இன்னும் பெரிதாக விரிந்த விழிகளோடு திடுக்கிடலை ஓரம் போட்டுக் கேட்டாள் மௌனா.
"இவன்… தீபக்!"
"அவனே தான்!" என்று அசூயையுடன் பதிலளித்தான் மஹதன்.
"இவன் எப்படி உங்ககிட்ட?" என்று பிரயத்தனப்பட்டு வார்த்தையை வெளியிட்டாள் மௌனா.
"அதை நான் சொல்றேன்!" என்று வீடியோ காலின் மறுமுனையில் இருந்தவளுக்கு விளக்கம் செல்ல முன் வந்தான் கிஷான்.
அவனுடைய வாய் மொழிக்காக காத்திருந்தாள்.
"இவன் அக்காவோட முன்னால் கணவன் தான? மஹதன் சொல்லி இருக்கான். நீயும் அப்பப்போ பேசி இருக்க"என்றான்.
"ஆமாம் அண்ணா. இவனை எதுக்கு அடிச்சுருக்கீங்க? அதை முதலில் சொல்லுங்க?" என்று ஆர்வம் தாளாமல் வினவினாள் மௌனா.
"இவனுக்கும், உன் ஃப்ரெண்ட்டுக்கும் இன்னும் டைவர்ஸ் ஆகலைல?" என்றதும்,
"கேஸ் நடந்துட்டு இருக்குல்ல அண்ணா!" என்று முதலிலிருந்து ஒவ்வொன்றாக விசாரிப்பவனிடம் பொறுமையாக பதில் சொன்னாள்.
"டைவர்ஸ் பண்ணனும்னா காசு கேட்டுப் பார்ப்போம். கொடுத்தால் போனால் போகுதுன்னு முடிச்சு விடுவோம்னு நினைச்சிருக்கான்!" என்கவும்,
மௌனாவின் முகம் கோபத்தில் விகாரமானது.
கிஷான் மேலும் தொடர்ந்து,"அதனால், மஹதனை அவனோட கம்பெனியில் மீட் பண்ணி இருக்கான்!" என்றான்.
தாமதம் ஆனாலும் நண்பனுக்காக அவனுடன் முக்தாவின் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற கொள்கையில் வேலையைத் துரிதமாக முடித்த மஹதன் அறையிலிருந்து கிளம்பத் தயாராகும் போது,
வரவேற்பறையில் இருந்து கால் வந்தது அவனுக்கு.
"சார்! உங்களைப் பார்க்க தீபக் ன்னு ஒருத்தர் வந்திருக்கார்" என்று சொல்லவும்,
காதில் நாராசமாக ஒலித்தப் பெயரின் உரிமைக்காரனை உள்ளே வர அனுமதி அளிக்குமாறு கூறி விட்டான்.
சிறிது நேரம் சென்ற பின்னர், தோரணையாக உள்ளே வந்தவனை நெடிய மூச்சுக்களுடன் வரவேற்றான் மஹதன்.
அன்றைக்கு மௌனாவின் இல்லத்தில் சம்பந்தம் பேசும் பொழுது, தன் தாயுடன் வந்து கலாட்டா செய்ய முனைந்து, அனைவரும் போட்ட சத்தத்தில் அன்னையும், புத்திரனும் சத்தம் காட்டாமல் தான் சென்றனர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் விவாகரத்துக் கேட்டு பத்திரம் அனுப்பி வைத்திருந்தாள் தீபக்கின் விலாசத்திற்கு.
அதைப் பார்த்ததும் கொதித்தெழுந்து விட்டான்.
"வாங்கும் சம்பளம் அதிகமாக இருந்தாலும், அதை முக்கால்வாசியைக் கொடுத்துட்டு, ஒரு சொல் சொல்லாமல், அமைதியாக ஊரில் இருப்பா! இப்போ அந்த மௌனா கூட சேர்ந்துக்கிட்டு ஆடுறா!" என்று தன் மருமகளுக்குச் சாபம் விட்டுக் கொண்டிருந்தார் லலிதா.
அவர் நீட்டி முழக்கிப் பேசினார் என்றால், மகனோ, பத்திரத்தைப் பஸ்பமாகச் செய்யும் நிலையில் இருந்தான்.
காலைச் சுற்றிக் கொண்டு இருந்தவள் துணிந்து செய்த காரியத்தின் வீரியத்தை தண்டனையாக அனுபவித்தே தீர வேண்டும் என்று உறுதி பூண்டான் தீபக்.
"ஜம்முனு இருப்பா! அவளுக்கென்ன! இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வைக்கிறதாக இருப்பானுங்க போல! அதான், டைவர்ஸ் நோட்டீஸ் வந்திருக்கு" என்று திட்டித் தீர்த்தார் லலிதா.
அகதாவின் தோழியின் அம்மாவும், அந்த மஹதனும் சேர்ந்து கொண்டு தங்களை விரட்டும் போது, இவள் சிலையாக நின்று வேடிக்கைத் தானே பார்த்தாள் என்று மனைவியின் மீது கோபம் எழுந்தது அவனுக்கு.
இதில் அம்மாவின் புலம்பல்கள் வேறு அவனை உசுப்பி விட்டது.
"அம்மா! கொஞ்சம் நிறுத்துறியா? அவளோட சம்பாத்தியம் நம்மளை விட்டுப் போகுதுன்னா அதுக்கு நிகரா நமக்கு அவ பணம் அழுதுட்டு தான் போகனும்!" என்று குறிப்பாகப் பேசினான் தீபக்.
"எப்படிடா? நாம தான் அவளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கிறா மாதிரி இருக்கும்" என்று பொருமினார் லலிதா.
அந்த விதத்தில் கூட அவளுக்குத் தங்களால் நல்லது நடந்திடலாகாது என்று இறுமாப்புடன் இருந்தார் அவனது அவர்.
"நாம கொடுக்கக் கூடாது ம்மா! அவ நமக்குக் கொடுக்கனும்! அதை தான் இப்போ சொல்லிட்டு இருக்கேன்" என்று பொருள் பொதிந்த பேச்சில் கூறினான் மகன்.
"எப்படி? அவங்க தான் கூட்டமாக கூடி நம்மளை உண்டு இல்லைன்னுப் பண்ணிடுவாங்களே! அதுவும் பணக்கார கோஷ்டி வேற!" என இப்போதும் அவரது கண்களில் பயம் துளிர்த்தது.
"பயந்துட்டு இருந்தால், அவளையும் விட்டுட வேண்டியது தான், அவகிட்ட இருந்து வர்ற காசையும் விட்டுட வேண்டியது தான்!" என்று எரிச்சலடைந்தான் தீபக்.
"அதை மட்டும் விடக் கூடாதுடா! அப்பறம் நம்மளோட வாழ்க்கை முழுசும் தெருவில் தான் கையேந்தி நிக்கனும்"
"அதனால் எனக்கு ஒரு யோசனைம்மா! அவளுக்கு டைவர்ஸ் கொடுக்கனும்னா பல்கா ஒரு அமவுண்ட் வேணும்னுக் கேட்கப் போறேன்!" என்று ஆசை மின்னக் கூறினான்.
"நடக்கிறதைப் பேசுடா!" என அவன் உளறுவதைக் கண்டித்தார் லலிதா.
மஹதன் மற்றும் அவனது தந்தையின் பண மதிப்பு இவருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா? இப்போது அங்கே அடைக்கலம் ஆகி இருக்கும் அகதாவுக்காகத் தங்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்று அறிந்து தான் தன் ஆற்றாமையைப் பேச்சில் மட்டும் வைத்துக் கொள்கிறார்.
அவர்களிடம் வாலாட்டினால் தங்களை உருத் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்பது திண்ணம்.
"ப்ச்! நடக்கத் தான் போகுது அம்மா. நான் அந்த மஹதனைப் போய்ப் பார்த்துப் பேசுற விதத்தில், பேசினால் எல்லாம் நடக்கும்" என்று உறுதியாக கூறியவனை, மிரட்சியுடன் பார்த்தார் லலிதா.
சொன்னது மட்டுமின்றி இப்பொழுது தெனாவெட்டாக வந்து மஹதனின் முன்னால் அமர்ந்திருக்கிறான்.
"சார்!" என்றவனது பவ்யத்தைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான்.
"நான் தீபக். அகதாவோட ஹஸ்பண்ட்" என்றான்.
எதிரிலிருப்பவனோ,"சரி அதுக்கு?" என்று தனது கோபத்தைக் காட்டாமல் கேட்டான்.
"டீலிங் பேச வந்திருக்கேன்!" என்று நடுங்கினாலும் பரவாயில்லை விடுவதாக இல்லை என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பேசினான் தீபக்.
'டீல்' என்றவுடன் மஹதனுக்கு ஆத்திரம் தெறித்தது.
"என்ன டீல்?"
"அகதா எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கா!" என்று கூறினான்.
"அனுப்பினால், சைன் போட்டுத் திருப்பி அனுப்பி வை" என்றான் மஹதன்.
எச்சிலை விழுங்கிய படி,"அதுக்குத் தான் டீல் சார்!" என்று மெதுவாகப் பேசினான் தீபக்.
"என்னது?"
"நான் விவாகரத்து கொடுக்கனும்னா எனக்கு அதுக்கு ஏற்றப் பணம் வேணும் சார்" என்று சொல்லியவனை, விநோதமாகப் பார்த்து,
"எவ்வளவு தைரியம் டா உனக்கு!" என்று அதட்டினான் மஹதன்.
"இதெல்லாம் பேசினால் உங்ககிட்ட இருந்து உயிரோட தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கேன். ஆனாலும் பணம் என்னை இவ்வளவு துணிவாக யோசிச்சு, வர வச்சிருக்கே!" என்று வியாக்கியானம் பேசினான் தீபக்.
கோப உஷ்ணம் கூடிக் கொண்டே போனது மஹதனுக்கு.
"பணம் கொடுக்கலைன்னா?" என்று திடுமெனக் கூறியவனிடம்,
"அவளுக்கு முன்னாடி அகதாவைப் பத்தி நான் பேசிருவேன் சார்!"
"இதுக்கு மேல உன்னை நான் பேச விடக் கூடாது!" என்று நினைத்துக் கொண்டவன்,
"சரி.. வா. லீகல் ஆகப் பேசிக்கலாம்" என்றதும், அவனுக்கு உதறல் எடுத்தது.
"எங்கேயும் நான் வரலை சார். இங்கேயே உங்க ஆஃபீஸிலேயே எதுவாக இருந்தாலும் முடிச்சுக்கலாம்!" என்று கம்மிய குரலில் பேசியவனிடத்தில் பயத்தின் சாயலை உணர்ந்து,
"வேறே எங்கேயும் வேணாம். என் இடத்துக்குப் போய்ப் பேசலாம்" என்று சாமர்த்தியமாகப் பேசினான் மஹதன்.
"அது உங்க இடம்ன்னா என்னை என்ன வேணும்னாலும் செய்வீங்க! அதனால் நான் கூப்பிட்டுப் போறேன். கூட்டமான இடமாக இருக்கனும்" என்கவும்,
பல்லைக் கடித்துக் கொண்டு,"ம்ம்.. போவோம் " எனத் தீபக்கை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ஆனால் அவன் சொன்னது போல கூட்டம் நிறைந்த இடத்திற்கு அல்ல, மஹதன் தன்னுடைய சொந்தமான பகுதிக்குக் கடத்திச் சென்றான் அவனை.
அந்தப் பகுதியினுள் நுழையும் முன், மஹதனிடம் அவ்வளவு அடிகளைப் பரிசாகப் பெற்றிருந்தான் தீபக்.
அதற்கு இடையே , அகதாவிற்கு இது தெரியுமா எனக் கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லவும், அது மஹதனுக்கு வசதியாகி விட்டது.
கிஷானுடைய செல்பேசிக்கும் அப்போது விஷயம் தெரிவிக்கப்பட்டது.
அதனால் தான் அவனும் முக்தாவை விட்டு விட்டு இங்கே வந்து தீபக்கை ஒரு வழி செய்து விட்டான்.
இதையெல்லாம் வீடியோ காலில் கேட்ட மௌனாவோ, தன் தோழிக்குக் கடைசி வரை இது தெரியவே கூடாது என்று நினைத்தாள்.
ஆனால்,"ஏய் அகதா!!!" என்ற கர்ண கொடூரமாக வாசலில் நின்று அலறியவரைப் பார்த்துப் புரியாமல் விழித்து நின்றாள் அந்தப் பெயருக்குச் சொந்தமானவள்!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக