தன்னுடைய தமையனின் இந்தச் செயலைத் தங்களது ஆட்கள் மூலமாகத் தனக்குத் தெரிய வந்ததுமே மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டிருந்தான் திருவாதிரன்.
அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தனது அண்ணன் வேறு ஒரு குல, கோத்திரம் இருந்த பெண்ணைக் காதலிப்பதை ஒன்றும் சிறியதாக கருதவில்லை திருவாதிரன்.
ஆனால், வீட்டிற்குத் தெரியாமல் அவளைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டு இப்போது அவளைக் கர்ப்பமும் தரிக்க வைத்திருந்த தமையனை எண்ணிக் கோபமும், ஆத்திரமும், ஆதங்கமும் கொண்டவனோ,
அதற்குப் பிறகு அவன் உடனடியாகச் செய்த செயல் என்னவென்றால், செந்தாழையின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது தான்!
அவளைப் பற்றிய தகவல்கள் இன்னும் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“நீ என்னப் பண்ணி வச்சிருக்கிறண்ணே!”என்று தன் அண்ணனின் முட்டாள்தனமான, அவசரப் புத்தியுடன் செய்தச் செயல்களை எண்ணி அவனின் மேல் கடுங்கோபம் கொண்டான் திருவாதிரன்.
ஏனென்றால், செந்தாழை, முத்துமணி மற்றும் பூவிழியின் குடும்பத்தின் தலைவர் இறந்து விட்ட பின்னர் அவர்கள் மூவரும் தங்களுக்குச் சொந்தமான காட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், செந்தாழை மற்றும் பூவிழியில் தங்கள் இருவரில் முதலில் பிறந்திருந்த பூவிழிக்கு இன்னும் திருமணம் நடக்காமல் தன்னுடைய காதலைத் தேடிக் கொண்டுக் கல்யாணத்தைச் செய்து விட்டு இப்போது அவனது வயிற்றில் கருவையும் சுமந்து கொண்டிருந்த செந்தாழையை,”என்னப் பொண்ணு இவ! இவளுக்குக் கொஞ்சம் கூடத் தன்னோட அக்கா மேலே பாசமே இல்லையா? அவளைப் பத்தி யோசிச்சுப் பார்க்காமல் தன்னோட வாழ்க்கையைத் தேடிக்கிட்டாளே!”என்று அவளை நினைத்துக் கருவிக் கொண்டவனோ,
இதற்கு மேலும் அவர்கள் இருவரும் தங்களது இரண்டு குடும்பங்களிடமும் இந்த உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லாததாலும், செந்தாழையின் வயிற்றில் வளரும் கருவைத் தங்களது பாதுகாப்பிற்காக அறிவொளியும், செந்தாழையும் கலைக்கக் கூட முடிவெடுத்து விடுவார்கள் என்று திடுக்கிட்டுப் போனதால் தான் இவர்களது கயமைத்தனத்தை இரு வீட்டாரிடமும் தெரிவித்து விட்டு அடுத்து நடக்க வேண்டியதையும் திட்டமிட்டு அதை அனைவரிடமும் அறிவுறுத்தி விட்டு வந்திருந்தவனோ,
தனது தமையன் தங்கள் குடும்ப மானத்தைக் காற்றில் பறக்க விடும் விதமாகச் செய்து வைத்திருக்கும் விஷயத்தைச் சரி செய்யும் பொறுப்பு தன் தலையில் விழுந்து விட்டதை எண்ணியும் அன்று முழுவதும் கடுப்புடன் சுற்றலானான் திருவாதிரன்.
ஆனால் தங்களது வீட்டின் வரவேற்பறையில் இருந்து கொண்டு தங்கள் வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் கேட்கிறார்கள் என்ற சங்கடமே இன்றி,
“நீங்க என்னங்க புடிச்ச வச்சப் பிள்ளையார் கணக்காக உட்கார்ந்து இருக்கீங்க? அந்தப் பெரிய நாயி அந்தப் பேச்சுப் பேசிட்டுப் போவுது! அதைக் கேட்டு எனக்கு மனசே தாங்கலை! அதை விட அவஞ் செஞ்சதை நினைச்சா இப்போவோ ஒரு முழம் கயித்துல தொங்கி நாண்டுக்கலாம் போல இருக்கு! நீங்க என்னாடான்னா விஷயத்தைக் கேட்டதுல இருந்து அப்படியே கப்புன்னு அடைச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க! என்ன மனுஷன் நீங்க? ஏங்க உங்களைத் தான்!”என்று பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டே கணவனின் கரத்தைப் பிடித்து உலுக்கினார் ராஜகுமாரி.
அதில் கோபமடைந்து,”குமாரி! முதல்ல எங் கையை விடுச் சொல்றேன்!”என்று அவரைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டார் நஞ்சுண்டன்.
உடனே தனது கையை அவரிடமிருந்து அனிச்சையாக விலக்கிக் கொண்டு,”ஆமா! என்னை மட்டும் தான் உங்களால் அடக்கி, மிரட்டி, உருட்ட முடியும்! உங்கப் பெரிய பையனையோ, இதோ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நமக்கே உத்தரவுப் போட்டுட்டுப் போன சின்னவரையோ எதுவும் சொல்லிட மாட்டீங்களே? ஊருக்கு இளைச்சவ, உங்க எல்லாருக்கும் இளிச்சவாச்சி நான் தானே!”என்று கூறியவரின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வந்து கன்னத்தில் இறங்கியது.
“ப்ச்! ஏற்கனவே உம்மகனுங்கப் பண்ணக் கூத்துல மஊளை மழுங்கிப் போயிருக்கேன்! அதைச் சூடாக்கி விட்றா மாதிரி நீ எங்காது கிட்டே வந்து ஒப்பாரி வச்சுத் தொலைக்காதே! அவனுக ரெண்டு பேரும் உன்னை மட்டுமா இளிச்சவாச்சியா ஆக்கி இருக்கானுங்க? இது எல்லாம் எனக்கும் இப்போ தானே தெரிய வந்திருக்கு! முதல்ல அழுகையை முழுங்கிட்டு மூஞ்சியைக் கழுவிட்டு வா! நம்ம அறைக்குப் போய் இதைப் பத்தி மேலே பேசுவோம்”என்று மனைவியை அதட்டி அனுப்பி வைத்தார் நஞ்சுண்டன்.
அவருக்குத் தங்களது மூத்த மகனை வெட்டிப் போடும் அளவிற்கு ஆத்திரம் இருந்தது!
ஏனென்றால் இளையவன் தனது தந்தையின் அம்சம் என்பதாலேயே அவன் தான் தங்களது குடும்பம் கட்டிகஅ காப்பாற்றி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை எப்பொழுது வேண்டுமானாலும் அவிழ்த்துக் கொண்டுச் சென்று விடுவான் என்றெண்ணித் தான் தன் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளாத குறையாகத் திருவாதிரனின் செயல்பாடுகளை இவ்வளவு நாட்களாக கண்காணித்து வந்து கொண்டிருந்தார் நஞ்சுண்டன்.
ஆனால் அதற்கு மாறாக அறிவொளியின் மீது அதீத நம்பிக்கையும், அவன் தங்களது வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசவே தயங்குவான் என்று அவனுக்குச் சுதந்திரம் கொடுத்து இருந்தார்கள் அவரும், அவரது மனைவியும்.
ஆனால் அவன் தான் இவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து இருக்கிறான் என்பதைப் பெற்றோர் இருவராலும் நம்பவே முடியவில்லை எனலாம்!
அப்போது தனது முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்த மனைவியுடன் சேர்ந்து தங்களது அறைக்குப் போய்க் கட்டிலில் அமர்ந்து கொண்டு,”இவம் இப்படி பண்ணுவான்னு நானும் எதிர்பாக்கலை குமாரி! நாம ரெண்டு பேரும் சின்னவனை விடப் பெரியவம் மேலே தான் அதிக நம்பிக்கை வச்சிருந்தோம்! ஆனால் அதைப் பொய்யாக்கி நம்ம மூஞ்சியில் கரியைப் பூசிப் போட்டானே?”என்று தானும் மனைவியிடம் மனம் வெம்பிப் போன மனதுடன் கூறினார் நஞ்சுண்டன்.
“ஆமாங்க. அந்த உண்மைத் தெரிஞ்சதில் இருந்து நீங்க ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இடிஞ்சுப் போயிருந்தீங்க! நான் தான் மடச்சிக் கணக்காக மனசுக் கேட்காமல் உங்களை ஏதோதோ ஏசிப்புட்டேன்! என்ன மன்னிச்சிருங்க”என்றவரிடம்,
“ப்ச்! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் குமாரி! இப்போ அடுத்து இந்த விஷயத்தில் என்னப் பண்ணப் போறோம்?”என்று தீவிரமான முகபாவனையுடன் கேட்க,
“இனிமேல் நாம என்னத்தப் பண்றதுங்க? அதேன் நம்ம வீட்டுப் பெரிய மனுஷரு சட்டமாகச் சொல்லிட்டுப் போயாச்சே! அதை தான் கேட்டு நடக்கோனும்!”என்று எரிச்சல் மற்றும் ஆதங்கத்துடன் மொழிந்தார் ராஜகுமாரி.
“நாம அவங்கிட்டே எது பேசினாலும் பிரயோஜனம் இல்லை! இப்போதைக்கு உன்னால் தான் இதுக்கு ஒரு முடிவுக் கட்ட முடியும்!”என்ற கணவரை விழி விரித்துப் பார்த்து,
“என்னாலேயா? நான் என்னத்தப் பண்ணிப் போடுவேனுங்க? உங்க ரெண்டு மவனுவளும் பொண்ணுங்களை மதிக்குறாங்கன்னு தான் பேரு! நானும் ஒரு பொம்பளை தானே? அப்போ நாம ஒரு வேலை செய்றதுக்கு முன்னாடி நம்ம அம்மாகிட்டே உத்தரவு கேட்கனும்னுத் தோணுதா? அதை விட்டுட்டு எனக்கென்ன - ன்னு ஊரில் இருக்கிற கண்டதையும் நடு வீட்டுக்குள்ளே கூட்டிட்டு வந்திருக்கிறானுங்க!”எனப் பொருமத் தொடங்கவும்,
“நான் சொல்றதை முதல்ல முழுசாக கேளுத்தா!”என்றதுமே தனது வாய்க்குப் பூட்டைப் போட்டுக் கொண்டுக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அவரை ஏறிட்டார் ராஜகுமாரி.
“எப்படியும் இந்தக் கல்யாணத்தை நடத்தி முடிக்கிற விஷயத்துல இருந்து இளையவன் கண்டிப்பாகப் பின் வாங்க மாட்டான்! அதே மாதிரி மூத்தவன் பேசிட்டுப் போனதை வச்சுப் பார்த்தால் அவேன் அந்தப் பொண்ணுக் கூடச் சும்மாப் பொழுதுபோக்குக்காகப் பழகலைன்னு உறுதியாகத் தெரிஞ்சிருச்சு! அதுவும் இல்லாமல் அவங்குழந்தை அதோட வயித்துல வளருது! அந்தப் பாசம் வேற அவனுக்கு இருக்கும்! அதனால் நாம இப்போதைக்கு ஒரே ஒரு விஷயத்தை தான் முயற்சி செஞ்சிப் பார்க்க முடியும்!”என்றவுடன் தங்களுக்கு ஏதோ வழி கிடைத்து விட்டது என்பதை உணர்ந்து, ஆர்வம் தாங்காமல்,
“என்னதுங்க?”என்று கண்கள் மின்னக் கேட்டவரிடம்,
“அதை நீ தான் பண்ண முடியும்”எனத் தீர்க்கமாக உரைத்தார் நஞ்சுண்டன்.
உடனே,”நானா?”என்றார் வியப்புடன்.
“ம்ஹ்ம். எனக்குத் தெரிஞ்சு நம்மச் சின்னவன் நாளையில் இருந்து கல்யாண வேலையை ஆரம்பிக்க முடிவு செஞ்சிருவேன்! நாம எப்படியாவது அவங்கிட்டே அதுக்குக் கண்டிப்பாக ஒரு வாரம் தேவைன்னுத் தன்மையாக கேட்டுப் பார்ப்போம்! அதுக்கு மட்டும் அவேன் சம்மதிச்சிட்டான்னா அந்த ஒரு வாரத்துல நீ எப்படியாவது அந்த முத்துமணியையும், அதோட பொண்ணுங்களையும் மண்டையைக் கழுவி அவங்களாகவே இந்த வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் கண் காணாத இடத்துக்குப் போகிற மாதிரி செஞ்சிரு! இதை நானே செய்யலாம் தான்! ஆனால் அதுங்க மூனும் பொம்பளைங்கப் பாரு! அதனால் தான் இதை உம்பொறுப்புல கொடுக்கிறேன்! நீ இதை நம்மக் குடும்ப கௌரவத்துக்காகச் செய்வியாத்தா?”என்று மனைவியிடம் கெஞ்சலாக வினவ,
அதைக் கேட்டதும் தனக்குள் புது இரத்தம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வுடன்,”கண்டிப்பாக செய்வேன்ங்க! நம்மக் குடும்ப கௌரவத்தை விட எனக்கு வேற என்ன உசத்தியாக இருக்கப் போவுது? நீங்க இனிமேல் இதைப் பத்திக் கவலைப்படாதீய!”என்று அவருக்கு வாக்களித்தார் ராஜகுமாரி.
ஆனால் அவர்கள் இருவருக்குமே தெரியாது!
முத்துமணியும், அவரது மற்ற இரண்டு மகள்களும் கூட அவர்களின் எண்ணத்தின் போக்கில் தான் தாங்களும் சிந்தித்து முடிவெடுத்து இருந்தார்கள்.
சிறிது நேரத்திற்கு முன்னர் எழுந்து அமர்ந்து,”நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்ல?”எனத் தன்னுடைய தாய் மற்றும் தமக்கையைப் பார்த்துக் கேவலுடன் கேட்டிருந்தாள் செந்தாழை.
அதைக் கேட்டதும்,“ஆமாம்”என்று அவர்கள் இருவருமே ஒன்றாக விரக்தியுடன் பதிலளித்து விடவும்,
“அப்போ நாம இங்கேயிருந்து நிரந்தரமாக கிளம்பிப் போயிடுவோமா? இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, எங்கேயாவது கண் காணாமல் போயிடலாமா?”என்றிருந்தாள் செந்தாழை.
“எங்கே போகச் சொல்றவ? இந்த வீட்டுச் சின்ன மகராசன் சொல்லிட்டுப் போனது உனக்கு ஞாபகத்துல இல்லையோ? நாம எங்கே போனாலும் அவருக்குத் தெரிஞ்சு நம்மளைக் கட்டித் தூக்கிட்டு வந்துருவாகப் பார்த்துக்கோ! நீ இதை எங்க கிட்ட முதல்லயே சொல்லி இருந்தாலாவது ஏதாவது பண்ணி இருக்கலாம்! ஆனால் நீ தான் அமுக்குனியாக இருந்துக்கிட்டியே! அதான், அந்தத் திரு ஐயா காதுக்கு விஷயம் போனதுமே நம்மளை இங்கே கூட்டிட்டு வந்துட்டாக! ஏன்னா, என்ன இருந்தாலும் உன் வயித்துல வளர்றது அவுக குடும்ப ரத்தமாச்சே! அதனால் அவுக நம்மளைக் கண்கொத்திப் பாம்பாக கவனிச்சிட்டு இருப்பாக! அவரைத் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது!”என்று அவளிடம் உறுதியாக உரைத்து இருந்தாள் பூவிழி.
அதில்,”அவரைப் பத்தி நீ எப்படி இவ்வளவு உறுதியாக, ஆழமாகத் தெரிஞ்சு வச்சிருக்கிற?”என்று தன்னிடம் கேட்ட தங்கையைத் திகைத்துப் போய் நோக்கினாள் பெண்ணவள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக