நலங்கு முடிந்து, மஹதனும், மௌனாவும் ஜோடியாக அமர்ந்திருப்பதைப் போல, முக்தாவும், கிஷானும் ஒன்றாக உட்கார்ந்தனர்.
அனைவரும் மெல்லிய புன்னகையுடன் ஆத்மார்த்தமாக உணவுண்டு கொண்டிருந்தனர்.
தனக்குப் பிடித்தமான தென்னிந்திய உணவுகள் யாவும், வாழை இலையில் இடம் பெற்று இருக்க, அவற்றை ரசித்து ருசித்தாள் முக்தா.
சோற்றைக் குழம்பில் பிசைந்து, அதில் பொரியலை வைத்து, வாயில் பொருத்தியவளை, ரசனையாகப் பார்த்துக் கொண்டு தானும் உண்டான் கிஷான்.
நீலகண்டன்,"நம்ம ஊரு ஐட்டம்ஸ் வச்சு ஜமாய்ச்சுட்டீங்க சார்!" என்று சிவமணியையும், அவரது மனைவி பாராட்டினார்.
"இதைக் கேட்டு, எங்களுக்கும் சந்தோஷம் சார்" என்றார் அன்னபூரணி.
"இன்னொரு தடவை சாப்பிடலாம் போல இருக்கு!" என்று கூறினார் காஞ்சியப்பன்.
உணவின் சுவை மற்றும் தரம் அவரை வெகுவாக கவர்ந்தது.
"உங்களுக்குப் பார்சல் அனுப்பி வைக்கிறோம் சார்" என்றார் திருமூர்த்தி.
"அது கண்டிப்பாக வேணும் அண்ணா" என்று சித்ரலேகாவும் கூறினார்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், வந்திருந்த சொந்தங்களும் பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பாராட்டி விட்டுப் போனார்கள்.
இவ்வாறாக, நலங்குச் சாப்பாடு நடந்து முடிந்தது.
மேடை ஏறியவர்களை அனைவரும் வாழ்த்தி விடைபெற்றனர்.
காஞ்சியப்பன் மற்றும் சித்ரலேகாவும் தங்களது வீட்டிற்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்.
நீலகண்டனும் மகளைத் தன்னுடன் வர அழைக்கவும்,
"சரிங்க அப்பா" என்றவள்,
"நான் சீக்கிரம் வர்றேன் மௌனா. டேக் கேர் அகி.நான் வரும் போது, நீங்களும் வந்துருவீங்களாம்!" என்று கிஷான் மற்றும் அவனுடைய பெற்றோரிடம் கெஞ்சலாக கோரிக்கை விடுத்து,
அனைவரிடமும் விடைபெற்றுத் தந்தையுடன் கிளம்பினாள் முக்தா.
"பியூட்டீஷியன் எங்கே?" என்று தேடலானாள் மௌனா.
"ஏன்டா? ஏதாவது கேட்கனுமா?" என்றார் கௌசல்யா.
"ஆமாம் அத்தை. மேக்கப்பை ரிமூவ் பண்ணனுமே?" என்று உரைத்தாள் மௌனா.
"நீ ரெடியான ரூமில் தான் இருக்காங்களாம்" என்று அவளுக்குப் பதிலளித்தாள் அகதா.
"சீக்கிரம் போய் ரிமூவ் பண்ணு டா! நல்லா தூங்கி எழு" என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றார் கௌசல்யா.
அறைக்குள் போய், "மேம்! உங்களை நான் இங்கே தேடினேன்" என்றவாறு மௌனாவை அமர வைத்து, அவள் முகத்திலிருந்த அலங்காரப் பூச்சுக்களை, உரிய பொருட்களைக் கொண்டுத் துடைத்து எடுத்து விட்டுக் கிளம்பினார் அந்தப் பியூட்டீஷியன்.
அந்த வேலை முடிந்ததும்,"கொஞ்ச நேரம் கழிச்சுக் கிளம்பனும் மௌனா. அசதியில் தூங்கிடாத!" என்றார் அன்னபூரணி.
அவள் வீட்டிற்குச் செல்லும் வரை, தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்தவன், அந்தப் நீண்டப பொது அறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் மஹதன்.
"நாமளும் கிளம்பலாம் மஹத்" என்று மகனிடம் கூறினார் திருமூர்த்தி.
அவரும், சிவமணியும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்விற்கு அனைத்தும் தயாராகி விட்டதா? என்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"ப்பா! நான் மௌனாவுக்குக் குட் நைட் சொல்லிட்டு, உங்க கூட வர்றேன்"என்று கூறி விட்டு அங்கே சட்டமாக அமர்ந்து விட்டான் மஹதன்.
அதில் சிரித்த திருமூர்த்தியும், சிவமணியும் தங்களது உரையாடலைத் தொடர்ந்தனர்.
"கல்யாணச் செலவு எங்களுது சம்பந்தி. ரெண்டு குடும்பத்தோட சொந்தக்காரங்களையும் நல்லா கவனிச்சு அனுப்பனும். சாப்பாடு, தாம்பூலப் பை எல்லாம் சிறப்பாகச் செஞ்சுக் கொடுத்திடலாம்!" என்று சிவமணியிடம் சொன்னார் திருமூர்த்தி.
"சரிங்க சம்பந்தி. எங்களுக்கு எதுவும் செலவு இருக்கா?" என்று கேட்டார்.
"இல்லை. நீங்கப் போதுமான அளவு செலவு செய்துட்டீங்க! நாங்க நான் பாக்கனும்!" என்று அவரிடம் தீர்க்கமாக கூறினார் மஹதனின் தந்தை.
அதற்குள், இங்கே மௌனா இருந்த அறையில்,"முகம் நார்மல் ஆகிடுச்சா? போவோமா?" என்று தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டார் அன்னபூரணி.
"கார் ரெடி சம்பந்தி. நீங்க நாலு பேரும் வீட்டுக்குப் போயிட்டுக் கால் பண்ணுங்க. அப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். இல்லைன்னா, மஹதனை அனுப்பவா?" என்றார் கௌசல்யா.
"காரில் தானே போறோம் சம்பந்தி. மாப்பிள்ளையை ஏன் ஸ்ரமப்படுத்துறீங்க? நாங்கப் பாத்துக்கிறோம்" என்று கூறி விட்டுச் சிவமணியையும் அழைத்துச் செல்வதற்காக அவரிடம் வந்தனர் மூவரும்.
அவர்களைப் பார்த்ததும்,
"நாங்க கிளம்பறோம் சம்பந்தி! மாப்பிள்ளை! வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு இங்கே வர்றோம்" என்று இருவரிடமும் கூறினார் அன்னபூரணி.
திருமூர்த்தி,"போயிட்டு வாங்க" என்றவரிடமும், கௌசல்யாவிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள் மௌனா.
அவளது பெற்றோரிடம் மஹதன் ஆசி வாங்கி விட்டு, "குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்!" எனத் தன்னவளிடம் கூறினான் மஹதன்.
"சேம் டூ யூ" என்றுரைத்தாள் மௌனா.
"நான் உங்களை டிராப் பண்றேன்" என அவர்களை அழைத்தான்.
"இல்ல, வேணாம் மாப்பிள்ளை" என்று அவனிடமும் மறுத்துப் பார்த்தார்கள் சிவமணியும்,அன்னபூரணியும்.
"நம்ம வீட்டுக் காராக இருந்தாலும், போகிற வழியில் சேஃப் ஆக இருக்குமான்னு டவுட் தான் அத்தை! அதனால், நானும், பாடிகார்ட்ஸூம் வர்றோம்" என்றான் மஹதன்.
"ஆமாம் சம்பந்தி! லேட் நைட் ஆகிடுச்சு. அப்படியே நாங்களும் வீட்டுக்குப் போகனுமே? உங்க வண்டிக்குப் பின்னாலேயே, வண்டியில் வர்றோம்" என்று மகனுக்காகப் பரிந்துரை செய்தார் திருமூர்த்தி.
"அம்மா! ப்பா! அவரே நம்மளை விட்டுட்டு வரட்டும். ரொம்பவே லேட் ஆகுது!" என்று வாயைத் திறந்தாள் மௌனா.
"சரி" எனச் சம்மதித்து நான்கு பேரும் அவனுடன் காரில் கிளம்பினர்.
மஹதனோ காரை இயக்க, அதில் அமர்ந்திருந்தனர் மௌனாவின் பெற்றோர் மற்றும் அகதா.
அவர்களுக்குப் பின்னால், ஒரு காரில் திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவும், மற்றொன்றில், அவனுடைய பாதுகாவலர்களும் தொடர்ந்து வந்தனர்.
மௌனாவைப் பார்த்தபடி மகிழுந்தையும் லாவகமாக இயக்கினான் மஹதன்.
அவளுக்குத் தூக்கம் வந்தாலும், தன்னவனுக்குப் புன்னகையை வழங்கினாள்.
அவர்களது வீடு வரவும்,"முதலில் நீங்க இறங்கிச் செக் பண்ணுங்க" என்று தன் ஆட்களிடம் உத்தரவிட்டான் மஹதன்.
ஆட்களும் அவன் சொன்னதைச் செய்து விட்டு, "சேஃப் தான் சார்" எனப் பதில் கூறினர்.
அதற்குப் பின்னர் தான் தங்களுடைய மகிழுந்தின் பூட்டைத் திறந்தான் மஹதன்.
சின்னத் தலையசைப்புடன், நால்வரும் இவர்களுக்கு விடை கொடுத்து விட்டுத், தங்களது வீட்டின் தாளைத் திறந்து உள் நுழைந்தனர்.
அவர்களைக் கண்காணித்து, நிம்மதி அடைந்து, தன்னுடைய வீட்டிற்குச் செல்ல, மகிழுந்தை இயக்கினான் மஹதன்.
இவ்வளவு நேரம், அசதியில் நெளிந்தவளோ, அன்னையின் கைப்பிடியில் குழந்தையாகச் சிக்கிக் கொண்டாள் மௌனா.
அவளது கண்ணீர் தன் தோளை நனைக்கவும் தான், பதறிப் போய், மகளுடைய முகத்தை நிமிர்த்தினார் அன்னபூரணி.
மௌனாவின் விசும்பல் சப்தத்தைக் கேட்டதும் உடல் விறைத்துப் போனது சிவமணிக்கு.
"வேலைக்கு அனுப்பிய, இந்த ஊரில் என்னைத் தொலைச்சிட்டுப் போறோம்னு, உங்களுக்குத் தோனுதா ம்மா?" என்று தன் அன்னையிடம் அழுகையுடன் வினவினாள் மௌனா.
ஆனால், மகளைத் தொலைக்கவில்லை எனினும், விட்டுச் செல்லப் போவது உண்மை தானே?
வேலைக்குப் போய், அதில் நிலைத்து நின்று விட்டுப் பிறகுத் தன் திருமணத்தைப் பற்றி யோசிப்போம் என்று மௌனாவும், அவள் நல்லதொரு பணியில் அமர்ந்ததும், வரன் பார்க்கலாம் என யோசித்த அவளது பெற்றோரும் இப்போது தங்கள் பெண்ணுக்கும், மஹதனுக்குமானத் திருமணத்தை எதிர்பார்க்கவில்லையே?
அவர்களுடன் ஒரு மகளாக அகதா வந்தாலும், வாழ்ந்தாலும் கூட, மௌனாவின் இடம் வெற்றிடமாகத் தானே இருக்கும்?
மகளின் பிரிவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில், அவர்களுக்கு உள்ளம் குமுறியது.
அதைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களால், இவளது கண்ணீர் பெருகிய வதனத்தைக் கண்டதும், பெற்றோருக்கும் விழிநீர் கசிந்து விட்டது.
நள்ளிரவு ஆன போதும், இவர்களது தேம்பல் அடங்கவில்லை. தோழியைப் பிரிவதை தாங்க இயலாத அகதாவும் கூட, முதலில் இம்மூவரையும் சமாதானம் செய்ய நினைத்தாள்.
"அம்மா! அப்பா! எப்பவும் இவ உங்கப் பொண்ணு தான்! நீங்களோ, இவளோ மீட் பண்றதை யார் கேட்கப் போறா? மஹதனோட ஃபேமிலியும் நல்ல டைப் ஆக இருக்கும் போது ஏன் இந்த அழுகை? ப்ளீஸ்! மௌனா! கன்ட்ரோல் யுவர்செல்ஃப்!" என்று அவர்களைத் தேற்றினாள் அகதா.
விசும்பல் அதிகமானதே தவிர, குறைந்தபாடில்லை.
"இப்படி அழுதுகிட்டு இருந்தால், காலையில் மண்டபத்துக்குப் போக முடியாமல் போயிடும்!" என்று மூவரையும் எச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் அகதா.அதில் கொஞ்சமாக நிதானம் அடைந்தார்கள்.
"அகி!" என்று அவளையும் கட்டிக் கொண்டு அழுதாள் மௌனா.
"நானே ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட அழுகையை மறைச்சு வைச்சிருக்கேன். அதை வர வைச்சிடாத! வா" என்று அவளை அழுத்தாள் அகதா.
"நான் அம்மா கூடத் தூங்குறேனே அகி?" என அழுத வண்ணம் கூறினாள் மௌனா.
"ஓகே" என்று அன்னபூரணியையும், அவரது மகளையும் அனுப்பி விட்டுச் சிவமணியிடம்,
"நீங்களும் அமைதியாகப் போய்த் தூங்குங்க அப்பா" என அவரையும் அறைக்கு அனுப்பினாள் அகதா.
இவள் மட்டும் இன்று தனியாகத் தங்களது அறையில் உறக்கம் கொள்ள வந்து, தனக்கும், மௌனாவிற்கும் ஒன்று போல வாங்கிய கைச்சங்கிலிகளை எடுத்துப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாள் அகதா.
(நங்கையின் மறவோன் கதையின் 20-வது அத்தியாயத்தில் இந்தக் கைச்சங்கிலிப் பற்றிய விளக்கம் இருக்கும் ஃப்ரண்ட்ஸ்)
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக