரியம் வந்துச்சு?”என்று அவர்களிடம் ஆச்சரியமாக வினவினார் மரிக்கொழுந்து.
“அதான் சின்னய்யாவோட பொஞ்சாதியா ஆகிட்டாள்ல? அதில் வந்த தைரியமாக இருக்கும்! அதே மாதிரி அவ எங்க கிட்ட பேசுனப்போ அந்தப் பவுசைக் காட்டிக்கவே இல்லைக்கா! என்னைப் பேசனுமோ, அதை மட்டும் தெளிவாகப் பேசினாள், கேட்டாள்! அம்புட்டுத்தேன்! அதுக்கு அதிகமாக ஒத்தை வார்த்தைக் கூடப் போட்டுப் பேசலையே! எங்களுக்கு அதுவே அவகிட்ட வெளிப்படையாகப் பேசுறதுக்கு நம்பிக்கைக் கொடுத்துச்சுன்னா பாரேன்க்கா”என்று அவரிடம் பூவிழியைப் பாராட்டிச், சிலாகித்துப் பேசினர் இருவரும்.
“அப்படின்னா சரி. நானும் நாளைக்கு உங்க கூட வர்றதைப் பத்தி யோசிக்கிறேன்”என்றதும்,
தங்களது உரையாடல்களை முடித்து விட்டு வேலைகளைத் தொடர்ந்தார்கள் மூவரும்.
இதே நேரத்தில் தனது தந்தையின் வரவை அறிந்து கொண்டு அவர் அலுவலக அறைக்குள் நுழைந்ததும்,
“வாங்க அப்பா”என அவரை வரவேற்று அவர் அமர்வதற்காக நாற்காலியை எடுத்துப் போட்டு உபசரித்தான் திருவாதிரன்.
அதில் புருவம் சுருங்க அவனைப் பார்த்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் நஞ்சுண்டன்.
அங்கே வைக்கப்பட்டிருந்த மண்பானையில் இருந்து தண்ணீரைத் தம்ளரில் முகர்ந்து அவருக்குக் குடிக்கக் கொடுக்க,
அதை வாங்கிப் பருகி விட்டு,”நீயே எல்லாருக்கும் என்னென்ன சோலின்னுப் பிரிச்சுக் கொடுத்துட்டியா?”என அவனிடம் விசாரித்தார்.
“கொடுத்துட்டேன் ப்பா. அப்பறம் நீங்க வர்றதுக்கு முன்னாடி இங்கே வேலை செய்ற எல்லார் கிட்டேயும் ஒரு விசாரணை நடத்தினேன்”என்றவனைக் கூர்ந்து நோக்கி,
“எதைப் பத்தின விசாரணையை நடத்தின?”எனக் கண்கள் இடுங்க கேட்டிருந்தார் நஞ்சுண்டன்.
“அதுவா…”என்றவனோ,
தனது விசாரணையைப் பற்றி அவரிடம் விவரித்து முடித்திருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டவுடன் தனக்கு உண்டான அதிர்ச்சியைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு,”நீ என்னச் சொல்ற? நம்மக் காட்டில் வேலை பார்க்கிறப் பொண்ணுங்க எல்லாரும் பாதுகாப்பாகத் தானே இருக்காங்க? அப்படி இருக்கும் போது இப்போ இந்த விசாரணையை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்துச்சுடா?”என்று மகனிடம் படபடத்தார் நஞ்சுண்டன்.
அதில் அவரை எள்ளலாகப் பார்த்து விட்டு,”என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த விசாரணை இப்போ ரொம்பவே அவசியமானது தான்ப்பா! ஏன்னா நான் தான் இங்கே நடக்கிறதுக்கு எல்லாம் பொறுப்புன்னும் போது இதையெல்லாம் கூட நான் கவனிச்சுக், கண்டுபிடிச்சுக், களை எடுத்து தானே ஆகனும்ப்பா? அப்போ தானே என் மேலே இங்கே உள்ளவங்களுக்கு நம்பிக்கை வரும்? அதனால் தான் இந்த விசாரணையை நடத்த வேண்டியதாகப் போச்சு!”என்று அவருக்கு விளக்கம் அளிக்கவும்,
“இதெல்லாம் நம்ம முருகையனோட வேலைப்பா. அவன் தானே இந்தக் காட்டோட மேற்பார்வையாளர்? அப்போ அவன் வர்ற வரைக்கும் நாமக் காத்திருந்து அவன் வந்ததும் இந்தப் பொறுப்பை அவங்கிட்டேயே கொடுக்கலாமே? நீ இங்கே காத்தாடிக்கு அடியில் உட்கார்ந்துக்கிட்டு இந்தக் காட்டோட கணக்கு, வழக்கு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு ஜம்முனு இருக்கலாம்ல? அதை விட்டுட்டு நீயே எல்லாத்தையும் ஏன் தேவையில்லாமல் உன் தலையில் போட்டுக்கிற? அதுவும் இல்லாமல் இங்கே யாருக்கும், எந்தச் சங்கடங்களும், சீண்டல்களும் நடக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது! ஏன்னா, நம்ம முருகையனோட மேற்பார்வை அப்படி!”என்று தன் வேலையாளைப் பற்றிப் பெருமையாக கூறி மார் தட்டிக் கொண்ட தந்தையிடம்,
“அந்த முருகையனையே காணோமேப்பா? அவர் வர்ற வரைக்கும் இதை இப்படியே விட்றதுக்கு எனக்கு மனசு இல்லை! அதே மாதிரி, நான் இந்தக் காட்டோட பொறுப்பை என் கையில் எடுத்துக்கிட்டதால் அதில் என்னக் குறை வந்தாலும் அதுக்கு நான் தானே பொறுப்பு ஏத்துக்கனும்? ஆனால் தப்பு நடக்கிறதுக்கு முன்னாடியே அது நடக்காமல் இருக்கிறதுக்கு முன்னெச்சரிக்கை செய்து வைக்கிறதும் நல்லது தானேப்பா? அதான், நானே இந்த விஷயத்தில் நேரடியாக இறங்கிட்டேன்”என்று சாவதானமாக மொழிந்து இருந்தான் திருவாதிரன்.
அதில் தனது சக்திகள் முழுவதும் வடிந்து போய் விடவும்,”நீ சொல்வதும் வாஸ்தவம் தான்டா. உன் மனசுப் போல் எதுவாக இருந்தாலும் செய்”என இந்த விஷயம் சம்பந்தமாக மகனிடம் தர்க்கம் புரியாமல் அவனுக்கு ஏற்றவாறு பேசவும்,
“ம்ஹ்ம். சரிப்பா. இன்னும் அந்த மூனு பேரையும் உங்களால் கண்டுபிடிக்க முடியலை போலவே?”என்று எடக்காக வினவிய மகனைத் திகிலுடன் நோக்கி, அவனுக்குப் பதில் சொல்லக் கூடத் தனது வாய் ஒத்துழைக்காமல் இருப்பதை உணர்ந்தார் நஞ்சுண்டன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக