தனது தந்தை உள்ளே நுழைவதைக் கண்டதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்து எழுந்து,”இங்கே வந்து உட்காருங்க”என்று அவருக்கு வழி விட்டு நின்றான் திருவாதிரன்.
உடனே அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு,”உம்பொண்டாட்டி இங்கே வேலைக்குச் சேர்ந்துருக்கே? அந்தப் பொண்ணுக்கும் இன்னைல இருந்து சம்பளம் போட்டுக் கொடுக்கனுமா?”என்று அவனிடம் ஏளனமாக வினவினார் நஞ்சுண்டன்.
அவருக்கு இணையாகத் தானும் குறையாத திமிருடன்,”ஆமாம்ப்பா. அவ தன்னோட மனசுக்கு ஆறுதலாக இருக்கும்ன்னு தான் வேலைக்கு வந்திருக்கா. ஆனால் அவ செய்ற அந்த வேலைக்கு மரியாதைக் கொடுக்கிற மாதிரி கூலி போட்டுக் கொடுத்து தான் ஆகனும்!”என்று அவரிடம் தடாலடியாக உரைத்த மகனிடம்,
“அப்போ புருஷனும், பொண்டாட்டியும் ஒரு முடிவோடத் தான் இருக்கீங்க!”என்க,
அதில் மெலிதாகப் புன்னகைத்து விட்டு,”அவ இப்போ தான் அவளோட அம்மாவை இழந்து இருக்கா! அதே மனநிலையோட வீட்டிலேயே அடைஞ்சிக் கிடக்கிறது அவளுக்கு நல்லது இல்ல! அதனால் தான் அவளோட இந்த விருப்பத்துக்கு நான் சரின்னுச் சொல்லிட்டேன்!”என அவருக்கு விளக்கம் அளித்தான் திருவாதிரன்.
“ஓஹோ!”என்றவருக்கு இப்போது தான் நிம்மதி உருவானது எனலாம்.
ஏனெனில், தங்களது நில புலன்களைத் தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து மேற்பார்வையிடும் சாக்கில் அவர்கள் இருவரையும் வேவு பார்க்குமாறு இவரை அனுப்பி வைத்ததே ராஜகுமாரி தான்!
ஏனென்றால், காட்டு வேலைக்குச் செல்வதாகப் பூவிழி அறிவித்ததுமே அவளுக்கு வீட்டுப் பொறுப்பை விட சொத்து, சுகங்களின் மீது ஆசை வந்து விட்டது. அதனால் தான், இப்படி கூறித் தங்களிடம் என்னென்ன நில புலன்கள், அசையும், அசையாத சொத்துக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தான் இப்படியொரு முடிவை எடுத்து உள்ளாள் என்ற ஐயம் தோன்றியது அவருக்கு.
அது உண்மையா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளவும் தான் முக்கியமாகத் தனது கணவனையும் திருவாதிரன் மற்றும் பூவிழியைக் கண்காணிக்க அனுப்பி வைத்துள்ளார் ராஜகுமாரி.
ஆனால் இங்கு வந்து பார்த்தால் கணவனும், மனைவியும் தத்தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே! என்பதை தனது கண்ணாலேயே பார்த்து விட்டு மனதிற்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் நஞ்சுண்டன்.
ஆனாலும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு,”கணக்கு, வழக்கை எல்லாம் பார்த்து முடிச்சிட்டியா திரு?”என்று மகனிடம் கேட்க,
“ம்ம். பார்த்துட்டேன் ப்பா. உங்களுக்கு வேணும்னா நீங்களும் ஒரு தடவைப் பார்த்துடுங்க”என இயல்பான குரலில் மொழிந்தான் திருவாதிரன்.
“அதெல்லாம் நீ சரியாகத் தான் பார்த்திருப்ப. ஆமா, மறு வீட்டுச் சம்பிரதாயம் இருக்கே! அதைப் பத்தி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லையாடா?”என்று அவனிடம் அதட்டலாக கேட்டார் நஞ்சுண்டன்.
“அதையெல்லாம் நீங்கப் பெரியவங்க தானே முடிவு பண்ணனும்ப்பா? நீங்க அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணிட்டுச் சொல்லுங்க. நாங்க அதில் கலந்துக்கிறோம்”என்றுரைக்க,
“இந்த வியாக்கியானம் எல்லா விஷயத்திலேயும் இருந்து இருக்கலாம்!”எனக் குத்தலாக கூறியவரின் பேச்சைக் கருத்தில் கொள்ளாமல்,
“அண்ணன் ஹாஸ்பிடலுக்குப் போகனும்னுச் சொன்னாருல்லப்பா? அவர் அந்த வேலையை முடிச்சதுக்கு அப்பறமாக மறு வீட்டு விருந்து வச்சா நமக்குத் தோதாக இருக்கும்”என்று அவருக்கு அறிவுரை வழங்கினான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். அவங்க ரெண்டு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்பறமாகத் தான் விருந்து வைக்கனும். அதே மாதிரி நம்ம உறவுக்காரங்க, நம்மகிட்டே வேலை செய்றவங்கன்னு எல்லாரையும் விருந்துக்கு அழைக்கனும்”என்றவரிடம்,
“ஆமாம்ப்பா”எனக் கூறி அதை ஆமோதிக்க,
“உம்பொண்டாட்டியும் இங்கே வேலை செய்யுதே! அந்தப் பொண்ணையும் இங்கே வச்சு மறு வீட்டு விருந்துக்கு அழைக்கனுமா என்ன? அதை முதல்லயே சொல்லிருப்பா! அப்போ தான் அந்த விஷயத்தில் குழப்பம் வராமல் இருக்கும்!”என்று மகனிடம் கேலியாக கேட்டிருந்தார் நஞ்சுண்டன்.
அதில் தனது முஷ்டி இறுக, முகம் கோபத்தில் சிவக்கத் தந்தையை ஏறிட்டுப் பார்த்து,”இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன்ப்பா. அவ நம்ம வீட்டோட மருமகள்ன்றதை நீங்க எல்லாரும் எப்போ ஏத்துக்குவீங்களோ அப்போ எங்களுக்குக் கல்யாணத்துக்கு அப்பறமாக நடக்க வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்யுங்க! நாங்க ரெண்டு பேரும் அப்போ அதில் கலந்துக்கிறோம்! இப்போ வைக்கப் போற மறு வீட்டு விருந்து அன்னைக்கு நாங்க வேற எங்கேயாவது வெளியூருக்குக் கிளம்பிப் போயிட்றோம்! இதைப் பத்தி அம்மாகிட்டேயும் பேசிட்டு முடிவைச் சொல்லுங்கப்பா”என்று அழுத்தமாக உரைத்து இருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும் திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தார் நஞ்சுண்டன்.
ஏனெனில், அவனுக்கு மனைவியாகும் தகுதிப் பூவிழிக்கு இல்லை என்பதை அவனுக்குப் புரிய வைக்க முயன்று தோற்றதும் இல்லாமல், தனது பேச்சிற்கு மகனின் இந்தப் பதிலைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை இவர்.
“என்னடா இப்படியெல்லாம் பேசிட்டுத் திரியுற? நான் என்னோட ஐயத்தை தானே கேட்டேன்? அதுக்கு இப்படியா சொல்லுவ? நம்ம வீட்டை விட்டுப் போறதைப் பத்தியே பேசிட்டு இருக்கியே திரு!”என்று அவனிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும்,
“நீங்க எம்பொண்ட்டியைப் பத்திப் பேசுனது மட்டும் முறையா அப்பா? அதுவும் எங்கிட்டேயே இப்படி பேசுறீங்களே? அப்போ நான் இல்லாதப்போ அவளை என்னவெல்லாம் பேசுவீங்க? அதனால் தான் அவ இங்கே வந்து வேலைப் பார்க்கிறதுக்கு முடிவு எடுத்துட்டா போல! அவளைப் பத்தி இனிமேல் பேசுறதுக்கு முன்னாடி யோசிங்க! அதை விட்டுட்டு இப்படியெல்லாம் வரைமுறை இல்லாமல் வார்த்தையை விடாதீங்க!”என அவருக்கு எச்சரிக்கை விடுத்தான் திருவாதிரன்.
அதில் அவமானத்தில் சுருங்கிய தனது முகத்தை அவனிடமிருந்து மறைத்துக் கொள்ளும் விதமாக,”சரிடா. நான் போய் வேலையெல்லாம் ஒழுங்காக நடக்குதான்னுப் பார்த்துட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டு நாற்காலியில் இருந்து எழுந்து அவ்வறையை விட்டு விருட்டென்று வெளியேறி விட்டிருந்தார் நஞ்சுண்டன்.
அவர் வெளியே வந்தவுடனேயே அவரது கண்ணில் பட்டது என்னவோ பூவிழி தான்!
அவரது வருகையை அறிந்ததும் அவளுமே சில கணங்கள் மட்டுமே அவரைப் பார்த்து விட்டுதஅ தனது வேலையைத் தொடர்ந்தாள்.
ஆனால் அவளைப் பார்த்ததுமே அவரது கோபம் கரையைக் கடந்தது நஞ்சுண்டனுக்கு.
அதை அவளிடம் காட்டக் கூடிய சூழ்நிலையில் அவர் இல்லையே!
ஏனென்றால், தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடக்கும் முன்னர் இருந்து இப்போது வரையிலும் தங்களது அனைத்து சொத்துக்களையும் கட்டிக் காப்பது திருவாதிரன் மட்டும் தான்!
அறிவாளிக்கு அந்த அளவிற்கு அறிவும், பொறுப்பும் இல்லை. ஆதலால், தங்களது குடும்பத்தின் வேரே திருவாதிரனின் கைகளில் தான் இருக்கிறது!
அதேபோல், தனது மனைவியின் கர்ப்பத்தைக் காட்டித் தனது பொறுப்பிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டான் அறிவொளி.
அதில், தனக்கும், மனைவிக்கும் அவன் மீது கடுங்கோபம் இருக்கிறது தான்!
ஆனாலும் அவனையும் எதுவும் சொல்ல முடியாத நிலை உருவாகி விட்டதை எண்ணி வெதும்பிப் போய் விட்டார் நஞ்சுண்டன்.
செந்தாழையும் அவளது கர்ப்பத்தைக் காரணம் காட்டி வீட்டுப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவும்,
இப்போது தானும், தனது மனைவியும் தங்களது இளைய மகன் மற்றும் மருமகளைத் தான் நம்பி இருக்க வேண்டியதாக உள்ளதே என்றத் தங்களது கையாலாகாத தனத்தையும் நினைத்துக் குமைந்து கொண்டிருந்தவரோ,
வேறு வழியின்றித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே இருந்த மற்றவர்களிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி விட்டார் நஞ்சுண்டன்.
இதே சமயத்தில், தனது மனைவியிடம் வந்ததுமே சற்று நேரத்திற்கு முன்பு தன் தாய், தந்தையிடம் பேசிய விஷயங்களை எல்லாம் அவளிடம் ஒப்புவித்து முடித்திருந்தான் அறிவொளி.
அதைக் கேட்டதுமே தன் கண்கள் இரண்டும் பரவசமாக மின்ன,“அத்தையும், மாமாவும் என்னை ஏத்துக்கிட்டாங்களாங்க?”என்று ஆச்சரியத்துடன் கேட்ட மனைவியின் விழிகளில் ரசனையுடன் முத்தமிட்டு விட்டு,
“ஆமாம்மா. அவங்களுக்கு நம்ம மேலே கொஞ்சம் வருத்தம்! அவ்வளவு தானே தவிர்த்து நம்மளை அவங்க ஒதுக்கி வைக்கலை!”என்றிருந்தான் அறிவொளி.
“அப்படியா மாமா? இதைக் கேட்டதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குத் தெரியுமா? அவங்களுக்கு நான் வாழ்நாள் முழுக்க நல்ல மருமகளாக இருப்பேன்!”என்று அவனிடம் வாக்களித்தாள் செந்தாழை.
“ம்ஹ்ம். நமக்கு மறு வீட்டு விருந்து வைக்கிறதைப் பத்தின பேச்சுப் போச்சு”
“அப்படியா மாமா? என்னென்ன வகைச் சாப்பாடு எல்லாம் போடப் போறாகளாம்? எனக்கும் அதே தானா?”என்று ஆர்வமாக வினவ,
“அது இன்னும் முடிவாகலைம்மா. திருவும், அவேம் பொண்டாட்டியும் வந்ததும் அவங்களையும் கூட வச்சுட்டுப் பேசுவாங்க போல! உனக்குன்னுத் தனியாகப் பக்குவம் பார்த்துச் சமைக்கச் சொல்லலாம்னு அம்மா சொல்லி இருக்காங்க!”என்றதைக் கேட்டுத் தன் உச்சிக் குளிர்ந்து போனாலும் கூடத்,
தங்களுடன் சேர்த்து திருவாதிரன் மற்றும் பூவிழிக்கும் மறு வீட்டு விருந்து சம்பிரதாயம் நடக்கும் என்பதைச் செந்தாழையால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அது என்னவோ தெரியவில்லை, தான் காதலித்து வாழ்க்கைப்பட்டு இந்த வீட்டிற்கு வந்தால், தனது தமக்கை நோகாமல் இந்த வீட்டின் இளைய மருமகளாக ஆகி விட்டாளே! என்று வெஞ்சினம் அவளுக்குள் விதையாக உருவாகித் தற்போது பெரிய மரமாக வளர்ந்து விட்டிருந்தது.
“நம்மக் கூடச் சேர்த்து அவுகளுக்கும் விருந்து வைக்கப் போறாகளா மாமா?”என்று எரிச்சலை அடக்கிக் கொண்டுக் கணவனிடம் கேட்டாள் செந்தாழை.
“ஆமாம்மா. நமக்கும், அவங்களுக்கும் ஒரே நாளில் தானே கல்யாணம் நடந்துச்சு? அப்போ நமக்கு நடக்க வேண்டிய சடங்கு எல்லாமே அவங்களுக்கும் நடத்தனும் தானே? இல்லைன்னா, நம்மக் குடும்பத்தைப் பத்தி ஊரில் இருக்கிறவங்க எல்லாரும் தப்பா நினைப்பாங்கள்ல? அதான்”என அவளுக்கு விளக்கம் அளித்தான் அறிவொளி.
அதைக் கேட்டவுடனே,”அச்சோ! நம்மக் குடும்பத்தை இந்த ஊரில் இருக்கிற யாரும் நாக்கு மேலே பல்லைப் போட்டு எதுவுமே தப்பாகப் பேசி விடவே கூடாதுங்க! நாம தான் நம்ம வீட்டுக் கௌரவத்தைக் காப்பாத்தனும் மாமா! அதனால், மறு வீட்டு விருந்தில் எங்கக்காவும், உங்க தம்பியும் தாராளமாக கலந்துக்கட்டும்”எனப் பெருந்தன்மையுடன் கூறியவளிடம்,
“நீ சொன்னால் சரி தான்டி என் அழகுப் பொண்டாட்டி!”என்று கட்டிக் கொண்டான் கணவன்.
இங்கே தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலையைச் செய்து கொண்டிருந்த பூவிழிக்குப் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் பூக்களைப் பறித்துப் போடும் வேலையைக் கொடுத்து விட்டிருந்தார் அந்தக் காட்டின் முதன்மை மேற்பார்வையாளன்.
அதை மறுக்காமல் செய்யப் போனவளை அழுத்தமாகப் பார்த்து விட்டு,”இந்தப் பொண்ணை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பேச்சால், செயலால் மன உளைச்சலுக்கு ஆளாக்குங்க! ஆனால் இந்த விஷயம் உங்கச் சின்னய்யா காதுக்கு மட்டும் போயிடவே கூடாது!”என்று அந்த மேற்பார்வையாளனிடம் கட்டளையிட்டார் நஞ்சுண்டன்.
அவரது விசுவாசியான அந்த ஆளும்,”சரிங்க ஐயா!”என்று அதற்கு ஒப்புக் கொண்டான்.
இதை அறியாமல் மதிய உணவு நேரம் வந்து விடவும்,”நீயும், உம்பொண்டாட்டியும் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு வாங்க. அது வரைக்கும் நான் இங்கே பார்த்துக்கிறேன்”என்று திருவாதிரனிடம் அறிவுறுத்தினார் நஞ்சுண்டன்.
அதேபோல் தனது மனைவியை ஆட்களை அனுப்பி அழைத்து வரச் சொல்லி அவள் வந்ததும்,
“நாம வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வரலாம். வா”என்று அவளைத் தனது ஜீப்பில் ஏறச் சொல்லவும்,
அதற்கு மறு பேச்சுப் பேசாமல் அதில் ஏறி அமர்ந்து கொண்டாள் பூவிழி.
உடனே ஜீப்பை இயக்கத் தொடங்கிய அவளது கணவனோ,
“நான் உங்கிட்ட ஒன்னுக் கேட்கலாமா?”என்றான்.
“ம்ம். கேளுங்க”என்கவும்,
“நீ வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கலைன்னுக் காட்டு வேலைக்கு வர்றேன்னுச் சொன்னதுக்கு வேற ஏதோ காரணம் இருக்குன்னு என் மனசு அடிச்சு சொல்லுது! அது என்னக் காரணம்ன்னுச் சொல்ல முடியுமா?”என அவளிடம் கேட்டிருந்தான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக