முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 30

 


"அதை அகதாவோட கண்ணு முன்னால் பண்ணினால், இன்னும் செம்மையா இருக்கும் டா!" என்று தீவிரமாக கூறினான் கிஷான்.


"அதுக்கு ஒரு நாளைக் குறிப்போம்" என்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் மஹதன்.


வெளியிலிருந்த அனைத்து பத்திரிக்கை நிருபர்களையும் உள்ளே அனுமதித்து, உணவுண்டு விட்டுக் காத்திருக்குமாறு வலியுறுத்திச் சென்றார் திருமூர்த்தி.


மௌனாவும், மஹதனும் தங்களது அறையிலிருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்தார்கள்.


"வெளியே பிரஸ், மீடியா எல்லாம் இருக்காங்க. நம்மளை ஃபோட்டோஸ் அண்ட் வீடியோஸ் எடுப்பாங்க. அவங்களை எல்லாம் தாண்டி தான் காரில் போய் ஏறனும்" என்று அவர்களிடம் கூறி, மாமனார் மற்றும் மாமியாரை மனதளவில் தயார்படுத்தினான் மஹதன்.


ஆனால், மௌனாவிற்கு இது புதிதல்ல. இவன் மேலிருந்தக் காதலை உறுதி செய்த நாளிலிருந்து, அவளுக்கு இவையெல்லாம் பழக்கப்பட்டு விட்டது.


அதனால், தனது உடல் மொழியைச் சாதாரணமாக வைத்திருந்தாள் மௌனா.


"சரிங்க மாப்பிள்ளை" என்றவர்கள், தங்களது சம்பந்தியுடன் இணைந்து நடக்கத் தொடங்கினர் மௌனாவின் பெற்றோர்.


"நீ மௌனா கூடப் போகாதே முகி. மஹதன் அவங்களை பார்த்துப்பான்" என்று அவளைத் தன்னுடன் வரச் சொன்னான் கிஷான்.


பாதுகாவலர்கள் அனைவரும் புடைசூழ, தங்களது கம்பீரத் தோற்றத்துடன் நடை போட்டு, வெளியில் இருந்த மக்களை எதிர் கொண்டார்கள் மணமக்கள்.


"ஹாய்!" என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்து கை காட்டினார்கள் மஹதனும், மௌனாவும்.


"கேஷுவலாக நடந்து வாங்க" என்று தங்களது மருமகளின் பெற்றோருடன் நடந்தார்கள் கௌசல்யா மற்றும் திருமூர்த்தி.


இதில், மணமக்களைப் பற்றிக் கேட்காமல், திடிரென, தன் தந்தையுடனும், வருங்கால கணவனுடனும் மற்றும் அவனது குடும்பத்துடனும் வந்து கொண்டிருந்த முக்தாவைக் காட்டி,


"மஹதன் சாரோட எங்கேட்ஜ்மெண்ட்டிலும், கலாயாணத்திலேயும், நீங்களும், முக்தாவும் ரொம்ப நெருக்கமாக நடந்துக்கிட்டீங்க! அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா? இல்லை, வெறும் ஃப்ரண்ட்ஷிப் மட்டும் தானா சார்?" என்று கிஷானிடம் வினவினார் ஒரு பத்திரிக்கை நிருபர்.


அந்தக் கேள்வியை, மீண்டும் மீண்டும் எதிர் கொண்டதாலோ, என்னவோ முக்தாவிற்குச் சிரிப்பாகத் தான் வந்தது.


அவளது தந்தையான நீலகண்டனுக்கு அந்த நிருபரின் மேல், ஆத்திரம் தோன்ற, அவர் பேச்செடுக்கும் முன்னர்,


"இருங்க அப்பா. கிஷான் பதில் சொல்லுவார்" என்று அவரது ஆத்திரத்தை தணித்தாள் முக்தா.


காஞ்சியப்பனும், சித்ரலேகாவும் தங்களுடைய மகனின் பதிலுக்காகச் சுவாரசியமாக காத்திருந்தார்கள்.


"ஆமாம். எங்களுக்குள்ளே நட்பும் இருக்கு, லவ்வும் இருக்கு. அதனால் தான் என் நண்பனோட மேரேஜ் முடிஞ்ச அப்பறம், எல்லாத்தையும் புரொசீஜர் படி செய்யலாம்னு இருக்கோம். நாங்க அஃபிஷியல் ஆக இன்ஃபார்ம் பண்றதுக்குள்ள உங்களுக்கு எப்படி நியூஸ் வந்துச்சு?" என்று தன்னுடைய விழிகளைக் கூராக்கிக் கொண்டு கேட்டான் கிஷான்.


"நியூஸ் எதுவும் வரலை சார். உங்க ரெண்டு பேரோட குளோஸ் ஆன பிஹேவியர் தான், எங்களுக்கு இப்படியான சந்தேகத்தைக் கொடுத்துச்சு சார்!" என்றார் அந்த நிருபர்.


"குளோஸ் ஆக இருந்தால், தப்பானக் கண்ணோட்டத்தில் பார்க்கனும்னு அவசியம் இல்லை சார். நாங்க எல்லாரும் ஃப்ரண்ட்ஸ். அப்போ எங்களுக்குள்ளே நல்ல பாண்டிங் இருக்கும் தானே?" என்றவன், அந்த நிருபரை அதற்கு மேல் கேள்வி கேட்க விடாமல் முக்தாவின் கையைப் பற்றிக் கொண்டு, அவளுடன் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கிஷான்.‌


"எங்களோட மேரேஜூக்கு வந்துட்டு, இவங்களைப் பத்தின நியூஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கீங்க!" என்று அந்த நிருபரிடம் சொல்லி விட்டுச் சிரித்தான் மஹதன்.


அவனது வார்த்தைகளில் அசடு வழிந்து போன அந்த நபர், அதற்குப் பிறகு, புகைப்படங்களை மட்டும் எடுக்கத் தொடங்கி விட்டார்.


"எங்களோட நியூஸூம் தனியாக வரும். அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்" என்றான் கிஷான்.


அதன் பிறகும் அவர்கள் கேள்வி கேட்கத் தயாராக இருந்தாலும், இவர்களுக்கு நேரமில்லை. எனவே, பாதுகாவலர்களைக் கூட்டத்தை விலக்கி விடச் சொல்லி காருக்குச் சென்றனர்.


அனைவரும் அகதா மற்றும் மௌனா தங்கியிருந்த வீட்டிற்குக் கிளம்பினர். அங்கிருந்து தான், மௌனாவைக் கௌசல்யாவின் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


அவர்களுக்கு முன்னதாக, அங்கே அகதா சென்று விட்டாள். தோழி மற்றும் அவளது கணவனுக்காக ஆரத்தியைக் கரைத்து வைக்க வேண்டுமல்லவா? அவளுடன் இணைந்து தானும் ஆரத்திச் சுற்றப் போவதாக கூறி, ஒப்புதல் பெற்றிருக்கிறாள் முக்தா.


"உன்னை ரிப்போர்ட்டர்ஸ் ரொம்ப கொஸ்டீன்ஸ் கேட்டுட்டாங்களா?" என்று மௌனாவிடம் ஆறுதலாக வினவினான் மஹதன்.


"எங்கிட்ட எங்கே கேட்டாங்க? முக்தாவையும், கிஷானையும் ஃபோகஸ் பண்ணாங்க மஹி" என்று கூறி மெலிதாகச் சிரித்தாள்.


"ஆமாம். அவங்கப் பாப்புலர் ஆகிட்டாங்க" என்றான்.


கிஷான் மற்றும் முக்தாவைப் பற்றி நல்ல ஆரோக்கியமான விஷயங்களைப் பகிர்ந்த வண்ணம் வந்தவர்கள், தங்களது முடிந்ததையும் அறிந்து, மகிழுந்தின் கதவைத் திறக்க முயற்சித்தார்கள்.


"இருங்க" என்று அவர்களை வரவேற்கும் விதமாக கார்க் கதவைத் தானே திறந்து, மஹதனையும், மௌனாவையும் காரை விட்டு இறங்கி வைத்தான் கிஷான்.


"முகி" என்று அவளை அழைத்து தன்னிடமிருந்த ஆரத்தித் தட்டை அவளையும் கவனமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னாள் முக்தா.


அவர்களுடன் மற்றவர்களும் நின்று கொள்ள, மணமக்களுக்கு ஆரத்திச் சுற்றினர் அகதாவும், முக்தாவும்.


"மஹதா! உங்களுக்கு ஆரத்தி எடுத்தவங்களுக்குத் தட்டில் காசு போடனும் ப்பா" என்று மகனுக்கு ஞாபகப்படுத்தினார் கௌசல்யா.


"அப்படியா ம்மா? எனக்கு தெரியாதே!" எனத் தன் பணப்பையைக் கையில் எடுத்தான் மஹதன்.


"அச்சோ! பரவாயில்லை மஹதன். காசெல்லாம் வேண்டாம்" என்று மறுத்துப் பின் வாங்கினாள் அகதா. 


"எனக்கும் வேணாம்" என்று மெல்லமாக உரைத்தாள் முக்தா.


"ஓஹ்! கமான்! ஒரு மரியாதைக்காக வாங்கிக்கோங்க ப்ளீஸ்" என்று சிரித்த முகமாக கூறி, இருவருக்கும் ஒரே மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான் மஹதன்.


அவற்றை, அகதா தயக்கத்துடனும், முக்தா புன்னகையுடனும் வாங்கிக் கொண்டு, இருவரும் மஹதனுக்கு நன்றி சொல்லி, அவனையும், மௌனாவையும் உள்ளே வருமாறு பணித்தனர்.


"நீங்களும், அகதாவும் இங்கேயே இருங்க. நாங்களே இவங்க ரெண்டு பேரையும், மஹதனோட வீட்டுக்குக் கூப்பிட்டுப் போய் விட்டுட்றோம்" என்று அந்த நேரத்தில், உதவிக்கரம் நீட்டினர் கிஷானுடைய பெற்றோர்.


முன்னிரவு முழுவதும், மௌனாவிற்கும், அவளது பெற்றவர்களுக்கும் தோள் கொடுத்து, துணை நின்று, தேற்றியவள், இப்போது, திடீரென நிறுத்தாமல் வெடித்து அழுது விட்டாள் அகதா.


"டேய் என்னடா?" என்று அவளை அனுசரணையுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டாள் மௌனா.


"மிஸ் யூ சோ மச் ம்மா" என்றாள் அகதா.


"ஊருக்குக் கிளம்பிடுவீங்கள்ல ப்பா! ம்மா!" என்று நெகிழ்ச்சியுடன் வினவினாள் மௌனா.


அவளது திருமணம் முடிந்து, மறுவிருந்து என அனைத்தும் நிகழ்ந்து நிறைவு பெற்றதும், அகதாவுடன் தங்களது சொந்த ஊருக்குப் போவது தானே, அன்னபூரணி மற்றும் சிவமணியின் திட்டம்.


அதை நினைக்கையில், மௌனாவிற்கும் விழிகளில் இருந்து நீர் வெளியேறியது.


"அகி ம்மா! மௌனா ம்மா" என இருவரையும் சமாதானம் செய்யப் பெரும்பாடு பட்டுப் போயினர் மௌனாவின் பெற்றோர்.


"கண் கலங்காமல், மௌனாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க சம்பந்தி" என்று அவர்களுக்கு வலியுறுத்தினார் கௌசல்யா.


"ரொம்ப எமோஷனல் மொமண்ட் ங்க" என்று கிஷானிடம் கூறினாள் முக்தா.


"யெஸ் முகி" என்று அதை ஒப்புக் கொண்டான்.


அனைவரும் தங்களைச் சமாளித்துக் கொண்டு, மௌனாவையும், மஹதனையும் சித்ரலேகா மற்றும் காஞ்சியப்பனுடன், காரில் ஏற்றி விட்டு, மூவரும், வீட்டிற்குள் சென்று அடைந்து கொண்டனர். 


இவர்கள் சந்தோஷத்தில் திளைத்திருக்க, ஒரு வீட்டில் இருக்கும் ஜீவன் மட்டும், அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.


இனிமேல், தனக்கான உணவு மற்றும் உறைவிடத்தைத் தேடித் தான், தான் போக வேண்டும் என்ற நிலை லலிதாவிற்கு.


அதனால், வீட்டின் ஒரு மூலையில், தனது மொத்த வாழ்விலும் அடையாத துன்பத்தை இப்போது அடைந்த வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார் அவர்.


மகனை வெளியே விடும் எண்ணம் மஹதனுக்கு இல்லை என்பதைப் புரிந்து தான் அவனிடம் பொருளுதவி கேட்கப் போனார் லலிதா.


அதையும் அவன் நிர்தாட்சண்யமாக மறுத்து, தன்னைத் துரத்தி விடாத குறையாகப் பேசி அனுப்பி விட்டான் மஹதன் என்ற துக்கமும் அவரை அரித்து எடுத்தது‌.


அதனால், மனமும், உடலும் அவருக்குப் பாரமான உணர்வைக் கொடுத்தது. உடலைப் பேணிக் காக்கவும், பொருளை வாங்கிக் குவித்து ஆடம்பரமாக வாழ்ந்து மனதைக் குளிர வைத்துக் கொள்ளவும், லலிதாவிடம் பணம் என்ற ஒன்று இல்லவே இல்லை!


அவர் இப்போது தங்கியிருக்கும் வீட்டின் வாடகைக்கானப் பணத்தைக் கொடுக்கக் கூட லலிதாவால் முடியாது.


அதே எண்ணுகையில், இனிமேல் தனக்காக எதுவும் இல்லை, எல்லாமே கையை விட்டுச் சென்று விட்டது என்று உணர்ந்தவர், அந்த இருட்டுத் தன் வாழ்வையும் மொத்தமாக இருட்டாக்கி விட்டதைப் புரிந்து கொண்டு, அதற்குப் பின், தான் வீடு வீடாகச் சென்று, ஏதாவது மேல் வேலையைச் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் துணிந்து விட்டார் லலிதா.


தன்னைக் காரில் ஏற்றியப் பெற்றோரும், தோழியும் ஒரு நிமிடம் கூட , அங்கே நிற்காமல், வீட்டினுள் சென்றதைப் பார்த்துக் கண்ணீர் உகுத்தாள் மௌனா.


அவளை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டான் மஹதன்.


திருமூர்த்தி மற்றும் கௌசல்யா இருவரும் வீட்டு வாயிலில் தயாராக நின்றிருக்க, சொந்தக்காரப் பெண்கள் என்று எவரும் இன்றி, வேலையாட்களையும் செய்ய விடாமல், தன் மருமகளுக்குத் தானே, ஆரத்திக் கரைத்து எடுத்து வந்தார் கௌசல்யா.


அதை முக்தாவிடம் கொடுக்க, அவளும்,மஹதனுக்கும், மௌனாவிற்கும் ஆரத்தியைச் சுற்றி முடித்தாள்.


அவர்களை உள்ளே அழைத்துப் போனார்கள் அனைவரும்.


புகுந்த வீட்டில் நுழைந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ? அதையெல்லாம், தன் மருமகளுக்குச் சரியாக வழிகாட்டிச் செய்ய வைத்தார் கௌசல்யா.


அதற்குப் பிறகானச் சடங்குகளைச் செய்யும் போது, திருமணம் ஆகாதவர்கள் அவ்வீட்டில் இருக்கக் கூடாது என்பதால், 


சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் தங்கள் மகன் மற்றும் நீலகண்டனையும் அவரது புத்திரி முக்தாவையும் கூட்டிக் கொண்டு, இடத்தைக் காலி செய்தனர்.


தனது அலுவலகத்திலிருந்த முக்கிய ஊழியர் ஒருவரின் உதவியால், தங்களது திருமணத்தின் நேரலை வீடியோ, எந்தளவிற்குப் பரவி உள்ளது, மக்களைச் சென்றடைந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு,"எவ்ளோ வியூஸ் போயிருக்குன்னுப் பாரு மௌனா!" என்று அவளிடம் பெருமையாக காட்டினான் மஹதன்.


அவளும், தன்னிலையை மேம்படுத்திக் கொண்டு,"அட! சூப்பர் மஹி!" என்று அவனது செல்பேசியை வாங்கிப் பார்த்தாள் மௌனா.


"மொபைலை வச்சிட்டுப் போய் ரெஸ்ட் எடுங்க" என இருவருக்கும் வலியுறுத்தினார் திருமூர்த்தி.


மஹதன் அவன் அறைக்குள் போய் விட, மௌனாவை, வேறொரு அறைக்கு அனுப்பி விட்டு,


"ரூமை டெக்கரேட் பண்றதுக்கு யாரைக் கூப்பிட‌ முடியும் ங்க?" என்று கூறி அயர்ந்து போனார் கௌசல்யா.


"இப்போதைக்கு வேலையாளை அனுப்பிச் செய்யச் சொல்லித் தான் ஆகனும் மா!" என்றார் திருமூர்த்தி.


அதை முக்தா செய்யக் கூடாது மற்றும் காஞ்சியப்பனையும், சித்ரலேகாவையும் இதைச் செய்யுமாறு கேட்கவே முடியாது! என்பதால், வீட்டுப் பணியாளர்களை வைத்து, மணமக்களுக்கானச் சோபன அறையைத் தயார் செய்து வைத்தனர்.


மௌனாவோ,"என்னை நீங்கப் பார்க்காமலேயே வீட்டுக்குள்ளே போயிட்டீங்களே அகி!" என்று கோபம் மற்றும் மிகுந்த வேதனையுடன் தோழியிடம் அலைபேசி வழியாக வினவினாள்.


"அப்பாவும், அம்மாவும் உன்னோட பிரிவை ஏத்துக்கனுமே? அதனால், நீ காரில் போறதைப் பார்த்துட்டால், இன்னும் அழுது, உன்னை வழியனுப்பி வைக்க முடியாதுன்னு, உள்ளே வந்துட்டாங்க! என்னாலயும் கன்ட்ரோல் பண்ணிக்கவே முடியலை. சாரி மௌனா!" என்று தங்கள் நிலையை அவளுக்குப் புரியுமாறு உரைத்தாள் அகதா.


"ப்ச்… சரி அகி! எனக்குப் புரியுது. ஆனால் உங்க முகத்தை எல்லாம் பார்க்கனும்னு வெளியே எட்டிப் பார்த்துட்டே போனேன்!" என்றாள் மௌனா.


இதற்கு மேல் முடியாது! என்பது போல, "ப்ளீஸ் ம்மா! என்னோட உணர்வுகளையும் புரிஞ்சிக்கோ! சரி… நான் அம்மா, அப்பாவைப் போய்ப் பாக்குறேன்" என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டாள் அகதா.


இனி, தனது பெற்றோர் அவளுடன் தான் வாழப் போகிறார்கள்! அவள் மட்டும் தான், இறுதி வரை அவர்களுடன் பயணிக்கப் போகிறாள்! அப்படியென்றால், தான் அவ்வீட்டின் உறுப்பினர் பதவியை இழந்து விட்டோமா? என்று வாடிப் போய் விட்டாள் மௌனா.


அவள் தான் அகதாவின் பொறுப்பைத் தன் பெற்றோரிடம் கொடுத்தது என்பது நினைவில் கொண்டிருந்தாலும், இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.


- தொடரும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...