முக்தாவின் துணையுடன் மேடைக்கு வந்து சேர்ந்தாள் மௌனா.
அன்னபூரணி மற்றும் சிவமணியுடன் உட்கார்ந்து கொண்டாள் அகதா.
அந்த தாலி கட்டும் வைபவம் முழுவதிலும், நண்பர்களின் அருகிலேயே இருந்தனர் கிஷானும், முக்தாவும்.
மந்திரத்தை உச்சரித்து முடித்து விட்டு, தாலியை எடுத்து மஹதனிடம் கொடுத்தார் ஐயர்.
அதை வாங்கித், தன்னுடைய சரிபாதியாப் போகிறவளின் கழுத்தில், மூன்று முடிச்சுப் போட்டான் மஹதன்.
தங்களுக்கிடையே ஒரு சிலர் புகுந்தவிருந்த, ஏற்றத்தாழ்வுகளைக், கண்டு கொள்ளாமல், இப்போது ஊர் மெச்சும் ஜோடிகளாகத் திருமணப் பந்தத்தில் இணைந்து விட்டனர் மஹதனும், மௌனாவும்.
இருவரும் ஒரே நேரத்தில் தங்களது இணைகளுக்கு "ஐ லவ் யூ" என்று காதலைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல், மஹதன் மற்றும் மௌனாவிற்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்தது.
"இரண்டு பேரும் சந்தோஷத்தில் அழறாங்க கிஷான்!" என அவர்களது காதலைப் பார்த்து வியந்தபடி அவனிடம் கூறினாள் முக்தா.
"என்று நண்பன் அழுகுறானா?" என்று மஹதனின் கண்களை ஆராய்ந்தான் கிஷான்.
"டேய்! லைவ் போயிட்டு இருக்கு. அமைதியாக இரு" எனத் தனது விழிகளைத் துடைத்துக் கொண்டு, மௌனாவையும் அவ்வாறு செய்யச் சொன்னான் மஹதன்.
இவர்களது காதல் இப்படி திருமணத்தில் நிறைவேறுவதை ஆசையாகப் பார்த்து மகிழ்ந்தனர் இரண்டு ஜோடிகளின் சொந்தங்களும்.
மேடையிலேயே இருந்ததால், மஹதனுக்கும், மௌனாவிற்கும் வாழ்த்து தெரிவித்தனர் முக்தா மற்றும் கிஷான்.
"மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த, மஹதன் திருமூர்த்தியின் திருமணம், அவர் விரும்பிய பெண்ணான மௌனாவுடன் சிறப்புடன் இனிதே நடந்து முடிந்தது. அவர்களது சிலக் கண்ணைக் கவரும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!" என்று எல்லா நியூஸ் சேனல்களிலும் சிறப்புச் செய்தியாக நேரலையில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது.
"சம்பந்தி!" என்று திருமூர்த்தி மற்றும் கௌசல்யா தங்களது மருமகளின் பெற்றோரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
இப்போது இருவரது தந்தை மற்றும் தாயிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் மஹதன் மற்றும் மௌனா.
கிஷானின் பெற்றோரிடமும், முக்தாவின் தந்தையிடமும் மறக்காமல் ஆசி பெற்றனர் மணமக்கள்.
"சும்மா தனியாகப் போய் நின்றால், கூட்டத்தில் தெரியாது, பார்க்க மாட்டாங்கன்னு எல்லாம் நினைச்சு ஏமாத்தக் கூடாது அகி! நாங்க இல்லைன்னாலும், எங்களைத் தவிர மத்தவங்க எல்லாரும் உன்னைப் பார்த்துட்டுத் தான் இருக்காங்க. நீ விலகிப் போனால் மட்டும் விட்டுடுவோமா?" எனத் தங்களுடைய திருமணச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னுடைய கணவனுடன் மேடையில் நின்றிருந்த, மௌனாவோ, தோழியின் செயலைக் கண்காணித்து விட்டப் பின்னர், அது தந்த அதிருப்தியில், அகதாவிடம், தன் சங்கடத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
"ஹேய்! அப்படியெல்லாம் இல்லை மௌனா" என்று மறுத்தாள் அகதா.
"ஹூம்…! நல்லாவே தெரியுது அகி! நீ பண்றதை எல்லாம் நாங்க கவனிச்சுக்கிட்டுத் தான் இருந்தோம். என் கூட நின்ன தான், ஆனாலும், நிறைய தடவை முக்தாவை முன்னாடி நிற்க வச்சிட்டு, நீ விலகி, கீழே இறங்கிப் போனதைப் பார்த்தேன்" என்று கம்மிய குரலில் கூறினாள் மௌனா.
"ஆமாம் அகதா. ஏன் இப்படி பண்றீங்க?" என்று அவளிடம் வினவினான் மஹதன்.
ஒன்றும் பேச முடியாமல் இப்போதும் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள் அகதா.
"உன்னை இனிமேல் இப்படி நான் பாக்கக் கூடாது!" என்று கூறியவளிடம் வந்த அன்னபூரணி,
"என்ன மௌனா இது? ஸ்டேஜில் நின்னுட்டு இவ்ளோ நேரமாக என்னப் பேசிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஃபோட்டோஸ் எடுக்க வேணாமா?" என்று மகளிடம் கேட்டார்.
"எங்களுக்கு ஏதாவது குடிக்க வேணுமான்னு அகி கேட்டுக்கிட்டு இருந்தாள் மா" என்று அவரிடம் மௌனா சமாளிக்கவும்,
"ஓஹ் சரி. அகி" என அவளை அழைக்கவும்,
"ஹாங்! ம்மா…" என்று நிமிர்ந்தாள் அகதா.
"நீ வா நான் இவங்களுக்கு ஜூஸ் கொடுத்து விட்றேன். சிரிச்சா மாதிரி நிக்கலாமே நீங்க?" என்றபடி அவளுடன் சென்று விட்டார் அன்னபூரணி.
அடுத்தடுத்து புகைப்படங்கள் எடுக்கவென, ஆட்கள் வந்து கொண்டே இருந்ததால், அவர்களால் அகதாவிடம் தெளிவாகப் பேச முடியவில்லை.
"பாருங்க மஹி!" எனத் தன் கணவனிடம் ஆற்றாமையுடன் கூறினாள் மௌனா.
"அம்மாவும், அத்தையும் அவங்களைப் பாத்துக்குவாங்க" என்று அன்னையிடம் அகதாவைப் பார்க்குமாறு கூறி விட்டான் மஹதன்.
அத்துடன், முக்தாவிடம், அவளது தந்தையைக் கவனிக்கச் சொல்லி விட்டு, அகதாவைத் தன்னுடன் இருத்திக் கொண்டார்கள் கௌசல்யாவும், அன்னபூரணியும்.
கிஷான் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுக்கப் போன போது,
"சம்பந்தி! முகி! வாங்க" என நீலகண்டனையும், தங்களது மருமகளாகப் போகும் மங்கையையும் அழைத்தார் சித்ரலேகா.
"ஜோடியாக நிற்கனும்" என்று மகனையும், முக்தாவையும் ஒன்றாக நிற்க வைத்தார் காஞ்சியப்பன்.
"மௌனா!" என்று பரவசம் அடைந்தாள் முக்தா.
"மணப்பெண் தோழியாக உங்கப் பொறுப்பை பர்ஃபெக்ட் ஆகப் பண்ணி முடிச்சுட்டீங்களே முகி" என்று அவளும் ஆனந்தத்துடன் அறிவித்தாள்.
"ம்ஹ்ம்! தாங்க்யூ டியர்" என அவளது பாராட்டைப் பெற்றுக் கொண்டாள் முக்தா.
"காங்கிராட்ஸ் மஹத்" என்று இருவரது தலையிலும் கரத்தை வைத்து வாழ்த்தினர் காஞ்சியப்பன் மற்றும் சித்ரலேகா தம்பதியர்.
"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்!" என்று முக்தாவிடம் கூறினாள் மௌனா.
"என்னம்மா?"
"அகியைக் கூப்பிட்டு வந்து ஃபோட்டோ எடுக்க நிற்க வைக்கிறீங்களா? ப்ளீஸ்!" என்ற வேண்டுகோள் விடுத்தாள்.
"ஷ்யூர் டா. உங்க அம்மா பக்கத்தில் தான் இருக்காங்க. இழுத்துட்டு வர்றேன்" என்று அன்னபூரணியுடன் இருந்த அகதாவிடம் சென்று,
"நீங்க என்ன உங்க ஃப்ரண்ட் கூட ஃபோட்டோ எடுக்கவே இல்லையே?" என்றாள் முக்தா.
"மத்த எல்லாரும் எடுத்து முடிக்கட்டும் முகி. நான் தானே? அப்பறம் போய்க்கிறேன்" என்று இருந்த இடத்தை விட்டு அகலாமல் பதில் சொன்னாள் அகதா.
"நீங்க தானா? அதனால் கடைசியாக எடுக்கனும்னு ஏதாவது ரூல் ஆ? வாங்க!" என்று அவளது அனுமதியைக் கேட்காமலேயே கரத்தைப் பற்றி, மெதுவாக மேடைக்கு அழைத்துச் சென்றாள்.
"இந்தப் பொண்ணு ஏன் இப்படி இருக்கிறா?" என்று போகும் அவளையே பார்த்தபடி கணவனிடம் கூறி வருத்தப்பட்டார் அன்னபூரணி.
அவ்வப்போது தோழிக்காக மேடையில் இருந்தாலும், முக்தாவின் இருப்பை உறுதி செய்து கொண்டால் அங்கிருந்து அகன்று விடுகிறாள் என்பதை அவரும் தெரிந்து கொண்டார்.
மேடைக்கு வந்த தோழியை முறைத்த மௌனா,"வந்து நில்லுங்க" எனக் தன்னுடன் நிறுத்திப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
தன்னுடைய மாற்றத்தை அனைவரும் அறிந்திருப்பதை எண்ணி, தர்ம சங்கடமாகிப் போன நிலையில் இருந்தாள் அகதா.
"சாரி மௌனா" என்று அவளிடம் மன்னிப்புக் கேட்க,
"இப்போ எதுவும் பேச வேண்டாம். அங்கே பார்த்து சிரி" என்று புகைப்படக் கருவியைக் காட்டிச் சொன்னாள் அவளது தோழி.
அது முடிந்ததும், அகதா அவளைப் பார்க்கவும்,"அம்மா கூட உட்காரு.போ" என அனுப்பினாள் மௌனா.
"பேசாமல், அந்த தீபக்கை இவங்க கண்ணு முன்னாடி ஏதாவது பண்ணி விட்டுடுவோமா?" என்று அசட்டையாக கேட்டான் மஹதன்.
"ஏங்க இப்படி?" என்று தன்னவனைக் கலவரமாகப் பார்த்துக் கேட்டாள்.
"பின்னே என்னம்மா? இவங்க ஏதோ கொலைக் குத்தம் பண்ண மாதிரி, கில்ட்டி ஃபீலில் சுத்திட்டு இருக்காங்க!" எனத் தன் எரிச்சலை வெளிப்படுத்தினான்.
"ஃப்ரீ ஆகிட்டு அவகிட்டப் பேசுறேன் மஹி" என்று அவனைச் சமாதானம் செய்தாள் மௌனா.
"சரி" என்றவன், அதற்குப் பிறகான ஒரு சில மணி நேரங்களைப் புகைப்படங்கள் எடுக்க, உணவுண்ண என்று கடத்தி விட்டு, மாலை வீட்டிற்குச் செல்ல எடுத்து வைத்தனர் அனைவரும்.
அதற்குள், அவர்களது திருமணத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அனைத்து நியூஸ் சேனல்களும் நேரலையை நிறைவு செய்திருந்தனர்.
தங்களுக்கான அறைக்குள் வந்ததும்,
"நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு, நீ இருந்தால், நான் என்னச் செய்யட்டும்? மறு வீட்டுக்கு வருவேன்ல? அப்போ பேசிக்கிறேன்" என்றாள் மௌனா.
அக்காவின் மேலிருந்த வருத்தம் அவளைப் புறப்படுவதையே மறக்க வைத்தது.
"நீ இன்னும் கிளம்பலையா?" என்று மௌனாவின் தாய் அன்னபூரணி வந்து அதட்டவும் தான், தன்னுடைய அலங்காரங்களைச் சீர்படுத்திக் கொண்டாள் மௌனா.
"அவனை என்னப் பண்ணலாம் டா?" என்று தோழனிடம் கேட்டான் மஹதன்.
"அதுதான், வாழ்நாள் ஃபுல்லா அவனை அடைச்சு வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோமே?" என்றான் கிஷான்.
"அகதா முகத்தைப் பார்த்தியா?"
"ஆமா. ரொம்ப அமைதியாக இருந்தாங்க. அது அவங்களோட நேச்சர்னு விட்டுட்டேன். ஏன் என்னாச்சு டா?" என்று வினவினான் கிஷான்.
"அவங்க தன்னைத் தானே தண்டிச்சிக்கிறா மாதிரி, எங்க கல்யாணத்தில் ஒதுங்கி நின்னுட்டாங்க டா" என்று அனைத்தையும் விவரித்தான் மஹதன்.
"இதையெல்லாம் கேட்கும் போது, அவனைப் போய் உருத் தெரியாமல் அழிச்சிடலாம் போல இருக்குடா!" என்று ஆத்திரத்தில் வெடித்தான்.
"பேசாமல் அதைப் பண்ணு" என்று உறுதியான குரலில் கூறினான் மஹதன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக