முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 5

 


இங்கே தனது அறைக் கட்டிலில் அமர்ந்து கொண்டுத் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த வாரிசு அறிவொளி. 


அவனுக்குச் சற்று நேரத்திற்கு முன்பாகத் தன் தம்பி செய்து வைத்து விட்டுச் சென்றிருந்த அதிரடிச் செயல்கள் தனக்கு நன்மையையே அளித்திருந்த போதிலும், தனது தனிப்பட்ட விஷயத்தில் அவன் தலையிட்டு, அதன் அனைத்துப் பொறுப்புகளையும் தனதாக்கிக் கொண்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை இவனால்! 


ஏனென்றால், தனக்கு இளவலாக இருந்து கொண்டுத் தங்களது தாத்தாவின் உருவத்தில், குணத்தில் மட்டுமில்லாமல் அவரது ஜாதகத்திலும் எந்தப் பிசிறும் இல்லாத ஒற்றுமை கொண்டிருந்த திருவாதிரனுக்குத் தன் பெற்றோர் தன்னை விட முதல் மரியாதை கொடுப்பதைக் கண்டு அதில் சிறு வயதிலிருந்தே அதிருப்தி அடைந்திருந்தான் அறிவொளி. 


அதுவும் ஒரு படி மேலே போய் அவனுக்குத் தான், தங்களது வீட்டு மற்றும் சொத்துக்களைப் பெருக்கிக், காபந்து செய்யும் தகுதி இருக்கிறது என்று அவனது ஜாதகத்தைப் பார்த்து விட்டு ஜோசியர் வேறு சொல்லி விடவும், 


அதைக் கேட்டதில் இருந்து தங்களது பெற்றோருக்குத் திருவாதிரனின் மீது இன்னும் மதிப்பும், மரியாதையும் கூடிற்று! 


அதைத் தனது பெற்றோரிடம்,”அதென்ன அவனுக்கு மட்டும் தான் எல்லா உரிமையும், பொறுப்பும் இருக்கனுமா? நியாயமாகப் பார்த்தால் அதையெல்லாம் எனக்குத் தானே வந்து ஆகனும்? நான் தானே இந்த வீட்டுக்கு மூத்த வாரிசு? எனக்குத் தான் எல்லா பொறுப்பும் வேணும்!”என்று கறாராகச் சொல்லி விட்டிருந்தான் அறிவொளி. 


அவனது பொருமலும், உரிமைப் போராட்டமும் நியாயம் தானே என்று தானும் தமையனுக்கு உறுதுணையாக நின்று கொண்டு,”அண்ணே கேட்கிறதும் உதிசமாகத் தானே இருக்கு? நீங்க அதைப் பரிசீலனைப் பண்ணுங்களேன்! எனக்கு இதில் எல்லாம் எந்த ஆர்வமும் இல்லை!”என்று அவனுக்காகத் தங்களது பெற்றோரிடம் வக்காலத்து வாங்கினான் திருவாதிரன்.


அவனே தனக்கு ஆர்வம் இல்லை என்று விலகிக் கொள்வதைப் போல் சொன்னப் பிறகு அவனை இழுத்துப் பிடித்துத் தங்களது சொத்துக்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவனிடம் தர முடியாது என்றுப் புரிந்து கொண்டு அனைத்துப் பொறுப்புகளையும் தங்களது மூத்தப் புத்திரன் அறிவொளியின் மேற்பார்வையில் விட்டு, விட்டு விட்டார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


ஆனால் அவர்கள் இருவரும் அரை மனதாகத் தான் தங்களது மகனுக்குப் பொறுப்புக்களை வழங்கி இருந்தனர். 


ஏனென்றால் அவனுக்குத் தங்களது சொத்துக்களை எப்படி விரிவுபடுத்துவது என்று நிச்சயமாகத் தெரியாது என்றும், அவனுக்கு அந்தக் கொடுப்பினை இல்லையென்றும் தங்களது குடும்பத்தின் ஆஸ்தான ஜோசியரின் வார்த்தைகள் தான் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரிக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்தது. 


ஆனாலும், தங்களது பெரிய மகனுடைய உரிமைப் போராட்டத்திற்கும், அவனுக்கு ஆதரவளித்த சின்ன மகனின் உறுதிக்கும் இடையில் மாட்டிக் கொண்டுத் தவித்ததால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர் இருவரும். 


தங்களது குடும்பத் தொழில்களான வயல் வேலைகள், நெற்கதிர்கள் அறுவடை, மற்றும் வேலையாட்கள் அனைவருக்கும் கூலி கொடுப்பது மட்டுமின்றி கால்நடைகள் அனைத்தையும் பராமரிக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவது, தோப்புக்களில் இருக்கும் மரங்களில் இருந்து எடுக்கப்படும் பொருட்களைச் சந்தைக்கு அனுப்பி வைப்பது, மற்றும் அவற்றை மற்ற ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்வது அதில் ஏதாவது சிக்கல்கள், சண்டைகள், குழப்பங்கள் நடந்தால் அவற்றையெல்லாம் பைசல் செய்வது என்ற இந்த வேலைகள் எல்லாம் முதல் மூன்று மாதங்களிலேயே தனது பொறுமையை மிகவும் சோதித்து விட்டதை எண்ணி அவசரப்பட்டு விட்டோமோ என்று தனது மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான் அறிவொளி. 


அந்த நேரத்தில் தனது கல்லூரிப் படிப்பின் இறுதி வருடத்தில் இருந்ததால் அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் திருவாதிரன். 


அதனால் அவனுக்குத் தமையனின் போராட்டங்கள் யாவும் தெரிந்திருக்கவில்லை. 


படிப்பு விஷயத்திலும் தம்பியிடம் தோத்துப் போயிருந்தான் அறிவொளி.


ஆமாம்! அவனுக்குப் பள்ளிக் காலத்திலேயே படிப்பும் ஏறவில்லை! 


இவர்களது கிராமத்தில் அவ்வளவாகப் பள்ளிக் கூடங்களும், கல்லூரியும் ஆரம்பித்து இருக்கவில்லை! 


அதை ஆரம்பிக்க முன்னெடுக்கவோ, அனுமதிக்கவோ அறிவொளி மற்றும் திருவாதிரனின் மூத்த தலைமுறையினர் முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை! 


அதனாலேயே அவர்களுக்கு அடுத்த தலைமுறையான நஞ்சுண்டனும் அதைப் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் இருந்து விட்டார். 


அது ஒரு காரணம் என்றாலும் கூட, அங்குப் பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் வந்து விட்டால் கிராம மக்களுக்குத் தங்கள் மேலிருக்கும் மரியாதையும், பயமும் இல்லாமல் போய் விடும் என்ற மற்றொரு உறுதியான காரணத்தாலேயே அதைப் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டு விட்டார் நஞ்சுண்டன். 


ஆனால் தனக்கு அடுத்த தலைமுறையான தனது மகன்களுக்குத் தங்களது சொத்துக்களைக் கட்டிக் காக்கும் அளவிற்கு அறிவும், தெளிவும், நாசூக்கும் இருக்க வேண்டும் என்றெண்ணியதால் அறிவொளி மற்றும் திருவாதிரனைப் பக்கத்தில் இருந்த நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைத்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


முதலில் சில வருடங்கள் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அறிவொளிக்கு ஏனோ அதற்குப் பிறகுப் படிப்பில் நாட்டமின்றிப் போய் விட்டது. 


ஏனென்றால் தங்களது ஊரில் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்றிருக்கும் போது இங்கேயோ தன்னை அனைவரும் கிண்டல் செய்வதையும், மட்டம் தட்டுவதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவனால்! 


அதுவும் இல்லாமல் அந்த வீட்டின் மூத்த வாரிசாகப் பிறந்தவனோ, ‘ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’ - யாக வளர்க்கப்பட்டவனுக்கு இங்கு இருப்பவர்களிடம் எல்லாம் இப்படி கேவலப்பட வேண்டுமா என்று,”நான் இனிமேல் பள்ளியோடத்துக்குப் போக மாட்டேன்! அங்கே இருக்கவனுக எல்லாம் என் கால் தூசுக்குப் பெற மாட்டானுக! ஆனால் அவனுங்க என்னை எப்படி எல்லாம் கிண்டல், கேலி பண்ணுதாகன்னுத் தெரியுமா? நான் அவனுகளைக் கோபத்தில் ஏதாவது பண்ணிட்டால் உங்களுக்குத் தான் அவமானம்! அதனால் தான் சொல்றேன்! நான் இனிமேல் படிக்கப் போவலை!”எனத் தன் பெற்றோரிடம் தீர்க்கமாக உரைத்து விட்டு அத்துடன் தனது படிப்பிற்கு முழுக்குப் போட்டு விட்டான் அறிவொளி. 


ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது படிப்பில் முழு மூச்சாக இறங்கி விட்டிருந்தான் திருவாதிரன். 


அவனுக்குப் பட்டயக் கணக்காளர் படிப்பில் ஆர்வம் இருந்ததாலும், அதிலிருந்து கிடைக்கும் அறிவுத் தங்களது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டும் அந்தப் படிப்பில் பட்டம் பெற்று விட்டிருந்தான்.


அதே சமயம், தனது தமையன் தொழிலைக் கவனிப்பதில் சிரமப்படுவதைக் கண்டுக் கொண்டுத், தானே முன் வந்து அவனுக்கு உதவிக்கரம் நீட்டினான் திருவாதிரன். 


அதில் மனம் இலேசாகி விடக் காலப்போக்கில் தம்பியின் திறமையைக் கண்டு மெச்சி விட்டு,”இனிமேல் இதையெல்லாம் நீயே பார்த்துக்கோ! எனக்கு மூச்சு முட்டுது!”எனப் பொறுப்பை அவனிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான் அறிவொளி. 


அதை அறிந்தவுடன் தான் அவர்களது பெற்றோரான நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரிக்கு நிம்மதியாக இருந்தது. 


அதற்குப் பிறகு அவர்களது தொழிலும், குடும்பமும் அந்த ஊரில் இன்னும் அதிக வரவேற்பையும், மதிப்பையும், செல்வாக்கையும் பெற்று விட்டிருக்க, 


கடைசியாகத் தங்களது குடும்ப ஜோசியர் கூறியது உண்மை என்பதை தங்களது கண்களாலேயே பார்த்து அறிந்து கொண்டதும் அவரை வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு வயிராற உணவிட்டுப், பை நிறையப் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் நஞ்சுண்டனும், ராஜகுமாரியும். 


அதைக் கண்டுப் பழையக் கோபமும், ஆத்திரமும் மீண்டும் வந்து ஓட்டிக் கொண்டது அறிவொளிக்கு! 


ஆனாலும் தங்களது குடும்பத்தின் நலமும், வளமும் தம்பியின் தலையில் இருப்பதாலேயே தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு இருக்கலானான். 


அதே நேரத்தில் திருவாதிரனுக்கு முன்னர் தங்களது தொழில்களைப் பார்வையிடும் சமயத்தில் தங்களது காட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செந்தாழையைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது அறிவொளியால். 


அந்தக் கிராமத்திலேயே கொஞ்சம் நிறம் அதிகமாக இருந்தவள் அவள் மட்டும் தான் எனலாம்!


அவளது தமக்கையானப் பூவிழிக் கூடக் கறுப்பாகத் தான் இருக்கச், செந்தாழையின் சிவந்த நிறம் தான் அவனை முதலில் ஈர்த்தது என்றும் கூறலாம். 


அதனாலேயே அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே குட்டிப் போட்டப் பூனையைப் போல் அங்கேயே மேற்பார்வையிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான் அறிவொளி. 


தங்களது முதலாளியின் பார்வை தன்னை வட்டமிடுவதைச் சில நாட்கள் கழித்து தான் கவனிக்கத் தொடங்கி இருந்தாள் செந்தாழை. 


அதில் முதலில் மருண்டு போனவளோ, அதற்குப் பிறகு, அவனது பார்வை அங்கே இருக்கும் மற்றப் பெண்களைத் தவிர்த்து தன்னில் நிலைத்து இருப்பதை எண்ணி மமதை தோன்றியது அவளுக்குள். 


அதேபோல், அவனை வெகு நாட்களுக்குச் சுற்றலில் விட்டு, விட்டு அதற்குப் பின் தான், அவனிடம் தன்னுடைய மறைமுகச் சம்மத்ததைத் தெரிவித்து விட்டிருந்தாள் செந்தாழை. 


அதற்குப் பிறகுச் சொல்லவும் வேண்டுமா? அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துக் காதல் பாடம் பயில்வதை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் பார்த்துக் கொண்டார்கள் இருவரும். 


அதே நேரத்தில்,”எனக்குக் கணக்கு, வழக்குச் சம்பந்தப்பட்ட வேலையெல்லாம் வேண்டாம் திரு! நீ தானே அதைப் பத்தின படிப்புப் படிச்சு இருக்கிற? அதனால் நான் நம்மத் தோப்பு அப்பறம் கருவேலங் காட்டு வேலையை எல்லாம் மேற்பார்வைப் பார்த்துக்கிறேன்”எனத் தம்பிக்கும், பெற்றோருக்கும் சந்தேகம் வராத அளவிற்குச் சொல்லி விட்டுச் செந்தாழையுடன் தனது காதல் உறவைத் தடையின்றிப், பயமின்றி வளர்க்கத் தொடங்கி விட்டான் அறிவொளி. 


அதேபோல் தங்களது வீட்டுப் பெண் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையின் விளைவாகவும், இன்னும் அதிக நேரம் வேலை செய்தால் தங்களுக்குக் கூலி அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தாலும் செந்தாழையின் போக்கைக் கவனிக்கத் தவறி விட்டனர் முத்துமணி மற்றும் பூவிழி. 


என்ன தான், அறிவொளியும், செந்தாழையும் தங்களது குடும்பத்திற்கு உண்மையாக இல்லாமல் இருந்து விட்டாலும் கூடத் தங்களது காதல் உறவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள். 


அதனாலேயே பெண்ணவளை ஏமாற்றாமல், அதே சமயம் யாருக்கும் தெரியாமல் அவளைத் திருமணம் செய்து விட்டிருந்தான் அறிவொளி. 


அதேபோல் தன்னவனுக்கு மனதளவிலும், உடலளவிலும் உண்மையாக இருக்கலானாள் செந்தாழை. 


அவர்கள் தங்களது அந்தக் காதல் மற்றும் திருமண உறவின் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்று விதி முடிவெடுத்து விட்டது போலும்! 



தங்களது தொழிலை எடுத்து நடத்தி அதில் ஒரு நிலையை அடைந்து தங்களது குடும்பத்திற்குக் கிராம மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தப் பிறகுத் தான் தனது தமையனின் வித்தியாசமான நடத்தையையும், செயல்களையும் கவனித்துக், கண்காணிக்கத் தொடங்கி இருந்தான் திருவாதிரன். 


ஆனால் அவன் அதைச் செயல்படுத்த தாமதமாக்கி விட்டிருந்ததால் அறிவொளி மற்றும் செந்தாழையின் குழந்தை தனது இருப்பை மிகவும் ஸ்திரமாகத் தனது தாய்க்குப் பலமாக அறிவித்து விட்டிருந்தது. 


ஆம்! 


அறிவொளிக்கும், செந்தாழைக்கும் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவர்களது அதீதக் காதல் பிணைப்பின் விளைவாகச் செந்தாழையின் மணி வயிற்றில் அறிவொளியின் மூத்த வாரிசு உதித்து விட்டிருந்தது! 


                    - தொடரும்


பட்டயக் கணக்காளர் - Chartered Accountant


பணி - நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்தல், வரி தாக்கல் செய்தல் மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குதல். 


© Google


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...