முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 20

 


"சரி. இதோ வந்துட்றேன்" என்று அழைப்பை வைத்தவள், மஹதனைப் பார்த்தாள் மௌனா.


 அவளது தோழி அகதா தான் அழைத்திருந்தாள் எனவும் , அவளுக்கு ஏதோ பிரச்சினை உதவி தேவைப்படுகிறது என்பதையும் இவளிடம் இருந்து அவதானித்துக் கொண்டான் மஹதன்.


தீபக்கைத் தவிர, அகதாவிற்கு வேறெந்தப் பிரச்சினை வரப் போகிறது? என்று யோசித்துக் கொண்டு இருந்தவனிடம்,"மஹி! அகதா தான் பேசினாள்" என்று அவனிடம் விவரமாக கூறினாள் மௌனா.


"அதைத் தான் நானும் யோசிச்சேன் ம்மா" என்றான் மஹதன்.


"காரை வீட்டுக்குத் திருப்ப முடியுமா மஹி?" என்று அவள் வேண்டுகோள் விடுக்கவும்,


"ஷ்யூர்" என மகிழுந்தை அவர்களது இல்லத்தை நோக்கிச் செலுத்தினான்.


"அந்த வீணாப் போனவனைத் தவிர வேற என்னப் பிராப்ளம் வந்திடப் போகுது உன் ஃப்ரண்ட் - க்கு?" என்று சலித்துக் கொண்டான் மஹதன்.


"தீபக்! அவனைத் தான் நீங்களும், கிஷானும் நல்லா கவனிச்சு அனுப்பிட்டீங்களே! அப்பறமும் எப்படி இவ்ளோ தைரியம் வந்திருக்கும் அவனுக்கு?" என்று கோபத்தில் பொரிந்தாள் மௌனா.


"அகதா மட்டும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறது அவனுக்குப் பிடிக்கலை போல! இந்த மாதிரி, நேரத்தில் தீபக் மாதிரியான ஆளுக்கு உயிர் மேல் கூட பயம் இல்லாமல் போயிடும் மௌனா" என்று விளக்கினான் மஹதன்.


"ப்ச்! ரொம்பவே கடுப்பேத்துறான் மஹி!" எனத் தோழிக்காகப் பரிந்து பேசினாள்.


மிகத் தொலைவில் செல்லவில்லை என்பதால், ஒரு சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்கள்.


"நீ போய் அகதாவைக் கூல் பண்ணு. நான் காரைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்" என்று அவளை அனுப்பி வைத்தான் மஹதன்.


மௌனாவின் பெற்றோருக்கு இது தெரிய வேண்டாமென்று அறையில் தான் இருந்தாள் அகதா. எக்காரணம் கொண்டும் வெளியே தலையை நீட்டவில்லை அவள்.


"என்னடி போன வேலை முடிஞ்சுதா?" என்று சாவகாசமாக வினவிய அன்னைக்கு,


"ஆங்! முடிஞ்சது அம்மா.. அவர் காரை நிறுத்திட்டு வருவார்" என்றதும், மருமகனை வரவேற்கத் தயாரானார் அன்னபூரணி.


அவரது கணவர் சிவமணி ஒரு வேலையாக வெளியே போயிருந்தார்.


அகதா தன் தாயிடம் எதையும் கூறி இருக்கவில்லை என்பதை உணர்ந்தவள், அதை மஹதனுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டுத் தோழியிடம் சென்றாள் மௌனா.


அங்கே அழுது கொண்டிருந்த அகதாவோ, இவளைப் பார்த்ததும், ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள்.


"மௌனா!" என கண்ணீர் உகுத்தவளிடம்,


"அகி என்ன ஆச்சு? ஏன் அழுகுற?" என்று அவள் பதிலளிப்பதற்காக காத்திருந்தாள்.


"அந்த ராஸ்கல் எனக்குக் கால் பண்ணான்" என்று தடுமாறிப் பேசினாள் அகதா.


"யாரு? தீபக் ஆ?" என்று கேட்டாள் மௌனா.


"ம்ம்" 


"அவனைத் தான் அடிச்சுத் துவைச்சு அனுப்பியாச்சே! அப்பறமும் என்னவாம்? ரொம்ப துள்ளுறான்!" என்று கோபத்தில் பற்களைக் கடித்தாள்.


"அவனுக்குப் பயம் இருக்கு தான் மௌனா! ஆனால், அதை விட என் மேல் வன்மம் இருக்கே! என்னை எப்படி பழி வாங்குறதுன்னுத் திட்டம் போட்டுட்டு இருக்கானாம்! அதைக் கூட விட்டுடலாம்! ஆனால்…!" என்று திக்கினாள் அகதா.


மஹதன் தன் காரை நிறுத்தி விட்டு வந்து விட்டான் போலும். வெளியே அவனது பேச்சுக்குரல் ஒலித்தது.


"வாங்க மாப்பிள்ளை!" என்று பழச்சாறு கொடுத்து உபசரித்தவர்,"மௌனா! அகதா!" என உள்ளிருந்த இருவரையும் சத்தமிட்டு அழைத்தார் அன்னபூரணி.


"மஹதன் வந்திருக்கார் அகி‌. வா!" என்று அவளைக் கைப்பிடித்து எழுப்பவும்,


அதைச் சற்றும் எதிர்பாராத வண்ணம் உதறியவள், "நீ போ மௌனா! நான் வரலை!" என்று நிர்தாட்சண்டயாக மறுத்து விட்டாள் அகதா.


அவள் மனம் வெதும்பிக் கொண்டிருப்பதால் வர விருப்பமில்லை போலும் என நினைத்தவள், அறையிலிருந்து வெளிப்பட்டாள் மௌனா.


அங்கே, தன் கோட்டை மட்டும் கழட்டி சோஃபாவில் இட்டுப், பழச்சாறைப் பருக ஆரம்பித்தான் மஹதன்.


தாயின் அருகில் நின்று கொண்ட மௌனாவின் முகம் அவனுக்குச் சிலதை உணர்த்தியது. 


எனவே, இங்கிருந்தபடியே கேட்டால், அன்னபூரணிக்குத் தான் வீணாக கவலை வந்து விடும் என்பதால்,


"நான் கிளம்பறேன் அத்தை. ஆஃபீஸில் வேலையை முடிக்கனும்" என்று எழுந்து,"போயிட்டு வர்றேன்" என மௌனாவிடம் கூறி விட்டுக் கிளம்பினான் மஹதன்.


"இவரை ஆளைக் காணோம்! என்னன்னுக் கேட்டுட்டு வரேன்.

நீ டிரஸ்ஸை மாத்து‌" எனச் செல்பேசியுடன் ஐக்கியமாகி விட்டார் அன்னபூரணி.


அறைக்குள் நுழைந்த அகதாவிடம்,"தீபக் தான?" என்று கணித்ததைக் கேட்டாள் மௌனா.


"ம்ஹ்ம்" என இயந்திரத்தனமாக ஒப்புக் கொண்டாள்.


"அவனுக்குச் சூடு, சொரணையே இருக்காதா?" என்றவள்,


"என்ன சொன்னான் அகி?" என்று தோழியிடம் வினவினாள் மௌனா.


"எனக்கு…!" என்று எச்சில் விழுங்கினாள் அகதா.


அவள் ஆழ்ந்த அதிர்ச்சியில் உறைந்து காணப்படுவதால், கைகளை அழுத்திய மௌனா,"ப்ளீஸ் சொல்லு அகி!" என்று பேச உந்தினாள்.


"அந்த ராஸ்கல் எனக்குக் கால் செய்து பேசினான்" என்று அவனுடைய அழைப்பு வந்ததற்கானச் சான்றையும், தனது செல்பேசியிலிருந்து எடுத்து, அவளுக்குக் காண்பித்தாள் அகதா.


"என்னன்னு?" என்று அழுத்திக் கேட்கவும்,


அவர்களது உரையாடலைத் தெளிவாய்க் கூறினாள், இருந்தாலும் அவளது உடல் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு இருந்தது நடுக்கத்தில்.


சற்று முன்னர், அகதாவிற்கும், தீபக்கிற்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணைகள் :


புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் சினுங்கிய செல்பேசியைக் கையிலெடுத்தாள் அகதா.


"ஹலோ" என ஏதோ ஞாபகத்தில் எதிரிலிருப்பவர் பேசுவதற்கு முன் தன் குரலை வெளிப்படுத்தி விட்டாள்.


மறுபுறம் அமைதியாகவே இருக்க,


"யாருங்க?" என்று கேட்டவள், இனிமேலும் அப்படியே இருந்தால் அழைப்பைத் துண்டித்து விட வேண்டியது தான் என்ற நோக்கம் கொண்டிருந்தாள்.


ஆனால்,"ஹலோ!" என்று அவளுக்குப் பரிச்சயமான ஆண் குரல் கேட்கவே,


"யார் பேசுறது?" என்று திடுக்கிடலுடன் பேசினாள் அகதா.


"தீ..ப..க்" என்று எக்காளமிட்டுச் சிரித்தான் அவளது முன்னால் கணவன்.


அதிர்ந்த உடலைத், திராணி கொண்டு, முயன்று, அமைதிப்படுத்திக் கொண்டவள்,


அவனுக்குப் பயப்படத் தேவையில்லை என்ற சிலிர்ப்புடன்,"ஹேய்! எதுக்கு என்னைக் கான்டாக்ட் பண்ற?" என்று கோபத்தில் கத்தினாள் அகதா.


"எதுக்கா? அந்த ரெண்டு பேரும், என்னை மரண அடி, அடிக்கும் போது, உன்னை நினைச்சுத் தான் வெறி ஏத்துக்கிட்டேன்டி.எல்லாம் உன்னால் தான?" என்று நாராசமானக் குரலில் பேசினான் தீபக்.


"நீயும், உன் அம்மாவும் பண்ணியதுக்கு இதெல்லாம் கம்மி தான்!" என்று கெத்தை விடாமல் கூறினாள் அகதா.


அவள் தானே, தீபக் மற்றும் லலிதாவால் பாதிக்கப்பட்டவள்! அதற்குத் தான், இவன் அடி வாங்கிப், பிராயச்சித்தம் செய்துள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தாள்.


"ஏய்! எனக்குக் காயமெல்லாம் ஆறிப் போகிறதுக்கே எவ்ளோ நாளாச்சுத் தெரியுமா?" என்று கத்தினான் தீபக்.


"இன்னும் உயிரோட இருக்கியேன்னு நிம்மதி தான் வந்திருக்கனும் உனக்கு!" எனப் பொறுமையாகப் பதில் பேசினாள் அகதா.


"நக்கலு! அடியேய்! உனக்கு இருக்குடி!" என்று கீழ்த்தரமாக அவளை மிரட்டவும்,


"இதையும் மஹதன்கிட்ட சொன்னால், உனக்கு உயிர் மிஞ்சாது!" என்று பொறுக்க முடியாமல் கூறி விட்டாள்.


"ஓஹோ! அவன் உன்னோட ஃப்ரண்ட்டைத் தான கல்யாணம் செய்துக்கப் போறான்! உன்னை இரண்டாவது கல்யாணமாகப் பண்ணிக்கப் போறான்! ஆ , ஊ - ன்னா அவங்கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டுற?" என்று அவன் பேசியக் கொச்சை வார்த்தைகளைக் கேட்டவளின் உடலில் உயிர் மிஞ்சியது ஆச்சரியம் தான்!


"தப்பான வார்த்தைகளை விடாதே தீபக்!" என்று முயன்று அடக்கிய அழுகைப் பூதாகரமாக வெடித்தது அவளிடமிருந்து.


"உன்னை மாதிரிக் கேடு கெட்டவளைப் பழி வாங்குற வெறியில் இருக்கேன் இப்போ!" என்று தான் மிகவும் நேர்மை, நியாயவாதி என்பது போலப் பேசினான் தீபக்.


பொலபொலவென்றுக் கண்களில் இருந்து நீர் இறங்கியது அவளுக்கு.


"நீயெல்லாம் மனுஷனே கிடையாதுடா!" என்று வெறுப்பை உமிழ்ந்தாள் அகதா.


"சொல்லிக்கோ! காயம் ஆறவே நாளாச்சே! இவன் இப்படி தைரியமாக கால் பண்ணிப் பேசுறானேன்னுத் தோனுமே உனக்கு? ஆமாம்டி! உயிர் போகிற வலி தான்! அதையும் மீறி உன்னைப் பழி வாங்கனும்னு எனக்குள்ளப் புகைஞ்சிட்டு இருக்கு! அவனுங்க என்னைக் கொன்னாலும் பரவாயில்லை! உன்னை நாறடிக்காம விட மாட்டேன் டி!" என்று சூளுரைத்தான்.


அவள் மட்டும் தன்னுடன் இல்லாமல், நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பது, தீபக்கிற்கு வெறியைத் தூண்டியது.


எதற்கும் துணிந்து விட்டேன் என்று இறுமாப்புடன் பேசியவனிடம், "உளறாதே தீபக்! என்னோட குணத்தைக் களங்கப்படுத்திட்டால் மட்டும், நீயும், உங்க அம்மாவும் பண்ணிய கொடுமைகள் எல்லாம் சரியாகிடுமா? நீங்க நல்லவங்களாக ஆகிடுவீங்களா?" என்றவளுக்கு உடல் வெடவெடத்தது.


"ஹேய்! வாயை மூடு! என்னையும், என் அம்மாவையும் பத்திப் பேச உனக்குத் தகுதியில்லை!" என்று அவளை அதட்டினான் தீபக்.


"ஏன்?"


"உன்னை மாதிரி குணக்கேடு இருக்கிறவ அதெல்லாம் பேசலாமா?" என நக்கலாக கேட்டான்.


இதற்கு மேல், அவனுடைய பேச்சைக் கேட்க விரும்பாதவள், "கொஞ்ச நாளில் நீயே காணாமல் போயிடுவ பாரு!" என்று சொல்லி அழைப்பைத் துண்டிக்கப் போனாள் அகதா.


"வெயிட்! வெயிட்! அதுக்கு முன்னாடி நீயும், உன் மரியாதையும் காத்துலப் பறக்கும்!" என்று மஹதனுடன் அவளைச் சேர்த்து வைத்துப் பேசினான் தீபக்.


"ச்சீ!" என்று அருவருத்து விட்டு அழைப்பை வைத்தவளது உடல் அவமானத்தில் நடுக்கம் கொண்டது.


இந்த நேரம் பார்த்து, அன்னபூரணியும், சிவமணியும் திருமண விஷயமாக எதையோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.


இவள் கதவை அடைத்துக் கொண்டு, தீபக்கிடம் பேசியதாலும், குரல் கம்மிப் போயிருந்தாலும் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு, சிவமணி ஒரு வேலையாக வெளியில் செல்கிறேன் என்று கிளம்பி விட, அன்னபூரணி தான் சமைத்துக் கொண்டிருந்தார்.


அந்த மும்முரத்தில், இவளையும் அடிக்கடி கவனித்துக் கொள்ள முடிவதில்லை அவரால்.


வீட்டிற்குள் தானே இருக்கிறாள் என்ற எண்ணம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். மொத்தத்தில், இவளது அழுகை அறையை விட்டு வெளி வரவில்லை என்பதே உண்மை.


அனைத்தையும் சொல்லி முடித்த அகதாவால், தோழியின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க இயலவில்லை.


மௌனாவின் வருங்கால கணவனையும், தன்னையும் அல்லவா அந்தக் கயவன் தவறாகச் சித்தரித்துப் பேசியுள்ளான்! அதை ஒருவாறு திக்கித் திணறிக் கூறி முடித்திருந்தாள் அகதா.


"என்னடா நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு அவகிட்ட கத்தி வச்சிருக்கிற? அந்தக் குடும்பமே விவகாரமானதாச்சே! இதில் இரண்டாவதாக ஒருத்தன் சேர்ந்துக்கிட்டு உன்னை மொத்தி எடுத்தது பத்தாதா? நீயா ஏன் தலையை உள்ளே விட்ற?" என்று பயத்தில் அலறினார் லலிதா.


அடி வாங்க இவனது உடலில் இடங்கள் உள்ளதா? எனத் தேடிப் பார்க்கும் நிலை தான் அவனுக்கு. அப்படியிருக்க இதெல்லாம் தீபக்கிற்குத் தேவையற்ற வேலை எனப் பொருமினார் அவனது அன்னை.


"நான் இஷ்டத்துக்குப் பேசலை ம்மா! அவளைப் பழி வாங்கிட்டுச் செத்தால் கூட பரவாயில்லைன்ற முடிவில் இருக்கேன்!" என்று சினத்தில் முகம் சிவந்தான் அவரது மகன்.


"உன் கூட இருந்தால் எனக்கும் உயிர் இல்லாமல் செய்திடுவ‌ டா!" என்று நடுநடுங்கிப் போனார் லலிதா.


"அப்படின்னா, என்னை விட்டுப் போயிடுங்க ம்மா! எனக்கு யாரும் வேண்டாம்! ஆனால், உங்களுக்குச் சாப்பாட்டுக்கு, எல்லா செலவுகளுக்கும் நான் தான் பணம் கொடுக்கனும்! அதுக்குக் கொட்டிக் கொடுத்துட்டு இருந்த, உங்க மருமக தான் இப்போ நம்ம கூட இல்லையே!" என்று சீறினான் தீபக்.


"சும்மாச் சும்மா இதையே சொல்றான்! லட்சணமாக வேலைக்குப் போய் சம்பாதிக்காமல், என்னையே எகத்தாளமாகப் பேசுறான்!" என்று மெல்லிய குரலில் அவனை அர்ச்சித்து முடித்தவர்,"ஐயோ! நான் எங்கேயும் போகலை டா! என்னை நீ பார்த்துக்க மாட்டியா தீபு?" என்று நீலிக்கண்ணீர் வடித்தார் லலிதா.


"அம்மா உங்க நடிப்பு போதும்! பசிக்குது! சாப்பாடு போடுங்க" என்று சலித்துக் கொண்டே உணவுண்ண அமர்ந்து விட்டான் மகன்.


அவனை முறைத்துக் கொண்டே பாத்திரங்களைக் கொண்டு வந்து அதிலிருப்பதைப் பரிமாறத் தொடங்கினார் லலிதா‌.


உண்டு கொண்டிருந்த மகனுடைய முகத்தில் தோன்றிய விகாரமும், பழி வெறியும் அவரை அச்சத்தின் பிடியில் தள்ளியது.


வெகு நேரமாக அமைதியாகவே இருந்த தோழியைத் தொட்டு உலுக்கினாள் அகதா.


"மௌனா!" என்றவளது பலவீனமான குரலைக் கேட்டதும் அவளை நோக்கியவளோ,


"இதைக் கேட்டுத் தான் இவ்ளோ உடைஞ்சு போயிருந்தியா அகி?" என்று சாதாரணமாக வினவினாள் மௌனா.


"வேற எப்படி ரியாக்ட் பண்றது? அவனோட அசிங்கம் பிடிச்ச நாக்கு என்னைக் குத்திக் கிழிச்சுடுச்சே!" என்று வெற்றுப் பார்வையை உதிர்த்தாள் அகதா.


"அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு, அவன் சொன்னான்னு நீ இப்படி சுருண்டு போய் உட்கார்ந்து இருக்கிற!" எனத் தோழிக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்டினாள் மௌனா.


"அவன் பேசின…" என்று முகத்தைச் சுருக்கினாள் அகதா.


"ப்ச்! ரொம்பவே மோசமான, தப்பான வார்த்தைகள் தான் அகி! அதை இல்லைன்னு மறுக்க மாட்டேன்! ஆனால், அப்படிப் பேச அவனுக்கு அசிங்கமாக இருந்திருக்கனும்! ஆனால் திமிராகச் சொன்னான்னு நீயே சொல்ற! அப்படி இருக்கிறப்போ, நாம மட்டும் ஏன் கலங்கி நிற்கனும்? அப்படியான அழுக்குப் புத்தியோ, எண்ணமோ நாம் யாருக்குமே இல்லையே அகி?" என்று தோழியைச் சமாதானம் செய்தாள் மௌனா.


"மஹதனை… நான் அப்படி… யோசிக்கலை!" என்று அழுகையில் திணறினாள் இவள்.


"அகி! ஸ்டாப் இட்! நான் உன்னையும், அவரையும் எப்பவும் சந்தேகப்பட மாட்டேன்! அதுவும் இவன் உளறுனதுக்கு எல்லாம் உங்களைக் களங்கப்படுத்திக்க வேண்டாம்!" என்று அவளைக் கடிந்து கொண்டாள் மௌனா.


"அறைக்குள்ளேயே அடைஞ்சு இருக்கீங்க இவ்வளவு நேரமா! உங்க அப்பா வந்துட்டாரு. அகி! நீ சாப்பிடவே இல்லை. மௌனாவையும் கூப்பிட்டுக்கிட்டு வந்து உட்காரு!" என்று அவர்களை வெளியிலிருந்து அழைத்தவர்,"மாப்பிள்ளை வந்தாருங்க. பொண்ணை விட்டுட்டுக் கிளம்பிட்டார். இன்னும் ஒரு வாய் கூட உள்ளே தள்ளாமல் என்னப் பண்றாங்களோ?" எனக் கணவனிடம் கூறி, நொடித்துக் கொண்டார் அன்னபூரணி.


அவரது அழைப்பைக் கேட்டதும், அங்கே வந்து விட்டனர் இருவரும்.


அவர்களிடம் தங்களது முக மாறுதலைக் காட்டிக் கொள்ளாமல், உணவுண்ண ஆரம்பித்தனர்.


"கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுக்கப் போகனும்லங்க?" என்றவாறு தனக்கும் சோற்றைப் பரிமாறிக் கொண்டபடி கேட்டார் அன்னபூரணி.


"ஆமா பூரணி. அவங்க ரெண்டு விதமானப் பத்திரிக்கையை தயார் செய்திருக்காங்களே! ரெண்டையுமே எடுத்துக்கச் சொல்லியாச்சு. நீங்க என்ன நினைக்கிற?" என்று மனைவியிடமும், பெண்களிடமும் கேட்டார் சிவமணி.


அகதாவிற்கு உணவைத் தொண்டைக்குள் அனுப்பவே சிரமமாக இருக்க, அவள் பதிலே கூறாமல் அமைதியாக இருந்தாள்.


மௌனாவோ,"ரிலேட்டிவ்ஸூக்கு ஒரு டிசைன், ஃப்ரண்ட்ஸ் அண்ட் கொலீக்ஸூக்கு ஒரு டிசைன்னு ரெடி பண்ணியிருக்காங்க அப்பா.அதுக்கு ஏத்த மாதிரி நாமளும், எல்லாருக்கும் பத்திரிக்கையை வச்சிடுவோம்" என்று கூறினாள்.


"நீ ஏன் உம்முன்னு இருக்கிற?" என்று அகதாவைப் பார்த்துக் கேட்டார் அன்னபூரணி.


அதில் திகைத்து விழித்தவள்,

"தூக்கக் கலக்கம் அம்மா! மதிய நேரம் ஆனாலே தூக்கம் வந்துருது" என்று பொய்யை அடித்து விட்டாள் அகதா.


"வொர்க் ஃப்ரம் ஹோம் பார்த்துட்டு இருக்கிற ஞாபகம் இருக்கா? நைட் பேசிக்கிட்டு இருந்துட்டு தூங்க லேட் பண்றீங்களா?" என இருவரையும் கண்டித்தார் அன்னபூரணி.


"விடு பூரணிம்மா‌. இப்போ சாப்பிட்டுட்டு உடனே தூங்காதம்மா‌. அரை மணி நேரம் கழிச்சுக் கூட படுத்துக்கோ. இன்னைக்கு வேலை இல்லையே உனக்கு" என்றார் சிவமணி.


"சரி ப்பா" என வேகமாக உணவை விழுங்கி விட்டு, அறைக்குள் புகுந்தாள் அகதா.


மௌனாவிற்கும் உணவு இறங்கவில்லை தான்; ஆனால், அவளும் அகதாவைப் போல, அரைகுறையாக உண்டு விட்டு எழுந்தால், பெற்றோருக்குச் சந்தேகம் வந்து விடும். என்வே, முயன்று அனைத்தையும் காலி செய்து விட்டுப் போனாள்.


அதில் அதிருப்தி அடைந்தவர், "நீங்களாவது ஒழுங்காக சாப்பிடுங்க" என்று கணவருக்குப் பரிமாறினார் அன்னபூரணி.


இதுதான் சமயம் என்று அறைக்கு வந்து, கண்கள் சிவப்பாகும் வரை அழுது முடித்தாள் அகதா.


"அகி!!" என்று அவளை ஆசுவாசப்படுத்த முயற்சித்து,"இது சரியில்லை" எனத் தன் செல்பேசியில் மஹதனுக்கு அழைத்தாள் மௌனா.


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...