முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 24

 


அவனுக்குத் தனது மனைவியைச் சுற்றி ஏதோவொரு சதி நடக்கின்றது என்பது புரிந்து போனது. 


அதேபோல் அதை மேற்கொள்வது யாரென்று ஒரு சந்தேகம் இருந்தாலும் கூட அதை மட்டுமே வைத்துக் கொண்டு அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்பதால், தங்களது காட்டின் முதன்மை மேற்பார்வையாளரான முருகையன் தன் மனைவிக்கு வேண்டுமென்றே அதிக வேலைகள் கொடுக்கிறார் என்பதைக் குறிப்பேட்டைப் பார்த்து தெரிந்து கொண்டதும் அவரைத் தனது ஆட்களிடம் சொல்லிக் கண்காணிக்குமாறு கட்டளையிட்டு விட்டிருந்தவனோ, 


அதேபோல், தன் தந்தையின் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டான் திருவாதிரன். 


அன்றிரவு தாமதிக்காமல் தனது மனைவியிடம்,”விழி! உனக்குக் காட்டில் கொடுக்கிற வேலைகள் எல்லாம் போதுமா? இல்லை, இன்னும் ஏதாவது வேலை இருந்தால் பார்க்கிறியா?”என்று ஏளனமாக வினவ, 


உடனே அவனது புறம் திரும்பி,”வேற ஏதாவது வேலை வேணும்னா நானே உங்ககிட்ட வந்து கேட்கிறேன்ங்க”என்று உரைத்த அடுத்த கணமே அவளது தாடையை இறுகப் பற்றித் தன் விழிகளைப் பார்க்க வைத்து, 


“நீ உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற?”என்று அவளிடம் அழுத்தமாக கேட்டிருந்தான் திருவாதிரன். 


ஆனால் அவனது செயலில் மிரண்டு போகாமல் அவனது விழிகளை நேருக்கு நேராகச் சந்தித்து,”நான் ஒன்னும் நினைக்கலையேங்க. நானுண்டு, என் சோலி உண்டுன்னுத் தான் இருக்கேன்! ஏன்? ஏதாவது பிரச்சினையா?”என்றாள் சாதாரணமாக. 


“ப்ச்! இனிமேல் உங்கிட்ட பேசிப் பயனில்லை! நானே இறங்கி வேலையைப் பார்த்தால் தான் சரியாக இருக்கும்!”என்று அழுத்தமாக கூறியவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் பூவிழி. 


“என்ன அப்படி பார்க்கிற? நீ எதையுமே உன் வாயால் சொல்லப் போவதில்லை! அதனால் நானே களத்தில் இறங்கி என்னன்னுப் பார்க்கப் போறேன்! அதே மாதிரி நீ எப்படி எங்கிட்ட எதுவுமே சொல்லாமல் எனக்கு என்னன்னு இருக்கியோ, அந்த மாதிரியே நானும் இனிமேல் இருக்கப் போறேன்! அதனால் நான் இதுக்கப்புறம் செய்யப் போறதை எல்லாம் நீ ஏன்னுக் கேள்விக் கேட்கக் கூடாது!”என்று அவளுக்கு உத்தரவு இடுவதைப் போல் கூறி இருந்தான் திருவாதிரன். 


அதில் கிலி பிடித்துப் போய்,”நீங்க என்னப் பண்ணப் போறீங்க? நான் தான் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டேனே?”என்று அவனிடம் இறைஞ்ச, 


“உஷ்! நீ இதை தவிர வேற எதைப் பத்தி வேணும்னாலும் கலந்து பேசலாம்!”என்றுரைத்து, 


அவளது சோர்ந்திருந்த விழிகளில் மெல்லிய முத்தம் ஒன்றைப் பதித்து விட்டு,”உங்கம்மாவோட இழப்போட அழுத்தத்தைக் குறைக்க உன்னோட மனம் அப்பறம் உடம்போட வலுவைக் கொஞ்சம், கொஞ்சமாக இழந்துட்டு இருக்கிற! அது உனக்குப் புரிஞ்சிதான்னு இல்லையான்னுத் தெரியலை! ஆனால் எனக்கு நல்லாவே புரியப் போய்த் தான் இதுக்கு ஒரு முடிவு கட்ட விரும்புறேன்!”என்றவனோ, 


அவளிடமிருந்து பதிலை எதிர்பாராமல் மெத்தையில் படுத்துக் கொண்டான் திருவாதிரன். 


ஆனால் அவனது அந்த உறுதியான முடிவையும், அறிவுறுத்தலையும் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்த் தாமதமாகத் தான் நித்திரை கொண்டாள் பூவிழி. 


மறுநாள் காலையில் மூன்று வேலையாட்கள் புடைசூழ அமர்ந்து கொண்டுத் தன் மடியில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த மாதுளை முத்துக்களைச் சிறிது சிறிதாக கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்த செந்தாழையோ, 


குளித்து முடித்து வெளியே கிளம்புவதற்குத் தயாராகி வந்த தமக்கையைப் பார்த்து,”என்னக்கா காட்டு வேலைக்குக் கிளம்பியாச்சா?”என்று தெனாவெட்டாக கேட்டிருந்தாள். 


“ஆமாம்”என்றவளிடம், 


நமக்கு எப்போ வேணும்னாலும் மறு வீட்டு விருந்து நடக்கலாம். அதனால் அன்னைக்கும் பழக்க தோஷத்தில் வேலைக்குக் கிளம்பிப் போயிடாதே!”என்று எகத்தாளமாக உரைத்தாள் செந்தாழை. 


அதைக் கேட்டு,”எப்போ விருந்து நடத்தப் போறாகளாம்?”என்றிருந்தாள் பூவிழி. 


“அதெல்லாம் இன்னும் என்னைக்குன்னு முடிவு பண்ணலை. ஆனால் அத்தையும், மாமாவும் எங்க கிட்ட இதைப் பத்திக் கலந்து பேசினாங்க! அதை தான் நான் உங்கிட்ட சொன்னேன்”என்று மர்மப் புன்னகையுடன் கூறிய தங்கையிடம், 


“சரி. விருந்து நடக்கும் போது பார்க்கலாம்”என்று விட்டேற்றியாகச் சொல்லி விட்டுத் தனது கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் மூத்தவள். 


இன்னும் திருவாதிரனும், மற்றக் குடும்ப உறுப்பினர்களும் கூடத்திற்கு வந்திருக்கவில்லை. அந்த தைரியத்தில் தான் மறு வீட்டு விருந்து நடத்துவதைப் பற்றித் தங்களது மாமனார் மற்றும் மாமியார் தன்னிடமும், தனது கணவனிடமும் கலந்து பேசியதாகத் தமக்கையிடம் பொய்யுரைத்து அவளது முக பாவனைகளை ஆராய்ந்து பார்த்த செந்தாழையோ அவள் அதற்கு எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்றதுமே அந்தப் பொருமலிலேயே மாதுளை முத்துக்களை உண்பதில் மும்முரமாகி விட்டாள் செந்தாழை. 


அதே சமயம் இன்றைக்கு என்று தன் கணவன் ஏன் தயாராகி வருவதற்கு இவ்வளவு தாமதப்படுத்துகிறான் என்பதை எண்ணிக் குழம்பிப் போயிருந்தாள் பூவிழி. 


அப்போது அங்கே வந்த நஞ்சுண்டனும், ராஜகுமாரியும் தங்களது இரண்டு மருமகள்களையும் பார்த்து விட்டு, 


முதலில்,“செந்தா! இன்னொரு மாதுளம் பழத்தை உதிர்த்துக் கொடுக்கச் சொல்லவா?”என்று மூத்த மருமகளிடம் வினவினார் மாமியார். 


“வேண்டாம் அத்தை. வயிறு நிரம்பிச்சு” என்றுரைத்தாள் செந்தாழை.


“சரிம்மா”என்றவரோ,


“திருவை எங்கே இன்னும் காணோம்?”எனத் தன் கண்களால் துழாவினார் ராஜகுமாரி. 


“அவர் இன்னும் தயாராகி வரலைத்தை”எனப் பதிலளித்தாள் பூவிழி. 


“ஓஹ்! மறு வீட்டு விருந்தைப் பத்திப் பேசலாம்னு நினைச்சேன்! அதே மாதிரி தாலி கோர்க்கிற சடங்கைப் பத்தியும் எல்லார்கிட்டேயும் கலந்து பேசனும்னும் நினைச்சிட்டு இருந்தேன். அறிவையும் காணலையே!”என்று சலித்துக் கொண்ட மாமியாரிடம், 


“அவர் குளிச்சிட்டு இருக்கார்த்தை. வந்துடுவார்”என்றபோதே அங்கே வந்து அனைவருக்கும் காட்சி தந்தான் அறிவொளி. 


“இந்தா எம்புருஷன் வந்துட்டாருத்தை”என்றிருந்தாள் செந்தாழை. 


“திருவும் வந்துரட்டும். அவனையும் வச்சிட்டுத் தான் விஷயத்தைப் பேசனும்”எனக் கூறி விட்டிருந்தார் நஞ்சுண்டன். 


அதில் கடுப்பாகி,’உச்’கொட்டிக் கொண்டனர் அவரது மூத்த மகனும், மருமகளும். 


அதே நேரத்தில் தனது கணவனின் வருகையை அறிந்ததுமே அவனைப் பார்த்து முறைத்தாள் பூவிழி.


அதைக் கண்டு கொண்டாலும் கூட,”என்ன இன்னும் யாரும் சாப்பிட உட்காரலையா?”என்று அங்கேயிருந்த மற்றவர்களிடம் விசாரித்தான் திருவாதிரன். 


“இல்லை. உனக்காகத் தான் காத்திருக்கோம்”என அவனிடம் தெரிவித்தார் ராஜகுமாரி.


அதில் தனது புருவத்தை ஏற்றி, இறக்கி விட்டு,”ஓஹ்! சரி. எல்லாரும் வந்து உட்காருங்க. சீக்கிரம் சாப்பிட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போகலாம்”என்றவனின் வார்த்தைக்குக கட்டுப்பட்டுச் சாப்பாட்டு மேசை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள் அனைவரும். 


அவர்களுக்கு வேலையாட்கள் உணவைப் பரிமாறத் தொடங்கி விட்டனர். 


அப்போது,“திரு! உங்க ரெண்டு ஜோடிக்கும் மறு வீட்டு விருந்து வைக்கலாம்னு முடிவு எடுத்து இருக்கோம்”என இளைய மகனிடம் அறிவித்தார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். எப்போ வைக்கப் போறீங்க?”என்று வினவினான் திருவாதிரன்.


“அதை நீங்க நாலு பேரும் தான் சொல்லனும். உங்களுக்கு எப்போ தோதாக இருக்கும்ன்னுச் சொல்லுங்க. அப்போவே வைக்கலாம்”என்றுரைத்து விட்டிருந்தார் ராஜகுமாரி. 


“எங்களுக்கு எல்லா நாளும் தோது தான்ம்மா. நீங்க வேலைக்குப் போறவங்ககிட்டே தான் முக்கியமாக கேட்டுக்கோனும்”என்று அவரிடம் மொழிந்தான் அறிவொளி. 


அதில் உடனே தங்களது இளைய மகனைப் பார்த்தார்கள் ராஜகுமாரி மற்றும் நஞ்சுண்டன். 


அவனோ அவர்களுக்குப் பதிலளிக்காமல் தன் மனைவியிடம் திரும்பி,”உனக்கு எப்போ தோதுப்படும்மா?”எனக் கேட்டான் திருவாதிரன். 


தனது கருத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து தன்னிடம் கேட்டிருந்த கணவனிடம்,”எனக்கும் எப்போ விருந்து வச்சாலும் சம்மதம் தானுங்க. ஆனால் என்ன என்னோட முதலாளி கிட்டே அதுக்கு முந்தின நாளே விடுப்புக் கேட்டாகனும்”எனக் குறும்பாக கூறிப் புன்னகைத்தாள் பூவிழி. 


அவர்களது அந்த அந்நியோன்யம் செந்தாழைக்கு எரிச்சலைக் கொடுக்கவும், 


“அதான் இவங்க ரெண்டு பேரும் கூட எப்போ விருந்து வச்சாலும் சம்மதம்ன்னுச் சொல்லிட்டாங்களே? அப்பறம் என்னத்தை, மாமா? நீங்க விருந்தைக் கொஞ்சம் சீக்கிரமாக வச்சா நல்லா இருக்கும்”எனத் தனது மாமனார், மாமியாரிடம் உரைக்க, 


“அப்போ சரி. நாளையில் இருந்தே அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கலாம். நானும், அறிவும் அதையெல்லாம் பார்த்துக்கிறோம். நீ மத்த முக்கியமான வேலைகளைப் பாரு!”என்று இளைய மகனிற்கு அறிவுறுத்தினார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டும் தனது மனம் கோபத்தில் கொந்தளிக்க,”எனக்குச் சாப்பாடு போதும்”என நாற்காலியில் இருந்து மெல்ல எழுந்து கொண்டாள் செந்தாழை. 


அதில் பதறிப் போய்,”ஏன்ம்மா இன்னைக்குச் சாப்பாடு வாய்க்கு நல்லா இல்லையா?”எனக் கேட்டான் அவளது கணவன் அறிவொளி. 


“அப்படியெல்லாம் இல்லங்க. ஏற்கனவே பழம் சாப்பிட்டேன்ல? அதுவே கழுத்து நிறைய இருக்கு! அதுக்கு மேலே சாப்பாடு சாப்பிட முடியலை. அதான்”என்றவளோ, 


“நான் ரூமுக்குப் போய்க் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறேன்”என அனைவருக்கும் பொதுவாக மொழிந்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள் செந்தாழை. 


“இந்தப் பொண்ணு இவ்வளவு நேரமாக நல்லா தானே இருந்தாள்? இவளுக்குத் திடீர்னு என்னாச்சு?”என்று சொல்லிக் கொண்டார் ராஜகுமாரி. 


ஆனால்,”எனக்கும் சாப்பாடு போதும். நான் போய்ச் செந்தாவைப் பார்க்கிறேன்”என்று தட்டிலேயே கையைக் கழுவி விட்டு அங்கேயிருந்து எழுந்து சென்று விட்டான் அறிவொளி. 


அதற்குப் பிறகுத் தானும், தன் மனைவியும் உணவருந்தி முடித்து விட்டதால்,”அப்பா! நீங்க இன்னைக்குக் காட்டுக்கு வந்துட்டு நாளையில் இருந்து விருந்துக்கான ஏற்பாடுகளைப் பாருங்க”என்றத் திருவாதிரனிடம், 


“ம்ஹ்ம். ஆனால் நான் அப்பப்போ அங்கே வந்துட்டுப் போயிட்டுத் தான் இருப்பேன்டா”என்று தெரிவித்தார் நஞ்சுண்டன்.


“சரிங்கப்பா”என்றதுமே, 


தனது உணவைத் துரிதமாக உண்டு முடித்தார்.


பின்னர், ராஜகுமாரியிடம் விடைபெற்றுக் கொண்டுக் காட்டை அடைந்தனர் பூவிழி, திருவாதிரன் மற்றும் நஞ்சுண்டன். 


அங்குத் தனது கணவன் தன்னுடைய கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததை எண்ணி மகிழச்சியான மனநிலையில் தனக்கு ஒதுக்கித் தந்திருந்த அனைத்து வேலைகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பித்து விட்டிருந்தாள் பூவிழி. 


அவளை வன்மத்துடன் பார்த்து விட்டு,’இந்தப் பெரிய ஐயாவை எப்போ தனியாகச் சந்திக்கிறதுக்கான நேரம் கிடைக்கும்னுத் தெரியலையே! அவர் கிட்டே பேசினால் தான் அடுத்தக் கட்டத்துக்கு எப்போ போகலாம்னு அவர் கிட்டே கலந்து பேசிட்டு அதைச் செயல்படுத்த முடியும்!’என்று தனது மூத்த முதலாளியைத் தனியாகச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் முருகையன்.

 

அவரது காத்திருப்பை வீணாக்காமல் அவரைத் தனியாகச் சந்தித்து விட்டிருந்தார் நஞ்சுண்டன். 


“ஐயா! அந்தப் பூவிழி விஷயத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கலாமா?”என்று பவ்யமாக வினவ,


“இன்னும் கொஞ்ச நாளில் எங்க வீட்டில் மறு வீட்டு விருந்து நடக்கப் போகுது! அதனால் அதுக்கு முன்னாடியே எதையாவது செஞ்சி அவளை இந்த ஊரை விட்டே போற மாதிரிப் பண்ணிரு”என்று அவருக்குக் கட்டளையிட்டு விட்டு வஞ்சகத்துடன் புன்னகைத்தார் நஞ்சுண்டன்.


                              - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...