முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 14

 


அனைத்துச் சடங்குகளும் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் மாப்பிள்ளை வீட்டு உறவு முறைகள் அனைவரும் புதுமணத் தம்பதிகளைப் பற்றித் தங்களுக்குள் முணுமுணுத்து ஏதோ பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தார் ராஜகுமாரி. 


அது மட்டுமில்லாமல், செந்தாழையின் வயிறு வேறு சற்றுப் பெருத்து இருப்பதைக் கண்டு கொண்டு அதைப் பற்றியும் அவரிடம் விசாரிக்கத் தொடங்கும் வகையில், 


“என்ன ராஜகுமாரி! உம்ம ரெண்டு பையனுங்களுக்கும் சீமை சிங்காரிகளையே, சொத்துப், பத்துல முக்குளிக்கிறப் பொண்ணுங்களையோ தான் கட்டி வைப்பேன்னுப் பெருமையாகப் பீத்திக்கிட்டுத் திரிஞ்ச! இப்போ என்னடான்னா ஒன்னுமில்லாத வெத்துச் சிறுக்கிகளைக் கட்டி வச்சிருக்கிற! அதுவும் உன் பெரிய மருமவளோட வயிறு கொஞ்சம் பெருசா தெரியுதே! என்னா சங்கதி?”என்று கேட்டு அவரது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சினார் வம்புப் பேசும் பெண்மணி ஒருவர். 


அதில் தனது மகன்கள் மற்றும் மருமகள்களை ஆத்திரம் பொங்கப் பார்த்து விட்டு,”எந்தச் சங்கதியும் இல்லை மதினி! அவளுக்கு உடம்பில் கொழுப்பு ஏறிப் போச்சு! அதனால் வந்த தொப்பைத் தான் அது! அதுவும் இல்லாமல் நான் நினைக்கிறது எல்லாம் நடந்துட்டால் கடவுள்ன்னு ஒருத்தர் எதுக்கு இருக்காரு மதினி? எம் மயனுங்க இவங்களைக் கட்டிக்க விருப்பப்பட்டாங்க! பிள்ளைங்களோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது தானே பெத்தவங்களோட கடமை? அவங்க தனக்குப் பிடிச்சவங்களைக் கட்டிக்கிட்டு நல்லா வாழுறதைப் பார்க்கத் தானே நானும், எம்புருஷனும் காத்துக் கிடந்தோம்! இப்போ அது நடந்துருச்சு! எங்களுக்கு இதுவே போதும்! எங்களுக்குச் சொத்து, சுகத்தை விடப் பயலுங்களோட விருப்பம் முக்கியமாகப்பட்டது! அதேன், ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்துல கண்ணாலத்தை முடிச்சாச்சு!”எனக் கூறி விட்டுத், 


தனது மகன்கள் மற்றும் மருமகள்களைக் கண்டுக் கண்களில் கனலைக் கக்கினார் ராஜகுமாரி. 


ஆனால் அவர்களோ இரு வேறு மனநிலையில் இருந்தார்கள். 


திருவாதிரன் மற்றும் பூவிழியும் கலவையான உணர்வுக் குவியல்களால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார்கள் எனலாம்! 


தங்களது திருமணத்தை அனைவரையும் சம்மதிக்க வைத்து எப்படியோ நடத்தி முடித்து விட்டாயிற்று. 


ஆனால் இதற்குப் பிறகுப் பூவிழியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற யோசனையில் ஆழ்ந்து இருந்ததால் தனக்குச் சுற்றியிருந்த அனைவரும் பேசிக் கொண்டிருந்தவற்றைக் கவனிக்காமல் விட்டு விட்டிருந்தான் திருவாதிரன். 


ஆனால் அவனின் உறவுமுறைப் பெண்களின் ஏளனமானக் கேள்வியையும், அதற்குத் தனது மாமியார் கொடுத்தப் பதிலையும், அவரது முறைப்பையும் கண்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் பூவிழி. 


இவர்களுக்கு நேர்மாறாகத் தங்களது சுற்றி நடக்கும் எதையும் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் ஒருவரையொருவர் காதலுடனும், பெருமிதத்துடனும் பார்த்துக் கொண்டு இருந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை. 


எப்போதடா அனைத்து சடங்குகளும் முடிந்து, சொந்தக்காரர்கள் அனைவரும் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள் என்று பல்லைக் கடித்துக் கொண்டுக் காத்திருந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


மணமக்களுக்குப் பால், பழம் கொடுப்பதில் இருந்து அடுத்தடுத்த சடங்குகள் முடிந்ததும் அனைவருக்கும் உணவைப் பரிமாறி வீட்டிற்கு வழியனுப்பி வைத்து விட்டு, 


“அவுக எல்லாரும் எங்க ரெண்டு பேரையும் என்னென்ன கேள்வியை எல்லாம் கேட்டாங்கன்னு நீங்களும் பார்த்தீக தானே? இனிமேல் நெதமும் இது தான் நடக்கப் போகுது!”என்று பொருமிக் கொண்டார் ராஜகுமாரி.


“சரிம்மா. அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கனும்ல?”என்று அவரிடம் தங்கள் மகன்கள் மற்றும் மருமகள்களுக்கான சாந்தி முகூர்த்தச் சம்பிரதாயத்தைப் பற்றி மறைமுகமாக அறிவுறுத்தினார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதும் தன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தியதைப் போன்றதொரு எரிச்சலை உணர்ந்த அவரது மனைவியோ, 


“க்கும்! இதை எதுக்கு இப்படி மறைமுகமாகச் சொல்றீங்க? அதெல்லாம் நடந்து முடிஞ்சு தான் ஒருத்தி வயித்தை நிரப்பிக்கிட்டதுக்கு அப்பறம் தானே ஊரறியக் கழுத்தில் தாலியை வாங்கி இருக்காளே?”என்று தனது வன்மத்தைக் கக்க, 


“ம்மா!”என்ற அறிவொளியைக் கடுப்புடன் பார்த்து விட்டு அமைதியாகி விட்டார் ராஜகுமாரி. 


“நீ ஏன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருக்கிற திரு? அதான் நீ நினைச்சதை நடத்திக்கிட்டியே? அந்தச் சந்தோஷத்தையே உன் முகத்தில் காணலையே!”என்று இளைய மகனிடம் வினவினார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதும் அவரை நிமிர்ந்து பார்த்து,”நான் நினைச்சதை நடத்திக்கிட்டேன் தான்ப்பா! ஆனால் அதுக்கு அஸ்திவாரம் போட்டது யாருன்னு உங்களுக்கே தெரியும்”என அவரிடம் எகத்தாளமாக உரைத்தான் திருவாதிரன். 


“ம்ஹூம். இனிமேல் என் விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது! அதே மாதிரி இந்த வீட்டில் எனக்கு எப்படி எல்லாத்திலேயும் உரிமை இருக்கோ, அதே உரிமை எம்பொண்டாட்டிக்கும் இருக்கு! அதை மட்டும் எல்லாரும் ஞாபகம் வச்சுக்கோங்க!”என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்தான் அறிவொளி. 


உடனே,”இதுக்கு மறுப்புச் சொன்னால் மட்டும் கேட்டுட்டுத் தான் மறுவேலை பார்ப்ப! ச்சை!”என்றிருந்தார் ராஜகுமாரி. 


“நானும் அண்ணன் சொல்வதை தான் சொல்றேன்! எம்பொண்டாட்டியை யாரும் தேவையில்லாமல் வேலை வாங்கக் கூடாது! அது தான் இவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்களே? அதனால் அவ கிட்ட எதையும் செஞ்சிக் கொடுக்கச் சொல்லித் தொல்லை பண்ணக் கூடாது!”என்றவனை முகம் ஜிவுஜிவுக்கப் பார்த்து முறைத்தாள் செந்தாழை. 


ஏனெனில் அவன் தன்னைத் தான் மறைமுகமாக குறிப்பிட்டுச் சொல்கிறான் என்பதை அறியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறு பாலகி இல்லையே? 


ஆகவே,”இங்காருங்க!”என்று ஆரம்பித்தவளை அழுத்தமாகப் பார்த்து, 


“நான் உங்களைப் பத்தி ஒத்த வார்த்தைப் பேசலை! எம்பொண்டாட்டியைப் பத்தி தான் பேசிட்டு இருக்கேன்! எங்கிட்ட வீணாக வாயைக் கொடுக்காதீங்க! அப்பறம் என் முன்னாடி நீங்க வாயைத் திறந்து பேசாத மாதிரிப் பண்ணி விட்ருவேன்!”என்று அவளுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் திருவாதிரன். 


அதில்,”டேய்! இப்போ இருந்து அவ உனக்கு அண்ணி முறை வேணும். அந்த மரியாதையை அவளுக்குக் கொடு முதல்ல!”எனத் தம்பியிடம் எகிறினான் அறிவொளி.


“ஓஹோ! சரிண்ணா”என்று போலியாகப் பவ்யத்தைக் காட்டி, 


“எனக்கு இப்போ தான் புதுசாக கல்யாணம் ஆகி இருக்கு! அதனால் நான் நம்ம தோட்டம், தொரவுன்னு எல்லாத்தையும் வந்து மேற்பார்வைப் பார்க்கிறதுக்கு ஒரு வாரம் ஆகும்! அதனால் அந்த வேலையை நீ பார்த்துக்கோண்ணா! நான் ஒரு வாரம் கழிச்சு வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கிறேன்!”என்று அவனது பலவீனத்தில் சரியாக அடித்திருந்தான் திருவாதிரன்.  


அதில்,”என்னடா இப்படி சொல்ற?”என்று உள்ளிறங்கிய குரலில் வினவினான் அறிவொளி. 


“ஆமாம். என்னால் இதை இப்படி மேலோட்டமாகத் தான் சொல்ல முடியும்! விஷயத்தை வெளிப்படையாகச் சொல்றதுக்கு எனக்குச் சங்கடமாக இருக்கும் தானே?”என்று அவனிடம் கூறி விட்டுப் பக்கவாட்டில் திரும்பிப் பூவிழியைப் பார்த்துப் புன்னகைக்க, 


அவளோ அவனது பேச்சில் இருந்த மறைமுகத் தகவலை அறிந்து கொண்டதும் உடல் பதறிப் போய்க் கணவனை ஏறிட்டாள். 


ஆனால் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மேலும் தொடர்ந்து,”நான் ஒரு வாரம் வீட்டிலேயே தங்கிட்டு அதுக்கடுத்த வாரம் நிலபுலனைப் பார்க்க வர்றேன்! போதுமா?”என்று அண்ணனுக்கு விளக்கினான் திருவாதிரன். 


அதில் அங்கேயிருந்த அவனது பெற்றோர் மற்றும் அண்ணன், அண்ணியின் முகங்களோ அஷ்டகோணலாக மாறியது. 


அதிலும் தன்னை வைத்து இந்த வீட்டிற்குள் நுழைந்து இப்போது எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த வீட்டில் ராணியைப் போல் வாழப் போகும் தனது தமக்கையைப் பார்த்த செந்தாழையின் மனதில் கொஞ்சம், கொஞ்சமாக வஞ்சம் வளரத் தொடங்கி விட்டிருந்தது. 


அவளைப் போலவே தங்களைக் குத்திக் காட்டிப் பேசும் தனது கொழுந்தனையும் ஏதாவது செய்து தங்களது வழிக்கே வர விடாமல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு மேலும் பேச்சை வளர்க்காமல் தற்சமயத்திற்கு மட்டும் தனது வாயை மூடிக் கொண்டவளோ, 


“எனக்குக் கசகசன்னு இருக்கு! நான் போய் உடுப்பை மாத்துறேன்”என்றுரைத்து விட்டு எழ முயன்றவளின் கரத்தைப் பிடித்து மெல்ல எழுப்பி விட்டு, 


“நம்ம அறைக்குப் போகலாம்”என அவளிடம் பதவிசாக மொழிந்து அவளைக் கைத்தாங்கலாகத் தனது அறைக்கு அழைத்துச் சென்று விட்டான் அறிவொளி. 


“நாமளும் நம்மளோட அறைக்குப் போகலாம். வா”என்று பூவிழியை அழைத்தான் திருவாதிரன். 


ஆனால் அவளோ தயக்கத்துடன் அதே இடத்திலேயே அமர்ந்திருக்கவும், 


“நீயே வர்றியா? இல்லைன்னா, தூக்கிட்டுப் போகவா?”என்றவுடனேயே நாற்காலியில் இருந்து எழுந்து தனது மாமனார், மாமியாரைச் சங்கடத்துடன் பார்த்து விட்டுக் கணவனுடன் நடந்தாள் பூவிழி.


“குமாரி! உனக்கு என்னம்மா ஆச்சு? இவங்க இவ்வளவு நேரமாகப் பேசிட்டு இருந்ததை எல்லாம் நீயும் கேட்ட தானே? ஆனாலும் அவங்களைக் கண்டிச்சுப் பேசாமல் சும்மா இருந்துட்டியே! அது எதனால்ம்மா? இவனுங்கப் பாட்டுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் எசிலி போட்டுட்டு இருக்கானுக! நீயும் அதையெல்லாம் வேடிக்கை மட்டும் தான் பார்த்த! என்ன தான் உன்னோட திட்டம்?”என்றதுமே, 


“ஐயோ! நீங்க வேற! உங்களுக்குக் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லைங்க! அவங்க ரெண்டு ஜோடிக்கும் சாந்தி முகூர்த்தத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டு வந்து உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிச் சொல்றேன். அது வரைக்கும் எங்கிட்ட கேள்விக் கேட்காமல் சும்மா இருங்க!”என்ற மனைவியை வியப்பாகப் பார்த்தார் நஞ்சுண்டன். 


“என்ன மலைச்சுப் போய் இருக்கீங்க? தலைக்கு மேலே வேலைக் கெடக்கு!”எனக் கூறி விட்டுத் தங்கள் இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுக்கான சாந்தி முகூர்த்தச் சடங்கிற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார் ராஜகுமாரி. 


இங்கே தங்களது அறையில் உடை மாற்றிக் கொண்டுக் கட்டிலில் அமர்ந்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை.


அப்போது கால் வலியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மனைவியின் நிலையைப் புரிந்து கொண்டு அவளது கால்களை மென்மையாகப் பிடித்து விட ஆரம்பித்து விட்டான் அவளது கணவன். 


அதில் தன்னை நினைத்துப் பெருமிதம் அடைந்தாலும் கூட, இதே போல் தானே தனது தமக்கைக்கும் அவளது கணவனிடம் இருந்து சேவைகள் கிடைக்கும் என்பதை எண்ணிக் கடுப்பு அடைந்தாள் செந்தாழை. 


அதே நேரத்தில் தங்களது அறையில் இன்னும் உடை மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தனர் திருவாதிரன் மற்றும் பூவிழி.


தனது கழுத்தில் தவழ்ந்து கொண்டிருந்த மாங்கல்யத்தைக் கையில் ஏந்திக் கொண்டுக் கண்ணீர் வடித்தவளைப் பார்த்து, 


“இப்போ எதுக்கு அதைக் கையில் வச்சுப் பார்த்து அழுதுகிட்டு இருக்கிற?”என அவளிடம் அழுத்தமாக கேட்டான் திருவாதிரன். 


அதில் தன் கண்களில் வலியுடன் அவனை ஏறிட்டுப் பார்த்து,”உங்க அண்ணங் கூட எசிலிப் போட்டு ஜெயிக்கிறதுக்கு நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?”என்றவளது விழிகள் இரண்டும் கண்ணீரைச் சொரிய, 


அதில் மூண்டக் கோபத்தை அடக்க வழியில்லாமல் அவளை நெருங்கி அவளது இதழ்களைத் தனது இதழ்களால் அழுத்தமாகச் சிறை பிடித்து விட்டிருந்தான் திருவாதிரன். 


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...