அவனது சிம்மக் குரலைக் கேட்டு அங்கேயிருந்த அனைவருமே வெலவெலத்துப் போய் விட்டனர்.
“நீங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க? நான் தான் பேசிட்டு இருக்கேன்ல? அதுக்குள்ளே எதுக்கு இப்படி நடந்துக்கிறீங்க? முதல்ல எழுந்து அப்படித் தள்ளிப் போய் நில்லுங்க!”என்று முத்துமணிக்கு உத்தரவிட்டு, அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த,
அவரோ தனது மகள்களிடம் சென்று அவர்களது கரங்களைப் பிடித்துக் கொண்டு அசையாமல் நின்று விட்டார்.
தனது தமையனிடம் வந்து,”அந்தப் பொண்ணுக் கர்ப்பம் ஆனதுல உனக்கும் சரிசமமானப் பங்கு இருக்கு தானே?”என்று கடுமையான குரலில் வினவினான் திருவாதிரன்.
அதில் திடுக்கிட்டாலும் கூட,”ஆமாம்”என்று அனைவரின் முன்னிலையிலும் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டிருந்தான் அறிவொளி.
அதைக் கேட்டதுமே,‘இவர் அதற்குக் காரணமாக இருந்தாலும் சபையில், தான் காரணம் இல்லை என்று பொய்யுரைத்து இருந்திருந்தால் கூடத் தங்கள் சின்ன மகனிடம், எதையாவது சொல்லிச், சமாளித்து இந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை இங்கேயிருந்து அடித்து விரட்டி விட்டிருக்கலாமே? ஆனால் தங்கள் பெரிய மகனே பகிரங்கமாக உண்மையை ஒப்புக் கொண்டுத் தங்களைத் தலைக் குனிய வைத்து விட்டானே!'என்று அவனை நோக்கிக் கொடூரமான கோபப் பார்வையை வீசினர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
ஆனால் அவன் தன்னுடைய வாயாலேயே உண்மையை ஒப்புக் கொண்டதைக் கண்டு இவ்வளவு நேரமாகப் பயத்தில் தன்னுடைய உயிர்ச் சில கணங்கள் உடலை விட்டு நீங்கி இப்போது தான் தனது நெஞ்சுக் கூட்டை வந்தடைந்ததைப் போல் நிம்மதியுற்றாள் செந்தாழை.
அதேபோல், அறிவொளியின் வாக்குமூலத்தைக் கேட்டப் பிறகு, இவர்களுக்கும், தங்களுக்கும் எதிலுமே ஏணி வைத்தாலும் எட்டாது என்பதை நன்றாக அறிவாள் அவள்!
அப்படி இருக்கும் போது, அவனது இந்த உண்மைத் தன்மையையும், தைரியத்தையும் கண்டு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது பூவிழிக்கு!
ஆனால், இவர்கள் இருவரை விடவும் முத்துமணிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்து விடும் போலாகி விட்டிருந்தது.
ஏனெனில் அவரால் இங்கே நடப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை! நம்பவும் முடியவில்லை!
“என்ன உன் பெரிய மயன் இப்படிபோட்டு உடைச்சிட்டான்? அதுவும் சின்னவன் முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிட்டானே! நம்மளைத் தனியாக கூப்பிட்டுப் பேசி இருக்கலாம்ல? ஒருவேளை அந்தப் பொண்ணை இவன் உண்மையாகவே காதலிக்கிறானோ?”எனத் தன் மனையாளிடம் முணுமுணுப்பாய்க் கேட்டார் நஞ்சுண்டன்.
உடனே,”ஆமாங்க! படுபாவிப் பய! நம்மக் கிட்டே இதைப் பத்தி மூச்சுக் கூட விடாமல் இருந்துட்டான் பாருங்களேன்!”என்று தானும் பொருமினார் ராஜகுமாரி.
“அம்மா! அப்பா! நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கனும் விருப்பப்பட்றேன்!”என்று அவர்களைப் பார்த்து தீர்க்கமாக கூறியிருந்தான் திருவாதிரன்.
இந்தச் சமயத்தில் எதைப் பற்றிக் கேட்கப் போகிறான் என்றெண்ணி எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு அவனை மிரண்டுப் போய்ப் பார்த்தார்கள் அவனது பெற்றோர்.
“நம்மக் குடும்பத்தோட ஆணிவேரே பொண்ணுங்க தான்னுத் தாத்தா எப்பவும் சொல்லுவாருல்ல?”என்று அவர்களிடம் வினவியவனை விதிர்த்துப் போய் ஏறிட்டு,
“ஆமாப்பா”என்றிருந்தனர்.
“அப்படி இருக்கும் போது நம்ம வீட்டுப் பையன் ஒரு பொண்ணைக் காதலிச்சுக், கல்யாணம் செய்துக்கிட்டது மட்டுமில்லாமல், அவளைக் கர்ப்பமாகவும் ஆக்கி இருக்கான்! அப்படின்னா அந்தப் பொண்ணோட பொறுப்பையும், அவ வயித்துல வளர்றக் குழந்தையோட பொறுப்பையும், அண்ணாவும், நாமளும் தானே ஏத்துக்கனும்?”என்று அழுத்தமாக கேட்டவனைக் கையாலாகாத தனத்துடன் நோக்கினார்கள் நஞ்சுண்டனும், ராஜகுமாரியும்.
அவர்கள் தனக்குப் பதில் கூறாமல் இருப்பதைக் கண்டுக் கோப மூச்சுக்களை வெளியிட்டு அவர்களைக் கண்டனமாகப் பார்க்கவும்,
அதில் அவர்கள் தங்களது மகனின் கூற்றிற்கு அடி பணிந்ததைப் போன்று,”ஆமாப்பா. அந்தப் பொறுப்பை உங்கண்ணனும், நாமளும் தான் ஏத்துக்கனும்!”என்று ஒப்புதலுடன் மொழிய,
“ம்ஹ்ம். அப்போ அண்ணனுக்கும், இந்தப் பொண்ணுக்கும் ஊரறியக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கான ஏற்பாட்டைச் சீக்கிரமே ஆரம்பிப்போம்!”என்று தனது குடும்பத்திடம் அறிவுறுத்தி விட்டு,
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சு வச்சிடலாம். அது தான், வயித்துல இருக்கிறக் குழந்தைக்கு நல்லது! அதே மாதிரி, நீங்க மூனு பேரும் இங்கேயே தங்கிடுங்க!”என்று செந்தாழையிடமும், அவளது குடும்ப உறுப்பினர்களிடமும் கட்டளையாக கூறியிருந்தான் திருவாதிரன்.
அதில் பதற்றம் தொற்றிக் கொள்ள,”ஐயா! அதெல்லாம் வேண்டாம்”என்ற முத்துமணியை,
“உஷ்! நீங்க எதுவும் பேசக் கூடாது! உங்கப் பொண்ணு வயித்துல வளந்துட்டு இருக்கிறது எங்க வீட்டு மூத்த வாரிசோட குழந்தை! அதனால் இந்தக் கல்யாணம் நடந்து தான் ஆகும்! அதை யாராலும் தடுக்க முடியாது!”என்று கூறி வாயடைக்கச் செய்து விட்டவனோ,
அவருக்கு அருகில் நின்றிருந்த பூவிழியின் முகத்திலும், கண்களிலும் ஒரு சில கணங்களில் தோன்றி மறைந்த சீற்றத்தைக் கண்டு கொண்டான் திருவாதிரன்.
அவன் தன்னைக் கண்டு கொண்டதை அறிந்ததுமே தனது தலையைக் குனிந்து கொண்டாள் பூவிழி.
அது அவனுக்குக் கடுப்பைக் கிளப்பி விடவும் அவளிடமிருந்து தனது பார்வையை விலக்கிக் கொண்டு அங்கேயிருந்த வேலையாட்களிடம் இவர்கள் மூவரையும் வசதியான அறையில் தங்க வைத்து, அவர்களது உடைமைகளையும் எடுத்துக் கொண்டுப் போய் அங்கே வைத்து விட்டு வருமாறு உத்தரவு பிறப்பித்து விட்டான்.
அவனது வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசும் துணிவு அங்கே இருக்கும் அவனது பெற்றோருக்குக் கூட இல்லை என்பதாலும், அவனைத் தங்களால் எதிர்த்துக் கேள்விக் கேட்கவும் முடியாது, ஏனெனில் தங்கள் மீதும் தவறு இருக்கிறது என்றக் கழிவிரக்கத்தாலும் அவனது வேலையாட்களைப் பின் தொடர்ந்து போனார்கள் முத்துமணி, செந்தாழை மற்றும் பூவிழி.
அவர்கள் சென்றதுமே,”உங்களுக்குக் கல்யாணம் நடந்து முடியிற வரைக்கும் நீ அவங்க யாரையும் பார்த்துப் பேசக் கூடாது!”என்று தமையனுக்குக் கட்டளையிட்டு விட்டு,
“அந்தப் பொண்ணு இனிமேல் நம்ம வீட்டில் தான் இருக்கனும்! அதுவும் அந்தப் பொண்ணோட வீட்டாளுங்களும் நம்ம வீட்டில் தான் தங்கனும்!”என்ற இளைய மகனைக் கண்டுக் கடுங்கோபம் எழுந்தாலும் அதை அவனிடம் வெளிப்படையாக காட்டும் துணிவில்லை அவனது பெற்றோரான நஞ்சுண்டனும், ராஜகுமாரியும்.
ஏனெனில் தங்கள் குடும்பத்தின் இளைய, இரண்டாம் வாரிசு என்றாலும் கூட நஞ்சுண்டனின் தந்தையின் ஜாதக அம்சத்தில் பிறந்திருந்ததாலேயே அவனை எதிர்த்துப் பேச வாய் எடுக்காமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
“நான் அந்தப் பக்கம் போனதுக்கு அப்பறம் நீங்க இந்தப் பக்கம் அவங்க மூனு பேரையும் எதுவும் பேசக் கூடாது!”என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறினான் திருவாதிரன்.
அவனது ஜீப்பின் டயர்ச் சத்தம் தேய்ந்த பின்னர் தன் மூத்த மகனிடம் வந்து ஆங்காரத்துடன் அவனது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு,
“என்னடா நான் உனக்குச் சோறைத் தானே போட்டு வளத்தேன்! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லா உட்கார்ந்து குடல் இல்லையா? ரத்தம் இல்லையான்னுப் பகுமானமாக கேட்டுட்டு இருந்தியே! உன்னை நல்லா பார்த்துப், பார்த்துச், செல்லம் கொடுத்து வளத்ததுக்கு எங்களுக்குக் கைம்மாறாக என்னத்தைப் பண்ணித் தந்து இருக்கிறன்னுப் பாரு! அங்கே இடிஞ்சுப் போய் உட்கார்ந்து இருக்கிற உங்கப்பனைப் பாருடா! நாயே! இனிமேல் அந்த மனுஷனை இந்த ஊர் எப்படி மதிக்கும்? ஒரு நாதியும் அவரைப் பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கக் கூப்பிடுமா இனி? இதையெல்லாம் யோசிச்சுத் தராதரம் பார்த்தாவது எவ கூடயாவது ஊர் சுத்தி இருக்க வேண்டியது தானே? இருந்துமிருந்தும் உனக்கு அந்தச் சிறுக்கியைத் தான் புடிச்சு இருந்துச்சா? அதுவுமில்லாமல் அவளை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் வேற செஞ்சி இருக்கிற! அப்படித் தானே? உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்! உன்னைச் சொல்லி மட்டும் குத்தம் இல்லை! அந்தச் சிறுக்கிக்கு எங்கே போச்சு அறிவு? அவ உன் கூடப் பழகும் போது அவளுக்குத் தன்னோட தராதரம் தெரிஞ்சு இருக்க வேண்டாம்? நீ கூப்பிட்டதும் உன் கூட வந்துட்டா பாரு! அதுதான்டா அவளோட புத்தி!”என்ற அன்னையிடம்,
“ம்மா! கொஞ்சம் நிறுத்துறீங்களா? நான் நம்ம வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செஞ்சி அதனால் குழந்தை உருவாகிடுச்சுன்றக் குற்ற உணர்ச்சியால் தான் இவ்வளவு நேரமாகத் தம்பிப் பேசினதுக்கும், நீங்கப் பேசினதுக்கும் அமைதியாக வாயை மூடிக்கிட்டு இருந்தேன்! ஆனால் நீங்க இப்போ பேசிட்டு இருக்கிறது என்னோட பொண்டாட்டியைப் பத்தி! அதை முதல்ல தெளிவாக ஞாபகம் வச்சுக்கோங்க! அதுவுமில்லாமல் நம்ம வம்சத்தோட வழக்கப்படி இந்தச் சொத்தில் என்னோட பொண்டாட்டிக்கும், திருவோட பொண்டாட்டிக்கும் தான் பங்கு இருக்கு! அதையும் நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு இனிமேல் வார்த்தையை விடுங்க!”என்று அவருக்கும், அங்கு நாற்காலியில் இடிந்து போய் அமர்ந்திருக்கும் தனது தந்தைக்கும் எச்சரிக்கை விடுத்து விட்டுத் தனது அறைக்குச் சென்று விட்டான் அறிவொளி.
அதே சமயம், ஒரே நாளில் தங்களது தலைவிதி மொத்தமாக மாறி விட்டதைக் கண்டு அவர்கள் வீட்டிலிருந்த அந்தப் பெரிய அறையில் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தத் தாயும், அவரது இளம் மகள்களும் மூலைக்கொரு ஆளாக உட்கார்ந்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.
தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டுத்,”கல்யாணம் நடந்துடுச்சு தானே? தாலி எங்கே காணோம்?”என்று தங்கையின் கேட்டது மட்டுமின்றி அவளது கழுத்தையும் ஆராய்ச்சியுடன் பார்த்தாள் பூவிழி.
உடனே தனது கழுத்தில் போட்டிருந்த மெல்லிய சங்கிலியை வெளியே எடுத்துப் போட்டு விட்டு அவளையும், தாயையும் குற்ற உணர்வுடன் நோக்கினாள் செந்தாழை.
அதில் அப்போதைக்குக் கிடைத்த சிறிய வடிவிலான தாலிப் பாகம் காணக் கிடைத்ததை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் மற்ற இருவரும்.
“ம்ஹ்ம்! உங்கப்பன் செத்ததுக்கு அப்பறம் காட்டு வேலையில் இருந்து, களைப் புடுங்கிற வேலை வரைக்கும் பார்த்து வம்பாடுப் பட்டுச் சம்பாதிச்சுச் சேர்த்து வச்சக் காசுல எனக்குக் கூட எதையும் வாங்கிக்காமல் உங்க ரெண்டு பேருக்கும் மெல்லிசா இனுந்தாலும் தங்கம் போட்டு அழகுப் பார்க்க நினைச்சு இதை வாங்கிப் போட்டு விட்டேன்! ஆனால் இதுவே மூனு பேரோட தலையெழுத்தை இந்தளவுக்கு மாத்தும்ன்னு நான் என் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலடியாத்தா! இதைப் பார்த்ததுக்கு அப்பறம் தான் எனக்கு மனசு நிறைஞ்சுப் போச்சு! நீ நல்லா இரு தாயி!”என்று அவளிடம் தனது இயலாமையை வார்த்தைகளில் வடித்துக் கூறி விட்டு மீண்டும் மூலையில் முடங்கிக் கொண்டார் முத்துமணி.
தாயின் புலம்பலில் மேலும் குற்ற உணர்வு உண்டாகி விடவும், அதற்கு மேல் தனது உடலும் ஒத்துழைக்காத படியாலும் அப்படியே தனது கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்து விட்டுத் தரையிலேயே
படுத்து விட்டாள் செந்தாழை.
இவர்கள் இருவரின் நிலையைக் கண்டுச் செய்வதறியாது பித்துப் பிடித்துப் போய்த் தனது கால்களைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள் பூவிழி.
ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், அவர்களது அந்த தலைவிதி மாறுவதற்கான சட்டத்தை இயற்றி விட்டுத் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அந்த வீட்டின் இளைய வாரிசு திருவாதிரன்!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக