மாலையில் இவளிடமும், இவளது தங்கைச் செந்தாழையிடமும் சாந்தி முகூர்த்த விஷயத்தைப் பற்றித் தெரிவித்ததே பணிப்பெண்கள் தான்!
அதற்குக் கூட அவர்களிடம் பேச்சுக் கொடுக்கவில்லை ராஜகுமாரி.
“ராத்திரிச் சடங்குக்கு நல்லா தலைக்கு ஊத்திட்டு இந்தச் சீலைகளைக் கட்டிட்டு நகைகளைப் போட்டுக்கிட்டுத் தயாராக இருப்பீகளாம்! அம்மா சொல்லி விட்டாக!”என்றவர்களோ,
அக்கா, தங்கையிடம் அவரவருக்குத் தனித் தனியாகச் சேலைகள் மற்றும் நகைகளை ஒப்படைத்து விட்டுப் போய் விட்டார்கள்.
“நான் தயாராகி மட்டும் தான் அறைக்குப் போவேன்! ஆனால் ஒன்னும் நடக்காது!”என்று பெருமூச்சு விட்ட செந்தாழையோ,
“ஆனால் உனக்கு அப்படியில்லைக்கா! இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதே! சின்னவரை எப்படியாவது கைக்குள்ளே போட்டுக்கோ!”என்று நாராசமான வார்த்தைகளைத் தமக்கையிடம் உதிர்த்து விட்டுச் சென்று விட்டிருந்தாள்.
அதில் வெறுத்துப் போய் அருவருப்பான பார்வையைத் தங்கையின் மீது வீசி விட்டு அந்தப் புடவையை அணிந்து கொண்டுப் பணியாளர்களுடன் அறைக்குச் சென்று நாற்காலியில் உட்கார்ந்தாள் பூவிழி.
அவர்களோ,’இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்! பார்க்கவும் சுமாராகத் தான் இருக்கா! எப்படித் தான் சின்னய்யா இவளைக் கட்டிக்க சம்மதிச்சாரோ?”என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அவளுக்குத் தலையலங்காரத்தை ஆரம்பித்தார்கள் அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்.
அதைப் போலவே,”இவ தங்கச்சி எப்படியோ மூத்தவரை மடக்கிட்டாள்! அதனால் கொசுறா இவ நம்மக் கூட இருக்கட்டும்னு நினைச்சு இருப்பார் போல! கொஞ்ச நாளைக்குக் குடும்பம் நடத்திட்டு அத்து விட்ருவாரு பாரு!”என்று பூவிழியின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே சற்றுச் சத்தமாகப் பேசி விட்டுச் சிறிது நேரத்திலேயே அவளுக்கு முழு அலங்காரத்தையும் செய்து முடித்திருந்தனர் வேலைக்காரப் பெண்கள்.
அதைக் கேட்ட பூவிழிக்கோ அவமானத்தில் முகம் வெளுத்துப் போயிற்று.
ஆனாலும் கூட அவளாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்லவே இது?
திருவாதிரன் தானே தன்னை அவனது மனவியாகத் தெரிவு செய்துள்ளான்?
அப்படி இருக்கும் போது தன்னை இவர்கள் இழிவாகப் பேசுவது என்ன நியாயம்?
அதனாலேயே,”இங்காருங்க! இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேனோ அது இப்போ தேவையில்லாத ஒன்னு! ஆனால் இப்போ நான் இந்த வீட்டோட இளைய மருமகள் இங்கே இருக்கிறவங்களுக்கு இந்த வீட்டில் என்ன உரிமை இருக்கோ, அது எனக்கும் இருக்குன்னு எம்புருஷன் எங்கிட்ட வாக்குக் கொடுத்து இருக்காரு! அதனால் நீங்க இப்போ என்னைப் பத்தி தாழ்த்திப் பேசுனது இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்! இல்லைன்னா நான் உங்களை இந்த வேலையில் இருந்து நீக்கிடுவேன்! சாக்கிரதை!”என்றவளின் அந்த அழுத்தமான எச்சரிக்கையைக் கேட்டு அந்தப் பணியாளப் பெண்கள் சில நிமிடங்கள் பயத்தில் மூச்சடைத்துப் போய் விட்டார்கள்.
அதுவும் பூவிழியின் அந்த அலங்காரமும், அவளது தோரணையும் அவள் இந்த வீட்டின் இளைய மருமகளாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இருந்தது!
அதைக் கண்டு மிரண்டு போய்த் தங்களது வேலைக்கு ஏதாவது பங்கம் வந்து விடும் என்று பயந்து போய்,”எங்களை மன்னிச்சிருங்கம்மா. இனிமேல் இப்படி பேச மாட்டோம்! எங்களை வேலையை விட்டு மட்டும் அனுப்பிடாதீய!”என அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
அதில் கொஞ்சமாக மலையிறங்கி விட்டு,”ம்ஹ்ம். பால் சொம்பைக் கொடுங்க”என்றவளிடம்,
பால் செம்பை எடுத்துப் பயபக்தியுடன் அவளிடம் தந்தாள் ஒருத்தி.
“உங்கச் சின்னய்யா வீட்டுக்கு வந்ததும் ரூம்புக்கு வரச் சொல்லுங்க”என்று கூறி விட்டு அங்கே நிற்காமல் அறைக்குச் சென்று விட்டாள் பூவிழி.
அதைக் கண்டு விழி பிதுங்கிப் போய் விட்டப் பணியாளப் பெண்களோ,”இவ என்னடி இவ்வளவு வேகமாக இருக்கிறா? ஒருவேளை முன்னாடியே ஐயாவைக் கையிலே போட்டுக்கிட்டுத் தான் கல்யாணமே செஞ்சிக்கிட்டா போலவே?”என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அங்கேயிருந்து அகன்று அவள் பேசியதை எல்லாம் அப்படியே ராஜகுமாரியிடம் ஒப்புவித்து விட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.
அதைக் கேட்டதும்,”ம்க்கும்! இவளும் தன்னோட தங்கச்சி மாதிரி இவ்வளவு வேகமாக இருக்கிறாளே? அதுவும் இல்லாமல் மருமகளான அன்னைக்கே கொத்துச் சாவிக்கு ஆசைப்பட்றாளே! அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கோனும்? இவளைக் கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன்! ஆனால் நாளைக்கே என்னோட ஆட்டத்தைக் ஆரம்பிச்சுட வேண்டியது தான்!”என்ற மனைவியிடம்,
“ஆமா குமாரி! அந்த அக்கா, தங்கச்சி ரெண்டு பேரையும் நீ தான் அடக்கி வைக்கோனும்! நான் திருவையும், அறிவையும் சமாளிச்சிக்கிறேன்! நீ அடிச்சு ஆடு!”என்று உறுதி அளித்தார் நஞ்சுண்டன்.
அதேபோல், தான் வீட்டிற்குள் நுழைந்ததுமே, அந்த வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கும், தனது விசுவாசமான வயது முதிர்ந்த வேலையாள் ஒருவரின் மூலமாகப் பூவிழியை அலங்காரம் செய்த பெண்கள் அவளை ஏளனமாகப் பேசியதும், அதற்கு அவள் கொடுத்தப் பதிலடியையும் பற்றித் தெரிந்து கொண்டவனோ,
அதில் தனது முகம் மலர, இதழ்கள் விரிந்து புன்னகைக்க மாடியேறித் தங்களது அறையை அடைந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் திருவாதிரன்.
அங்கே மிகுந்த கோபத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்கும் மனைவியைக் கண்டதும் புன்னகை மாறாமல் கதவைத் தாழிட,
அதன் சத்தத்தைக் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் பூவிழி.
அவளது அலங்காரங்கள் தன்னை அவளிடம் இழுத்துச் சென்றாலும் கூடத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கதவின் அருகிலேயே நின்று கொண்டு,
“என்ன அலங்காரம் எல்லாம் பயங்கரமாக இருக்கு! நீயும் பார்க்கிறதுக்கு அழகாகத் தான் இருக்கிற!”என்று அவளிடம் ரசனையாக கூறினான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும்,”நன்றிங்க ஐயா!”என்றவளை முறைத்தவனோ,
“மத்தியானம் சொல்லிட்டுப் போனது உனக்கு மறந்து போச்சா விழி? நான் வேணும்னா அதை மறுபடியும் ஞாபகப்படுத்தவா?”என்க,
அதில் இவள் கடுப்பாகி,”அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குங்க! எனக்குக் கண் அசரனும் போலிருக்கு! நான் தூங்கவா? அதுக்கு அனுமதி தருவீகளா?”என அவனிடம் பவ்யமாக வினவினாள் பூவிழி.
“ப்ச்! தூங்குடி”என்று எரிந்து விழுந்து விட்டுத் தானும் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான் திருவாதிரன்.
“ஐயோ! எம்புருஷன் நீங்க தூங்காமல் இருக்கும் போது நான் மட்டும் எப்படி கண் அசர்றதுங்க?”என்றவளிடம்,
“அப்போ எனக்குத் தூக்கம் வர்ற வரைக்கும் உன் மடியில் படுத்துக்கவா?”எனக் கேட்டு விட்டுக் கண்ணடித்தான் அவளது கண்ணாளன்.
அதில் திடுக்கிட்டு,”வேணாமுங்க! எனக்குத் தூக்கம், தூக்கமாக வருது”என்று தூக்கத்தில் தள்ளாடுவதைப் போல் நடித்தவளைப் பார்த்து தனது வெண்பற்கள் தெரியச் சிரித்து விட்டு,
“தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்துடாமல் நீ படுத்து தூங்கும்மா! ஆனால் ஒரு விஷயம்!”என்றவனைக் கேள்வியாகப் பார்க்க,
“இன்னைக்கு நமக்கு மொத ராத்திரி! உன்னை மொத்தமாக எடுத்துக்க முடியலைன்னாலும், உனக்கு முத்தத்தை மட்டும் கொடுத்துக்கிறேன்!”என்றவனோ,
அவளை நெருங்கி இதழ்களைச் சிறை பிடித்துக் கொண்டான் திருவாதிரன்.
அதில் அவளது அவ்வளவு நேரமாக அவளிடமிருந்த ஒட்டுமொத்தக் கலக்கமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டதைப் போன்று உணர்ந்ததால் கணவனைத் தடுக்காமல் அவனுக்கு இசைந்து கொடுத்தாள் பூவிழி.
அதில் தனது செய்கையில் இருந்து மேலும் முன்னேற தனது உடலும், மூளையும் கட்டளையிடுவதை உணர்ந்து கொண்டு மெல்ல மனைவியின் உதடுகளை விடுவித்தான் திருவாதிரன்.
அதில் பெண்ணவளின் முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்து போய்க் காணப்படவும்,
“நன்றி விழி”என்று தெரிவித்து விட்டு அவளுக்கு அருகில் படுத்துக் கொள்ளவும்,
அவனது மென்மையான தீண்டலில் குழைந்த தன்னை எண்ணித் தானே கடுங்கோபம் கொண்டாள் பூவிழி.
திருவாதிரனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வழிந்தோடியது!
தன் தாயின் இழப்பு அவளைப் பாதித்துக் கொண்டு தானே இருக்கும்?
இன்று தனக்கும், செந்தாழைக்கும் திருமணம் நடந்துள்ளது.
அதைக் காண வேண்டும் என்று தானே அவ்வளவு கடினமாக உழைத்துக் கொண்டு இருந்தார் தனது அன்னை முத்துமணி.
ஆனால் இப்போது தங்கள் இருவருக்கும் பெரிய குடும்பத்தில் வாழ்க்கை அமைந்து விட்டிருப்பதைக் கூட அவரால் தன் கண்கள் நிறைய ஆனந்தக் கண்ணீருடன் கண்டு மகிழ்வதற்கு அவரை விதியும், எமனும் அனுமதிக்கவில்லையே!
அதை எண்ணித் தான் அவளுக்கு அழுகை உடைப்பெடுத்து அது மெலிதான விசும்பலாக உருவெடுத்தது.
அதைக் கேட்ட உடனே எழுந்து அமர்ந்து,”விழி!”என அவளைக் கலக்கத்துடன் அழைத்திருந்தான் திருவாதிரன்.
உடனே எழுந்து அமர்ந்து கொண்டு,”எங்க ஆத்தாவோட நெனப்பு வந்துடுச்சுங்க! அதான்! உங்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிட்டேனா? மன்னிச்சுக்கங்க”என்றிருந்தாள் பூவிழி.
“இப்போ என் தூக்கம் தான் முக்கியம் பாரு! இங்கே வா”என அவளைக் கை நீட்டித் தன்னிடம் நெருங்கி வருமாறு அழைக்க,
அவள் தயக்கத்துடன் அவனது அருகில் செல்ல,”உங்க ஆத்தாவோட நெனைப்பு உன்னை எப்படி வாட்டி எடுக்குதுன்றது எனக்கும் புரியுது விழி! ஆனால் எப்படியோ செந்தாழையோட எதிர்காலம் நல்லா அமைஞ்சிருச்சு! அதுக்கு முன்னாடி பொறந்த உன்னை எப்படி கரை சேக்கிறதுன்ற வேதனையில் தான் தன்னோட உசிரை விட்டிருப்பாங்க உன் ஆத்தா! உனக்கும் எதிர்கால வாழ்க்கை நல்லா அமைஞ்சிருச்சுன்றது தீரிஞ்சா அவங்க நிம்மதியாகத் தான் சொர்க்கத்தில் இருப்பாங்க! அவங்க உன் கூடவே தான் இருக்காங்க! ஆனாலும் உன்னோட வேதனையைப் போக்க நான் எப்பவும் உன் துணைக்கு இருப்பேன்றதை மறந்துடாத!”என்றவனின் தோளில் சாய்ந்து கண்ணீரில் வெடிக்க, அவளை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டான் திருவாதிரன்.
இதே நேரத்தில், தங்களது அறையில் தனது கணவனுடன் பேசிச் சிரித்து விட்டுக் களைப்பாக இருக்கிறது என்று கூறி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள் செந்தாழை.
அவளை மென்மையாக அணைத்துக் கொண்டுத் தானும் தூங்கி விட்டிருந்த அறிவொளியோ,
அதற்கடுத்த நாள், தனது மனைவியுடன் வரவேற்பறைக் கூடத்திற்கு வந்து, அனைவரையும் அழைத்து,”அதான் எங்களுக்குக் கண்ணாலம் ஆயிடுச்சுல்ல? நாங்க ரெண்டு பேரும் டவுனு ஆஸ்பத்திரிக்குப் போய்க் குழந்தையோட வளர்ச்சியைப் பத்தி தெரிஞ்சிக்கப் போறோம்!”என்று அறிவித்திருந்தான்.
அதைக் கேட்டதுமே,”அதெல்லாம் எதுக்கு அவ்வளவு தூரம் டவுனு ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்க்கோனும்டா? இங்கேயே மருத்துவச்சியை வரவழைச்சுப் பரிசோதிச்சுப் பார்த்துக்கிடலாம்ல? வயித்துப் புள்ளைக்காரி எதுக்கு வீணாக இங்கேயும், அங்கேயும் காரில் அலையனும்?”என்று செந்தாழையின் உடல்நலனைக் கருத்தில் கொண்டுப் பேசுவதைப் போலும், அவள் மீது தனக்கு அக்கறை இருப்பதைப் போலவும் பேசினார் ராஜகுமாரி.
அதில் தனது மனைவியின் முகம் சுருங்குவதைக் கண்டு விட்டு,“அதெல்லாம் சரியாக வராது ஆத்தா! நாங்க அங்கேயே போய்ப் பார்த்துக்கிட்டு வர்றோம்!”என்று உறுதியாக கூறினான் அறிவொளி.
“அதான் அண்ணனும், தம்பியும் எங்கச் சொல்லுக்குத் தலையை ஆட்டக் கூடாதுன்னு ஒரு முடிவுல இருக்கீயலே? அப்பறம் என்ன? என்னமோ பண்ணுங்க!”எனச் சலித்துக் கொண்டார் நஞ்சுண்டன்.
“நீங்க என்னங்க இப்படி பேசுறீய? அவன் எல்லாத்தையும் ரோசனைப் பண்ணிட்டுத் தான் நம்மகிட்டே சொல்லி இருக்கியான்! கல்யாணம் ஆகி ஒரு புள்ளைக்கு அப்பனாகப் போறியான், இன்னுமா கூறில்லாமல் இருக்க முடியும்? நானும் அவசரப் புத்திக்காரி என் மருமகளுக்கு எதுக்கு வீண் அலைச்சல்ன்னு தான் வேண்டாம்னு சொன்னேன்!”என்று கூறி கணவனை அமைதிப்படுத்தி விட்டு,
“நீங்க ரெண்டு பேரும் டவுனு ஆஸ்பத்திரிக்கே போயிட்டு வாங்க! ஆமா, என்னைக்குப் போகப் போறீய?”என மூத்த மகனிடம் விசாரித்தார் ராஜகுமாரி.
“ஒரு மூனு நாளைக்கு அப்பறமாகப் போவலாம்னு இருக்கோம்த்தா”என்றதுமே,
“அப்படியா? சரிப்பா! இப்போ ரெண்டு பேருக்கும் காப்பிப் போட்டுக் கொண்டு வரச் சொல்றேன். குடிங்க”என அறிவொளிக்கும், செந்தாழைக்கும் அறிவுறுத்தினார்.
ஆனால் இதையெல்லாம்,’யாருக்கு வந்த விருந்தோ?’என்பதைப் போல் ஒரு ஓரமாக நின்று கொண்டுப் பார்த்திருந்தாள் பூவிழி.
உடனே அவளது அருகில் வந்து,”அது தான் பஞ்சாயத்து முடிஞ்சிருச்சுல்ல? அப்பறம் எதுக்கு இங்கனயே நின்னுட்டு இருக்கிறம்மா? எனக்கும், உனக்கும் காப்பிப் போட்டு எடுத்துட்டு வா”என அவளிடம் மொழிந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டுக் கடுப்புடன்,”அப்போ எங்க எல்லாருக்கும் யாரு காப்பிப் போட்டுத் தருவாக?”என அவனிடம் வினவினார் ராஜகுமாரி.
அதில் அவரை அழுத்தமாக நோக்கியவனோ,
“உங்களுக்கு இந்த வீட்டு வேலைக்காரங்கப் போட்டுத் தருவாக! அதை வாங்கிக் குடிங்க!”என்று எகத்தாளமாக உரைத்தான்.
அதில் தனது முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு,”நான் மாசமாக இருக்கிறதால் தான் எந்த வேலையும் செய்யாமல் இருக்கேன் மாமா! இல்லைன்னா இவர் கிட்டே எல்லாம் இப்படி பேச்சு வாங்கனும்னு எனக்கு என்னத் தலையெழுத்தா?”எனக் கூறித் தனது கணவனை உசுப்பேற்றினாள் செந்தாழை.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக