முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 22

 


சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை. 


அங்கே செந்தாழையின் வயிற்றில் வளரும் கருவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர். 


அதற்குப் பிறகுக் கணவன், மனைவி இருவரிடமும்,”கருவோட வளர்ச்சி நல்லா, ஆரோக்கியமாக இருக்கு. இவங்க நல்லா ஒய்வு எடுத்தால் போதும். நான் சில மாத்திரைகள் எழுதி தர்றேன். அதை தவறாமல் சாப்பிடனும். அதே மாதிரி அடுத்து எப்போ பரிசோதனைக்கு வரனும்ன்றதையும் நான் சொல்லிட்றேன். அதுக்குக் கண்டிப்பாக வந்துடுங்க!”என்றவருக்கு, 


“ரொம்ப நன்றிங்க டாக்டரம்மா”என்று தங்களது முகங்கள் பிரகாசிக்க நன்றி தெரிவித்தார்கள் அறிவொளியும்,

செந்தாழையும். 


“பிரசவம் இங்கே பார்ப்பீங்களா? இல்லை…”என்று இழுக்கவும்,


உடனே முந்திக் கொண்டு,“இங்கே தான் பார்ப்போம் டாக்டர்! ஏன்னா, இந்த ஆஸ்பத்திரியில் தான் எல்லா வசதிகளும் இருக்கு”என்று அவரிடம் தீர்க்கமாகப் பதிலளித்து விட்டிருந்தாள் செந்தாழை. 


அதைக் கேட்டுத் திருப்தியாகி,”அப்போ சரி”என்று கூறி விட்டு அவர்களுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி விட்டு அனுப்பி வைத்தார் மருத்துவர். 


அவரது அறையிலிருந்து வெளியே வந்தவர்களோ பரிசோதனைக்கானப் பணத்தை வரவேற்புப் பெண்ணிடம் கொடுத்து விட்டு, அங்கேயே இருந்த மருந்தகத்தில் தேவையான மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அதற்கானப் பணத்தையும் செலுத்தி விட்டு அங்கேயிருந்து வெளியேறினர் அறிவொளி மற்றும் செந்தாழை. 


“நாம இப்போவே வீட்டுக்குப் போகப் போறோமா மாமா?”என்று ஏமாற்றத்துடன் கேட்டவளிடம், 


“ஆமாம்மா. ஏன்? என்ன ஆச்சு?”என்று அவளிடம் கனிவாக கேட்டிருந்தான் கணவன். 


“எனக்கு இந்த ஊரைச் சுத்திப் பார்க்கனும்னு ஆசையாக இருக்குங்க”என்றிருந்தாள் செந்தாழை. 


“அப்படியா? சரி. நாம இங்கே இருக்கிற சில இடங்களைச் சுத்திப் பார்த்துட்டு மதிய நேரத்தில் கிளம்பிடலாம். அங்கே நமக்காக வீட்டில் எல்லாரும் காத்திருப்பாங்கள்ல? அதான் சொல்றேன்”என்று அவளுக்குப் புரிய வைத்தான் அறிவொளி. 


“சரிங்க”எனக் குதூகலமாக உரைத்து விட்டுத் தனது ஆசையை உடனே நிறைவேற்றிய கணவனின் கன்னத்தில் அழுத்தமாகத் தனது இதழைப் பதித்து விட்டிருந்தாள் செந்தாழை. 


“ஏய்! இங்கே வச்சு ஏன்டி முத்தம் கொடுக்கிற?”என்று அவளைக் கடிந்து கொண்டாலும் கூட அவளது இதழ் முத்தம் கொடுத்த இதத்தில் புன்னகையை உதிர்த்தான் அறிவொளி. 


“ஓஹ்! என்னைத் திட்டவும் செஞ்சிக்கிறது, நான் கொடுத்த முத்தத்தையும் ரசிச்சிக்கிறது! நீங்க ரொம்ப மோசம் மாமா!”என அவனிடம் பொய்க் கோபத்துடன் கூறவும், 


“ஆமாம். நீ மட்டும் கர்ப்பமாக இருக்கலேன்னா நான் எவ்வளவு மோசம்ன்னு இன்னும் நல்லா உனக்குக் காட்டி இருப்பேன் செல்லம்!”என்றவனைப் பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. 


“சரி. வா. ஊரைச் சுத்திப் பார்க்கலாம்”என்று அங்கே பக்கத்தில் இருந்த கோயில் மற்றும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு மனைவிக் கேட்டப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தான் அறிவொளி. 


அதற்குப் பிறகுக் காரை வந்தடைந்து அதில் ஏறி அமர்ந்து கொண்டுத் தங்களது ஊருக்குப் பயணமானார்கள் இருவரும். 


இதே சமயத்தில்,”நான் காட்டை மேற்பார்வை பார்த்துட்டு வர்றேன்ப்பா”என்று தன் தந்தையிடம் அறிவித்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டுச் சில கணங்கள் அதிர்ந்து போனாலும் கூட அதை மகன் அறியாமல் மறைத்துக் கொண்டு,”சரிப்பா. சீக்கிரம் வந்துடு. மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகனும்ல? அதான்”என்று கூறி அவனை அனுப்பி வைத்தார் நஞ்சுண்டன். 


அலுவலக அறையிலிருந்து வெளியேறிக் காட்டில் வேலைச் சரியாக நடக்கிறதா என்பதையும், முக்கியமாகத் தனது மனைவி என்ன செய்கிறாள்? அவளுக்கு இங்கு ஏதாவது அசௌகரியங்கள் நடக்கின்றதா என்பதையும் அறிந்து கொள்வதற்காக காட்டைச் சுற்றத் தொடங்கினான் திருவாதிரன். 


அவனது வருகையை அறிந்ததும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே பணியை மேற்கொண்டு இருந்த வேலையாட்கள் அனைவருமே தங்களது வாயை மூடிக் கொண்டு வேலையை மட்டும் பார்க்கலானார்கள்.


அதேபோல் அங்கேயிருந்த அந்தக் காட்டின் மேற்பார்வையாளரான முருகையனுக்குப் பயத்தில் அவரது முகம் முழுவதும் வியர்வை அரும்பத் தொடங்கி விட்டிருந்தது. 


“என்ன முருகையா உங்களுக்கு இப்படி வேர்த்துக் கொட்டுது? கொஞ்ச நேரம் போய் நிழலில் நில்லுங்க!”என்று அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டு, 


அங்கே சிறு தூரம் தள்ளி யாரிடமும் எதுவும் பேசாமல் தனது வேலையில் கவனமாக இருந்த மனைவியைக் கண்டவனோ, 


அவளது வியர்வை படிந்த கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியையும், அவள் பிறை நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தையும் கண்டதும் அவள் மீதான காதல் உணர்வுப் பெருக்கெடுத்தது திருவாதிரனுக்கு. 


மனைவியின் கழுத்திற்குத் தங்கத்தைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் அவனுக்குள் எழுந்தது. 


ஏனென்றால், அவளது அந்தக் கரு நிறக் கழுத்திற்கு அந்த நிறத்தைச் சேர்த்தால் இன்னும் அழகாக இருப்பாள் என்றே நினைத்தான். 


அந்தக் கருப்பு நிறத்தழகியை ரசித்துக் கொண்டிருந்தான் திருவாதிரன். 


தன்னுடைய கணவனின் வருகையை அறிந்தும், அறியாமல் வேலையில் முனைப்பில் இருந்த பூவிழியோ, அவன் அவ்விடத்தில் இருந்து இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தனது தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து, 


“வணக்கமுங்க ஐயா”என்று தனது இரண்டு கரங்களையும் ஒன்றாக குவித்து அவனுக்கு வணக்கம் வைத்தவளது முகத்தில் குறும்பிற்கான சாயல் இழையோடியதைக் கண்டு அவளை முறைத்து விட்டு, 


“ம்ஹ்ம்!” என்றிருந்தான் திருவாதிரன். 


உடனே அவனிடமிருந்து தனது பார்வையை விலக்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள் பூவிழி. 


இவர்களுக்குள் என்ன மாதிரியான பேச்சு வார்த்தை நடக்கிறது என்பதை அறியாமல் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டிருந்தாலும் கூட இன்னும் முதலாளி, தொழிலாளி என்ற உறவுமுறையில் தான் இருக்கிறார்கள் என்று தவறாகப் புரிந்து கொண்டார் அங்கே சற்றுத் தள்ளி நிழலில் நின்று கொண்டிருந்த முருகையன். 


அதேபோல் பூவிழியைத் திருவாதிரனுக்குப் பிடிக்கவில்லை என்றும், இவர்கள் இருவருக்கும் ஏதோவொரு நிர்பந்தத்தின் பேரில் தான் திருமணம் நடந்துள்ளது என்றும் எண்ணிக் கொண்டு இனிமேல் பூவிழியை என்ன செய்தாலும் அதை திருவாதிரன் கண்டு கொள்ளவும் மாட்டான், கேள்வி கேட்கவும் மாட்டான்! அவனது தந்தையின் ஆதரவும் தனக்கு இருப்பதால் இனிமேல் எந்தவிதப் பயமும் இன்றிப் பூவிழியை எப்படி வேண்டுமானாலும் தன்னுடைய ஆசைக்கு ஆட்டி வைக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்து கொண்டு அது கொடுத்த தைரியத்தில் திருவாதிரனிடம் வந்து, 


“ஐயா! மதிய நேரம் வந்துடுச்சு? நீங்க சாப்பிடப் போகலையா? நான் வேணும்னா வீட்டுக்கு ஆளனுப்பி உங்களுக்கும், பெரிய ஐயாவுக்குமான சாப்பாட்டை வாங்கிட்டு வரச் சொல்லவா?”என்று பவ்யமாக வினவினார் அந்த மேற்பார்வையாளர். 


அதில் அவரைக் கூர்மையாகப் பார்த்து விட்டு,”அதெல்லாம் வேண்டாம். நாங்க வீட்டுக்குப் போயே சாப்பிட்டுக்கிறோம். நீங்க இங்கே வேலைகள் ஒழுங்காக நடக்குதான்னுப் பார்த்தால் மட்டும் போதும்!”என அவரிடம் அறிவுறுத்தி விட்டுத் தனது மனைவியை ஒரு பார்வையைப் பார்த்து விட்டே அந்தக் காட்டின் அடுத்தடுத்தப் பகுதிகளுக்கு மேற்பார்வையிடச் சென்று விட்டான் திருவாதிரன். 


அவனது வார்த்தைகளின் வீரியம் தன்னை மிகவும் பாதித்ததை உணர்ந்து,‘இவனிடத்தில் மிகவும் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்!'என்று எண்ணிக் கொண்டார் முருகையன். 


இதே சமயம் தங்களது கார்ப் பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை. 


அவர்களது வருகையை அறிந்து கொண்டு வாசலிற்கே வந்து தனது மூத்த மகன் மற்றும் மருமகளை மலர்ச்சியுடன் வரவேற்றுக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து உபசரித்து விட்டு,


“என்னம்மா ரொம்ப களைப்பாக இருக்கிறா மாதிரி தெரியுது? ஆஸ்பத்திரியில் என்ன சொன்னாங்க? சீக்கிரம் சொல்லுத்தா! எனக்கு மனசு ஒரு மாதிரி தவிக்குது!”என்று செந்தாழையிடம் பதட்டத்துடன் கேட்டார் ராஜகுமாரி. 


“அத்தை! நீங்க கொஞ்சம் நிதானமாக இருங்க! எனக்கு ஒன்னும் இல்லை! ஆஸ்பத்திரியில் எல்லாமே சரியாக இருக்குன்னுச் சொல்லிட்டாங்க”என்றவளைத் தொடர்ந்து, 


“ஆமாம்மா. இவ வயித்துல இருக்கிற கரு ஆரோக்கியமாக இருக்காம். ஆனால் என்ன, இவ ஒய்வு எடுக்கனுமாம்!”என்றவனோ, 


அத்துடன் நிறுத்தாமல் முந்திரிக்கொட்டைத் தனமாக,”நாங்க ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்புனதும் அங்கேயிருந்த கடைக், கண்ணிகளைச் சுத்திப் பார்த்துட்டு வந்தோம்! அதனால் தான், இவ சோர்ந்து போய்த் தெரியுறா!”என்று போட்டுடைத்து விட்டான் அறிவொளி. 


அதைக் கேட்ட மற்ற இரு பெண்களும் அவனைக் கொடூரமாக முறைத்துப் பார்த்தனர். 


‘இவுக ஏன் இப்படி இவுக அம்மைக்கிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டு இருக்காக! இது தான் எனக்கு இவுககிட்ட பிடிக்கவே மாட்டேங்குது!’என்று தன் கணவனை மனதிற்குள் கரித்துக் கொட்டினாள் செந்தாழை! 


’இதுங்க ஆட்டத்தை வீட்டிலேயே காண முடியலை! இதுல ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்குப் போறோம்ன்றச் சாக்கில் ஊரைச் சுத்திட்டு வருதுங்க! கொழுப்பெடுத்தக் கழுதைங்க! அதையும் இவம் பெருமையாகச் சொல்லிக்கிறியான்!’என்று ராஜகுமாரியோ தனது ஆற்றாமையை மனதிற்குள்ளேயே புலம்பி விட்டு, 


“அப்படியா? எல்லா இடத்தையும் நல்லா சுத்திப் பார்த்தியா மருமகளே?”என்று செந்தாழையிடம் கேட்கவும், 


அதில் அவளோ எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு,”ஹாங்! ஏதோ ஒன்னு, ரெண்டுக் கடைகளுக்குப் போனோம்த்தை! மத்தபடி, நிறைய இடங்களுக்கு எல்லாம் போகலைத்தை”என்று அவரிடம் கூறிச் சமாளிக்க, 


“ஓஹோ! சரித்தா! நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்றீகளா?”என்றார் ராஜகுமாரி. 


“அவுக மூனு பேரும் வந்துரட்டும்மா. ஆஸ்பத்திரியில் என்னச் சொன்னாங்கன்னு அப்பா கிட்டேயும் சொல்லனும்ல? அதேன் சொல்றேன்”என்றிருந்தான் அறிவொளி. 


“சரிப்பா”என்றுரைத்து விட்டுத் தானும் அவர்கள் இருவருடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் இளைய மகன், மருமகளின் வருகைக்காக காத்திருக்கலானார் அவனது தாய். 


அப்போது தங்களது அலுவலக அறையிலிருந்து வெளியேறினர் நஞ்சுண்டன் மற்றும் திருவாதிரன். 


“நான் போய்ப் பூவிழியைக் கூட்டிட்டு வர்றேன்ப்பா. நீங்க ஜீப்பில் உட்காருங்க”என்று தந்தையிடம் கூறி அனுப்பி வைத்து விட்டு மனைவியைத் தேடிச் சென்றான் திருவாதிரன். 


அங்கே கடும் வெயிலில் நின்று கொண்டு மரத்தின் சில பாகங்களைக் கூர்மையான அரிவாளைக் கொண்டு வெட்டும் வேலையைப் பார்த்திருந்த மனைவியைக் கண்டதும் அவனுக்கு ஆற்றாமைப் பெருகியது! 


ஆனாலும் இதற்குக் காரணம், தான் கிடையாதே? இவளாகவே தான், இந்த வேலையை விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டாளே? இதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்ற ஆதங்கத்தில் மனைவியிடம் சென்று, 


“சாப்பிட வீட்டுக்குப் போகனும். வா”என்று அறிவித்து அவளை அழைத்தான் திருவாதிரன். 


உடனே,”ம்ஹ்ம். வர்றேனுங்க”என்றவளோ, 


தனது சேலைத் தலைப்பால் தன் முகம், கழுத்தில் படிந்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு,”வாங்க போகலாம்”என்று அவனிடம் கூறினாள் பூவிழி. 


அவர்கள் இருவரும் ஜீப்பை அடைந்து அதில் ஏறி அமர்ந்ததும் அதை தங்களது வீட்டை நோக்கிச் செலுத்தினான் திருவாதிரன். 


                               - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...