தனது தங்கையின் கேள்வித் தன்னைத் திடுக்கிடச் செய்து விட்டாலும் கூடச் சில நிமிடங்களிலேயே அதிலிருந்து மீண்டு விட்டு,”அவர் தான் நம்ம வீட்டில் வச்சே அந்தளவுக்கு உறுதியாகப் பேசி இருந்தாரே? அதைக் கேட்டதுக்கு அப்பறமும் நம்மளை இந்த வீட்டை விட்டும், ஊரை விட்டும் போறதுக்கு அனுமதிப்பாரா என்ன? அதை வச்சுத் தான் சொன்னேனே தவிர, எனக்கு அவரைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது!”என்று செந்தாழையிடம் எரிச்சலாக கூறியிருந்தாள் பூவிழி.
அதில் சமாதானம் அடைந்து விட்டவளிடம்,”இது எல்லாத்தையும் நீ ஆரம்பிச்சு வச்சிட்டு அவளையும் உள்ளே இழுத்து விட்டுடாதே தாயி! நீ நல்லா இருப்பே! நீ பண்ணி வச்சதே நம்மத் தலைமுறை முடியிற வரைக்கும் யாருக்கும் மறக்காது!”என்று அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டார் முத்துமணி.
அவரது வார்த்தைகள் சவுக்கடி கொடுத்ததைப் போன்ற உணர்வை அளிக்கவும் அதற்கு மேல் தன் வாயைத் திறக்காமல் இருந்து கொண்டாள் செந்தாழை.
“அவளைப் பேசி மட்டும் என்ன ஆகப் போகுதும்மா? இதுக்கப்புறம் என்னப் பண்ணப் போறோம்ன்னுத் தான் யோசிக்கனும்? என்ன தான் சின்னவரு அவ்வளவு பிடிவாதமாக நம்மளை இங்கேயிருந்து எங்கேயும் போகக் கூடாதுன்னுக் கட்டளை போட்டு இருந்தாலும் கூட அவரோட அப்பா, அம்மாவுக்கு நாம இங்கே இருக்கிறது சுத்தமாகப் பிடிக்கலை! அதை அவங்க திரு ஐயா கிட்டே பேசும் போதே நல்லா தெரிஞ்சுச்சு! அதனால் நாம அவங்க கிட்ட உதவிக் கேட்டுப் பார்ப்போம்! நாம இங்கேயிருந்து போறோம்ன்னு சொன்னாலே அவங்க நமக்கு உதவிச் செய்ய ஒத்துப்பாங்க!”என்று யோசனை கூறினாள் பூவிழி.
“ம்ஹ்ம். இதையெல்லாம் பட்டுப், பட்டுன்னுப் புரிஞ்சு, அறிஞ்சு வச்சிருக்கிறவ, இவளோட கள்ளத்தனத்தையும் முன்னாடியே கண்டுபிடிச்சிருந்தால் இந்த நிலைமைக்கு வந்து இருப்போமா? உன்னைச் சொல்லி என்னத்த? நானே என் வளர்ப்புல கோட்டை விட்டுட்டு உட்கார்ந்து இருக்கேனே! என்னைச் சொல்லனும்!”எனத் தன் தலையில் அடித்துக் கொண்டார் அவர்களது அன்னை.
அதில் தன்மானம் தலைதூக்கி விடவும்,”ம்மோவ்! எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு! இப்போ இது தான் உண்மை! நான் இந்தக் கருவைக் கலைச்சு இருந்தால் உங்க யாருக்கும், தெரிஞ்சு இருக்காது! முதல்லயே அந்த மனுஷன் சரியாகத் தான் சொன்னாரு! இதைக் கலைச்சிடலாம்னு! நான் தான் மடச்சி அதைக் கேட்காமல் இருந்துட்டேன்!”என்று தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆதங்கமாகப் பேசினாள் செந்தாழை.
உடனே அவளது வாயில் பட்டென்று ஒரு அடியைப் போட்டு விட்டு,”வாயை மூடிட்டு இருந்துடு! இல்லைன்னு வையி, நான் உங்கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்! நல்லாப் பேச வந்துட்டா! இந்த வியாக்கியானம் கொழுப்பெடுத்துப் போய்க் கழுத்துல தாலியையும், வயித்துல பிள்ளையையும் வாங்குறதுக்கு முன்னாடி இருந்துருக்கனும்டி வெளக்கமாத்துக் கொண்டை! இனிமேல் ஒரு வார்த்தை இப்புடி கிறுக்குத்தனமாகப் பேசினேன்னு வையி ஆய்ஞ்சுப் போடுவேன்!”என்று அவளுக்கு எச்சரிக்கை விடுத்தார் முத்துமணி.
“ப்ச்! போதும்மா! இப்படியே இதையே பேசிட்டு இருந்தால் அடுத்து நடக்கிறதைப் பத்தி யோசிக்கவே முடியாது! அதனால் நான் சொன்ன யோசனைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?”என்று தனது தாய் மற்றும் தங்கையின் கருத்தைக் கேட்டாள் பூவிழி.
“எனக்குச் சம்மதம் தான்!”என உடனே தனது ஒப்புதலை அளித்து விட்டிருந்தார் அவர்களது அன்னை.
ஆனால், தான் எந்தப் பதிலையும் கூறாமல் அமைதியாக இருந்தாள் செந்தாழை.
“நீ உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கிற?”என்று அவளிடம் கடுமையாக வினவினாள் பூவிழி.
“அவரைப் பத்தி தான் நினைச்சிட்டு இருக்கேன்! நீங்க ரெண்டு பேருமே முடிவு எடுக்கிறீங்களே! என் மனசைப் பத்திக் கொஞ்சம் நினைச்சுப் பார்த்தீங்களா? அதே மாதிரி அவரோட வீட்டாளுங்க கிட்டே என்னை விட்டுக் கொடுக்காமல் உண்மையை ஒத்துக்கிட்டாரு! அப்படி இருக்கும் போது நான் எப்படி அவரை விட்டுட்டு வர முடியும்? அதே மாதிரி இந்தக் குழந்தையைக் கலைக்கிற முடிவை நான் ஒன்னும் எடுக்கலை! அவர் தான் இப்போதைக்கு வேண்டாம், நாம நம்மளோட வீட்டில் சொன்னதுக்கு அப்பறம் ஊர் மெச்சக் கல்யாணம் செஞ்சிக்கிட்டதுக்கு அப்பறம் எவ்வளவு குழந்தைங்களை வேணும்னாலும் பெத்துக்கலாம்னு சொன்னாரு! அதனால் தான் நான் கருக்கலைப்புக்குச் சம்மதிச்சேன்!”என்று தனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தினாள் செந்தாழை.
அதைக் கேட்டதும்,”இப்போ முடிவாக என்னச் சொல்ல வர்ற?”என்று அவளைத் தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டாள் பூவிழி.
“நான் இங்கேயிருந்து வர்றதுக்குச் சம்மதிக்க மாட்டேன்!”என்றவளின் உறுதியான வார்த்தைகளைக் கேட்டு வெகுண்டு எழுந்து அவளிடம் சென்று,
“ஏன்டி இப்படி பண்ற? நாங்க உன் நல்லதுக்கும் சேர்த்து தான்டி சொல்றோம்! சொன்னால் புரிஞ்சுக்கோ! உன்னை இங்கே வாழ விட மாட்டாங்கடி! இவங்க எல்லாரும் காலங்காலமாக கடைபிடிக்கிறத் தங்களோட குடும்பப் பாரம்பரியத்தைக் கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க! அறிவொளி ஐயாவும், திரு ஐயாவும் வேணும்னா உன்னை ஏத்துக்கலாம்! ஆனால் இந்த வீட்டோட பெரியவங்க ரெண்டு பேரும் நம்ம மேலே கடும் வெறுப்பில் இருக்காங்க! நம்மளை இங்கே ஒரு நிமிஷம் கூட நிம்மதியாக வாழ விட மாட்டாங்கடி! நாங்க சொல்றைக் கேளுடி!”என்று அவளிடம் தலைப்பாடாக அடித்துக் கொண்டார் முத்துமணி.
ஆனால்,”நீங்க ரெண்டு பேரும் என்னச் சொன்னாலும் நான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்! எனக்கு இங்கேயிருந்து எங்கேயும் வர விருப்பம் இல்லை! நீங்க வேணும்னா போங்க! என்னை எங்கேயும் வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீங்க! அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் சின்ன ஐயா கிட்டே எல்லாத்தையும் சொல்லிடுவேன்!”என்று திண்ணக்கமாக உரைத்து விட்டிருந்தாள் செந்தாழை.
அவளது அந்தச் சுயநலமான பதிலில் மனம் நொந்து, வெறுத்துப் போய் அவளைப் பார்த்தார்கள் மற்ற இருவரும்.
“உனக்கு இப்போ கூட எங்களைப் பத்தி யோசிக்கத் தோனலை தானே?”என்று தங்கையிடம் வெறுப்புடன் வினவி இருந்தாள் பூவிழி.
“அப்படின்னு யார் சொன்னால்? நான் உங்களைப் பத்தி யோசிக்கிறேன் தான்! அதனால் தான் நீங்க ரெண்டு பேரும் மட்டும் இந்த வீட்டை விட்டுப் போயிக்கோங்க! நான் அதைப் பத்தி யார் கிட்டேயும் மூச்சுக் கூட விட மாட்டேன்! அப்படியும் உங்களுக்கு என் மேல் சந்தேகம் இருந்தால் நீங்க எங்கே போகப் போறீங்கன்னு எங்கிட்ட சொல்லாமலேயே போயிடுங்க! அப்போ என் மூலமாகவும் நீங்க எங்கே போனீங்கன்னு யாருக்கும் தெரியாமல் போயிடும் தானே? அதனால் என்னைப் பத்திக் கவலைப்படாமல் நீங்க ரெண்டு பேரும் இங்கேயிருந்து எப்படி வெளியே போகலாம்னுத் திட்டம் போடுங்க! இல்லைன்னா நானே என் புருஷன் கிட்டேயும், அத்தை, மாமா கிட்டேயும் இதைப் பத்திப் பேசிப் பார்க்கவா? நான் சொன்னால் அவுக கேட்க வாய்ப்பு இருக்கு!”என்றவளைச், ‘ச்சீ’ என்றதொரு அருவருப்பானப் பார்வையுடன் நோக்கினர் அவளது தாயும், தமக்கையும்.
ஆனால் அதையெல்லாம் கவனிக்கவும் இல்லாமல், கவலையும் கொள்ளாமல் தனது வயிற்றில் இருந்த சிசுவைப் பூரிப்புடனும், புன்னகையுடனும் தனது கரத்தைக் கொண்டுத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் செந்தாழை.
“இவ என்னடி இப்படி சுயநலம் புடிச்சவளாக இருக்கிறா? இவளையும், உன்னைப் போலத் தானே வளர்த்தேன்? அப்பறம் நான் எங்கே கோட்டை விட்டேன்னுத் தெரியலையே?”என்று பெரிய மகளிடம் புலம்பித் தள்ளினார் முத்துமணி.
இப்படியாக அன்றைய நாளின் இரவு வேளையில் அவர்களுக்கான உணவு அவர்களது அறைக்கே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தாங்கள் இது வரைக்கும் சுவைத்துப் பார்த்திராத அனைத்து வித, விதமானப் பதார்த்தங்கள் தங்கள் முன்பு இருந்தாலும் கூட அவற்றைச் சீண்டக் கூட மனம் வரவில்லை முத்துமணிக்கும், பூவிழிக்கும்.
ஆனால் செந்தாழை மட்டும் அந்த உணவுகளைச் சுவைத்து உண்டாள்.
அப்போது இரவு உணவை உண்பதற்காக நஞ்சுண்டன், ராஜகுமாரி மற்றும் அறிவாளியும் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்திருந்தனர்.
பெரியவர்கள் இருவரும் தங்களது மூத்த மகனைக் கடுமையாக முறைத்துக் கொண்டிருக்க அவனோ அவர்களைக் கண்டும், காணாமல் அமர்ந்து இருந்தான்.
அந்த வேளையில் அவர்களது இளைய மகன் வீட்டினுள் நுழைந்து விட்டிருந்தான்.
அவனது வரவை அறிந்ததும் மூவரும் தங்களது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார்கள்.
அவர்களைக் கூர்மையாக நோக்கி விட்டுத் தான், தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கொல்லைப் புறத்திற்குச் சென்றான் திருவாதிரன்.
“எங்க கிட்டே எகிறுனா மாதிரி உந்தம்பிக் கிட்டே எகுறுப் பாப்போம்?”என்று மூத்த மகனிடம் சவடால் பேசினார் ராஜகுமாரி.
“நான் எதுக்கும்மா அவங் கிட்டே எகுறனும்? அவந்தேன் எனக்குக் கல்யாணமே பண்ணி வைக்கப் போறான்? அப்பறம் எதுக்கு அவங்கிட்டே சண்டைக்கு நிக்கனும்? நீங்க நல்லா காமெடி பண்றீங்கம்மா! ஹா ஹா!”என்று கூறிச் சிரித்தவனைக் கண்டு முறைத்தனர் அவனது பெற்றோர்.
அப்போது அங்கே வந்து தனது ஆஸ்தான நாற்காலியில் அமர்ந்து விட்டு,”அவங்க மூனு பேரும் சாப்பிட்டாச்சா?”என்று வீட்டு வேலையாளை அழைத்து விவரம் கேட்டான் திருவாதிரன்.
அதற்கு அவனோ,”அவங்களுக்குச் சாப்பாட்டை எப்பவோ அனுப்பி வச்சாச்சு ஐயா! ஆனால் அவங்க இன்னும் சாப்பிட்டு முடிக்கலை போல!”என்று பவ்யமாக உரைத்தான்.
அதில் உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்தவனிடம்,”நீ ஏன்ப்பா எழுந்திரிக்கிற? நீ இப்போ தானே வீட்டுக்கு வந்த? முதல்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் அவங்களைப் பார்க்கப் போ. அவங்க அவ்வளவு வகைச் சாப்பாட்டைப் பார்த்திருக்க மாட்டாங்க! அது தான் மெதுவாகச் சாப்பிடுவாங்களாக இருக்கும்! அதனால் நீ உட்காரு!”என்று தன்மையுடன் கூறினார் ராஜகுமாரி.
அதில் அவரைச் சில கணங்கள் அழுத்தமாகப் பார்த்து விட்டு,”அதனால் என்னம்மா? நாமளும் பொறந்ததுல இருந்தே அவ்வளவு சாப்பாட்டு வகைகளைச் சாப்பிட்டது இல்லையே? அவங்களுக்கும் அது போகப், போகப் பழகிடும்! நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். நீங்க மூனு பேரும் சாப்பிடுங்க”என்றுரைத்து விட்டுச் சென்றவனை முதுகைப் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டுப் பார்த்து விட்டுத் தங்களது உணவில் கவனம் செலுத்தினார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அவர்களைப் போலவே தம்பியின் கட்டளைக்கு இணங்கித் தானும் உணவுண்ணத் தொடங்கினான் அறிவொளி.
ஆனால் அந்த மூவரின் மேல் தன் தம்பிக்கு இருந்த அக்கறைக் கூட அவனுக்கு இல்லை என்பது தான் ஆச்சரியம்!
அனைத்தையும் தனது இளவலே பார்த்துக் கொள்வான் என்ற அலட்சியம் அறிவொளியின் மனதில் தோன்றத் துவங்கி விட்டிருந்தது.
இங்கே தங்களது அறைக் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த திருவாதிரனைக் கண்டதுமே கால்கள் தன்னால் எழுந்து நின்று விட்டது முத்துமணிக்கு.
அவரைத் தொடர்ந்து வேண்டா வெறுப்பாகத் தானும் எழுந்து நின்றாள் பூவிழி.
அவர்களைப் போலவே தானும் எழ முயன்றச் செந்தாழையிடம்,”நீங்க எழுந்திரிக்க வேண்டாம்”எனக் கூறித் தடுத்து விட்டு,
அங்கேயிருந்த உணவுத் தட்டுக்களைப் பார்த்து விட்டு,”நீங்க ரெண்டு பேரும் ஏன் சாப்பிடலை?”என்று முத்துமணி மற்றும் பூவிழியிடம் வினவினான் திருவாதிரன்.
“சாப்பிட்ற நிலைமையிலேயா இருக்கோம் நாங்க?”என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவளின் இதழ் அசைவை நன்றாக கவனித்து விட்டு,
“ஆமாம்! நீங்க மதியமும் சாப்பிடலைன்னுக் கேள்விப்பட்டேன்! இப்படியே சாப்பிடாமல் இருந்தால் இங்கேயிருந்து தப்பிச்சுப் போறதுக்கு எப்படி உடம்பில் வலு இருக்கும்?”என்றவனைத் தனது விழியை விரித்து ஆச்சரியமாக ஏறிட்டாள் பூவிழி.
அதில் தன் இதழ்களில் புன்னகை உருவாகி விட்டாலும் அதை வெளிப்படுத்தாமல்,”நீங்க இனிமேல் இங்கே தான் இருக்கப் போறீங்க! அதை யாராலும் மாத்த முடியாது! அதனால் இங்கேயிருந்து போற எண்ணத்தை மாத்திக்கிட்டுச் சாப்பிட்டுத் தெம்பாக இருங்க! அப்போ தான் கல்யாணத்தில் நல்லா தெரிய முடியும்!”என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றான் திருவாதிரன்.
உடனே அதன் படி நடக்கும் விதமாகத் தங்களது பசித்த வயிற்றுக்கு உணவைக் கொடுத்து அதை அமைதிப்படுத்தினார்கள் முத்துமணி மற்றும் பூவிழி.
அதற்குப் பிறகுத், தானும் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து உணவுண்டு முடித்து விட்டு அன்றைய தொடர் அலுவல் வேலைகள் காரணமாகத் தானும் விரைவாகவே உறங்கி விட்டிருக்க,
மறுநாள் அதிகாலையில்,”ஐயா!”என்ற வேலையாளின் அலறலைக் கேட்டதும் அடித்துப், பிடித்து எழுந்து தன் அறையிலிருந்து வெளியேறி கூடத்திற்கு வந்திருந்தான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக