முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 21

 


அவரோ,”ஏன் நாளைக்கே கிளம்புறீக? ரெண்டு நாள் கழிச்சுப் போறதாகத் தானே சொல்லி இருந்தீக?”எனக் கேட்டிருந்தார் தனது மூத்த மகன் மற்றும் அவனது மனைவியிடம். 


அதற்குத் தனது அன்னையிடம் கூறிய பதிலையே அவரிடமும் உரைத்து விட்டிருந்தான் அறிவொளி. 


“அதுவும் சரி தான்”எனத் தானும் அவர்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டார் நஞ்சுண்டன். 


அதற்குப் பிறகு அனைவரும் உணவுண்டு முடித்ததுமே உறங்கச் சென்றார்கள். 


தாங்கள் இருவரும் வெளியே செல்கிறோம் என்பதை அறிவித்ததும் திருவாதிரனும், பூவிழியும் அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து மனதிற்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தாள் செந்தாழை. 


அதனாலேயே அவளுக்குத் தூக்கம் வரவே இல்லை. 


கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தவளைக் கவனித்து விட்டு,”என்னாச்சு ம்மா? தூக்கம் வரலையா?”எனக் கனிவுடன் வினவினான் அறிவொளி. 


அவளோ,“ஆமா மாமா. வயிறு ஒரு மாதிரி உப்புசமாக இருக்கு!”என்றவுடன், 


“சாப்பிட்டவுடனே படுக்கக் கூடாதும்மா. நீ எழுந்து கொஞ்ச நேரம் மெதுவாக நட. சரி ஆகிடும்!”என்றவனோ,


“ரொம்ப எல்லாம் வயிறு பிரச்சினை இல்ல மாமா. நான் தூக்கம் வர்ற வரைக்கும் எழுந்து உட்கார்ந்துக்கிறேன்”என்று சொல்லி சமாளித்தாள் செந்தாழை. 


“சரிம்மா”என்றான் அறிவொளி. 


கணவனிடம் சொன்னதற்காகவே இரண்டு நடை நடந்து விட்டு,”இப்போ கொஞ்சம் பரவாயில்லை மாமா. நான் தூங்குறேன்”என்க, 


உடனே அவளை அணைத்துக் கொண்டுத் தானும் உறங்கி விட்டிருந்தான் அறிவொளி. 


ஆனால் தங்களது அறையில் மனைவியிடம் சில ஆறுதல் வார்த்தைகளைக் அவளது தாயின் நினைவில் இருந்து மீட்டெடுக்க எண்ணி அதை அப்போதே ஆரம்பித்து வைக்க முடிவெடுத்து, 


தனது மனைவியின் புறம் திரும்பி,”விழி!”என்றிருந்தான் திருவாதிரன். 


அவளோ பெரிய, பெரியக் கொட்டாவிகளை வெளியிட்டுக் கொண்டுக் கண்களில் தூக்கம் நிரம்பி வழிய,”எனக்கு உறக்கம் வருதுங்க. எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாமா?”என்று அவனிடம் கெஞ்சலாக கேட்டிருந்தாள் பூவிழி. 


தனது மனையாளின் நிலையைப் புரிந்து கொண்டு,”சரிம்மா. நீ தூங்கு”எனக் கூறி விட்டு அமர்ந்து இருந்த திருவாதிரனுக்குச் சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கான அறிகுறியாக பூவிழியின் நாசிகளில் இருந்து சீரான மூச்சுக்காற்று வெளியேறுவதை அவதானித்து விட்டுத் தானும் நித்திரையில் ஆழ்ந்தான் அவளது கணவன். 


அதற்கடுத்த நாள் காலையில் அனைவரும் எழுந்து தயாராகி, காலை உணவைச் சாப்பிட்டு முடித்த பின்னர்,


தங்களுக்குத் தேவையான சில அத்தியாவசியமானப் பொருட்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானார்கள் செந்தாழை மற்றும் அறிவொளி.


அதே சமயம் தங்களது காட்டிற்குச் சொல்வதற்காக ஆயத்தம் ஆகி வந்தனர் திருவாதிரனும், பூவிழியும். 


அவர்களை எப்போதும் போல் அவர்களை வம்பிழுக்கும் விதமாக,”நீ காட்டு வேலைக்குப் போறதுக்குக் கிளம்பலையாக்கா?”என்று தமக்கையிடம் வினவினாள் செந்தாழை. 


உடனே தானும்,”ம்ஹ்ம். இப்போ கொஞ்ச நேரத்தில் கிளம்பப் போறோம்”என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டாள் பூவிழி. 


“அவங்களை விடும்மா. முதல் முதல்ல ரெண்டு பேரும் வெளியே சோடியாகப் போகும் போது கழுத்திலும், காதிலும் கண்ணுக்குத் தெரியாத மாதிரியான நகைகளையா போட்டுட்டுப் போவ?”என்றவரோ, 


தனது அறைக்குச் சென்று அடுக்குப் பெட்டியில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து சில நகைகளை எடுத்துக் கொண்டு வந்து மூத்த மருமகளிடம் கொடுத்து அணியச் சொன்னார் ராஜகுமாரி. 


அதில் சந்தோஷத்தின் உச்சத்திற்கே போனவளோ, 


அந்த நகைகளை அணிந்து கொண்டுத் தனது தலையை நன்றாக நிமிர்த்தித் தன் தமக்கையை ஒரு இகழ்ச்சிப் பார்வைப் பார்த்து விட்டு,”நல்லா இருக்காத்தை?”என்றிருந்தாள் செந்தாழை. 


“நல்லா இருக்குத்தா! இதையெல்லாம் இனிமேல் நீயே வச்சுக்கோ!”என அவளிடம் மலர்ந்த முகத்துடன் கூறினார் ராஜகுமாரி. 


அதில் செந்தாழையின் உடலில் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் சந்தோஷம் நிரம்ப அவரைப் பார்த்து, 


“ரொம்ப நன்றித்தை!”என்று மாமியாரின் காலில் விழப் போனாள். 


உடனே அவளைத் தடுத்து,”ஏய்! வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு இப்படி காலில் விழுறவ! இதெல்லாம் இப்போதைக்குப் பண்ணக் கூடாது செந்தா! இந்த மாதிரி சமயத்தில் தான் பார்த்துப் பதனமாக இருக்கோனும்!”என அவளுக்கு அறிவுரை வழங்கினார் ராஜகுமாரி. 


“மன்னிச்சிருங்கத்தை”என்று அவரிடம் மன்னிப்புக் கோரினாள் செந்தாழை.


“தேவையானப் பொருட்களை எல்லாம் சரியாக எடுத்து வச்சிட்டீங்க தானே? மருமகளைச் சூதானமாக கூட்டிட்டுப் போய்க், கூட்டிட்டு வரனும். சரியா?”என மூத்த மகனுக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி. 


“சரித்தா”என்றவனிடம், 


“ஆஸ்பத்திரிக்குப் போற வழியில் ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்கிறதுக்குப் பணம் வச்சிருக்கியா?”எனக் கேட்டார் நஞ்சுண்டன். 


அதில் தனது முகம் வெளிற,”இல்லப்பா” என்று கம்மிய குரலில் பதிலளித்தான் அறிவொளி. 


உடனே தனது சட்டைப் பையில் இருந்த பணத்தைக் கொத்தாக அள்ளி அவனிடத்தில் கொடுத்திருந்தார். 


அதை வாங்கி எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த தமையனை ஏளனமாகப் பார்த்துப் புன்னகைத்தான் திருவாதிரன். 


அதை மற்றவர்கள் கவனிக்காமல் விட்டிருந்தாலும் கூடச் செந்தாழையின் பார்வையில் பட்டு விட்டது! 


திருவாதிரனின் முகத்தில் பிரதிபலித்த எள்ளல் அவளை மேலும் வெறியேற்றி விட்டிருந்தது. 


ஆனாலும் தனது ஆதிக்கத்தை நேரில் செலுத்துவதற்கு இப்போது தகுந்த நேரம் வரவில்லை. 


அதனாலேயே, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையை முடித்து விட்டு அதற்குப் பிறகு இவர்களை எல்லாம் ஆட்டி வைக்கலாம் என்று மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டாள் செந்தாழை. 


அறிவொளி,“நாங்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றோம்”என்று தனது அனைவருக்கும் பொதுவாக உரைக்க, 


“இருடா”என்றுரைத்துப் பூஜையறைக்குச் சென்று திருநீற்றுத் தட்டை எடுத்து வந்து அதிலிருந்து திருநீற்றை அறிவொளி மற்றும் செந்தாழையின் நெற்றியில் இட்டு, 


“இப்போ போயிட்டு வாங்க”என்றிருந்தார் ராஜகுமாரி. 


அவர்களுடன் வீட்டிற்கு வெளியே வந்து காரில் ஏற்றி விட்டு உள்ளே நுழைந்து, 


“நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படியே நின்னுட்டு இருக்கீய? காட்டுக்கு வரத் தானே?”என அப்போது திருவாதிரன் மற்றும் பூவிழியைக் கவனித்துக் கேட்டிருந்தார் நஞ்சுண்டன். 


“ஓஹோ! இதோ வர்றோம்ப்பா”என்றவனோ, 


“விழி! நாம ரெண்டு பேரும் தானே இவ்வளவு நேரமாக ரொம்பத் தாமதமாக்கிட்டோம்? அதனால் சீக்கிரம் வா போகலாம்”என்று மனைவியிடம் வலியுறுத்தினான் திருவாதிரன். 


அதைக் கேட்டதும்,”நீ எப்பவுமே பேச்சை விடச் செயலில் தான் அதிக ஈடுபாட்டோட இருப்பேன்னு நானும், உங்கப்பாவும் நினைச்சு ஏமாந்துட்டோம்! ஆனால் உனக்கு நல்லா பேசவும் வரும்ன்னு இந்த மகராசி நம்ம வீட்டு மருமகளாக வந்ததுக்கு அப்பறம் தான் எங்களுக்குத் தெரியுது!”என்று பூவிழியைக் காட்டி மகனிடம் ஆற்றாமையுடன் கூறினார் ராஜகுமாரி. 


“ஆமாம்மா. எம்பொண்டாட்டி வந்ததுக்கு அப்பறமாகத் தான் எனக்குமே இந்த வீட்டில் யார், எப்படி நடந்துக்கிறாங்கன்னு எனக்கும் நல்லா தெரிஞ்சிச்சு”என்றவனை அதற்கு மேல் பேச விடாமல், 


“இப்படியே நின்னு வாயடிச்சுட்டு இருந்தால் நேரம் தான் போகும்! கிளம்பலாம்”என்றவரோ, 


“பெரியவன் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்தவுடனேயே எனக்குத் தாக்கல் சொல்லும்மா. நான் வீட்டுக்கு வந்து அவங்க கிட்ட விசாரிக்கனும்”என்று மனைவியிடம் தெரிவித்தார் நஞ்சுண்டன். 


அதற்குச்,”சரிங்க”என்றார் ராஜகுமாரி. 


அதற்குப் பிறகுக் காரில் ஏறித் தங்களது காட்டிற்குச் சென்று விட்டார்கள் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி. 


இதே நேரத்தில் மருத்துவமனைக்குக் காரில் சென்று கொண்டிருந்த செந்தாழை மற்றும் அறிவொளியும் அந்தப் பயணத்தை மிகவும் ரசித்து மேற்கொண்டனர் எனலாம்! 


ஏனென்றால், அவர்கள் இப்படியான பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறை அல்லவா? 


அதுவும் தன் வாழ்நாளிலேயே இன்றைக்குத் தான் முதல் முறையாக காரில் பயணிக்கிறாள் செந்தாழை.


அதில் அவளது மனம் குதூகலத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது!


“ஏங்க மாமா! நான் இதுக்கு முன்னாடி கால்நடையாகத் தான் எல்லா இடத்துக்கும் போயிட்டு, வந்துட்டு இருந்தேன்! ஆனால் கடைசியாக வீட்டுக்கு வந்தப்போ உங்கத் தம்பியோட ஜீப்பில் வந்தது தான்! அதுக்கப்புறம் இப்போ தான் காரில் பயணம் பண்றேன்! அதுவும் உங்க கூட! எனக்கு இந்த உணர்வு ரொம்பப் பிடிச்சு இருக்கு மாமா!”என்று தனது கணவனிடம் உற்சாகமான குரலில் பகிர்ந்து கொண்டாள் செந்தாழை.


அதைப் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டவனோ, அடுத்த நிமிடமே 

ஏனெனில் தாங்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்துக் கொண்டிருந்த போதும் சரி, கல்யாணம் செய்து கொண்ட போதும் சரி. ஒருநாள் கூடத் தங்கள் வீட்டிலிருக்கும் எந்தச் சொகுசு வாகனங்களிலும் இவளை ஏற்றிக் கொண்டு எங்கேயும் சுற்றவில்லையே என்றக் குற்ற உணர்வில் ஆட்கொண்டு விட்டிருந்த அறிவொளியோ,


“நான் காரை எடுத்தாலே அந்தச் சேதி திருவோட காதுக்குப் போயிடும். அதனால் தான் நாம காதலிச்சப்போ உன்னை இந்த மாதிரி எங்கேயும் அழைச்சிட்டுப் போக முடியலை! என்னை மன்னிச்சிரும்மா”என்று மனைவியிடம் மன்னிப்புக் கோரவும், 


“அதனால் என்ன மாமா? அதுக்கெல்லாம் சேர்த்து தானே காலம் முழுக்கவும் நாம இப்படி காரில் பயணம் செஞ்சிட்டுத் தானே இருக்கப் போறோம்? அதுவும் இனிமேல் அடிக்கடி சிகிச்சைக்கு இந்த மாதிரி டவுனுக்குப் போயிட்டு வர வேண்டியது இருக்கும்ல? அதுக்காகவே நமக்குன்னு ஒரு காரை ஒதுக்கித் தரச் சொல்லுங்க உங்கத் தம்பிகிட்டே! அதுவுமில்லாமல் நமக்குன்னு எல்லாம் தனித் தனியாக இருந்தால் தான் நமக்கு மரியாதை!”என அவனிடம் அழுத்திக் கூறியிருந்தாள் செந்தாழை. 


“ம்ஹ்ம். நான் அதைப் பத்திக் கண்டிப்பாக யோசிக்கிறேன்”என்றுரைத்து விட்டான் அறிவொளி. 


மருத்துவமனைக்குச் செல்ல இன்னும் சில மணி நேரப் பயணம் இருந்ததால் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள் செந்தாழை. 


அவளுக்கு அசதியாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அவளது தலையைக் கோதிக் கொடுத்தான் கணவன். 


இங்குக் காட்டிலோ இன்றும் பூவிழிக்கு அவளது சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லிக் கட்டளையிட்டு இருந்தார் அந்த மேற்பார்வையாளர். 


அவளும் அவரை எதிர்த்துக் கேள்விக் கேட்காமல் அவர் கூறியதைச் செய்யவும் அவருக்கு மேலும் குளிர் விட்டுப் போயிற்று! 


அதனாலேயே அவளை வார்த்தைகளாலும் சீண்டத் தொடங்கி விட்டிருக்க, அதைக் கேட்டுக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பூவிழி. 


அந்தப் பூ வெகு விரைவிலேயே புயலாகி அந்த மேற்பார்வையாளரைச் சுழற்றி அடிக்கப் போகிறது என்பதை அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை! 


தனது மனைவியை அவ்வப்போது வந்து கண்காணித்தால், அவளுக்குச் சங்கடம் ஏற்படக் கூடும் என்றெண்ணியும், இங்கு என்ன நடந்தாலும் அது தனது காதுகளுக்கு எட்டி விடும் என்ற நம்பிக்கையாலும் தனது மனைவிக்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களைப் பற்றி அப்போது அறியாமல் விட்டிருந்தான் திருவாதிரன். 


அது அவன் காதுகளை எட்டும் போது அவனின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்! 


                                 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...