முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 12

 


திருவாதிரனைப் பின் தொடர்ந்து வந்திருந்த பூவிழியும் அவரது வார்த்தைகளைக் கேட்டிருந்தாள். 


ஏற்கனவே அவரது மகன் தன்னிடம் கூறிய விஷயத்தின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கால்கள் தள்ளாடிக் கொண்டு நின்றிருந்தவளுக்கோ அவர் அடித்துக் கூறப் போகும் விஷயத்தைக் கேட்பதற்காகத் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அவரைப் பார்க்கவும், 


“அப்படி என்னப் பேசிட்டுப் போனாங்கப்பா?”என்று தந்தையிடம் நிதானமாக வினவினான் திருவாதிரன். 


“அதை நாஞ்சொல்றேன்!”என்று சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவொளியும், சொந்தாழையும் தங்களிடம் சொல்லி விட்டுச் சென்றதை எல்லாம் அவனிடம் ஒப்புவித்து முடித்திருந்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டு அதிர்ச்சி தாளாமல் தனது கால்கள் தள்ளாடிப் போய்க் கீழு உட்கார்ந்து விட்டிருந்தாள் பூவிழி. 


அதைக் கவனித்து விட்டு, அவளிடம் சென்று, அவள் எழுவதற்கு உதவிக்கரம் நீட்டினான் திருவாதிரன். 


அதைக் கூட அவளால் அவதானிக்க முடியவில்லை!


அதனாலேயே தானே முன் வந்து அவளது கையைப் பற்றி எழுப்பி விட்டு,”நீ உள்ளே போ”என்று அறிவுறுத்த, 


அவனது தொடுகையில் தீப்பற்றியதைப் போல் உணர்வு எழவும் அவனிடமிருந்து தனது கரத்தைப் படக்கென்று உருவிக் கொண்டாள் பூவிழி. 


“ப்ச்! உள்ளே போ”என அவளிடம் அதிகாரமாக மொழிந்தான் திருவாதிரன். 


அதில் கண்களில் நீர் வழிந்தோட அறைக்குச் சென்றவளை, 


அப்போது தான் அடையாளம் கண்டு விட்டதைப் போல்,”வா, அக்கா! சின்னவரு கூட ரொம்ப நேரமாகத் தனியாகப் பேசிட்டு இருந்த போலவே? அப்படி நீங்க ரெண்டு பேரும் என்னப் பேசிக்கிட்டீங்க?”என்று அவளிடம் நைச்சியமாக வினவினாள் செந்தாழை. 


உடனே அவளை நிமிர்ந்து வெற்றுப் பார்வைப் பார்த்து,”அவர் என்னை இங்கேயிருந்து அனுப்ப மாட்டாராம்! ஆறு மாசம் கழிச்சு என்னைக் கல்யாணம் செய்துக்கப் போறாராம்!”எனப் பதிலளித்தாள் பூவிழி. 


அதைக் கேட்டதுமே முதலில் அதிர்ந்தவளுக்கோ பிறகுத் தமக்கையின் மீது பொறாமைத் தீ உருவாகி விட்டது. 


அதன் விளைவாக,”நீ என்னச் சொல்றக்கா? திரு ஐயா அப்படியா சொன்னாரு?”என்று அவளிடம் ஐயத்துடன் கேட்டாள் செந்தாழை. 


அதற்கு அவளோ,”ம்ஹ்ம். உங்க கல்யாணத்து அன்னைக்குத் தான் எங்க கல்யாணமும் நடக்குமாம்!”என்று சலனமற்ற முகத்துடன் கூறினாள் பூவிழி. 


“எதே! எங்க கல்யாணத்தோட சேர்த்து உங்க கல்யாணமும் நடக்குமா? இதென்னக் கோராமையா இருக்கு? உனக்கு இதில் சம்மதமாக அக்கா?”என்றாள் திகைப்புடன். 


“இல்லை”என்றதும் தான், செந்தாழைக்கு நிம்மதியே உண்டானது! 


“உனக்கு விருப்பமில்லைன்றதை அவர்கிட்டே சொன்னியாக்கா?”என்க, 


“சொன்னேன்டி!”என்றிருந்தாள் பூவிழி. 


“அதுக்கு அவர் என்னச் சொன்னாரு?”எனக் கேட்டாள் செந்தாழை. 


“அவர் உன்னை வச்சு என்னை இதுக்குச் சம்மதிக்க வைக்கப் பார்க்குறாரு!”எனப் பெருமூச்சுடன் கூறிய தமக்கையை அதிர்வுடன் நோக்கி, 


“என்னக்கா சொல்ற?”என்றவளிடம், 


“ஆமாம் டி! நான் அவரைக் கல்யாணம் செய்துக்கச் சம்மதிச்சா தான் உனக்கும், அவரோட அண்ணனுக்கும் கல்யாணம் செய்து வைப்பாராம்! இல்லைன்னா, உன்னையும் என் கூடச் சேர்த்து வெளியே அனுப்பி வச்சுருவாராம்! அதனால் உங்கிட்ட இதைப் பத்திக் கலந்து பேசிட்டு முடிவைச் சொல்லச் சொன்னாரு”என்றவளோ, அவன் தன்னை என்னவெல்லாம் சொல்லி அவனது முடிவிற்குப் பணிய வைக்க முயன்றான் என்பதை அவளிடம் விளக்கமாக கூறி முடித்தாள் பூவிழி. 


அதைக் கேட்டதும் தனது கண்களில் கோபம் தெறிக்க, 


“இதையெல்லாம் முடிவு பண்றதுக்குச் சின்னவருக்கு என்ன உரிமை இருக்கு? அதுவும் பெரியவர் கிட்டே எதுவும் கலந்து பேசாமல் நேரடியாக உங்கிட்ட பேசுறது என்ன நியாயம்? அதே மாதிரி இந்த வீட்டில் வயசில் மூத்தவங்க இருக்காங்க தானே? அவங்க கிட்டேயும் எதுவும் கேட்டுக்காமல் அவரே எல்லாத்தையும் முடிவெடுத்து உங்கிட்ட வந்து வேற அபிப்பிராயம் கேட்பாராமா?”என்று திருவாதிரனின் மீதிருந்த கோபத்தை வார்த்தைகளாய் வெளிப்படுத்தி விட்டிருந்தாள் செந்தாழை. 


அதைக் கேட்டும் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவளிடம்,


“இந்தக் கல்யாணம் வேண்டாம்! நான் எங்கேயாவது போயிட்றேன்! எந்தங்கச்சியை வேணும்னா இங்கே இருக்க வச்சுக்கோங்கன்னு ஓரே போடாகப் போட்டு இருக்க வேண்டியது தானேக்கா? ஏன்னா, நான் தானே இந்த வீட்டு வாரிசை என் வயித்துல சுமந்துட்டு இருக்கேன்! உனக்கும், இந்த வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை தானே? அதைச் சொன்னியா?”எனத் துருவித், துருவிக் கேட்க, 


“எல்லாத்தையும் சொல்லிப் பார்த்துட்டேன்டி! ஆனால் அவர் எதுக்கும் மசியலை! நீ வேணும்னா அவர் அண்ணங்கிட்டே பேசிப் பாரு! அவரும், அவங்களைப் பெத்தவங்களும் இதில் தலையிட்டால் இதுக்கு ஒரு முடிவுக் கிடைக்கலாம்!”என்று தங்கையிடம் தீர்க்கமாக உரைத்து விட்டாள் பூவிழி. 


“க்கும்! அந்த மனுஷங்கிட்ட எவ்வயித்துல வளர்றக் கருவோட வளர்ச்சி, ஆரோக்கியம் எப்படி இருக்குன்றதை மருத்துவச்சியைக் கூப்பிட்டு விசாரிக்கலாம்னுக் கேட்டதுக்கே நமக்குக் கல்யாணம் முடியிற வரைக்கும் இந்த விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னுத் தம்பிச் சொல்லிட்டான்னு என் வாயை அடைச்சிட்டாரு! இதில் இதைச் சொன்னால் மட்டும் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, தம்பிக்கிட்டே எகிறிச் சண்டைப் போடப் போறாராக்கும்!அதுக்குப் பேசாமல் அத்தை, மாமாகிட்டே இதைப் பத்திச் சொல்லி ஏதாவது ரோசனைக் கேட்கலாம்!”என்ற செந்தாழையிடம், 


“இந்நேரம் திரு ஐயாவே இந்த விஷயத்தைப் பத்தி அவங்கப்பா, அம்மா கிட்டே சொல்லி இருப்பார்”என்று மூத்தவள் கூறி முடிக்கவும், 


“என்னடா சொல்ற ஆக்கங்கெட்டவனே!?”என்ற ராஜகுமாரியின் ஆங்காரக் குரல் இவர்களின் செவியை வந்தடைந்தது. 


உடனே இருவரும் அறையிலிருந்து வெளியேறி அங்கே செல்லவும், 


அவர்களைப் பார்த்து இன்னும் ஆங்காரத்துடன்,”இந்தா! இங்கே வாடி!”என்று பூவிழியைத் தன்னருகே அழைத்தார் ராஜகுமாரி. 


ஆனால் அவளோ அவர் புறம் தனது கால்களை எட்டிப் போடவில்லை! 


“ஹேய்! வாடி!”என்று கொடூரமான குரலில் அவளை அழைக்க, உடனே வில்லில் இருந்து விருட்டென்று வெளிப்பட்ட அம்பைப் போல் அவரிடம் சென்றிருந்தாள் பூவிழி. 


உடனே அவளது தலைமுடியைப் பிடித்து உலுக்கத் தொடங்கி விட்டார் ராஜகுமாரி.


அதில் அவளுக்கு அதிர்ச்சியும், வலியும் எடுக்கவே,”ஆஹ்!!”என்று அலறவும், 


அதில்,”ம்மா! அவளை விடுங்க”என்று அன்னைக்குக் கட்டளையிட்டான் திருவாதிரன். 


“முடியாதுடா! அண்ணனும், தம்பியும் என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? வக்கத்தச் சிறுக்கிகளை எல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளுகன்னுச் சொல்லிட்டுத் திரியுறீய!”என்றவரோ, 


செந்தாழையைக் காட்டி,”இவளையாவது உங்கண்ணனால் வயித்தை ரொப்பிக்கிட்டாளேன்னு அந்தப் பாவம் நம்மளைச் சும்மா விடாதுன்னு வீட்டில் சேர்த்துக்க ஒத்துக்கிட்டோம்!”எனக் கூறி விட்டுப் பூவிழியைச் சுட்டிக் காட்டி, 


“ஒன்னுத்துக்கும் இந்தச் சிறுக்கியையும் என் சின்ன மருமகளுன்னுச் சொல்லிட்டு இருக்கிற! என்னடா எங்களைப் பார்த்தா உங்களுக்குப் பைத்தியக்காரங்க மாதிரி தெரியுதா?”என்று சொல்லிப் பூவிழியின் தலைமுடியை இன்னும் அழுந்த இழுத்தார் ராஜகுமாரி. 


“அவ முடியை முதல்ல விடுங்க! பொறுமையாக உட்கார்ந்து பேசிக்கலாம்”என்று அவரிடம் அழுத்தமாக கூற, 


அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை என்றதுமே தானே அவர்களிடம் சென்று தாயின் பிடியில் இருந்த பூவிழியைக் காப்பாற்றி அவளைத் தனது பின்புறத்தில் நிற்க வைத்துக் கொண்டு அன்னையைத் தீர்க்கமாகப் பார்த்தான் திருவாதிரன். 


அவர்கள் போட்டக் கூச்சலில் தனது அறையிலிருந்து வந்திருந்த அறிவொளியோ, தன் தம்பியின் செய்கையைப் பார்த்து விட்டு,


“நீ என்னடா சொல்ற? இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இது நெசந்தானா?”என்று திருவாதிரனிடம் வினவினான். 


அதற்கு அவன் பதிலுரைக்கும் முன்பாகவே அவனிடம் வந்து,”எல்லாம் நீ ஆரம்பிச்சு வச்சது தான்டா இப்போ இந்தளவுக்கு வளர்ந்து வந்து நிற்குது! வெளங்காதப் பயலே! படிக்கவும் வக்கில்லை! சொத்தையும் பார்த்துக்கிறதுக்குத் துப்பில்லை! ஆனால் தகப்பனாகுறதுக்கு மட்டும் முந்திக்கிட்டியே! ச்சேய்! மானங்கெட்டவனே!”என்று அவனைச் சரமாரியாக கழுவி ஊற்றினார் ராஜகுமாரி. 


அதில் அவனது முகம் மட்டுமின்றிச் செந்தாழையின் முகமும் கூட அவமானத்தில் கருகிப் போய் விட்டது! 


சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,“நான் இங்கே இருந்து போயிட்றேன்னு தான் இப்போ வரைக்கும் சொல்லிட்டு இருக்கேன்! ஆனால் உங்க மயன் தான் என்னைப் போக விட மாட்டேங்குறாரு!”என்று ராஜகுமாரியிடம் தெரிவித்தாள் பூவிழி. 


அதில் தன் பின்னால் திரும்பி அவளை முறைத்துப் பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டான் திருவாதிரன். 


உடனே,”அந்தப் பொண்ணு தான் இவ்வளவு தூரம் சொல்லுதே திரு! அப்பறமும் நீ ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற?”என்று அவனிடம் கேட்டார் நஞ்சுண்டன். 


தங்களது இரண்டு மகன்களும் தங்களிடம் ஒரு வார்த்தைக் கூடக் கலந்து பேசாமல் தங்கள் இருவரின் மனையாள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதையும், தாங்கள் இருவரும் வைப்பது தான் சட்டம் என்பதைப் போல் அவர்கள் இருவரும் நடந்து கொள்வதையும் கண்டு இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.  


“அந்த முத்துமணியும், இதுங்க ரெண்டும் வீட்டு வாசப்படியை மிதிச்சு உள்ளே வரும் போதே மூனு பேரோட காலையும் வெட்டிப் போட்டு இருந்தால் இந்த எல்லைக்கு வந்திருப்பியா நீ?”என்று இளைய மகனிடம் வெஞ்சினத்துடன் கேட்டார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டுச் சகோதரிகள் இருவருக்கும் தலையிறக்கமாக இருந்தது! 


அதேபோல் அவர்களது விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கி விட்டது! 


உடனே,”அப்பா! வார்த்தையை அளந்து பேசுங்க!”என அவருக்கு வலியுறுத்தினான் அறிவொளி. 


“முடியாது போடா!”என்றக் கணவரைப் பின்பற்றி, 


“இவங்களை முதல்ல அடிச்சுத் தொரத்தி விடுங்க ரெண்டு பேரும்! இவளுங்களோட விடியா மூஞ்சியால் தான் இந்த வீடு வெளங்காம இருக்கு!”என்று செந்தாழை மற்றும் பூவிழியைச் சகட்டுமேனிக்குக் கரித்துக் கொட்டினார் ராஜகுமாரி. 


“முடியாதும்மா! எங்களுக்கு இவங்க கூடத் தான் கல்யாணம் நடக்கும்!”என்றிருந்தான் அறிவொளி. 


“அதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்!”என்று உறுதியாக உரைத்து இருந்தார் நஞ்சுண்டன். 


“இது தான் உங்க முடிவா?”என்று தன் பெற்றோரைப் பார்த்துக் கேட்டான் திருவாதிரன். 


“ஆமாம்!”என்றார் ராஜகுமாரி. 


“அப்போ நானும் ஒரு முடிவை எடுத்து இருக்கேன்!”என்றவன் அடுத்துக் கூறியவற்றைக் கேட்டு அங்கேயிருந்த பூவிழியைத் தவிர்த்து மற்ற நால்வரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டிருந்தது. 


ஆனால்,’இவன் எதற்காகத் தன்னைத் திருமணம் செய்து கொள்ள இந்தளவிற்குத் தனது குடும்பத்தாரிடம் போராட்டம் நடத்துகிறான்?’என்று குழப்பத்துடன் தனக்கு முன்னால் நின்றிருந்த திருவாதிரனின் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பூவிழி. 


இப்படியாக இவளது குழப்பத்திற்குத் தீர்வுக் கிடைக்காத பட்சத்தில் மூன்று மாதங்கள் ஓடி விட்டிருக்க, திருவாதிரன் எடுத்த முடிவு, அறிவொளி, செந்தாழை மற்றும் திருவாதிரன், பூவிழி என்ற இரண்டு ஜோடிகளையும் மணமேடையில் மாலையும், கழுத்துமாக அமர்த்தி விட்டிருந்தது! 


                         - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...