அவன் அந்தக் கிடங்கின் உள்ளே நுழைந்ததுமே அதன் கதவுகள் பூட்டப்பட்டு விட்டது.
அங்கு தனது விசுவாசிகளான ஐவர் சுற்றியிருக்க அவர்களுக்கு நடுவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்களில் உயிர் பயம் தெரிய முருகையன், சடையன் மற்றும் விருமனும் அவனைப் பார்த்ததுமே,
“ஐயா! நாங்க இனிமேல் உங்கப் பொண்டாட்டிக் கிட்டே வாலாட்ட மாட்டோம்! எங்களை விட்ருங்க!”என்று கதறத் தொடங்கினர்.
உடனே அவர்களை அழுத்தமாகப் பார்த்து,”அப்போ நேத்து வரைக்கும் நீங்க அவ கிட்ட வாலாட்டினதுக்கு எல்லாம் என்னப் பதில் சொல்லப் போறீங்க?”என்று அவர்களிடம் வினவினான் திராவாதிரன்.
அந்தச் சமயத்தில் அவனது தோரணையே முற்றிலுமாக மாறிப் போயிருந்தது எனலாம்!
ஏனெனில், தனது குடும்பம் மற்றும் தங்களது நிலபுலன்களில் வேலை செய்யும் யாரிடமும் இப்படியான ஒரு தோரணையில் அவன் பேசியதும், நடந்து கொண்டதும் இல்லை!
அவனது கண்களில் வெளிப்பட்ட ரௌத்திரம் மற்றும் முகத்தில் அதிகப்படியாக இருந்த இருக்கமும் அவர்கள் மூவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது!
“ஐயா!”என்று அவனை நடுக்கத்துடன் அழைத்தார் முருகையன்.
“ஹாங்! சொல்லுங்கண்ணே! எங்கப்பா உங்களுக்கு எவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து, அதுக்கான சம்பளத்தையும் மாசா, மாசம் கொடுத்தாரே! அதுக்கு நீங்க காட்டுற நன்றி இது தானா?”என்று அவரிடம் ஏளனமாக கேட்டான் திருவாதிரன்.
அதில் மேலும் கிலி பரவ,”ஐயா! அது வந்து…”என்றவரை இடைமறித்து,
“இதுக்கு மேலே உண்மையை மறைச்சுப் பயனில்லைண்ணே! உனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் தயவு செஞ்சி சின்னய்யா கிட்டே சொல்லிரு”என்று அவருக்கு அறிவுறுத்தினான் சடையன்.
அவனுக்கு வாங்கிய அடிகளால் மிகவும் பயம் வந்திருந்தது.
இதற்கு மேலும் தன்னால் அடி வாங்குவதற்குத் தெம்பு இருக்கவில்லை!
அதனாலேயே முருகையனிடம் அனைத்து உண்மைகளையும் ஒப்புவிக்குமாறு வலியுறுத்திக் கொண்டு இருந்தான் சடையன்.
அவனைப் பின்பற்றிக் கொண்டு,”ஆமாண்ணே! நாம இதுக்கு மேலே அடி வாங்குனோம்ன்னா நம்ம உயிரே போயிடும்! அதனால் அவன் சொல்றதைச் செய்ண்ணே!”என்று தானும் அவரிடம் நடுக்கத்துடன் மொழிந்தான் விருமன்.
இவர்கள் மூவரின் இந்த உரையாடல்களைத் தன் விழிகளில் வெஞ்சினம் பொங்கப் பார்த்துக் கொண்டு இருந்தான் திருவாதிரன்.
இவர்கள் மூவரும் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளைத் தன்னிடம் கூறினாலும் கூட இவர்களை உயிருடன் விட்டு வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை அவன்!
அவர்களிடம் இருந்து தனக்குத் தேவையான விவரங்கள் கிடைக்கும் வரைக்கும் அவர்கள் பேசுவதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
சடையன் மற்றும் விருமனின் அறிவுறுத்தலின் படித் தனக்குத் தெரிந்தவற்றை அவனிடம் கூறுவதற்குத் தயாரானார் முருகையன்.
அப்போது,”நீங்க அஞ்சு பேரும் வெளியே போய்க் காத்திருங்க”எனத் தன் ஐந்து விசுவாசிகளிடம் கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்தான் திருவாதிரன்.
உடனே,“நாங்க இப்படி பண்றதுக்கு எல்லாம் காரணமே உங்கப்பா தான் சின்னய்யா!”எனப் பயத்துடன் கூறினார் முருகையன்.
அதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போய் விட்டிருந்தான் திருவாதிரன்.
“நீங்க சொல்றது உண்மையா? இல்லைன்னா, எங்களுக்கு இடையில் ஏதாவது பிரச்சினை, குழப்பத்தை உருவாக்கனும்ன்றதுக்காகப் பொய்க் கதையைச் சொல்றீங்களா?”என்றான் கர்ஜிக்கும் குரலில்!
“ஐயோ! பொய்க் கதையெல்லாம் இல்லீங்க ஐயா! உயிர் போற சமயத்தில் யாராவது பொய் சொல்வாங்களா? நான் சொன்னது நெசம் தானுங்க”என அவனிடம் மன்றாடினார் முருகையன்.
“சரி. முதலில் இருந்து இன்னும் தெளிவாகச் சொல்லுங்க”என்று அவரிடம் அறிவுறுத்தினான் திருவாதிரன்.
உடனே,”என்னை வேலைக்கு எடுத்ததே உங்கப்பா தான்! அதனால் நான் அவருக்கு விசுவாசமாக இருந்தேன்! அதனாலேயே என் மேல் அவருக்கு அதிகமான நம்பிக்கை இருக்கு! எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும் அதை எங்கிட்ட சொல்லித் தான் செஞ்சி முடிக்கச் சொல்லுவாரு! அதனால் தான் என்னை உங்களோட காட்டுக்கு மேற்பார்வையாளராக நியமிச்சாரு!”என்றிருந்தார் முருகையன்.
“ம்ஹ்ம்”என்று அவரை மேலே கூறுமாறு வலியுறுத்த,
“ஒருநாள் எங்கிட்ட வந்து உங்களோட மறு வீட்டு விருந்துக்கு முன்னாடி உங்கப் பொண்டாட்டியை இந்த ஊரிலிருந்தே கண் காணாத இடத்துக்குப் போற மாதிரி கொடுமைப்படுத்தனும்! அப்போ தான் அந்தப் பொண்ணு உங்களையும், உங்க வீட்டையும் விட்டுட்டு ஓடிப் போயிருவாள்ன்னுச் சொன்னாரு! அதுக்காக என்னை எந்த எல்லைக்கு வேணும்னாலும் போகலாம்ன்னு எனக்கு அதிகாரம் கொடுத்து இருந்தாருங்க சின்னய்யா”என்று அவனிடம் கடகடவென்று ஒப்புவித்து முடித்திருந்தார் முருகையன்.
“அப்போ நீங்க மூனு பேரும் எங்கப்பா சொல்லித், தெரிஞ்சே தான், எம் பொண்டாட்டிக்குக் கரைச்சலைக் கொடுத்து இருக்கீங்க! அப்படித் தானே?”எனச் சிம்மக் குரலில் கேட்டான் திருவாதிரன்.
அதில் அவனைக் கலவரத்துடன் பார்த்தனர் மூவரும்.
“நேத்து என்னோட ஆளுங்க சரியான நேரத்துக்கு அங்கே வந்திருக்கலைன்னா எம் பொண்டாட்டியை என்ன வேணும்னாலும் பண்ணி இருப்பீங்க தானே?”சடையன் மற்றும் விருமனிடம் இயம்ப,
அதில் மூவரும் தங்களது உடல் வெடவெடக்க அவனைப் பார்த்தார்களே தவிரத் தங்களது வாயைத் திறந்து பதிலளிக்கவில்லை!
அந்தளவிற்கு அவர்கள் மூவரையும் பயம் கவ்விக் கொண்டு இருந்தது.
“சொல்லுங்க!”என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான் திருவாதிரன்.
அதில் அவர்களின் உடல்கள் தூக்கி வாரிப் போட்டது!
“ஆமாங்க ஐயா!”என்று ஒரு சேரக் கூறினர் முருகையன், சடையன் மற்றும் விருமன்.
இதில் முருகையன் மட்டும் தனது வயதின் காரணமாகத் தன்னைச் சின்ன முதலாளி இங்கேயிருந்து அனுப்பி விடலாம் என்று கூட எண்ணி இருக்கலாம் என்று மிகவும் நம்பிக்கையுடனும், ஆவலுடனும் ஏக்கத்துடனும் திருவாதிரனை நோக்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவனோ, தனது விசுவாசிகளை அறைக்குள் வருமாறு அழைத்து,”இவங்க மூனு பேரையும் என்னோட மறு வீட்டு விருந்து நடந்து முடியிற வரைக்கும் வெளியே விடாமல் இங்கேயே அடைச்சு வைங்க!”என்று அவர்களுக்கு உத்தரவிட்டான்.
அதைக் கேட்டவுடன் அவனைத் திகிலுடன் பார்த்து,
“ஐயோ! சின்னய்யா! எங்களை விட்ருங்க! எங்களுக்குக் குடும்பம் இருக்கு! அவங்களை நட்டாத்துல விட்டுட்டுப் போக முடியாது எங்களால்! அதனால் உங்க காலைப் பிடிச்சுக் கெஞ்சிக் கேக்குறோமுங்க! எங்களை எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க!”என்று பெருங்குரல் எடுத்துக் கதறத் தொடங்கினார்கள் முருகையன், சடையன் மற்றும் விருமன்.
“உங்களுக்கு உங்க குடும்பங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி தானே எனக்கு எம் பொண்டாட்டி ரொம்ப முக்கியம்? அவகிட்டயே நீங்க வாலாட்டினது மட்டுமில்லாமல் தப்பாக நடந்துக்க முயற்சி செய்திருக்கீங்க! அப்படி இருக்கும் போது நான் உங்களை எப்படி உயிரோட முழுசாக இந்த இடத்தை விட்டு அனுப்புவேன்னு நீங்க நினைச்சீங்க? உங்களை என்னால் எப்பவுமே மன்னிக்கவே முடியாது!”என்றவனோ,
“எங்க வீட்டில் எல்லா பொறுப்பும் எங்கப்பாவோடது தான்! அவரைக் கைக்குள்ளே போட்டுக்கிட்டால் என்ன அதிகாரம் வேணும்னாலும் கிடைச்சுடும்ன்னுத் தப்புக் கணக்குப் போட்டுட்டீங்களே! எல்லா நிர்வாகமும், அதிகாரமும் என் கையில் தான் இருக்கு! என்னை விட்டால் என் அப்பாவுக்கும், என் அண்ணனுக்கும் ஒன்னுமே தெரியாது! அதனால் தான் எனக்கு இவ்வளவு உரிமைக் கொடுத்து வச்சிருக்காங்க! அப்படி இருக்கும் போது நீங்க மூனு பேரும் அதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்காமல் எங்கப்பாவை நம்பி இவ்வளவு பெரியத் தப்பை யோசிக்காமல் பண்ணிட்டீங்க! அதுககாகவே உங்களைக் காணாப் பொணமாக ஆக்கப் போறேன்! ஆனால் அதை உடனே செய்ய மாட்டேன்! என் மறு வீட்டு விருந்து முடிஞ்சதுக்கு அப்பறம் உங்களைக் கவனிச்சிக்கிறேன்”என்றுரைத்து விட்டு அவர்கள் மூவரின் கதறல்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கேயிருந்து கிளம்பித் தங்களது காட்டை அடைந்திருந்தான் திருவாதிரன்.
அவன் அங்கே சென்றிருந்த சமயத்தில் முருகையன், சடையன் மற்றும் விருமனின் மனைவிகள் மூவரும் தனது தகப்பனிடம் கண்ணீருடன் எதைப் பற்றியோ பேசிக் கொண்டு இருந்தார்கள்.
உடனே அந்த இடத்திற்குச் சென்று,”என்னவாம்ப்பா?”என்றிருந்தான்.
அதற்கு,”இவங்க மூனு பேரோட புருஷன்களும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே இலலையாம்? நேத்து நைட்டும் வீட்டுக்கு வரலையாம்? அதனால் இங்கே வந்து பார்த்து எங்கிட்ட விசாரிச்சிட்டுப் போக வந்திருக்காங்க”என்று மகனுக்குப் பதிலளித்தார் நஞ்சுண்டன்.
அதைக் கேட்டு அலட்டிக் கொள்ளாமல்,”அப்படியா ப்பா? சரி. நீங்கப் பேசிட்டு வாங்க”என்று அவரிடம் கூறி விட்டுத் தன் மனைவியைத் தேடிச் சென்று விட்டான் திருவாதிரன்.
அதில் அவனை விழிகள் இடுங்கப் பார்த்து விட்டு,”எதுக்கும் இன்னைக்கு முழுக்கப் பாருங்க! அப்பவும் மூனு பேரும் வீட்டுக்கு வரலைன்னா நான் ஆளுங்களை விட்டு எல்லா இடத்திலேயும் தேடச் சொல்றேன்! இப்போ போயிட்டு வாங்க”என்று அவர்களுக்குத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் நஞ்சுண்டன்.
இங்கே தன் மனைவியிடம் வந்து,”என்ன இன்னைக்கு யார், என்னென்ன வேலைகளை உனக்குக் கொடுத்து இருக்கிறா?”என்று அவளிடம் வினவ,
அதற்கு,”எனக்கான வேலையை மாமாவே பிரிச்சுக் கொடுத்துட்டார்!”என்று அவனுக்குப் பதிலளித்தாள் பூவிழி.
“ம்ஹ்ம். அப்போ சரி”என்றுரைத்து விட்டு அங்கேயிருந்து அகன்று அலுவலக அறைக்கு வந்தவனிடம்,
“நீ எதையாவது எங்கிட்ட இருந்து மறைக்கிறியா திரு?”என்று தீர்க்கமாக வினவினார் நஞ்சுண்டன்.
உடனே,”அதே கேள்வியை நான் உங்ககிட்ட கேட்டால் நீங்க என்னப் பதில் சொல்லுவீங்கப்பா?”என்று அவரிடம் தானும் அழுத்தத்துடன் கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் அவரோ திடுக்கிட்டுப் போய் மகனை ஏறிட,
அவனோ,”எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை கண்டிப்பாக இருக்கும்ப்பா! அப்படி இருந்தால் தான் வரைமுறை இல்லாமல் கண்ணை மூடிட்டுத் தப்புச் செய்றவங்களுக்கு இனிமேல் அப்படி செய்யக் கூடாதுன்ற ஒரு பயம் வரும்!”என்று அவருக்கு விடையளித்து விடவும்,
அவனது அந்தப் பதிலைக் கேட்டதுமே முருகையன், சடையன் மற்றும் விருமன் காணாமல் போனதற்குக் காரணம் இவன் தான் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டார் நஞ்சுண்டன்.
அதற்குப் பிறகு அவனிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்.
அன்றிரவு தன் மனைவியின் இடையில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்து விட்டு,
“இனிமேல் உனக்கு யாராலும், எந்தத் தொந்தரவும் இருக்காது விழி”என்றவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
அதில் மோகத்தில் முக்காடிப் போனாலும் கூட அவளுக்கு உறக்கம் வருவதைப் புரிந்து கொண்டு அவளுடன் சேர்ந்து தானும் உறங்கலானான் திருவாதிரன்.
இதே சமயம் மறுநாளும் தங்களது காட்டிற்குத் தன்னைத் தேடி வந்த முருகையன், சடையன் மற்றும் விருமனின் மனைவிகளைக் கையாலாகாத தனத்துடன் பார்த்து விட்டு, அவர்களது கணவர்கள் மூவருக்கும் வெளி வேலைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டதாகத் தெரிவித்து அப்போதைக்கு அவர்களைச் சமாளித்து அனுப்பி வைத்தார் நஞ்சுண்டன்.
அதற்குப் பிறகான நாட்களில், அறிவொளி, செந்தாழை மற்றும் திருவாதிரன், பூவிழியின் மறு வீட்டு விருந்து நாளும் வந்திருந்தது.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக