அதே சமயத்தில் தன் தமக்கையும், அவளது கணவனும் மிகவும் சந்தோஷமாகவும், நிறைவாகவும் மற்றும் அன்னியோன்யமாகவும் வலம் வருவதை தனது கண்களால் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்?
இவர்கள் இருவரும் எங்கே சென்றாலும் ஜோடியாகச் செல்வதையும், இவர்களை விடச் சிறியவளானத், தான் மட்டும் இப்படி அவசரமாக கர்ப்பம் தரித்து விட்டு இப்படியான மகிழ்வான தருணங்களை அனுபவிக்கத் தவறி விட்டோமோ என்று வெகு தாமதமாகத் தனது தவற்றைப் புரிந்து கொண்டு இப்போது அதை எண்ணித் தினம், தினம் வருந்திக் கொண்டிருக்கிறாள் செந்தாழை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் தனது மனநிலை தான் மிகவும் மோசமாகி விடும் என்ற அச்சம் உருவாகி விடவும் தான் இதைப் பற்றி வேறு விதமாக கணவனிடம் சொல்லித் தனிக் குடித்தனம் செல்ல அடி போட்டிருந்தாள்.
ஆனால் அவனோ தனக்காக எதையும் செய்யத் துணிந்தவன் என்றாலும் கூட இந்த விஷயத்தில் கிணத்தில் போட்டக் கல்லைப் போல் அசைந்து கொடுக்காமல் இருக்கிறானே என்ற வருத்தம் உண்டானது செந்தாழைக்கு.
இதெல்லாம் அவளது மனமும், உடலும் வெகுவாகப் பாதிக்கத் தொடங்கி விட்டிருந்தது எனலாம்!
இதே நேரத்தில் தங்களது ஜீப்பில் காட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த திருவாதிரன் மற்றும் பூவிழியின் அந்தப் பயணம் மிகவும் சுவாரசியமானதாகவும், இருவரின் மனதிற்கு நிறைவாகவும் இருப்பதை உணர்ந்தார்கள் அவ்விருவரும்.
அதுவும் தனது கரத்தை மிருதுவாகப் பிடித்திருந்த கணவனை நேசம் வழிந்தோடும் விழிகளுடன் பார்த்திருந்தாள் பூவிழி.
“என்ன என்னைக் குறு, குறுன்னுப் பார்த்துட்டு இருக்கிற? வண்டியை அப்படியே வீட்டுக்குத் திருப்பிடவா?”என்று அவளைத் திரும்பிப் பார்த்து விஷமத்துடன் வினவினான் திருவாதிரன்.
அதில் உண்டான நாணத்தில் முகம் பளபளக்க,”நீங்க இருக்கீங்களே! ஒழுங்காகச் சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க”என அவனுக்கு அறிவுறுத்தவும்,
“சரிம்மா”என்று அவளது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வண்டியை இயக்கினான்.
இங்கே வீட்டில் தங்களது உணவை உண்டு முடித்து விட்டிருந்தார்கள் நால்வரும்.
அப்போது சிறியவர்கள் தங்களது அறைக்குச் சென்று விடச்,
சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த கணவரிடம்,”ஏனுங்க இன்னைக்குத் தாமதமாக காட்டுக்கு வர்றேன்னுத் திரு கிட்டே சொன்னீங்க?”என்றிருந்தார் ராஜகுமாரி.
“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசத் தான் அவன் கிட்ட அப்படி சொல்லி அவனையும், அவனோட பொண்டாட்டியையும் அனுப்பி வச்சேன்ம்மா”என்றார் நஞ்சுண்டன்.
“அப்படியாங்க? என்ன சேதி?”எனத் தனது புருவம் சுருங்க அவரிடம் விசாரிக்க,
உடனே,”முருகையன், சடையன் அப்பறம் விருமனும் காணாமல் போயிட்டாங்கன்னு நேத்து அவனுங்களோட பொண்டாட்டிங்க நம்ம கிட்டே வந்துச்சு நியாயம் கேட்டுட்டுப் போச்சுங்கள்ல?”என்றவுடன்,
“ஆமாங்க. அத்தனைப் பேர் கூடியிருக்கிற சபையில் கண்ணீருங், கம்பலையுமா வந்து கதறிட்டுக் கெடந்துச்சுங்களே? இப்போ அதுங்களால் எதுவும் பிரச்சினை வந்துடுச்சா?”எனக் கேட்டிருந்தார் ராஜகுமாரி.
“ஆமாம்மா”என்றவரோ,
“நம்மத் திருவோட பொண்டாட்டியை இந்த ஊரை விட்டே துரத்தனும்னும், அது மறு வீட்டு விருந்துக்கு முன்னாடியே நடக்கனும்னுச் சொல்லி அவளை எதையாவது செஞ்சி இந்த ஊரை விட்டே துரத்துன்னு நம்ம முருகையன் கிட்ட தான் அதோட பொறுப்பைக் கொடுத்து இருந்தேன்! அவனும் தன்னோட இரண்டு விசுவாசிகளை வச்சு அதுக்கான வேலையிலும் இறங்கிட்டான்! ஆனால்…”என்றுரைத்து விட்டு,
அதற்குப் பிறகு நடந்தவற்றையும் அந்த மூன்று பேரும் காணாமல் போன விஷயத்தில் திருவாதிரனுக்கும் பங்கிருக்குமோ என்றத் தனது சந்தேகத்தையும், அதை உறுதிப்படுத்தும் விதமாக அவனே மறைமுகமாகத் தன்னிடம் மொழிந்த வார்த்தைகளையும் ஒன்று விடாமல் மனைவியிடம் ஒப்புவித்து முடித்திருந்தார் நஞ்சுண்டன்.
அதைக் கேட்டதும் அவரது சரீரம் முழுவதும் ஆட்டம் கண்டுப் போய் விட்டது.
“என்னங்க சொல்றீய? அவன் படிச்சவனாச்சே! இந்தளவுக்கு எல்லாம் இறங்குவான்னு நான் கனவுக் கூடக் கண்டது இல்லையே! அந்த மூனு பேரையும் உண்மையிலேயே இவன் தான் கடத்தி வச்சு இருப்பானோ?”என்று கலக்கத்துடன் வினவினார் ராஜகுமாரி.
“அதில் எனக்கு முதல்ல சந்தேகம் தான் இருந்துச்சு. ஆனால் அவன் தான் கடத்தி வச்சு இருப்பான்னு இப்போ உறுதியே ஆயிடுச்சு!”எனப் பதிலளித்தார் நஞ்சுண்டன்.
“ஐயோ! என்ன இப்படி குண்டைத் தூக்கிப் போட்றீய?!”என்று தன் நெஞ்சில் கையை வைத்துப் பதறிப் போய்க் கேட்க,
“நானும் இதை எதிர்பார்க்கலை குமாரி!”என மனைவியிடம் கூறவும்,
“இப்போ என்னங்கப் பண்றது? அவங்களோட பொஞ்சாதிங்க கிட்ட என்னன்னுச் சொல்லிச் சமாளிக்கிறது? அவளுக வீட்டுக்காரனுங்களைப் பார்க்கிற வரைக்கும் நம்மளைப் போட்டு நச்சரிப்பாளுகளே!”என்றவரிடம்,
“ம்ஹ்ம். அதை தான் நானும் யோசிச்சு உங்கிட்ட கலந்து பேசி அதுக்கு உங்கிட்ட ஏதாவது தீர்வு இருக்கான்னுக் கேட்கத் தான் காட்டுக்கு நேரத்துக்குப் போறதை தள்ளி வச்சேன்”எனக் கூறியிருந்தார் நஞ்சுண்டன்.
“இதில் நான் என்னத்தை தீர்வைச் சொல்லுறதுங்க? திரு தான் கட்டம் கட்டி எல்லாருக்கும் ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கானே! அதே மாதிரி அந்த மூனுப் பேரையும் அவன் இன்னும் உயிரோட வச்சிருக்கானா? இல்லைன்னா, கொன்னுட்டானான்னுக் கூட நமக்குத் தெரியலையே!”என்று தனது இதயம் தடதடக்கத் தனது பயத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார் ராஜகுமாரி.
“அச்சோ! நீ என்னம்மா இதையெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்துற? இதுக்கு என்னத் தான் தீர்வு?”எனத் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகப் புலம்ப,
“இதை ஆரம்பிச்சு வச்சது நீங்க! இதை முடிக்கப் போறது திரு! இதில் நான் என்னத் தீர்வைச் சொல்ல முடியுமுங்க?”என்று அவரிடம் குமைந்தார்.
“என்ன நீயே கையை விரிச்சா எப்படிம்மா? உன்னைத் தவிர என்னால் வேற யார் கிட்டே போய் இதைப் பத்திச் சொல்லி யோசனை கேட்க முடியும்? நீயே சொல்லேன்?”என்று மனைவியை ஆற்றாமையுடன் பார்த்துக் கேள்வி எழுப்பினார் நஞ்சுண்டன்.
“உடனே எல்லாம் இதுக்கு என்னால் எந்தத் தீர்வையும் சொல்ல முடியாதுங்க! இந்த விஷயத்தில் திரு என்னத் திட்டம் போட்டு இருக்கான், அதை எப்படி அவன் செயல்படுத்துறான்னுக் கொஞ்ச நாளைக்குக் காத்திருந்து பார்ப்போம். அதுக்கப்புறம் என்னப் பண்ணலாம்னு யோசிச்சுக்கலாமுங்க. அதே சமயம், அவனே அந்த விஷயத்தை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி மூடி மறைச்சு வைக்கவும் வாய்ப்பு இருக்குத் தானே? அதான், அவனோட நடவடிக்கைகளை நீங்க கவனமாக மேற்பார்வை பண்ணுங்க. அதை மட்டும் இப்போதைக்குச் செய்ங்க”என்று அவருக்கு வலியுறுத்தினார் ராஜகுமாரி.
“சரிம்மா. நீ சொன்ன மாதிரியே செய்றேன். இப்போ கிளம்பிக் காட்டுக்குப் போறேன்”என அவரிடம் விடைபெற்று விட்டு வீட்டை விட்டு வெளியேறி வண்டியில் ஏறிப் பயணம் செய்யத் தொடங்கினார் அவரது கணவர்.
அதே நேரத்தில் பூவிழிக்கான வேலையைத் தானே அவளுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, அவளைத் தவிர அங்கேயிருந்த ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் முருகையன், சடையன் மற்றும் விருமனும் காணாமல் போய் விட்டதைப் பற்றித் தெரிவித்து விட்டு அவர்கள் மூவரின் பேசும் தோரணைகள், பழக்க, வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பற்றிய விசாரணையை மேற்கொண்டான் திருவாதிரன்.
அதை அவதானித்து விட்டு அவனை வெளிப்படையாகவே முறைத்துப் பார்த்தாள் பூவிழி.
ஏனென்றால் அந்த மூவரும் காணாமல் போனதற்குக் காரணமே அவன் தானே? அதை அறிந்து அதைப் பற்றிக் கேட்டாலும் சொல்ல முடியாது என்று அழுத்தமாக கூறி விட்டிருந்தானே?
இப்போது என்னவென்றால் இவனே அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டால் பூவிழிக்கும் கோபம் வரும் தானே?
ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் தன் முன்னால் இருந்தவர்களிடம்,
“அவங்களைப் பத்தின எந்த விஷயமாக இருந்தாலும் எங்கிட்ட தயங்காமல் சொல்லுங்க. நான் உங்களை எதுவும் நினைக்க மாட்டேன்!”என அறிவுறுத்தி விட்டுத் தன் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவர்கள் அனைவரையும் கூர்மையாகப் பார்த்தான் திருவாதிரன்.
ஆனால் அங்கிருந்த யாரும் அவனிடம் எதையும் சொல்லத் துணிந்து முன் வரவில்லை!
அதனாலேயே,”இப்படி எல்லார் முன்னாடியும் அவங்களைப் பத்திச் சொல்ல உங்களுக்குத் தயக்கம் இருந்தால் நீங்க எப்போ வேணும்னாலும் உங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆள் கூட என்னோட அலுவலக அறைக்கு வந்து எங்கிட்ட அதைப் பகிர்ந்துக்கலாம்”என்று அவர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்து விட்டு அனைவரையும் அவர்களது வேலையைத் தொடருமாறு கூறி அனுப்பி வைத்து விட்டான் திருவாதிரன்.
அப்போது,”நாம சின்னய்யா கிட்டே உண்மையைச் சொல்லிடலாம்ன்னு எனக்குத் தோணுது டி!”என்று தன் சகத் தோழியிடம் பகிர்ந்தாள் ஒருத்தி.
“உனக்கு என்னத் தோணுனாலும் அதை அப்படியே மனசுக்குள்ளேயே வச்சுக்கோ! அவர் கிட்டே எல்லாம் போய்ச் சொல்லிடாதே! இப்போ எல்லாம் எந்தப் புத்துக்குள்ளே என்னப் பாம்பு இருக்குன்னு யாருக்குத் தெரியும்? அதனால் வந்தோமா, வேலையை முடிச்சோமா, கூலியை வாங்கிட்டுச் சத்தங் காட்டாமல் போயிட்டே இருக்கிறது தான் நமக்கு நல்லது!”என்றார் அவர்களுடன் இருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர்.
“நீ சும்மா இருக்கா! இப்படி நமக்கு நடக்கிற எதையுமே வெளியே சொல்லாமல் இருக்கிறதால் தான் நமக்கு விடிவுகாலமே வர மாட்டேங்குது! இத்தனை வருஷமாக நம்மச் சின்னய்யாவைப் பார்த்துட்டுத் தானே இருக்கோம்? அவர் நம்மகிட்டே நல்ல விதமாகத் தானே நடந்துக்கிறார்? ஆனால் இடையில் இருந்த அந்த மூனு எடுபட்ட பயலுகளால் தான் நமக்கு நெதமும் தொல்லையாக இருந்துச்சு. இப்போ அதுங்கள மூனையும் காணோம்! இனிமேல் திரும்ப வர்ற மாதிரியும் தோணலை! அதனால் நான் சின்னய்யா கிட்டே அதுங்க செஞ்ச அக்கிரமங்களைப் பத்திச் சொல்லத் தான் போறேன்! அதுக்கு என் கூட யார், யாரெல்லாம் வர்றீய?”என தனது கூட்டாளிகளிடம் வினவினாள் இந்தப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தப் பெண்ணான சாமந்தி.
“இது உனக்குத் தேவையே இல்லாத வேலை டி!”என அவளுக்கு எச்சரிக்கை விடுத்தார் அந்த நடுத்தர வயதுப் பெண்மணியான மரிக்கொழுந்து.
“அட போ, க்கா. அந்த மூனு பேரும் நம்மகிட்டே வரைமுறை மீறி நடந்துக்கும் போதெல்லாம் இப்படியே சொல்லி, சொல்லித் தான் எங்களை வாயைத் திறக்காமல் விட்டுட்ட! ஆனால் இப்போ எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை! நாங்கச் சின்னைய்யாவைப் பார்த்துப் பேசத் தான் போறோம்”என்று தீர்க்கமாக கூறினாள் மற்றொருவளான வாடாமல்லி.
“ப்ச்! சொன்னால் கேளுங்கடி”என்றிருந்தார் மரிக்கொழுந்து.
அப்போது அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பூவிழியைக் காட்டி விட்டு,”அங்கே பாருங்க! நம்மளை மாதிரி இங்கே வேலைப் பார்த்த அவ தானே இப்போ சின்னய்யாவோட பொண்டாட்டியாக ஆகி இருக்காள்? அப்போ அவளுக்கு அவரைப் பத்தி எல்லாமே தெரியும் தானே? அதனால் முதல்ல பூவு கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டு அவ கூடச் சேர்ந்து ஐயாவைப் பார்க்கப் போகலாமா?”என மற்றவர்களிடம் கேட்டிருந்தாள் சாமந்தி.
- தொடரும்
இதன் அடுத்தப் பதிவு திங்களன்று வரும் ஃப்ரண்ட்ஸ் 🖤

கருத்துகள்
கருத்துரையிடுக