அவர்களது அன்பின் தன்மையை அறிந்து, உள்ளம் பூரித்த, மௌனாவின் பெற்றோரான அன்னபூரணி மற்றும் சிவமணியும்,
"கண்டிப்பாக சம்பந்தி" என்று மஹதனின் தாய், தந்தையின் அழைப்பை ஏற்றுப் புன்னகைத்தார்கள்.
அவர்களுக்குக் குடிக்க எடுத்து வரச் சென்ற அகதாவை அழைத்து,
"நீ எங்கே சமையல்கட்டிலேயே இருந்துக்கலாம்னு முடிவே செய்துட்டியா? பேசாமல் உட்கார்!" என அவளை அழைத்து தன்னுடன் அமர வைத்துக் கொண்டார் அன்னபூரணி.
"இவங்க கூட ஊருக்குப் போயிட்டு, வேலை மட்டுமே பார்க்கனும்னு முடிவு செய்திருக்கியா அகதா?" என அவளிடம் கேட்டார் கௌசல்யா.
அதில் சங்கடமாகப் புன்னகை செய்த அகதாவோ,"ஆமாம் மா. வேற என்ன செய்ய?" என்று வெற்றுப் பார்வையுடன் சொன்னாள்.
"அடுத்து வாழ்க்கையில் இன்னும் நீ இன்னும் உனக்கான நல்ல விஷயங்களைப் பார்க்கவே இல்லைடா! இப்போதைக்கு ஒரு பிரேக் எடுத்துக்கோ. உனக்கா தோனும்! சான்ஸ் கிடைக்கும். அதை யூஸ் பண்ணிக்க மட்டும், தயங்காதே!" என்று சரியான அறிவுரை ஒன்றை அவளுக்குக் கொடுத்தார் மஹதனின் அன்னை.
அகதாவின் தயக்கமும், சங்கடமும் தீபக்கால் வந்தது என்பதை, அவளது தோழியும், தோழியின் கணவனும் அறிந்ததால், "நீங்க நாளைக்கு ஃப்ரீயா இருப்பீங்களா அகதா?" என்று அவளிடம் வினவினான் மஹதன்.
திடுமென அவன் கேட்டதில், பாவையவளுக்கு விழிகள் தெறித்தது.
"ஹாங்! யெஸ் மஹதன்" என்று திடுக்கிட்டுப் போனப் பார்வையுடன் தோழியை ஏறிட்டாள் அகதா.
"ஒரு காரணத்துக்காகத் தான் அவர் உன்கிட்ட அதைக் கேட்டார் அகி! ஆனால், நீ பயப்பட்றதுக்கு ஒன்னுமில்லை. நாளைக்கு ஒரு இடத்துக்குப் போகனும். நானும் உங்க கூட வருவேன். கிஷானும், முகியும் கூட வருவாங்க. சரியா?" என்று நண்பியிடம் விளக்கிக் கூறினாள் மௌனா.
"எங்கே போறோம்?" என்று புரியாமல் கேட்டாள் அகதா.
"எல்லாம் உனக்காக நாங்கச் செய்யப் போகிற விஷயத்துக்குத் தான்" என்றாள்.
"அதான் என்ன?" என மௌனாவிடம் கேட்க,
"இப்போவே சொல்லனுமா அகி?"
"சொன்னால் பிரிப்பேர் ஆகிடுவேன். அதான்" என்று கூறினாள் அகதா.
"சொல்லாமல் கூப்பிட்டுப் போனால் தான் எல்லாருக்கும் நல்லது" என்று நிதானமாக உரைத்தான் மஹதன்.
அவன் அப்படிக் கூறிய தினுசில், மௌனாவைப் பார்த்துப் பரிதாபமாக விழித்தாள் அகதா.
"எந்தச் சாய்ஸூம் இல்லை அகி" என்று அவளும் பிடி கொடுக்காமல் பதிலளிக்கவும், தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள் இவள்.
"ஓகே…!" என்று அமைதியாகி விட்டாள்.
இவர்களது சம்பாஷணைகளை அவதானித்துக் கொண்டிருந்தப் பெற்றவர்கள், அகதா எனும் போது, அது எதற்கான அழைப்பாக இருக்கும் என்பதை அறியாதவர்களா அவர்கள்?
அகதாவின் மனநிலையை மாற்றும் விதமாக,"பசிக்குது சம்பந்தி. சாப்பாடு போடுங்க" என்றார் திருமூர்த்தி.
அதற்குப் பின்னர் தான், இன்னும் அனைவருக்கும் உணவளிக்கவில்லை என்பதை உணர்ந்தவர்களாக, அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறினர்.
அன்னை மற்றும் தந்தையுடன் இழையவில்லை என்றாலும், அவர்களது அருகாமையில், மனம் தணிந்து காணப்பட்டாள் மௌனா. அவர்கள் அருகிலேயே தான் அமர்ந்து உணவுண்டாள்.
அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதைப் போல, மௌனமாக இருந்தாள் மௌனா.
அங்கிருந்து கிளம்பும் போது, மஹதனும், மௌனாவும் அன்னபூரணி மற்றும் சிவமணியின் பாதங்களில் பணிந்து எழுந்து விட்டுச் சென்றனர்.
அகதா,"அவ நார்மலா இருக்கா ம்மா! நீங்க தான் பதறுறீங்க!" என அன்னபூரணியிடம் சொல்ல,
"இல்லைடா ம்மா. அவ எதையும் வெளியே காட்டக் கூடாதுன்னு, மெச்சூர்ட் ஆக நடந்துக்க டிரை பண்றா" என்றார் சிவமணி.
—---------------------
"ஆமாடா. இப்போ தான் வந்தோம். மறு வீட்டுக்கு நாள் சொல்லியாச்சு" என்று நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தான் மஹதன்.
"நானும், முகியும் விருந்துக்கு வர்றோம்" என்று அழையா விருந்தாளிகளாகத் தாங்கள் வரலாமா? என்று வினவினான் கிஷான்.
"வரலாமே! உனக்கு நான்வெஜ்ஜில் எல்லா வெரைட்டியும் கிடைக்கும்" என்று அவனிடம் சொன்னான் மஹதன்.
"நாங்க கல்யாணம் தான் பண்ணிக்கலை. ஆனால், எல்லா சடங்கையும் அட்டெண்ட் செய்துட்டு இருக்கோம். இப்போ மறு வீட்டுக்குக் கூட, வரப் போறோம்!" என்று அவனிடம் கூறிச் சிரித்தான் கிஷான்.
"ஆஹான்! அடுத்த வாரம் கிளம்பி வாங்கடா" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் மஹதன்.
"டேய்! மருமகளைப் போய்ப் பாரு" என அவ்விடத்திற்கு வந்த மகனை, மௌனாவிடம் அனுப்பினார் கௌசல்யா.
திருமணத்தில் இருந்து இப்போது வரை புடவையில் வலம் வந்த மனைவியை இன்று தான், ரசித்துப் பார்க்கிறேன் மஹதன்.
ஏனெனில், பெரும்பாலும் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து இருப்பார்கள், அப்போது கள்ளத்தனமாக அவளை ரசிப்பது எல்லாம் அவனுக்குக் கை வந்தக் கலை இல்லை. அதைச் செய்யவும் மாட்டான் மஹதன்.
இப்போது, நேரிடையாகவே மனைவியின் புற அழகை ரசித்தவன்,
பின்னிருந்து மென்மையாக அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்ததும்,
"ஹாங்! என்னங்க!" என்றதொரு திகைப்பில் ஆழ்ந்திருந்தாள் மௌனா.
"என்ன?" என்று இவனும் திருப்பிக் கேட்க,
"ஏதோ யோசனையில்…" என்றிருந்தாள் மௌனா.
"நாம ஹனிமூன் போகிற வரை, இப்படி கொஞ்சல் எல்லாம் நடக்கும். நீ எதுவும் பயந்துடாத ம்மா. உனக்குக் கிஸ் கூட இன்னும் நான் கொடுத்தது இல்லை" எனப் பாவமாக மனைவியிடம் கூறினான் மஹதன்.
அவர்களது காதல் இப்படித் தான் இருந்தது. மெய் தொட்டு, இதழ் உரசி எல்லாம் நேசத்தை வளர்க்கவில்லை இருவரும்.
விழிகள் மட்டுமே ஒன்றுக்கொன்று சளிக்காமல் தழுவிக் கொண்டு இருந்தது.
இந்தச் சமயத்தில், உதடுகளை உரச விட்டுக் கொள்ளத் தோன்றியது மஹதனுக்கு. அது மௌனாவுக்கு இடைஞ்சலாக இருக்குமோ? என்ற எண்ணமும் எழுந்தது அவனுக்குள்.
"மஹி!" என்று கணவனை விளித்தவள்,
அவன் எதிர்பாராமல் இதழ்களை, மஹதனுடைய இதழில் படர விட்டாள் மௌனா.
அவனுடைய மறுமொழி என்னவாக இருக்கும் என்பதெல்லாம் அவளுக்குக் கவலையே இல்லை. தனக்கான ஆறுதல் அவனிடத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து தான் இதைச் செய்கிறாள் மஹதனுடைய மனைவி.
இதழ் அழுத்தம் இன்னும் கூடியபடி இருக்க, அவளுக்குத் தனது உதடுகளைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, அமைதியாக இருந்து விட்டான் கணவன்.
அவ்விதழ்களின் மோதல்கள் அடங்கியதும்,
"சாரி மஹி.." எனத் தடுமாறினாள் மௌனா.
"இல்லை ம்மா! எனக்கும் இந்தக் கிஸ் தேவைப்பட்டுச்சு" என்று கூறி அவளது கன்னத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் மஹதன்.
"நானும் ஒரு கிஸ் கொடுத்துக்கிறேன்டா" என நொடிப்பொழுதில், அவளது அதரங்களைத் தன்னுடைய உதடுகளால் வதைத்தான் மஹதன்.
மணித்துளிகள் சில கடந்ததும், தங்களைச் சரிபடுத்திக் கொண்டு, கட்டிலில் அமர்ந்தார்கள் தம்பதியர்.
அவர்களது பேச்சும், சிரிப்பும் அவ்வறையை நிறைத்தது.
"மறு வீட்டுக்கா?" என்று கிஷானிடம் கேட்டாள் முக்தா.
"ஆமாம் முகி. நீயும் வா" என்று அவளையும் அழைத்தான் கிஷான்.
"சரிங்க. அப்படியே நாமளும் நம்ம வீட்டுக்கு அவங்களைக் கூப்பிடனும்" என்றாள்.
"ஓகே முகி"
__________________
காயங்கள் மற்றும் கட்டுக்குள் நிறைந்து, முகம் விகாரமாக இருக்க, உதடுகள் இறுகித் தன்னை வெறித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் நடுக்கம் கொண்டாள் அகதா.
"மேடம்! என்னப் பார்க்க வந்திருக்கீங்களே! என்ன விஷயம்?" என்று வேதனை மற்றும் வலியின் உச்சியில் இருந்தாலும், அவளைக் கேலி செய்ய மறக்கவில்லை அவன்.
அவளது பின்னாலிருந்த மௌனா,"ப்ச்! உன்னை எப்படி கிண்டல் பண்றான் பாரு? ஏதாவது திருப்பிப் பேசு!" என அவளை உந்தினாள் மௌனா.
அங்கு கிஷானும், மஹதனும் இருந்தார்கள். ஆனால், அவ்விரு பெண்களுக்கும் ஏதும் கேடு நேராமல் இருக்கும் வரை, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் அவ்விரு ஆடவர்களும்.
"ஹேய் அகி!" என்று அவளை மேலும் உலுக்கினாள் மௌனா.
"ஹாங்! என்னக் கேட்ட?" என்று எதிரில் இருப்பவனிடம் அழுத்தமாக வினவினாள் அகதா.
"என்னத் திடீர்னு இங்கே உங்க விசிட்?" என்று திமிராக கேட்டான் தீபக்.
"உன்னோட நிலைமையைப் பார்த்து சந்தோஷப்பட வந்தேன்!" என்று விறைப்பாக பதில் சொன்னாள்.
"ஓஹ்! என்னை வெளியே விடச் சொல்லுடி!" என்று உடனே உரக்க கத்தி அவளுக்குக் கட்டளையிட்டான்.
"எதுக்குடா சொல்லனும்? ஆங்! நான் எதுக்கு அதைச் சொல்லனும்?" எனத் தெனாவெட்டாக வினவினாள் அகதா.
சிறிது நேரத்திற்கு முன், தன்னைப் பார்த்து நடுங்கியவளோ, இப்போது, எதிர்த்துக் கேள்வி கேட்டுக் குதிப்பதைக் கண்டு வெறியாகிப் போய், "ச்சை! உன்னால், என்கிட்ட இருந்த எல்லாமே போச்சுடி! சரியான ராசி கெட்டவளே!" என்று வாய்க்கு வந்ததைக் கூறி அவளது மனதை உடைத்தான் தீபக்.
"நீயெல்லாம் இப்படி என்னைப் பேசி அடக்கி வச்சதால் தான், அவ்வளவு படிச்சு இருந்தும், உனக்கும், உன் அம்மாவுக்கும் அடங்கிப் போய் இருந்தேன் டா! என்னை இப்படி சொல்றியே? நீ ஒரு வேலைக்குப் போய் உங்கம்மாவுக்குச் சோறு போட முடிஞ்சுதா? நான் வந்த அப்பறம், அவங்களை அம்போன்னு விட்டுட்டியாம்! வேலைக்குப் போகாமல், சம்பாதிக்காமல், என்னைப் பழி வாங்கனும்னு வெறிப் பிடிச்சு சுத்திக்கிட்டு இருந்தியாம்?" என்று அவள் எகிறிப் பேசவும்,
அகதாவை அடக்கவியலாமல், தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை ஆத்திரத்துடன் உறுத்து விழித்தான் தீபக்.
"டேய்! நீ என்னக் கோபப்பட்டாலும், உன்னால் என்னைப் பழி வாங்க யோசிக்கக் கூட முடியாது! இங்கேயே கிடந்து சாவு!" என்று தன் மனத்தாங்கல் அனைத்தையும் அவனிடம் சொல்லி ஆற்றிக் கொண்டாள் அகதா.
"ஹேய்…!" என்றவனது காட்டுக் கத்தலில், தோழிக்கு உதவியாக வந்து நின்றாள் மௌனா.
அவளைப் பார்த்ததும்,"என்னப் புதுப் பொண்ணு, உன் புருஷனும் வந்திருப்பானே? எங்க காணோம்?" என்று கண்களால் துழாவினான் தீபக்.
"இருக்கேன் டா!" என மறைவிலிருந்து வெளிப்பட்டான் மஹதன்.
அவனுடன் கிஷானும் வெளியே வரவும்,
"இந்தா வந்துட்டானுங்கள்ல! உங்களோட பாடிகார்ட்ஸ்!" என எக்காளமிட்டான் தீபக்.
"இப்படியே டயலாக் பேச விட்டால், வேலைக்கு ஆகாது. கிஷான்! இவனைக் கையைக் காலை முறிச்சு விடு. ஹாஸ்பிடல் மட்டுமே இவனுக்கு வீடாக இருக்கனும்!" என்றான் மஹதன்.
"உங்க அம்மா கூட, அவங்க நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு, வீட்டு வேலையைப் பார்த்து தன் வயிறை நிரப்பிக்கிறாங்கடா! நீ திருந்தவே மாட்டல்ல?" என்றவன்,
"மௌனா! அகதா! ரெண்டு பேரும், வீட்டுக்குக் கிளம்புங்க! நாங்க இவனைக் கவனிச்சுட்டு வர்றோம்" என்று அவர்களைக் காரில் அனுப்பி வைத்தார்கள் மஹதனும், கிஷானும்.
மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, "இப்போ தான், எனக்கு நிம்மதியாக இருக்கு மௌனா. உனக்கும், உன் ஹஸ்பண்ட் அண்ட் கிஷானுக்கும் ரொம்ப தாங்க்ஸ் ம்மா!" என்று கண்ணீர் மல்க நன்றி கூறினாள் அகதா.
சற்று முன்னர், பேசியவை எல்லாம், மௌனா முதல் கிஷான் வரை தீபக்கிடம் கூறி, அவனைத் திட்டிய அதே சொற்றொடர்கள் தான்! ஆனால், அகதாவின் வாயிலாக வரும் போது, அவளுடைய ஆற்றாமைகள் அனைத்தும், வெளிப்பட்டு, இதன் மூலம், அவளுக்கு நிம்மதி கிடைத்தது.
இன்றுடன் அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டு விட்டாயிற்று.
____________
"இங்கேயே உன்னை அடைச்சு வைக்கலாம்னு இருந்தால், உன் வாயால் நீயே ஆப்பு வச்சுக்கிற! இனிமேல் இந்த தண்டனையும் உனக்கு இல்லை. வேற புதுசாக தான் தண்டனைக் கொடுக்கப் போறோம்!" என்ற கிஷானும், மஹதனும்,
அவர்களது அடியாட்களை அழைத்து,"இவனைக் கையைக், காலை உடைச்சு, உருத் தெரியாமல், ஹாஸ்பிடலில் கொண்டு போய்ப் போடுங்க. காயம் ஆற, ஆற மறுபடியும் அதை ஏற்படுத்துங்க! வெளியே நடமாடவே முடியாமல் இருக்கனும்!" என்று கட்டளை இட்டவர்களிடம், கெஞ்சத் தான் முடிந்தது தீபக்கால்.
ஆனால், இவனது அட்டூழியங்கள் நிற்காமல், தொடரும் என்பதால், அதைக் காதில் வாங்காமல், அவ்விடத்தை விட்டு வெளியேறினர் நண்பர்கள் இருவரும்.
அகதாவின் வாழ்க்கையில் இருந்து, தீபக்கும், அவனது தாயார் லலிதாவும், இவர்களால் அகற்றப்பட்டு, அவளது எதிர்கால வாழ்க்கைக்காக அஸ்திவாரம் போட்டுக் கொடுக்கப்பட்டது.
___________________
மஹதனும், கிஷானும் தத்தமது குடும்பத்திற்கு அனைத்தையும் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு, மஹதன் மற்றும் மௌனாவின் மறு வீட்டு விருந்திற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டனர்.
இதற்கிடையே, முக்தாவைத் தனியாக அழைத்துப் பேசிக் கொண்டு இருந்தான் கிஷான்.
காருக்குள் அமர்ந்திருந்தவர்கள்,"இந்தா முகி!" என்று அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தாள் முக்தா.
அதிலுள்ள செய்தி, அவளது மகிழ்ச்சியைத் தூண்டியது.
"இது உன்னோட குவாலிஃபிகேஷனுக்கானப் பர்ஃபெக்ட் ஜாப் முகி. நம்ம மேரேஜ் முடிஞ்சதும், அஃபிஷியல் ஆக அனவுன்ஸ் செய்ததும், ஜாயின் பண்ணிக்கோ!" என்று கூறி மென்னகை புரிந்தான் கிஷான்.
"தாங்க்யூ சோ மச்!" என்று அவனது கன்னத்தை ஈரப்படுத்தினாள் முக்தா.
அதைக் கன்னம் சிவக்கப் பெற்றுக் கொண்டான் கிஷான்.
இவர்கள் தான் அடுத்தக் கல்யாண ஜோடிகளாயிற்றே!
________________
"எல்லா வெரைட்டியையும் இலையில் வைங்க! எனக்குக் கேட்கக் கூச்சமே இல்லை ம்மா!" என்று கௌசல்யாவிடம் கேட்டு வாங்கி உண்டான் கிஷான்.
அவனுக்கு இணையாக, அருகே அமர்ந்து, தன்னுடைய இலையை நிறைந்திருந்த அசைவ உணவு வகைகளைப் பதம் பார்த்தாள் முக்தா.
"நமக்குக் கொடுத்திருக்கிற விருந்துக்கு வந்துட்டு, இவன் நாட்டாமை பண்ணிட்டு இருக்கான் பாரு!" என்று நண்பனைக் காட்டிக் கூறித் தன் மனைவியிடம் முறையிட்டான் மஹதன்.
இவர்களது திருமணம் தொடங்கியதில் இருந்து, இவ்விருவரின் அலும்புகளை மொத்தக் குடும்பமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் அல்லவா?
"கேட்டால், நாங்க நோட்ஸ் எடுக்கிறோம், எங்க கல்யாணத்துக்கு உதவும்னு சொல்றது!" என்று அவர்களது பதிலைத் தானே உரைத்தாள் அகதா.
"ஹாஹா!" என்று அதற்கும் சிரித்தபடியே உணவுண்டு முடித்தனர் கிஷானும், முக்தாவும்.
மஹதன் மற்றும் மௌனாவிற்கு இரு வீட்டாரும் மறு வீட்டு விருந்து கொடுத்து முடித்ததும், அவர்களைத் தன் வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தவள், தானே உணவைப் பரிமாறினாள் முக்தா.
தம்பதியுடன், நீலகண்டனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
"நீயும் உட்காரு டா" என்றார் மகளிடம்.
"இதோ ப்பா" என்று தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு தனக்காகத் தட்டில் உணவை எடுத்துக் கொண்டாள் முக்தா.
அவளுக்கும், நீலகண்டனுக்கும் என்ன ஆச்சரியம் என்றால், தாங்களும், குடும்பமும் இழுத்து இழுப்புக்கு எல்லாம், மஹதன் வளைந்து கொடுக்கிறான் என்பது தான்!
விருந்திற்கு அழைப்பு விடுப்பது மற்றும் மத்த சம்பிரதாயங்களை, யார் சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், அப்படியே செய்யும் அவனது சுபாவம் வியப்பைத் தராமல் இருக்குமா?
தன் மகளிடம் சுமூகமாகப் பேசும் மஹதனை வியப்பாகப் பார்த்து வைத்தார் நீலகண்டன்.
"மஹதன்! உங்களை நான் வற்புறுத்திக் கூப்பிட்டுட்டேனா என்ன?" என்று அவனிடம் கேட்டாள் முக்தா.
அதைக் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்க்க,"இல்லை, அமைதியாகவே இருக்கீங்களே! ஒருவேளை இந்த விருந்து பிடிக்கலையோன்னு தோனுச்சு! அதான்" என்றாள்.
"பிடிச்சிருக்கு முக்தா. இல்லைன்னா வந்திருக்கவே மாட்டேனே!" என்று அவனும் சளைக்காமல் பதில் தந்தான்.
மௌனாவும்,"அவரும், நானும் சந்தோஷமாகத் தான் இங்கே வந்திருக்கோம் முகி! இப்படியெல்லாம் நினைக்காதீங்க!" என்று அவளிடம் சொன்னாள்.
"அப்போ ஓகே! இங்கே முடிஞ்சதும், இன்னொரு நாள், கிஷானும் உங்களுக்காக வெயிட் பண்ணுவார்! மறந்துடாதீங்க!" என்று விழிகளை உருட்டி அவர்களைப் பயமுறுத்திப் பார்த்தாள் முக்தா.
"ஆமாம். அவனும் கூப்பிட்டு இருக்கான். அங்கேயும் ஒருநாள் போகனும்" என்றான் மஹதன்.
தங்களது வயிற்றுக்கு வேட்டு வைக்காமல், சமைத்து வைக்குமாறு கூறி இருந்தார்கள் கிஷானிடத்தில்.
"கொஞ்சம் இருங்க" என்று அவர்களுக்கு, உடைகளுடன், ஒரு சில பொருட்களைத், தட்டில் வைத்துக் கொண்டு வந்தார் நீலகண்டன்.
இதெல்லாம் அவருக்குத் தெரியாது! ஆனால், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, மஹதனுக்கும், மௌனாவிற்கும் கொண்டு வந்து கொடுத்தார்.
"வாங்கிக்கோங்க" எனப் புன்னகையுடன் அவர்களது கைகளில் தந்தார் நீலகண்டன்.
வெகு ஆச்சரியத்துடன் அதைப் பெற்றுக் கொண்டனர் மஹதன் மற்றும் மௌனா.
"எங்க வீட்டு விருந்தோம்பல்" என்று தன் பாதங்களில் விழுந்து எழுந்த இருவரிடமும் கூறி, அவர்களுக்கு நல்லாசி வழங்கினார் நீலகண்டன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக