'இவரை எங்கே காணோம்?' என்று கிஷானை முதலில் தேடியது முக்தா தான்.
அவளைப் பார்க்கத் தானே அவன் செல்ல இருந்தான்.
மண்டபத்தினுள் வந்த நீலகண்டன் மகளிடம் பேச வந்தார்.
"என்ன முகி ம்மா, இங்கே யாரைத் தேடுற?" என்றார் மகளிடம்.
"கிஷானைத் தான் தேடுறேன் ப்பா! என்னை வரச் சொல்லிட்டு அவர் காணாமல் போயிட்டார்" என அவனைத் துழாவியபடியே கூறினாள் முக்தா.
"மஹதன் கூட இருக்காரான்னுப் பார்த்தியா?" என்று கேட்டார் நீலகண்டன்.
"அங்கே அவர் இல்லப்பா" என்று பதிலளித்தாள் அவரது மகள்.
"அப்போ கால் செய்து பாரு" என்று கூறினார்.
"அதை மறந்துட்டேன் அப்பா. இதோ கால் பண்றேன்" எனத் தந்தையிடம் உரைத்து விட்டு, தன் அலைபேசியில் கிஷானுக்கு அழைத்தாள் முக்தா.
காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தவன், தன் செல்பேசியில் அழைப்பு வரும் சத்தம் கேட்டதும், அதை மகிழுந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, அழைப்பை எடுத்துப் பேசினான் கிஷான்.
"ஹலோ முகி"
"ஏங்க! மண்டபத்தில் தானே இருக்கீங்க? நான் உங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன். மஹதனோட ரூமிலும் பார்த்துட்டேன்" என அவனது குரலைக் கேட்டதும் தான், ஆசுவாசம் அடைந்தாள் முக்தா.
மகளின் வதனம் மலர்ந்ததும், அவளிடம்,'நீ பேசு, நான் செல்கிறேன்' என்று அவளிடம் சைகை செய்து விட்டுச் சென்றார் நீலகண்டன்.
"நான் அங்கே இல்லை முகி. காரில் போயிட்டு இருக்கேன்" என்றான் கிஷான்.
"என்னது? கொஞ்ச நேரத்தில் கல்யாணம் ங்க. மஹதன் உங்களை எதுவும் சொல்லலையா?" என்று பதட்டம் மற்றும் திடுக்கிடலுடன் கேட்டாள் முக்தா.
"எனக்குத் திடீர்னு ஒரு கால் வந்துருச்சு முகி. ஆனால், தாலி கட்டுற நேரத்துக்கு முன்னாடியே வந்துடுவேன். நீ அங்கே மேனஜ் பண்ணு ப்ளீஸ்!" என்று அவளிடம் கெஞ்சினான்.
"நான் மேனேஜ் செய்திடுவேன் ங்க. ஆனால், மஹதனும், எல்லாரும் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பாங்களே! அவங்ககிட்ட எப்படி சொல்ல?" என்று வினவினாள் முக்தா.
"அவன் மேடை ஏறுறதுக்குள்ள நான் அங்கே இருப்பேன் முகி. அது வரைக்கும், சமாளி" என்று அவளிடம் கேட்டுக் கொண்டவன், தான் நினைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் கிஷான்.
"இன்னும் ஹோமம் தான் வளர்த்துட்டு இருக்கார் ஐயர்!" எனத் தன் மகனிடம் அறிவித்தார் திருமூர்த்தி.
"வெளியே கிஷான் இருந்தால் வர சொல்லுங்க அப்பா" என்றான் மஹதன்.
"அவனை நான் பார்க்கவே இல்லைடா" என்றார் தந்தை.
"முக்தாவைப் பார்த்துட்டு வர்றேன்னுப் போனான் ப்பா! அவங்க கூடப் பேசிட்டு இருக்கானோ?" என்று முக்தாவிற்கு அழைத்துக் கேட்டான் மஹதன்.
"ஹலோ மஹதன்! அவர் முக்கியமான விஷயமாகப் போயிருக்கார். ஆனால், கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன்னு சொன்னார்" என்று விளக்கம் அளித்தாள் முக்தா.
"என்னம்மா இப்படி பண்றான்?" என்று வாடிப் போனான் மஹதன்.
"ப்ளீஸ்! டோன்ட் வொர்ரி! அவர் வந்துருவார். நான் ப்ராமிஸ் பண்றேன்" என அவனிடம் கூறிச் சமாளித்தாள் முக்தா.
"ஓகே ம்மா" என்று அழைப்பை வைத்து விட்டான் மஹதன்.
முக்தாவுடன் பேசிக் கொண்டு இருந்ததால், அவனது அழைப்பைத் தவற விட்டிருந்தான் கிஷான். அது மட்டுமின்றி, அவன் அந்த இடத்தை அடைந்திருந்ததால், மஹதனுக்குக் கால் செய்ய முடியவில்லை.
"அவன் இங்கேயே இல்லை ப்பா. வேறு வேலையாக வெளியே போய்ட்டானாம்" என்று தந்தையிடம் சொன்னான் மஹதன்.
"அப்படி என்னடா அவனுக்கு வேலை?" என்று கடுப்புடன் கேட்டார் திருமூர்த்தி.
"முக்தாவுக்கும் அதைப் பத்தி அவன் சொல்லிட்டுப் போகலை ப்பா" என்றான் மகன்.
"சரி. நான் அவனோட அப்பா, ம்மா கிட்ட இன்ஃபார்ம் பண்றேன்" என்று கூறி வெளியேறினார்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில், கிஷானுடைய பெற்றோரிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது.
"இவனை!!!" என்று பல்லைக் கடித்தார் காஞ்சியப்பன்.
"எங்கப் போயிருப்பான்?" என்று பதறினார் சித்ரலேகா.
நண்பனுடைய திருமணத்தை விட, என்ன முக்கியமான வேலை? என்று அவரும் யோசித்துப் பார்த்தார்.
அதற்குள், மணப்பெண்ணிற்கும், அவளது அறையிலிருந்த மற்றவர்களுக்கும் கிஷானைப் பற்றிச் சொல்லி விட்டாள் முக்தா.
"அவர் இல்லைன்னா எப்படி?" என்று வருத்தப்பட்டாள் மௌனா.
அவளுக்கு அலங்காரம் முடிந்திருக்க, இனி மஹதனைப் பார்க்கவும் செல்ல முடியாது. அவனிடம் செல்பேசியில் பேச,
அவனோ,"நான் இப்போ கால் செய்து கேட்கிறேன்" என மீண்டும் நண்பனுக்கு அழைத்துப் பார்த்தான் மஹதன்.
மறுமுனையில் இருந்து,"நண்பா! என்னடா?" என்று சாவதானமாகப் கேட்டவனை,
"டேய்! வீணாப் போன மடையா! எங்கடா போன?" என்று கோபத்தில் பொரிந்தான் மஹதன்.
"இங்கே ஒரு கேடுக் கெட்டவனைப் பார்க்க வந்தேன்டா! ரொம்ப பாவமான நிலைமையில் இருக்கானாம்!" என்றான் கிஷான்.
மஹதன்,"அந்த தீபக்கைப் பார்க்க, இன்னைக்குத் தான் போகனுமா?"
"இருடா. பார்த்துட்டுப் பறந்து வந்துடறேன்!" என அவனுக்குச் சமாதானம் சொல்லி வைத்தான் கிஷான்.
அதன் பிறகு, தீபக்கின் முன்னால் நின்று, ஏளனம் பொதிந்தப் பார்வையை வீசிக் கொண்டு இருந்தான்.
"ஹேய்!!!" என்று அவனைப் பார்த்த வெகுண்டு எழுந்து கத்தினான் தீபக்.
"உஸ்! ஏன்டா! இப்படி சரியாக சாப்பிடாமலேயே, இந்தளவுக்குத் தொண்டைக் கிழியக் கத்துற!" என்று அவனருகே சென்றான்.
"அப்படிக் கத்தினதால் தான், நீ இங்கே இப்படி வந்து நிற்கிற!" என்று வன்மத்துடன் கூறினான் தீபக்.
"ஓஹ்! பார்றா!" என்று நக்கல் அடித்தான் கிஷான்.
"என்னை என்னப் பண்றதாக இருக்கீங்க?" என்று வெளிப்படையாக வினவினான்.
"இப்போதைக்கு அதை சொல்ல எனக்கு நேரமில்லைடா! என்னோட ஃப்ரண்ட்டுக்குக் கல்யாணம். நீ செய்த அலப்பறையால் தான் இப்போ வர வேண்டியதாகப் போச்சு! சும்மாவே இருக்க மாட்டியாடா நீ?" என்று அவனிடம் கடுகடுவெனக் கேட்டான் கிஷான்.
"ஹாங்! அவனுக்கும், யாருக்கும் கல்யாணம் ப்பா?" என்று வேண்டுமென்றே அபத்தமானக் கேள்வியை மொழிந்தான் தீபக்.
"அடேய்!" என்று அவனது கழுத்தைப் பிடிக்கப் போனவன், தன் உடையை சரி செய்து கொண்டு, "உன்னோட பேச்செல்லாம் இப்படி இல்லைனா தான் ஆச்சரியம் டா! அதுக்காக, உன்னை அடிச்சு, என் கையையும், டிரெஸ்ஸையும் அழுக்காக்க எனக்கு விருப்பமில்லை! அதான், எதுவும் செய்யாமல் விட்றேன்! என் ஆளுங்களை, உன்னைக் கவனிக்கச் சொல்றேன்" என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூறினான் கிஷான்.
"ப்ச்! சொல்லுடா! சொல்லு? நான் கேட்டதுக்குப் பதில் வேணும் எனக்கு?" என்று அவனை அவசரப்படுத்தினான் தீபக்.
"இப்படியே கத்திச் செத்துடாத! ஏதோ நீ உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கன்னு நினைச்சு வந்துட்டேன். ச்சை! நான் மேரேஜ்ஜை அட்டெண்ட் பண்ணிட்டு வந்துப் பேசுறேன்" என்று அவனிடம் தெரிவித்து விட்டு வாயிலுக்குச் சென்றான் கிஷான்.
"டேய்!!!!" என்ற சத்தம் அவ்வறையையே உலுக்கியது.
"இவன் கத்திட்டுப் போகட்டும். இன்னைக்கு ஃபுல்லா எனக்குக் கால் பண்ணாதீங்க!" என்று வலியுறுத்தி விட்டுப் போனான் கிஷான்.
காரில் சீறிப் பாய்ந்து, மண்டபத்திற்கு வந்திருந்தான் கிஷான்.
அதற்குள் அவனது நெருங்கிய உறவுகள் அனைவரும் அவனைக் கோபத்தில் கழுவி ஊற்றி இருந்தனர்.
வாயிலிலேயே பிடித்து வைத்துக் கொண்டாள் முக்தா.
"உங்களை…" என அவள் திட்டத் தொடங்குவதற்குள்,
"சாரி முகி" என்று கன்னத்தில் முத்தமிட்டு மலையிறக்கி விட்டான் கிஷான்.
"என்னை இப்படி செஞ்சு சமாளிச்சிட்டீங்க! உள்ளே இருக்கிறவங்களுக்கு என்னப் பதில்?" என்று தன் கன்னம் சிவக்கக் கேட்டாள் முக்தா.
"அவங்களுக்கும் இதே தான் ட்ரீட்மெண்ட்!" எனக் கூறி விட்டு அவளுடனேயே ஹாலுக்குச் சென்றான்.
"டேய்!!" என்று கிஷானுடைய பெற்றோர், அவனை வறுத்தெடுக்க முனையும் போது, "என்ன இங்கே இருக்கீங்க? வாங்க, வாங்க! மஹதனை மேடைக்குக் கூப்பிட்ற நேரம்! வெட்டியாக நிற்கக் கூடாது" என்று அவர்களைப் பேச விடாமல், அழைத்துப் போய் விட்டான் கிஷான்.
"வந்துட்டீங்களா? மாப்பிள்ளையைப் போய்ப் பாருங்க" என்று அவனைக் கையோடு மணமகன் அறையை நோக்கி அனுப்பி வைத்தார் சிவமணி.
அன்னபூரணியின் மூலம், கிஷான் உள்ளே வந்ததை மௌனாவிடமும், மஹதனிடமும் தெரியப்படுத்தி விட்டார்கள்.
தன்னறைக்குள் வந்தவனைப் புரட்டியெடுக்கும் ஆத்திரம் வந்தாலும், மணமகன் அலங்காரத்தில் இருப்பதால், அவனது காதைப் பிடித்துத் திருகினான் மஹதன்.
"ஆஹ்…! விடுடா!" என்று வெளியே கேட்கும் அளவிற்குக் கத்திக் கொண்டிருந்தான் கிஷான்.
"அந்த நாய் செத்தால் என்ன? எப்படியோ போனால் உனக்கு என்னடா? அதுவும் என் கல்யாணத்தப்போ தான் போய்ப் பார்க்கனுமாடா?" என்று அவனைத் திட்டித் தீர்த்தான் மஹதன்.
"இருடா… நண்பா! அவன் கழுத்தை அறுத்துக்கிட்டுச் செத்துப் போகிறா மாதிரி, கத்துனானாம் டா! அதான், என் கஸ்டடியில் இருக்கான்னுப் பார்த்துட்டு வரப் போனேன்!" என்று விளக்கிக் கூறினான் கிஷான்.
"எப்படியோ போயிட்டுப் போறான்!" என்று அவன் முடிப்பதற்குள்,
"மஹத்! உன்னை மேடைக்குக் கூப்பிட்றாங்க" என்றவர்,
கிஷானைப் பார்த்ததும்,"கொஞ்ச நேரத்தில் பயமுறுத்திட்டியே ப்பா!" என்றார் கௌசல்யா.
"வாடா! மாப்பிள்ளைத் தோழா!" என அவனது கையை இறுகப் பற்றி வலிக்கச் செய்தான் மஹதன்.
"போதும் டா!" என்றவாறே நண்பனைக் கூட்டிச் சென்றான் கிஷான்.
மணப்பெண்ணை அழைக்கும் போது, தானும் உடன் போக வேண்டும் என, மௌனாவின் அறைக்குள் போனாள் முக்தா.
"கிஷானைப் பார்த்தாச்சுல்ல? இப்போ ரிலாக்ஸ் ஆக இருங்க முகி" என அவளை இருக்கையில் அமரச் செய்தாள் அகதா.
"அப்பா! கிஷான் வந்துட்டாரு.இப்போ மேடைக்கு வரப் போறார்" என்றாள் தந்தையிடம்.
"சரி ம்மா" என்று கூறினார் நீலகண்டன்.
அவள் கூறியதைப் போலவே, மஹதனைக் கூப்பிட்டு வந்து, மேடையில் அமர்த்தினான் கிஷான்.
மணமகனின் வருகைக்குப் பிறகு மந்திரங்கள் ஓதி அவனையும் அதைச் சொல்லச் சொல்லி விட்டு, இப்போது,
"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்றார் ஐயர்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக